என் மலர்tooltip icon

    வழிபாடு

    • தீர்த்தக் குளத்தை சுத்திகரிப்பவன் தேவ ஆண்டில் ஆயிரமாண்டு மோட்சத்தில் வசிக்கிறான்.
    • பிரகாரம், மண்டபங்கள், கோபுரங்கள் கட்டுபவன் சிவாயுஞ்யம் அடைகிறான்.

    ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் என்னென்ன திருப்பணிகள் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை ஸ்கந்தபுராணம் கீழ்க்கண்டவாறு போற்றுகிறது.

    1. இத்தலத்தில் யார் ஒருவர் ஏழை எளியவர்களுக்கு அமுது படைக்கிறாரோ அவர் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்வார்.

    2. பால், தயிர், நெய், தேன், பழங்கள், தேங்காய் இவைகளோடு அணிகலன் கொண்டு சிறந்த துதிப் பாடலோடு ஸ்ரீ மங்களாம்பிகையும், வாஞ்சிநாதரையும் வழிபடுபவர் சிறந்த அரசனாகி சிவ சாயுஞ்யம் அடைகிறார்.

    3. இத்திருக்கோயிலுக்கு பிரகாரம், மண்டபம், கோபுரங்கள் கட்டி வைப்பவர். அனைவராலும் வணங்கத்தக்க அரசனாகிறார்.

    4. இத்திருக்கோயிலுக்கு தேர் திருப்பணி செய்து கோமுரசு, மத்தாளம் துணைக் கருவிகளோடு தேர்த்திருவிழா செய்பவர் சிறந்த போகங்கள் அனுபவித்து தேவரும் கந்தர்வரும், பகலும் இரவும் துதிக்க நூறு கற்ப கோடிகாலம் தனது மனித உருவத்தோடு இறைவனுக்கு முன் வசிப்பார்.

    5. திருவாஞ்சியத்தில் எவர் வசந்த விழா செய்கிறாரோ அவர் சிறந்த விமானம் ஏறி சிவ சன்னதியில் வசிக்கிறார்.

    6. குப்த கங்கை திருக்குளத்தினை தூர்வாரி சுத்தம் செய்து தீர்த்தத்தினை சுத்தம் செய்தால் தனது குடி, குலத்துடன் சிவலோகம் அடைந்து சத்திய வித்திலும், அபய வித்திலும் எவ்வளவு புண்ணியமோ அவ்வளவு புண்ணியத்தை அடைவார். ஸ்ரீருவாஞ்சியம் திருவாஞ்சியேசர் விமானத்திற்கு சுற்று வட்டம் கிருதாயுகத்தில் இரண்டு யோசனை தூரமும் திரேதாயுகத்தில் அதில் பாதியும், துவாபரயுகத்தில் அதிலும் பாதியும் கலியுகத்தில் ஐந்து குரோசமும் (ஐந்து நாழி வழி) ஆகும். அதில் வசிக்கும் மக்கள் முக்தியடைவது நிச்சயம்.

    7. இச்சிவாலயத்தில் எவன் ஒரு கணம் உறைகிறானோ அவன் கணங்களுக்கு அதிபதியாகிறான்.

    8. நீர் விழா, வசந்த விழா செய்பவன் சிவ சன்னதியில் வசிக்கிறான். தயிர், பால், நெய், தேன், வாழைப்பழம், தேங்காய் கொண்டு பூஜை செய்பவன் சிவனோடு வசிக்கிறான்.

    9. பிரகாரம், மண்டபங்கள், கோபுரங்கள் கட்டுபவன் சிவாயுஞ்யம் அடைகிறான்.

    10. குடை சாமரம் விசிறி வாத்திய முழக்கங்களுடன் திருத்தேர் விழா செய்பவன், செய்விப்பவன் சிறந்த மங்கையருடன் கூடி தேவர் துதிக்க நூறு கற்பகோடி காலம் உடலுடன் தேவனுக்கு முன் வசிப்பான்.

    11. தீர்த்தக் குளத்தை சுத்திகரிப்பவன் தேவ ஆண்டில் ஆயிரமாண்டு மோட்சத்தில் வசிக்கிறான்.

    12. படி கட்டுபவன் சிவகாயுஜ்யம் அடைவான். பாசி நீக்குபவன் தனது கோடி குலத்துடன் சிவலோகம் அடைவான்.

    13. வஸ்திரம் மலர் இவற்றால் மந்திரமின்றி பூசிப்பவன் கூட கோடி குலத்தை உயர்த்துவான்.

    14. கழுவாயற்ற பாவங்களும் வாஞ்சீஸ்வரரை தரிசித்தாலும், முனி தீர்த்தத்தில் நீராடினாலும் பாவங்கள் நீங்கி முக்தியுண்டாகும்.

    15. அரை கணம் இங்கு வசித்தாலும் ஊர்வசியை சேருவான். எவள் வீட்டில் இப்புராணம் எழுதப்படுகிறதோ அவள் வீட்டில் லட்சுமி செல்வம் நோயின்மையை மேன்மேலும் வளர்க்கிறாள். இதனை படிப்பவனும், கேட்பவனும் மூவகை இன்பங்களை துய்த்து முக்தியடைகிறான். - ஸ்கந்தபுராணம் சனத்குமா ரஸம் ஹிதை 58-ம் அத்தியாயம்.

    • ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை நீராடுவது சிறப்பு.
    • கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடியவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்

    தட்சன் தன் மகள் தாட்சாயணியைச் சிவனுக்கு திருமணம் முடித்துக் கொடுக்க மறுத்த நிலையில் சிவன்-தாட்சாயணி திருமணம் நடந்தது. இதனால் கோபம் கொண்ட தட்சன் சிவனை அழைக்காமல் வேள்விக்கு ஏற்பாடு செய்தான். அவன் சிவனுக்கு கொடுக்க வேண்டிய பிரசாதத்தையும் தரவில்லை. ஆனால் பிரம்மா சிவனின் பிரசாதத்தை நந்திக்கு கொடுத்து விட்டார். இதை அறிந்து கோபம் கொண்ட தட்சன் மேரு மலையின் வடக்கே புதிய யாகம் ஒன்றைத் தொடங்கினான். சிவனைத் தவிர மற்ற அனைத்துத் தேவர்களும், ரிஷிகளும் கலந்துக்கொண்டனர்.

    சிவனுக்கு அவிர்பாகம் அளிக்காமல் யாகம் நடத்துவது தவறு என்று தந்தைக்குச் சுட்டிக்காட்ட தாட்சாயணி முடிவு செய்தாள். சிவன் தடுத்தும் சென்ற தாட்சாயணியை தட்சன் அவமதித்தான். கோபம் கொண்ட தாட்சாயணி தட்சனின் யாகத்திற்கு வந்த தேவர்கள், முனிவர்கள் மற்றும் தட்சனும் விரைவில் அழிந்து போகச் சாபம் கொடுத்து யாகத் தீயில் விழுந்து மாண்டாள். அப்போது ஆங்காரத்துடன், ஆங்கார சக்தி வெளிப்பட்டது. தாட்சாயணி உயிர் துறந்ததை அறிந்த சிவன் கடும் கோபம் கொண்டு பெரும் பலம் கொண்ட வீரபத்திரனை அனுப்பி யாகத்தை அழிக்க சொன்னார்.

