என் மலர்
முக்கிய விரதங்கள்
சிவபெருமானுக்கு உகந்த சில விரதங்களை பற்றியும், இந்த விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இடப விரதம்
சிவபெருமானின் வடிவங்களில், இடபாரூடர் என்னும் காளை வாகனர் வடிவமும் ஒன்றாகும். சிவபெருமான் காளைக் கொடியும், காளை வாகனமும் கொண்டவர். சிவனும் சக்தியும் காளை வாகனத்தின் மேல் எழுந்தருளும் கோலத்தை இடபாரூடர் வடிவம் என்பர். ஈசனுக்குப் பல வடிவங்கள் இருந்தாலும், பெரும்பாலும் காளை வாகனராகவே திருக்காட்சி தந்து அருளுகின்றார். ஆகவே இந்த வடிவம் சிறப்புடையது. காளை வாகனரை வைகாசி மாத வளர்பிறையில் வரும் அஷ்டமியன்று விரதம் இருந்து வழிபட வேண்டும்.
கேதார கவுரி விரதம்
ஆணும், பெண்ணும் சமம் என்று ஈசன் வலியுறுத்திய அர்த்தனாரீஸ்வரரின் தோற்றம் உருவாக காரணமாக இருந்த விரதம் இது. கேதாரம் என்றால் வயல் என்று பொருள். இமயமலையிலுள்ள வயலில் ஈசுவரன் சுயம்பு லிங்கமாகத் தோன்றினார். ஆகையால், அவருக்கு கேதாரநாதர், கேதாரீஸ்வரர் என்ற பெயர் உண்டாயிற்று. கவுரி என்பது பார்வதி தேவியின் பெயர்களில் ஒன்று.
ஐப்பசி மாத அமாவாசை நாளில் இந்த விரதம் வரும். அதற்கு முன் தொடங்கி, 21 நாள் வரையில் பூஜை செய்ய வேண்டும். வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் அந்த ஒரு தினத்தில் மட்டும் உபவாசத்துடன் பூஜை செய்யலாம்.
மகா சிவராத்திரி விரதம்
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது, மகா சிவராத்திரி விரதம். இந்த விரதத்தை ஆண், பெண் வேறுபாடின்றி கடைப்பிடிக்கலாம். ஈசனை நினைத்து மேற்கொள்ளும் விரதங்களில் முதன்மையான விரதம் இது.

அன்று காலையில் குளித்து சிவாலய வழிபாடு செய்து, பகல் முழுவதும் இறை நினைப்புடன் நமசிவாய மந்திரத்தை கூற வேண்டும். இரவில் நடைபெறும் நான்கு கால சிவ வழிபாட்டில் கலந்து கொள்வதோடு, தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளை ஓத வேண்டும். மறுநாள் காலையில் குளித்துவிட்டு சிவாலய தரிசனம் செய்து பின் சிவனடியார்களுடன் உணவருந்தி விரதத்தினை நிறைவு செய்யலாம்.
உமா மகேஸ்வரர் விரதம்
சிவபெருமானின் வடிவங்களில், உமா மகேஸ்வர வடிவமும் ஒன்றாகும். மகேஸ்வரரின் அருள் சக்தியே உமாதேவி. ஞானமும், கருணையுமாக திகழும் உமாதேவி, மகேஸ்வரரைப் பார்த்துக் கொண்டிருக்கும் வடிவே ‘உமா மகேஸ்வர வடிவம்’ ஆகும். இவர்களைத் தியானித்து கார்த்திகை பவுர்ணமியில் விரதம்இருப்பது ‘உமா மகேஸ்வரர் விரதம்’ ஆகும். ஒருநாள் முழுவதும் விரதமிருக்க முடியாதவர்கள், பகலில் ஒரு பொழுது உண்ணலாம். அல்லது இரவில் எளிய சிற்றுண்டியையோ, சில பழத்துண்டுகளையோ சாப்பிடலாம்.
திருவாதிரை விரதம்
தாருகா வனத்தில் இருந்த முனிவர்கள், ‘கர்மாதான் மனிதனுக்கு பலனைத் தருகிறது. எனவே தனியாக ஈஸ்வரன் ஒருவர் தேவையில்லை’ என்ற கருத்தில் இருந்தனர். அவர்களை பக்தி மார்க்கத்தில் செல்ல வைப்பதற்காக, சிவபெருமான் பிட்சாடனராக உருவம் கொண்டார். அவரது பேரழகைக் கண்ட ரிஷி பத்தினிகள், ஈசனின் மீது மயக்கம் கொண்டனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள், சிவபெருமானை கொல்வதற்காக யாகத்தில் இருந்து வந்த யானையை அனுப்பினர். அதைக் கொன்று தோலை உடுத்திக்கொண்டார்.
பிறகு முயலகன் என்ற அரக்கனை அனுப்பினார்கள். அவனை தன்னுடைய காலில் போட்டு மிதித்தார். பிறகு உடுக்கை, மான், தீ, பாம்பு போன்றவற்றை ஏவினார்கள். அவற்றை ஆபரணங்களாகக் கொண்டு, நர்த்தனம் புரிந்தார் சிவபெருமான். அவர் நடனம் புரிந்த நாளே ஆருத்ரா தரிசனம். அது நிகழ்ந்தது ஒரு திருவாதிரை நட்சத்திரத்தில். எனவே அந்த நாளில் விரதம் இருந்து, காலையில் அபிஷேகத்தையும், தரிசனத்தையும் கண்டவர்களுக்கு மறு பிறவி இல்லை என்று சொல்லப்படுகிறது.
விரதமிருந்து மார்கழி அஷ்டமியை தர்மத் திருநாளாக மனதில் நினைத்துக் கொண்டு, நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்து இறையருள் பெறுங்கள்.
9-1-2018 படியளக்கும் திருநாள்
உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசி களுக்கும் சிவபெருமான் உணவு படியளக்கும் திரு விழாவே, அஷ்டமி பிரதட்சண சுவாமி புறப்பாடு ஆகும். இந்த விழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரிஷப வாகன சட்டத்தேர் உலாவாக கொண்டாடப்படுகிறது. இந்த படியளக்கும் திருநாளைப் பற்றிய ஒரு சுவாரசியமான கதை உண்டு. அதனை இங்கேப் பார்க்கலாம்..
