என் மலர்tooltip icon

    வழிபாடு

    • திரும்பிய திசையெல்லாம் சிற்பக்கலைக் கூடங்கள்.
    • முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்களில் ஒன்று.

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அதே திருமுருகன்பூண்டிக்கு பெருமை சேர்க்கும் வகையில் திரும்பிய திசையெல்லாம் சிற்பக்கலைக் கூடங்கள் நிறைந்து காணப்படுகிறது.

    கலைநயமிக்க சிலைகளை கைவேலைப்பாடுகளுடன் தத்ரூபமாகவும், துல்லியமாகவும் செதுக்குவதில் தனித்தன்மையுடனும், உலக பிரசித்தி பெற்றதாகவும் விளங்குகிறது திருமுருகன்பூண்டி சிற்பக் கலைக்கூடங்கள்.

    குறிப்பாக கருங்கல்லால் செதுக்கப்படும் சாமி சிலைகள் திருமுருகன்பூண்டிக்கு இணையாக தமிழகத்தில் வேறு எங்கும் செய்ய முடியாது என்ற அளவிற்கு பெருமைக்குரிய தொழிலாகவும், சிறந்த கலையாகவும் உள்ளது. 5 தலைமுறைகளை கடந்து, 200 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமிக்க தொழிலாகவும், கலைநயம், கைவேலைப்பாடு, கடினமான உடல் உழைப்பு ஆகியவைதான் சிற்பக் கலைக்கூடங்களின் சிறப்பு. திருமுருகன்பூண்டி, அவினாசி, பெரியாயிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 160 சிற்பக்கலைக் கூடங்கள் உள்ளன.

    அங்கு 600-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்களும், தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். அங்கு கருங்கல்லால் செதுக்கப்படும் சாமி சிலைகள், தலைவர்களின் திருஉருவச் சிலைகள், கல்வெட்டுக்கள், சாஸ்திர கற்கள் போன்றவை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படுவது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    மேலும் திருமுருகன்பூண்டியில் செதுக்கப்படும் சாமி சிலைகள் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்வே திருமுருகன்பூண்டி சிற்பக்கலை தொழில் தொடங்கி விட்டது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிற்பங்கள் செதுக்கப்பட்டாலும், திருமுருகன்பூண்டியில் செதுக்கப்படும் சாமி சிலைகளுக்கு இணையாக அமையாது. அந்த அளவிற்கு கைவேலைப்பாடுடனும், அர்ப்பணிப்புடனும் இந்த தொழில் செய்யப்பட்டு வருகிறது.

    சிலைகள் தயாரிப்பில் எந்திரங்கள் உள்ளிட்ட நவீனங்கள் வந்து விட்டாலும், கைவேலைப்பாட்டில் கிடைக்கும் கலைநயமும், நுணுக்கமும் கிடைக்காது. தொழிலில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் கண்ணியம் தவறாமல் கடமையாற்றுவதே திருமுருகன்பூண்டியின் பெயர் இன்று நிலைநிற்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. சிற்பக்கலை தொழிலில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் பல ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறார்கள். திருமுருகன்பூண்டி முழுவதும் சிற்பக் கலைக்கூடங்கள் இருந்தாலும் மாசுப் பிரச்சினை காரணமாக சிலைகளை செதுக்கும் பணிகளை குடியிருப்புகள் அல்லாத ஒதுக்குப்புறமான இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனால் வாடிக்கையாளர்களும் சிலைகளை ஆர்டர் செய்வதற்கு ஒரு இடத்திற்கும், அதை பார்வையிடுவதற்கு ஒரு இடத்திற்கும் வரவேண்டி உள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கும் பணம் மற்றும் நேரத்தை விரயமாக்கும். எனவே 100 க்கும் மேற்பட்ட சிற்பக்கலைஞர்களின் நலன் கருதி தமிழக அரசு சிற்பக்கலைக் கூடங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் அமையும் வகையில் சிட்கோ போன்ற நிரந்தர தொழிற்பேட்டையை ஏற்படுத்தி தர வேண்டும்.

    மேலும் மத்திய அரசு சார்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது சிற்ப கலைஞர்களின் கோரிக்கையாக உள்ளது. தமிழக அரசும் கட்டிட தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி இருப்பது போன்று சிற்பக் கலைஞர்களுக்கும் கைவினைப் பொருட்கள் துறை சார்பில் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது.

    திருமுருகன்பூண்டியில் செதுக்கப்படும் சாமி சிலைகள் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி திருமுருகன் குமாரவேல் சிற்பக்கலை கூடத்தில் செதுக்கப்பட்ட மாரியம்மன், விநாயகர், முருகன் சிலைகள் மலேசிய நாட்டில் உள்ள கோவிலிலும், யானை சிலை அமெரிக்காவில் உள்ள கோவிலிலும், விநாயகர், ஆஞ்சநேயர், லட்சுமி, அய்யப்பன், 9 நவக்கிரகங்கள் உள்ளிட்ட சிலைகள் பிரான்ஸ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோவிலிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது உலக அளவில் பிரசித்தி பெற்றதாக அமைந்துள்ளது.

    இதே சிற்பக் கூடத்தில் 23 அடி உயரத்தில் 40 டன் எடையில் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும், 13 அடி உயரத்தில் 60 டன் எடையில் செய்யப்பட்ட நந்தி சிலை ஆகியவை கர்நாடக மாநிலம் பெங்களூரு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    திருமுருகன்பூண்டி முருகன் சிற்பக்கலைக் கூடத்தில் 33 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலை தமிழகத்திலேயே உயரமான விநாயகர் சிலையாக திண்டுக்கல்லிலும், மற்றொரு சிற்பக் கலைக்கூடத்தில் செதுக்கப்பட்ட 40 அடி உயரத்திலான ஆஞ்சநேயர் சிலை தமிழகத்திலேயே உயரமான ஆஞ்சநேயர் சிலையாக திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திருமுருகன்பூண்டியின் பெருமையை பறை சாற்றுவதாக அமைந்து வருகிறது.

