என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரு பூஜை"

    • குரு நின்ற வீட்டை விட பார்த்த வீட்டை அதிக சக்தி உடையதாக மாற்றுவார்.
    • குரு பகவான் கடக ராசியில் ஐந்தாவது டிகிரியில் பூச நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார்.

    நவகிரகங்களில் முழு சுப கிரகமாக கருதப்படுபவர் குருபகவான். தனது பார்வை பலத்தால் ஒரு ஜாதகத்தில் உள்ள தோஷங்களையும் சாபங்களையும் நிவர்த்தி செய்யக்கூடிய வல்லமை பெற்றவர்.

    சுய ஜாதக ரீதியாக ஒருவருக்கு இல்லாத யோகங்களையும் கோட்ச்சார காலங்களில் வழங்கும் தன்மை பெற்றவர். ஒரு ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் பலமிழந்து இருந்தாலும் குரு நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு அனைத்து விதமான நல்ல பலன்களும் கூடிவிடும். குருவிற்கு மூன்று விதமான பார்வைகள் உண்டு. அவர் தான் நின்ற வீட்டிலிருந்து 5, 7, 9ம் இடங்களை பார்ப்பார். குரு நின்ற வீட்டை விட பார்த்த வீட்டை அதிக சக்தி உடையதாக மாற்றுவார்.

    குரு தனது ஐந்தாம் பார்வையால் குழந்தை, காதல், அதிர்ஷ்டம், பணம், பொருள், பூர்வீகத்தில் வாழும் அமைப்பு குலதெய்வ அனுகிரகம் போன்றவற்றை வழங்குவார். ஏழாம் பார்வையால் திருமணம், சமுதாய அங்கீகாரம் , நல்ல நட்பு ஆகியவற்றை ஏற்படுத்துவார். தனது ஒன்பதாம் பார்வையால் பேரன்,பேத்தி, வெளிநாட்டு வாழ்க்கை, தெய்வ கடாட்சம் போன்ற பாக்கிய பலன்களை நல்குவார். இத்தகைய சிறப்பு மிக்க குரு பகவான் கடக ராசியில் ஐந்தாவது டிகிரியில் பூச நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார். உச்சம் பெற்ற கிரகம் அனைவருக்கும் நல்ல பலனை வழங்குவது இல்லை. ஒரு கிரகம் தான் பெற்ற ஆதிபத்திய ரீதியாகவும் தான் நின்ற வீட்டு ரீதியாகவும் பலன் தரும் அந்த வகையில் உச்சம் பெற்ற குரு பகவான் எந்த லக்னத்திற்கு நன்மையையும் எந்த லக்னத்திற்கு தீமையையும் வழங்குவார் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

    மேஷ லக்னத்திற்கு 9,12-ம் அதிபதியான குருபகவான் 4-ம் மிடமான சுக ஸ்தானத்தில் உச்சம் பெறுவது அதிக சுபத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். தாயும் தந்தையும் உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் உள்ளவர்கள். தாய் தந்தை வழி சொத்து மிகைப்படுத்தலாக கிடைக்கும். சுய உழைப்பிலும் சிறப்பான வீடு மனை வாகன யோகம் உண்டு. வெளியூர் வெளிநாட்டு வாழ்க்கையை விரும்புவார்கள். கற்ற கல்வியால் பயன் உண்டு. அரசியலில் தனித்தன்மை தனித் திறமையுடன் மிளிர்வார்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் புகழ், அந்தஸ்துடன் கோடீஸ்வரராக வாழ்வார்கள்.

