என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    நோக்கியா 215 4ஜி, நோக்கியா 225 4ஜி மொபைல் போன் மாடல்கள் 4ஜி வசதியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளன. இரு மாடல்களில் 4ஜி மட்டுமின்றி வயர்லெஸ் எப்எம் ரேடியோ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இரு மாடல்களிலும் 2.4 இன்ச் QVGA LCD ஸ்கிரீன், பாலிகார்பனைட் பாடி, வெப் பிரவுசர், ப்ளூடூத் வசதி, டார்ச், வயர்லெஸ் எப்எம் ரேடியோ, மியூசிக் பிளேயர், ஸ்னேக் கேம் உள்ளிட்டவை அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. நோக்கியா 225 4ஜி மாடலில் விஜிஏ கேமராவும் வழங்கப்பட்டு உள்ளது.

     நோக்கியா 225 4ஜி

    நோக்கியா 215 மற்றும் 225 4ஜி சிறப்பம்சங்கள்

    - 2.4 இன்ச் 320x240 பிக்சல் QVGA LCD ஸ்கிரீன்
    - பீச்சர் ஒஎஸ்
    - 1 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் பிராசஸர்
    - 64 எம்பி ரேம்
    - 128 எம்பி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - வயர்லெஸ் எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர்
    - விஜிஏ கேமரா ( நோக்கியா 225 4ஜி)
    - ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி
    - 1200 எம்ஏஹெச் பேட்டரி

    நோக்கியா 215 4ஜி மாடல் சியான் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2949 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா 225 4ஜி மாடல் கிளாசிக் புளூ, பிளாக் மற்றும் மெட்டாலிக் சேண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    வாட்ஸ்அப் வெப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் அம்சத்திற்கான அப்டேட் விரைவில் வெளியாக இருக்கிறது.


    உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப், அவ்வப்போது புதிய அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் வாட்ஸ்அப் தனது வெப் பதிப்பில் புதிய அம்சங்களை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த வகையில் வாட்ஸ்அப் வெப் பதிப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதிகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப் 2.2043.7 பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் விரைவில் இந்த அம்சத்திற்கான ஸ்டேபில் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     வாட்ஸ்அப்

    வாட்ஸ்அப் ஏற்கனவே தனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் சேவையை வழங்கி இருக்கிறது. அந்த வரிசையில் தற்சமயம் இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப் தளத்திலும் வழங்கப்பட இருக்கிறது. புதிய அம்சம் வழங்குவது பற்றி வாட்ஸ்அப் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. 

    எனினும், இந்த அம்சம் தற்சமயம் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சத்திற்கான ஸ்டேபில் அப்டேட் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையில் ஐபோன் மாடல்கள் விற்பனையில் புதிய சாதனை படைத்திருக்கிறது.


    அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை சமீபத்தில் துவங்கியது. இந்த விற்பனையின் முதல் நாளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக ஐபோன்கள் விற்பனையாகி இருப்பதாக அமேசான் தெரிவித்து இருக்கிறது. அமேசான் சிறப்பு விற்பனையின் முதல் நாள் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நடைபெற்றது.

    அமேசான் சிறப்பு விற்பனையில் ஐபோன் 11 மாடல் ரூ. 47,999 எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த சிறப்பு விற்பனை இன்று (அக்டோபர் 21) வரை நடைபெறுகிறது. விற்பனையில் இம்முறை கடந்த ஆண்டை விட அதிகளவு வரவேற்பு கிடைத்து இருப்பதாக அமேசான் தெரிவித்து உள்ளது.

     ஐபோன் 11

    சிறப்பு விற்பனையில் அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்கள், பெரிய மின்சாதனங்கள் மற்றும் நுகர்வோர் மின்சாதனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதில் ஆப்பிள், சாம்சங், ஒன்பிளஸ் மற்றும் சியோமி நிறுவனங்கள் அதிக யூனிட்களை விற்பனை செய்திருக்கின்றன.

