என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ஆன்மீகப் பாதையில் இருப்பவர், வெளிப்புறச் சூழல்களின் காரணமாக தடம் மாறிப் போகாமல் இருப்பதற்கு, விரதம் ஒரு எளிய வழியாகும்.
    சத்குரு: மனித உடல், 40 முதல் 48 நாட்களுக்கு ஒருமுறை ஒருவித சுழற்சிக்கு உள்ளாகிறது. இந்த 48 நாட்களை ஒரு “மண்டலம்“ என்கிறோம். இந்த சுழற்சியில், மூன்று குறிப்பிட்ட நாட்களில், உடலுக்கு உணவு தேவைப்படுவதில்லை. இந்த 3 நாட்கள் எவை என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடலாம். மேலும், அத்தகைய நாட்கள் ஒரே காலஅளவுள்ள இடைவெளியில்தான் ஏற்படும் என்றும் சொல்ல இயலாது. நீங்கள் இந்த நாட்கள் எவை என்று கண்டறிந்து, உங்கள் உடலுக்கு உணவு கொடுக்காமல் விட்டுவிடுங்கள். இந்த எளிமையான முறையால், ஆரோக்கியம் சம்பந்தமான பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

    இவ்வளவு மாவு சத்துக்கள், இவ்வளவு புரதங்கள், இவ்வளவு உயிர் சத்துக்களைச் சாப்பிட வேண்டும் என்பன போன்ற முட்டாள்தனமான கோட்பாடுகளை விட்டுவிட்டால், உடலமைப்பின் சுழற்சியை கவனித்து அறிந்துகொள்ள முடியும். தங்கள் உடல் சொல்வதை கேட்பதில் கவனம் செலுத்தினால், இந்த மூன்று நாட்களையும் பெரும்பாலான மனிதர்கள் சுலபமாக அறிந்து கொள்வார்கள்.

    அதனால்தான், 48 நாட்களில் மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். யாரோ ஒருவர் தன் உடலமைப்பைக் கூர்ந்து கவனித்து, அதிலிருந்து இந்தக் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், மக்களுக்கு இந்த விழிப்புணர்வு இல்லாததால், அவர்கள் ஏகாதசியைத் தேர்ந்தெடுத்தனர். கவனித்துப் பார்த்தால், 48 நாட்களில் மூன்று ஏகாதசிகள் வரும். இது அவர்கள் சொன்ன கணக்கோடு ஒத்துப் போய்விடுகிறது.

    ஏகாதசி என்றால் பௌர்ணமிக்குப் பிறகு 11 ஆம் நாள், மற்றும் அமாவாசைக்குப் பிறகு 11 ஆம் நாள் என்றும் பொருள்.

    இந்தப் பூமியே அந்நாளில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கிறது. எனவே, அன்று நாம் நம் உடலை இலகுவாகவும் தயாராகவும் வைத்திருந்தால், நம் விழிப்புணர்வு உள்நோக்கித் திரும்பும். அந்நாளில் நம் உள்நிலையின் கதவுகளைத் திறப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அன்று நீங்கள் வயிறு நிரம்ப உணவு உட்கொண்டு, விழிப்புணர்வின்றி சோம்பலாக இருந்தால், உள்நிலையை நீங்கள் கவனிக்க மாட்டீர்கள். எனவே விழிப்புடன் இருப்பதற்கும், உடலை தூய்மைப்படுத்துவதற்கும், அன்று ஒரு நாள் உணவருந்தாமல் இருக்கவேண்டும்.

    நீங்கள் முதல் நாள் இரவு உணவருந்தி இருப்பீர்கள். ஏகாதசி அன்று இரவுதான் அடுத்தவேளை உணவு அருந்தவேண்டும். உங்களால் உணவருந்தாமல் செயல்பட முடியாவிட்டால் பழங்களை உணவாக எடுக்கலாம். அது வயிற்றை இலகுவாக வைத்திருக்கும்.



    உணவைக் கட்டாயப்படுத்தி துறப்பதல்ல நோக்கம். எல்லாவற்றிலும் விழிப்புணர்வோடு செயல்புரிவதுதான் நோக்கம். நாம் சாப்பிடுவதை கட்டாயத்தினால் செய்யாமல், தேர்ந்தெடுத்துச் செய்கிறோம். சில இந்திய மொழிகளில் ‘ஃபல்’ என்றால் ‘பழம்‘ என்று பொருள். ஆனால், ‘ஃபல்’ என்பதை ‘பல’ என்று பொருள் கொண்டு, இன்று தென்னிந்தியாவில் ஏகாதசியன்று, ‘பல ஆகாரம்‘ அதாவது ‘பலகாரம்‘ செய்து சாப்பிடுகிறார்கள்.

    மக்கள், தாம் அன்றாடம் சாப்பிடும் சாதம், சாம்பார், போன்றவற்றைச் சாப்பிடாமல், அதற்கு பதிலாக, வகை வகையான உணவுகளை, பெரும்பாலும் எண்ணெயில் வறுத்த உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று நினைத்துவிட்டனர். அன்றுதான் அத்தகைய உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். உங்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்பதால் ‘சரி... பழம் மட்டும் சாப்பிடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், மக்கள் ‘பல’ என்ற வார்த்தையை வேறு அர்த்தத்தில் புரிந்துகொண்டு, அன்றைய தினம் ஒரு கட்டு கட்டிவிடுகிறார்கள்.