    • 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊருக்குள் வர பாதை வசதி கிடையாது.
    • 400 வருடங்களுக்கு மேலாக ஒரே கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர்.

    கொடைக்கானல் அருகே உள்ளது வெள்ளக்கவி கிராமம். முற்றிலும் மலைவாழ் மக்கள் வசித்து வரும் இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 400 வருடங்களுக்கு மேலாக ஒரே கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோவிலில் விநாயகர், பாலசுப்பிரமணி, வைரவன், பூம்பாறைபட்டியான், கருப்புச்சாமி, வேட்டைக்காரன், அம்மன், பூதநாச்சியார், கன்னிமார்சாமி ஆகிய தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.

    இந்த கோவில் இப்பகுதி மக்களின் அனைத்து சுக, துக்கங்களிலும் பங்கெடுத்து வருவதாக நம்பி வருகின்றனர். காலையில் வேலைக்குச்செல்லும் தொழிலாளர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவரும் கோவிலில் வழிபட்டுதான் தங்கள் பணியை தொடங்குகின்றனர்.

    தங்கள் வீட்டில் திருமணம், காதணி விழா உள்ளிட்ட எந்த விஷேசங்கள் நடந்தாலும் இந்த கோவிலில் தான் அதனை நடத்துகின்றனர்.

    இதுபோன்ற சமயங்களில் கிராமத்தில் உள்ள ஒருவர்கூட விடுபடாமல் அனைவரும் ஆஜராகி விடுகின்றனர். இந்த கோவிலில் வருடத்தில் 2 முறை வழிபாடு நடத்தப்படுகிறது. அந்த விழா காலங்களில் கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினரிடமும் வரிவசூல் செய்யப்படுகிறது. ஒருவாரம் நடைபெறும் திருவிழா சமயங்களில் யாரும் காலில் செருப்பு அணிவது கிடையாது. வேலைக்குச் சென்றாலும், பள்ளிக்கு சென்றாலும், வேறு பணிக்கு சென்றாலும் செருப்பு அணியாமலேயே செல்கின்றனர்.

    வெளியூர் நபர்கள் வந்தால் அவர்களுக்கும் இதே கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. செருப்பை ஊருக்கு வெளியில் விட்டு பிறகுதான் உள்ளே வரவேண்டும். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊருக்குள் வர பாதை வசதி கிடையாது. கரடுமுரடான ஒத்தையடி பாதையில் மக்கள் நடந்து செருப்பு அணியாமல் வந்துள்ளனர். தற்போது இந்த ஊருக்கு மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தங்கள் ஊருக்கு சிமெண்ட் சாலை அல்லது தார்ச்சாலை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அது விரைவில் நிறைவேறும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து வெள்ளக்கவி கிராம மக்கள் கூறுகையில், எங்கள் ஊருக்கு திருவிழா சமயங்களில் யார் வந்தாலும் செருப்பு அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு பல ஆண்டுகளாக உள்ளது. வெளியூர்காரர்கள், போலீஸ்காரர்கள் வந்தாலும் எங்கள் கட்டுப்பாட்டை எடுத்துக்கூறி அவர்களது காலணியை ஊருக்கு வெளியே அகற்றிவிட்டு வர சொல்கிறோம். திருவிழா சமயங்களில் பொதுமக்கள் வழங்கும் வரி பணத்தைக் கொண்டே சாமிக்கு அனைத்து பூஜைகளும் செய்கிறோம்.

    மேலும் எங்கள் காவல் தெய்வமாக கடவுளுக்கு ஆடு, கோழி, சேவல் போன்றவற்றை பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்திகிறோம்.

    ஊருக்குள் வாழும் மக்களிடையே எந்த பேதமுமின்றி ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். எங்களது இந்த ஒற்றுமைக்கு ஊர் காவல் தெய்வங்களே காரணமாக உள்ளது என்று அனைவரும் நம்புகிறோம். இதனாலேயே கட்டுப்பாடுகள் கடைபிடித்து திருவிழாவை தொடர்ந்து நடத்தி வருகிறோம் என்றனர்.

    • திருஆக்கூரில் அவதரித்தவர், சிறப்புலி நாயனார்.
    • கொடும்பாளூரில் அவதரித்தவர், இடங்கழியார்.

    சிறப்புலி நாயனார்

    மயிலாடுதுறையில் இருந்து திருக்கடவூர் செல்லும் வழியில் அமைந்துள்ள திருஆக்கூரில் அவதரித்தவர், சிறப்புலி நாயனார். இவர் நீலகண்டப் பெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்து வந்தார். சிவனடியார்கள் தம்மை வந்தடைந்தபோது, அவர்கள் திருவடிகளில் விழுந்து வணங்கி உணவு வழங்கி உபசரிப்பார். அடியவர்கள் விரும்பும் யாவற்றையும் வழங்கியதால் புகழ்பெற்றவர். சிவபெருமான் திருவடிகள் மீது பற்று கொண்ட சிறப்புலி நாயனார், பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி, முக்தியை தேடி வந்தார். இவர் சிவ வேள்விகளை எல்லாம் சிவபெருமானைக் குறித்தே செய்தார். சிவனடியார்களுக்கு இல்லை என்று கூறாமல் கொடுத்து வந்தார். இவ்வாறு பல புண்ணிய காரியங்களை செய்து புகழும், சிறப்பும் பெற்ற தன்மையினால் சிறப்புலி நாயனாராகப் போற்றப்பட்டு சிவபெருமான் திருவடி நிழலிலே நிலைபெற்றிருந்தார்.

