search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவரப்பேட்டை விபத்து"

    • பஸ் டிரைவர் லாரியை முந்திச்செல்ல பஸ்சின் வேகத்தை அதிகரித்ததால் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்தது.
    • பஸ் சின்னாபின்னமாக நொறுங்கியதால் காயம் அடைந்த பயணிகளால் வெளியே வர முடியவில்லை.

    கும்மிடிப்பூண்டி:

    சென்னை கவரப்பேட்டை அருகே தச்சூரில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் 3 பேர் பலியானார்கள். அதன் விவரம் வருமாறு:-

    ஐதராபாத்தில் இருந்து சொகுசு ஆம்னி பஸ் ஒன்று சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. இதில் 30 பேர் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 5 மணியளவில் ஆம்னி பஸ், சென்னை கவரப்பேட்டை அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்ரோடு மேம்பால பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அதே நேரத்தில் ஆந்திராவில் இருந்து லாரி ஒன்று சென்னை நோக்கி வந்தது. ஆம்னி பஸ்சும், லாரியும் சென்னை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. இதனால் பஸ்சும் லாரியும் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக சென்றது.

    லாரி முன்னே செல்ல ஆம்னி பஸ் அதன் பின்னால் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து பஸ் டிரைவர் லாரியை முந்திச்செல்ல பஸ்சின் வேகத்தை அதிகரித்தார். இதனால் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது.

    பஸ் மோதிய வேகத்தில் லாரி நொறுங்கி தலைகீழாக கவிழ்ந்தது. அதே நேரத்தில் பஸ்சும் நொறுங்கி சின்னா பின்னமானது. அதன் முன் பகுதியும், பக்கவாட்டு பகுதியும் பலத்த சேதம் அடைந்து கண்ணாடிகள் நொறுங்கின. நொடிப்பொழுதில் இந்த விபத்து நடந்து முடிந்து விட்டது.

    இந்த கோர விபத்தில் சிக்கிய பயணிகள் கூச்சல் போட்டு உயிருக்கு போராடினார்கள். பஸ் சின்னா பின்னமாக நொறுங்கியதால் காயம் அடைந்த பயணிகளால் வெளியே வர முடியவில்லை.

    இதுகுறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக கவரப்பேட்டை போலீசாரும், பொன்னேரி தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் பஸ்சின் பாகங்களை வெட்டி அதில் சிக்கிய பயணிகளை மீட்டனர்.

    இந்த விபத்தில் ஆம்னி பஸ்சில் இருந்த சென்னையை சேர்ந்த பயணிகள் தொக்கலா சதீஷ்குமார் (வயது 45), தும்மலா ரோஷித் (35) மற்றும் ஆந்திராவை சேர்ந்த பஸ் கிளீனர் ஸ்ரீதர் (35) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் பஸ்சில் இருந்த பயணிகள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மகி என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆனது. பலியான மகி கும்மிடிப்பூண்டி புதுவாயல் பகுதியை சேர்ந்தவர். இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர் தனது கிராமத்தில் இருந்து லிப்ட் கேட்டு பஸ்சில் ஏறினார். சிறிது நேரத்திலேயே அவர் விபத்தில் சிக்கி பலியாகி விட்டார். ஆஸ்பத்திரியில் மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விபத்தை ஏற்படுத்திய பெங்களூருவை சேர்ந்த பஸ் டிரைவர் கிஷோர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த விபத்து காரணமாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மேம்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தி வாகனங்களை சர்வீஸ் சாலை வழியாக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் பஸ்சையும், லாரியையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    ×