தாம்பரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி
- கடந்த சில நாட்களாக மாணவி காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
- மாணவி தங்கி இருந்த விடுதியில் உள்ள மேலும் 7 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிந்தது.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள்.
இங்கு கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த மாணவி சரண்யா (வயது20) என்பவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
நேற்று அதிக அளவில் உடல்நிலை மோசம் அடைந்ததால் சரண்யா கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் மாணவி தங்கி இருந்த விடுதியில் உள்ள மேலும் 7 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிந்தது. அவர்களில் 4 பேர் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மற்ற 3 பேரும் தங்களது ஊர்களுக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளனர். இறந்து போன மாணவிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் பாதிப்பு காரணமா? என்று மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.