search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன்"

    வாலிபரிடம் செல்போன் விற்பதாக கூறி ஆன்லைனில் மர்ம நபர்கள் செய்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து ரூ.39 ஆயிரம் மீட்டு வாலிபரிடம் ஒப்படைத்தனர்
    சேலம்:

    சேலம் போர்லாண்ட்ஸ் பகுதியை சேர்ந்த நவீன் குமார். இவர் இணையதளத்தில்  குறைந்த விலையில் செல்போன் விற்பனை செய்வதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டு இருந்த எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது மறுமுனையில் பேசிய நபர் ரூ.39 ஆயிரத்து 500 முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்று சொன்னார். அதை நம்பி நவீன்குமார் போனில் பேசியவர் கூறிய வங்கி கணக்கிற்கு கூகுல்பே மூலம் ரூ.39 ஆயிரத்து 500  அனுப்பி வைத்தார்.

    ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் செல்போன் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தனது பணத்தை மீட்டுத் தருமாறு நவீன் குமார் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். 

    இதுகுறித்து  சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது அதில் நவீன் குமார் அனுப்பிய பணம் மும்பையில் உள்ள ஒரு தனியார் வங்கி கணக்கிற்கும் பஞ்சாப்பில் உள்ள தனியார் வங்கி கணக்கிற்கும் சென்றிருப்பது தெரியவந்தது. 

    மோசடி செய்யப்பட்ட பணத்தை நவீன்குமாருக்கு திரும்ப கிடைக்கும் வகையில் போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிகளின் லீகல் டிபார்ட்மெண்டுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நவீன்குமாரிடம் இருந்து மோசடியாக பெறப்பட்ட  ரூ.39 ஆயிரம் 500 முழுவதும் அவரது வங்கி கணக்கில் திரும்ப சேர்க்கப்பட்டது. 

    மேலும் இது போன்ற குறைந்த விலையில் செல்போன், 2, 4  சக்கர வாகனங்கள் மற்றும் இதர பொருட்கள் விற்பதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம். வங்கியில் இருந்து பேசுவதாக கூறுவதை நம்பி தங்களுடைய வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் ஓ.டி.பி.க்களை யாரிடமும் பகிர வேண்டாம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பங்கு சந்தை முதலீட்டில் அதிக லாபம், குறைந்த வட்டியில் கடன் என்ற வரும் போலி தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். 

    அவ்வாறு யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால் உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண் 1930-க்கு விரைவாக தொடர்பு கொள்ளும் பட்சத்தில் இழந்த பணத்தை மீட்டுத் தர இயலும் என  சேலம் சைபர் கிரைம் டி.எஸ்.பி. முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    ×