ஒரு சமயம், பார்வதி தேவிக்கு மனதில் ஒரு சந்தேகம் வந்து விட்டது. அதாவது ‘அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் உணவு அளிக்கிறாரா? இல்லையா?’ என்று மனதுக்குள் கேள்வியை எழுப்பியவாறு இருந்தாள். கடைசியாக அதைச் சோதனை செய்தே பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். அதன்படி ஒரு எறும்பை எடுத்து குவளைக்குள் போட்டு அடைத்து வைத்து விட்டாள் பார்வதிதேவி.
சிவபெருமான் அன்றைய தினம் படியளக்கச் சென்று விட்டு திரும்பி வந்தார். அவரை இடை மறித்த பார்வதி, ‘அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளப்பதாக கூறுகிறீர்களே.. இன்று அனைத்து உயிர்களுக்கும் படியளந்து முடித்துவிட்டீர்களா?’ என்று எதுவும் அறியாததுபோல கேட்டாள்.
‘ஆம்.. அதில் உனக்கென்ன சந்தேகம்..?’ என்று சிவபெருமான் பதிலளித்தார்.
‘இன்று ஈசன் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட பார்வதி தேவி, எறும்பை அடைத்து வைத்திருந்த குடுவையை எடுத்து வந்தாள். அந்தக் குடுவையை திறந்து பார்த்தபோது, அதற்குள் இருந்த எறும்பு, ஒரு அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பார்வதி தேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிவபெருமானை மடக்க நினைத்தவர் திகைத்து விட்டார். அதனை தொடர்ந்து சிவபெருமானிடம் பார்வதி தேவி மன்னிப்பை வேண்டினார்.
எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு வழியில் படியளந்து விடுகிறார் இறைவன். மேற்கண்ட திருவிளையாடல் நடந்த நாள்- மார்கழி மாதத்தில் வருகிற தேய்பிறை அஷ்டமி திதி ஆகும். அன்றுதான் அஷ்டமி பிரதட்சணம் செய்யும் நாள்.

தர்மம் தலைகாக்கும் என்பர். மிகப்பெரிய அளவில் தான் தர்மம் செய்ய வேண்டும் என்பதில்லை; எளிய முறையில் தர்மம் செய்தாலே போதும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்த படியளக்கும் லீலை மதுரையம்பதியில் திருவிழாவாக நடத்தப்படுகிறது.
அன்றைய தினம் அருள்மிகு மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் வெளி வீதிகளில் உலா வருவார்கள். அந்தத் தேரினை பெண்கள் இழுத்து வருவார்கள்.
அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளக்கும் நிகழ்வை நினைவூட்டும் வகையில் அஷ்டமி சப்பரம் புறப்பாட்டின்போது கோவில் நிலத்தில் விளைந்த நெல் மணிகள், அரிசி ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மதுரையில் நடக்கும் விழாக்களில் சப்பர பவனி ஆடிவீதி, சித்திரை வீதி, மாசி வீதிகளில் நடப்பதே வழக்கம். ஆனால், படியளக்கும் விழா சப்பரம் மட்டும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வெளிவீதியில் உலா வரும். அதிகளவு மக்களுக்கும், குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.
விரதமிருந்து மார்கழி அஷ்டமியை தர்மத் திருநாளாக மனதில் நினைத்துக் கொண்டு, நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்து இறையருள் பெறுங்கள்.
சங்கடங்கள் அகன்று சந்தோஷம் பெருக வேண்டுமானால், மூல முதற்கடவுளாம் கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
சங்கட ஹர சதுர்த்தி:
ஒரு மனிதனுக்கு சங்கடம் என்பது ஒன்று மனதால் வருகிறது அல்லது பணத்தால் வருகிறது. இந்த சங்கடங்கள் அகன்று சந்தோஷம் பெருக வேண்டுமானால், மூல முதற்கடவுளாம் கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
சதுர்த்தி திதி தேய்பிறையில் வந்தால் அது சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகின்றது.
இது மாசிமாதம், தேய்பிறையில், செவ்வாய்க்கிழமையோடு கூடி வரும் சதுர்த்தி திதியில் விரதம் இருக்க துவங்கி ஓராண்டு வரை தேய்பிறை சதுர்த்தியில் நிறைவு செய்யும் ஒரு விரதமாகும். அதைத்தான் ஒரு வருடம் தொடர்ந்து விரதம் என்பதில்லாமல், ஒவ்வொரு தேய் பிறையில் வரும் சதுர்த்திக்கும் சங்கட ஹர சதுர்த்தி என்று விநாயகப் பெருமானை விதிப்படி பூஜிக்கிறோம்.
சஷ்டி விரதம்:
கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை முதல் மார்கழி மாதத்து சுக்லபட்ச சஷ்டி முடிய 21 நாள்களும் விநாயகரை வழிபட அனுஷ்டிக்கப்படும். இவ்விரதத்தில் 21 இழைகளினால் ஆன காப்புக்கயிற்றினை கணவனும்-மனைவியும் வல இடக்கரங்களில் அணிந்து விரத நோன்பை மேற்கொள்வர். முடிவு நாட்களில் பலவிதமான உணவுகளைப் பிறருக்குத் தானமாகக் கொடுத்து விரதத்தை முடிப்பர்.
சித்தி விநாயக விரதம்:
புரட்டாசி, வளர்பிறை சதுர்த்தியில் விநாயக விரதம் அனுஷ்டிப்பது. இது பிரஹஸ்பதியால் கூறப்பட்டு தரும புத்திரர் அனுஷ்டித்த புகழ் மிக்க விரதமாகும்.
விநாயக நவராத்திரி விரதம்:
பங்குனி மாதம் திருவொற்றியூரில் ஸ்ரீ கணேசர் உற்சவம் என்றும் ஒரு விழா கணபதி பெயரில் நடக்கிறது. விநாயகர் சதுர்த்திக்குப் பிறகு வரும் 9 நாட்களில் விநாயக நவராத்திரி என்று சிலர் கொண்டாடுவார்கள்.
ஒரு வருட காலத்திற்கு விரதம் செய்வதால் இடையில் இறப்பு, தீட்டுக்காலம் வந்தால் 16 நாட்கள் நிறுத்தி விட்டு அடுத்து வருகிற வெள்ளிக்கிழமை அன்று காக்கைக்கு காலையில் நெய் விட்டு வெறும் சாதத்தை போட்டு அது எடுத்த பின் விரத பூஜை செய்ய வேண்டும். திருமணமானவர்கள் விரத நாட்களில் பாயில் படுத்தல் கூடாது. காலையில் எழுந்து குளித்து விட்டு விநாயகரை நினைத்து தீபம் ஏற்றி ஒரு பொழுது விரதம் என்றும் ஒரு வேளை உணவு உண்டு இருக்க வேண்டும்.
