search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் விரதம்"

    முழு முதற்கடவுளான விநாயகருக்கு உகந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். இந்த விரதம் தோன்றியதன் பின்னணி வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    விநாயகர், முழு முதற்கடவுள். அவருக்கு உகந்த விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம். இந்த விரதம் தோன்றியதன் பின்னணி வரலாறு வருமாறு:-

    ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்த போது, அங்கு விநாயகர் விளையாடிக் கொண்டு இருந்ததை பார்த்தான். விநாயகர் குதித்துத் குதித்து விளையாடுவதற்கு ஏற்ப, அவருடைய தொந்தியும் குலுங்கி கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும், சந்திரனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. விநாயகரை பார்த்து கேலியாகச் சிரித்தான். அந்த சிரிப்பு விநாயகருக்கு கோபத்தை வரவழைத்துவிட்டது. உடனே ‘நீ தேய்ந்து மறையக்கபடவாய் என்று சந்திரனைச் சபித்து விட்டார்.

    சந்திரன் மறைந்ததால், உலகம் இருளில் மூழ்கியது. தேவர்கள் விநாயகரை சரண் புகுந்தார்கள். தன் தவறுக்கு வருந்திய சந்திரனும் தன்னை மன்னிக்குமாறு வேண்டித் தவம் புரிந்தான். மனம் இரங்கிய விநாயகர், சந்திரனைத் தன் தலையில் சூடிக் கொண்டார்.

    ‘பாலசந்திரன்’ என்ற பெயருடன் அருள்பாலித்து, சந்திரனுக்கு வளரும் தன்மையைத் தந்தார். அதாவது, 15 நாட்கள் மெல்லத் தேய்ந்து (தேய் பிறை), பின்பு 15 நாட்கள் மெல்ல வளரும்படியான (வளர்பிறை) வரத்தை அருளினார். அப்படி, சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி.

    ‘சங்கடஹர’ என்றால், ‘சங்கடத்தை (துன்பத்தை) நீக்குதல் என்று பொருள். உலக வாழ்வில் நாம் செய்த கர்மவினையின் பலனாக வரும் எல்லாவித இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளைத் தருவதால் அன்றைய தினம் இருக்கும் விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.

    சங்கடஹர சதுர்த்தி மாதம் தோறும் வரும் என்றாலும், விநாயகர் அவதரித்த ஆவணி மாதத்தில் பவுர்ணமிக்கு பிறகு வரும் (தேய்பிறை) சதுர்த்தி, மஹா சங்கடஹர சதுர்த்தி என்று கூடுதல் சிறப்பு பெறுகிறது. அன்றைய தினத்தில் விநாயகரை வணங்கி, வழிபடுவோருக்கு, சகலவிதமான சங்கடங்களும் விலகும், சந்தோஷம் பெருகும்.
    ×