    இடங்கழி நாயனார்

    விராலிமலையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் அமைந்துள்ள கொடும்பாளூரில் அவதரித்தவர், இடங்கழியார். மன்னரான இவரது ஆட்சிக்காலத்தில் அடியார்களுக்குத் திருவமுது செய்விக்கும் திருத்தொண்டர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு கட்டத்தில் அடியார்களுக்கு திருவமுது வழங்குவதற்கு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டார். மனம் வருந்திய அவர், இடங்கழியாரின் அரண்மனைக்குள் புகுந்து நெற்கூடத்தில் இருந்து நெல்லை திருடினார். அவரை அரண்மனைக் காவலர்கள் பிடித்து இடங்கழியார் முன்பாக நிறுத்தினா். அவரிடம் இடங்கழியார், நடந்த விஷயத்தைக் கேட்டார். அதற்கு அந்த நபர், சிவனடியார்களுக்கு திருவமுது செய்விக்க பொருள் இல்லாததால், இப்படிச் செய்ததாகக் கூறினார். அதைக் கேட்டு அவரை விடுதலைச் செய்யும்படி இடங்கழியார் உத்தரவிட்டார். மேலும் நெற்கூடத்தில் உள்ள நெல் மட்டுமின்றி, அரண்மனையில் உள்ள எந்த மதிப்புமிக்க பொருளையும், எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லவும் அனுமதி கொடுத்தார். இந்த செயலால், இடங்கழியார், நாயன்மார்கள் பட்டியலில் இணைந்தார்.

    • நம்பினார்க்கு நடராசன்’ என்பது முதுமொழி.
    • அவனன்றி ஓர் அணுவும் அசையாது.

    `நம்பினார்க்கு நடராசன்' என்பது முதுமொழி. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதற்கு ஓர் உதாரணத் தலமாக திகழ்கிறது நத்தக்காடையூர். கொங்கு நாட்டிலே சோழர்களின் ஆட்சி பல காலம் நீடித்தது. சோழர்களது ஈடு இணையில்லா சிவபக்தியின் காரணமாக, கொங்கு தேசத்தில் 27 சிவாலயங்களை சோழர்கள் கட்டமைத்தனர். இந்த 27 சிவாலயங்களிலும் அருளும் சிவபெருமான், `ஸ்ரீ சோளீஸ்வரர்' என்றே அழைக்கப்படுகிறார்.

    ராஜராஜ சோழனின் பல்வேறு பட்டப் பெயர்களுள் ஒன்று `ஜெயங்கொண்டான்'. நத்தக்காடையூர் திருத்தலத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபெருமான் மட்டும், ராஜராஜ சோழனின் பட்டப்பெயரால் `ஸ்ரீ ஜெயங்கொண்டீஸ்வரர்' என்று போற்றப்படுகிறார். காங்கேயன் என்கிற குறுநில மன்னன் சோழர்களின் கட்டுப்பாட்டில் இப்பகுதியை ஆண்டு வந்தான். இதனால் இப்பகுதி 'காங்கேய நாடு' என்று அழைக்கப்பட்டது. இந்த காங்கேய நாட்டிற்கு உட்பட்டதாக நத்தக்காடையூர் திகழ்ந்துள்ளது.

    1708-ம் ஆண்டில் இக்காங்கேய நாட்டை ஆட்சி செய்தவர், கொன்றைவேல் சர்க்கரை மன்றாடியார். இவர் ஆட்சி செய்யும் காலத்தில் இங்குள்ள ஜெயங்கொண்டீஸ்வரர் ஆலயத்தைத் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்தினார். சிறந்த சிவ பக்தரான இவர் இச்சிவாலய திருப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, வேலையாள் ஒருவன் தண்ணீர் எடுத்து வரச்சென்றபோது, அவனைப் பாம்பு கடித்து விட்டது. அவன் அலறிக்கொண்டே ஓடி வந்து, கோவிலின் முன்னே மயங்கி விழுந்தான்.

    அவன் வாயில் நுரை தள்ளியது. விஷயம் அறிந்து, அங்கு ஓடி வந்தார் கொன்றைவேல் சர்க்கரை மன்றாடியார். சிவாலயத் திருப்பணிக்கு என்ன தடையோ? என்று பயந்தார்.

    உடன் ஆலயத்திற்குள் சென்று ஒரு கைப்பிடியளவு விபூதியை எடுத்து வந்து, `ஜெயங்கொண்ட நாதரே! நமச்சிவாய! பயம் கொண்ட பாம்பு விஷம் இறங்கவே! சிவ சிவ' என்று சொல்லியபடியே அவனது உடம்பு முழுவதும் பூசி விட்டார். 28 முறை இவ்வாறு ஜபித்தபடியே விபூதியைப் பூசினார்.

    பாம்பு கடித்து மயங்கி கிடந்தவன், உடம்பில் உயிர் வந்தது. கண்விழித்துப் பார்த்தான். அவனது உடம்பில் ஏறிய பாம்பின் விஷம் முழுவதும் இறங்கியது. தூங்கி எழுந்தவன் போல் எழுந்து நின்றான். பலரும் இந்த அற்புத நிகழ்வைக் கண்டு அதிசயித்து நின்றனர்.

