என் மலர்
முக்கிய விரதங்கள்
வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், நாளை வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் சிறப்பான பலனை அடையலாம்.
ஏகாதசி விரதமிருப்பவர்கள், அதற்கு முன் தினமான தசமியன்று, ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ஏகாதசியன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ஏகாதசியன்று இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்த பிரசாதங்கள் கிடைத்தால் கூட சாப்பிடக்கூடாது என்று புராணங்கள் கூறுகின்றன.
அதே போல, ஏகாதசி விரதம் இருப்பவரைப் பலவந்தப்படுத்தி உண்ணச் செய்பவன் நரகத்திற்குச் செல்வது உறுதி என்கின்றன. அதன்பின், ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று, அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை வணங்கி துளசி தீர்த்தம் அருந்தி, சூரிய உதயத்திற்கு முன் பாரணை (விரதத்தை உணவு
உட்கொண்டு முடித்து கொள்வது) செய்ய வேண்டும்.
பாரணையில், அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்றவைகளுடன் நல்ல காய்கறிகளையும் சேர்த்து, உணவு சமைக்க வேண்டும். பாரணையை முடித்த பின், அன்று முழுவதும் தூங்கக் கூடாது.
துர்க்கை அம்மனை அஷ்டமி தினத்தில் விரதமிருந்து வழிபாடு செய்வது சிறப்புக்குரியதாகும். இந்த நாளில் விரதமிருந்து வழிபாடு செய்தால் சகல நன்மைகளும் வந்து சேரும்.
துர்க்கை அம்மனை அஷ்டமி தினத்தில் விரத வழிபாடு செய்வது சிறப்புக்குரியதாகும். வழிபாட்டின் போது, அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு வண்ண மலர்களைக் கொண்டு அம்பாளை அர்ச்சனை செய்யலாம்.
துர்க்கைக்கு விரதமிருந்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவைத்து, சண்டிகைதேவி சகஸ்ர நாமம் சொல்லி வழிபட்டால் சகல நன்மைகளும் வந்து சேரும்.
பரசுராமருக்கு, அமரத்துவம் அளித்தவள் துர்க்காதேவி என்று புராணங்கள் சொல்கின்றன. துர்க்கையை வேண்டிக்கொள்வதால், மனம் தெளிவுபெறும். துர்க்கா தேவியின் அற்புதத்தை விளங்குவது ‘துர்க்கா சப்தசதி’. இதில் உள்ள 700 ஸ்லோகங்களையும் படிப்பதால், மனம் சிறப்பான உணர்வுகளைப் பெற்று விளங்கும். நீங்கள் வேண்டிய அனைத்தும் எளிதில் நடந்தேறும்.
ஒரு வருட காலம் துர்க்காதேவியை தொடர்ந்து விரதமிருந்து வழிபட்டு வருபவருக்கு, முக்தி நிச்சயம் என்று சொல்லப்படுகிறது. துர்க்காதேவியை விரதமிருந்து அர்ச்சனை செய்து வழிபடுபவர்களை, பாவங்கள் ஒருபோதும் அண்டுவதில்லை.
வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் விரதம் இருந்து வழிபடுவதுடன், பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், இவ்வுலக வாழ்வு செழிப்படையும்.
பிரம்மதேவனை தன்னுடைய நாபிக் கமலத்தில் இருந்து படைத்தார், திருமால். இறைவனின் உடலில் இருந்து வெளிப்பட்டதை நினைத்து, பிரம்மனுக்கு அகங்காரம் ஏற்பட்டது. அதே நேரம், திருமாலின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டனர். அவர்கள் இருவரும், அகங்காரத்தில் இருந்த பிரம்மனை கொல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய திருமால், ‘பிரம்மனைக் கொல்ல வேண்டாம். உங்களுக்கு வேண்டிய வரத்தை நான் தருகிறேன்’ என்றார்.
அதைக் கேட்ட அசுரர்கள் இருவரும், ‘நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்களே உங்களுக்கு வரம் தருகிறோம்’ என்றனர்.
அவர்களின் அறியாமையை நினைத்து சிரித்த திருமால், ‘சரி! இப்படி அகங்காரம் கொண்ட நீங்கள், என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும்’ என்றார்.
