என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ஆடிமாதம் வரும் ஆடிப்பூரம் (வியாழக்கிழமை) அன்று அம்பிகை வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் புத்திரப் பேறு கண்டிப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
    ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிப்பார். அப்பொழுது சுக்ரனுக்குரிய நட்சத்திரமான பூரம் வரும் நாள்தான் ‘ஆடிப்பூரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரம் வருகிற 27-ந் தேதி (வியாழக்கிழமை) வருகிறது. அன்று திருக்கோவில்கள் தோறும் உற்சவம் நடைபெறும். குழந்தைச் செல்வம் இல்லாத தம்பதியர் கோவில்கள் பலவற்றையும் தேர்ந்தெடுத்துப் பரிகாரம் செய்து வருவர். இந்த ஆடிமாதம் அம்பிகை வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் புத்திரப் பேறு கண்டிப்பாக கிடைக்கும்.

    ஆடிப் பூரத்திற்கு சில நாட்கள் முன்னதாக, பச்சைப் பயறைத் தண்ணீரில் நனைய வைப்பார்கள். ஆடிப்பூரத்தன்று அது நன்கு முளைகட்டிவிடும். அதை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து விட்டு, அதை நம்பிக்கையோடு குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் சாப்பிட்டால் வாரிசு கிடைக்கும். ஆடிப்பூரத்தன்று அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று அம்பிகை வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
    ஆடி மாதத்தில் தேடிவரும் திருவிழாக்களில் விரதமிருந்து வழிபாடு செய்தால் கோடி புண்ணியம் நமக்குக் கிடைக்கும். கோலாகல வாழ்க்கை அமையும்.
    ஆடி மாதத்தில் தேடிவரும் திருவிழாக்களை நாம் கொண்டாடி மகிழ்ந்தால், கோடி புண்ணியம் நமக்குக் கிடைக்கும். கோலாகல வாழ்க்கை அமையும்.

    ஆடி மாதம் 7-ந் தேதி (23.7.2017) ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை. அன்றைய தினம் விரதமிருந்து கடலில் நீராடுவது சிறப்பு. முன்னோர் வழிபாடும் முன்னேற்றம் தரும்.

    ஆடி மாதம் 11-ந் தேதி (27.7.2017) வியாழக்கிழமை ஆடிப்பூரமும், நாக சதுர்த்தியும் வருகிறது. அன்றைய தினம் விரதமிருந்து அம்பிகை வழிபாட்டையும், அரவு வழிபாட்டையும் செய்தால் அதிர்ஷ்டம் தரும்.

    ஆடி மாதம் 12-ந் தேதி (28.7.2017) வெள்ளிக்கிழமை கருட பஞ்சமி. அன்றைய தினம் விரதமிருந்து கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    ஆடி மாதம் 18-ந் தேதி (3.8.2017) வியாழக்கிழமை ஆடிப்பெருக்கு. அன்றைய தினம் விரதமிருந்து வழிபாடு செய்தால் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.



    ஆடி மாதம் 19-ந் தேதி (4.8.2017) வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம். அன்று லட்சுமியை விரதமிருந்து வழிபட்டால் செல்வம் பெருகும்.

    ஆடி மாதம் 20-ந் தேதி (5.8.2017) சனிக்கிழமை சனிப்பிரதோஷம். அன்றைய தினம் விரதமிருந்து நந்தியை வழிபடுவது சிறப்பு தரும்.

    ஆடி மாதம் 22-ந் தேதி (7.8.2017) திங்கட்கிழமை ஆடிப் பவுர்ணமி. அந்த நாளில் விரதமிருந்து கிரிவலம் வந்தால் கீர்த்தி பெருகும்.

    ஆடி மாதம் 29-ந் தேதி (14.8.2017) திங்கட்கிழமை கோகுலாஷ்டமி. கண்ணன் விரத வழிபாடு கவலையைப் போக்கும்.

    ஆடி மாதம் 30-ந் தேதி (15.8.2017) செவ்வாய்க்கிழமை ஆடி கிருத்திகை. வள்ளி மணாளனை விரதமிருந்து வழிபட்டால் வளங்கள் குவியும்.
    ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளை எப்படி விரதமிருந்து அனுசரிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
    ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் சன்னியாச ஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பார்கள்.