    ஸ்மார்ட்போன்களை பொருத்தவரை ஐபோன் 11, ரெட்மி நோட் சீரிஸ், ரெட்மி 9ஏ, ஒன்பிளஸ் 8டி, நார்டு மற்றும் சாம்சங் எம்31 உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கின்றன. 
    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் ரூ. 3 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய பிட்னஸ் பேண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.


    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி பிட் 2 பெயரில் புதிய பிட்னஸ் பேண்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 1.1 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 3டி வளைந்த கிளாஸ் கொண்டிருக்கிறது. 

    அதிகபட்சம் 5 விதமான நடவடிக்கைகளை கண்டறிந்து டிராக் செய்யும் வசதி, இதய துடிப்பு சென்சார், உடலில் எரிக்கப்பட்ட கலோரி விவரம், ஸ்லீப் டிராக்கிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

     சாம்சங் கேலக்ஸி பிட் 2

    சாம்சங் கேலக்ஸி பிட் 2 சிறப்பம்சங்கள்

    - 1.1 இன்ச் 126x294 AMOLED டிஸ்ப்ளே
    - 2 எம்பி ரேம்
    - 32 எம்பி மெமரி
    - பிளாஸ்டிக் ஸ்டிராப்
    - ப்ளூடூத் 
    - ஆக்டிவிட்டி மற்றும் ஸ்லீப் டிராக்கிங்
    - 5ஏடிஎம் மற்றும் ஐபி68 வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - 159 எம்ஏஹெச் பேட்டரி

    கேலக்ஸி பிட்2 மாடல் பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமேசான் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    விவோ நிறுவனத்தின் 44 எம்பி செல்பி கேமரா கொண்ட வி20 ஸ்மார்ட்போன் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    விவோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த வி20 ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கியது. புதிய விவோ வி20 ஸ்மார்ட்போன் 44 எம்பி செல்பி கேமரா, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங், 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. 

    இது மிட்னைட் ஜாஸ், மூன்லைட் சொனாட்டா மற்றும் சன்செட் மெலடி என மூன்று வித நிறங்களிலும், இருவித மெமரி ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் உடன் இந்தியாவில் வெளியான முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும்.

     விவோ வி20

    இந்தியாவில் விவோ வி20 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் விவோ ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 24,990 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 27,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஆன்லைன் மட்டுமின்றி விவோ வி20 ஸ்மார்ட்போன் முன்னணி ஆப்லைன் விற்பனையகங்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் தென் கொரிய நிறுவனமான சாம்சங் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தி இருக்கிறது.


    2020 ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்து இருப்பதாக கவுண்ட்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. சர்வதேச சந்தை மட்டுமின்றி இந்திய சந்தையிலும் சாம்சங் முதலிடம் பிடித்து உள்ளது.

    சர்வதேச சந்தையில் சாம்சங் நிறுவனம் 22 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இத்தகைய பங்குகளை பெற்ற முதல் நிறுவனம் சாம்சங் தான் என கவுண்ட்டர்பாயிண்ட் தெரிவித்து இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் ஹூவாய் நிறுவனம் 16 சதவீத சரிவை சந்தித்து இருக்கிறது.

     கேலக்ஸி எஸ்20 பிளஸ்

    2020 ஆகஸ்ட் மாதத்தில் சியோமி நிறுவனம் 11 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் ஏப்ரல் மாதம் முதல் சாம்சங் மொபைல் விற்பனை ஊரடங்கு போன்ற காரணங்களால் தொடர்ந்து சரிவடைந்து வந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் சாம்சங் வளர்ச்சி பாதைக்கு திரும்பி இருக்கிறது.

    கொரோனா ஊரடங்கு மந்த நிலையில் இருந்து சாம்சங் மீண்டுள்ளதாக தெரிகிறது. இந்திய சந்தையில் ஆன்லைன் விற்பனையில் அதிக கவனம் செலுத்தியது மற்றும் இந்தியர்கள் மத்தியில் சீனா பொருட்களுக்கு எதிரான மனநிலை போன்ற காரணங்களால், சாம்சங் விற்பனை அதிகரித்து இருக்கலாம் என தெரிகிறது.

    நிலவின் மேற்பரப்பில் 4ஜி நெட்வொர்க்கை கட்டமைக்க நோக்கியா நிறுவனத்தை நாசா தேர்வு செய்து உள்ளது.