அசுரர்கள் திகைத்தனர். தங்களின் அறியாமையை எண்ணி வருந்தினர். ‘இறைவா! எங்களுக்கு இந்த தண்டனை வேண்டாம். உங்களோடு நாங்கள் ஒரு மாத காலம் போரிட வேண்டும். அதன்பிறகு வதம் செய்யப்பட்டு, சித்தியடைய வேண்டும்’ என்று திருமாலை வேண்டினர்.
அவர்களின் வேண்டுதல்படியே, அசுரர்களிடம் போரிட்ட திருமால், இறுதியில் அவர்களை வதம் செய்தார். வதம் செய்யப்படும்போது, ‘இறைவா! தங்கள் பரம பதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்’ என்று அசுரர்கள் இருவரும் வேண்டினர்.
அதன்படி அவர்கள் இறந்தபிறகு, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று, வைகுண்டத்தில் வடக்கு வாசலைத் திறந்த திருமால், அதன் வழியாக அவர்களை உள்ளே அனுமதித்தார். அங்கே ஆதிசேஷன் மீது அருள்புரியும் அனந்தனின் திவ்விய மங்கல வடிவைக் கண்டு, அசுரர்கள் இருவரும் ஆனந்தம் அடைந்தனர்.
பின்னர் தங்களுக்குக் கிடைத்த இந்த பெரும்பேறு, உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்த அவர்கள், ‘இறைவா! வைகுண்ட ஏகாதசி அன்று உங்களைத் தரிசிக்கும் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்’ என்று வேண்டினர். அதனை இறைவனும் ஏற்றுக்கொண்டார் என்று புராணக் கதை ஒன்று சொல்கிறது.
வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் விரதம் இருந்து வழிபடுவதுடன், பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், இவ்வுலக வாழ்வு செழிப்படையும். மறுமை வாழ்வும் மகிழ்வும் வகையில் அமையும்.
வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம்.
சிறப்பு மிகுந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் கண் விழித்து நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் பருகலாம்.
மேலும் 7 முறை துளசி இலையை மட்டும் சாப்பிடலாம். குளிர்ந்த நீர், வயிற்றை சுத்தமாக்குகிறது. துளசி இலை வெப்பம் தரக் கூடியது. ஏகாதசி விரதம் இருப்பது மார்கழி மாதமான குளிர்காலம் என்பதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை உட்கொள்ள வேண்டும். முழு நாளும் உணவருந்தாமல் இருக்க முடியாதவர்கள், நெய், காய்கனிகள், பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.
இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் துதி முதலியவற்றை ஓதுவதுமாக இரவுப் பொழுதை உறங்காது கழிக்க வேண்டும்.
மறுநாள் துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை ‘பாரணை’ என்கிறார்கள். உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை போன்றவற்றைச் சேர்த்து சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.
மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாத விரதத்தால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும்.
ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் மிகவும் பயனுள்ள விரத தினமாகும். மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன.
இதில் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும். ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும் அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப் பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும் வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.
• சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி காமதா ஏகாதசி என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி பாப மோகினி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப்பெறும்.
• வைகாசி மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி மோகினி ஏகாதசி என்றும், தேய்பிறை ஏகாதசி வருதித் ஏகாதசி என்றும் கூறப்படுகிறது. இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள் அனைத்து இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
• ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி அபார ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.
• ஆடி மாதத்து வளர்பிறை ஏகாதசி சயனி என்றும் தேய்பிறை ஏகாதசி ஏகாதசி யோகினி என்றும் பெயர் பெற்றுள்ளது. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகராக பலன்கள் கிடைக்கப்பெறும்.
• ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது புத்ரஜா என்றும், தேய்பிறை ஏகாதசியானது காமிகா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.
• புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி பத்மநாபா என்றும். தேய்பிறை ஏகாதசி அஜா என்றும் பெயர் பெற்றது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.
ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும். அதற்காக மேன்மேலும் பாவங்கள் செய்து, அடுத்து வரும் ரத சப்தமியில் போக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது, தவிர ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.
குளிக்கும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி !
தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய !

ரத சப்தமி நாளில் ஸ்நானம் செய்யும் முறையும் வழிபடும் முறையும்:
ரத சப்தமியன்று காலை குளிக்கும்போது சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகளை ஏழு அல்லது ஒன்பது எண்ணிக்கையில் எடுத்து அடுக்கி, அதன்மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆணுக்கு அதனுடன் விபூதியும், பெண்ணுக்கு அதனுடன் மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும்.
இவ்விலை அடுக்கைத் தலைமீது வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு விரைவில் நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளையும் நோய்களையும் நீக்குகிறது என்றுதான் நம் முன்னோர்கள் இதைச் செய்தனர். நாமும் அதையே பின்பற்றி மேற்கூறிய பலனை அடையலாமே.
இப்படிக் குளித்தபின் வீட்டில் சூரியஒளி படும் சுத்தமான இடத்தில் செம்மண்ணால் மெழுகி சூரிய ரத கோலமிட்டு, அதில் சூரிய- சந்திரர்களை வரைய வேண்டும். பின் வண்ண மலர்களால் அலங்கரித்துப் விரதமிருந்து பூஜையை தொடங்க வேண்டும். இதற்குமுன் கிண்ணங்களில் அரிசி, பருப்பு, வெல்லம் வைத்து, நைவேத்தியத்திற்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடையும் வைக்க வேண்டும்.
அதன்பின் முதலில் கணபதி பூஜை, பின் சூரிய நாராயண பூஜை செய்ய வேண்டும். ஷோடச உபசாரத்துடன் இப்பூஜையைச் செய்தால் சூரியன் சாந்தியடைந்து உலகிற்கு நன்மை செய்வதுடன், பூஜிப்பவர்களுக்கும் வளமும் நலமும் தந்து சிறப்பாக வாழ வைப்பான்.
வீட்டில் குபேர லட்சுமி விரத பூஜையை அனுஷ்டிக்க சில விதிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள அஷ்டமி, நவமி இதெல்லாம் இல்லாத ஒரு வெள்ளிக் கிழமை இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். வெள்ளிக்கிழமை காலை நல்ல நேரத்தில் லட்சுமி குபேரன் படம், குபேர யந்தரம் இதையெல்லாம் எடுத்து பூஜையில் வைக்க வேண்டும். குபேரன் யந்த்ரம் படம் மட்டும் இருந்தால் வடக்கு திசையிலே வைக்க வேண்டும். படத்துக்கு முன்பு தலைவாழை இலையை வைத்து அதன் மீது நவதானியத்தையும் கலக்காம, சுற்றிலும் பரப்பி வைக்க வேண்டும்.
அதன் நடுவில் ஒரு செம்பை வைத்து சுத்தமான தண்ணீரால் நிரப்பி அதில் கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட்டு செம்பு மேல மஞ்சள் பூசின ஒரு தேங்காயை வெச்சு, சுற்றிலும் மாவிலையைச் செருகி கலசம் மாதிரி அமைக்க வேண்டும். வெற்றிலை பாக்கு, பழம் எல்லாத்தையும் கலசத்துக்கு முன்பு வையுங்கள். மஞ்சள் தூளில் தண்ணீர் விட்டு சின்னதா பிள்ளையார் பிடித்து வையுங்கள். பிறகு படம், யந்த்ரம், கலசம் மஞ்சள் பிள்ளையார் ஆகியவற்றுக்கு பூ, மாலை போடவும் ஊதுபத்தி ஏற்றி வைக்கவும்.

கிழக்கு பார்த்து அமர்ந்து, பிள்ளையார் மந்திரம் ஸ்லோகங்களைக் கூறவும், பின்னர் லட்சுமி ஸ்லோகம், துதியைக் கூறவும், குபேரனைப் பற்றிய ஸ்லோகம், மந்த்ரம், துதி ஆகியவற்றைக் கூறவும், எந்தத் துதியும் தெரியவில்லை என்றாலும் மனதிற்குள் கணபதி, லட்சுமி, குபேரனின் திருநாமங்களுடன் போற்றி சேர்த்துக் கூறவும். பின்பு உங்களால் முடிந்த நிவேதனத்தை செய்து பகவானுக்கு படைக்கலாம்.