    ரிஷப லக்கனத்திற்கு 8,11-ம் அதிபதியான குரு பகவான் உப ஜெய ஸ்தானமான 3ல் உச்சம் பெறுவார். 3,11-ம் இடங்கள் உப ஜெய ஸ்தான மாகும். 8,11ம்மிடங்கள் பண பர ஸ்தானமாகும்.ஒரு உப ஜெய ஸ்தான அதிபதி, மற்றொரு உப ஜெய ஸ்தானத்தில் உச்ச மடைவதால் ஜாதகருக்கு நல்ல வளர்ச்சியையும், வெற்றி மேல் வெற்றியையும் தரும். சீரான முன்னேற்றம் உண்டு. திட்டமிட்டு வெற்றிக் கனியை சுவைப்பவர்கள். பல வழிகளில் வருமானம் உண்டு. ஜாதகரின் எழுத்து உலகப் பிரசித்தி பெறும். தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் ஊடகங்களில் பெயர், புகழ் பரவும். நகைச்சுவை உணர்வு, இசை ஆர்வம் உண்டு. பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டு. சகோதர ஒற்றுமை, கூட்டுத் தொழில் உண்டு. மூத்த சகோதரம், சித்தப்பாவால் ஆதாயம் உண்டு.

    மிதுன லக்னத்திற்கு 7, 10-ம் அதிபதியான குரு பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் அடைவது மிகச் சிறப்பான அமைப்பாகும். வாழ்க்கைத் துணை கவுரவ பதவியில் சுய கவுரவம் உள்ளவராக சமுதாய அந்தஸ்து நிரம்பியவராக இருப்பார். திருமணத்திற்குப் பிறகு பொருளாதார வளர்ச்சியும் புகழும் கிடைக்கும். நல்ல கல்வி அறிவு உண்டு. சொத்து சுகம் என சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்த திருமண வாழ்க்கை உண்டு. கூட்டுத் தொழிலில் வெற்றி உண்டு. புதிய தொழில் நண்பர்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள். தொழில், நட்பு மூலம் சம்பந்திகள் அமைவார்கள். மிதுன லக்னத்திற்கு குரு பகவான் பாதகாதிபதி என்பதால் குடும்பத்தில் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் கலகலப்பு குறையாது.

    கடக லக்னத்திற்கு 6, 9-ம் அதிபதியான குரு பகவான் லக்னத்தில் உச்சம் அடைவார். ஆறாம் அதிபதியாக குருபகவான் உச்சம் அடைவது சிறப்பித்துச் சொல்லக்கூடிய பலன் அல்ல. அதே நேரத்தில் அவர் பாக்யாதிபதியாக லக்னத்தில் உச்சம் அடைவது ஜாதகருக்கு நன்மை தீமை இரண்டையும் இணைந்து வழங்கும். இவர்களுக்கு தீராத தீர்க்க முடியாத பிறவி கடனும் பொருள் கடனும் உண்டு. ஜாதகரின் தந்தை நோயாளியாகவோ கடனாளியாகவோ இருப்பார். அல்லது ஜாதகருக்கு தந்தையின் கடனை சுமக்க வேண்டிய நிலையில் உண்டாகும். தந்தைக்கு அறுவை சிகிச்சை அல்லது வைத்தியம் செய்து ஜாதகருக்கு கடன் உருவாகும். தந்தையால் வராக்கடன் வரலாம். குல கவுரவத்திற்காக தந்தை ஏற்படுத்திய கடனை அடைத்து அவதிப்படுகிறார்கள். இந்த அமைப்பு உடையவர்கள் கடனுக்கு பயந்து நோயை வரவழைத்துக் கொள்வார்கள்.

    சிம்ம லக்னத்திற்கு குரு பகவான் 5, 8 எனும் பணபர ஸ்தானத்திற்கு அதிபதியாகும். லக்னத்திற்கு 12-ம் மிடமான அயன, சயன விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் பூர்வீக சொத்து, தந்தை, தந்தை வழி முன்னோர்களால் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் கிடைக்கும். ஆனால் ஜாதகர் அதை பயன்படுத்த முடியாமல் வெளியூர் வெளிநாடு வெளி மாநிலத்தில் வசிக்கக்கூடிய சூழ்நிலைகள் இருக்கும். பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களால் ஜாதகருக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன் உண்டாகும். பங்குச் சந்தையில் அதிகமான இழப்புகளை சந்திப்பார்கள். காலதாமதமான புத்திர பிரார்த்தம் உண்டாகும். தொழில் சார்ந்த நஷ்ட கடன், கஷ்டமான தொழில் செய்யும் சூழல், திடீர் விரயம் உண்டாகும். வெகு சிலருக்கு விபரீத ராஜயோகத்தையும் இந்த அமைப்பு ஏற்படுத்தும்.