    மன்றாடியாரோ ஆண்டவனை வணங்கி பேரானந்தம் அடைந்தார். ஈரோடு நெடுஞ்சாலைக்கு மேற்கே ஆலயம் அழகுற அமைந்துள்ளது.

    ஆலயத்திற்கு வெளியே பிரமாண்டமான இரண்டு தீப ஸ்தம்பங்கள் எழுந்து நிற்கின்றது. இதன் கீழே ராஜராஜ சோழனது திருவுருவம் வடிக்கப்பட்டுள்ளது.

    இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லை. கோவில் உள்ளே பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளன. நேராக சில படிகள் ஏறிச்சென்றால், இறைவன் சன்னிதி வருகிறது. கருவறையுள் கருணாதயாளராய் அருட்காட்சி அளிக்கிறார் ஸ்ரீ ஜெயங்கொண்டீஸ்வரர்.

    சுவாமி சன்னிதிக்கு இடப்பக்கம் அம்பாள் சன்னிதியும், பக்கத்தில் ஸ்ரீதேவி - பூதேவி உடனுறை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் சன்னிதியும் அடுத்தடுத்து அமைந்துள்ளது. அம்பிகையாக ஸ்ரீ சவுந்தர நாயகி நின்ற வண்ணம் அருள்புரிகின்றாள்.

    தென்மேற்கில் கணபதி சன்னிதியும், வடமேற்கில் பாலசுப்பிரமணியர் சன்னிதியும் அமைந்துள்ளன. வடபாகத்தில் தெற்கு நோக்கிய அனுமன் சன்னிதியும், ஈசான பாகத்தில் ஸ்ரீ பைரவரும் சன்னிதி கொண்டுள்ளனர். நவக்கிரகங்களும் உடனுள்ளன. பழையகோட்டை மன்றாடியார் நிர்வாகத்திற்கு உட்பட்ட இவ்வாலயத்தில் அனேக சிவாலய விசேஷங்களும் சிறப்புடன் நடைபெறுகின்றன. இரண்டு கால பூஜைகள் நடந்திடும் இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    இத்தல வழிபாட்டினால், விஷத்தால் உண்டான வியாதிகள் குணமடையும். தொழிலில் ஏற்படுகின்ற தடைகள் நீங்கும். தடைபட்ட மங்கல நிகழ்ச்சிகள் மீண்டும் நடைபெறும்.

     திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் இருந்து அரச்சலூர் வழியாக ஈரோடு செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நத்தக்காடையூர்.

    • திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் சேஷ வாகனத்தில் பவனி.
    • கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி-24 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவாதசி நண்பகல் 12.59 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: அஸ்தம் நள்ளிரவு 1.08 மணி வரை பிறகு சித்திரை

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சுப முகூர்த்த தினம். பிரதோஷம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் சேஷ வாகனத்தில் பவனி. உத்தரமாயூரம் வள்ளலார் சந்நிதியில் சந்திரசேகரர் பஞ்சமூர்த்திகளுடன் பவனி. வீரவநல்லூர் மரக தாம்பிகை ஊஞ்சலில் காட்சி. திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி யம்மன் ஊஞ்சலில் காட்சி. சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேசுவரம் பர்வத வர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-ஆசை

    மிதுனம்-அன்பு

    கடகம்-உயர்வு

    சிம்மம்-நட்பு

    கன்னி-அமைதி

    துலாம்-ஆதரவு

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு-நிறைவு

    மகரம்-திறமை

    கும்பம்-பிரீதி

    மீனம்-முயற்சி

    • இன்று முதல் 3 நாட்களுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் நாயன்மாா்களால் பாடப்பட்ட பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும்.

    இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதத்திலும் திருவிழாக்கள் நடைபெறும். அதில் குறிப்பாக சுவாமிக்கு ஆனித்தேரோட்டமும், அம்பாளுக்கு ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 29-ந்தேதி அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் தினமும் காலை, மாலை வேளைகளில் காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம், பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று மதியம் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதற்காக நெல்லை கோவிந்தராஜா் நெல்லையப்பரை ஆயிரங்கால் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தாா். அப்போது மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாத பூஜை நடைபெற்றது. விழா மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன.

    தொடா்ந்து சுவாமி -அம்பாள் காப்பு கட்டும் நிகழ்ச்சி, மாலை மாற்றும் வைபவம், பாலும்-பழமும் கொடுத்தல் என சடங்குகள் நடைபெற்றன. அதன்பின் சுவாமி நெல்லையப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரைவார்த்து கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சுவாமி-அம்பாள் ஆகியோருக்கு புது வஸ்திரங்கள் அணிவித்த பின் திருமாங்கல்ய தாரண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து சப்தபதி போன்றவை நடைபெற்று வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவா மூா்த்திகள் திராவிட வேதம் பாட மகா தீபாராதனை நடைபெற்றது.

    இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் பக்தர் பேரவை சார்பில் திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று முதல் 3 நாட்களுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.

    அதனை தொடா்ந்து சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • தீபாவளி என்றால் நம் நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான்.
    • தீபாவளியை களைகட்டச் செய்வது பட்டாசுதான்.

    பட்டாசு வெடிப்பது ஏன்?

