search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத சப்தமி விரதம்"

    • சூரிய பகவானை வழிபடுவது சிறப்பானது.
    • பீஷ்மரின் கர்மா விலகிய தினமாகவும் சொல்லப்படுகிறது.

    பல யுகங்களுக்கு முன் சூரிய பகவானின் ஒளி குறைந்தது. இதைக் கண்ட முப்பத்துமுக்கோடி தேவர்களும், பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனோ, விஸ்வகர்மாவை அழைத்து `சூரிய பகவானுக்கு விசேஷமான ஒளியை உண்டாக்க வேண்டும்' என்று கட்டளைவிட்டார்.

    அதன்படி விஸ்வகர்மா தன் திறமையால் அற்புதமான ஒளியை சூரியனுக்கு உருவாக்கிக் கொடுத்தார். இந்த தினத்தையே `ரத சப்தமி' என்று அழைக்கின்றோம். தை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதிக்கு, `ரத சப்தமி' என்று பெயர்.

    சூரிய பகவான் தன் ஒளியை மீண்டும் சிறப்பாகப் பெற்ற தினம் என்பதால், ரத சப்தமி அன்று சூரிய பகவானை வழிபடுவது சிறப்பானது.

    மேலும் இந்த ரத சப்தமி, பீஷ்மரின் கர்மா விலகிய தினமாகவும் சொல்லப்படுகிறது. இன்று சூரிய பகவானை வழிபட்டால், பீஷ்மருக்கு அருளியதுபோல இறைவன், நமக்கும் அருள்வார் என்பது நம்பிக்கை.

    பீஷ்மர் என்ற சொல்லிற்கு 'பயங்கர சபதம் செய்தவர்' என்று பொருள். இவர் நைஷ்டிக பிரம்மச்சாரி ஆவார். திருமணம் ஆகாமல், தன்னுடைய கலைகளைக் கொண்டிருப்பவர், `பிரம்மச்சாரி' என்று அழைக்கப்படுகிறார். அதே நேரம் 'வாழ்நாள் முழுக்க திருமணமே செய்து கொள்ள மாட்டேன்' என்று, சங்கல்பம் செய்து வாழ்பவர்கள் `நைஷ்டிக பிரம்மச்சாரி' எனப்படுகிறார்கள்.

    பீஷ்மருக்கு, அவர் விரும்பிய போது மரணம் அடைய முடியும் என்ற வரம் இருந்தது. அவர் பெண்களை எதிர்த்து யுத்தம் செய்ய மாட்டார். மகாபாரதத்தில் (பீஷ்ம பர்வம்) பத்தாவது நாள் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அந்த யுத்தத்தில் அர்ச்சுனனுடன் சிகண்டி வந்தான்.

    சிகண்டி முன்பிறவியில் 'அம்பா' என்னும் பெண்ணாக, காசிராஜனின் மூத்த மகளாக வளர்ந்தாள். இவள் அம்பிகா, அம்பாலிகா ஆகியோரின் சகோதரி. இந்த மூன்று பெண்களுக்கும் சுயவரம் நடந்த பொழுது, அஸ்தினாபுரத்தில் தன்னுடைய குலம் விருத்தியாவதற்காக விசித்திரவீரியனுக்கு மணம் முடிக்க, அவர்கள் மூவரையும் பீஷ்மர் போர் புரிந்து தூக்கிவந்தார்.

    இதில் அம்பா, 'சால்வ நாட்டு மன்னனிடம் மனதை பறிகொடுத்து விட்டேன். எனவே விசித்திர வீரியனை திருமணம் செய்து கொள்ளமாட்டேன்' என்று கூறியதால், அவளை திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால் பீஷ்மரிடம் தோற்றதால், போரில் வெல்லப்பட்ட அம்பாவை திருமணம் செய்ய சால்வ நாட்டு மன்னன் மறுத்துவிட்டான்.

    இதனால் மீண்டும் அஸ்தினாபுரம் வந்த அம்பா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பீஷ்மரிடம் கேட்டாள். அவரோ `நான் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி' என்று கூறி மறுத்தார். இதனால் கோபம் கொண்ட அம்பா, 'என்னால்தான் உன் உயிர் பிரியும்' என்று சபதம் செய்து தன்னை மாய்த்துக் கொண்டாள்.

    அவளே மறுபிறவியில் சிகண்டியாக பிறந்தாள். சிகண்டி பிறக்கும்போது பெண்ணாக இருந்து ஆணாக மாறியவள். எனவே அவளை எதிர்த்து யுத்தம் செய்ய பீஷ்மர் விரும்பவில்லை. யுத்த களத்தில் பலரையும் பதறவைத்த பீஷ்மர், சிகண்டியிடம் ``நீ யுத்தம் செய் அல்லது செய்யாமல் போ.. ஆனால் என்னை பொறுத்தவரை நீ பெண்தான். உன்னை எதிர்க்க மாட்டேன்' என்று யுத்தம் செய்வதை நிறுத்தினார்.

