search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கோட்டுப்பாக்கம் கிராமத்தில் குழந்தை வரம் கேட்டு மண் சோறு சாப்பிட்ட பெண்கள்
    X

    கோட்டுப்பாக்கம் கிராமத்தில் குழந்தை வரம் கேட்டு மண் சோறு சாப்பிட்ட பெண்கள்

    • பரதேசி ஆறுமுகம் சுவாமிகள் குருபூஜை விழா நடந்தது.
    • பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால் காவடி, சந்தன காவடி, புஷ்ப காவடி எடுத்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கோட்டுப்பாக்கம் கிராமத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பரதேசி ஆறுமுகம் சுவாமிகள் குருபூஜை விழா நேற்று நடந்தது.

    காலையில் பரதேசி ஆறுமுக சுவாமிகள் ஜீவசமாதியில் குருபூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பு உலக நன்மைக்காகவும் பருவ மழை பெய்ய வேண்டியும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    பின்னர் பரதேசி ஆறுமுக சுவாமி ஜீவசமாதிக்கு முன்பு பொங்கல் செய்து வைத்து படைக்கப்பட்டது.

    திருமணி சேறைவுடையார் சிவன் கோவில் சிவயோகி சித்தர் ஐ.ஆர்.பெருமாள் சுவாமி தலைமையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சிவனடியார்கள் குழந்தை வரம் கேட்டு வந்த பெண்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

    இதனை மடியில் பெற்றுக் கொண்ட பெண்கள் கோவில் குளத்தின் படிக்கட்டில் சாதத்தை வைத்து கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு முட்டி போட்டு வாயால் மண் சோறு சாப்பிட்டனர். இதில் சுமார் ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நேர்த்திக்கடனாக பால் காவடி, சந்தன காவடி, புஷ்ப காவடி எடுத்து வந்து பக்தர்கள் செலுத்தினர். ஒரு சில பெண்கள் பிறந்த குழந்தைகளை துலாபாரம் மூலமாக வைத்து எடைக்கு எடை காசுகளை காணிக்கையாக வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சென்னை, காஞ்சீபுரம், மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து குழந்தை வரம் கேட்டு பெண்கள் வந்திருந்தனர்.

    பின்னர் பக்தர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.

    இரவு வள்ளி, தெய்வானை, முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து புஷ்ப பல்லக்கில் மாட வீதி உலா வாணவேடிக்கையுடன் நடந்தது. தொடர்ந்து நாடகம் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை கோட்டுப்பாக்கம் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×