    கன்னியா லக்னத்திற்கு 4,7-ம் அதிபதியான குரு பகவான் 11-ம் மிடமான லாப ஸ்தானத்தில் உச்சம் அடைவது மிகச் சிறப்பான அமைப்பாகும். வாழ்நாள் எண்ணங்கள் லட்சியங்கள் கனவுகள் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். தன்னை சார்ந்தவர்களுக்கு தொழில் தொடர்பான ஆலோசனை வழங்கி வழி நடத்துபவர்கள். இந்த அமைப்பினருக்கு சொத்து வாங்குதல் விற்றல் இரண்டும் சுலபமாக நடைபெறும். நண்பர்களுடன் இணைந்து கூட்டாக ரியல் எஸ்டேட் தொழில் நடத்துவார்கள். இவர்கள் சுய தேவைக்கு வாங்கும் சொத்தை மனைவி அல்லது குடும்ப நபர்களின் பெயரில் இணைந்து வாங்குவார்கள். திருமணத்திற்கு பிறகு அடிக்கடி சொத்தை வாங்குவது விற்பது சுலபமாக நடந்து கொண்டே இருக்கும். வாழ்நாள் முழுவதும் வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும்.

    துலாம் லக்னத்திற்கு 3,6-ம் அதிபதியான குருபகவான் 10ம் மிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் ஒப்பந்தம் அடிப்படையான தொழில்,கமிஷன் அடிப்படையான தொழில்கள் இவர்களுக்கு சிறப்பான பலனைத் தரும். யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் இவர்களுக்கு பல மடங்கு வருமானத்தை கொடுக்கும். ஜாமீன் கடன் இ.எம்.ஐ சார்ந்த பிரச்சினைகள் ஜாதகரின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் இந்த அமைப்பு உள்ளவர்கள் கடன் வாங்கி சுயதொழில் செய்வார்கள்.தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி இடம் பெயவார்கள். இந்த அமைப்பு உள்ளவர்கள் சுயதொழில் செய்வதை தவிர்ப்பது நல்லது. வெகு சிலருக்கு அரசு வேலை, அரசாங்க பதவி போன்றவைகளும் கிடைக்கும்.உச்சம் பெற்ற குரு பகவான் துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் சகோதரர்களுக்கு அதிக நற்பணி வழங்குவார்.

    விருச்சிக லக்னத்திற்கு 2,5-ம் அதிபதியான குரு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் அடைவார். ஆனால் விருச்சிக லக்னத்திற்கு இது பாதகஸ்தானம் என்பதால் பாக்கியத்தை பாதகம் கலந்து வழங்குவார். அல்லது ஜாதகருக்கு பாக்கியமே பாதகமாகும். தந்தையால் ஜாதகருக்கு பெரிய நற்பலன் ஏற்படாது. அல்லது ஜாதகரும் தந்தையும் பிரிந்து வாழ நேரிடும். பூர்வீகம், குலதெய்வம், குழந்தை, அதிர்ஷ்டம், காதல் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு முன்னுக்கு பின் முரணான பலனை வழங்கும். ஜாதகருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் அனைத்தும் ஜாதகரை விட ஜாதகரின் குடும்பத்திற்கே பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில் ஜாதகர் பொதுக் காரியங்களில் அதிகமாக ஈடுபட்டால் புண்ணிய பலன்கள் பல மடங்கு அதிகரிக்கும். இந்த அமைப்பு இருப்பவர்கள் சுயநலத்தை விட பொதுநலத்துடன் இருப்பது சிறப்பாகும்.