கடன் தீர விரதம் இருப்பவர்கள் சிறு தொகையை பூஜையில் வைத்த பிறகு உரிய நபருக்கு கொடுக்க முயற்சித்தால் அந்த ஆண்டிற்குள் பெரும் தொகை கூட படிப்படியாக அடைந்து விடும்.
தொழிலில் லாபம் வேண்டும் என்று விரதம் இருப்பவர்கள் குயவர் மண்ணால் செய்த மண் பொம்மையையும் சேர்த்து வைத்து பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். இதற்கு ஸ்வர்ண கணபதி என்று பெயர்.
விநாயக விரதம் தொடங்குபவர்கள் பாதியில் விரதத்தை விடுதல் கூடாது. அப்படி விட நேர்ந்தால் 5 பேருக்கு அன்னதானம் இட்டு (6 மாதத்திற்குப் பிறகு) தொடர்ந்து செய்ய விரும்புகிற மற்ற ஆண்-பெண் ஏற்பளிப்பு ஒப்புதலோடு தாம்பூலத்தில் ஒரு ரவிக்கைத் துணி வைத்து கொடுத்து விடலாம்.
முருகனுக்கு உகந்த நாட்களிலும் செவ்வாய்கிழமைகளிலும் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும்.
வார விரதம் : செவ்வாய்கிழமை விரதம்
நட்சத்திர விரதம் : கார்த்திகை விரதம்
திதி விரதம் : சஷ்டி விரதம்
செவ்வாய்கிழமை விரதம்:
கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். மேலும் செவ்வாய்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், செவ்வாய்கிழமை விரதத்தை மிகவும் வலியுறுத்தி கூறி யுள்ளார்கள். அவர், திருத்தணிகை முருகனையும், கந்தக்கோட்ட முருகனை யும் முதல்நிலை கடவுளாகக் கொண்டி ருந்தார். செவ்வாய்க்கிழமை விரதத்தை கடைபிடித்தால் வாழ்வில் அமைதி உண்டாகும்!
கார்த்திகை விரதம்:
கார்த்திகைப் பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள். அவ்வாறு கந்தனை சீராட்டிபாராட்டி வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு ஒரு வாரம் அளித்தார். ‘கார்த்திகை பெண்களே, நீவிர் எம் குமாரனை இனிது வளர்த்த காரணத்தால் உங்கள் நாளான கிருத்திகா நட்சத்திரத்தன்று விரதம் இருந்து குமரனை வழிபடுவோர்கள் செல்வம், கல்வி, ஆயுள், உத்த பத்தினி, நன் மக்கட்பேறு முதலிய நலன்களை அடைவர்’ என்று அருள் புரிந்தார்.
கார்த்திகை மாதத்தில் வரும் பரணியன்று இரவில் உண்ணாதிருந்து கார்த்திகையன்று அதிகாலை நீராடி முருகவேளை வழிபாடு செய்ய வேண்டும். அன்று பகலில் உறங்குதல் கூடாது.
கார்த்திகை மாதம் விரதம் இருந்து தீப தரிசனம் செய்தல் மிகுந்த புண்ணியமாகும். கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தை முக்கியமாக வைத்து அண்ணாமலை தீபம் வருவதால் இதற்கு ‘கார்த்திகை தீபம்’ என்ற பெயரும் உண்டாயிற்று. இந்நாளில் இல்லம், கோவில், மடம், சத்திரம், மலை உச்சி, வாசற்படி, மண்டபம், மூலஸ்தானம், வியாபார ஸ்தலங்கள் ஆகியவற்றிலும் மங்களம் உண்டாகத் தீபங்களை ஏற்றலாம்.
கார்த்திகை மாத விரதத்தின் மகிமையை சிவபெருமான் கார்த் திகைப் பெண்களுக்கு அருளியுள்ளார். கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து வழிபடுவோர் சிவபெருமான், முருகப்பெருமான் அருளைப் பெறுவர்.
கார்த்திகை மாதம் பரணி நாளில் விரதம் தொடங்கி, வழிபாடு செய்து, அடுத்த நாள் கார்த்திகையில் விரதம் இருந்து முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் ரோகிணியில் காலையில் நீராடி, நித்திய வழிபாடு செய்ய வேண்டும். அடியார்களோடு கூடி உண்ண அன்னதானம் செய்யலாம். பின்னர் மாதந்தோறும் கார்த்திகை விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.
கார்த்திகை விரதத்தால் முருகன் அருளால் சகல செல்வயோகமிக்க பெருவாழ்வை பெறுவார்கள். விநாயகரின் கட்டளைப்படி நாரதமுனிவர் பன்னிரெண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்து கந்தனை வழிபட்டு தேவ முனிவர்களில் முதன்மை பெற்றார்.
கந்தர் சஷ்டி விரதம் :
கந்தர்சஷ்டி விரதம் ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலும் ஆறு நாட்களுக்கு ஸ்ரீ முருகப் பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும்.
ஆறுபடை வீடுகளிலும் முருகன் தலங்களிலும் இத்திருவிழா நடைபெறும். இந்த ஆறு நாட்களும் விரதம் இருப்பவர்கள் காலையில் நீராடி, உபவாசம் இருத்தல் வேண்டும். கோவிலிலோ அல்லது இல்லத்திலோ முருகனை வழிபாடு செய்து பாராயணம் செய்யலாம். இக்காலங்களில் திருப்புகழ், கந்தர்சஷ்டி கவசம், சண்முக கவசம், கந்தர் அனுபூமி ஆகியவற்றைப் பாராயணம் செய்தல் சிறப்பாகும்.
ஆறுதினமும் உபவாசம் இருந்து ஆறாம் நாள் இரவு பால், பழம் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது. உடல்நிலை இடம் கொடுக்காதவர்கள் தினமும் ஒரு வேளை மதியமோ அல்லது இரவோ பலகாரமோ அல்லது பால், பழமோ சாப்பிட்டுக் கொள்ளலாம்.
கந்தர் சஷ்டி விரதத்திற்குக் கணக்கற்ற பலன்கள் உண்டு. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழியாகும். சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பது இதன் பொருளாகும். கந்தர்சஷ்டி விரதத்தை முசுகுந்தச் சக்கரவர்த்தி அனுஷ்டித்து எல்லா நலன்களும் பெற்றுச் சிறப்புடையவர் ஆனார்.
