search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவ தரிசனம் தரும் கேதார கவுரி விரதம் (வருகிற 13.11.2023)
    X

    சிவ தரிசனம் தரும் கேதார கவுரி விரதம் (வருகிற 13.11.2023)

    • 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம்.
    • 21 நூல் கொண்டு 21 முடிச்சுகளால் கலசத்தினை சுற்றி அமைப்பர்.

    கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவ பெருமானையும், பார்வதியையும், அனுதினமும் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வந்து வணங்கிச் செல்வார்கள். அவர்களில் பிருங்கி முனிவர், பார்வதியை விடுத்து சிவபெருமானை மட்டும் வணங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

    எப்படியாவது பிருங்கி முனிவர் தன்னையும் வணங்கவேண்டும் என்று எண்ணிய பார்வதி இறைவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள். வழக்கம்போல கயிலாயம் வந்த பிருங்கி முனிவர் சிவனுடன் நெருக்கமாக பார்வதி அமர்ந்திருந்ததைக் கண்டு கலங்கவில்லை. வண்டு உருவம் எடுத்து இருவருக்கும் இடையில் புகுந்து சிவனை மட்டுமே வலம் வந்தார்.

    இதுபற்றி பார்வதி தேவி, சிவபெருமானிடம் கேட்டதற்கு அவர், `தேவி.. பிருங்கி முனிவருக்கு எந்த பாக்கியங்களும் தேவையில்லை. அவருக்கு மோட்சம்தான் விருப்பம். எனவேதான் அவர் என்னை மட்டும் சுற்றி வந்து வழிபடுகிறார்" என்றார்.

    அந்த வார்த்தையில் திருப்தி இல்லாத பார்வதி தேவி. பிருங்கி முனிவரிடம் "உன் தேகத்திற்கு தேவையான சக்தி அனைத்தும் நான் வழங்கியவை. ஆனால் என்னை வழிபட மறுக்கிறாய். அப்படியானால் சக்திக்கு தேவையான ரத்தம், தசை, நரம்பு போன்றவற்றை திருப்பிக்கொடு" என்றார்.

    பிருங்கி முனிவரும் அப்படியே செய்தார்.

    உடனே தனது பக்தருக்கு நேர்ந்த கதியை கண்ட இறைவன் பிருங்கி முனிவர் ஊன்றி நடக்க ஒரு குச்சியை அளித்தார். முனிவருக்கு ஆதரவாக சிவன் நடப்பது கண்டு பொறுக்க முடியாத பார்வதி தேவி கோபித்துக்கொண்டு கௌதம முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தார்.

    இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்" என்ன என்று முனிவர் கேட்டார்.

    அப்போது பார்வதி தேவி ஈசனை விட்டு என்றைக்கும் பிரியாத "தபஸ்வியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும். அப்படியொரு விரதம் இருக்கிறதா?" என்று கேட்டார்.

    அதற்கு முனிவர். "தாயே.. இந்த பூலோகத்தில் ஒருவரும் அறியாத ஒரு விரதம் உண்டு. அந்த விரதத்திற்கு கேதாரீஸ்வரர் நோன்பு' என்று பெயர். அந்த விரதத்தினை அனுஷ்டித்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்" என்றார்.

    அதன்படி அம்பிகை, அந்த விரதத்தை முறை தவறாமல் கடைப்பிடித்தார். இதையடுத்து விரதத்தின் 21-ம் நாள் அன்று, தேவ கணங்கள் சூழ அம்பிகைக்கு சிவபெருமான் காட்சி அளித்தார். அதோடு தனது இட பாகத்தினை அம்பிகைக்கு அளித்து, அர்த்தநாரிஸ்வரராக கயிலாயம் சென்றார். அம்பிகையே விரதம் இருந்த காரணத்தால், இது 'கேதார கவுரி விரதம்' என்று அழைக்கப்படுகிறது.

    விரதம் இருப்பது எப்படி?

    கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம். புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் அமாவாசை வரைக்கும் தொடரும் விரதம் இது. தினமும் காலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து, சிவ பூஜை செய்ய வேண்டும்.

    நோன்பின் முதல் நாள் அன்று 21 நூல் கொண்டு 21 முடிச்சுகளால் கலசத்தினை சுற்றி அமைப்பர். இக்கலசமே சிவ-பார்வதியாக வழிப டப்படுகின்றது. இந்த விரதம் இருப்பவர்கள். தினமும் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் நைவேத்தியம் வைத்து அதனையே பிரசாதமாக உண்பார்கள்.

    21-ம் நாள் அன்று 21 அதிரசம், 21 வாழைப்பழம், 21 மஞ்சள். 21 வெற்றிலை, 21 பாக்கு, தேங்காய், சந்தனம், பூக்கள் வைத்து வழிபடுவர். 21 வகை காய்கறிகள் கொண்டு உணவினை சமைத்து அக்கம் பக்கத்தினருடன் சாப்பிட்டு விரதத்தினை முடிப்பர். இது பெண்களுக்கு மிகச் சிறப்பான விரத பூஜையாகும்.

    இப்பூஜை அவரவர் குடும்ப வழக்கப்படி சற்று மாறுபடும். அவரவர் பெரியோர்களிடம் கேட்டு அறிந்து அவர்கள் மூலம் எடுத்துச் செய்வது நல்லது.

    ஐப்பசி அமாவாசை அன்று செய்யும் பூஜையில் முடிந்தால் தங்கம் (நகை) சாத்தி, பட்டு வஸ்திரம் சுற்றி பூவால் அலங்கரித்து சந்தனம், குங்குமம் இட வேண்டும். விளக்கேற்றி வைக்க வேண்டும். மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல் சூட்டி, மஞ்சள்-குங்குமம் இட்டு விநாயகரை அர்ச்சிக்க வேண்டும். அதோடு இறைவனின் 16 நாமங்களைச் சொல்லி தூப தீப ஆராதனை செய்து நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

    பின்னர் அம்மி குழவியை நன்கு சுத்தம் செய்து அதற்கும் பலவித அலங்காரங்களை செய்து வில்வம். தும்பை போன்ற விசேஷ இலை, பூக்களையும் சேர்த்து சிவ நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும். தூப, தீப ஆராதனைகள் நைவேத்தியம் வைத்து அட்சதை போட்டு வணங்கி, வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலம் ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். வருவோருக்கு மஞ்சள். குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், 21-வது நாள் சிவபெருமான் காட்சி அளித்து வேண்டிய வரம் அளிப்பார் என்பது ஐதீகம்.

    Next Story
    ×