    வீரபத்திரனும் தன் கணங்கள் சூழ யாகசாலை அடைந்து அனைத்தையும் அழித்தார். அனைவரையும் அடித்து நொறுக்கி இல்லாமல் செய்தார். இந்திரன், சந்திரன், விஷ்ணு, எமன், அக்னி, வாயு, குபேரன், வருணன் என்று அனைவரையும் வதம் செய்தார். சூரியனின் கன்னத்தில் அறைய சூரியனின் பற்களெல்லாம் கீழே கொட்டின. இறுதியில் மகா விஷ்ணுவின் வேண்டுதல் பேரில் கோபம் குறைந்தார் வீரபத்திரர். அப்போது அங்கு தோன்றிய சிவன், தவறு செய்தவர்களை மன்னித்து உயிர் பிச்சை கொடுத்தார்.

    பற்கள் இழந்த சூரியனின் பாவம் தீர ஸ்ரீ வாஞ்சியத்தில் நீராடி, கார்த்திகை மாதம் முழுவதும் வழிபட்டால் பலன் கிடைக்கும். சிவத்துரோகத்தால் வந்த பாவம் போகும் என்று சிவன் வழி சொன்னார். அவ்வாறே ஸ்ரீவாஞ்சியம் சென்று முனி தீர்த்தம் என்ற குப்த கங்கையில் நீராடி கார்த்திகை மாதம் முழுவதும் தவம் செய்து இறைவனை சூரியன் வணங்கினார். இதனால் மகிழ்ந்த சிவன் அவர் முன் தோன்றி, பாவம் நீக்கி, பழைய ஒளியைத் தந்தார். அத்தோடு கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடியவர்களின் பஞ்சமாபாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் அருள்புரிந்தார். அன்று முதல் ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை நீராடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

    குறிப்பாக கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி அதிக பலன் பெற முடியும் என்று கூறப்படுகிறது. கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி பலன் பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

    கார்த்திகை முதல் ஞாயிறு:

    ஐந்தக்னிபுரன் என்ற ஊரில் பாரிபத்ரன் என்பவ ரின் மகன் விஸ்வபத்திரன் செல்லமாக வளர்க்கப்பட்ட பிள்ளை காரணத்தால் மிகவும் கெட்டவனாக வளர்ந்தான். பெண்கள் மீது மிகுந்த ஆசை கொண்டான். அவனை அவனது தந்தை கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த அவன் தந்தையை கொன்றான். பிரம்ம கத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு வருந்திய அவன் குப்த கங்கையில் நீராடி தோஷம் நீங்கப் பெற்றான்.

    கார்த்திகை இரண்டாம் ஞாயிறு:

    கங்கைக் கரையில் மிருத்யுஞ்சய நகரில் வசித்த பாஷ்களன் என்பவருக்கும் அவரது மனைவி போகநாதாவுக்கும் ஐந்து மகன்கள் பிறந்தனர். துயுமணி, மணி, சின்மணி, மாயா நரசமணி, தரணி ஆகிய ஐவரில் மூத்தவன் துயுமணி ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினான். ஒழுக்கத்தில் சிறந்த இவன் தலயாத்திரை செய்கையில் ஒரு நாள் காய்ச்சல் வந்து அவஸ்தைப்பட்டான். ஒரு வீட்டில் நீர் கேட்க தாதி பெண் கள்ளை கொடுத்துவிட அதை தெரியாமல் குடித்தார். சுரம் தீர்ந்தாலும் கள் குடித்ததை அறிந்து என்ன இழிசெயல் புரிந்தோம் என மனம் வருத்தி உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தான். அப்போது சிவன் தோன்றி கார்த்திகை மாதம் 2-ம் ஞாயிறன்று ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள முனி தீர்த்தத்தில் நீராடி பாவம் ேபாக்கிக் கொள் என்றார். அதன்படி நீராடி பாவம் போக்கினார்.

    கார்த்திகை 3-ம் ஞாயிறு:

    வங்க தேசத்தில் மாகதம் எனும் கிராமத்தில் வசித்து வந்த சிறந்த அந்தணன் ககோளன். இவன் மழை பெய்து இடிந்து கிடந்த ஒரு வீட்டு சுவற்றில் புதையல் ஒன்று இருப்பதை கண்டு அதனை எடுத்து தானதர்மங்கள் செய்தார். அப்போது அங்கே வந்த துருவாச முனிவரை விருந்துக்கு அழைக்க நீ திருடிப்பெற்ற பொருளில் உணவு உண்ண மாட்டேன் என்றார். இதனால் அந்தணன் துன்பம் தாங்காமல் உயிர்விட துணிந்தான். தேவர்களை துதிக்க ஆகாய வானவர் அசரீரி யாக ஸ்ரீவாஞ்சிய புண்ணிய புஸ்கரணியில் கார்த்திகை 3-ம் ஞாயிறு நீராடு என்றார். அதன்படி அங்கு நீராடி பாவம் போக்கினார்.

    கார்த்திகை 4-ம் ஞாயிறு:

    வங்க தேசத்தில் சந்திரிகை என்னும் நகரத்தில் யக்ஞபக்தன் குமுதவதி ஆகியோருக்கு பிறந்தவன் துர்போதன். அவன் பிறந்ததும் தந்தை இறந்துவிட்டான். பின்னர் பஞ்சம் ஏற்பட்டு பிரத்யாகை சென்றார். அங்கு காம மயக்கத்தில் குருவின் மனைவியிடம் தவறாக நடந்து கொண்டான். தெளிந்தபின் மனம் வருத்தி அவிமுக்தம் என்ற திருத்தலம் சென்று மணிகர்ணிகை என்னும் தீர்த்தத்தில் நீராடி மூன்று வருடம் விஸ்வேஸ்ரரை துதிக்க மனம் மகிழ்ந்த சிவன் பிரசன்னமாகி ஸ்ரீவாஞ்சிய பெருமையையும் கூறி அங்கு நீராடு உன் பாவம் நீங்கும் என்றார். அவனும் ஸ்ரீவாஞ்சியம் வந்து குப்த கங்கையில் நீராடி தன் பாவம் நீங்கப் பெற்று சிவபாதம் அடைந்தான்.

    கார்த்திகை 5-ம் ஞாயிறு:

    நர்மதைக்கரையில் ஸ்தபகம் என்ற ஊரில் வசித்தவர் காலஜித். இவன் மூவுலகம் சென்று வரும் ஆற்றல் கொண்டவன். தூய வாழ்க்கை வாழ்ந்த இவனுக்கு குழந்தைகள் நான்கு பேர். பிள்ளை களிடத்து பற்று கொண்ட காலஜித் அவர்கள் தீயவழி செல்வதனை கண்டிக்காமல் விட அதனால் சம்சார்க்கம் என்னும் பாவம் அவனை சேர்ந்தது. அதனால் அவன் தவ வலிமை குன்றி மூவுலகு செல்லும் ஆற்றல் நீங்கியது. அப்போது அசரீரி உரைத்தபடி வசிட்டரை வணங்கி குருவருள் பெற்று இங்கு வந்து கார்த்திகை 5-ம் ஞாயிறு நீராடி இறைவனை வணங்கிப் பாவத்திலிருந்து விடுபட்டு பல காலம் இங்கே தங்கி அநேக இன்பங்கள் அனுபவித்து பின் முக்தியடைந்தான்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகிலேயே புண்ணியத்தை அதிகம் வழங்கும் இடம் காசி.
    • ஸ்ரீவாஞ்சியம் வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்குகிறது.