    நிலவில் 4ஜி செல்லுலார் நெட்வொர்க் வசதியை கட்டமைக்க நாசா நோக்கியா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் இதற்கான பணிகளை துவங்க நோக்கியா நிறுவனத்திற்கு நாசா சார்பில் 1.4 கோடி அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    நிலவில் 4ஜி நெட்வொர்க் கட்டமைக்க மொத்தத்தில் 37 கோடி அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் நிலவின் மேற்பரப்பில் முதல் முறையாக எல்டிஇ \ 4ஜி செல்லுலார் வசதி கட்டமைக்கப்பட இருக்கிறது. 

    இதற்காக நோக்கியா சார்பில் உருவாக்கப்படும் தொழில்நுட்பம், நிலவின் மேற்பரப்பில் தொலைதூர தகவல் பரிமாற்றங்களை அதிவேகமாக மேற்கொள்ள வழி செய்யும். இதுதவிர தற்சமயம் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை விட சீரான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் வழி செய்யும்.

     நோக்கியா பெல் லேப்ஸ்

    நாசா இலக்கின் படி 2028 ஆம் ஆண்டு வாக்கில் நிலவின் மேற்பரப்பில் விண்வெளி வீரர்கள் பணிகளை மேற்கொள்ள செய்யும் திட்டத்தை நிறைவேற்ற விரைவில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என நாசா அதிகாரி ஜிம் பிரைட்ஸ்டைன் தெரிவித்து இருக்கிறார்.

    நோக்கியாவின் ஆராய்ச்சி பிரிவான பெல் லேப்ஸ், லூனார் ரோவர்களை வயர்லெஸ் முறையில் இயக்குவது, நேவிகேஷன் மற்றும் வீடியோ ஸ்டிரீமிங் உள்ளிட்ட வசதிகளை வழங்க பணியாற்றி வருவதாக தெரிவித்து உள்ளது.

    நாசாவின் திட்டத்தின் படி நோக்கியா மட்டுமின்றி பல்வேறு இதர தனியார் நிறுவனங்களும் இதுபோன்ற பணிகளை துவங்க இருக்கின்றன. இது தொடர்பான தகவல்கள் தொடர்ந்து அறிவிக்கப்படும் என தெரிகிறது. 

    சியோமி நிறுவனம் தனது 80 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.


    சியோமி நிறுவனம் 80வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. சீன சமூக வலைதளமான வெய்போ பதிவு மூலம் புதிய தொழில்நுட்பம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய 80 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 4000 எம்ஏஹெச் பேட்டரியை 19 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் தற்போதைய வயர்டு சார்ஜிங் வசதியை மாற்றும் என சியோமி தெரிவித்து உள்ளது.

     சியோமி வயர்லெஸ் சார்ஜிங்

    சியோமி நிறுவனம் மாடிபை செய்த எம்ஐ 10 ப்ரோ மாடலில் 80 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இயங்கும் வீடியோவை யூடியூப் தளத்தில் பதிவிட்டு இருக்கிறது. புதிய பாஸ்ட் சார்ஜிங் வசதி பேட்டரியை 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 8 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.  

    முன்னதாக மார்ச் மாத வாக்கில் சியோமி 40 வாட் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. பின் மே மாதத்தில் 30 வாட் வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட எம்ஐ 10 அல்ட்ரா மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    எல்ஜி நிறுவனத்தின் ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போன் 12 மணி நேரத்தில் சுமார் 1.75 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.


    எல்ஜி நிறுவனம் தனது பிளாக்ஷிப் ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வரும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 70 ஆயிரம் எனும் பிரீமியம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதன் விலை குறைக்கப்பட்டு, சிறப்பு சலுகைகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வந்தன.

    தற்சமயம் ப்ளிப்கார்ட் தளத்தில் எல்ஜி ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போன் ரூ. 21,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனினும், விற்பனை துவக்கத்தின் போது இந்த ஸ்மார்ட்போன் ரூ. 19,990 துவக்க விலையில் விற்னை செய்யப்பப்பட்டது. 