    ஆன்மீகப் பாதையில் இருக்கும்போது, மிகச் சிறிய வசதியின்மை வந்தாலும், பெரும்பாலான மக்கள் தம் பாதையில் துவண்டுவிடுவார்கள். எனவே, ஆன்மீகப் பாதையில் இருப்பவர், வெளிப்புறச் சூழல்களின் காரணமாக தடம் மாறிப் போகாமல் இருப்பதற்கு, விரதம் ஒரு எளிய வழியாகும். விரதம் இருக்கும்போது உங்களுக்குப் பசித்தால், படுத்துத் தூங்குவதற்கு பதிலாக, விழிப்புடன் செயலாற்றுங்கள். இன்னும் அதிகமாக பசிக்கும்போது, விழிப்புடன் இருந்து, ஆன்மீகப் பயிற்சிகளில் கவனத்தைச் செலுத்துங்கள். இதுதான் பயிற்சியின் மிக முக்கிய அம்சம். இதனால், வெளிப்புறச் சூழல்கள் உங்களை தடம் புரளச் செய்யாது.
     
    விரதத்தின்போது, தாகம் எடுத்தால், தண்ணீர் குடிக்கலாம். களைப்பாக இருந்தால், குடிக்கும் தண்ணீரில் சில சொட்டு தேனையோ, எலுமிச்சை சாறையோ கலந்து குடிக்கலாம். அது உங்கள் நலனைப் பார்த்துக் கொள்ளும். 24 மணிநேரம் உண்ணாவிரதம் இருப்பது உடலுக்கு கஷ்டமான விஷயமே அல்ல. உங்கள் உடலுக்கு அத்தனை வலிமை இல்லையென்றால், உடலில் ஏதோ பிரச்சனை இருப்பதாக அர்த்தம். ஒரு வலிமையான உடலால் அத்தனை நேரம் உணவின்றி இருக்கமுடியும்.

    விரதம் இருக்கும்போது, உங்கள் உடல் மிகவும் சிரமப்பட்டால், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் உடல்ரீதியாக பலமில்லாதவராக இருக்கலாம். அல்லது உங்களுக்கு வேறு ஏதாவது பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால், விரதம் இருப்பதில் வெறும் மனப்போராட்டங்கள் இருந்து, வடைகளும் போண்டாக்களும் விண்கற்களைப் போல வந்து உங்களைத் தாக்கிக் கொண்டிருந்தால்...? அப்போது நீங்கள் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும்!

    முருகப்பெருமானுக்கு உரிய மூன்று விரதங்களை நாம் முடிந்தவரை அனுஷ்டித்தால், அனைத்து நன்மைகளையும் பெற்று, மகிழ்ச்சியாக வாழலாம்.
    முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் பிரதானமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

    வார விரதம்; நட்சத்திர விரதம்; திதி விரதம்

    வார விரதம் என்பது செவ்வாய்கிழமைகளில் அனுஷ்டிப்பது;

    நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது;

    திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது.

    வார விரதம்: கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.

    விரதம் இருக்கும் முறை: செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும் என்பது உறுதி.



    நட்சத்திர விரதம்: கார்த்திகை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுவது நட்சத்திர விரதம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து தோன்றிய முருகப் பெருமானை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக, சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் அளித்தார். அந்த வரத்தின்படி கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள், நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்புற வாழலாம்.

    விரதம் இருக்கும் முறை: கார்த்திகை நட்சத்திரத்துக்கு முதல்நாள் வரும் பரணி நட்சத்திரத்தன்று இரவில் உணவு உண்ணாமல் இருந்து, மறுநாள் அதிகாலையில் நீராடி, அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடவேண்டும். அன்று பகல் முழுவதும் விரதம் இருந்து முருகப் பெருமானின் ஸ்தோத்திர நூல்களைப் பாராயணம் செய்யவேண்டும். மாலையில் வீட்டில் உள்ள முருகப் பெருமான் திருவுருவப் படத்தை அலங்கரித்து, தூப தீபம் காட்டி, அரிசியும், துவரம்பருப்பும், சர்க்கரையும் சேர்த்துச் செய்த பொங்கலை நைவேத்தியம் செய்து, அந்தப் பொங்கலையே பிரசாதமாக உண்டு விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். தேவரிஷிகளில் முதன்மையானவராகப் போற்றப்படும் நாரத மகரிஷி, விநாயகப் பெருமானின் உபதேசப்படி கார்த்திகை விரதத்தை அனுஷ்டித்தே முதன்மைச் சிறப்பைப் பெற்றார்.

    திதி விரதம்: வளர்பிறை சஷ்டி திதியில் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. மாதம்தோறும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தியானித்து, நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, விரதத்தைத் தொடங்கவேண்டும். அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும்.



    வீட்டுக்குத் திரும்பியதும் பகல் முழுவதும் விரதம் இருக்கவேண்டும். முடிந்தால் மாலையில் மறுபடியும் ஒருமுறை கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வீட்டுக்குத் திரும்பி, விரதத்தை நிறைவு செய்யலாம். தொடர்ந்து ஆறு சஷ்டிகள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாதம்தோறும் வரும் சஷ்டி விரதத்தைக் கடைப்பிடிக்க இயலாதவர்கள்கூட, ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விரதத்தைத் தவறாமல் அனுஷ்டித்தால், முருகப் பெருமானின் அருளால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களையும் அடையலாம்.