வெற்றிலை, பாக்கு, பழத்தை சுமங்கலிகளுக்கும் தட்சணை பணத்தை ஏழைகளுக்கும் கொடுக்கவும். இந்த விரதத்தை யார் வேண்டுமானாலும் எப்போழுது வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம். அட்சய திருதியை நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும், செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் கூறுகிறது. இந்த நாளில் குபேர லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது.
வாரத்தின் துவக்கம் முதல் ஒவ்வொரு கிழமையும் கடைபிடிக்க வேண்டிய விரதங்களும், கடைபிடிக்கும் வழிமுறைகளையும் விரிவாக பார்க்கலாம்.
வாரத்தின் துவக்கம் முதல் இறுதி வரை பலவிதமான விரதங்களை நாம் கடைபிடிக்கின்றோம். ஒவ்வொரு கிழமையும் கடைபிடிக்க வேண்டிய விரதங்களும், கடைபிடிக்கும் வழிமுறைகளையும் விரிவாக பார்க்கலாம்.
ஞாயிறு :
ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்தது. சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்யஹருதிய ஸ்தோத்திரம் சொல்லலாம். சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து சூரியனுக்கு படைக்கலாம். பகலில் ஒரு வேளை உணவருந்திவிட்டு இரவில் பால், பழம் சாப்பிடலாம்.
திங்கள் :
திங்கட்கிழமை விரதம் சோம வார விரதம் ஆகும். சிவபெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தில் அனுஷ்டிக்க வேண்டும். ஒரு அந்தணரையும், அவர் மனைவியையும் சிவனாகவும், பார்வதியாகவும் பாவித்து பூஜை செய்து, தான தர்மங்கள் செய்ய வேண்டும். சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
செவ்வாய் :
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை அங்காரகனை வேண்டி விரதம் இருக்க நல்ல பலன் கிடைக்கும்.

புதன் :
புதனுக்குரிய தெய்வம் விஷ்ணு. புதன்கிழமை விரதம் புகழைக்கொடுக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து விரதம் இருந்தால் கல்வி, ஞானம் பெருகும்.
வியாழன் :
குரு பகவானுக்குரிய நாள் வியாழக் கிழமை. அந்தநாளில் விரதம் இருந்தால் எல்லா காரியங்களும் கைகூடும். குரு பகவானின் தோற்றமான தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை, வஸ்திரம், மஞ்சள், புஷ்பம் சாற்றி வழிபட வேண்டும்.
வெள்ளி :
வெள்ளிக்கிழமை விரதம் சுக்ரனுக்கும், அம்பாளுக்கும் உரியது. வெள்ளிக்கிழமையன்று சுக்ரனுக்கு விரதம் இருந்தால் சுபிட்சமான வாழ்வு உண்டாகும். கடன் தொல்லை நீங்கும்.
சனி :
சனிக்கிழமை அன்று வேங்கடவனை வழிபட்டால் எல்லா வித சிறப்பும் வந்தடையும்.
அம்பிகையே அனைத்திற்கும் மையம் என்று போற்றி விரதமிருந்து வழிபடும் முறையில் முதன்மையானது நவ ஆவரண விரத பூஜையாகும்.
அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாகவும், வேதங்கள் போற்றும் வேதநாயகியாகவும், உலகம் அனைத்திற்கும் தாயாகவும், மகா சக்கரவர்த்தினியாக பதினான்கு உலகங்களையும் அரசாட்சி புரிபவள் மாதா புவனேஸ்வரி ஆவாள். அம்பிகையே அனைத்திற்கும் மையம் என்று போற்றி விரதமிருந்து வழிபடும் முறை ‘சாக்தம்’ என்று வழங்கப்படுகிறது. அந்த முறையில் கடைப்பிடிக்கப்படும் பூஜைகளில் முதன்மையானது நவ ஆவரண விரத பூஜையாகும்.
மாதா புவனேஸ்வரி அம்பிகை, எல்லைகள் ஏதுமில்லா பாற்கடலின் நடுவே, ஸ்ரீசக்கரம் என்ற ஸ்ரீநகரத்தின் நடுவில் வீற்றிருக்கிறாள். கற்பக விருட்சங்கள் புடை சூழ, கேட்டதை அளிக்கும் சிந்தாமணி என்ற ரத்தினக்கற்களால் ஆன கரு வறையில், தனது பரிவாரங்களான மந்த்ரிணி, வராஹி, அச்வாரூடா என்ற சக்திகளுடன், மகா ராஜராஜேஸ்வரியாக, திரிபுர சுந்தரியாக, பஞ்ச பிரம்ம ஆசனத்தில் அமர்ந்து உலகம் அனைத்தையும் பரிபாலித்து வருகிறாள்.
