என் மலர்tooltip icon

    வழிபாடு

    • 10-ம் திருவிழா தேரோட்டம் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடக்கிறது.
    • இன்று காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதியுலா.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 5-ம்திரு விழாவில் குடைவருவாயில் தீபாராதனையும், 7-ம்திரு விழாவான நேற்று காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், காலை 9மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    மாலை 4.20 மணிக்கு சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.

    8-ம்திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி சண்முகர் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.

    மதியம் 12 மணிக்கு சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடக்கிறது. அன்று காலை 7மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது .

    11-ம்திருவிழாவான (13-ந் தேதி) தெப்ப திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கி றார்.

    12-ம்திருவிழாவான (14-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி,அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • தினமும் 14 மணிநேரம் பக்தர்களின் குறை தீர்த்தருளுகிறார் கொளஞ்சியப்பர்.
    • இத்தலத்தில் பிராது கட்டுதல் என்று ஒரு வழிபாடு இருக்கிறது.

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பஸ் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது மணவாள நல்லூர் கொளஞ்சியப்பர் கோவில். இத்தலத்திற்கு செல்ல விருத்தாசலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதிகள் இருக்கின்றன.

    இங்கே இன்னொரு வசதி, மற்ற கோவில்களைப் போல மதிய வேளையில் நடை சாத்தப்படாதது தான். காலை 6 முதல் இரவு 8 மணி வரை நடை திறந்தே இருக்கும். தினமும் 14 மணிநேரம் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் குறை தீர்த்தருளுகிறார் கொளஞ்சியப்பர்.

    விநாயகருக்கும் கொளஞ்சியப்பருக்கும் தனித்தனி விமானங்கள் உள்ளன. சுமார் 3 உயரம் கொண்ட பலி பீட வடிவம் கொண்ட கொளஞ்சியப்பரின் பீடத்தில் ஷடாட்சரம் பொறிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது.


    இந்த கொளஞ்சியப்பர் இப்பகுதி மக்கள் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் வாழும் பக்தர்களுக்கெல்லாம் மகா நீதிபதியாய் இருந்து நல்ல தீர்ப்பும் நல்வாழ்வும் வழங்கி அருள்கிறார்.

    உண்மைதான், இத்தல நாதன் முருகன் ஒரு மகா நீதிபதிதான். இத்தலத்தில் பிராது கட்டுதல் என்று ஒரு வழிபாடு இருக்கிறது. கோவிலின் பிராகாரத்தில் அதற்காக முனீஸ்வரன் சந்நதி அருகே ஒரு இடமும் இருக்கிறது.

    பிராது கட்டுவது என்றால் என்ன? கோவில் அலுவலகத்தில் மனு எழுதிட தாள் கிடைக்கிறது. அதில், 'மணவாளநல்லூர் அருள்மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு.......' என ஆரம்பித்து, 'நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன். இன்னாருடைய மகன். என் பெயர் இது..' என்பன போன்ற விவரங்களை எழுதி தனது குறை, கோரிக்கை என்ன என்பதையும் குறிப்பிட்டு, கொளஞ்சியப்பர் சன்னதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் தர வேண்டும்.


    அதை, அவர் கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, மனுவை விபூதி சேர்த்து பொட்டலமாக்கி ஒரு நூலால் கட்டித் தருவார். அதை முனியப்பர் சன்னதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலில் கட்ட வேண்டும். பிராது கட்டியவர்களின் கோரிக்கை பிராது கொடுத்த 90 நாட்களுக்குள் ஈடேறும் என்பது பக்தர்களின் அனுபவம்.