    கந்த சஷ்டி விரதம்  இருக்கும் முறை: ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை பிரதமை தொடங்கி ஆறு நாள்கள் விரதம் இருக்கவேண்டும். தினமும் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டில் உள்ள பூஜையறையில் பூர்ணகும்பம் வைத்து, அதில் முருகப் பெருமானை உரிய மந்திரங்களால் ஆவாஹணம் செய்து, அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பகல் முழுவதும் விரதம் இருந்து முருகப் பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யவேண்டும். பகலில் ஒருவேளை மட்டும் உணவு கொள்ளலாம். இப்படி ஆறுநாள்கள் விரதம் இருக்கமுடியாதவர்கள், சஷ்டி அன்று மட்டுமாவது விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால், அனைத்து நன்மைகளையும் பெறலாம்.

    குழந்தை வரம் தரும் விரதங்களில் முதன்மையான விரதமாக கந்த சஷ்டி விரதமே போற்றப்படுகிறது. அதனால்தான், 'சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்'  என்று கூறுகிறார்கள். சஷ்டியில் விரதம் இருந்தால், கருப்பையில் குழந்தை வரும் என்பதே இதன் பொருள்.

    முருகப் பெருமானுக்கு உரிய இந்த மூன்று விரதங்களை நாம் முடிந்தவரை அனுஷ்டித்தால், அனைத்து நன்மைகளையும் பெற்று, மகிழ்ச்சியாக வாழலாம்.
    மனிதனும், கெட்ட சிந்தனைகள் தம்மைத் தாக்கும் போது, தன் மனதைக் கட்டுப்படுத்தி, நன்மை பெற வேண்டும் என்று உணர்த்த தோன்றியதே கூர்ம அவதார நோக்கமாகும்.
    21-6-2017 கூர்ம ஜெயந்தி

    தேவலோகத்தில், தேவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் கந்தர்வர்கள் மற்றும் வித்யாதரர்கள். இவர்களில் வித்யாதரர்கள் என்போர், கல்வி மற்றும் கலைகளில் சிறப்புற்று விளங்குபவர்கள். ஒருமுறை, வித்யாதரப் பெண் ஒருவர், திருமாலையும், லட்சுமியையும் துதித்து பாடி வீணை மீட்டினாள். இதனால் மனம் மகிழ்ந்த லட்சுமி தேவி, தான் சூடியிருந்த மணம் மிகுந்த மாலை ஒன்றை, அவளுக்கு பரிசாக வழங்கினாள்.

    அதை பிரசாதமாக ஏற்ற வித்யாதரப் பெண், அங்கிருந்து புறப்பட்டாள். வழியில் அந்தப் பெண், துர்வாச முனிவரை சந்தித்தாள். துர்வாச முனிவர், லட்சுமி தேவியின் தீவிர பக்தன் என்பதால், தேவி தனக்கு அளித்த மணம் மிகுந்த மாலையை, வித்யாதர பெண், துர்வாச முனிவருக்கு வழங்கினாள். அதை வாங்கிய துர்வாசர் அதை தன்னுடைய சடா முடியில் சூடிக்கொண்டார்.

    துர்வாச முனிவர் சிறிது தூரம் சென்றபோது, எதிரில் யானையின் மீது வந்து கொண்டிருந்தான் இந்திரன். அவனுக்கு அந்த மாலையைக் கொடுத்தார் துர்வாசர். அவன் அதை கண்களில் ஒற்றி, யானையின் மத்தகத்தின் மீது வீசினான்.

    மாலை, யானையின் மீது விழுந்ததும், அதற்கு ஞானம் வந்து, தவமிருக்க காட்டிற்கு ஓடியது. ஓடிய வேகத்தில், மாலை கீழே விழுந்து யானையின் காலடியில் மிதிபட்டது. அதைப் பார்த்ததும், துர்வாசருக்கு கோபம் வந்து விட்டது.

    ‘தேவேந்திரா! செல்வச் செருக்கில், நான் அளித்த புனிதமான மாலையின் பெருமையை உணராமல், யானை மீது வீசி விட்டாய். அது தரையில் விழுந்து புனிதம் கெட்டு விட்டது. உன் இத்தகைய அலட்சிய மனோபாவத்திற்காக, நீயும், தேவர்களும் உங்கள் பலத்தை இழந்து துன்புறுவீர்கள்’ என்று சாபமிட்டார்.

    பலமிழந்த இந்திரனும், தேவர்களும் அசுரர்களிடம் சிக்கி அல்லல்பட்டனர்.

    திருமாலைச் சரணடைந்து தங்கள் கஷ்டத்தைக் கூறி கதறினர். பாற்கடலைக் கடைந்து, அதிலிருந்து கிடைக்கும் அமிர்தத்தைச் சாப்பிட்டால், இழந்த பலத்தைப் பெற்று அசுரர்களை வெல்லலாம் என, யோசனை கூறினார் திருமால். அதனால், மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடலைக் கடைந்தனர். ஆனால் மலை சீராக இல்லாமல் சாய்ந்தது.



    அதை சீராக்க வேண்டி மீண்டும் திருமாலிடம் சரணடைந்தனர். உடனே திருமால், மிகப்பெரிய கூர்ம (ஆமை) உருவம் கொண்டு மலையை தன்னுடைய முதுகில் தாங்கிக்கொண்டார். இதையடுத்து பாற்கடல் கடையப்பட்டு தேவர்களுக்கான அமிர்தம் கிடைத்தது என்பது புராணம் கூறும் தகவல்.

    தசாவதாரங்களில் நரசிம்மர், ராமர், கிருஷ்ணர் முதலான அவதாரங்களுக்கு, பல இடங்களில் கோவில் இருக்கிறது. ஆனால், இரண்டாம் அவதாரமான கூர்ம அவதாரத்திற்கு, ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீகூர்மத்தில் மட்டுமே கோவில் உள்ளது.

    மகாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமாகப் போற்றப்படுவது கூர்ம (ஆமை) அவதாரம். மற்ற அவதாரங்கள் எல்லாம் தீயவர்களை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல் பல அரிய பொருட்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்கத் துணை நின்ற அவதாரமாகும்.

    தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகி என்ற பாம்பு மிகுந்த துன்பத்தை அடைந்தது. வலி பொறுக்க முடியாமல் அது, விஷத்தை கக்கியது. அதே வேளையில் கடலுக்குள் இருந்தும் முதன் முதலில் விஷம் ஒன்று தோன்றியது. பாம்பின் விஷமும், கடலில் இருந்து வெளிப்பட்ட விஷமும் சேர்ந்து, ஆலகால விஷமாக மாறியது. இந்த விஷத்தின் வேகம் உலகத்தையே அழிக்கும் சக்தி கொண்டதாக இருந்தது. இதனால் தேவர்கள் அனைவரும் ஈசனை வேண்டினர். இதையடுத்து சிவபெருமான் அந்த விஷத்தை ஒன்று திரட்டி, தானே உண்டு உலகை காப்பாற்றினார்.

    விஷத்தின் துன்பம் நீங்கியதும், மீண்டும் பாற்கடலை கடையும் பணி தொடங்கியது. அப்போது கடலில் இருந்து காமதேனு என்ற பசு வெளிப்பட்டது. இந்தப் பசு வேண்டியதைத் தரும் வல்லமை படைத்தது. இது பார்வதியிடம் சேர்ந்தது. அடுத்து பொன்மயமான ஒளியுடன் உச்சைசிரவஸ் என்ற குதிரை தோன்றியது. இந்தக் குதிரை பறக்கும் ஆற்றல் படைத்தது.

    அதற்கு அடுத்ததாக ஐராவதம் என்ற நான்கு தந்தங்கள் கொண்ட வெள்ளை நிற யானை தோன்றியது. இது இந்திரனது வாகனம் ஆனது. இதனை அடுத்து ஐந்து மரங்கள் பாற்கடலில் இருந்து வெளிவந்தன. பஞ்ச தருக்கள் என்று சொல்லப்படும் அவை அரிசந்தனம், கற்பகம், சந்தனம், பாரிஜாதம், மந்தாரம் ஆகும். இவற்றில் கற்பக மரத்தின் கீழ் இந்திரன் அமர்ந்தான். கேட்பதைக் கொடுக்கும் சக்தி கொண்டது கற்பகம்.

    அடுத்து கவுஸ்துபம் என்ற மணிமாலை தோன்றியது. இதனை அணிபவர்களுக்கு ஆற்றலையும் வெற்றியையும் தரக்கூடியது. இதனை திருமால் அணிந்தார். அதற்குப்பின் ஜேஷ்டாதேவி தோன்றினாள். இவளை மூதேவி என்றார்கள். (மூத்த தேவியே மூதேவி ஆனாள்.) இவளை யாரும் ஏற்காததால் பூலோகம் சென்றாள்.

    இவளுக்கு அடுத்து மிக அழகான அறுபது கோடி தேவலோகப் பெண்கள் தோன்றினார்கள். இவர்களை தேவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அடுத்து தோன்றியது மது! இந்த மது தோன்றும் போது அதன் அதிதேவதையான சுராதேவியுடன் மதியை மயக்கும் அழகு மங்கையர் கணக்கற்ற தோழியர்களுடன் தோன்றினார்கள். அவர்களை அசுரர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்குப்பின் தோன்றியவள்தான் ஸ்ரீதேவி எனப்படும் மகாலட்சுமி. மலர் மாலையை ஏந்தியவளாய் அவதரித்த இவள், தனக்குத் தகுந்த மணாளன் மகாவிஷ்ணுவே என்பதனை அறிந்து, மகாவிஷ்ணுவிற்கு மாலை அணிவித்து திருமாலின் தேவியானாள்.



    அடுத்து விஷக் கொடுமையை நீக்கும் மூலிகையுடன் சந்திரன் வெளிப்பட்டான். மேலும் அவன் கைகளில் நீலோத்பல மலர், மோக சாஸ்திரச் சுவடிகள் இருந்தன. அடுத்துத் தோன்றியது ஸ்யமந்தகமணி. இதனைச் சிந்தாமணி என்றும் சொல்வர். அதை சூரியன் ஏற்றான். கடைசியில் அவதரித்தவர் தன் வந்திரி. நான்கு கைகளுடன் அவதரித்த இவர் கைகளில் சீந்தில்கொடி, அட்டைப்பூச்சி, அமிர்த கலசம், கதாயுதம் தரித்திருந்தார். இவர் மருத்துவர்களின் தேவதை ஆனார்.

    தன்வந்திரியின் கையிலிருந்த அமிர்தகலசத்தைப் பெறுவதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பலத்த போட்டி இருந்தது. இதனை அறிந்த திருமால் மோகினி அவதாரம் எடுத்து அமிர்தத்தைப் பங்கிட்டுத் தரும் வேளையில்தான் சில நிகழ்வுகள் நடந்தன. அசுரன் ஒருவன் குறுக்கு வழியில் சூரிய சந்திரர்களுக்கு இடையில் அமிர்தம் பெற முயற்சிக்கையில், மோகினியானவள் அமிர்தம் வழங்கிய அகப்பையால் அவனை வெட்ட, அவன் இரண்டு துண்டுகளாகி ராகு கேது ஆனான்.

    மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்ததன் விளைவாக பல அரிய பொருட்கள் கிடைத்தன. அதேசமயம் பல நிகழ்வுகளும் நடைபெற்றன. அனைத்தும் சுபமான நிகழ்வுகள் ஆகும்.

    பழமொழியின் பொருள் :

    உலகைக் காக்க தசாவதாரம் எடுத்தார் திருமால். அதில் ஒன்று கூர்ம அவதாரம். கூர்மம் என்பதற்கு ‘ஆமை’ எனப் பொருள். அவர், இந்த வடிவத்தை தன் அவதாரத்துக்கு தேர்ந்தெடுத்தது ஏன் தெரியுமா? ஆபத்து வரும் போது, ஆமை, தன் உறுப்புகளை ஓட்டுக்குள் அடக்கி, பாதுகாத்துக் கொள்ளும் தன்மையுடையது. மனிதனும், கெட்ட சிந்தனைகள் தம்மைத் தாக்கும் போது, தன் மனதைக் கட்டுப்படுத்தி, நன்மை பெற வேண்டும் என்று உணர்த்த தோன்றியதே இந்த அவதார நோக்கமாகும்.

    ‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்பார்கள். அப்படியிருக்க, திருமால் இந்த வடிவம் எடுத்தது சரிதானா? என்று எண்ணத் தோன்றும். இங்கு ஆமை என்று சொல்லப்படுவது, இல்லாமை எனும் வறுமை, கல்லாமை, பொறாமை ஆகியவை ஆகும். வீடு என்பதற்கு மனம் என்ற பொருளும் உண்டு. பொறாமை புகுந்த மனம் உருப்படாது என்பதே அந்தப் பழமொழியின் பொருளாகும்.
    முருகனுக்கு உகந்த தினத்தில் விரதம் இருந்து வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். இந்த விரதம் அனுஷ்டிக்கும் முறையை பார்க்கலாம்.
    வைகாசி விசாகத்தை முருகனின் பிறந்ததினமாக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும்.

    குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம். வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு.



    எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும்.

    ஆபத்துக்கள் அகலும். வைகாசி விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘நம ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம். முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.
    நோய் நொடிகள் நீங்கி அம்மனின் அருள் கிடைக்க எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் அனைத்து பலன்களையும் பெறலாம் என்பதை பார்க்கலாம்.
    ஞாயிற்றுக்கிழமைகளில் மாங்காட்டு அம்மனை விரதமிருந்து வழிபட்டால் வாழ்க்கை ஒளிபெறும். மனத்தில் அச்சங்கள் அகன்று, தளர்ச்சி நீங்கி அனைத்து வளங்களும் ஏற்படும். புகழ் உண்டாகும்.

    திங்கட்கிழமைகளில் விரதமிருந்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகள் விலகும். உடல் நலம் குறைவுற்றிருந்தால் உடல் நலம் பெறும். உடல் நலமும் நீண்ட ஆயுளும் உண்டாகும். மாங்கல்ய பாக்கியம் ஏற்படும். சோம வார விரதமிருந்து அம்மனை வழிபட்டால் புத்திரப் பேறு உண்டாகும்.

    செவ்வாய்க் கிழமைகளில் அன்னை காமாட்சியை விரதமிருந்து வழிபட்டு வந்தால் அமங்கலங்கள் நீங்கி மங்கலம் உண்டாகும். நீண்ட காலமாகத் திருமணமாகாத கன்னிப் பெண்களின் துயர் நீங்கித் திருமணம் கூடும். செவ்வாய் தோஷம் என்பது வேதனைக்குரியது என்பர். திருமணத் தடங்கல் அல்லது மணந்து வாழும்போது பல அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பர். அத்தகைய சங்கடங்கள் நேராதவாறு தடுத்து அருள்புரிவாள் அன்னை காமாட்சி. நோய் நொடிகள், பேய், பிசாசு, மாய மந்திரங்கள் போன்ற தொல்லைகளிலிருந்தும் காத்தருள்வாள்.

    புதன் கிழமைகளில் அம்மனைத் விரதமிருந்து தரிசித்தால் அறிவு விருத்தியாகும். கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். அதனால் மேன்மையும் பெறலாம். கவிஞர்கள், கலைத்துறையில் ஈடுபட்டவர்கள், ஜோதிடர்கள், வணிகர்கள் போன்றோர் புதன் கிழமைகளில் சென்று பராசக்தியை வழிபட்டு வந்தால் அவர்கள் துறையில் மேம்பட்டு விளங்குவர்.



    வியாழக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனைத் தரிசித்தால் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தொல்லைகள் யாவும் நீங்கி சிறப்புகள் உண்டாகும். பொன்னும் பொருளும் சேர்ந்து வாழ்க்கையில் உயர்வு ஏற்படும். நோய் நொடிகள் அண்டாது. ஆயுளும் நீடித்திருக்கும்.

    வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனைத் தரிசித்தால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல புத்திரர்கள் பெறலாம். செல்வம் கொழிக்கும். எத்தகைய இடையூறு இருந்தாலும் யாவும் அகன்றுவிடும்.

    சனிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனைத் தரிசித்தால் வம்பு வழக்குகள், விரோதிகளின் தொல்லைகள் போன்ற எல்லாமே நம்மை ஒன்றும் செய்யாது காத்தருள்வாள். நீண்ட ஆயுளையும் அளிப்பாள்.

    ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த விரத நாளாகும். சித்திரா பவுர்ணமி, நவராத்திரி, ஆடிப்பூரம் போன்ற திருவிழாக்கள் மாங்காட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
    சுசந்திரா எனும் அரசி இந்த விரதத்தை மேற்கொண்டு தான் இழந்த சொத்துக்களை அனைத்தும் திரும்பப் பெற்றதாக புராணக்கதை ஒன்று உள்ளது.
    வரலட்சுமி விரதத்தால் தனது சாபம் நீங்கப் பெற்ற சித்ரநேமி கதையைப் போல், சுசந்திரா எனும் அரசியும் இந்த விரதத்தை மேற்கொண்டு தான் இழந்த சொத்துக்களை அனைத்தும் திரும்பப் பெற்றதாக புராணக்கதை ஒன்று உள்ளது.

    மகத நாட்டின் அரசியாக இருந்த சுசந்திரா, செல்வ வளத்தின் ஆணவத்தால் மகாலட்சுமியையே அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டாள். மகாலட்சுமியை அவமதித்ததால் அவளிடமிருந்த செல்வம் அனைத்தும் பறிபோனது. இதனால் நாட்டை விட்டு வெளியேறி காட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டது.

    அரசி சுசந்திராவின் மகள் சாருமதி, வரலட்சுமி விரதமிருந்தால் தாங்கள் இழந்த செல்வத்தைப் பெறலாம் என்பது குறித்து அறிந்தாள். அதன் பிறகு அவள், அந்த விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினாள். சாருமதியின் விரதத்தில் மனம் மகிழ்ந்த மகாலட்சுமி, அவளுக்கு அனைத்துச் செல்வங்களையும், நலன்களையும் தந்தருளினார்.

    தன் மகளின் வறுமை நிலை மாறிச் செல்வச் செழிப்புடன் வாழ்வதைக் கண்ட சுசந்திரா, தன் மகள் சாருமதி கடைப்பிடித்த விரதத்தைத் தானும் கடைப்பிடித்து, இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் பெற்றாள். அதன் பின்னர் வரலட்சுமி விரதம் அனைத்துப் பெண்களாலும் மேற்கொள்ளப்படும் புனித விரதமாக மாறியது.
    தன்னை நினைத்து மனமுருகி பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொடுப்பவராக ‘அணைப்பட்டி ஆஞ்சநேயர்’ இருக்கிறார்.
    திண்டுக்கல் மாவட்டம் சித்தர்கள் மலை அடிவாரத்தை தழுவியபடி வைகை ஆறு செல்கிறது. அந்த ஆற்றின் கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஆஞ்சநேயர். மனக்கஷ்டத்தில் வரும் பக்தர்களை, தன் அருளால் ஆட்கொள்ளும் இந்த ஆஞ்சநேயரை, ஊரின் பெயரையும் சேர்த்து ‘அணைப்பட்டி ஆஞ்சநேயர்’ என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.

    அணைப்பட்டி ஆஞ்ச நேயரின் வலது பக்கத்தில் கன்னிமூலையில் விநாயகர் சன்னிதியும், அதற்கு முன்பு நாக தேவதை, நவக்கிரக சன்னிதிகளும் அமைந்துள்ளன.

    தன்னை நினைத்து மனமுருகி பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொடுப்பவராக ஆஞ்சநேயர் இருக்கிறார். இங்கு வரும் பக்தர்கள் உத்தியோக தடையை போக்கவும், பணியிட மாறுதல் கேட்டும் வேண்டுதல் செய்கின்றனர்.



    இதுதவிர திருமண தடை, செவ்வாய் தோஷம் ஆகியவை விலகவும் அணைப்பட்டி ஆஞ்சநேயரை வேண்டி செல்பவர்களும் ஏராளம். இதற்காக ஆஞ்சநேயருக்கு வடைமாலை, துளசி மாலை, எலுமிச்சை மாலை, பலவகை பழங்களால் ஆன மாலையை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபாடு செய்கின்றனர்.

    சனி தோஷம் நீங்குவதற்கு சனிக்கிழமை விரதம் இருந்து அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் வருகின்றனர். பின்னர் ஆஞ்சநேயருக்கு கறுப்பு ஆடை அணிவித்து, பிரார்த்தனை செய்வதால் சனி தோஷம் நீங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

    திண்டுக்கல்லில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும், நிலக்கோட்டையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 60 கி.மீ. தூரத்திலும் அணைப்பட்டி உள்ளது. திண்டுக்கல், நிலக்கோட்டையில் இருந்து கோவிலுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    பெண்கள் வெள்ளிக்கிழமை விரதத்தை தவறாமல் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கடைபிடித்தால் கிடைக்கும் நன்மைகளை பற்றி கீழே பார்க்கலாம்.
    ஆன்மிக வழிபாட்டிற்கு சிறப்புக்குரிய நாளாகவே வெள்ளிக்கிழமையை மக்கள் பாவித்து வருகிறார்கள். இந்த நாளில் அம்பாளை வழிபடுவது விசேஷம். மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையை கொண்டு விரதம் ஒன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதுதான் வெள்ளிக்கிழமை விரதம். இந்த விரதம் முருகப்பெருமான், லட்சுமிதேவி, நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரன் ஆகியோரின் அருளைப் பெறுவதற்காக கடைபிடிக்கப்படும் விரதம் என்று கூறப்படுகிறது. ஆக… வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து வந்தால், லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூன்று பேரின் அருளைப் பெறலாம்.