ஸ்ரீசக்கரம் என்பது பொன்னாலும், ரத்தினங்களாலும் இழைக்கப்பட்டு, ஒன்பது பிரகாரங்களின் வாசல்கள் கொண்ட அற்புத கோட்டை ஆகும். அதன் மத்தியில் கோடி சூரிய பிரகாசத்துடன், கோடி சந்திரர்களின் குளிர்ச்சியுடனும், இமை மூடாத கண் கொண்ட மீன் போன்றும், மாதுளம்பூ நிறத்துடனும், ரத்தினங்கள் இழைக்கப்பட்ட கிரீடத்துடனும், அபயம் அளிக்கும் கரங்களுடனும் வேண்டிய வரம் அருளும் வகையில் மாதா புவனேஸ்வரி வீற்றிருக்கிறாள். ஸ்ரீசக்கரத்தில் உள்ள நாற்பத்து மூன்று முக்கோணங்களிலும் ஒவ்வொரு அம்பிகை இருந்து மாதா புவனேஸ்வரிக்கு சேவை புரிகிறார்கள். குதிரை படையை அச்வாரூடா, யானை படையை கஜமுகி, மந்திரியாக மந்த்ரிணி ஆகிய அம்பிகைகள் பரிபாலனம் செய்கிறார்கள்.
ஸ்ரீசக்கரத்தில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்கள் மற்றும் நடுநாயகமாக விளங்கும் மாதா புவனேஸ்வரிக்கும் சகல அம்சங்களுடன் செய்யப்படுவது நவ ஆவரண விரத பூஜையாகும். அதாவது, ஒன்பது வரிசைகளில் உள்ள தெய்வங்களுக்கான பூஜை, அர்ச்சனை, தர்ப்பணம் போன்றவற்றை குறிக்கிறது. ஒவ்வொரு வரிசைக்கும் உரிய பூஜை முடிந்ததும் ஒரு தீபாராதனை செய்யப்படும். அவ்வாறு ஒன்பது தீபாராதனைகளுக்கு பிறகு சுவாசினி பூஜை, கன்னியா பூஜை போன்றவை நடைபெறும்.
குறிப்பாக, புரஸ்சரணம் என்பது உடனடியாக பலன் தரும் விரத பூஜை முறையாகும். அது அர்ச்சனை, ஹோமம், தர்ப்பணம், பலி, போஜனம் எனும் வரிசை முறைகளில் கடைப்பிடிக்கப்படும். அதுபோன்ற விஸ்தாரமான பூஜையே நவ ஆவரண பூஜை ஆகும். இதில், ஹோமம் இல்லை என்றாலும், பூஜை செய்யும் சாதகன் தன்னையே ஹோம அக்னியாக பாவித்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
இந்த நவ ஆவரண விரத பூஜைக்கு உள்ள ஒரு சிறப்பு தர்ப்பணம் மற்றும் பூஜை ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் இணைந்து செய்யப்படுவதாகும். அதாவது, பூஜைக்கு மலர்களும், தர்ப்பணத்திற்கு பாலில் நனைக்கப்பட்ட இஞ்சி துண்டும் சேர்த்து அர்ச்சிப்பது இந்த பூஜையில் சிறப்பான அம்சமாகும். மேலும், குரு ஸ்துதியில் ஆரம்பித்து குரு வந்தனத்தோடு பூஜை முடிவதும் குறிப் பிடத்தக்கது.