    வாழ்க்கை முழுவதும் சன்னியாசிகள் ஒவ்வொருவரும் வேதாந்தத்தில் ஈடுபட்டு, குரு மற்றும் ஈஸ்வரனை வழிபட வேண்டும். சன்னியாசி தான் ஞானத்தை பெற்றதற்கு நன்றியை வெளிபடுத்தும் வகையிலும், தான் துவங்கவிருக்கும் வேதாந்த உபதேசம் தடையில்லாமல் முடிவடையவும், வியாச பகவானை ஆராதித்துப் பூஜை செய்யும் இந்நாள், குரு பவுர்ணமி என்றும் வியாச பவுர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது.



    இந்நாளில் துறவிகள் மட்டுமில்லாமல், ஞான மற்றும் மோட்ச சாஸ்திரத்தை அறிய முற்படும் அனைவரும் தங்களது குருவையும், வியாச பகவானையும் ஆராதிக்க வேண்டும். வியாச பகவானை நிமித்தமாக வைத்து, ஆதிகுருவில் (சிவபெருமான் அல்லது ஸ்ரீமன் நாராயணன்) தொடங்கி, தங்களுடைய இப்பொழுதைய குரு வரை குரு பரம்பரையில் உள்ள அனைவரையும் இந்நாளில் வழிபட வேண்டும்.

    வேதத்தை நான்காக வகுத்தவர் வியாசர். பகவான் கிருஷ்ணன் அருளிய கீதையைத் தொகுத்தவர் அவர்தான். பிரம்ம சூத்திரத்தை (வேதங்களின் சாரம்) எழுதியவர் வியாசர். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ப்ரஸ்தான த்ரயம் எனப்படும் மூன்று நூல்களிலுமே, வியாச முனிவரின் பங்குள்ளது.

    எனவே வியாச பகவானை முன்வைத்து, ஆனி மாதப் பவுர்ணமியன்று குரு பூர்ணிமா அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் ஆங்கில தேதி ஜூலை 8-ந்தேதி குருப் பூர்ணிமா அனுசரிக்கப்பட்டது.
    பண்டரிபுரத்தில் முக்கிய நாளாக ஆஷாட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இது ஆஷாட மாதத்தில் (ஜூன்-ஜூலை) வரும் வளர்பிறை ஏகாதசியாகும்.
    பண்டரிபுரத்தில் முக்கிய நாளாக ஆஷாட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இது ஆஷாட மாதத்தில் (ஜூன்-ஜூலை) வரும் வளர்பிறை ஏகாதசியாகும்.
    என்ன இந்த நாளுக்கு பண்டரிபுரத்தில் விசேஷம்?

    ஸ்ரீ பாண்டுரங்கனின் சிறந்த பக்தர்களான ஸ்ரீ துக்காராம் மகாராஜ் அவர்களும் ஸ்ரீ ஞானேஸ்வரரும் தமது பக்தர்களுடன் ஸ்ரீ பாண்டுரங்கனை தரிசிக்க பல மைல்கள் பாத யாத்திரையாக (150 - 200 கிமீ மேல்) வந்து பண்டரிபுரம் அடைந்த நாள் ஆஷாட ஏகாதசி நாளாகும் .

    ஓவ்வொரு ஆண்டும் இந்த சமயத்தில் மராட்டிய மாநிலம் தேஹு என்னும் இடத்திலிருந்து ஸ்ரீ.துகாராம் அவர்களின் பாதுகைகளை தாங்கிய பல்லக்கு ஏராளமான பக்தர்களுடன் பண்டரிபுரம் நோக்கி வருகிறது. பக்தர்கள் பாத யாத்திரையாக ஸ்ரீ துக்காராம் மஹாராஜூடனேயே பாடிக்கொண்டு வருவதாக பாவித்து பாண்டுரங்கன் மேல் பல பாடல்களை பாடிக்கொண்டு (இவற்றை அபங்கங்கள் என்று கூறுகிறார்கள்) அந்த பல்லக்கை தொடர்ந்து வருகிறார்கள்.



    இதுபோலவே மராட்டிய மாநிலம் ஆலந்தி என்னும் இடத்திலிருந்து ஸ்ரீ ஞானேஸ்வரரின் பாதுகைகளை தாங்கிய பல்லக்கு பக்தர்களுடன் புறப்படுகிறது. இவை சரியாக ஆஷாட ஏகாதசியன்று பண்டரிபுரம் சென்று சேரும் வகையில் பல நாட்களுக்கு முன்பாகவே புறப்பட்டு வருகிறது. ஆங்காங்கே பல ஊர்களிலிருந்தும் மக்கள் வழியில் சேர்ந்துகொள்ள பக்தர்கள் வெள்ளம் ஆஷாட ஏகாதசியன்று பண்டரிபுரத்தில் பிரவேசிக்கிறது, பாண்டுரங்கனின் பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடிக்கொண்டு.