    தனுசு லக்னத்திற்கு ராசி அதிபதி மற்றும் சுகஸ்தான அதிபதியான குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் லக்னத்திற்கு எட்டாம் வீட்டில் உச்சம் அடைவார். ஜாதகர் உயர்ந்த குலத்தில் பிறந்த அதிர்ஷ்டசாலி. சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட பணம் பொருள் உயில் சொத்து போன்றவைகள் கிடைக்கும். குருவிற்கு வீடு கொடுத்த சந்திரன் தனுசு லக்னத்திற்கு ஒரே ஆதிபத்தியம் பெற்ற அஷ்டமாதிபதி என்பதால் நன்மையும் தீமையும் கலந்த பலன்களே ஜாதகருக்கு உண்டாகும். தொழில் உத்தியோக நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்வார்கள். கடன், வம்பு, வழக்கு,நோய் தாக்கம், உத்தியோகத்தில் இடையூறு, போட்டித் தேர்வுகள் போன்றவற்றில் ஏமாற்றங்கள் உருவாகலாம். விரயத்தை தவிர்க்க முடியாத நிலை நீடிக்கும். நல்ல மதிப்பு வாய்ந்த சொத்துக்கள் ஜாதகரிடம் இருக்கும்.

    மகர லக்னத்திற்கு 3,12-ம் அதிபதியான குரு பகவான் சம சப்தம ஸ்தானத்தில் உச்சமடைவார். அதாவது ராசிக்கு உச்ச குரு பகவானின் பார்வை கிடைக்கும். ஜாதகருக்கு பதிவு திருமணம் நடக்கும். திருமணத்திற்கு பிறகு வெற்றி வாய்ப்புகள் பொருளாதார முன்னேற்றம் தேடி வரும். முயற்சி, வெற்றி, திட்டமிடுதலுக்கு பின் வாழ்க்கை துணையின் பங்களிப்பு இருக்கும். சமுதாய மதிப்பு, மரியாதை நிறைந்த நல்ல வாழ்க்கைத் துணை அமையும். மனைவிவழி ஆதாயமும் உண்டு. இன்பம், துன்பம் என அனைத்து சூழ்நிலைகளிலும் மனைவியின் ஆதரவும், அரவணைப்பும் உண்டு. அதிக நண்பர்கள் உண்டு. நண்பர்களின் ஆதரவும், ஆதாயமும் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் உண்டாகும்

    கும்ப லக்னத்திற்கு 2,11-ம் அதிபதியான குரு பகவான் லக்னத்திற்கு ஆறில் உச்சம் அடைவார். தன லாப கிரகம் ஆறாம் இடத்தில் உச்சம் பெறுவதால் கவுரவ பதவி அரசாங்க உத்தியோகம் அல்லது அரசாங்க உத்தியோகத்திற்கு இணையான வேலை கிடைக்கும். ஆனால் ஜாதகர் பணக்கார போர்வையில் வாழும் கடனாளியாக இருப்பார். தொழில் உத்தியோக ரீதியான மன உளைச்சல் உள்ளவர். வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய குடும்ப நோய் தாக்கம் இருக்கும். வருமானத்தை தக்க வைக்க முடியாத வகையில் இழப்புகள் இருக்கும். நேரத்திற்கு சாப்பிட முடியாமல் கடுமையாக உழைக்க நேரும். ஜாதகரால் பெரிய நற்பயனையும் அடைய முடியாது.