தைப்பூசம் விரதம் :
தை மாதம் பூச நட்சத்திரம் தினத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபடுபவர்கள் மிகுந்த பலன்களை பெறுவார்கள். சமீபகாலமாக லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரு மாத காலம் விரதமிருந்து காவடி, பால்குடம் ஆகியவற்றை எடுத்துச் சென்று முருகனை வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
தைப்பூச விரதம் இருக்கும் வழக்கம் தமிழகத்தின் சில பகுதிகளில் சுமார் நானூறு ஆண்டு காலமாக வழக்கத் தில் இருந்து வருகிறது. பூசத்திற்கு சில ஊர்களில் வீடுகளில் பொங்கல் வைப்பது உண்டு. இதை பூசப் பொங்கல் என்று சொல்வார்கள்.
தைப்பூசத்திற்கு விரதம் இருப்பவர்கள், மிகவும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். மரணம் அடைந்த வர்கள் வீடுகளுக்கு கூட செல்ல கூடாது. எந்நேரமும் தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும். கந்தனை நினைத்து காவடி எடுத்து பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி வழிபடும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். அப்போது பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.
தைப்பூசத்தன்று முருகனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் நமது வாட்டத்தையெல்லாம் அவன் போக்கி விடுவான். வாழ வழியும் வகுப்பான்.
அம்பரீஷனின் இந்த உயரிய நிலைக்கு, அவனது ஏகாதசி விரதமே காரணம். இதைப்பற்றிய ஆன்மீக கதையை விரிவாக பார்க்கலாம்.
அம்பரீஷன் என்ற மன்னன், அனுதினமும் மகாவிஷ்ணுவின் நினைவிலேயே இருந்து வந்தான். இறைவனின் கீர்த்தனைகளைக் கேட்பதிலும், அவன் நாமங்களைச் சொல்வதிலும் அவன் கவனம் இருந்தது. நாட்டை ஆள்வதில் அதிகமாக கவனம் செலுத்தவில்லை.
மன்னனின் பக்தியை உணர்ந்த மகாவிஷ்ணு, நம் மீதுள்ள பக்தியால் மன்னன் நாட்டையும், நாட்டு மக்களையும் கவனிக்கத் தவறிவிடுகிறானே என்ற எண்ணம் கொண்டார். மன்னன் இப்படியே தொடர்ந்தால், நாட்டின் நிலை மோசமாகிவிடும் என்பதற்காக, தன்னுடைய சுதர்சன சக்ரத்தையே, மன்னனின் அரண் மனையில் வைத்துவிட்டார் திருமால். அந்த சக்கரத்தின் சக்தியால் நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லை.
மன்னனும் இறைவனின் நாமத்தைப் பாடுவதிலேயே கவனம் செலுத்தத் தொடங்கினான். ஒரு முறை ஏகாதசி விரதம் இருக்க முடிவு செய்தான் அம்பரீஷன். யமுனை நதிக்கரையோரம் ஒரு குடில் அமைத்து, அங்கேயே ஓராண்டு காலம் இருந்து ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தான். அதன்படி ஓராண்டு காலம், ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டித்து வந்தான்.
அந்த வருஷத்தின் கடைசி ஏகாதசி வந்தது. வழக்கம்போல் எல்லோருக்கும் போஜனம் செய்வித்து தானங்களை வழங்கி முடித்தான் அம்பரீஷன். அவனும் அவனுடைய மனைவியும் சாப்பிடவேண்டும்.
அந்த நேரத்தில் துர்வாச முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். அவரை வணங்கிய அம்பரீஷன், ‘முனிவரே! தாங்கள் உணவருந்தி, எங்களுக்கும் பிரசாதத்தை வழங்க வேண்டும்’ என்றான்.
துர்வாசரோ, ‘நீராடி விட்டு வருகிறேன்’ என்று எழுந்து நடக்கத் தொடங்கினார். ஏகாதசி விரதத்தை முடிப்பதற்கு அரை நாழிகைதான் மீதம் இருக்கிறது. ஆனால் துர்வாசரோ, வேண்டுமென்றே மெதுவாக நடந்து சென்று அம்பரீஷனை சோதித்தார்.
ஏகாதசி விரத காலம் முடியும் நிலை வந்து விட்டது. ஆனாலும் நீராடச் சென்ற துர்வாச முனிவரைக் காணவில்லை. காலம் கடந்து விட்டால், ஓராண்டு காலமாக கடைப்பிடித்து வந்த விரதம் அனைத்தும் வீண் என்று உணர்ந்த அம்பரீஷன், இதுபற்றி அங்கிருந்து பெரியவர்களிடம் கேட்டான்.
‘நீரில் ஒரு துளசி இலையை போட்டு, உட்கொள்ளுங்கள். அது சாப்பிட்ட மாதிரியும் கணக்கு; சாப்பிடாத மாதிரியும் கணக்கு. எனவே துவாதசி முடிவதற்குள் இதனை செய்யுங்கள்’ என்றனர்.
அம்பரீஷனும் அப்படியேச் செய்தான். ஆனால் அவன் துளசியை சாப்பிட்டது துர்வாசருக்குத் தெரிந்து விட்டது.
‘என்னுடன் அமர்ந்து உணவருந்துவதாகச் சொல்லிவிட்டு, இப்போது என்ன செய்திருக்கிறாய்? உனக்கு எவ்வளவு அகங்காரம்?’ என்றவர், தன் ஜடா முடியில் இருந்து ஒரு முடியை எடுத்துப் போட்டார். அதில் இருந்து புறப்பட்ட பூதம், அம்பரீஷனையும், அவனது குடும்பத்தையும் அழிக்க முற்பட்டது.
ஆனால் அம்பரீஷனின் பூஜை அறையில் இருந்த சுதர்சன சக்கரம் அங்கு வந்து, பூதத்தை வதம் செய்தது. பின்னர் அது துர்வாசரின் பக்கம் திரும்ப, அவர் தன்னை காத்துக் கொள்ள ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிந்தார். முதலில் பிரம்மனிடமும், பின்னர் சிவனிடமும் சென்று தஞ்சம் அடைந்தார். ஆனால் அவர்கள் இருவரும் கைவிரித்து விட, சுதர்சன சக்கரத்தை கையில் வைத்திருக்கும் திருமாலிடம் சென்றார்.