    ஸ்ரீ.துக்காராம் மஹராஜ் கி ஜே !
    ஸ்ரீ ஞானேஸ்வர் மஹராஜ் கி ஜே !
    ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பாண்டுரங்க மஹராஜ் கி ஜே !!
    அனைத்து உயிரினங்களும் நன்றாக வாழ்வதற்காக இறைவியே அதாவது ஆதிபராசக்தியே விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மட்டும் தான்.
    நோய் நொடியின்றி வாழ்வதற்கும், வேண்டும் வரம் கிடைப்பதற்காகவும் இறைவனை வேண்டி உடலையும் மனதையும் வருத்தி மக்களாகிய நாம் விரதம் இருப்பது தான் உலக நியதி. ஆனால் உலகில் உள்ள மனிதர்கள் மட்டும் இன்றி அனைத்து உயிரினங்களும் நன்றாக வாழ்வதற்காக இறைவியே அதாவது ஆதிபராசக்தியே விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மட்டும் தான். இதற்கு பச்சை பட்டினி விரதம் என்று பெயர்.

    அம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வது எப்படி தோன்றியது என பார்ப்போமா? முன்னொரு காலத்தில் மஹிஷா சூரன் என்ற அசுரன் ஈஸ்வரனை நினைத்து கடுந்தவம் செய்து தன் தவ வலிமையால் பல வரங்களை பெற்று ஆணவத்தால் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். இதனால் தேவர்களும், முனிவர்களும் அஞ்சி நடுங்கி இமயமலைக்கு சென்று ஆதி பராசக்தியான அன்னையிடம் முறையிட அன்னை மனம் இறங்கி, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விரதம் இருந்து புதுபலம் பெற்று துர்க்கை சொரூபமாக அஷ்டபுஜத்துடன் கால சொரூபிணியாக சிங்கத்தின் மீதமர்ந்து வந்து சூரனை வதம் செய்து தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார்.



    இப்படி அம்பாள் மஹிஷா சூரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் தணியவும் சோழ வள நாட்டின் தலைநகர் திருச்சிக்கு நேர் வடக்கே காவிரி வடகரையில் (கொள்ளிடம்) வேம்பு காட்டில் கவுமாரி என்று பெயர் பூண்டு சிவப்பு நிறம் கொண்டு மஞ்சள் ஆடை தரித்து, உடல் முழுவதும் வாசனை புஷ்பங்களால் மலை போல் குவித்து உண்ணா நோன்பிருந்து பல ஆண்டு காலம் தவம் செய்து அதன் பயனாக சாந்த சொரூபிணியாக சர்வரட்சகியாகி மாரியம்மன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

    இந்த புராண வரலாற்றின் அடிப்படையில் தான் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்பாள் பச்சை பட்டினி விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வருகிறார். இந்த 28 நாட்களும் அம்பாளுக்கு நைவேத்யம் படைப்பது கிடையாது. இளநீர், பானகம், நீர் மோர், கரும்பு சாறு உள்ளிட்ட பானங்களே ஆகாரம். இதற்கு பச்சை பட்டினி விரதம் என பெயர். பச்சை பட்டினி விரதம் முடிந்ததும் அம்பாள் பூச்சொரிதல் கண்டருள்வார்.
    பிரதோஷ விரதத்தை பொறுத்தவரையில் முக்கியமாக யார் யார் கடைபிடிக்க வேண்டும் என்பது தெரிந்தால் அது அவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.
    பிரதோஷ நாளின் சிறப்பினையும், அதனை யார் யார் எப்பொழுது கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால், பிரதோஷத்தைப் பொறுத்தவரையில் முக்கியமாக யார் யார் கடைபிடிக்க வேண்டும் என்பது தெரிந்தால் அது அவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.


    பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். சர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு காலம்.

    அதேபோல, மனிதர்கள் சிவனை வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம். அதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு உள்ளது. வளர்பிறை பிரதோஷம் தேவர்களுக்கு உள்ளது.

    தேய்பிறை பிரதோஷங்கள் எல்லாமே விசேஷமானது. பெளர்ணமிக்கு பிறகு வரக்கூடிய சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.