    இந்துவாகப் பிறந்தவர்கள் மட்டுமல்லாது, எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த உயிரினமாக இருந்தாலும் காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். காசியில் இறந்தால் அடுத்த பிறவி என்பது இல்லாமல் முக்தி கிடைத்து இறைவனுடன் ஐக்கியமாகி விடுவார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் தான் காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதிலும் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர்.

    தமிழகத்தில் இருந்து `காசி' மிக நீண்ட தொலைதூரத்தில் இருப்பதால், மிகுந்த பொருட்செலவு செய்து பெரும்பாலானவர்கள் செல்வது இல்லை. மேலும் கால விரயம் ஆவதால் காசிக்கு எல்லோராலும் செல்ல முடிவதில்லை. இந்தநிலையில் காசிக்கு சென்ற புண்ணியத்தை அதிலும் 100 முறை காசிக்கு சென்ற பலனை தமிழகத்தில் உள்ள ஒரு தலத்திற்கு சென்றால் பெறலாம் என்று பல்வேறு முனிவர்கள் கூறியுள்ளனர். சிறப்புக்குரிய அந்த தலம் ஸ்ரீ வாஞ்சியம் தலமாகும்.

    உலகிலேயே புண்ணியத்தை அதிகம் வழங்கும் இடமாக `காசி' தலம் கருதப்படுகிறது. அத்தகைய மகத்துவம் வாய்ந்த 'காசி' திருத்தலத்திற்கு 100 முறை சென்று வந்த பலனை தமிழகத்தில் கும்பகோணத்திற்கு அருகே உள்ள "ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி" கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தால் கிடைக்கும் என்று பிரமாண்ட புராணம் கூறுகிறது.

    தல வரலாறு

    உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் அதன் இறுதி காலத்தில் பறிக்கும் போது தனக்கு அவப்பெயர் ஏற்படுவதாக எமதர்மராஜா மிகவும் வருந்தினார். அதனால் `திருவாரூர் தியாகராஜரிடம்' சென்று தனது குறையை தெரிவித்தார். அதற்கு இறைவனும், ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரியாக கூறினார்.

    அதன்படி எமதர்மன் `ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி" கோவிலுக்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். எமதர்மனின் தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசி மாதம், பரணி நட்சத்திரத்தில் காட்சியளித்து எமதர்மனுக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.

    எமதர்மனும் இறைவா அனைத்து உயிர்களையும் பறிக்கும் பதவியால் எல்லோரும் என்னை கண்டு பயந்து திட்டுகின்றனர். உயிர்களை பறிப்பதால் "பிரம்மஹத்தி தோஷம்" பிடித்து என்னை வாட்டுகிறது. எனவே அதிலிருந்து நீங்கும் வரம் வேண்டும் என்றார்.

    எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன் எமதர்மா இனிமேல் யாரும் எமன் உயிரை பறித்து விட்டான் என கூற மாட்டார்கள். நோய் வந்ததால், வயதாகி விட்டதால், விபத்து ஏற்பட்டு இறந்தான் என்றே கூறுவார்கள். அதனால் உனக்கு எந்த பழியும் பாவமும் ஏற்படாது.

    மேலும் நீ தவம் செய்த இந்த இடத்திற்கு புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தலத்தின் ஷேத்திர பாலகனாக நீ விளங்குவாய்.

    இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பு என்னை தரிசிப்பார்கள் என்று கூறினார். அதன்படி இங்கு எமதர்மராஜனுக்கு முதல் வழிபாடு நடைபெறுகிறது.

    யோக நிலையில் எமதர்மன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்குகிறது. காசியில் இறப்பதால் எம பயமில்லாது போனாலும் ஒரு நாழிகையாவது பைரவரின் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

    ஆனால் ஸ்ரீவாஞ்சியத்தில் இறந்தவருக்கு எமபயம், பைரவ தண்டனை எதுவுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில் இறைவனை வணங்கி கொண்டு இருக்கிறார். எனவே எமதர்மன் பைரவர் இருவருக்குமே அதிகாரம் இல்லாத இத்தலம் காசியை காட்டிலும் 100 மடங்கு உயர்ந்தது என்று முனிவர்கள் கூறுகின்றனர்.

    ஸ்ரீவாஞ்சியத்தின் சிறப்பு குறித்து பிரமாண்ட புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கங்கையில் குளித்து தங்களது பாவத்தை தீர்ப்பதால் கங்காதேவியிடம் பாவம் சேர்ந்து விட்டது. அதனால் தன்னிடம் சேர்ந்த பாவத்தை போக்க வேண்டும் என்று `கங்காதேவி' சிவபெருமானிடம் சென்று முறையிட்டாள். அதற்கு சிவபெருமான் பதில் கூறுகையில் உயிர்களைப் பறிக்கும் எமதர்மனுக்கு பாவம் விமோசனம் அளித்த ஸ்ரீவாஞ்சியதிற்கு சென்று வணங்கினால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்று கூறினார்.

    அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதியுள்ள 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் வந்திருப்பதாக ஐதீகம். அதனால் `குப்த கங்கை தீர்த்தம்' என்று அழைக்கப்பட்ட இங்கு உள்ள தீர்த்தம் தற்போது 'முனி தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.

    எனவே காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது மாசி மகத்தன்று இத்தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது. மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரக்காரர்கள், மேஷம், சிம்மம், கும்பம் ராசி மற்றும் லக்னக்காரர்கள் தங்கள் தோஷங்கள் நீங்குவதற்கு இங்கு வந்து பரிகாரம் செய்து வழிபடலாம். பதவி இழந்தவர்கள், பணி மாற்றம் விரும்புபவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் குப்த கங்கையில் குளித்து வாஞ்சிநாதரை வழிபடுவது சிறந்தது.

    • கோவில்பட்டி அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் திருக்கல்யாணம்.
    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோண்டராம சுவாமிக்கு காலை சிறப்பு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி 22 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: தசமி காலை 9.19 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: பூரம் இரவு 8.43 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    கோவில்பட்டி அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் திருக்கல்யாண வைபவம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்க நாதர் உற்சவம் ஆரம்பம். அன்ன வாகனத்தில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பர் விருஷப சேவை. ஸ்ரீ காந்தியம்மன் கம்பை யாற்றில் கதிர்குளித்தல். இரவு ஆயிரம் கால் மண்டபத்தில் திருக்கல்யாணம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உற்சவம் ஆரம்பம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோண்டராம சுவாமிக்கு காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-வெற்றி

    கடகம்-நலம்

    சிம்மம்-சிறப்பு

    கன்னி-தாமதம்

    துலாம்- அன்பு

    விருச்சிகம்-நலம்

    தனுசு- புகழ்

    மகரம்-ஆதரவு

    கும்பம்-மேன்மை

    மீனம்-இன்பம்

    • 9-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.
    • தேரோட்டத்தில் பங்கு பெற்று தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பிரசித்தி பெற்ற மற்றும் பழமையான கோவிலான தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    இவ்வாண்டுக்கான திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகளிலும், கொடியேற்றத்திலும் திரளான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

    தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்புப் பூஜைகள் அதனைத் தொடர்ந்து மண்டகப்படி பூஜைகள் நடைபெற்றன.