மண்டப பிரவேச பூஜை, பூத சுத்தி, சங்கல்பம், குரு ஸ்தோத்திரம், அமரும் ஆசனத்திற்குரிய பூஜை, பூஜையில் ஈடுபடுபவர் தன்னை மந்திர மண்டலத்திற்குள் உட்படுத்திக்கொள்ளும் பூஜை, திக் பந்தனம், பிராண பிரதிஷ்டை, ஸ்ரீசக்கர பூஜை, அங்கம் மற்றும் கர நியாச பூஜைகள், கலச பூஜை, சங்கு பூஜை, அஷ்டகந்தம் எனும் வாசனை திரவியங்கள் கலந்த பாலுக்கு உரிய பூஜை, ஆவாகன உபசார பூஜை, சத்து மாவை விளக்காக கொண்டு தீபாராதனை காட்டும் மங்கள ஆராத்ரிகம் என்ற பூஜை, சதுராய தனம் எனும் சிறப்பு பூஜை, குரு மண்டல பூஜை ஆகியவற்றை தொடர்ந்து ஒன்பது வரிசைகளுக்கான பூஜை, பஞ்ச பஞ்சிகா பூஜை, மாதா புவனேஸ்வரிக்கு சிறப்பு பூஜை, தூப தீப நிவேதன பூஜை, பலிதானம், குரு வந்தனம், சுவாஸினி பூஜை, கன்யா பூஜை, வேத கோஷம், நிருத்ய அர்ப்பணம் என்ற நாட்டியம், கான அர்ப்பணம் என்ற பாடல் என்ற முறையில் நவ ஆவரண பூஜை அமைகிறது.
பூஜை முடிவில் ஸாமான்ய அர்க்கியம் எனும் வலம்புரி சங்கில் வைத்து பூஜை செய்த தீர்த்தம் தெளிக்கப்படுவதோடு, விசேஷ அர்க்கியம் என்ற பூஜை செய்து பால் விநியோகம் செய்யப்படும். சங்கு தீர்த்தம் மூலம் உடல் சுத்தமும், பூஜிக்கப்பட்ட பால் மூலம் மன சுத்தமும் கிடைப்பதாகவும் ஐதீகம். இந்த இரண்டு பிரசாதங்களையும் பெறுபவர்கள் அம்பிகையின் பரிபூரண அருளையும், பூஜையின் முழு பலனையும் பெறுகிறார்கள் என் பதும் ஐதீகம்.
ஸ்ரீசூக்தம், ஸ்ரீதேவசூக்தம் போன்ற சுருதிகளிலும், தேவ உபநிஷதம், கோனோபநிஷதம், பாவேனாபநிஷதம் போன்ற உபநிஷதங் களிலும், லலிதா சகஸ்ரநாமம் அடங்கிய பிரம்மாண்ட புராணம், துர்கா சப்தசதி, ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் நவ ஆவரண பூஜை முறைகள் மற்றும் குறிப்புகள் உள்ளன.
தரிசன பலன்கள்
குழந்தை பாக்கியம்
சகல தோஷ நிவர்த்தி
பிள்ளைகள் கல்வி மேன்மை
இனிய இல்லறம்
அஷ்ட ஐஸ்வர்ய பிராப்தி
உத்தியோக, வியாபார நன்மைகள்
நோய்கள் நீங்குதல்
விருப்பம் நிறைவேறுதல்
சவுகரியமான வாழ்வு
செல்வங்களை அதிகரிக்க ராகுகாலத்தில் விரதமிருந்து 11 சொர்ணாகர்ஷண பைரவருக்கு வழிபாடு செய்தால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிட்டும்.
அஷ்டமியில் அஷ்ட லட்சுமிகள் தங்கள் செல்வங்களை அதிகப்படுத்தி கொள்ள ராகுகால நேரத்தில் பைரவரை வழிபாடு செய்ததாக சாஸ்திரம் கூறுகிறது.
நாமும் ராகுகால நேரத்தில் விரதமிருந்து 11 சொர்ணாகர்ஷண பைரவருக்கு மந்திரத்தை கூறி வழிபாடு செய்தால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிட்டும்.
வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும்.
வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து 8 மாதமும் கோவிலுக்கு வந்து காசு வைத்து பூஜை செய்ய வேண்டும். 48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை ‘ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.
பவுர்ணமி என்பது விஸ்வரூப வடிவத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்களின் விரதம் இருந்து தரிசனம் பெற வேண்டிய நாளாக குறிப்பிடப்படுகிறது.
பவுர்ணமி நாள் என்றால் முழு நிலவு நாள் என்றும், அன்று கோவில்களில் சிறப்பான வழிபாடுகள் நடக்கும் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பவுர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, பவுர்ணமி நாளானது பகலில் தொடங்கி இரவில் முடிவது, பாதி பகல்- பாதி இரவாக அமைவது, இரவில் தொடங்கி பகலில் முடிவது என்று பவுர்ணமியில் பல்வேறு வகைகள் இருக்கின்றன.