    குழந்தைப் பேறு, கடன் தொல்லை தீர, திருடு போன பொருள் கிடைக்க, ஏமாற்றப்பட்ட பணம் திரும்ப கிடைக்க, பிரிந்து இருக்கும் கணவன், மனைவி ஒன்று சேர, தீராத நோய் தீர, தொலைந்த கால்நடைகள் திரும்ப கிடைக்க, பங்காளி சண்டை, துரோகம் தொலைய, வேலை வேண்டி, வேலை மாற்றம் என பல கோரிக்கை களை பிராது சீட்டில் எழுதி, குமரன் குறைகளைத் தீர்த்தருள்வான் என்ற நம்பிக்கையோடு கட்டுகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புனித நீராடி, தங்களின் பாவங்களை போக்கிக் கொள்கிறார்கள்.
    • தங்களை புதுப்பித்துக் கொள்ளும் புண்ணிய நாள் மாசி மகம்.

    கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவேரி, சரயு, குமரி ஆகியன நவ நதிகள் என போற்றப்படுகின்றன. புண்ணிய நதிகளாக போற்றப்படும் இந்த நதிகளில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பதால் ஆண்டு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த நதிகளில் புனித நீராடி, தங்களின் பாவங்களை போக்கிக் கொள்கிறார்கள். இதனால் புனித நதிகளான இவைகளில் அதிக பாவங்கள் சேர்ந்தன.

    இதனால் கவலை அடைந்த இந்த நவ நதிகளும் சிவ பெருமானிடம் சென்று, தங்களிடம் சேர்ந்த பாவங்களை போக்கிக் கொள்ள என்ன வழி என கேட்டன. அதற்கு அவர், மக நட்சத்திரமும் பவுர்ணமியும் இணையும் மாசி மாதத்தில் கும்பகோணம் மகாமகம் குளத்தில் சென்று நீராடி உங்களின் பாவங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

    அதன்படி நவ நதிகளும் கும்பகோணம் மகாமகம் குளத்தில் எழுந்தருளி, தங்களின் பாவத்தை போக்கிக் கொண்டு, தங்களை புதுப்பித்துக் கொள்ளும் புண்ணிய நாள் இந்த மாசி மகம்.

    இதே போன்று வருண பகவானின் தோஷத்தை போக்கிய சிவ பெருமான், இந்த நாளில் யார் ஒருவர் நீர் நிலைகளில் நீராடுகிறார்களோ அவர்களின் பாவங்கள், தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என வரமளித்த நாளும் மாசி மகம் தான்.


    என்ன செய்ய வேண்டும்?

    மாசி மகம் அன்று வாய்ப்பு இருப்பவர்கள் கும்பகோணம் மகாமகம் குளத்திற்கு சென்று, அதிகாலையில் நீராடி, கோவிலுக்கு சென்று வழிபடலாம். கும்பகோணம் செல்ல முடியாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஆறு, கோவில் குளங்கள், நீர் நிலைகளில் நீராடலாம்.

    மாசி மகத்தன்று அனைத்து நீர் நிலைகளிலும் இந்த புண்ணிய நதிகள் எழுந்தருள்வதாக ஐதீகம். அதனால் இந்த நீர்நிலைகளில் நீராடி, கும்பகோணம் குளத்தில் நீராடி பலனை பெறலாம்.

    அதிகாலையில் நீராடிய பிறகு, அதே நீர் துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டும்.

    திதி, அமாவாசை தர்ப்பணம் வழக்கமாக கொடுப்பவர்களாக இருந்தாலும், மாசி மகத்தன்று தவறாமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதன் மூலம் இதுவரை அமாவாசை நாளில் விரதம் இருந்து திதி கொடுக்க தவறிய பாவம், தர்ப்பணம் கொடுக்கும் போது தெரிந்தும், தெரியாமல் செய்த பாவங்கள் என ஏழு தலைமுறைகளிலும் தெரியாமல் செய்த பாவங்கள் கூட தீரும்.

    • இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்தம்.
    • ஸ்ரீ இம்மையில் நன்மை தருவார் திருக்கல்யாணம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-26 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: ஏகாதசி காலை 10.43 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: பூசம் பின்னிரவு 3.07 மணி வரை பிறகு ஆயில்யம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்தம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீ இம்மையில் நன்மை தருவார் திருக்கல்யாணம். பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு விஷணுவாம்சம் காட்சி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கல்யாணம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் திருவீதிஉலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலுதர்பார் காட்சி. திருவிடை மருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் அருகில் 2-ம் நவ திருப்பதி திருவரகுணமங்கை என்கிற நத்தத்தல் மூலவர் விஜயாசன பெருமாள் மற்றும் தாயார்கள் வரகுண வல்லித்தாயார், ஸ்ரீ வரகுணமங்கைக்கு காலையில் சிறப்பு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுமை

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-வரவு

    கடகம்-வெற்றி

    சிம்மம்-நட்பு

    கன்னி-களிப்பு

    துலாம்- செலவு

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- பாராட்டு

    மகரம்-பொறுப்பு

    கும்பம்-நிறைவு

    மீனம்-முயற்சி

    • கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இன்று மாலை சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.

    7-ம்திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்ந்தார்.

    அங்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனைக்கு பிறகு மாலை 4.20 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    8-ம்திருவிழாவான நாளை(திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம்திருவிழா தேரோட்டம் 12-ந் தேதி (புதன்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடக்கிறது. 11-ம் திருவிழாவான 13-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    12-ம்திருவிழாவான 14-ந்தேதி மாலையில் சுவாமி,அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
    • தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்ப திருவிழா இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

    இதற்காக பல்வேறு வகையான மலர்கள் மற்றும் மின்விளக்கு அலங்காரம் செய்து தெப்பல் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இன்று மாலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் அங்குள்ள கோவில் புஷ்கரணியில் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. தெப்ப உற்சவத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் கோவிலில் நடைபெறும் சகஸ்ர தீப அலங்கார சேவைகளும், 11, 12, 13 ஆகிய தேதிகளில் ஆர்ஜீத சேவைகள் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    திருப்பதியில் நேற்று 74,646 பேர் தரிசனம் செய்தனர். 30 769 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ 3.52 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • வாகன ஓட்டிகள் யானைகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வனத்துறை அறிவிப்பு.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது மலைப்பாதையில் 7-வது மைல் அருகே திடீரென வனப்பகுதியில் இருந்து யானை கூட்டம் சாலையையொட்டி வந்தது.

    இதைப்பார்த்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். உடனே இதுகுறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த விஜிலென்ஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் வாகன ஓட்டிகள் யானைகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது. செல்போன்களில் படம் பிடிப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் யானைகள் நடைபாதை வழியாகவோ அல்லது வாகனங்கள் செல்லும் மலைப்பாதை வழியாகவோ வராத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு திருமஞ்சனம்.
    • திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-25 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: தசமி காலை 11.24 மணி வரை. பிறகு ஏகாதசி.

    நட்சத்திரம்: புனர்பூசம் பின்னிரவு 2.50 மணி வரை. பிறகு பூசம்.

    யோகம்: சித்தயோகம்.

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு திருமஞ்சனம். காரமடை ஸ்ரீஅரங்கநாதர் கருட வாகனத்தில் உலா. காங்கேயம் ஸ்ரீமுருகப்பெருமான் ரதோற்சவம். குடந்தை ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கைலாச வாகனத்திலும் அம்பாள் ஏக சிம்மாசனத்திலும் பவனி. குலசேகர ஆழ்வார் திருநட்சத்திர வைபவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் வெங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீகாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீஅங்காரகருக்கும் ஸ்ரீசெல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செயல்

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-தேர்ச்சி

    கடகம்-அமைதி

    சிம்மம்-பாசம்

    கன்னி-பண்பு

    துலாம்- சாந்தம்

    விருச்சிகம்-புகழ்

    தனுசு- உயர்வு

    மகரம்-சுகம்

    கும்பம்-கவனம்

    மீனம்-சுபம்

    • குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் திருமஞ்சனம்.
    • காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சிறிய திருவடி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-24 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி நண்பகல் 12.32 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: திருவாதிரை பின்னிரவு 3.01 மணி வரை

