என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

12 லக்னத்திற்கும் உச்ச குருவின் பலன்கள்
- குரு நின்ற வீட்டை விட பார்த்த வீட்டை அதிக சக்தி உடையதாக மாற்றுவார்.
- குரு பகவான் கடக ராசியில் ஐந்தாவது டிகிரியில் பூச நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார்.
நவகிரகங்களில் முழு சுப கிரகமாக கருதப்படுபவர் குருபகவான். தனது பார்வை பலத்தால் ஒரு ஜாதகத்தில் உள்ள தோஷங்களையும் சாபங்களையும் நிவர்த்தி செய்யக்கூடிய வல்லமை பெற்றவர்.
சுய ஜாதக ரீதியாக ஒருவருக்கு இல்லாத யோகங்களையும் கோட்ச்சார காலங்களில் வழங்கும் தன்மை பெற்றவர். ஒரு ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் பலமிழந்து இருந்தாலும் குரு நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு அனைத்து விதமான நல்ல பலன்களும் கூடிவிடும். குருவிற்கு மூன்று விதமான பார்வைகள் உண்டு. அவர் தான் நின்ற வீட்டிலிருந்து 5, 7, 9ம் இடங்களை பார்ப்பார். குரு நின்ற வீட்டை விட பார்த்த வீட்டை அதிக சக்தி உடையதாக மாற்றுவார்.
குரு தனது ஐந்தாம் பார்வையால் குழந்தை, காதல், அதிர்ஷ்டம், பணம், பொருள், பூர்வீகத்தில் வாழும் அமைப்பு குலதெய்வ அனுகிரகம் போன்றவற்றை வழங்குவார். ஏழாம் பார்வையால் திருமணம், சமுதாய அங்கீகாரம் , நல்ல நட்பு ஆகியவற்றை ஏற்படுத்துவார். தனது ஒன்பதாம் பார்வையால் பேரன்,பேத்தி, வெளிநாட்டு வாழ்க்கை, தெய்வ கடாட்சம் போன்ற பாக்கிய பலன்களை நல்குவார். இத்தகைய சிறப்பு மிக்க குரு பகவான் கடக ராசியில் ஐந்தாவது டிகிரியில் பூச நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார். உச்சம் பெற்ற கிரகம் அனைவருக்கும் நல்ல பலனை வழங்குவது இல்லை. ஒரு கிரகம் தான் பெற்ற ஆதிபத்திய ரீதியாகவும் தான் நின்ற வீட்டு ரீதியாகவும் பலன் தரும் அந்த வகையில் உச்சம் பெற்ற குரு பகவான் எந்த லக்னத்திற்கு நன்மையையும் எந்த லக்னத்திற்கு தீமையையும் வழங்குவார் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மேஷ லக்னத்திற்கு 9,12-ம் அதிபதியான குருபகவான் 4-ம் மிடமான சுக ஸ்தானத்தில் உச்சம் பெறுவது அதிக சுபத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். தாயும் தந்தையும் உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் உள்ளவர்கள். தாய் தந்தை வழி சொத்து மிகைப்படுத்தலாக கிடைக்கும். சுய உழைப்பிலும் சிறப்பான வீடு மனை வாகன யோகம் உண்டு. வெளியூர் வெளிநாட்டு வாழ்க்கையை விரும்புவார்கள். கற்ற கல்வியால் பயன் உண்டு. அரசியலில் தனித்தன்மை தனித் திறமையுடன் மிளிர்வார்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் புகழ், அந்தஸ்துடன் கோடீஸ்வரராக வாழ்வார்கள்.