    விழாவின் 9-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு புறப்பட்ட உலகம்மன் தேர் 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து 10.15 மணிக்கு நிலையம் வந்தடைந்தது.

    தேரினை ஏராளமான பக்தர்கள் திருவாசகம் பாடி, கோஷங்கள் எழுப்பி, பாடல்கள் பாடி, மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் பங்கு பெற்று தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா மட்டுமின்றி இன்னும் பல நாடுகளும் கொண்டாடுகின்றன.
    • இரவு நேரங்களில் விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.

    இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது தீபாவளி பண்டிகை. தீபங்களை ஏற்றி வழிபடுவதை அடிப்படையாகக் கொண்ட இந்த திருநாளை, இந்தியா மட்டுமின்றி இன்னும் பல நாடுகளும் கொண்டாடுகின்றன. ஆனால் பெயர்களால்தான் வேறு வேறாக இருக்கிறது. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    * இந்தியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் ஒன்று, பீஜி தீவு. இங்கு தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பட்டாசுகள் வெடித்தும், வீடுகளை அலங்கரித்தும், நண்பர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கியும் இங்கே தீபாவளியை சிறப்பிக்கிறார்கள்.

    * மலேசியாவில் 'ஹரி தீபாவளி' என்ற பெயரில் இந்தியாவில் உள்ளதைப் போலவே தீபாவளியை கொண்டாடுகிறார்கள். காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளியலுடன் அந்த நாள் தொடங்குகிறது. பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகிறது. ஆனால் இங்கே பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கி தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள்.

    * மொரீசியஸ் நாட்டில் 50 சதவீதம் பேர் இந்துக்கள். எனவே அங்கும் தீபாவளி பண்டிகை அதிக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

    * இந்தோனேசியாவில் தீபாவளி அன்று இரவு நேரங்களில் விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். பட்டாசுகள், வாண வேடிக்கைகளும் அங்கே சிறப்பிடம் பிடிக்கும்.

    * இந்துக்கள் அதிகமாக வாழும் நாடுகளில் முதன்மையானது நேபாளம். இங்கே தீபாவளி. உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் 'தசைன்' என்ற பண்டிகைக்கு அடுத்ததாக பெரிய அளவில் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளிதான். அந்த நாளில் லட்சுமி பூஜையும் செய்வார்கள்.

    * இலங்கையில் தீபாவளிக்கென பிரத்தியேக இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்படும் என்பதை வைத்தே அங்கு தீபாவளிக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதை உணர முடியும்.

    * கனடாவில் அதிக அளவில் பஞ்சாப் மக்கள் வசிப்பதால், இங்கு 3-வது அதிகாரப்பூர்வமான மொழியாக பஞ்சாபி உள்ளது. இதனால் தீபாவளி ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டுகிறது.

    * சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்குவதால், அப்பகுதி வண்ண விளக்குகளால் பிரகாசிக்கிறது. தசராவும், அதைத்தொடர்ந்து வரும் தீபாவளியும் அதிக மக்களால் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த நாட்டில் இந்தியாவைப் போன்று தீபாவளி பஜார் அமைக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்று.

    * இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் மற்றும் லிசெஸ்வர் பகுதியில் இந்தியர்கள் அதிகம் வசிப்பதால் பிரம்மாண்டமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

    * டிரினிடாட் மற்றும் டொபோகோ தீவுகளில் தீபாவளியை மக்கள் இந்தியாவைப் போன்று உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.

    • குறையற்ற இல்லறத்தையும், செல்வங்களையும் பெறலாம்
    • மூலவருக்கு முன்னால் மரகத லிங்கம், உள்ளது.

    தீபாவளியை யொட்டி வரக்கூடிய கேதார கவுரி விரதத்துக்கும், அர்த்தநாரீஸ்வரருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஐப்பசி மாத கிருஷ்ணபட்சம் - தேய்பிறை சதுர்த்தசியில், பார்வதி தேவியை எண்ணி நோன்பிருந்தால் நல்ல சுணவனையும். திருமணமாகி இருந்தால் கணவனின் அன்பையும், குறையற்ற இல்லறத்தையும், செல்வங்களையும் பெறலாம் என்பதற்காகத் தொடங்கியதே கேதார கவுரி விரதமாகும்.

    இந்த விரதத்தை முதலில் கடைப்பிடித்தவள் உமையவளே. விரதப் பலனாக ஐயனிடமிருந்து பிரிக்கப்பட முடியாத வகையில், அவரின் இட பாகத்தைப் பெற்று பாகம்பிரியாள் என்று பெயர் பெற்றாள். இங்ஙனம் ஆனொரு பாதியும், பெண்ணொரு பாதியுமாக அகிலத்தின் ஆதார உண்மையை வெளிப்படுத்தும் அர்த்தநாரீஸ்வர வடிவம் கொண்டு ஆண் இருக்குமிடம் திருச்செங்கோடு.

    இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் திருமேனி - வெள்ளை பாஷாணத்தால் ஆன திருவருவம். இடப்பாதியில் பெண்மையின் நளினமும், வலப்பாதியில் ஆண்மையின் கம்பீரமும் இழையோடும். கண்களில்கூட, வலக்கண்ணுக்கும் இடக்கண்ணுக்கும் துல்லியமான வித்தியாசம் தெரிகிறது.

    மூலவர் திருமேனிக்குக் கீழே நீர் கரந்து கொண்டே இருக்கிறது. இதையே தீர்த்த பிரசாதமாக எல்லோருக்கும் தருகிறார்கள். அர்த்தநாரீஸ்வரர் மூலவருக்கு முன்னால் மரகத லிங்கம், உள்ளது. தவசீலரான பிருங்கி மகரிஷியின் உருவமும் உள்ளது. தீபாவளியை யொட்டி கேதார கவுரி நோன்பிருக்கும் பெண்மணிகள் அவசியம் திருச்செங்கோடு சென்று அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். உங்களின் விரத பலன் பன்மடங்காகக் கிடைக்கும்.

    • 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம்.
    • 21 நூல் கொண்டு 21 முடிச்சுகளால் கலசத்தினை சுற்றி அமைப்பர்.

    கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவ பெருமானையும், பார்வதியையும், அனுதினமும் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வந்து வணங்கிச் செல்வார்கள். அவர்களில் பிருங்கி முனிவர், பார்வதியை விடுத்து சிவபெருமானை மட்டும் வணங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

    எப்படியாவது பிருங்கி முனிவர் தன்னையும் வணங்கவேண்டும் என்று எண்ணிய பார்வதி இறைவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள். வழக்கம்போல கயிலாயம் வந்த பிருங்கி முனிவர் சிவனுடன் நெருக்கமாக பார்வதி அமர்ந்திருந்ததைக் கண்டு கலங்கவில்லை. வண்டு உருவம் எடுத்து இருவருக்கும் இடையில் புகுந்து சிவனை மட்டுமே வலம் வந்தார்.

    இதுபற்றி பார்வதி தேவி, சிவபெருமானிடம் கேட்டதற்கு அவர், `தேவி.. பிருங்கி முனிவருக்கு எந்த பாக்கியங்களும் தேவையில்லை. அவருக்கு மோட்சம்தான் விருப்பம். எனவேதான் அவர் என்னை மட்டும் சுற்றி வந்து வழிபடுகிறார்" என்றார்.