    பிறகு புனர்பூசம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் திருமஞ்சனம். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சிறிய திருவடி புறப்பாடு. மதுரை இம்மையில் நன்மை தருவார் ரிஷப வாகனத்தில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. திருவெண்காடு, திருவொற்றியூர், திருத்தணி கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடு. குடந்தை ஸ்ரீ சக்கரபாணிப் பெருமாள் ஸ்ரீ அனுமன் வாகனத்தில் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு திருமஞ்சனம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவர், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-களிப்பு

    ரிஷபம்-கடமை

    மிதுனம்-கண்ணியம்

    கடகம்-நலம்

    சிம்மம்-ஓய்வு

    கன்னி-புகழ்

    துலாம்- மாற்றம்

    விருச்சிகம்-திடம்

    தனுசு- ஈகை

    மகரம்-நன்மை

    கும்பம்-உதவி

    மீனம்-வெற்றி

    • 10 ஆயிரம் பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வழிபட்டனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே காட்டு நெமிலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா நடைபெற்றது.

    கோவிலில் இருந்து அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்டு சிங்க வாகனத்தில் மயானம் நோக்கி புறப்பட்ட போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வழிபட்டனர்.

    இதனை தொடர்ந்து அங்காளம்மன் மயானத்திற்கு சென்ற பின்னர் அங்கு ஆடு மற்றும் கோழி பலியிடப்பட்டது. பின்னர் படையல் இடப்பட்ட சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    மயானத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான திருமணமான புதுமண பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் முட்டிப்போட்டு குழந்தை வரம் கேட்டு வழிபட்டனர்.

    அவர்களுக்கு கோவில் பூசாரி எலுமிச்சை பழம் மற்றும் அங்காளம்மனுக்கு படையலிடப்பட்ட ரத்த சோறு ஆகியவற்றை வழங்கினார்.

    இதே போல் கடந்த வருடங்களில் குழந்தை இல்லாமல் வேண்டிக் கொண்ட பெண்கள் குழந்தை பிறந்தவுடன் மயானத்திற்கு வந்து குழந்தை வரம் கொடுத்த அங்காளம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குழந்தையை சூறை விட்டு பின்னர் கோவில் பூசாரியிடம் காணிக்கை வழங்கி தங்களது குழந்தைகளை பெற்று சென்றனர்.

    இதேபோல் சுடுகாட்டில் தங்களது முன்னோர்களுக்கு அவர்கள் உயிரோடு இருந்த போது விரும்பி சாப்பிட்ட பழங்கள், கொழுக்கட்டை, சுண்டல், கிழங்கு உணவு பொருட்கள் மட்டுமின்றி குவாட்டர் பாட்டில்கள் , குளிர்பானங்கள், பீடி, சிகரெட் உள்ளிட்டவைகள் வைத்தும் குடும்பத்தோடு வழிப்பட்டனர்.

    மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு விழாக் குழுவின் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குரு பெயர்ச்சி, எப்போது வருகிறது?
    • எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

    ரிஷப ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான் மே மாதம் ரிஷப ராசியில் இருந்து இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மிதுன ராசிக்கு செல்லும் குரு பெயர்ச்சி, எப்போது வருகிறது மற்றும் 2025 குரு பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

    ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாகும். இதில் முழுமையான சுப கிரகம் என்று கூறப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வார்.

    தற்பொழுது ரிஷப ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான் மே மாதம் ரிஷப ராசியில் இருந்து இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

    மிதுன ராசிக்கு செல்லும் குரு பெயர்ச்சி, எப்போது வருகிறது மற்றும் 2025 குரு பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்?


    குரு பெயர்ச்சி

    மே மாதம் 15-ந் தேதி வியாழக்கிழமை அன்று இரவு 10:30 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி நடக்கிறது.