    ஜோதிட ரீதியாக இந்த தீபாவளி பண்டிகை திதியை அடிப்படையாக கொண்டு உள்ளது. திதிக்கு சூரிய சந்திரர்கள் மட்டுமே முக்கியம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி தொலைவை திதி என்கிறோம். சதுர்தசியில் குளித்து விட்டு எம தர்ப்பணம் செய்து விட்டு பின்னர் குடும்பத்தோடு தெய்வ பூஜைகள் செய்து பின்னர் மாலையில் தீபம் வைக்க வேண்டும். மத்தாப்பு போன்ற வெளிச்சம் தரும் வெடிகளை சந்தோஷமாக வைக்க வேண்டும்.

    தீபாவளி என்றால் நம் நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான். ஆனால் அந்த பட்டாசுகள் இல்லாமலும் தீபாவளி கொண்டாடலாமா என்றால் வாய்ப்பே இல்லை என்கின்றனர் நம்ம வீட்டு குட்டீசுகள். தீபாவளி பண்டிகை வருவதற்கு 2-3 வாரங்களுக்கு முன்பாகவே பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

    தீபாவளியைக் களைகட்டச் செய்வது பட்டாசுதான். பட்டாசு இல்லாத தீபாவளி, திரியில்லாத புஸ்வானம்போல, சுரத்தே இல்லாமல் போய்விடும். பட்டாசு வெடிப்பதில் சிறுவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் அப்பாக்களுக்கும் ஏன் தாத்தாக்களுக்கும் கூட ஆவல்தான். ஆனால் பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிக்காவிட்டால் தீபாவளியின் தித்திப்பு காற்றில் கரைந்துவிடும்.

    பாதுகாப்பாகப் பட்டாசு வெடிப்பது தொடர்பாக தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறையின் சார்பில் ஆண்டுதோறும் தீவிர பிரசாரம் செய்யப்பட்டு வருவதால் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதனால் விபத்துகளும் குறைந்து வருகிறது என்று தெரியவருகிறது.

    `காற்று மாசு ஏற்படும்' என்று பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது. இதனால் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறையும் என்றாலும், அந்த குறைவான நேரத்திலும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகளை கவனமாகக்கையாளாவிட்டால் ஆபத்தை விளைவிக்கும்.

    கை, கால்களில் காயம், ஆடைகளில் தீப்பிடிப்பது போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. புஸ்வானம், தரைச்சக்கரம் போன்றவை சிலநேரங்களில் வெடிக்கக்கூடும். அந்தத் தீப்பொறி பட்டு கண்கள் பாதிகப்படலாம். பட்டாசு வெடிப்பதால் வெளிவரும் நச்சுப்புகை சுவாசம், நுரையீரல் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

    பட்டாசு வெடிக்கும் பகுதியில் ஒரு வாளி தண்ணீரை எப்போதும் வைத்திருக்க வேண்டும். சிறுவர்கள், பெரியவர்களின் துணையுடன் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். புடவை, பட்டுப்பாவாடை போன்ற தளர்வான ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்கக் கூடாது.

    பருத்தி ஆடை, ஜூன்ஸ் பேண்ட் அணிந்து கொள்ளலாம். பட்டாசு வெடிக்கும்போது காலில் செருப்பு அணிவது அவசியம்.

    கம்பி மத்தாப்புகளைக் கொளுத்தி முடித்ததும் வாளியில் உள்ள தண்ணீரில் போட்டுவிட வேண்டும். வெடிக்காத பட்டாசு களை கையில் எடுத்துப் பார்க்கக்கூடாது. அதன்மீது உடனே தண்ணீர் ஊற்றிவிட வேண்டும். எந்த பட்டாசுகளையும் கைகளில் வைத்து வெடிக்கக் கூடாது.

    சட்டை, பேண்ட் பாக்கெட்டுகளில் பட்டாசுகளைப் போட்டு வைத்துக் கொண்டு பட்டாசுகளைக் கொளுத்தக் கூடாது. நீளமான ஊதுவத்தியைப் பயன்படுத்தி தூரமாக நின்று பட்டாசைக் கொளுத்த வேண்டும்.

    பட்டாசு கொளுத்திய பிறகு கிடக்கும் குப்பைகள், வெடிக்காத பட்டாசுகள் ஆகியவற்றைச் சேர்த்து ஒன்றாக வைத்துக் கொளுத்தக்கூடாது.

    பட்டாசு விபத்து ஏற்பட்டால் அந்த காயத்தின்மீது தண்ணீர் ஊற்றவேண்டும். அதன்பிறகு காயம்பட்ட இடத்தைச் சுத்தமான பருத்தித்துணியைக் கொண்டுமூடி, காயம்பட்டவரை உடனே மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லவேண்டும். எந்த காரணம் கொண்டும் காயம் ஏற்பட்ட இடத்தில் பேனா மை, எண்ணெய், பற்பசை, ஐஸ்கட்டி, மஞ்சள், மாவு போன்ற எதையும் தடவக்கூடாது.

    வெடிக்கும்போது ஆடையில் தீப்பிடித்தால், தண்ணீர் அருகில் இல்லை என்றால், தீப்பிடித்தவர்களை ஒரு கம்பளியில் சுற்றி தரையில் உருட்டவேண்டும். கம்பளி சுற்றிய பகுதிக்குள் ஆக்சிஜன் செல்ல முடியாமல், தீ அணைந்துவிடும். அதன் பிறகு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். எனவே பட்டாசு இல்லாத தீபாவளியை நினைத்து பார்க்க முடியாது. அதே நேரத்தில் நாம் அனைவரும் பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாடுவோம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
    • அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

    அனைத்து மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்படக்கூடிய மிக முக்கிய பண்டிகை தீபாவளி திருநாள். ஒரே மாதிரியாக கொண்டாடப்படும் சில பண்டிகைகள் நாட்டில் பல்வேறு இடங்களில், அந்த பகுதிக்கு ஏற்ப பல பெயர்களில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த தீபாவளி பண்டிகை மட்டும் ஒரே பெயரில் கொண்டாடப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு ஐப்பசி 26-ந்தேதி (நவம்பர் 12) ஞாற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் விதமாக தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது நரகாசுர சதுர்தசி என்பார்கள். அதாவது அமாவாசை தினத்திற்கு முன் வரக்கூடிய திதி சதுர்த்தசி. இதன் காரணமாக வட இந்தியாவில் இந்த சதுர்தசி திதி வரக்கூடிய நாளில் தீபாவளி கடைப்பிடிக்கப்படுகிறது.