    அந்த வார்த்தையில் திருப்தி இல்லாத பார்வதி தேவி. பிருங்கி முனிவரிடம் "உன் தேகத்திற்கு தேவையான சக்தி அனைத்தும் நான் வழங்கியவை. ஆனால் என்னை வழிபட மறுக்கிறாய். அப்படியானால் சக்திக்கு தேவையான ரத்தம், தசை, நரம்பு போன்றவற்றை திருப்பிக்கொடு" என்றார்.

    பிருங்கி முனிவரும் அப்படியே செய்தார்.

    உடனே தனது பக்தருக்கு நேர்ந்த கதியை கண்ட இறைவன் பிருங்கி முனிவர் ஊன்றி நடக்க ஒரு குச்சியை அளித்தார். முனிவருக்கு ஆதரவாக சிவன் நடப்பது கண்டு பொறுக்க முடியாத பார்வதி தேவி கோபித்துக்கொண்டு கௌதம முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தார்.

    இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்" என்ன என்று முனிவர் கேட்டார்.

    அப்போது பார்வதி தேவி ஈசனை விட்டு என்றைக்கும் பிரியாத "தபஸ்வியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும். அப்படியொரு விரதம் இருக்கிறதா?" என்று கேட்டார்.

    அதற்கு முனிவர். "தாயே.. இந்த பூலோகத்தில் ஒருவரும் அறியாத ஒரு விரதம் உண்டு. அந்த விரதத்திற்கு கேதாரீஸ்வரர் நோன்பு' என்று பெயர். அந்த விரதத்தினை அனுஷ்டித்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்" என்றார்.

    அதன்படி அம்பிகை, அந்த விரதத்தை முறை தவறாமல் கடைப்பிடித்தார். இதையடுத்து விரதத்தின் 21-ம் நாள் அன்று, தேவ கணங்கள் சூழ அம்பிகைக்கு சிவபெருமான் காட்சி அளித்தார். அதோடு தனது இட பாகத்தினை அம்பிகைக்கு அளித்து, அர்த்தநாரிஸ்வரராக கயிலாயம் சென்றார். அம்பிகையே விரதம் இருந்த காரணத்தால், இது 'கேதார கவுரி விரதம்' என்று அழைக்கப்படுகிறது.

    விரதம் இருப்பது எப்படி?

    கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம். புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் அமாவாசை வரைக்கும் தொடரும் விரதம் இது. தினமும் காலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து, சிவ பூஜை செய்ய வேண்டும்.

    நோன்பின் முதல் நாள் அன்று 21 நூல் கொண்டு 21 முடிச்சுகளால் கலசத்தினை சுற்றி அமைப்பர். இக்கலசமே சிவ-பார்வதியாக வழிப டப்படுகின்றது. இந்த விரதம் இருப்பவர்கள். தினமும் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் நைவேத்தியம் வைத்து அதனையே பிரசாதமாக உண்பார்கள்.

    21-ம் நாள் அன்று 21 அதிரசம், 21 வாழைப்பழம், 21 மஞ்சள். 21 வெற்றிலை, 21  பாக்கு, தேங்காய், சந்தனம், பூக்கள் வைத்து வழிபடுவர். 21 வகை காய்கறிகள் கொண்டு உணவினை சமைத்து அக்கம் பக்கத்தினருடன் சாப்பிட்டு விரதத்தினை முடிப்பர். இது பெண்களுக்கு மிகச் சிறப்பான விரத பூஜையாகும்.

    இப்பூஜை அவரவர் குடும்ப வழக்கப்படி சற்று மாறுபடும். அவரவர் பெரியோர்களிடம் கேட்டு அறிந்து அவர்கள் மூலம் எடுத்துச் செய்வது நல்லது.

    ஐப்பசி அமாவாசை அன்று செய்யும் பூஜையில் முடிந்தால் தங்கம் (நகை) சாத்தி, பட்டு வஸ்திரம் சுற்றி பூவால் அலங்கரித்து சந்தனம், குங்குமம் இட வேண்டும். விளக்கேற்றி வைக்க வேண்டும். மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல் சூட்டி, மஞ்சள்-குங்குமம் இட்டு விநாயகரை அர்ச்சிக்க வேண்டும். அதோடு இறைவனின் 16 நாமங்களைச் சொல்லி தூப தீப ஆராதனை செய்து நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

    பின்னர் அம்மி குழவியை நன்கு சுத்தம் செய்து அதற்கும் பலவித அலங்காரங்களை செய்து வில்வம். தும்பை போன்ற விசேஷ இலை, பூக்களையும் சேர்த்து சிவ நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும். தூப, தீப ஆராதனைகள் நைவேத்தியம் வைத்து அட்சதை போட்டு வணங்கி, வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலம் ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். வருவோருக்கு மஞ்சள். குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், 21-வது நாள் சிவபெருமான் காட்சி அளித்து வேண்டிய வரம் அளிப்பார் என்பது ஐதீகம்.

    • பாவம் என்பது பரவசக் கனவுகளோடும், அதீத அழகோடும் கண்சிமிட்டும்.
    • வசீகரத்தில் வீழ்ந்து விடாமல் ஒதுங்கி இருப்பதே முடிவில்லா வாழ்வுக்கு வழிகாட்டும்.

    விவிலியத்திலுள்ள இணைத்திருமுறை நூல்களில் ஒன்றான சீராக் நூல் பல்வேறு அற்புதமான சிந்தனைகளை நமக்குத் தருகிறது.  அதில் பாவத்தைப் பற்றிய இந்த வசனம் மிகவும் சுவாரஸ்யமானது.

    பாம்பாட்டியைப் பாம்பு கடித்துவிட்டால் யாரே அவருக்கு இரங்குவர்? காட்டு விலங்குகளின் அருகில் செல்வோர் மீதும் யாரே பரிவு காட்டுவர்?

    அவ்வாறே, `பாவிகளோடு சேர்ந்து பழகி, அவர்களுடைய பாவங்களிலும் ஈடுபாடு காட்டுவோர்மீது யாரே இரக்கம் காட்டுவர்?' என்கிறது சீராக் (12:13,14) நூல்.

    இங்கிலாந்தில் உள்ள ஹேம்ஷைர் பகுதியில் வசித்து வந்தார் டேனியல் பிராண்டன் எனும் 31 வயதான இளைஞர். அவருக்கு பாம்புகளின் மீது அலாதிப் பிரியம். தனது பதின்வயதுகளில் ஒரு மலைப்பாம்புக் குட்டியை எடுத்து வளர்க்கத் துவங்கினார். அப்போது அது அவரது உள்ளங்கைக்குள் அடங்கிவிடக் கூடியதாக இருந்தது. அதனால் 'டைனி' என அதற்குப் பெயரிட்டார். காலம் செல்லச் செல்ல அது வளர்ந்து வலிமையடைந்தது. டேனியலுடன் பாசமாய்ப் பழகியது.

    கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ந் நாள் இரவு. டேனியேல் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றது வேறு யாருமல்ல, அவரது செல்லப்பிராணியான அந்த மலைப்பாம்பு தான். தான் வளர்த்து வருகின்ற மலைப்பாம்புக்குள் இருக்கின்ற ஆபத்தை அவர் அதுவரை உணரவேயில்லை. தனக்கு மிகவும் பழக்கமான பாம்பு தானே என நினைத்தார், ஆனால் பாம்பு தன் இயல்பைக் காட்டியது. அவரை நெரித்துக் கொன்றது.

    பாவமும் அப்படியே. பாவிகளோடு சகவாசம் செய்பவர்களுடைய முடிவும் அப்படியே. பாவத்தை விரும்புவோரோடு கலந்திருப்பவர்கள் கடைசியில் பாவத்தினால் அழிகிறார்கள். பாவம் முதலில் அழகாக, கைக்கு அடக்கமாக இருக்கிறது. எளிதில் அதைக் கையாள முடியும்.

    ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அந்த பாம்பு விஸ்வரூபம் எடுக்கிறது. நமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பாவம், பின்னர் நம்மை  அதன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துச் செல்கிறது.

    இதை இணைதிருமறையில் வருகின்ற சீராக்கின் ஞானம் நூல் மிக அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது. பாம்பாட்டியை பாம்பு கடித்தால் அவருக்காக யாரும் இரங்க மாட்டார்கள். காட்டு விலங்குகளோடு சகவாசம் வைத்திருப்பவர்களை அந்தக்காட்டு விலங்கு சேதப்படுத்தி விட்டால் அதற்காக யாரும் அனுதாபப்பட மாட்டார்கள். வேண்டுமானால் `அறிவிலி' என பட்டம் சூட்டுவார்கள்.

    காரணம், காட்டு விலங்குகளுக்கென்று ஒரு இயல்பு உண்டு. என்ன தான் நாம் அதைப் பழக்கினாலும், அது ஏதேனும் ஒரு சூழலில் தன் இயல்பை வெளிக்காட்டி விடும்.

    பதின் வயதுகளில் புகை பிடித்தல், மது அருந்துதல், தவறான படங்கள் பார்த்தல் போன்ற பழக்கங்களைத் தொடங்கும் சிறுவர்களின் நிலையும் இது தான். முதலில் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடலாம் என தோன்றும். காலப்போக்கில் அதற்கு அடிமையானபின் வெளிவர இயலாமல் போய்விடும். அந்தப் பழக்கமே கடைசியில் அழிவுக்குக் காரணமாகிவிடும்.

    ஒரு தவளையைப் பிடித்து தண்ணீரில் போட்டு மெது மெதுவாகச் சூடாக்கினால் அந்த வெது வெதுப்பில் அது சுகம் காண ஆரம்பிக்கும். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக சூடு அதிகரிப்பதை உணராது. அதை உணரும் கணத்தில் அது இறந்து போயிருக்கும்.

    எலிகளைப் பிடிப்பதற்கான ஒரு வித்தியாசமான பொறி உண்டு. ஒரு பாட்டிலின் உள்ளே தானியம் இருக்கும். தானியத்தை சாப்பிடத்தொடங்கும் எலி அப்படியே பாட்டிலுனுள் விழுந்துவிடும். விழுந்தாலும் தானியம் கிடைக்கிறதே என தொடர்ந்து சாப்பிடும்.

    கடைசியில் பாட்டிலின் அடிப்பாகத்தில் சென்று சேரும். வெளியே வரும் வழி தெரியாமல் அங்கேயே இறந்து விடும். பாவம் நம்மை அழைக்கும் போது கொஞ்ச நேரம் பழகிவிட்டு வருகிறேன் என முடிவெடுத்தால், அதுவே நம் அழிவுக்கான பாதையாகி விடும்.

    பாவம் நம்மை அழைக்கும்போது நாம் எதிர்திசையில் ஓடித் தப்ப வேண்டும். பாவிகளின் வழியிலேயே நிற்கக் கூடாது. பாவத்தை விட்டும், பாவிகளை விட்டும் விலகிச் செல்ல வேண்டுமென விவிலியம் நமக்கு பல்வேறு வசனங்களின் மூலமாக விளக்குகிறது.

    "நீ இள வயதின் இச்சைகளை விட்டு ஓடிவிடு" என்கிறது 2 திமொத்தேயு 2:22.

    "நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்" என்கிறது முதலாம் சங்கீதம்.

    சமீபத்தில் சுமார் 5000 பேர்களுடைய 'செத்துப் பிழைத்த' அனுபவக் காட்சிகளை ஆராய்ந்த விஞ் ஞானிகள் சொன்ன ஒரு வாக்கியம் முக்கியமானது. "மரணத்துக்குப் பின் ஏதோ ஒரு வாழ்க்கை இருக்கிறது" விவிலியம் அதை சொர்க்கம், நரகம் என பெயரிட்டு அழைக்கிறது. இவ்வுலகின் சிற்றின்ப மோகங்களில் நீச்சலடிப்பவர்கள், மறு உலகின் பேரின்ப பிரவாகத்துக்குள் நுழைவதில்லை.

    பாவம் என்பது பரவசக் கனவுகளோடும், அதீத அழகோடும் கண்சிமிட்டும். வசீகரத்தில் வீழ்ந்து விடாமல் ஒதுங்கி இருப்பதே முடிவில்லா வாழ்வுக்கு வழிகாட்டும்.

    • காலையிலும், மாலையிலும் இறைவனை துதிக்க வேண்டும்.
    • அருட்பாக்கியங்களை பிரார்த்தனை மூலம் இறைவனிடம் பெற வேண்டும்.

    காலையிலும், மாலையிலும் இறைவனை துதிக்க வேண்டும்; இறைவனை துதித்த பிறகு காலையிலும், மாலையிலும் நாம் பெற வேண்டிய 6 அருட்பாக்கியங்களை பிரார்த்தனையின் மூலம் இறைவனிடம் கேட்டுப்பெற வேண்டும். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    `இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் மாலைப்பொழுதிலும், நீங்கள் காலைப் பொழுதிலும் இறைவனை துதித்துக் கொண்டிருங்கள்'. (திருக்குர்ஆன் 30:17)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் காலைப்பொழுதை அடையும்போது, (இறைவனின் கிருபையால்) நாம் காலைப்பொழுதை அடைந்து விட்டோம். காலைப்பொழுது ஆட்சியும் அல்லாஹ்விற்கே. அவன் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து, வளர்த்துப் பரிபக்குவப்படுத்துபவன். இறைவா, நான் உன்னிடம் இந்த நாளின் நன்மைகள் யாவையும் வேண்டுகிறேன். மேலும், இந்த நாளின் வெற்றியையும் வேண்டுகிறேன்.

    மேலும், இந்த நாளின் உதவியையும் வேண்டுகிறேன். மேலும், இந்த நாளின் அபிவிருத்தியையும் வேண்டுகிறேன். மேலும் இந்தநாளின் நேர்வழியையும் வேண்டுகிறேன்' என அவர் பிரார்த்திக்கட்டும். மேலும், 'இறைவா! இந்த நாளில் ஏற்படும் தீங்கை விட்டும், இந்த நாளுக்கு பிறகு வரும் தீங்கை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும், அவர் மாலைப்பொழுதை அடையும் போதும் இவ்வாறே பிரார்த்திக்கட்டும்'. (அறிவிப்பாளர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி), நூல்:அபூதாவூத்)

    ஒருவர் மாலைப்பொழுதை அடையும் போது, அவர் தமது மாலை நேரப் பிரார்த்தனையில், காலை என்பதற்குப் பதிலாக மாலை என்ற வார்த்தையை மொழிந்து கொள்ள வேண்டும்.