    இந்த விரதத்தை ஏதாவது ஒரு மாதத்தில் வருகின்ற 3-வது வெள்ளிக்கிழமை அல்லது கடைசி வெள்ளிக்கிழமையில் தொடங்கி, 11 வாரம் மட்டும் அனுஷ்டிக்க வேண்டும். வயதைப் பொறுத்து ஆயுள் முழுவதும் கூட இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

    வெள்ளிக் கிழமை விரதம் இருக்க நினைப்பவர்கள், முதலில் ஏதாவது ஒரு மாதத்தில் வரும் மூன்றாவது அல்லது கடைசி வெள்ளிக்கிழமையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அதிகாலை எழுந்து வீட்டை சுத்தப்படுத்தி, கோலம் போட்டு சுத்தமாக வைக்க வேண்டும்.



    வீட்டை எப்போதும் சுத்தமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது நம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொண்டு வரும் என்று ஆன்மிக ரீதியாக கூறப்பட்டாலும், சுத்தம் எப்போதுமே நன்மை அளிக்கக்கூடியது அல்லவா?.

    வீட்டை சுத்தம் செய்ததும், விரதம் இருப்பவர்களும் நீராடிவிட்டு வந்து வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட்டு தெய்வீக மணம் கமழச் செய்ய வேண்டும். பிறகு லட்சுமிதேவியின் படத்திற்கோ அல்லது விக்கிரகத்திற்கோ மலர்களால் அர்ச்சனை செய்வதுடன், தீபாராதனைக் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் முழுவதும் லட்சுமி தேவியைப் பற்றிய பக்திப் பாடல்களையோ, முருகப்பெருமான், சுக்ரனைப் பற்றிய பக்திப் பாடல்களையோ பாராயணம் செய்தபடி இருப்பது சிறப்பான நன்மையை வழங்கும்.

    ஒரு நாள் முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். விரத நாள் முடிந்ததும் சுவாமியின் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து விரத்தை முடித்துக் கொள்ளலாம். தொடர்ந்து 11 வாரங்கள் வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்து வந்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். பகீரதன் என்னும் மன்னன் இந்த விரதத்தை கடைப்பிடித்து தான், இழந்து போன தனது அரசுரிமையை திரும்பப் பெற்றான். எனவே இந்த விரதத்தை அனுஷ்டித்து சிறப்பாக வாழுங்கள்.
    பைரவரை ஒவ்வொரு மாதத்திலும் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை விரதமிருந்து வழிபாடு செய்தால் பல்வேறு நன்மைகளை அடையலாம்.
    துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள்.

    துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம். காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை விரதமிருந்து வழிபட்டு நன்மை அடையலாம்.

    சித்திரை - அம்சுமான் - சண்ட பைரவர்
    வைகாசி - தாதா - ருரு பைரவர்
    ஆனி - ஸவிதா - உன்மத்த பைரவர்



    ஆடி - அரியமான் - கபால பைரவர்
    ஆவணி - விஸ்வான் - ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
    புரட்டாசி - பகன் - வடுக பைரவர்

    ஐப்பசி - பர்ஜன்யன் - சேத்ரபால பைரவர்
    கார்த்திகை - துவஷ்டா    பீஷண - பைரவர்
    மார்கழி - மித்திரன் - அசிதாங்க பைரவர்

    தை - விஷ்ணு - குரோதன பைரவர்
    மாசி - வருணன் - ஸம்ஹார பைரவர்
    பங்குனி - பூஷா - சட்டநாத பைரவர்
    செவ்வாய்க் கிழமை விரதம் பற்றி அடிகளார் கூறியது இருக்கும் குறிப்பை பார்க்கலாம். இதன் மூலம் வேண்டிய கோரிக்கைகள் இனிது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
    “திங்கட்கிழமை இரவில் பலகாரஞ் (பழ ஆகாரம்) செய்து, செவ்வாய்க்கிழமை அருணோதயத்தி லெழுந்து, திருநீறு நெற்றியில் மாத்திரம் அணிந்து, நல்ல நினைப்புடன் அங்கசுத்தி, தந்தசுத்தி முதலானவையுஞ் செய்து கொண்டு, சூரியோதயத்திற்கு முன் ஆசாரமான சுத்த சலத்தில் ஸ்நானஞ் செய்து, விபூதியை சலத்தினால் குழைத்து அனுஷ்டானப்படி தரித்துக் கொண்டு,

    கண்பதியை நினைத்து, பின்பு ஸ்ரீ பஞ்சாஷரத்தை நூற்றெட்டு முறை சபித்து, பின்பு சிவத்தியானம் செய்து, எழுந்து வாயிலில் வந்து சூரியனைப் பார்த்து ஒம் சிவ சூரியாய நம என்று மெதுவாகச் சொல்லி நமஸ்கரித்து அதன் பின்பு அவ்விடத்தில் தானே நின்று கொண்டு, தங்கள் தங்கள் மனத்திலிருக்கிற கோரிக்கைகளை முடித்துக் கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீ வயித்தியலிங்கரையும் தையனாயகியையும் முத்துக்குமாரசாமியையும் தியானித்துக் கொண்டு,

    பின்பு ஔம் வயித்தியநாதாய நம வென்று நூற்றெட்டு, ஆயிரத்தெட்டு இரண்டில் எந்த அளவாவது செபித்து, ஒரு பலம் மிளகு சீலையில் முடிந்து வயித்தியலிங்கார்ப்பணம் என்று ஔரிடத்தில் வைத்து, சிவனடியார் ஒருவர்க்கு உபசாரத்தொடு அமுது படைத்து, பின்பு சுசியொடு பச்சரிசிப் பொங்கல் முதலான புசிப்பை அரையாகாரம் முக்கால் ஆகாரங் கொண்டு,