    மீன லக்னத்திற்கு ராசி அதிபதி மற்றும் பத்தாம் அதிபதியான குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் இடத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். வாழ்வின் இறுதிகாலம் வரை சுகமாகவும் அமைதியாகவும் வாழ்க்கை இருக்கும். சுயதொழில் ஆர்வம் அதிகமாக இருக்கும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் நல்ல பொருள் வரவை பெற்றுத்தரும். சிறிய உழைப்பில் பெரிய வருமானம் கிடைக்கும். அரசியல் அரசாங்க பதவி அரசு உத்தியோகத்தை ஏற்படுத்தி தரும் நல்ல கிரக அமைப்பாகும். பெற்ற பிள்ளைகளால் மனநிறைவு இருக்கும். கர்மம் செய்ய புத்திரன் உண்டு. சிலர் முக்தியை போதிக்கும் ஆன்மீக இயக்கம், சங்கங்களில் சேர்ந்து பயனடைவார்கள். குலதெய்வ அனுக்கிரகம் முன்னோர்களின் நல்லாசி நிரம்பியவர்கள். குருபகவான் இயற்கை சுப கிரகம் என்பதால் ஒரு ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றால் ஏதாவது ஒரு நற்பலன் கண்டிப்பாக ஜாதகருக்கு உண்டாகும். 2026ல் குரு பகவான் உச்சம் அடையும் காலங்களில் பிறக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலியாக திகழ்வார்கள்.

    • அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தபோவனத்தில் ஸ்ரீ ஞான அகஸ்தியர் குருபூஜை விழா நடைபெற்றது.
    • இதனையொட்டி யாகசாலை பூஜைகள் மற்றும் சங்கு அபிஷேக பூஜை நடைபெற்றன.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் சுப்ரமணிய நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தபோவனத்தில் ஸ்ரீ ஞான அகஸ்தியர் குருபூஜை விழா நடைபெற்றது. இதனையொட்டி யாகசாலை பூஜைகள் மற்றும் சங்கு அபிஷேக பூஜை நடைபெற்றன.

    இந்த பூஜையில் 1008 வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் வைக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி ஞான அகஸ்தியருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் 1008 சங்கு வைத்து பூஜை செய்து, பக்தர்கள் தங்கள் கைகளால் சங்காபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட இடம்புரி சங்குகள் 900 பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    அதேபோல் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோட்டையூர் பகவதி சாமிகள், பண்ணவாடி சாமிகள், சன்னியாசிகள், அகோரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஸ்ரீ நவகோடி சித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் சித்தரசு சுவாமிகள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

    • எறிபத்த நாயனார் கையில் எப்பொழுதும் ஒரு கோடாலியோடு இருப்பார்.
    • அழுத்தமான சிவபக்தி என்பது தான் இதன் மையப்புள்ளி.

    63 நாயன்மார்களில் வன்தொண்டர்கள் உண்டு. அப்படிப்பட்ட தொண்டகளில் ஒருவர்தான் எறிபத்த நாயனார். கையில் எப்பொழுதும் அவர் ஒரு கோடாலியோடு இருப்பார்.

    ஒரு முறை அரசனின் பட்டத்து யானை, சிவகாமியாண்டார் என்ற வயதான சிவனடியார் எடுத்து வந்த பூஜை பொருட்களை தட்டி விட, அவர் அழுது கொண்டே நின்றார். அரசன் யானை என்பதால், யானையையோ யானைப் பாகனையோ தண்டிக்கவும் முடியவில்லை. தன் நிலையை நினைத்து வருந்தினார்.

    இதனைக் கேள்விப்பட்ட அடுத்த நிமிடம், கோபத்தோடு விரைந்து வந்த எறிபத்தர், அரசனுடைய பட்டத்து யானை என்றும் பார்க்காது யானையையும், யானைப்பாகனையும் தன் கையில் இருந்த மழுவால் (கோடரியால்) தண்டித்தார்.

    இந்தச் செய்தியை ஓடிச் சென்று பலரும் அரசிடம் தெரிவித்தனர். சிவனடியார் ஒருவர் இக்கொடுஞ்செயலைச் செய்தார் என்று சொல்ல, அப்படி சிவனடியார் ஆத்திரத் தோடு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று விசாரித்தார். முழுக்கதையையும் அறிந்த புகழ்ச் சோழன், எறிபத்த நாயனார் செயல் சரிதான் என்றும், இதற்குத் தானும் பொறுப்பு என்றும் தன்னையே வாளால் தண்டித்துக் கொள்ள முனைய, எறிபத்த நாயனார், அந்த வாளை வாங்கி தன்னை மாய்த்துக் கொள்ள முயன்றார்.