    தமிழகம் உள்ளிட்ட தென் இந்தியாவில் சதுர்தசி திதியும், அமாவாசை தினமும் சேர்ந்து வரக்கூடிய நவம்பர் 12-ந்தேதி தீபாவளி கடைப்பிடிக்கப்படுகிறது. மற்ற விரத தினங்களைப் போல தீபாவளி நன்னாளிலும் விரதம் இருந்து பகவான் கிருஷ்ணரை நினைத்தும், மகாலட்சுமி, குபேரரை வணங்கி பூஜை செய்தால் நல்லது. அதுமட்டு மல்லாமல் மிக முக்கியமான ஒன்று என்ன வென்றால், தீபாவளி அன்று வீட்டை சுத்தம் செய்யக்கூடாது. முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து தயாராக வைக்க வேண்டும்.

    தமிழக மக்கள் இதை ஒரு நாள் மட்டும் கொண்டாடுகின்றனர். ஆனால் மற்ற பல இடங்களில் தீபாவளியை ஐந்து நாள் கொண்டாட்டமாக கொண்டாடுகின்றனர். நவம்பர் 10-ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கி 14-ம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று தீபாவளி கொண்டாட்டம் முடிவடைகிறது.

    பொதுவாகவே அமாவாசை அன்று தான் தீபாவளி வரும். ஆனால் ஒரு சில வருடங்கள் அமாவாசைக்கு முதல் நாளே தீபாவளி வரும். இந்த வருடம் அமாவாசைக்கு முந்தைய நாள் தீபாவளி வருகிறது. தீபாவளி அன்று புத்தாடை அணிதல், பட்டாசு வெடித்தல், இனிப்பு சுவைத்தல் போன்றவை எப்படி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறதோ, அதே போல அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து கங்கா நீராடல் எனப்படும் எண்ணெய் தேய்த்து குளிப்பதும் முக்கியம் ஆகும்.

    தீபாவளி அன்று அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தீபாவளி பண்டிகையின் போது ஏழை, எளியோருக்கு, முடிந்த வரை புத்தாடை தானமும், இனிப்பு மற்றும் உணவு தானமும் செய்தால் அந்த மகாலட்சுமியின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • ஊரைச் சுற்றி சித்தர்களும் மா முனிவர்களும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
    • சிவலிங்கத்தை பாதுகாக்க வேண்டியது ஊர் மக்களின் பொறுப்பு.

    திருவள்ளூர் அடுத்த கொப்பூர் (திருகாபூர்) கிராமத்தில் இருக்கும் இடமெல்லாம் சிவலிங்கம். இந்த கிராமத்தைச் சுற்றி களத்துமேட்டில், வரப்பு, மாந்தோப்பில், குளக்கரை, முட்புதரில் மற்றும் பல்வேறு பகுதிகளில் சில காலங்களுக்கு முன் 108 சிவ லிங்கங்களும், நந்தியும், குட்டையும் கிராமத்தைச் சுற்றி இருந்ததாகக் கூறுகிறார்கள்.

    இந்த கொப்பூர் கிராமத்தின் மூத்தவரான திருவேங்கட நாயகர், தன் பதினைந்தாவது வயதில் மாடு மேய்க்கும்போது 65 சிவலிங்கங்கள் வரை பார்த்திருப்பதாகக் கூறுகிறார்.

    மேலும் முனிவர்களும் சித்தர்களும் 108 சிவலிங்கம் நந்தி குட்டைகளை அமைத்து பூஜைகள் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சிவலிங்கம் எல்லாம் கவனிப்பாரற்றுப் பூமிக்குள் புதையுண்டு போய் கொண்டிருக்கின்றன. சிவமயமான கிராமத்தில் தற்போது மக்கள் வழிபடுவது வைணவக் கடவுள்.

    தற்போது இந்த கிராமத்தில் 8 சிவலிங்கங்கள் பூமிக்குள் இருந்து எடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    ஆனால் கடந்த சில ஆண்டில் வெளியே இருந்த சிலலிங்கங்கள், மண்ணில் புதைந்தும் முட்புதர்களால் மூடியும் காணாமல் போனதாக பார்க்க முடிந்தது.

     

    ஆனால் இந்த கொப்பூர் கிராமத்தில் தோண்டுகின்ற இடமெல்லாம் விநாயகர், சிவலிங்கமும், நந்தியும். அம்பாள், சூரிய பகவான் பல்வேறு கடவுள் சிலைகளும் கிடைக்கும் கிராமமாக விளங்குகிறது.

    இந்த கிராமம் சென்னையில் இருந்து 38 கி.மீ. தூரத்தில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அரண்வாயில் குப்பம் பகுதியில் இருந்து ஸ்ரீபெருமந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

    இந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னோர்கள் வழிவழியாக பெரியோர்கள் "தங்களது தாத்தா காலத்தில் 108 சிவலிங்கமும், நந்தியும், குட்டையும் இருந்ததாகக் கூறியிருக்கிறார்.