பவுர்ணமி என்பது விஸ்வரூப வடிவத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்களின் விரதம் இருந்து தரிசனம் பெற வேண்டிய நாளாக குறிப்பிடப்படுகிறது. அதாவது, பூமியிலிருந்து வானளாவ எழுந்து நின்ற தெய்வ வடிவங்களின் தரிசனத்தை பவுர்ணமி நாளன்று பெறுவதன் காரணமாக, ஒருவரது உள்ளுணர்வு ரீதியான ஆன்மிக தன்மைகள் மேம்படுத்தப்படும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக, வெட்டவெளியில் அமைக்கப்பட்டுள்ள காளியம்மன், ஆஞ்சநேயர், அய்யனார், சங்கிலி கருப்பன் போன்ற தேவதா மூர்த்திகள் 20 அடிகளுக்கும் மேலான உயரத்தில் பல்வேறு இடங்களில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும். அவற்றை பவுர்ணமி நாட்களில் விரதம் இருந்து தரிசனம் செய்வது ஆன்மிக முன்னேற்றத்துக்கு உகந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அத்தகைய தெய்வ ரூபங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீண்ட காலம் ஆகியிருக்கும் பட்சத்தில் அவற்றின் அருள் பொழியும் சக்தி நிலைகளில் பூரணத்தன்மை அதிகமாக இருக்கும் என்றும் ஆன்மிக சான்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், ஆலய கோபுரங்களின் உயரத்தில் பல்வேறு தெய்வ மூர்த்தங்களின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் கோபுரம் மூலமாகவும் விஸ்வரூப தரிசனத்தை பெறலாம் என்ற காரணத்தை வைத்து ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்ற வழக்கும் இருக்கிறது. மேலும், மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெய்வ விக்கிரகங்களுக்கு பிரபஞ்ச சக்திகளை கிரகித்து, அந்த ஆற்றலை தன்னை தரிசிப்பவர்களுக்கு பல மடங்குகளாக திருப்பித்தரும் தன்மை உண்டு என்றும் ஆன்றோர்கள் மறைபொருளாக தெரிவித்துள்ளார்கள்.
இத்தகைய விஸ்வ ரூப மூர்த்திகள் இல்லாத ஊர்களில் இருப்பவர்கள் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் ஆலமரம், அரசமரம், வேப்பமரம் போன்ற பழமையான விருட்சங்களை பிரதட்சிணம் செய்து வழிபட்டு வரலாம். மேலும், பவுர்ணமி நாளின் விரதமிருந்து பகல் பொழுதில் செருப்பு அணியாமல் நடந்து சென்று ஆலய தரிசனம் செய்வது பல நன்மைகளை அளிப்பதாக குறிப்பிடப்படுகிறது. சம்பந்தப்பட்ட விஸ்வரூப மூர்த்தியின் நாமங்களை மானசீகமாக ஜபம் செய்வதும் நல்ல வழியே.
* அர்த்த பூர்ணிமம் என்பது பவுர்ணமி திதி, பகலிலும் இரவிலும் சரியாக அமைந்திருப்பதாகும்.
* பூர்வ பூர்ணிமம் என்பது பவுர்ணமி திதி இரவில் தொடங்கி இரவு முழுவதும் நிறைந்து பகலில் முடிவதாகும்.
* உத்தர பூர்ணிமம் என்பது பகலில் தொடங்கி இரவில் முடிவதாகும்.
* பாச பூர்ணிமம் என்பது பெரும்பாலான நேரம் பகல் பொழுதில் அமைந்து, இரவில் சிறிது நேரம் இருப்பதாகும்.
அனுமன் ஜெயந்தியன்று, அவரை நினைத்து விரதம் இருப்பது சிறப்புக்குரியதாகும். அன்றைய தினம் விரதம் இருப்பது சகல சவுபாக்கியங்களையும் பெற்றுத் தரும்.