    குரு பெயர்ச்சி காலத்தின் போது, எப்போதுமே சில மாதங்கள் குரு பகவான் வக்கிரமாகி பின்னோக்கி செல்வார். ஆனால், 2025 குரு பெயர்ச்சியில், குரு பகவான் வக்கிரம் அடையாமல், அதிசாரம் பெற்று, ,முன்னோக்கி செல்கிறார். அதாவது, குரு பகவான், கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

    குரு அதிசார பெயர்ச்சி 2025 - அக்டோபர் முதல் டிசம்பர் வரை

    குரு பெயர்ச்சி நடக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தையும் நற்பலங்களையும் வாரி வழங்கும். ஆனால் அதே நேரத்தில் 12 ராசிகளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் நன்மைகளை செய்யும்.

    வருமானம், திருமணம், குழந்தை, வேலை, தொழில் வளர்ச்சி, தொழில் லாபம் உள்ளிட்டவற்றை எந்தெந்த ராசிகளுக்கு கொடுக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.


    சாதகமாக இருக்கும் 5 ராசிகள்

    ரிஷப ராசி - பண வரவு, தொழில் வளர்ச்சி

    சிம்ம ராசி - லாப குரு, லாபத்தை கொட்டிக் கொடுக்கும்

    துலாம் ராசி - பாக்கிய ஸ்தானத்தில் குரு, அதிர்ஷ்டம் மேலோங்கும்

    தனுசு ராசி - திருமணம் கைகூடும், வாழ்க்கைதுணையால் அதிர்ஷ்டம், நினைத்தது நடக்கும்

    கும்ப ராசி - தொட்டதெல்லாம் துலங்கும்

    குரு பெயர்ச்சி 2025 எதிர்மறை பலன்களைத் தருமா?

    குறிப்பிட்ட இடங்களில் குரு பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் நன்மைகளை கொடுக்கும். அதே நேரத்தில், குருவின் பார்வையால் 12 ராசிகளுக்கும் குறிப்பிட்ட இடங்களுக்கான நற்பலன்களும் கிடைக்கும் என்பதால் குரு பெயர்ச்சி முழுவதுமாக ஒரு சில ராசிகளுக்கு கெடு பலன்களைத் தரும் என்று நினைப்பது தவறு.

    • கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப்பெயர் எதுவும் கிடையாது.
    • மாசி மாதத்தில் நடைபெறும் 10 நாள் திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது.

    மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுபவர், பரசுராமர். இவரால் 108 சிவாலயங்களும், 108 பகவதி அம்மன் கோவில்களும் நிறுவப்பட்ட இடம்தான், இன்றைய கேரள தேசம். இதனை 'கடவுளின் தேசம்' என்றும் சொல்வார்கள்.

    கேரளாவில், ஏராளமான பகவதி அம்மன் கோவில்கள் இருக்கின்றன. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப்பெயர் எதுவும் கிடையாது. அந்த அம்மன்கள் அனைவரும் அந்தந்த ஊர் பெயருடன் இணைத்து பகவதி என்றே அழைக்கப்படுகின்றனர்.


    கேரளாவில் உள்ள ஒவ்வொரு பகவதி அம்மன் கோவில்களுக்கும் தனிச் சிறப்பு இருந்தாலும், திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றுக்கால் என்னும் இடத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் உலகப் புகழ்பெற்றதாக விளங்குகிறது.

    இந்தக் கோவில் மட்டுமின்றி, அங்கு வீற்றிருந்து அருளும் ஆற்றுக்கால் பகவதி அம்மனும் தன்னுடைய அருள் சக்திக்கு சிறப்பு பெற்றவராக திகழ்கிறார். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பொங்கல் திருவிழா, உலக பிரசித்திப் பெற்றதாகும்.

    இந்த நிகழ்வில் பல லட்சம் பக்தர்கள், அதுவும் பெண்கள் மட்டுமே திரண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவது தனிச் சிறப்பு.

    கோவில் வரலாறு

    சிலப்பதிகாரத்தின் நாயகியும், கற்புக்கரசியுமான கண்ணகியின் அவதாரம்தான், ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்படுகிறது. தன் கணவன் கள்வன் இல்லை என்பதை நிரூபித்த கண்ணகி, மதுரையை தீக்கு இரையாக்கினாள்.

    பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்தின் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்குச் செல்லும் வழியில் ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினாள். அதன் நினைவாகவே அங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டதாம்.

    பராசக்தியின் பக்தர் ஒருவர், கிள்ளி என்ற ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய ஒரு சிறுமி வந்தாள். அந்த பக்தர், சிறுமியை அன்னையின் அம்சமாகவே பார்த்தார். பக்தர் அருகில் வந்த சிறுமி, "ஐயா.. என்னை இந்த ஆற்றின் மறு கரையில் கொண்டு போய் விட முடியுமா?" என்று கேட்டாள்.

    ஆனால் அந்தச் சிறுமியை விட்டுப் பிரிய மனம் இல்லாத பக்தர், அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, விருந்தளித்து உபசரிக்க எண்ணினார். அதை அந்த சிறுமியிடம் சொல்ல நினைக்கும் போதே, அந்தச் சிறுமி மறைந்து போனாள். வந்தது அம்மன்தான் என்பதை, அந்த பக்தர் உறுதிசெய்தார்.

    அன்று இரவு அந்த பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, "தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் மூன்று கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து என்னை குடியமர்த்துங்கள்" என்று கூறினாள்.

    மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்குச் சென்ற பக்தர், அங்கு மூன்று கோடுகள் இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தார். பின்னர் அந்த இடத்தில் ஒரு சிறிய கோவிலை கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.


    இந்தக் கோவிலே நாளடைவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக எழுச்சியடைந்தது என்கிறது இன்னொரு கோவில் வரலாறு.

    பொங்கல் திருவிழா

    இந்த ஆலயத்தில் மாசி மாதத்தில் நடைபெறும் 10 நாள் திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்தத் திருவிழா, 10-ம் நாள் குருதி தர்ப்பண விழாவுடன் நிறைவுபெறும்.

    முதல் நாள் விழாவில் கண்ணகி கதையை பாடலாகப் பாடி, பகவதி அம்மனை குடியிருத்துவர். கொடுங்கல்லூர் பகவதியை ஆவாகனம் செய்து (அழைத்து வந்து) இந்த பத்து நாட்களும் இங்கே குடியிருக்கச் செய்தவதாக ஐதீகம்.

    மாசித் திருவிழாவின் 9-ம் நாள் விழாவாக பொங்கல் வைக்கப்படும். மதுரையை தீக்கிரையாக்கி வந்த கண்ணகி தேவியை, மன அமைதி கொள்ளச் செய்வதற்காக, பெண்கள் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்வதாக இதற்கு காரணம் சொல்லப்படுகிறது.

    மகிஷாசுர வதம் முடிந்து பக்தர்கள் முன் தோன்றிய தேவியை, பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து நைவேத்தியம் படைத்து வரவேற்றனர் என்ற மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது.

    இந்த நிகழ்வை மையப்படுத்திதான், மாசித் திருவிழாவின்போது, பொங்கல் வைக்கும் வைபவம் நடத்தப்படுகிறது.


    பொங்கல் திருவிழா அன்று, கோவிலின் முன் பக்கம் அமைக்கப்பட்டிருக்கும் பந்தலில் அமர்ந்து கண்ணகி வரலாற்றில் பாண்டியன் தன் தவறை உணர்ந்து மரணிக்கும் பாடல் பாடப்படும். அது முடிந்ததும் கோவில் தந்திரி கருவறையில் இருந்து தீபம் ஏற்றி வந்து, மேல் சாந்தியிடம் (தலைமை பூசாரி) வழங்குவார்.

    அவர் கோவில் திடப்பள்ளியில் உள்ள பொங்கல் அடுப்பில் தீ மூட்டுவார். பின்னர் அந்த தீச்சுடரை சக பூசாரியிடம் வழங்குவார். அவர் கோவிலின் முன்பு உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டுவார். அதைத் தொடர்ந்து மற்ற அனைத்து பொங்கல் அடுப்புகளிலும் தீ மூட்டப்படும்.