ரிஷப லக்கனத்திற்கு 8,11-ம் அதிபதியான குரு பகவான் உப ஜெய ஸ்தானமான 3ல் உச்சம் பெறுவார். 3,11-ம் இடங்கள் உப ஜெய ஸ்தான மாகும். 8,11ம்மிடங்கள் பண பர ஸ்தானமாகும்.ஒரு உப ஜெய ஸ்தான அதிபதி, மற்றொரு உப ஜெய ஸ்தானத்தில் உச்ச மடைவதால் ஜாதகருக்கு நல்ல வளர்ச்சியையும், வெற்றி மேல் வெற்றியையும் தரும். சீரான முன்னேற்றம் உண்டு. திட்டமிட்டு வெற்றிக் கனியை சுவைப்பவர்கள். பல வழிகளில் வருமானம் உண்டு. ஜாதகரின் எழுத்து உலகப் பிரசித்தி பெறும். தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் ஊடகங்களில் பெயர், புகழ் பரவும். நகைச்சுவை உணர்வு, இசை ஆர்வம் உண்டு. பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டு. சகோதர ஒற்றுமை, கூட்டுத் தொழில் உண்டு. மூத்த சகோதரம், சித்தப்பாவால் ஆதாயம் உண்டு.
மிதுன லக்னத்திற்கு 7, 10-ம் அதிபதியான குரு பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் அடைவது மிகச் சிறப்பான அமைப்பாகும். வாழ்க்கைத் துணை கவுரவ பதவியில் சுய கவுரவம் உள்ளவராக சமுதாய அந்தஸ்து நிரம்பியவராக இருப்பார். திருமணத்திற்குப் பிறகு பொருளாதார வளர்ச்சியும் புகழும் கிடைக்கும். நல்ல கல்வி அறிவு உண்டு. சொத்து சுகம் என சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்த திருமண வாழ்க்கை உண்டு. கூட்டுத் தொழிலில் வெற்றி உண்டு. புதிய தொழில் நண்பர்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள். தொழில், நட்பு மூலம் சம்பந்திகள் அமைவார்கள். மிதுன லக்னத்திற்கு குரு பகவான் பாதகாதிபதி என்பதால் குடும்பத்தில் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் கலகலப்பு குறையாது.
கடக லக்னத்திற்கு 6, 9-ம் அதிபதியான குரு பகவான் லக்னத்தில் உச்சம் அடைவார். ஆறாம் அதிபதியாக குருபகவான் உச்சம் அடைவது சிறப்பித்துச் சொல்லக்கூடிய பலன் அல்ல. அதே நேரத்தில் அவர் பாக்யாதிபதியாக லக்னத்தில் உச்சம் அடைவது ஜாதகருக்கு நன்மை தீமை இரண்டையும் இணைந்து வழங்கும். இவர்களுக்கு தீராத தீர்க்க முடியாத பிறவி கடனும் பொருள் கடனும் உண்டு. ஜாதகரின் தந்தை நோயாளியாகவோ கடனாளியாகவோ இருப்பார். அல்லது ஜாதகருக்கு தந்தையின் கடனை சுமக்க வேண்டிய நிலையில் உண்டாகும். தந்தைக்கு அறுவை சிகிச்சை அல்லது வைத்தியம் செய்து ஜாதகருக்கு கடன் உருவாகும். தந்தையால் வராக்கடன் வரலாம். குல கவுரவத்திற்காக தந்தை ஏற்படுத்திய கடனை அடைத்து அவதிப்படுகிறார்கள். இந்த அமைப்பு உடையவர்கள் கடனுக்கு பயந்து நோயை வரவழைத்துக் கொள்வார்கள்.
சிம்ம லக்னத்திற்கு குரு பகவான் 5, 8 எனும் பணபர ஸ்தானத்திற்கு அதிபதியாகும். லக்னத்திற்கு 12-ம் மிடமான அயன, சயன விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் பூர்வீக சொத்து, தந்தை, தந்தை வழி முன்னோர்களால் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் கிடைக்கும். ஆனால் ஜாதகர் அதை பயன்படுத்த முடியாமல் வெளியூர் வெளிநாடு வெளி மாநிலத்தில் வசிக்கக்கூடிய சூழ்நிலைகள் இருக்கும். பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களால் ஜாதகருக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன் உண்டாகும். பங்குச் சந்தையில் அதிகமான இழப்புகளை சந்திப்பார்கள். காலதாமதமான புத்திர பிரார்த்தம் உண்டாகும். தொழில் சார்ந்த நஷ்ட கடன், கஷ்டமான தொழில் செய்யும் சூழல், திடீர் விரயம் உண்டாகும். வெகு சிலருக்கு விபரீத ராஜயோகத்தையும் இந்த அமைப்பு ஏற்படுத்தும்.