    அதேபோல தேய்பிறையில் வரும் சஷ்டியிலும் விரதம் இருக்கிறோம். தேய்பிறையில் வரக்கூடிய திரியோதசி திதியைத்தான் பிரதோஷ நாள் என்கிறோம். இந்த நாள் எப்பொழுதும் மனிதர்களுக்காக உள்ளது.

    அதனால் அது விசேஷமானது. மற்ற நாட்களில் சிவன் மட்டும் காட்சி கொடுப்பார் வணங்கலாம்.



    பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 முதல் 6 வரை நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர்.

    அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் எதாவது ரகசியத்தைச் சொல்வார்கள்.

    சைவத்தைப் பொறுத்தவரையில் பிரதோஷம் என்பது பிரதானமான விரதம். அன்றைக்கு எல்லா வேளைகளையும் உணவை தவிர்த்துவிட்டு பிரதோஷத்தை முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்கிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

    அது ஒரு அற்புதமான நாள். பொதுவாக பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால் நமது உடம்பும் நலம் பெறும். ஏனென்றால் சந்திரன் சூரியனை நோக்கி பயணிக்கக்கூடிய காலகட்டம் அது. குறிப்பிட்ட அந்த பிரயோதசி திதியில் விரதம் இருந்தால் வாயுக்கோளாறு, வயிற்றுக்கோளாறு எல்லாம் நீங்கும். அடுத்து, உடல் நிலை, மனநிலை எல்லாம் சீராகும். இதுபோன்ற சிறப்புகள் உண்டு.

    பொதுவாக பிரதோஷம் அன்று கறந்த பசும்பால் கொடுத்து வழிபட்டால் நல்லது. ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுக்கலாம். இல்லையென்றால் இளநீர் வாங்கித் தரலாம். ஏனென்றால் சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும்.

    இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இல்லை. அதற்கடுத்து பசும்பால். இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கடைபிடித்தால் எல்லா வகைகளிலும் சிறப்பாக இருக்கும்.
    ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும்.
    ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. இதில் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும்.

    ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.

     சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி, ‘காமதா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி ‘பாப மோகினி ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப்பெறும்.

     வைகாசி மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி ‘மோகினி ஏகாதசி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘வருதித் ஏகாதசி’ என்றும் கூறப்படுகிறது. இந்த ஏகாதசி காலங் களில் விரதம் இருப்பவர்கள் அனைவரும், இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

     ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ‘நிர்ஜலா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி ‘அபார ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.

     ஆடி மாதத்து வளர்பிறை ஏகாதசி ‘சயனி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘யோகினி’ என்றும் பெயர்பெற்றுள்ளது. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கப்பெறும்.

     ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது ‘புத்ரஜா’ என்றும், தேய்பிறை ஏகாதசியானது ‘காமிகா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.



     புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி, ‘பத்மநாபா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘அஜா’ என்றும் பெயர் பெற்றது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.

     ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி ‘பாபாங்குசா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘இந்திரா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

     கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ‘பிரபோதின’ எனப்படும் இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலனும், தேய்பிறை ஏகாதசியான, ‘ரமா’ தினத்தில் இறைவனுக்கு பழங்களை கொண்டு நைவேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும்.

     மார்கழி மாத ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ‘உத்பத்தி ஏகாதசி’ எனப்படுகிறது.

     தை மாத வளர்பிறை ஏகாதசி ‘புத்ரதா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘சுபலா’ என்றும் பெயர் பெறும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.

     மாசி மாத வளர்பிறை ஏகாதசி ‘ஜெயா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘ஷட்திலா’ என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்களின் முக்திக்கான வழியை பெறுவார்கள்.

     பங்குனி தேய்பிறை ஏகாதசி ‘விஜயா’ எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறலாம். வளர்பிறை ஏகாதசி ‘ஆமலகி’ எனப்படும். அப்போது விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும்.

    ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி ‘கமலா ஏகாதசி’ எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.
    புனிதமும், மகத்துவமும் நிறந்த இந்த புண்ணிய தினத்தில், விரதமிருந்து சிவன் கோவிலுக்கு சென்று இறைவனையும், இறைவியையும் வழிபடுவது வாழ்வை சிறப்பாக்க வழி வகுக்கும்.
    30-6-2017 ஆனித் திருமஞ்சனம்

    ஆனி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நடராஜரும், அவருக்கு ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும் தான். பழங்கால, புகழ்பெற்ற கோவில்களில் தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில ஆலயங்களில் மட்டுமே ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சிதம்பரம் நடராஜர் ஆலயம் உள்பட சில ஆலயங்களில், ஆண்டிற்கு ஆறு முறை மட்டுமே இறைவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன என்பது பலரும் அறியாததாகவே இருக்கலாம். இவற்றில் ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் நடை பெறும் அபிஷேகம், ‘ஆனித் திருமஞ்சனம்’ என்று அழைக்கப்படுகிறது.