    இதையடுத்து சிகண்டி கூர்மையான அம்புகளால் பீஷ்மரை துளைத்தாள். ஆனால் அவருக்கு பெரிய துயர் எதுவும் உண்டாகவில்லை. அப்போது அர்ச்சுனன், தன்னுடைய அம்புகளை எய்தான். அது பீஷ்மரின் மார்பை துளைத்தது. அவர் கீழே விழுந்தார். அம்புகள் அவர் உடலை தாங்கியது. அதனால் அவர் உடல் மண்ணைத் தொடவில்லை. இருப்பினும் தலை தொங்கிக் கொண்டிருந்தது.

    அப்போது அர்ச்சுனன் தன் வில்லில் இருந்து மூன்று பானங்களை எய்தான். அவை முக்காலியைப் போல் அவர் தலையைத் தாங்கின. தன்னுடைய இறப்பை தானே தீர்மானிக்கும் வரம் பெற்றிருந்ததால், உத்தராயன காலத்தில் தன் உயிரைத் துறக்க பீஷ்மர் எண்ணியிருந்தார். ஆனால் அவருக்கு மரணம் வரவில்லை.

     இதனால் அவா் அங்கு வந்த வியாசரிடம் "நான் என்ன பாவம் செய்தேன்?" என்று கேட்டார். அதற்கு வியாசர், "நீ பாவம் செய்யவில்லை. இருப்பினும் பாவங்களுக்கு துணை போனாய். என்னை காப்பாற்றுங்கள் என திரவுபதி கேட்ட பொழுது, அவளுக்கு நடந்த கொடுமையை நீ தடுக்கவில்லை. உன் கண்களால் அதை பார்த்தாய். தலை குனிந்தாய். துச்சாதனனை எதிர்க்கக் கூடிய அளவு உனக்கு பலம் இருந்தும், ஆயுதங்களை கையில் ஏந்தவில்லை. மவுனமானாய். இப்படி அனைத்து அங்கங்களாலும் பாவம் செய்ததன் பலனைத்தான் இப்போது அனுபவிக்கிறாய்" என்றார்.

    ``இதற்கு என்ன பிராயச்சித்தம்'' என்று பீஷ்மர் கேட்க, "நீ அங்கங்களினால் செய்த பாவம் நீங்க வேண்டும். அதன்பின் உனக்கு மரணம் உண்டாகும். எனவே சூரியனுக்கு உகந்த எருக்கம் இல்லைகளை உன் உடலில் பரப்புகிறேன். எருக்க இல்லையை 'அர்க்க பத்திரம்' என்பார்கள். அதன் மூலமாக உன்னுடைய கர்மா விலகி உனக்கு மரணம் உண்டாகும்" என்றார். அதன்படி பீஷ்மர் செய்த பாவங்களுக்கான கர்மா விலகிய தினம், ரத சப்தமி ஆகும்.

    விரதம் இருப்பது எப்படி?

    ரதசப்தமி விரதம் இருக்க நினைப்பவர்கள், காலை எழுந்து எருக்கம் இலையை தலையில் வைத்து, அதற்கான சுலோகத்தை சொல்லி நீராட வேண்டும். இலந்தை இலையை தலையில் வைத்துக் கொண்டு மஞ்சள் சேர்த்து நீராடும் வழக்கமும் உண்டு. இதில் தந்தை இல்லாதவர்களும், கணவனை இழந்த பெண்களும், வெண்மையான பச்சரிசி உடன் கருப்பு எள்ளும் கலந்து தலையில் வைத்து நீராட வேண்டும்.

    ரதசப்தமி அன்று காலை ஒரு சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி அழகான ரதம் வரைய வேண்டும். அதன்பின் சூரிய - சந்திரர்கள் பவனி வருவதாக வரைந்து (கோலமிட்டு), சந்தனம், குங்குமம், அட்சதை, பல வாசனை மலர்களால் வழிபாடு செய்ய வேண்டும்.

    இவ்விதம் சூரிய நாராயணரை பூஜித்த பின், சர்க்கரை பொங்கல், உளுந்து வடை போன்றவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். சூரிய பகவானை முறைப்படி நீராடி வழிபாடு செய்வதால் இல்லத்தில் உள்ள தோஷங்கள் விலகும்.

    பூஜை முடிந்தபின் கீழ்கண்ட 12 நாமங்களை சொல்லி சூரிய பகவானை பன்னிரண்டு தடவை வணங்க வேண்டும்.

    1) ஓம் மித்ராய நமஹ,

    2) ஓம் ரவையே நமஹ,

    3) ஓம் சூர்யாய நமஹ,

    4) ஓம் பானவே நமஹ,

    5) ஓம் ககாய நமஹ,

    6) ஓம் பூஷ்னே நமஹ,

    7) ஓம் ஹிரண்யகர்பாய நமஹ,

    8) ஓம் மரீசயே நமஹ,

    9) ஓம் ஆதித்யாய நமஹ,

    10) ஓம் ஸவித்ரே நமஹ,

    11) ஓம் அர்காய நமஹ,

    12) ஓம் பாஸ்கராய நமஹ.

    ×