கன்னியா லக்னத்திற்கு 4,7-ம் அதிபதியான குரு பகவான் 11-ம் மிடமான லாப ஸ்தானத்தில் உச்சம் அடைவது மிகச் சிறப்பான அமைப்பாகும். வாழ்நாள் எண்ணங்கள் லட்சியங்கள் கனவுகள் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். தன்னை சார்ந்தவர்களுக்கு தொழில் தொடர்பான ஆலோசனை வழங்கி வழி நடத்துபவர்கள். இந்த அமைப்பினருக்கு சொத்து வாங்குதல் விற்றல் இரண்டும் சுலபமாக நடைபெறும். நண்பர்களுடன் இணைந்து கூட்டாக ரியல் எஸ்டேட் தொழில் நடத்துவார்கள். இவர்கள் சுய தேவைக்கு வாங்கும் சொத்தை மனைவி அல்லது குடும்ப நபர்களின் பெயரில் இணைந்து வாங்குவார்கள். திருமணத்திற்கு பிறகு அடிக்கடி சொத்தை வாங்குவது விற்பது சுலபமாக நடந்து கொண்டே இருக்கும். வாழ்நாள் முழுவதும் வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும்.
துலாம் லக்னத்திற்கு 3,6-ம் அதிபதியான குருபகவான் 10ம் மிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் ஒப்பந்தம் அடிப்படையான தொழில்,கமிஷன் அடிப்படையான தொழில்கள் இவர்களுக்கு சிறப்பான பலனைத் தரும். யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் இவர்களுக்கு பல மடங்கு வருமானத்தை கொடுக்கும். ஜாமீன் கடன் இ.எம்.ஐ சார்ந்த பிரச்சினைகள் ஜாதகரின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் இந்த அமைப்பு உள்ளவர்கள் கடன் வாங்கி சுயதொழில் செய்வார்கள்.தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி இடம் பெயவார்கள். இந்த அமைப்பு உள்ளவர்கள் சுயதொழில் செய்வதை தவிர்ப்பது நல்லது. வெகு சிலருக்கு அரசு வேலை, அரசாங்க பதவி போன்றவைகளும் கிடைக்கும்.உச்சம் பெற்ற குரு பகவான் துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் சகோதரர்களுக்கு அதிக நற்பணி வழங்குவார்.
விருச்சிக லக்னத்திற்கு 2,5-ம் அதிபதியான குரு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் அடைவார். ஆனால் விருச்சிக லக்னத்திற்கு இது பாதகஸ்தானம் என்பதால் பாக்கியத்தை பாதகம் கலந்து வழங்குவார். அல்லது ஜாதகருக்கு பாக்கியமே பாதகமாகும். தந்தையால் ஜாதகருக்கு பெரிய நற்பலன் ஏற்படாது. அல்லது ஜாதகரும் தந்தையும் பிரிந்து வாழ நேரிடும். பூர்வீகம், குலதெய்வம், குழந்தை, அதிர்ஷ்டம், காதல் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு முன்னுக்கு பின் முரணான பலனை வழங்கும். ஜாதகருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் அனைத்தும் ஜாதகரை விட ஜாதகரின் குடும்பத்திற்கே பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில் ஜாதகர் பொதுக் காரியங்களில் அதிகமாக ஈடுபட்டால் புண்ணிய பலன்கள் பல மடங்கு அதிகரிக்கும். இந்த அமைப்பு இருப்பவர்கள் சுயநலத்தை விட பொதுநலத்துடன் இருப்பது சிறப்பாகும்.
தனுசு லக்னத்திற்கு ராசி அதிபதி மற்றும் சுகஸ்தான அதிபதியான குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் லக்னத்திற்கு எட்டாம் வீட்டில் உச்சம் அடைவார். ஜாதகர் உயர்ந்த குலத்தில் பிறந்த அதிர்ஷ்டசாலி. சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட பணம் பொருள் உயில் சொத்து போன்றவைகள் கிடைக்கும். குருவிற்கு வீடு கொடுத்த சந்திரன் தனுசு லக்னத்திற்கு ஒரே ஆதிபத்தியம் பெற்ற அஷ்டமாதிபதி என்பதால் நன்மையும் தீமையும் கலந்த பலன்களே ஜாதகருக்கு உண்டாகும். தொழில் உத்தியோக நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்வார்கள். கடன், வம்பு, வழக்கு,நோய் தாக்கம், உத்தியோகத்தில் இடையூறு, போட்டித் தேர்வுகள் போன்றவற்றில் ஏமாற்றங்கள் உருவாகலாம். விரயத்தை தவிர்க்க முடியாத நிலை நீடிக்கும். நல்ல மதிப்பு வாய்ந்த சொத்துக்கள் ஜாதகரிடம் இருக்கும்.