    மனிதர்களின் வாழ்வில் ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த ஒரு நாளில் வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என ஆறு பொழுதுகள் இருக்கின்றது. இதில் தேவர்களின் வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகும். அந்த மாதத்தில்தான் ஆருத்ரா தரிசன அபிஷேகம் நடைபெறும். அதே போல் மாசி மாதமானது தேவர்களுக்கு காலைப் பொழுதாகும். மாசி மாத பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில் இறைவனுக்கு காலை அபிஷேகம் நடைபெறும்.

    உச்சி கால பொழுதானது தேவர்களுக்கு சித்திரை மாதத்தில் வரும். அந்த மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் வரும் அபிஷேகம், உச்சிகால அபிஷேகமாக நடத்தப்படும். ஆனி மாதம் தேவர்களுக்கு மாலைப் பொழுது என்பதால், ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் இறைவனுக்கு மாலை நேர அபிஷேகம் செய்யப்படுகிறது. இதுவே ஆனித் திருமஞ்சனம் எனப்படுகிறது.

    அதே போல் ஆவணி மாதம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். புரட்டாசி மாதம் அர்த்தஜாம வேளையாகும். எனவே ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில், இறைவனுக்கு இரவு நேர அபிஷேகமும், புரட்டாசி மாதம் பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில் அர்த்தஜாம வேளை அபிஷேகமும் சிறப்பாக நடை பெறும்.



    இந்த ஆறு அபிஷேகங்களையும் குறிக்கும் விதமாகத்தான், கோவில்களில் தினமும் இறைவனுக்கு ஆறுகால பூஜைகள் நடத்தப்படுகின்றன. சில சிவன் கோவில்களில் மட்டுமே ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சிதம்பரம் ஆலயத்தில் ஆண்டுக்கு ஆறுமுறை நடைபெறும் இந்த சிறப்பு அபிஷேகங்களில், மார்கழி மாத திருவாதிரை அபிஷேகமும், அடுத்ததாக ஆனிமாத திருமஞ்சன அபிஷேகமும் சிறப்பு மிக்கதாக உள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனிமாத உத்திரத்தன்று நடைபெறும் அபிஷேக விழா வெகு விமரிசையாக நடத்தப்படும். தமிழ்நாட்டைப் போல இலங்கையில் உள்ள திருக்கேதீஸ்வரம், ஈழத்துச் சிதம்பரம், திருக்கோணேஸ்வரம் ஆகிய சிவன் தலங்களிலும் ஆனி உத்திர விழா சிறப்பாக நடைபெறுகின்றன.

    சிதம்பரத்தில் நடராஜ பெருமானும், சிவகாமி அம்மையும், ஆண்டிற்கு இருமுறை மட்டுமே சிற்சபையை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். மார்கழி, ஆனி மாத மகோற்சவ புண்ணிய காலங்களில் நடை பெறும் ரத உற்சவத்தன்றும், மறுநாள் தரிசனத்தன்றும் மட்டுமே அம்மையப்பன் இருவரும் சிற்சபையை விட்டு எழுந்தருளி பக்தர் களுக்கு காட்சி அளிப்பார்கள்.