ராமாயணத்தைப் பற்றியும், ராமரைப் பற்றியும் பேசும் போதெல்லாம், அனுமனைத் தவிர்க்க முடியாது. ராமாயணத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள், உயரிய காரியங்களைச் செய்திருந்தாலும் கூட, ராமபிரானுக்கு அடுத்தபடியாக மக்கள் அனைவரும் வணங்கும் இடத்தில் இருப்பது அனுமன் மட்டுமே. தன்னலம் கருதாது, எவ்வித பலனும் வேண்டாது ராமபிரானுக்கு சேவை செய்தவர் ஆஞ்சநேயர். அப்படிப்பட்ட பக்தர்களுக்கு கடவுளின் அருகில் இடம் பதிவு செய்யப்படும் என்பதையே, ஒவ்வொரு வைணவக் கோவில்களிலும் இருக்கும் ஆஞ்சநேயர் வடிவம் நமக்கு உணர்த்துகிறது.
சிறுவயதில் இருந்தே எவருடைய கட்டுப்பாட்டிற்குள்ளும் அடங்கி நிற்காத அனுமன், ராமருக்கும், அவரது ராம நாமத்துக்கும் மட்டுமே கட்டுண்டு இருந்தார் என்பதை புராணங்கள் வாயிலாக நாம் அறிய முடியும். ராமாயணத்தில் ராமபிரானுக்கு உதவி செய்வதற்காகவே, சிவ அம்சமாக, வாயு புத்தினராக அஞ்சனையின் வயிற்றில் தோன்றியவர் அனுமன்.

சுக்ரீவனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்து, ஸ்ரீராமரைச் சந்தித்தது முதல் அவரின் அடிபற்றியே நடந்தவர். அவருக்காக பல கடின காரியங்களைக் கூட சுலபமாக செய்து முடித்தவர். ராமரின் தூதனாகச் சென்று, இலங்கை நகரையே தீக்கிரையாக்கி, ராவணனுக்கே பயத்தைக் காட்டியவர். அவர் எப்போதும் பயம் என்ற ஒன்றை உணர்ந்ததே இல்லை. ராமநாமம் அவருக்கு அத்தகைய துணிவைக் கொடுத்திருந்தது.
வீர தீரம் கொண்ட அனுமனின் ஜெயந்தி தினத்தன்று, அவரை நினைத்து விரதம் இருப்பது சிறப்புக்குரியதாகும். அன்றைய தினம் விரதம் இருப்பது சகல சவுபாக்கியங்களையும் பெற்றுத் தரும். மனதில் உள்ள அச்சங்களைப் போக்கும் அற்புதமான விரதம் அனுமன் ஜெயந்தி வழிபாட்டு விரதம் என்றால் அது மிகையல்ல. அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து, உணவு உண்ணாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். ஆஞ்சநேயரை ராமநாமத்தை உச்சரித்து வழிபடுவதன் மூலமாக பல நன்மைகளைப் பெறலாம். மேலும் வடை மாலை, வெற்றிலை மாலை போன்றவற்றை அணிவித்தும், வெண்ணெய் சாத்தியும் வழிபடலாம்.
இல்லத்தில் அனுமன் படம் வைத்து, அனுமனின் வால் பகுதியில் குங்கும பொட்டு வைத்து வழிபடுவது விசேஷமானதாகும். அப்படி வழிபடும் போது, அவல், சர்க்கரை, தேன், கடலை, இளநீர் போன்ற பொருட்களை நைவேத்தியமாக படைக்கலாம்.
அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால் தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். மார்கழி மாதம் வளர்பிறை திரயோதசியன்று 13 முடிச்சுகளோடு கூடிய மஞ்சள் கயிற்றை கலசத்திற்குள் வைத்து `ஓம் நமோ பகவதே வாயு நந்தனாய' என்ற மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து மஞ்சள், தனம், பூ மேலும் மற்ற பூஜை பொருட்களால் பூஜை செய்ய வேண்டும்.
கோதுமை மாவினால் தயார் செய்யப்பட்ட 13 பூரி, வெற்றிலை பாக்கு, தட்சணையோடு ஒரு தட்டில் வைத்து தானம் கொடுக்கலாம். மேலும் அந்த நாளில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும் வழங்கலாம். அனுமன் விரத தொடக்கத்தில் இவ்வாறு செய்வதால் சகல காரியங்களும் வெற்றி அடையும்.
* வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்குரிய முக்கிய வழிபாட்டு தினங்களாகும்.
* ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.