     எல்ஜி ஜி8எக்ஸ் தின்க்

    ப்ளிப்கார்ட் விற்பனையின் போது 12 மணி நேரத்தில் எல்ஜி ஜி8எக்ஸ் தின்க் மட்டும் ரூ. 350 கோடி வருவாய் ஈட்டிக் கொடுத்ததாக எல்ஜி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

    மொத்தம் 12 மணி நேரம் விற்பனை நடைபெற்றதால், குறைந்த விலையை கணக்கில் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் எல்ஜி சுமார் 1.75 லட்சம் யூனிட்களை விற்பனை செய்திருக்கலாம் என்றே தெரிகிறது.

    டூயல் ஸ்கிரீன் கொண்ட எல்ஜி ஸ்மார்ட்போன் தள்ளுபடி மட்டுமின்றி வங்கி சலுகைகள், கேஷ்பேக் மற்றும் வட்டியில்லா மாத தவணை போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

    இனி வெளியாகும் ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் செயலி இடம்பெறாது என தகவல் வெளியாகி உள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒன்பிளஸ் 8டி மாடலில் பேஸ்புக் சேவைகள் எதுவும் இடம்பெறாமல் இருந்தது.

     ஒன்பிளஸ் 8டி

    பேஸ்புக் நிறுவன செயலிகள் நீக்கப்பட்ட விவகாரம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் பதில் அளித்துள்ளது. அந்த வகையில் இனி வெளியாகும் புதிய ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் நிறுவன செயலிகள் மற்றும் சேவைகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படாது என ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது.

    இதனால் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோர் பேஸ்புக் நிறுவன சேவைகள் மற்றும் செயலிகளை அவர்களாக இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.  
    ஒப்போ நிறுவனம் தனது எப்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் தீபாவளி எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.



    ஒப்போ எப்17 ப்ரோ தீபாவளி எடிஷன் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் மேட் கோல்டு பினிஷ் மற்றும் அதற்கேற்ற வால்பேப்பர் வழங்கப்படுகிறது. 

    இதுதவிர தீபாவளி எடிஷன் ஸ்மார்ட்போனுடன் 10,000 எம்ஏஹெச் 18வாட் ஒப்போ பவர் பேங்க் 2 மற்றும் பிரத்யேக பேக் கவர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதுவரை ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மேஜிக் புளூ, மேட் பிளாக் மற்றும் மெட்டாலிக் வைட் போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 

     ஒப்போ எப்17 ப்ரோ தீபாவளி எடிஷன்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ எப்17 ப்ரோ மாடலில் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் அமைப்பில் 16 எம்பி + 2 எம்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

    இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த கலர் ஒஎஸ் 7.2 ஒஎஸ், 4015 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 30 வாட் வூக் 4.0 பிளாஷ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
    ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 மாடல்களின் சொல்லப்படாத தகவல் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 பேட்டரி விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவை பிரேசில் நாட்டு டெலிகாம் நிறுவனமான அனடெல் மூலம் தெரியவந்து இருக்கிறது. பேட்டரி விவரங்கள் மட்டுமின்றி இவற்றின் உற்பத்தி தகவல்களும் வெளியாகி உள்ளன.

    அந்த வகையில் ஐபோன் 12 மினி மாடலில் 2227 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது ஐபோன் எஸ்இ 2020 மாடலல் வழங்கப்பட்ட 1821 எம்ஏஹெச் பேட்டரியை விட அதிகம் ஆகும். ஐபோன் 12 மாடலில் 2815 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. 

     ஐபோன் 12 மினி

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களின் பேட்டரி திறனை எப்போதும் அறிவிக்காது. எனினும், ஆப்பிள் வலைதளத்தில் ஐபோன் 12 கிட்டத்தட்ட 15 மணி நேர வீடியோ பிளேபேக் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 12 மற்றும் 12 ப்ரோ மாடல்கள் 17 மணி நேர பிளேபேக் வழங்குகின்றன.

    உற்பத்தியை பொருத்தவரை ஐபோன் 12 ப்ரோ மாடல் இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஐபோன் 12 மாடல் உற்பத்தி பணிகள் இந்தியாவில் உள்ள விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் 2021 வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது.
    ×