திருமாலோ, ‘துர்வாசரே! என் பக்தர்கள்தான் என்னுடைய எஜமானர்கள். அவர்களுக்குப் பிரச்சினை என்றால், அவர்களுக்காக நான் எதையும் செய்வேன். நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ள வேண்டுமென்றால், அம்பரீஷனையே சரணடையுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.
வேறு வழியில்லாமல் துர்வாசரும், அம்பரீஷனிடம் வந்தார். அதன் பிறகே சுதர்சனச் சக்கரம் தன்னுடைய ஆக்ரோஷ நிலையை கைவிட்டது. அம்பரீஷனின் இந்த உயரிய நிலைக்கு, அவனது ஏகாதசி விரதமே காரணம்.
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் அண்ணாமலையைக் கிரிவலம் வரும் பக்தர்களின் துயரங்கள் யாவும் தூள் தூளாகிச் சொல்லாமல் விலகும்.
சித்திரை மாதம் கிரிவலம் வந்தால் தான, தர்மம் செய்த பலன் கிடைக்கும்.
வைகாசி மாதம் கிரிவலம் வந்தால் செய்த பாவங்கள் தொலையும்.
ஆனி மாதம் கிரிவலம் வந்தால் உடல் ஆரோக்கியம் பலப்பட்டு நீண்ட ஆயுள் அடையலாம்.
ஆடி மாதம் கிரிவலம் வந்தால், உடற்பிணிகள், உள்ளப் பிணிகள் எல்லாம் விலகும்.
ஆவணி மாதம் கிரிவலம் வந்தால் சுபிட்சம் பொங்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறலாம்.
புரட்டாசி மாதம் கிரிவலம் வந்தால் சத்ரு நாசமடைவர். கேட்பது கிடைக்கும்.
ஐப்பசி மாதம் கிரிவலம் வந்தால் பட்டம், பதவி, புகழ், கீர்த்தி வந்தடையும்.
கார்த்திகை மாதம் கிரிவலம் வந்தால் அளவிட முடியாத சுக போகங்கள் கிட்டும். தலைமை தானாக வந்தடையும்.
மார்கழி மாதம் கிரிவலம் வந்தால் பதினாறு பேறும் பெற்று பெரு வாழ்வு கிட்டும்.
தை மாதம் கிரிவலம் வந்தால் செய்த பாவங்கள், தீவினைகள் நீங்கி நற்பயன்கள் தொடங்கும்.
மாசி மாதம் கிரிவலம் வந்தால் செல்வம் பெற்று கீர்த்தியுடன் வாழ்வர்.
பங்குனி மாதம் கிரிவலம் வந்தால் ஞானம் பெற்று மகானாய்த் திகழ்வர்.
சிவராத்திரி அன்று, தீபாவளி அன்று, கார்த்திகைத் தீபநாள் அன்று, வருடப்பிறப்பு அன்று அண்ணாமலையைக் கிரிவலம் வருபவர்கள் கோடிப் பங்கு அதிகப் பலனைப் பெறுவர்.
பவுர்ணமி அன்று அண்ணாமலையைக் கிரிவலம் வரும் பக்தர்களின் துயரங்கள் யாவும் தூள் தூளாகிச் சொல்லாமல் விலகும். ஒளி மிகுந்த எதிர்காலம் கண்களுக்குப் புலப்படும்.
தினந்தோறும் அண்ணாமலையைக் கிரிவலம் வருவோருக்கு கிடைக்கும் நன்மைகள் அளவிட முடியாது. அவர்களுக்கு இந்திர யோகம் கிடைக்கும்.
அண்ணாமலையைக் கிரிவலம் வரும் பக்தப் பெருமக்கள் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்துக் கிரிவலம் வந்தால் அவர்களது கஷ்டங்கள் கணப்பொழுதில் விலகும்.
விரதமிருந்து ஆருத்ரா தரிசனம் காண்போம்; நடராஜரின் அருள் பெறுவோம்; ஆண்டவனின் ஆனந்தத் தாண்டவம் பக்தர்களின் துன்பங்களை விலக்கட்டும்.
இன்று (ஜனவரி2) ஆருத்ரா தரிசனம்
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் சேர்ந்து வரும்போது சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு நிகழ்த்தப் பெறும் அபிஷேகத்தையும் அதனை கண் குளிரக் காணும் வைபவத்தையும் ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கிறோம். சிவ பெருமானுக்கு ஒரு மகாசிவராத்திரி என்பது போல நடராஜருக்கு ஒரு ஆருத்ரா தரிசனம் என்பது காலம்காலமாக இந்துக்களின் மத்தியில் தொடர்ந்து வரும் வழிபாட்டு முறை.
மார்கழியிலேயே அதிக குளிரான நாள் திருவாதிரை நட்சத்திரத்தன்று வரும் பவுர்ணமி நன்னாள். அன்று அதிகக் குளிர்ச்சியை விரும்பும் நடராஜப் பெருமானுக்கு ஆறுவிதமான அபிஷேகங்கள் செய்து மேலும் அவரை குளிர்விப்பது நமது அனைத்து துன்பங்களையும் தீர்த்துக் கொள்ளும் நடைமுறை. ருத்ரன் என்பது அக்னி வடிவமாகத் திகழும் சிவனது அம்சம் எப்போதும் குளிர்ச்சியை தன்னகத்தே இணைத்துக் கொள்ளும் அமைப்பு கொண்டது.
தலையில் முயல்வடிவம் பொறித்த சந்திரன், கங்கா தீர்த்தம், உடலெங்கும் குளிர்ச்சி வடிவமான சர்ப்ப மாலை, பாதத்தில் குளிர்ச்சியான மூலிகை சமித்துகள் கொண்ட குஞ்சிதபாதம், அருகில் சந்திர அம்சத்தில் இமாலயக் குளிர்ச்சியில் தோன்றிய அம்பிகை என்று குளிர்ச்சி தேடும் இறைவனை இராக்கால வேளையில் ஆறுவித அபிஷேகம் செய்து மேலும் குளிர்வித்து, சந்தனக்காப்பிட்டு மேலும் குளிர்ச்சி பெறச்செய்தால், அன்றாடம் துன்பத்தில், துயரத்தில் சுழன்று கொண்டிருக்கும் பக்தர்களின் மனவேதனை, உள்ளக் குமுறல் அனைத்தும் தீரும் என்பது அடியார்கள் நம்பிக்கை.