    `இறைவனின் கிருபையால் நாம் மாலைப்பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சியும் அல்லாஹ்விற்கே உரியது. அவன் அகிலங்களைப் படைத்து பராமரிப்பவன். இறைவா! நான் உன்னிடம் இந்த இரவின் நன்மைகள் யாவையும், இரவின் வெற்றியையும், இரவின் உதவியையும், இரவின் பிரகாசத்தையும், இரவின் அபிவிருத்தியையும், இரவின் நேர்வழியையும் வேண்டு கிறேன்.

    மேலும், இறைவா! இந்த இரவில் ஏற்படும் தீங்கை விட்டும், இந்த இரவுக்கு பின்னால் வரும் தீங்கை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்' என பிரார்த்திக்க வேண்டும்.

    இறைநம்பிக்கையாளரின் காலைப் பொழுதும், மாலைப் பொழுதும் நன்றாக அமைய வேண்டுமானால் அவர் இவ்வாறு இறைவனிடம் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் பிரார்த்திக்க வேண்டும்.

    வெற்றி: வெற்றி என்பது நமது நோக்கங்கள், நமது எண்ணங்கள், நமது எதிர்பார்ப்புகள் இவற்றுக்கு கிடைக்கக்கூடிய வெற்றியாகும்.

    வெற்றியும் - தோல்வியும் வாழ்வின் இருபக்கங்கள். எனினும் வெற்றி என்பது இனிமையானது.

    "நீங்கள் வெற்றி அடையும் பொருட்டு இறைவனை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்" என்று திருக்குர்ஆன் (2:189) குறிப்பிடுகிறது.

    உதவி: உதவி என்பது எதிரிகளுக்கு எதிராக நமக்கு சாதகமாக அமைந்து விடுவது. அநியாயக்காரன், அட்டூழியம் புரிபவன், அடக்குமுறை செலுத்துபவன், ஆதிக்க வெறியுடன் நடப்பவன், வரம்பு மீறி நடப்பவன் போன்றோருக்கு எதிராக நமக்கு இறைவனின் புறத்திலிருந்து கிடைக்கும் உதவி என்பது எதிரியின் சூழ்ச்சியை விட்டும், எதிரியின் சதியை விட்டும் நம்மைக் காப்பாற்றும். இதையே, "இறைவா!

    உன்னையே நாங்கள் வணங்கு கிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்" என்று திருக்குர்ஆன் (1:5) கூறுகின்றது.

    பிரகாசம்: நமது அன்றாட வாழ்வு பிரகாசமாக, ஒளிமயமாக அமைய வேண்டுமானால் அந்நாளின் செயல்பாடும், அந்நாளின் அறிவும் சீராக அமைய வேண்டும்.

    "அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்பு வோருக்கு அல்லாஹ் அதன் மூலம் சாந்திக்கான வழி களைக் காண்பிக்கின்றான்.

    மேலும், அவன் தனது கட்டளையைக் கொண்டு இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கின்றான்" என்று திருக்குர்ஆன் (5:16) குறிப்பிடுகின்றது.

    அபிவிருத்தி: ஒவ்வொரு நாளும் நமது வாழ்வாதாரம் அபிவிருத்தியாக அமைந்துவிட்டால், நாம் யாரிடமும் கைகட்டி நிற்க வேண்டியதில்லை. அபிவிருத்தி என்பது பொருள் குறைவாக இருப்பினும் அதனால் ஏற்படும் பயன் அளப்பெரியதாக இருக்கும். ஒரு பொருளின் மீது நன்மை இருப்பது, அந்த நன்மை உறுதியாகவும், நிரந்தரமாகவும் இருப்பதாகும்.

    நேர்வழி: நேரான பாதையில் வாழ்க்கைப்பயணத்தை தொடர்வது, மனோ இச்சைகளை விட்டுவிடுவது பாக்கியமுள்ளதாகும். மேலும், இறைவனிடம் அனைத்து விதமான தீமைகள், தீங்குகள், சோதனைகள், குழப்பங்கள், நோய் நொடிகள், மனஅழுத்தங்கள், கவலைகள், கஷ்டங்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாவல் தேடி, அவற்றிலிருந்து விடுதலை கிடைத்தால் அந்நாளும் என்னாளும் பொன்னாளாகும்.

    இதையே திருக்குர்ஆன் (2:5) "இவர்கள் தான் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்" என்று குறிப்பிடுகிறது.

    நாமும் இறைவனின் வழியில் தினமும் காலையிலும், மாலையிலும் நடந்து, முறையாக இறைவனை வழிபட்டு, நன்மைகளைச்செய்து இறைவனின் அருட்கொடைகளை பெறுவோம்.

    • தீபாவளிக்கு முன்தினம் திரயோதசி திதியில் எம தீபாவளி கொண்டாடப்படுகிறது.
    • தீபாவளி அன்று காலை எம தர்ப்பணம் செய்வது விசேஷம்.

    தீபாவளிக்கு முன்தினமான திரயோதசி திதியில், எம தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ, அத்தனை தீபங்களை வீட்டின் பூஜை அறையில் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதோடு எம தீப தானமும் வழங்கலாம். அதாவது பித்தளை குத்துவிளக்கு அல்லது வெள்ளி குத்துவிளக்கில் தீபம் ஏற்றி, யாருக்காவது அந்த தீபம் ஏற்றிய குத்துவிளக்குகளை தானமாக அளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    எம தர்ப்பணம்

    தீபாவளி அன்று காலை (சதுர்த்தசி திதி) எம தர்ப்பணம் செய்வது மிக விசேஷமானது. இதனால் நீண்ட ஆயுள், ஐஸ்வரியம் கிடைக்கும். இதை தந்தை இல்லாதவர்கள் மட்டுமின்றி, தந்தை, தாய் உயிருடன் இருப்பவர்களும் செய்யலாம். மஞ்சள் கலந்த அரிசியால், தூய்மையான நீரில் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் எம பயம் விலகும். தர்ப்பணம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம்..

    யமாய நம : யமம் தர்ப்பயாமி

    தர்மராஜாய நம : தர்மராஜம்தர்ப்பயாமி

    ம்ருத்யவே நம : ம்ருத்யும் தர்ப்பயாமி

    அந்தகாய நம : அந்தகம் தர்ப்பயாமி

    வைவஸ்வதாய நம : வைவஸ்வதம் தர்ப்பயாமி

    காலாய நம : காலம் தர்ப்பயாமி

    ஸர்வபூத க்ஷயாய நம : ஸர்வபூத க்ஷயம் தர்ப்பயாமி

    ஔதும்பராயநம : ஒளதும்பரம் தர்ப்பயாமி

    த த் நாய நம : தீத்நம் தர்ப்பயாமி

    நீலாய நம : நீலம் தர்ப்பயாமி

    பரமேஷ்டி நே நம : பரமேஷ்டி நம் தர்ப்பயாமி

    வ்ருகோதராய நம :வ்ருகோதரம் தர்ப்பயாமி

    சித்ராய நம :சித்ரம்தர்ப்பயாமி

    சித்ரகு ப்தாய நம : சித்ரகு 'ப்தம் தர்ப்பயாமி

    • தீபங்களை வரிசையாக வைத்து வழிபடுவதே தீபாவளி.
    • விஷ்ணுபகவானுக்கும், பூமா தேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன்.