    புனிதமும், மகத்துவமும் நிறந்த இந்த புண்ணிய தினத்தில், விரதமிருந்து சிவன் கோவிலுக்கு சென்று இறைவனையும், இறைவியையும் வழிபடுவது வாழ்வை சிறப்பாக்க வழி வகுக்கும். அன்றையதினம் அதிகாலையில் எழுந்து நீராடி, விரதமிருந்து இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். இறைவனை வேண்டி நோன்பு இருப்பதும் நற்கதியை வழங்கும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தபடியே, தங்கள் பூஜை அறையில் வைத்து இறைவனை வணங்கி, அவரது புகழ்பாடும் பாடல்களை பாராயணம் செய்யலாம்.
    ராமருடைய ஜாதகத்தை எழுதி, அதை பூஜை அறையில் வைத்து விரதமிருந்து பூஜை செய்பவர்களுக்கு ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய நவக் கிரகதோஷம் நீங்கும்.
    ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என்று ஏகபத்தினி விரதனாக வாழ்ந்தவர் ராமபிரான். தனி மனித ஒழுக்கத்தை, தன் வாழ்நாளில் வாழ்ந்து காட்டியவர். பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சம் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர் ராமபிரான். இந்த நாளே ராம நவமி என்ற பெயரில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    சிவபெருமானிடம் பல வரங்களை பெற்ற ராவணன், தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிப்பதற்காக, அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் மகாவிஷ்ணு. ராமாவதாரம் என்ற ஒரு அவதாரத்திலேயே ராமபிரான், குருவிற்கு நல்ல மாணவராக, தாய்-தந்தையருக்கு நல்ல மகனாக, உடன் பிறந்தவர்களுக்கு நல்ல சகோதரனாக, மனைவிக்கு நல்ல கணவனாக, மக்களுக்கு நல்ல மன்னனாக, நண்பர் களுக்கு உற்ற தோழனாக, பகைவர்களுக்கு சிம்ம சொப்பனமாக என்று பல அவதாரங்களை எடுத்து அதில் தன்னை நிலைநிறுத்தியவர்.

    அயோத்தியின் அரசரான, தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, சுமித்ரா, கைகேயி என மூன்று மனைவிகள். தனது புஜ, பல பராக்கிரமத்தால் உலகெங்கும் வெற்றிக்கொடி நாட்டி புகழ்கொடியை பறக்கவிட்ட தசரதருக்கு நாட்டை ஆள ஆண் வாரிசு இல்லாமல் இருந்தது பெரும் மனக்குறையாக இருந்தது. தனது மனக்குறையை குலக்குரு வசிஷ்டமகரிஷியிடம் அவர் கூறினார்.

    வசிஷ்டரின் ஆலோசனைப்படி மகரிஷி ருஷ்யஷ்ருங்கர் உதவியுடன் புத்திரகாமேஸ்டி யாகம் செய்தார். அந்த யாகத்தின் விளைவாக யக்னேஸ்வரர் தோன்றி பாயசம் நிறைந்த ஒரு கிண்ணத்தை கொடுத்து  அதை மனைவிகளிடம் கொடுக்கும்படி கூறினார். தசரதர் பாயசத்தை தனது மனைவிகளுக்கு கொடுத்தார். சில நாட்களுக்கு பிறகு கோசலை, கைகேயி, சுமித்ரா ஆகிய மூவரும் கர்ப்பமுற்றனர். பங்குனிமாதம் நவமியன்று கோசலை ராம பிரானை பெற்றார். கைகேயிக்கு பரதனும், சுமித்ராவுக்கு லட்சுமணன், சத்ருகனன் ஆகியோர் பிறந்தனர்.

    தசரதனுக்கு புத்திரனாக அவதரித்த ராமன் வசிஷ்டரிடம் வித்தைகளை கற்றார். விஸ்வாமித்திரருடன் சென்று தாடகையை வதம் செய்தார். மிதிலையை அடைந்து வில்லை ஒடித்து ஜானகியை மணம் புரிந்தார். கூனியின் சூழ்ச்சியால் கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால் கானகம் சென்றார். சீதையை கவர்ந்து சென்ற ராவணனை தேடிச் செல்லும் வழியில் ராமன் வாலியை வதம் செய்து சுக்ரீவன், அனுமன் ஆகியோர் உதவியுடன் கடலுக்கு நடுவில் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்று போரில் ராவணனை அழித்து விபிஷணனை இலங்கையின் அரசனாக நியமித்தார்.



    பின்னர் அயோத்தி திரும்பி, முடிசூடி நல்ல முறையில் அரசாண்டார். ராமன் பிறந்தகாலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது. அதனால் ராமருடைய ஜாதகத்தை எழுதி, அதை பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய நவக் கிரகதோஷம் நீங்கும். வியாதிகள் குணமாகும். ஐஸ்வர்யங்கள் பெருகும்.

    விரதம் இருப்பது எப்படி? :

    ராமநவமியன்று அதிகாலையில் குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதம் கடைப்பிடிக்க வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

    சாதம், பாயசம், பானகம், வடை, நீர் மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். அன்றைய தினம் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படிப்பதும், பாராயணம் செய்வதுமாக இறை சிந்தனையோடு இருக்க வேண்டும். ராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டு களிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து ஸ்ரீராம பிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு, ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும்.

    இவ்வாறு வழிபடுவதால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்ப நலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும்.

    ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்துவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.

    சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பெளர்ணமி விரதம், நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை. நவராத்திரி என்பது விரமிருந்து கொண்டாடப்படுகிறது.
    நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னிகள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு; எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி. இந்த விரதம் புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது.

    முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரைவழிபடவேண்டும்.
    முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.
    இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.
    இடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.

    வீடுகளில் கொலுவைத்தல் நவராத்திரியின் விசேஷ அம்சமாகும். படிப்படியாக அமைக்கப்பட்ட விசேஷமான பீடங்களில் அல்லது மாடிப்படிகளில் விதவிதமான பொம்மைகள் வைத்து இக்கொலு அலங்கரிக்கப்படுகிறது.



    சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.

    நவராத்திரியின் ஒன்பதாம் நாளாகிய மஹாநவமியன்று சரஸ்வி பூஜை அல்லது கலைமகள் விழா அல்லது ஆயுத பூஜை என்றும் சிறப்பாக கூறுவர். நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப்பட்டுள்ளது. ஊசிநூல் கொண்டு தைத்தலும் கூடாது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாளினுல் வரும்போது எண்ணெய் தேய்காது நீராடி அந்த விரதத்தையும் கைகொள்ளலாம்.

    நவராத்திரி விரதத்தை முறையாகக் கைக்கொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜை முடித்தபின் பால்பழம், பலகாரம் என்பவற்றை உண்டு, நவமியில் உபவாசமிருந்து பத்தாம் நாள் விஜயதசமியன்று காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும். முடியாதவர்கள் முதலெட்டு நாளிலும் ஒரு நேர உணவுண்டு, கடைசி நாளில் பால் பழம் மட்டும் கொள்ளலாம்.
    ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதத்தை தொடர்ந்து வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினங்களில் கடைபிடித்து வந்தால் பெரும் செல்வம் கட்டாயம் வீடு தேடி வரும்.
    “ஏகாதசி விரதம், அசூய நவமி விரதம், அசோக அஷ்டமி விரதம், ரதசப்தமி விரதம், வாமன ஜெயந்தி விரதம், மஹாசிவராத்திரி விரதம், பௌர்ணமி விரதம், கார்த்திகை விரதம் போல எத்தனையோ விரதங்கள் தோன்றினாலும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருளைப் பெற முதன்மையாக இருக்கும் விரதம் ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம்தான்.

    ஸ்வாமிக்கே கடன் கொடுத்த குபேரனை வணங்குவோருக்கு குசேலருக்கு நிதி கிடைத்தது போல், அயாசகன் என்ற ஏழை பிராமணனுக்கு ஆதிசங்கரர் அருளால் தங்க நெல்லிக்காய் மழையாக அவர் வீட்டில் பெய்தது போல், பெரும் செல்வம் கட்டாயம் வீடு தேடி வரும்.

    ஐப்பசி மாதம் வரும் அமாவாசையன்று இப்பூஜை செய்வது விசேஷம். தவிர வெள்ளிக்கிழமையிலோ, பௌர்ணமி தினங்களிலோ இந்த பூஜையை செய்யலாம்.

    குபேர பகவான் படம், யந்த்ரம் அல்லது கலசத்திலோ ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை செய்யலாம். முதலில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை பூஜித்துவிட்டு குபேர பகவானை பூஜை செய்வது உத்தமம். நவக்கிரஹ தான்யங்கள் வைத்து அதில் நவக்கிரஹங்களை ஆவாஹனம் செய்து நவக்கிரஹங்களுடன் குபேர பூஜையை சேர்த்து செய்யலாம். குபேர பூஜையுடன் லோக பாலகர்களையும் நவக்கிரங்களையும் சேர்த்து பூஜிக்கும் வழக்கம் உண்டு.



    கோதுமையில் சூரியனையும், நெல்லில் சந்திரனையும், துவரையில் அங்காரகனையும், பச்சைப் பயறில் புதனையும், கொண்டைக் கடலையில் குரு பகவானையும், மொச்சையில் சுக்கிரனையும், கறுப்பு எள்ளில் சனீஸ்வர பகவானையும், கறுப்பு உளுந்தில் ராகுவையும், கொள்ளில் கேதுவையும் ஆவாஹனம் செய்து பூஜிப்பது விசேஷம்.

    இப்பூஜையை விரிவாக செய்ய முடியாதவர்கள் லக்ஷ்மியை அர்ச்சித்து வழிபாடு செய்து, குபேர பகவானையும் வழிபாடு செய்து அவர் மந்திரத்தையும் ஜபிக்கலாம்.