    இவை அத்தனையும் உணர்ச்சி வசத்தால் செய்யப்பட்ட செயல்கள் என்றாலும், இதனுடைய உயிர் துடிப்பாக இருப்பது சிவநிந்தையைப் பொறுக்க முடியாமையும், சிவனுடைய பூஜை அவமதிப்பை தாங்க முடியாமையும், சிவ நெறியிலும் சிவபூஜையி லும் உள்ள மிக அழுத்தமான நம்பிக்கையும் ஆகும். அழுத்தமான சிவபக்தி என்பது தான் இதன் மையப்புள்ளி.

    இச்செயல்களை திருவிளையாடலாக நடத்திய சிவபெருமான், இடப வாகனத்தில் உமையம்மையாரோடு தோன்றி, இவர்களை எல்லாம் மறுபடியும் உயிர்ப்பித்து அருளினார்.

    • குருபூஜை விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது.
    • பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது.

    பாம்பன் சுவாமிகளின் 94-வது குருபூஜை விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது. இதையடுத்து திருவான்மி யூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இன்று அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை ஹோமம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து பாம்பன் சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், 108 சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    காலை 10.30 மணிக்கு பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் பாராயனம், மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலை 5 மணி முதல் 6 மணிவரை விசேஷ பூஜை மற்றும் மேளக் கச்சேரி நடைபெற்றது.

    இதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 8 மணிக்கு பாம்பன் சுவாமிகள் மற்றும் 6666 பாடல்கள் அடங்கிய புத்தகம் மேளம், நாதஸ்வர இசையுடன் கோவில் வளாகத்தில் உட்புறப்பாடு நடைபெற்றது. பின்னர் இரவு 11 மணி முதல் அதிகாலை வரை 6 கால பூஜை சண்முக சகச்சிரநாம அர்ச்சனையுடன் ஓதுதல் நடக்கிறது.

    நாளை (9-ந் தேதி) காலை சிறப்பு சோடச உபசார மற்றும் குமாரஸ்தல பூஜையும், மகேஸ்வர பூஜையும் நடைபெற உள்ளது.

    பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு ஆகும்.

    முருகனின் வழிபாடாக இவர் மொத்தம் 6666 பாடல்கள் இயற்றினார். இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

    பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. சிறுவயதில் இவருக்கு கந்தர் சஷ்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் உபய அருணகிரிநாதர் என்ற பெயரும் பெற்றார். பாம்பன் சுவாமிகள் 1929-ம் ஆண்டு மே 30-ந்தேதி முக்தி அடைந்தார்.

    மாதந்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அவரது அருளை பெற்று வருகிறார்கள்.

    • மாவீரன் அழகு முத்துக்கோனின் 266-வது குருபூஜையை முன்னிட்டு 11-ந்தேதி எழும்பூரில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
    • முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆங்கிலேய அரசாங்கத்திற்கு வரி தர மறுத்து போர்க்களத்தில் உயிர் நீத்தவரும், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு வித்திட்டவரும், வாள்வீச்சு, காளை அடக்குதல், மல்யுத்தம் போன்றவற்றில் கைதேர்ந்தவருமான சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் அழகு முத்துக்கோனின் 266-வது குருபூஜையை முன்னிட்டு 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.45 மணியளவில் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அனைவரும் திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் தேவர் சிலை மற்றும் மருது பாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மதுரை:

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டது. இதற்காக மதுரை கோரிப்பாளையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடங்களில் உள்ள தேவர் சிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தேவர் ஜெயந்தி விழா மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாக்களில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை விமானத்தில் சென்னையிலிருந்து மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.