    அன்று மாலையில் சிவ தரிசனஞ் செய்து, பாய் சயனம், கொட்டை (தலையணை) முதலாகியவையும் விட்டு, மெழுகிய தரையில் கம்பளம் விரித்துப் படுக்க வேண்டும். சிவ சரித்தரங் கேட்க வேண்டும். செபஞ் செய்துகொண்டிருக்க வேண்டும். சந்தனம், புட்பம், தாம்பூலம், இராகம்,. சுகம், பெருந்தூக்கம் முதலானவையும் விட்டிருக்க வேண்டும்.

    - என்று வள்ளலார் குறிப்பிட்டிருக்கிறார்.

    இதன் மூலம் வேண்டிய கோரிக்கைகள் இனிது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
    ஆனி மாதம் 16-ந்தேதி (30.6.2017) வரும் ஆனி திருமஞ்சன நாளில் விரதம் இருந்து நடராஜப் பெருமானை வழிபட்டு வந்தால் தடைகள் அகன்று வியக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும்.
    ஆடலரசனுக்கு ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன விழா நடைபெறும். விரதமிருந்து அதில் கலந்து கொண்டு நடராஜரைத் தரிசித்தால் நலம் யாவும் வந்து சேரும். சிதம்பரம் என்றதும் நம் நினைவிற்கு வருவது நடராஜப் பெருமான் தான். சிவாலயங்களில் நடராஜப் பெருமான், நடனக் கோலத்தில் காட்சி தருவார். ஆடுகிற வாழ்க்கை அழகாக மாறவேண்டுமானால், ஆயக் கலைகள் அறுபத்து நான்கிலும் தேர்ச்சிபெற வேண்டுமானால், நாம் வழிபட வேண்டிய தெய்வம் நடராஜப் பெருமானும், சிவகாமி அம்மனும் தான்.

    வருடத்தில் இரண்டு முறை நடராஜருக்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஒன்று மார்கழி மாத தரிசனம். மற்றொன்று ஆனி மாத நடராஜர் தரிசனம். அன்றைய தினம் விரதமிருந்து கூத்தபிரானைக் கும்பிட்டு சிவபுராணம் படித்தால் வியக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும். எதிரிகளும் விலகுவர்.

    ஆற்றல் மிக்கவர்களாக உங்களை மாற்றுகிற ஆற்றல் நடராஜப் பெருமானின் அருட் பார்வைக்கு உண்டு. இந்த ஆண்டின் ஆனி திருமஞ்சன விரத நாள், ஆனி மாதம் 16-ந் தேதி (30.6.2017) வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் விரதமிருந்து நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடப்பதைக் கண்டு வழிபட்டு வந்தால் தடைகள் அகலும். தரிசனத்தால் தனலாபம் பெருகும்.
    முருகனுக்கு உகந்த நாட்களில் விரதமிருந்து வழிபாடு செய்தால் வாழ்வில் வளம் பெறலாம். முருகனுக்கு உகந்த விரதத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    முருகப்பெருமான் அவதாரம் செய்த தினம் வைகாசி விசாகம். உயிர்களுக்கு நேரும் இன்னல்களை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாக தோன்றினார். விசாக நட்சத்திரத்தில் வரும் இந்த சிறப்பு நாளில் திருமுருகன் வீற்றிருக்கின்ற கோயில்களிலும், அறுபடை வீடுகளிலும் விசாக வழிபாடு சிறப்பாக நடைபெறும். இந்நாளில் விரதமிருந்து முருகனை வழிபட்டால் வாழ்வில் வளம் பெறலாம்.

    புத்தர் அவதரித்ததும் வைகாசி விசாகத்தில் தான். புத்த பூர்ணிமா என பவுத்தர் இதனைக் கொண்டாடுவர். இந்நன்னாளில் நம்மாழ்வார் அவதரித்தருளினார். தெற்கு திசையின் திக்பாலகரான யமதர்ம ராஜனுக்குரியது வைகாசி விசாகமே.

    குருவின் நட்சத்திரம் விசாகம். இட்சுவாகு வம்சத்திற்குரிய நட்சத்திரமாகக் கருதப்பட்டதால் விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில் ராம-ராவண யுத்தம் நடந்ததாக ஸ்ரீமத் ராமாயணம் கூறும். அகோபிலம் எனப்படும் சிம்மாலத்து நரசிம்ம மூர்த்திக்கு வருடம் முழுதும் சாத்தப்பட்டிருக்கும் சந்தனக் காப்பினை இந்நாளிலேயே களைவார்கள். வைகாசி விசாகத்திலே காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு கருட சேவை நடைபெறும்.

    குடந்தை ஆதிகும்பேசுவரர் திருக்கல்யாணம் வைகாசி விசாகத்திலே நடைபெறும். திருவேட்களத்தில் அர்ச்சுனனுக்கு பரமன் பாசுபதாஸ்திரம் வழங்கிய விழா கொண்டாடப் பெறுவது வைகாசி விசாகத்தன்று தான். கன்னியாகுமரி அம்மனுக்கு ஆராட்டு விழா வைகாசி விசாகத்திலே தான். திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் வைகாசி விசாகத்திலே சித்தி அடைந்ததால் அவரது குருபூஜை நடக்கிறது.
    ×