    விரிவாக செய்வதானால் ஸ்ரீசுக்தத்தால் மஹாலக்ஷ்மிக்கு சோடச உபசாரங்கள் செய்து லோக பாலகர், நவக்ரஹ பூஜை விரிவாக செய்து குபேர பகவானையும் அர்ச்சித்து விமரிசையாக பூஜை செய்யலாம்.

    ஓம் யக்ஷாய குபேராய வைச்ரவணாய தநதாந்யாதிபதயே தநதாந்ய ஸ்ம்ருத்திம் மே தேஹி தாபா யஸ்வாஹா

    என்னும் இந்த குபேர மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.

    இந்த விரதத்தை தொடர்ந்து வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினங்களில் கடைபிடித்து வந்தால் பெரும் செல்வம் கட்டாயம் வீடு தேடி வரும்.
    கோபத்தை கட்டுப்படுத்தி, சுய கட்டுப்பாட்டை வளர்ப்பதோடு அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி செயல்படுத்துவதோடு, நல்வழி பாதை நோக்கி தன் பயணத்தை செலுத்தவும் நோன்பு உதவுகிறது.
    ரமலான் நோன்பு உங்களுக்கு கேடயமாக உள்ளது என இஸ்லாம் கூறுகிறது. தீமைகளை நோக்கி செல்லாமல் நல்வழியை நடத்துவதால் நோன்பை கேடயம் என்கிறது. மனிதனின் நல்லொழுக்கம், பண்புகள், தருமம், ஆன்மிக ஈர்ப்பு இவை மட்டுமே நோன்பின் முக்கிய நோக்கம். தன் உடலை வருத்திக் கொண்டு மேற்கொள்ளும் நோன்பே இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் நோன்பு கடைப்பிடிக்கும் போது பசி, தாகம் போன்ற உடல் ரீதியான சிரமங்கள் ஏற்படும். அந்த சிரமத்தை தவிர்த்து நோன்பு வைக்கும் நற்குணம் இறைவனுக்கு மிகவும் பிடித்து விடுகிறது.

    நோன்பு காலங்களில் ஐந்து வேளை தொழுதல், குர் ஆன் படிப்பது, தர்மங்கள் அதிகம் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பொய் பேசுதல், தவறு செய்தல், புறம் பேசுவது, ஏமாற்றுவது என அனைத்து வகை குற்றங்களில் இருந்து நோன்பு இருப்பவர் இம்மாதத்தில் தடுத்து கொள்கிறார்.

    நோன்பு என்னும் ஓர் கேடயம் அவரை நல்வழிக்கு அழைத்து செல்கிறது. இந்த ஒரு மாத நோன்பு கால செயல்பாடுகள் அடுத்து வரும் மாதங்களிலும் தொடர்ந்து வருதல் வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். அதற்காகவே ‘ரமலான் மாதத்தில் உடலையும், மனதையும் நல்வழி நோக்கி செல்லுமாறு பக்குவப்படுத்துகிறான்.



    நோன்பு இருப்பது என்பது பட்டினி கிடப்பது அல்ல. உண்ண உணவும், வாய்ப்பும் இருந்தபோதும் அதனை உண்ணாத ஏழையின் பசிக்கொடுமை எப்படி இருக்கும் என்பதை அனுபவ ரீதியாக அறிந்து கொள்ள விழைகின்ற ஓர் தேடல். பசித்திருத்தல் என்பதுடன் சமூக ஒழுக்கத்தை பேணுகின்ற ஒரு பயிற்சியாகவும் நோன்பு அமைந்து விடுகிறது.

    நோன்பின் மூலம் ஒருவரது நாக்கு கட்டுப்படுத்தப்பட்டு உண்ணாமல், பருகாமல் மனதை பக்குவமடைய செய்கிறது. கோபத்தை கட்டுப்படுத்தி, சுய கட்டுப்பாட்டை வளர்ப்பதோடு அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி செயல்படுத்துவதோடு, நல்வழி பாதை நோக்கி தன் பயணத்தை செலுத்தவும் நோன்பு உதவுகிறது. உடல், மனம், புத்தி, செயல் என அனைத்தையும் ஒரே கட்டுக்கோப்புடன் செயல்பட செய்யவும், சுய கட்டுப்பாட்டை வளர்க்கவும் ரமலான் நோன்பு உதவி புரிகிறது.
    ×