மார்கழிக் குளிரில் தூங்கிக் கொண்டிருக்கும் ஆன்மாவைத் தட்டியெழுப்பி, உடுக்கையொலி கொண்டு உயிர்ப்பித்து நடனமாடவிடுவது இறைவனின் திருவிளையாடல். துயில் கொண்டுள்ள ஆன்மாக்களுக்கு உணவளித்துப் போஷிப்பது, உயிர் கொடுக்கும் மூச்சுக் காற்றைத் தருவது எல்லாம் இறையருள் சிவத்தின் வேலை. சிவத்தை நோக்கி ஆன்மா நகர்ந்தால் அது உயிர் பெறும். அல்லது சவமாகும். இதுதான் வாழ்வியல் தத்துவம் என்பதை உணர்த்தும் அபிஷேக முறைதான் திருவாதிரை வழிபாடு;ஆருத்ரா தரிசனம்.
சிவம் என்பது அசையாதிருப்பது; ஞானசம்பந்தமாய் பரிமளிப்பது; அது ஆற்றல் வடிவமாகி ஆனந்த நடனம் புரிந்து ஆன்மாக்கள் வாழ வைக்கும் போது அது நடராஜ வடிவமாகிறது. சிவத்திற்கும், நடராஜ மூர்த்தத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான். எனவே தான் இதனை மெய்ப்பிக்கும் வகையில் ரத்தினசபை என்னும் திருவாலங்காட்டிலும், பொற்சபை என்னும் சிதம்பரத்திலும், வெள்ளியம்பலம் என்னும் மதுரையிலும், தாமிரசபை என்னும் நெல்லை செப்பறையிலும், சித்தரசபை என்னும் குற்றாலத்திலும் எம்பெருமான் எழுந்தருளி எல்லா ஜீவராசிகளுக்கும் அருள் பாலிக்கிறான். என்பதை பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.
பஞ்ச சபைகள் என்று இருந்தாலும், ஆருத்ரா தரிசனம் நிகழ்வதில் தனித்துவம் பெற்ற தலங்கள் தில்லைச் சிதம்பரமும், திருஉத்திர கோச மங்கையென்று போற்றப்படும் ஆதிச் சிவன் கோவிலும் என்று பக்தர்கள் பரவசம் கொள்கிறார்கள். பொதுவாக இறைவனுக்கென்று ஆறுகால பூஜைகள் நடந்தாலும் இரவு பத்து மணிக்குள்ளாக அனைத்தும் நிறைவு பெற்று விடும். ஆனால் திருவாதிரை அன்றுதான் இறைவனுக்கு இரவில் அபிஷேகம் நிகழ்கிறது. அதற்கும் உரிய காரணமாக அக்னி வடிவிலான ருத்திரன் குளிர்ச்சியான வேளையில், சந்தனம் கலந்த நன்னீரால் அபிஷேகம் பெறுவதை நமது முன்னோர் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதியுள்ளனர்.
சிதம்பரம் நடராஜருக்கு ஏன் திருவாதிரை வழிபாடு என்பதற்கும் வரலாறு ஒன்றுண்டு. சேந்தனார் என்ற புலவர் அன்றாடம் சிவவழிபாடு செய்த பின்னரே உணவருந்தும் வழக்கமுடையவர். பரம ஏழையான அவருக்கு ஒரு நாள் எந்த வகையிலும் உணவு தயாரிப்பதற்கான பொருள் கிடைக்கவில்லை. எனவே அவரும் அவரது மனைவியும் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்திருந்த வேளையில் மனைவி சொன்னாள்.
கொஞ்சம் மாவும், வெல்லமும் உள்ளது, அதைக் கொண்டு களி செய்து அடியார்க்கு உணவு படைக்கலாம் என்ற முடிவுக்கு வந்து, அதனை தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு சிவனடியார் பசியோடு அங்குவர, அவருக்கு அதனை வழங்கி மகிழ்ந்தார்கள். அடுத்த நாள் நடராஜர் சன்னதியில், தீட்சிதர்கள் பார்க்கும் போது சன்னதி முழுவதும் களி சிந்தியிருப்பதும் நடராஜர் திருவாயில் களியின் துகள்கள் இருப்பதைக் கண்டு திகைத்துப் போய் இத்தகைய கொடுமை செய்தது யாரென்று திணறிய போது சிவபெருமான் கனவில் தோன்றி சேந்தனார் பக்தி பற்றி கூறினார்.
அந்நாள் திருவாதிரை நட்சத்திர நன்னாள் ஆனது. அன்று தொடங்கி மார்கழி திருவாதிரை அன்று நடராஜருக்கு களி படைத்து வழிபாடு செய்வதும், ஆருத்ரா தரிசனம் என்று நடராஜரின் ஆடல் காண்பதும், வழக்கமாக வர ‘திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி’ என்ற பழமொழியும் பிறந்தது. ஆனால் திருவாதிரை அன்று களி செய்து நாம் மட்டும் உண்பதுஎன்றில்லாமல்... அன்றைய தினம், அன்னமின்றி தவிக்கும் ஓர் ஏழைக்கு உணவு போஷிப்பது நமது அனைத்து துன்பங்களும் விலக இறைவன் காட்டிய வழிமுறை என்பதை நம் மனதில் கொள்ள வேண்டும்.
நட்சத்திரங்களிலேயே ‘திரு’ என்ற அடைமொழி பெற்ற நட்சத்திரங்கள் இரண்டு தான். ஒன்று திருவோணம், மற்றொன்று திருவாதிரை. திருவோணம் பெருமாளுக்கு உரியது, திருவாதிரை சிவனுக்கு உரியது. இந்துக்களின் இரு பெருந்தெய்வங்கள் சிவனும், பெருமாளும் இரு தெய்வங்களின் நட்சத்திரங்கள் மட்டுமே ‘திரு’ என்ற அடைமொழியோடு அனுபவத்தில் உள்ளன. தில்லைச் சிதம்பரத்திலும், திருஉத்திரகோச மங்கையிலும் ஆருத்ரா தரிசனம் காண்பது பிறவியின் பெரும் பயன் என்றே கருத வேண்டும்.
விரதமிருந்து ஆருத்ரா தரிசனம் காண்போம்; நடராஜரின் அருள் பெறுவோம்; ஆண்டவனின் ஆனந்தத் தாண்டவம் பக்தர்களின் துன்பங்களை விலக்கட்டும், ருத்ரதாண்டவம் தீமையை அழித்து நன்மைகள் தரட்டும். உலகெங்கும் அமைதியும் ஆனந்தமும் பெருகட்டும்.
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே“ அனைவர்க்கும் அருள் செய்வாய்.
மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும்.
2-1-2018 ஆருத்ரா திருநாள்
கிருஷ்ண பரமாத்மா, ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று பகவத் கீதையில் கூறியிருப்பதைப் போலவே, ‘நட்சத்திரங்களில் நான் திருவாதிரை’ என்று சொல்கிறார். அந்த அளவுக்கு மகத்துவம் மிகுந்த நட்சத்திரம் திருவாதிரை. இது சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் என்பது கூடுதல் சிறப்பாகும்.
ஒரு சிறப்பு, மற்றொரு சிறப்புடன் சேரும்போது அவற்றின் சிறப்பு பன் மடங்காகும் என்பதில் சந்தேகமில்லை. அதன் அடிப்படையில் மார்கழி என்ற சிறப்பான மாதத்தில் வரும் சிறப்பு மிகுந்த நட்சத்திரம் திருவாதிரையும் பெரும் பேறு பெற்றதாக திகழ்கிறது. இந்த நட்சத்திர நாளில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்த வழிபாடானது பன் மடங்கு பலன்களையும், நலன்களையும், வளங்களையும் வாரி வழங்குவதாக உள்ளது.
நடராஜரின் ஆருத்ரா தரிசனம், அவரது ஐந்தொழில்களான ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே கோவில்களில் பஞ்ச கிருத்திய உற்சவம் நடந்து வருகிறது.
ஒரு முறை மகாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருந்தார். விஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்து தனது சேவையை செய்து கொண்டிருந்தாள் லட்சுமிதேவி. கண்களை மூடியபடி இருந்த திருமால் திடீரென்று, பரவச நிலைக்கு சென்று விட்டார். ஆனந்தத்தின் அவரது கைகள் தாளமிட்டன. மகாவிஷ்ணுவின் இந்த நிலையைக் கண்டு ஆதிசேஷனும், மகாலட்சுமியும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர்.
கண்விழித்து பார்த்த மகாவிஷ்ணுவிடம், தங்களின் சந்தேகத்தை ஆதிசேஷனும், மகாலட்சுமியும் கேட்டனர். ‘சுவாமி! என்றைக்கும் இல்லாத திரு நாளாக இன்று நீங்கள் மனமுருக அற்புதம் என்று கூறியதன் பொருள் என்ன?’ என்றனர்.
‘திருவாதிரை நாளான இன்று சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை என்னுடைய ஞானக் கண்ணால் பார்த்தேன். அதைக் கண்டு மெய்சிலிர்த்ததால் தான் அவ்வாறு கூறினேன்’ என்றார் மகாவிஷ்ணு.
அவர், சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றி சொல்லச் சொல்ல ஆதிசேஷனுக்கு உடல் சிலிர்த்தது. ஆதிசேஷனின் பரவசத்தை கண்ணுற்ற மகாவிஷ்ணு, ‘ஆதிசேஷா! உனது ஆசை எனக்குப் புரிகிறது. நீயும் சிவபெரு மானின் ஆனந்தத் தாண்டவத்தை பார்க்க வேண்டும் என்றால், பூவுலகில் பிறந்து, தவம் இருக்க வேண்டும். அப்போது அந்த அற்புத நடனத்தை நீ காணலாம். இப்போதே புறப்படு’ என்று கூறி அனுமதி அளித்தார் மகாவிஷ்ணு.
ஆதிசேஷனும் பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார். அவருடைய உடல் அமைப்பு, இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்புத் தோற்றமும் கொண்டதாக இருந்தது. பதஞ்சலி முனிவர் பல காலம் தவம் இருந்து வந்ததன் காரணமாக, ஒரு நாள் திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். ஈசன், தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை காட்டி அருளிய தினமே ஆருத்ரா தரிசன நாள் ஆகும்.
திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நிவேதனமாக களி செய்து படைப்பார்கள். ‘களி’ என்பது ஆனந்தம் என்றும் பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நிவேதனம் ஆகும்.
மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது. விபூலன், வியாக்கிரபாதர் போன்றவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து பலன் பெற்றுள்ளனர்.
பெற்றோரை இழந்தவர்கள், ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு, அதன் பலனை மூதாதையர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று சொல்வதற்கான காரணத்தை பார்க்கலாம்.
கம்பம் என்ற நகரில் வைகானசன் என்ற அரசன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள், கனவில் அவனுடைய பெற்றோர்கள் நரகத்தில் இருப்பது போலவும், அதிலிருந்து தங்களை விடுவிக்குமாறு அவனிடம் அழுது முறையிடுவது போலவும் கண்டான்.
இதற்கு ஏதாவது பரிகாரம் உடனே செய்ய வேண்டும் என வைகானசன் முடிவு செய்தான். காட்டில் கடும் தவம் புரிந்து வந்த முனிபுங்கர் என்ற முனிவரைச் சந்தித்து அவன் ஆலோசனைக் கேட்டான்.
தன்னுடைய ஞானதிருஷ்டியால் உண்மையை அறிந்த முனிவர் வைகானசனிடம், ‘நீ, உன் மனைவி, குழந்தைகளுடன் ஏகாதசி விரதமிருந்து அதை உன் மூதாதையர்களுக்கு அர்ப்பணம் செய்’ என்று ஆலோசனை கூறினார்.
அவனும், அவ்வாறே செய்ய, அதன் பலனாக, அவனுடைய பெற்றோர்கள் நரகத்திலிருந்து விடுபட்டு மைந்தனை வாழ்த்தி, சொர்க்கம் புகுந்தனர். அதனால்தான், பெற்றோரை இழந்தவர்கள், இவ்விரதத்தை மேற்கொண்டு, அதன் பலனை அவர்களுக்கு அர்ப்பணிக்கின்றனர்.
பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும்.
ருக்மாங்கதன் என்ற அரசர் இருந்தார். அவர் ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி தெரிந்துக் கொண்டார். அதனால் தன் நாட்டு மக்கள் யாவரும் பாவத்தில் இருந்து விடுபட்டு, புண்ணியம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஏகாதசி விரதத்தை கட்டாயமாக மக்கள் அனைவரும் அனுசரிக்க வேண்டும் என்று அரசாங்க உத்தரவிட்டார். இதனால் எட்டு வயது குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை அரசாங்கத்துக்கு பயந்தே ஏகாதசி விரதத்தை கடைபிடித்தார்கள்.