    தீபங்களை வரிசையாக வைத்து வழிபடுவதே, `தீபாவளி.' மனதில் இருக்கும் தீய எண்ணங்களான இருளை நீக்கும் விதமாகவும், மனதில் தூய்மை என்னும் வெளிச்சம் பரவும் விதமாகவும்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

    அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம், அதனை அழிப்பதற்காக அவதரிப்பவர் விஷ்ணு பகவான். அவர் ஒருமுறை வராக அவதாரம் எடுத்து, பூமியை கடலுக்கு அடியில் இருந்து மீட்டெடுத்தார். அப்போது அவருக்கும், பூமா தேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன். அவனை பெற்றெடுத்த பூமாதேவி, `எனது மகனுக்கு மரணம் ஏற்படக்கூடாது. அதற்கான வரத்தை தந்தருள வேண்டும்' என்று விஷ்ணுவிடம் வேண்டினாள்.

    அதற்கு விஷ்ணு, `இறவா வரத்தை யாருக்கும் கொடுக்கக்கூடாது. அதனால் பல துன்பங்கள் ஏற்படும். ஆனால் உன் மகனை யாராலும் கொல்ல முடியாது. அவன் என்னாலேயே வீழ்வான். அப்போது நீயும் என்னுடன் இருப்பாய்' என்றார். அப்படி விஷ்ணு கொடுத்த வரத்தின் காரணமாகவே, கிருஷ்ண அவதாரத்தின் போது, பூமாதேவி சத்யபாமாவாக தோன்றினாள்.

    பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான் நரகாசுரன். அவனது தவத்தால் மகிழ்ந்த பிரம்மதேவர் அங்கு தோன்றினார்.

    அவரிடம், "நான் எந்த நிலையிலும் மரணிக்கக்கூடாது" என்று நரகாசுரன் வரம் கேட்டான். அதற்கு பிரம்மன், `உலகில் தோன்றிய அனைத்தும் மறைவது என்பது தவிர்க்க முடியாதது. ஆகையால் வேறு வரம் கேள்!" என்றார்.

    சிறிது நேரம் மவுனமாக நின்ற நரகாசுரன், "பிரம்மதேவரே! எனது தாயினால்தான் எனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தையாவது தாருங்கள்" என்றான். அவன் கேட்ட வரத்தையே அருளினார், பிரம்மன். `பெற்ற பிள்ளையை, எந்த சூழலிலும் தாய் கொல்லத் துணியமாட்டாள். எனவே தனக்கு மரணமே கிடையாது' என்ற எண்ணமே நரகாசுரனை இவ்வாறு வரம் கேட்க வைத்தது.

    வரத்தை பெற்றுக்கொண்ட நரகாசுரன், மூவுலகத்தையும் ஆட்டிப்படைக்க தொடங்கி விட்டான். தேவேந்திரன் முதலான தேவர்களை அடிமைபோல் நடத்தினான். மனிதர்களை துன்புறுத்தினான். நரகாசுரன், அசாம் ராஜ்ஜியத்தில் உள்ள பிரக்ஜோதிஷபுரம் என்ற இடத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்தான். நரகாசுரனின் கொடுமையால் துயரம் அடைந்த தேவர்கள், அந்த கொடுமையில் இருந்து தப்பிக்க கண்ணனின் திருவடிகளில் போய் சரணடைந்தனர். அசுரனை அழித்து தங்களையும், மக்களையும் காத்தருளும்படி கண்ணீர் வடித்தனர்.

    `நல்லது நடக்கும் நம்பிக்கையோடு புறப்படுங்கள்' என்று தேவர்களுக்கு உறுதியளித்த கண்ணன், அந்த வாக்குறுதியை காப்பாற்ற சத்யபாமாவை தேரின் சாரதியாக அமர்த்திக் கொண்டு, நரகாசுரன் ஆட்சி செய்யும் நகரமான பிரக்ஜோதிஷபுரம் நோக்கி சென்றார். நகரின் எல்லையை அடைந்த அவர், அந்த நகரின் பாதுகாவலாக இருந்த கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் என்னும் கோட்டைகளை அழித்து, அதன் பிறகு நகருக்குள் நுழைந்து போர் தொடங்க அறிகுறியாக சங்கை முழங்கினார்.

    சத்தம் கேட்டு அரண்மனையில் இருந்து வெளிப்பட்ட நரகாசுரன், தனது கோட்டைகள் உடைக்கப்பட்டு துகள்களாக கிடப்பதையும், அதற்கு காரணமான கண்ணனையும் கண்டு கடும் சீற்றம் கொண்டான். தனது படைகளை திரட்டிக்கொண்டு கண்ணனுடன் மூர்க்கத்தனமாக போரிட்டான். ஆனால் சாந்தம் தவழ்ந்த முகத்துடன் அம்புகளை தொடுத்த கண்ணன், நரகாசுரனின் படைகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்து விட்டார்.

    இதனால் மேலும் கடும் கோபத்திற்கு ஆளான நரகாசுரன் ஏவிய அஸ்திரம் ஒன்று தாக்கி கண்ணன் தேரில் சாய்ந்து விட்டார். இல்லை... இல்லை... சாய்ந்தது போல் நடிக்க தொடங்கி விட்டார். அதுவரை தேர் ஓட்டும் சாரதியாக அமைதியாக இருந்த சத்யபாமா, தனது கணவரின் நிலைகண்டு கொதித்தெழுந்தாள். அதற்காகத்தானே கண்ணன் தேரில் மூர்ச்சையானதுபோல் விழுந்தார்.

    கோபத்தில் கண்கள் சிவக்க, அம்பு மழை பொழிந்தாள் சத்யபாமா. அதில் இருந்து தப்பிக்க முடியாமல் நரகாசுரன் வீழ்ந்தான். நரகாசுரனை வதம் செய்த பின்னர் பூமாதேவியின் அம்சமான சத்யபாமாவுக்கு தனது மகன் இறந்துவிட்டானே என்ற துயரம் ஏற்பட்டது.

    இருந்தாலும், `மகன் இறந்தது என் ஒருத்திக்குதான் துக்கம். ஆனால் அவனால் பல துன்பங்களை அடைந்த தேவர்களுக்கும், மக்களுக்கும் இது நன்மை அளிப்பது' என்று மனதை ஒருவாறு தேற்றிக்கொண்டாள்.

    பின்னர் கண்ணனிடம் இப்படி கூறினாள். `என் மகனை இழந்த துக்கம் எனக்கு இருந்தாலும், உலக மக்களுக்கு எவ்வித துக்கமும் இருக்கக்கூடாது. அன்று எல்லோரும் கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு அருள்புரிய வேண்டும்' என்று வேண்டினாள்.

    தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு 3¾ நாழிகைக்கு முன்பாக எழுந்து நீராட வேண்டும். அதிகாலை நேரம் நீர் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால், வெந்நீரில் நீராடலாம் என்று சொல்லப்பட்டது. அன்றைய தினம் மாலையில் வீட்டின் வாசலில் இருந்து பூஜை அறை வரை தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    ×