    தொண்டர்களின் வரவேற்பு பெற்ற எடப்பாடி பழனிசாமி தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், காமராஜ், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி கமுதி அருகே பசும்பொன் கிராமத்திற்கு சென்று பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு நின்று எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

    ம.தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, மதுரையில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பூமிநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் முனியசாமி, கீரைத்துறை பாண்டியன், அன்ன முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


    தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்த சசிகலா இன்று காலை கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள்.


    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கோரிப்பாளையம் தேவர் சிலை, தெப்பக்குளம் மருது பாண்டியர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் தேவர் சிலை மற்றும் மருது பாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


    பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருமூலரை தரிசித்தனர்
    • கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூரில் திருமூல நாயனார் கோவில் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான திருமூலர் அவதரித்த சாத்தனூரில் திருமூலரை மூலவராக கொண்ட கோவில் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த கோவிலில் நேற்று அசுபதி நட்சத்திரத்தையொட்டி திருமூலருக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருமூலரை தரிசித்தனர். இதில், கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சந்திரசேகரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    • அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர் அதிபத்தநாயனார்.
    • அதிபத்தர் என்று தூய தமிழால் அழைக்கப்பட்டார்.

    இன்று (வெள்ளிக்கிழமை) அதிபத்த நாயனார் குருபூஜை. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான அதிபத்தநாயனார் நாகையில் வாழ்ந்தவர். பக்தியிலும் அதிதீவிர பக்தி உடையவர். ஆதலால் அதி பக்தராய் விளங்கிய நாயனார், அதிபத்தர் என்று தூய தமிழால் அழைக்கப்பட்டார். இவர் மீனவ குலத்திற்கு விளக்காக அவதரித்தவர்.

    சிவபெருமானிடம் இருந்த அதீதமான பக்தியினால், தமது வலையில் விழும் மீன்களுள் ஒன்றை மீண்டும் கடலிலேயே சிவார்ப்பணமாக விடும் வழக்கத்தை ஒவ்வொருநாளும் மேற்கொண்டிருந்தார். ஒருநாள் அவ்வலையில் ஒரே ஒரு மீன் மட்டும் அகப்பட்டது. அதுவும் தங்கமாக ஜொலிக்கும் விலை மதிப்பற்ற ஒன்று. அப்படி இருந்தும் அதனை ஒரு பொருட்டாகத் தனக்கென்று எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் கடலிலேயே விட்டுவிட்டார்.

    நாயனாரது பக்தியை மெச்சிய பெருமான் ரிஷப வாகனத்தில் அம்பிகையுடன் தோன்றி அவருக்கு அருளினார் என்பது பெரியபுராணம் காட்டும் வரலாறு.

    நாயனார் அருள் பெற்ற ஆவணி மாத ஆயில்ய நட்சத்திரத்தன்று நாகை காயாரோகணேஸ்வர சுவாமி ஆலயத்தில் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் இதனைக் காண அடியார்கள் வருகிறார்கள். பகலில் நடைபெறும் உற்சவம் இது.

    • பரதேசி ஆறுமுகம் சுவாமிகள் குருபூஜை விழா நடந்தது.
    • பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால் காவடி, சந்தன காவடி, புஷ்ப காவடி எடுத்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கோட்டுப்பாக்கம் கிராமத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பரதேசி ஆறுமுகம் சுவாமிகள் குருபூஜை விழா நேற்று நடந்தது.

    காலையில் பரதேசி ஆறுமுக சுவாமிகள் ஜீவசமாதியில் குருபூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பு உலக நன்மைக்காகவும் பருவ மழை பெய்ய வேண்டியும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    பின்னர் பரதேசி ஆறுமுக சுவாமி ஜீவசமாதிக்கு முன்பு பொங்கல் செய்து வைத்து படைக்கப்பட்டது.

