search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இறைவனின் அருட்கொடைகளைப் பெற...பிரார்த்தனை (நபி)
    X

    இறைவனின் அருட்கொடைகளைப் பெற...பிரார்த்தனை (நபி)

    • காலையிலும், மாலையிலும் இறைவனை துதிக்க வேண்டும்.
    • அருட்பாக்கியங்களை பிரார்த்தனை மூலம் இறைவனிடம் பெற வேண்டும்.

    காலையிலும், மாலையிலும் இறைவனை துதிக்க வேண்டும்; இறைவனை துதித்த பிறகு காலையிலும், மாலையிலும் நாம் பெற வேண்டிய 6 அருட்பாக்கியங்களை பிரார்த்தனையின் மூலம் இறைவனிடம் கேட்டுப்பெற வேண்டும். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    `இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் மாலைப்பொழுதிலும், நீங்கள் காலைப் பொழுதிலும் இறைவனை துதித்துக் கொண்டிருங்கள்'. (திருக்குர்ஆன் 30:17)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் காலைப்பொழுதை அடையும்போது, (இறைவனின் கிருபையால்) நாம் காலைப்பொழுதை அடைந்து விட்டோம். காலைப்பொழுது ஆட்சியும் அல்லாஹ்விற்கே. அவன் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து, வளர்த்துப் பரிபக்குவப்படுத்துபவன். இறைவா, நான் உன்னிடம் இந்த நாளின் நன்மைகள் யாவையும் வேண்டுகிறேன். மேலும், இந்த நாளின் வெற்றியையும் வேண்டுகிறேன்.

    மேலும், இந்த நாளின் உதவியையும் வேண்டுகிறேன். மேலும், இந்த நாளின் அபிவிருத்தியையும் வேண்டுகிறேன். மேலும் இந்தநாளின் நேர்வழியையும் வேண்டுகிறேன்' என அவர் பிரார்த்திக்கட்டும். மேலும், 'இறைவா! இந்த நாளில் ஏற்படும் தீங்கை விட்டும், இந்த நாளுக்கு பிறகு வரும் தீங்கை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும், அவர் மாலைப்பொழுதை அடையும் போதும் இவ்வாறே பிரார்த்திக்கட்டும்'. (அறிவிப்பாளர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி), நூல்:அபூதாவூத்)

    ஒருவர் மாலைப்பொழுதை அடையும் போது, அவர் தமது மாலை நேரப் பிரார்த்தனையில், காலை என்பதற்குப் பதிலாக மாலை என்ற வார்த்தையை மொழிந்து கொள்ள வேண்டும்.

    `இறைவனின் கிருபையால் நாம் மாலைப்பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சியும் அல்லாஹ்விற்கே உரியது. அவன் அகிலங்களைப் படைத்து பராமரிப்பவன். இறைவா! நான் உன்னிடம் இந்த இரவின் நன்மைகள் யாவையும், இரவின் வெற்றியையும், இரவின் உதவியையும், இரவின் பிரகாசத்தையும், இரவின் அபிவிருத்தியையும், இரவின் நேர்வழியையும் வேண்டு கிறேன்.

    மேலும், இறைவா! இந்த இரவில் ஏற்படும் தீங்கை விட்டும், இந்த இரவுக்கு பின்னால் வரும் தீங்கை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்' என பிரார்த்திக்க வேண்டும்.

    இறைநம்பிக்கையாளரின் காலைப் பொழுதும், மாலைப் பொழுதும் நன்றாக அமைய வேண்டுமானால் அவர் இவ்வாறு இறைவனிடம் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் பிரார்த்திக்க வேண்டும்.

    வெற்றி: வெற்றி என்பது நமது நோக்கங்கள், நமது எண்ணங்கள், நமது எதிர்பார்ப்புகள் இவற்றுக்கு கிடைக்கக்கூடிய வெற்றியாகும்.

    வெற்றியும் - தோல்வியும் வாழ்வின் இருபக்கங்கள். எனினும் வெற்றி என்பது இனிமையானது.

    "நீங்கள் வெற்றி அடையும் பொருட்டு இறைவனை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்" என்று திருக்குர்ஆன் (2:189) குறிப்பிடுகிறது.

    உதவி: உதவி என்பது எதிரிகளுக்கு எதிராக நமக்கு சாதகமாக அமைந்து விடுவது. அநியாயக்காரன், அட்டூழியம் புரிபவன், அடக்குமுறை செலுத்துபவன், ஆதிக்க வெறியுடன் நடப்பவன், வரம்பு மீறி நடப்பவன் போன்றோருக்கு எதிராக நமக்கு இறைவனின் புறத்திலிருந்து கிடைக்கும் உதவி என்பது எதிரியின் சூழ்ச்சியை விட்டும், எதிரியின் சதியை விட்டும் நம்மைக் காப்பாற்றும். இதையே, "இறைவா!

    உன்னையே நாங்கள் வணங்கு கிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்" என்று திருக்குர்ஆன் (1:5) கூறுகின்றது.

    பிரகாசம்: நமது அன்றாட வாழ்வு பிரகாசமாக, ஒளிமயமாக அமைய வேண்டுமானால் அந்நாளின் செயல்பாடும், அந்நாளின் அறிவும் சீராக அமைய வேண்டும்.

    "அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்பு வோருக்கு அல்லாஹ் அதன் மூலம் சாந்திக்கான வழி களைக் காண்பிக்கின்றான்.

    மேலும், அவன் தனது கட்டளையைக் கொண்டு இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கின்றான்" என்று திருக்குர்ஆன் (5:16) குறிப்பிடுகின்றது.

    அபிவிருத்தி: ஒவ்வொரு நாளும் நமது வாழ்வாதாரம் அபிவிருத்தியாக அமைந்துவிட்டால், நாம் யாரிடமும் கைகட்டி நிற்க வேண்டியதில்லை. அபிவிருத்தி என்பது பொருள் குறைவாக இருப்பினும் அதனால் ஏற்படும் பயன் அளப்பெரியதாக இருக்கும். ஒரு பொருளின் மீது நன்மை இருப்பது, அந்த நன்மை உறுதியாகவும், நிரந்தரமாகவும் இருப்பதாகும்.

    நேர்வழி: நேரான பாதையில் வாழ்க்கைப்பயணத்தை தொடர்வது, மனோ இச்சைகளை விட்டுவிடுவது பாக்கியமுள்ளதாகும். மேலும், இறைவனிடம் அனைத்து விதமான தீமைகள், தீங்குகள், சோதனைகள், குழப்பங்கள், நோய் நொடிகள், மனஅழுத்தங்கள், கவலைகள், கஷ்டங்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாவல் தேடி, அவற்றிலிருந்து விடுதலை கிடைத்தால் அந்நாளும் என்னாளும் பொன்னாளாகும்.

    இதையே திருக்குர்ஆன் (2:5) "இவர்கள் தான் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்" என்று குறிப்பிடுகிறது.

    நாமும் இறைவனின் வழியில் தினமும் காலையிலும், மாலையிலும் நடந்து, முறையாக இறைவனை வழிபட்டு, நன்மைகளைச்செய்து இறைவனின் அருட்கொடைகளை பெறுவோம்.

    Next Story
    ×