மகர லக்னத்திற்கு 3,12-ம் அதிபதியான குரு பகவான் சம சப்தம ஸ்தானத்தில் உச்சமடைவார். அதாவது ராசிக்கு உச்ச குரு பகவானின் பார்வை கிடைக்கும். ஜாதகருக்கு பதிவு திருமணம் நடக்கும். திருமணத்திற்கு பிறகு வெற்றி வாய்ப்புகள் பொருளாதார முன்னேற்றம் தேடி வரும். முயற்சி, வெற்றி, திட்டமிடுதலுக்கு பின் வாழ்க்கை துணையின் பங்களிப்பு இருக்கும். சமுதாய மதிப்பு, மரியாதை நிறைந்த நல்ல வாழ்க்கைத் துணை அமையும். மனைவிவழி ஆதாயமும் உண்டு. இன்பம், துன்பம் என அனைத்து சூழ்நிலைகளிலும் மனைவியின் ஆதரவும், அரவணைப்பும் உண்டு. அதிக நண்பர்கள் உண்டு. நண்பர்களின் ஆதரவும், ஆதாயமும் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் உண்டாகும்
கும்ப லக்னத்திற்கு 2,11-ம் அதிபதியான குரு பகவான் லக்னத்திற்கு ஆறில் உச்சம் அடைவார். தன லாப கிரகம் ஆறாம் இடத்தில் உச்சம் பெறுவதால் கவுரவ பதவி அரசாங்க உத்தியோகம் அல்லது அரசாங்க உத்தியோகத்திற்கு இணையான வேலை கிடைக்கும். ஆனால் ஜாதகர் பணக்கார போர்வையில் வாழும் கடனாளியாக இருப்பார். தொழில் உத்தியோக ரீதியான மன உளைச்சல் உள்ளவர். வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய குடும்ப நோய் தாக்கம் இருக்கும். வருமானத்தை தக்க வைக்க முடியாத வகையில் இழப்புகள் இருக்கும். நேரத்திற்கு சாப்பிட முடியாமல் கடுமையாக உழைக்க நேரும். ஜாதகரால் பெரிய நற்பயனையும் அடைய முடியாது.
மீன லக்னத்திற்கு ராசி அதிபதி மற்றும் பத்தாம் அதிபதியான குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் இடத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். வாழ்வின் இறுதிகாலம் வரை சுகமாகவும் அமைதியாகவும் வாழ்க்கை இருக்கும். சுயதொழில் ஆர்வம் அதிகமாக இருக்கும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் நல்ல பொருள் வரவை பெற்றுத்தரும். சிறிய உழைப்பில் பெரிய வருமானம் கிடைக்கும். அரசியல் அரசாங்க பதவி அரசு உத்தியோகத்தை ஏற்படுத்தி தரும் நல்ல கிரக அமைப்பாகும். பெற்ற பிள்ளைகளால் மனநிறைவு இருக்கும். கர்மம் செய்ய புத்திரன் உண்டு. சிலர் முக்தியை போதிக்கும் ஆன்மீக இயக்கம், சங்கங்களில் சேர்ந்து பயனடைவார்கள். குலதெய்வ அனுக்கிரகம் முன்னோர்களின் நல்லாசி நிரம்பியவர்கள். குருபகவான் இயற்கை சுப கிரகம் என்பதால் ஒரு ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றால் ஏதாவது ஒரு நற்பலன் கண்டிப்பாக ஜாதகருக்கு உண்டாகும். 2026ல் குரு பகவான் உச்சம் அடையும் காலங்களில் பிறக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலியாக திகழ்வார்கள்.