    இதற்கான அறிவிப்பாக செண்டை மேளமும், வெடி முழக்கமும், வாய் குரவையும் ஒலிக்கப்படும். ஏனெனில் கோவிலைச் சுற்றி சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவில், அதாவது திருவனந்தபுரம் நகரில் சாலை ஓரங்கள், வீட்டு வளாகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தபடி பெண்கள் பொங்கல் வைப்பார்கள்.

    ஒரு ஊரில் ஒரே நேரத்தில் பல லட்சம் பெண்கள் பொங்கல் வைக்கும் சம்பவம் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. (இந்த பொங்கல் வைக்கும் வைபவம், கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

    முதன் முறையாக 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்தது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்தது. பின்னர் 2009-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் இந்த சாதனை 30 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்ததாக பதிவானது.)

    பொங்கல் வைக்கும் நிகழ்வு முடிந்ததும், பிற்பகலில் குறிப்பிட்ட வேளையில் கோவிலில் இருந்து நியமனம் செய்யப்பட்ட பூசாரிகள், புனித நீர் தெளித்து பொங்கல் நைவேத்தியம் செய்வார்கள். அப்போது வானத்தில் இருந்து விமானம் மூலமாக மலர் தூவப்படும்.


    அன்றைய தினம் இரவு ஆற்றுக்கால் பகவதி அம்மன், மணக்காடு என்ற இடத்தில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு எழுந்தருள்வார். அம்மன் ஊர்வலம் செல்லும் வீதி அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

    ஒவ்வொரு வீட்டிலும் குத்துவிளக்கேற்றி அம்மனை வரவேற்பார்கள். மறுதினம் அதிகாலை சாஸ்தா கோவிலில் பூஜை முடிந்ததும், அங்கிருந்து ஆற்றுக்கால் பகவதி அம்மன் தன் இருப்பிடம் திரும்புவார்.

    இந்த ஆண்டுக்கான பொங்கல் வைக்கும் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த விழா வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பொங்கல் வைக்கும் நிகழ்வு, வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    ஆலய அமைப்பு

    இந்த ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவில் ஸ்ரீசக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்திருக்கிறார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ-பார்வதி ஆகியோரின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

    கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. நுழைவு வாசலின் மேல் பகுதியில் ஆற்றுக்கால் பகவதி அம்மன், தன் நான்கு கரங்களில் கத்தி, கேடயம், சூலம், அட்சய பாத்திரம் தாங்கியும், அரக்கி ஒருத்தியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்திலும் அருள்பாலிக்கும் சுதைச் சிற்பம் உள்ளது.

    கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூல விக்ரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. மூல விக்ரகத்தின் கீழே அபிஷேக விக்ரகம் உள்ளது.

    அம்மனின் கருவறை 'ஸ்ரீகோவில்' என்று அழைக்கப்படுகிறது. வளாகத்தைச் சுற்றிலும் கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் உள்ளன.


    தாலிப்பொலி

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெறும் நாள் அன்று காலையில், 'தாலிப்பொலி' என்ற நிகழ்ச்சி நடைபெறும். சிறுமிகள் பலரும் தங்களை அலங்கரித்துக் கொண்டு அம்மன் சன்னிதியை நோக்கி குடும்பத்துடன் வந்து அம்மனை பூஜித்து திரும்புவார்கள்.

    இதில் பங்கேற்கும் அனைத்து சிறுமிகளும் புத்தாடை அணிந்து, தலையில் மலர் கிரீடம் சூடி, கையில் தாம்பாளம் ஏந்தி, அதில் அம்மனை வழிபடுவதற்காக பூஜை பொருட்கள் வைத்து, சிறு தீபம் ஏற்றிக் கொண்டு வருவார்கள்.

    இவ்வாறு செய்வதால், சிறுமிகளுக்கு நோய், நொடிகள் வராது. அவர்களது அழகும், செல்வமும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    இந்த ஆலயம் தினமும் காலை 4.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை சிட்டி பஸ்நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆற்றுக்கால் திருத்தலம்.

    ×