    என் அப்பா காலத்தில் இது இன்னமும் குறைந்து தற்போது 8 லிங்கங்கள் தான் பார்வைக்குத் தெரிகின்றன. எங்கள் ஊருக்கு மேற்கே 'சிவலிங்கமேடு' என்ற பகுதி உண்டு. இப்பகுதியில்தான் ஏராளமான சிவலிங்கங்கள் இருந்தன.

    இந்த கிராமம் ஆரம்பத்துல சிவ மதம்தான் இருந்தது. இந்த ஊரைச் சுற்றி சித்தர்களும் மா முனிவர்களும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜர் காலத்தில வைணவத்துக்கு மாறியிருக்கணும். (ராமானுஜர் காலம் கி.பி. 10-ம் நூற்றாண்டு). அதுக்கு முன்னாடி இங்க சைவ மதம் தழைத்திருந்திருக்க வேண்டும்.

    அப்போது இந்த மண்ணில் மாமன்னரும், சிற்றரசரும் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது நடைபெறும் திருவிழாநாளில் அரசர் இந்த 108 சிவலிங்கத்தையும் வழிபடுவார்கள்.

    3- ம் நூற்றாண்டில் இருந்து 5- ம் நூற்றாண்டுவரை தமிழகச்சரித்திரத்தின் இருண்டகாலமாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ அந்த காலகட்டத்துக்குப் பின்புதான் இக்கிராமம் சைவ மதத்தை தழுவி இருந்திருக்க வேண்டும்.

    ராமானுஜரின் காலத்துக்குப் பிறகு வைணவ மதத்துக்கு மாறிய இந்த ஊர் மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீனிவாசப் பெருமாளின் ஐம்பொன் சிலை பூமிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

    நவாபுகள் வருகையால் ஐம்பொன் சிலைக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சி, சிலைகளைப் பூமியில் புதைத்து வைத்தார்கள். அதில் ஒரு சிலை, 1983-ம் ஆண்டு வீடுகட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டும் போது கிடைத்தது.

    லட்சுமி நரசிம்ம பெருமாள் சிலை. 600-700 ஆண்டுகளுக்கு முந்தைய சிலையென்றும் 83-ம் ஆண்டு அரசுத்தரப்பில் கூறினார்கள்.

    கொப்பூர் கிராமம் அருகே முகலாயர்கள் தண்டல் வசூலித்த இடம் தற்போது தண்டலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த கொப்பூர் கிராமத்தில் ஒரு கட்டத்தில் ஊரே பாழாகி (வீடு, மாடு, கன்றெல்லாம் பறிபோனதை அப்படிச் சொல்கிறார்கள்) எல்லாரும் ஊரை விட்டு வேறிடங்களுக்குப் போய் விட்டார்கள். பிறகு மூன்று குடும்பத்தார் மீண்டும் குடியேறி இப்போது 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களாகப் பெருகியிருக்கிறது.

    இந்த கிராமத்தில் பூமியில் தோண்டியெடுக்கப்பட்ட ஐம்பொன்சிலைகளைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரசாங்கம் வழக்கு தொடர்ந்தது. 'இது எங்கள் புராதனச் சொத்து தரமுடியாது' என்று கொப்பூர் ஊரில் இருக்கும் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலேயே அவற்றை வைத்திருக்கிறார்கள்.

    மேலும் இந்த ஊரில் உள்ள சிவலிங்கத்தை பாதுகாக்க வேண்டியது ஊர் மக்களின் பொறுப்பு. அதற்காக கோவில் கட்டிச் செழுமைப்படுத்துவதிலும் ஆண்டுதோறும் விழா நடத்துவதும் ஊர் மக்களின் கடமை.

    இந்த ஊர் எல்லையில் பூமிக்கு அடியில் கிடைத்த சிவலிங்கம், நந்தீஸ்வரர், விநாயகர், அம்பாள் உள்ளிட்ட கடவுள் சிலைகள் சாய்ந்த நிலையில் உள்ளதால் பக்தர்கள் வேண்டுதலை செவி கொடுத்து கேட்டு அருள் அளிப்பதாக ஊர் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றனர்.

    • தங்க அன்னபூரணியை தரிசிக்கவே காசி யாத்திரை செல்கின்றனர்.
    • அன்னபூரணியை வணங்கினால் வற்றாத செல்வங்களும், உணவும் கிடைக்கும்.

    நாம் உண்ணும் உணவுகள் அனைத்தையும் விளைவிப்பதும், அதற்கு ஆதாரமாய் இருப்பதும் அன்னபூரணியே. இந்த அன்னபூரணியை தனத்திரயோதசி தொடங்கி தீபாவளி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் விரதமிருந்து பூஜை செய்து வணங்கலாம். நம்முடைய வீட்டில் அன்னபூரணி உருவச்சிலை வைத்து பூஜை செய்து வணங்கிட அனைத்து நலன்களையும் வளங்களையும் தருவாள்.

    தீபாவளி நாளில் லட்சுமி குபேரபூஜை செய்வது போல நாம் அன்னபூரணியை விரதமிருந்து வணங்கினால் வற்றாத செல்வங்களும், உணவும் கிடைக்கும் என்பது ஐதீகம். காசியில் அன்னபூரணி அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரத்தில் பால் அன்னம் தந்து உலக உயிர்களின் அன்னதோஷம் என்னும் வறுமை அண்டாதவாறு அருள்புரிகிறாள்.