ஏகாதசி விரதத்தின் மகிமையால் நல்ல பலன் கிடைத்தது. நாடும், அந்நாட்டு மக்களும், அரசரும் சுபிட்சமாக வாழ்ந்தார்கள்.
ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு தேவர்களும், முனிவர்களும் திருமாலின் அருளைப் பெற்றனர். அன்று, பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும். மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
ராவணனின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழிமாத வளர்பிறை ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். திருமாலின் அவதாரமான ஸ்ரீ ராமனே பங்குனி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இருந்து பின் கடலை கடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையைவென்றார் என புராணம் தெரிவிக்கின்றது.
ஒருவருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மகா ராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அம்பரீஷ மகாராஜாவை திருமாலின் சுதர்சன் சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.
திருக்குறுங்குடி எனும் தலத்தில் பாணர் குலத்தைசேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று எம்பெருமானை பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராட்சசனுக்கும் சாப விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது.
பீமன் ஒர் ஆண்டுமுழுவதும் இந்த விரதத்தை செய்ய முடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பட்ச ஏகாதசியாகிய நிர்ஜலா எனும் விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டில் முழுபயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.
பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருசேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்த நாள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நம் முன்னோர்கள் ஏகாதசி தினத்தன்று விரதம் இருக்கும் அருமையான முறையை கொண்டு வந்ததற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு பிறகு சந்திரன் பூமியை சுற்றி வரும்போது ஒரு நாளைக்கு 12 டிகிரி என்ற அளவில் விலகிச் சென்று ஏகாதசியன்று சுமார் 120 டிகிரியிலிருந்து 132 டிகிரியில் இருக்கும். அப்போது பூமி, சூரியன் சந்திரன் ஆகியவை ஒரு முக்கோண நிலையை அடைகிறது. அப்போது மற்ற நாட்களை விட அதிக அளவு பூமியின் மீதும், பூமியில் உள்ள தண்ணீர் மீதும், சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் பாதிப்பு உண்டாகிறது.
மனித உடலிலும் 70 சதவீதம் நீர் நிறைந்திருப்பதால் ஏகாதசி தினத்தன்று மனித உடலும் சந்திரனின் ஆகர்ஷண சக்தியால் பாதிக்கப்படும். அதன் காரணமாக நமது உடம்பில் உள்ள ஜீரண உறுப்புகள் சரிவர வேலை செய்யாது. அத்தகைய சூழ்நிலையில் நாம் உணவருந்தினால் சரியாக ஜீரணமாவது கடினம்.
ஏகாதசி நாட்களில் தொடர்ந்து உணவை உட்கொண்டு வருபவர்களுக்கு அஜீரணமாகி சிறிய சிறிய நோய்கள் உண்டாகிவிடும். அந்த நோய்கள் பெரிய நோய்களாக மாறி விடக்கூடாது என தடுக்கவே நம் முன்னோர்கள் ஏகாதசி தினத்தன்று விரதம் இருக்கும் அருமையான முறையை கொண்டு வந்து அதை ஆன்மீகத்துடன் ஐக்கியப்படுத்தி உள்ளனர்.
மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம்; தீர்த்தங்களில் சிறந்தது கங்கை. அதே போல் விரதங்களில் சிறப்பானதும், மகத்துவம் மிக்கதும் ஏகாதசி விரதமாகும்.
29-12-2017 வைகுண்ட ஏகாதசி
மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம்; தீர்த்தங்களில் சிறந்தது கங்கை. அதே போல் விரதங்களில் சிறப்பானதும், மகத்துவம் மிக்கதும் ஏகாதசி விரதமாகும்.
சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, சுழற்சி முறையில் வரும் திதிகளில் ஒன்றுதான் ஏகாதசி. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இருந்து அடுத்து வரும் 11-வது திதியே ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் பதினொன்று என்பதற்கு ‘ஏகாதச’ என்று பொருளாகும். இந்த ஏகாதசி நாட்களில் பெருமாளை நினைத்து விரதம் இருப்பது சிறப்புக்குரியதாகும். ஆண்டிற்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். இவற்றில் மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ என்று வழங்கப்படுகிறது.
மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியில் பெருமாளை நினைத்து விரதம் இருந்து வந்தால், அவர் நமக்கு வைகுண்ட பதவி அருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுமட்டுமின்றி, கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து மற்றும் மனம் ஆகிய பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் யாவும், பதினொன்றாவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
முரன் என்னும் அசுரன், பல வரங்களைப் பெற்று, தேவர் களுக்கும், பக்தர்களுக்கும் துன்பங்களை அளித்து வந்தான். அவனிடம் இருந்து தங்களைக் காத்து அருளும்படி, அனைவரும் சிவபெருமானைத் துதித்தனர். ஈசனோ, அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுங்கள் என்று கூறினார். அதன்படி அனைவரும் திருமாலிடம் சென்று முறையிட்டனர்.
தேவர்களையும், மக்களையும் காக்க எண்ணிய மகாவிஷ்ணு, முரனுடன் போர் புரியத் தொடங்கினார். அவர்கள் இருவருக்குமான போர் பல ஆண்டுகள் நீடித்தது. இரு வரும் களைப்படைந்தனர். சற்றே ஓய்வு தேவை என்பதை அறிந்த இருவருமே ஓய்வெடுக்க முற்பட்டனர். அதன்படி மகாவிஷ்ணு, பத்ரிகாஸ்ரமம் என்ற இடத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.
ஆனால் நயவஞ்சகம் கொண்ட முரன், மகாவிஷ்ணு ஓய்வில் இருப்பதை தனக்கு சாதகமாக வைத்து அவரை கொல்லத் துணிந்தான். வாளை ஓங்கியபோது, மகாவிஷ்ணுவின் சரீரத்தில் இருந்து அவரது சக்தி ஒன்று பெண் வடிவில் வெளிப்பட்டது. அந்த சக்தி, முரனை அழித்து சாம்பலாக்கியது.
கண் விழித்து எழுந்த நாராயணர், தன் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்திக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டு, அவளை திதிகளில் ஒருவராக இருக்க பணித்தார். மேலும் ஏகாதசி திருநாளில் தன்னையும், ஏகாதசியையும் போற்றி வழிபடுபவர்களுக்கு நான் சகல நன்மைகளையும் அருள்வேன் என்றும் வரம் அருளினார்.
எனவே அந்த சிறப்பு மிக்க நாளில் நாமும் கண் விழித்திருந்து, ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் பெருமாளின் பரிபூரண அருளைப் பெறலாம்.