    திருமணி சேறைவுடையார் சிவன் கோவில் சிவயோகி சித்தர் ஐ.ஆர்.பெருமாள் சுவாமி தலைமையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சிவனடியார்கள் குழந்தை வரம் கேட்டு வந்த பெண்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

    இதனை மடியில் பெற்றுக் கொண்ட பெண்கள் கோவில் குளத்தின் படிக்கட்டில் சாதத்தை வைத்து கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு முட்டி போட்டு வாயால் மண் சோறு சாப்பிட்டனர். இதில் சுமார் ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நேர்த்திக்கடனாக பால் காவடி, சந்தன காவடி, புஷ்ப காவடி எடுத்து வந்து பக்தர்கள் செலுத்தினர். ஒரு சில பெண்கள் பிறந்த குழந்தைகளை துலாபாரம் மூலமாக வைத்து எடைக்கு எடை காசுகளை காணிக்கையாக வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சென்னை, காஞ்சீபுரம், மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து குழந்தை வரம் கேட்டு பெண்கள் வந்திருந்தனர்.

    பின்னர் பக்தர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.

    இரவு வள்ளி, தெய்வானை, முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து புஷ்ப பல்லக்கில் மாட வீதி உலா வாணவேடிக்கையுடன் நடந்தது. தொடர்ந்து நாடகம் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை கோட்டுப்பாக்கம் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குரு பூஜை நடைபெற்றது.
    • நாயன்மார் சன்னதியில் எழுந்தருளி இருக்கும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் ஆனிமாதம் மகம் நட்சத்தினரம் அன்று ஆண்டுதோறும் ஸ்ரீ மாணிக்கவாசகருக்கு குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று குருபூஜை விழா நடந்தது.இதையொட்டி காலை 10:30 மணி அளவில் நாயன்மார் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமாணிக்கவாசகர் பெருமானுக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் 12 மணியளவில் மகா தீபாரதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை சுவாமிநாத சிவாச்சாரியார் நடத்தி வைத்தார் . நிகழ்ச்சியில் திரளான சிவனடியார்கள், வார வழிபாட்டு குழுவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    • ஸ்ரீ குரு பாத தரிசன லிங்கத்திற்கு பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • ஆலய வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள சித்தர் பீடம் ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயத்தில் குரு பூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 5 மணிக்கு மகா கணபதி பூஜை, கும்ப பூஜை, கணபதி ஹோமம், குரு மூல மந்திர ஜெபம், புர்ணாகுதி நடைபெற்றது.

    ஸ்ரீ குரு பாத தரிசன லிங்கத்திற்கு 21 வகையான மாபொடி, மஞ்சள், திரவியம், பால், தேன் மற்றும் சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உண்பான் படைத்து சோடனை தீபாராதனையும் உச்சிகால பூஜையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் ஆலய வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் பூஜைகளை செய்தார்.

    இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், லட்சுமணன், ராஜகந்தன், மந்திரமூர்த்தி, கோபால கிருஷ்ணன் திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, பத்மாவதி, காந்திமதி, பூமாரி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • குரு பாத தரிசன லிங்கத்திற்கு 21 வகையான பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • பூமாதேவி ஆலய வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள சித்தர் பீடம் ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயத்தில் குரு பூஜை விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 5 மணிக்கு மகா கணபதி பூஜை, கும்ப பூஜை, கணபதி ஹோமம், குரு மூல மந்திர ஜெபம், புர்ணாகுதி நடைபெற்றது.

    ஸ்ரீ குரு பாத தரிசன லிங்கத்திற்கு 21 வகையான மாபொடி, மஞ்சள், திரவியம், பால், தேன் மற்றும் சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உண்பான் படைத்து சோடனை தீபாராதனையும் உச்சிகால பூஜையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் ஆலய வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் பூஜைகளை செய்தார். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், லட்சுமணன், ராஜகந்தன், மந்திரமூர்த்தி, கோபால கிருஷ்ணன் திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, பத்மாவதி, காந்திமதி, பூமாரி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய விழா குழுவினர் செய்திருந்தனர்.

    ×