    தனதிரயோதசி தொடங்கி தீபாவளி, அமாவாசை நாட்களில் காசியில் தங்கமயமாய் காட்சி தரும் அன்னபூரணியை தரிசிக்க வாழ்நாள் முழுவதும் அள்ள அள்ள குறையாத அன்னத்தையும் செல்வத்தை வழங்கிடுவாள் இந்த நாட்களில் தங்க அன்னபூரணியை தரிசிக்கவே பெரும்பாலானோர் காசி யாத்திரை செல்கின்றனர்.

    காசியில் தீபாவளியன்று அன்னக்கூடம் என்ற நிகழ்வில் பலவித உணவுகள், பலகாரங்கள் வைத்து பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் லட்டு தேரில் அன்னபூரணி ஊர்வலம் வருவாள். எண்ணற்ற லட்டுகளால் உருவான தேரில் உள்ள லட்டுக்களை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்கள்.

    அன்னபூரணி அவதாரம் எப்படி நிகழ்ந்தது. அவர் காசிக்கு எப்படி வந்தார்? என்பதே ஒரு புராண கதையாக சொல்லப்படுகிறது. நான்முகன் என்று போற்றப்படும் பிரம்மனுக்கு முன்பு ஐந்து தலைகள் இருந்தனவாம். இதனால் கர்வம் அதிகமாக இருந்தது. பார்வதி, பரமசிவன், பிரம்மா ஆகிய மூவருக்கும் இடையேயான சிறு பிரச்சினையில் பிரம்மனின் ஒரு தலையை சிவனார் அறுத்து விட்டார்.

    இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பிச்சாடனார் சிவபெருமான் பிரம்மனின் கபாலம் சிவன் கையிலேயே ஒட்டி கொண்டது. இந்த தோஷம் நீங்க பிட்சாடனாராக சிவபெருமான் பல இடங்களில் பிச்சை பெற்றார். ஆயினும் சிவன் கையை விட்டு கபாலம் விழவில்லை. அந்த பாத்திரத்தில் எந்த பொருளும் தங்கவில்லை. அதேநேரம் பிரம்மதேவனை பார்த்து சிவனார் என நினைத்து வணங்கிய பார்வதி, தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொண்டு அன்னபூரணியாக அவதரித்து காசியில் தவம் செய்தாள்.

    இந்த சமயத்தில்தான் பிட்சாடனாராக வந்த சிவபெருமான் அன்னபூரணியிடம் பிச்சை பெற்றார். அப்போது பிரம்மனின் கபாலம் சிவபெருமான் கையைவிட்டு விலகியது. சிவனின் பசியை தீர்க்க வந்த அன்னபூரணி உலக பசிப்பிணி தீர்க்க காசியிலேயே தங்கிவிட்டார் என்கிறது புராணக்கதை.

    காசியில் நவரத்ன சிம்மாசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அன்னையின் ஒரு கரத்தில் அட்சய பாத்திரமும், மறு கரத்தில் தங்க கரண்டியுடன் கூடிய தங்கத்தில் ஜொலிக்கும் அன்னபூரணியை தீபாவளியின்போது மூன்று நாட்களுக்கு மட்டுமே தரிசிக்க முடியும். அன்னையிடம் பிச்சை கேட்கும் பிட்சாடனார் உருவமும் அருகில் ஆரடி உயரத்தில் உள்ளது. இந்த சிலை வெள்ளியால் செய்யப்பட்டது. நாமும் இந்த தீபாவளி திருநாளில் அன்னபூரணியை வழிபட்டு வற்றாத செல்வம் பெறுவோம்.

    • சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சலில் காட்சியருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி 23 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: ஏகாதசி காலை 11.17 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: உத்திரம் இரவு 11.05 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். கடையம் விசுவநாதர் திருக்கல்யாணம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் சந்திரபிரபையில் பவனி. வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சலில் காட்சியருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம். மாயவரம் கவுரி மயூரநாதர் நாற்காலி மஞ்சத்தில் பவனி. ஆலங்குடி, குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குரு வார திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதாயம்

    ரிஷபம்-செலவு

    மிதுனம்-பாராட்டு

    கடகம்-வரவு

    சிம்மம்-களிப்பு

    கன்னி-முயற்சி

    துலாம்- சாந்தம்

    விருச்சிகம்-பக்தி

    தனுசு- தெளிவு

    மகரம்-உழைப்பு

    கும்பம்-பண்பு

    மீனம்-மகிழ்ச்சி

    • 14-ந்தேதி நடைபெறும் கஜவாகன சேவைக்கு அதிக பக்தர்கள் வருகை.
    • பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடுவார்கள்.

    திருப்பதி:

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் தேவஸ்தான தலைவர் பூமண. கருணாகர் ரெட்டி கலந்துகொண்டார்.

    பத்மாவதி தாயார் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக நாளை (வியாழக்கிழமை) அங்குரார்பணம் நடக்கிறது. 14-ந்தேதி நடைபெறும் கஜவாகன சேவைக்கு அதிக பக்தர்கள் வருகை தரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    18-ந்தேதி பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடுவார்கள். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. ரூ.9 கோடி செலவில் புஷ்கரணி நவீனமயமாக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோவிலில் காலை 6 மணி முதல் 9 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் போன்றவற்றை நீரால் சுத்தம் செய்த பின்னர், நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஐதராபாத்தை சேர்ந்த சுவர்ண குமார் ரெட்டி 11 திரைச்சீலைகளும், குண்டூரை சேர்ந்த அருண்குமார், பத்மாவதி, திருச்சானூரை சேர்ந்த பவித்ரா மற்றும் ரஜினி ஆகியோர் 4 திரைச்சீலைகளும் வழங்கினர்.

    ×