என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    சதுரங்கவல்லப நாதர் திருக்கோவிலில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மனை வேண்டிக்கொண்டால் எலிக்கடி, விஷப்பூச்சி நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.
    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது பூவனூர் திருத்தலம். இங்கு சதுரங்கவல்லப நாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிச் சன்னிதி உள்ளது.

    அதற்கு அடுத்தாற்போல், தமிழ்நாட்டில் இந்த ஆலயத்தில் மட்டும் தான் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிச் சன்னிதி இருப்பது விசேஷமாகும். இந்த அம்மனை வழிபட்டால் விஷக்கடிகள் குணமாகி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. எலிக்கடி, விஷப் பூச்சி கடிகளுக்கு இந்த ஆலயத்தில் தரும் வேரை கட்டிக் கொண்டால், விஷம் இறங்கி விடுவதாக கூறுகிறார்கள்.

    விஷக்கடி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை காலையில் சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னிதி முன்பாக உள்ள சூலத்தின் எதிரே நின்று தங்கள் கையில் வேர் கட்டிக் கொண்டால், விரைவில் நோய் குணமாவது அதிசயமாக உள்ளது.

    குழந்தைப்பேறு, இல்லாதவர்களின் அம்மனை வேண்டி, இந்த கோவில் ஸ்தல விருட்சத்தில் தொட்டில் கட்டி பிராரத்தனை செய்தால், அவர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும்.
    பொள்ளாச்சியில் இருந்து வடக்கிபாளையம் வழியாகப் பயணித்தால் 11கி.மீ தொலைவில் சூலக்கல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் அன்னை அமர்ந்த நிலையில் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில், வலது கைகளில் உடுக்கையும் சுத்தியும்; இடது கைகளில் சூலமும் கபாலமும் ஏந்தி எழில் கோலத்தில் அருள்பாலிக்கிறார். வடக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. பொதுவாக பெண காவல் தெய்வங்கள் வடதிசை நோக்கி இருப்பதை பழங்கால மரபு "வடக்கு வாயிற் செல்வி' என சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

    அம்மை நோயையும், கண்நோயையும் தீர்ப்பதில் கண்கண்ட தெய்வமாய் திகழ்கிறாள், சூலக்கல் மாரியம்மன். அவளது அபிஷேக தீர்த்தத்தை கண்நோய் கண்டவர்கள் தங்கள் கண்களில் இட்டு குணம் பெறுகின்றனர்.

    குழந்தைப்பேறு, இல்லாதவர்களின் அம்மனை வேண்டி, தல விருட்சத்தில் தொட்டில் கட்டி பிராரத்தனை செய்தால், அவர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறுகிறாம். குழந்தை பிறந்தவுடன் அம்பிக்கு நேர்த்திக் கடன் செலுத்தவும் அவர்கள் தவறுவதில்லை.

    விழுப்புரத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ள பரிக்கல் ஸ்தல ஸ்ரீநரசிம்மரை வழிபட, கடன்களும் நோய்களும் தீரும்; எதிரிகளால் ஏற்படும் ஆபத்துகள் விலகும் என்பர்.
    தென்தமிழ் நாட்டில் ஸ்ரீநரசிம்மர் குடியிருக்கும் சில தலங்களை, அஷ்ட நரசிம்ம தலங்களாகப் போற்றுவர். அவற்றுள் குறிப்பிடத்தக்கது பரிக்கல். விழுப்புரம்- உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில், விழுப்புரத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது பரிக்கல்.

    ஸ்ரீநரசிம்மருக்காக வசந்தராஜன் என்ற மன்னனால் ஆரம்பிக்கப்பட்ட கோயில் திருப்பணி, பரிகலாசுரனால் தடைப்பட்டது. அரசன், தன் குருநாதரான வாமதேவ முனிவரை அணுகினான். வேறோர் இடத்தில் கோயில் கட்டுமாறு அறிவுறுத்திய வாமதேவர், அதற்காக மூன்று நாட்கள் இரவும் பகலும் இடையறாது வேள்வி நடத்துமாறும் மன்னனைப் பணித்தார். அதன்படியே வேள்வி தொடங்கியது.



    அதையறிந்து ஆவேசத்துடன் வந்த அசுரன், வேள்விச்சாலையைச் சிதறடித்தான். மன்னனைத் தேடினான். வசந்தராஜனோ, குருதேவரின் அறிவுரைப்படி புதரில் மறைந்திருந்து, மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருந்தான். அசுரன், புதரை விலக்கி மன்னனைத் தாக்கினான்; கோடரியால் வசந்தராஜனின் தலையைப் பிளந்தான்.

    முன்பு, தூணைப் பிளந்து வெளியேறி இரண்யனை வதைத்த நரசிம்மர், இப்போது அசுரனால் பிளக்கப்பட்ட வசந்தராஜனின் தலையில் இருந்து தோன்றி, பரிகலாசுரனை வதைத்தார். பிறகு, மன்னனை உயிர்ப்பித்து, ஸ்ரீலட்சுமி நரசிம்மராகக் காட்சி தந்தார். பரிகலாசுரனை வதைத்ததால் இந்தத் தலம் பரிகலாபுரம் எனப்பட்டு, பிறகு பரிக்கல் என்று மருவியதாம். இந்தத் தலம் வந்து ஸ்ரீநரசிம்மரை வழிபட, கடன்களும் நோய்களும் தீரும்; எதிரிகளால் ஏற்படும் ஆபத்துகள் விலகும் என்பர்.
    தஞ்சாவூர் மாவட்டத்தில் காமரசவல்லி என்ற ஊரில் உள்ள கார்கோடேஸ்வரர் கோவிலில் இறைவனை வேண்டிக்கொண்டால் பிரிந்த தம்பதியர் சேருவார்கள்.
    தஞ்சாவூர் மாவட்டத்தில் காமரசவல்லி என்ற ஊரில் உள்ளது கார்கோடேஸ்வரர் கோவில். இந்த ஆலயம் கடக ராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாக விளங்குகிறது. ரதி தேவிக்கு சிவபெருமான், மாங்கல்ய பாக்கியம் அருளிய தலம் இதுவாகும். எனவே இங்கு வந்து இறைவன் கார்கோடேஸ்வரரையும், இறைவி காமரசவல்லி தாயாரையும் வேண்டிக்கொண்டால் பிரிந்த தம்பதியர் சேருவார்கள்.

    கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும் என்கிறார்கள். இந்த ஊரில் ஒவ்வொரு ஆண்டும் காமன் பண்டிகை நடத்தப்படுகிறது. இந்த விழாவின் போது இரண்டாக வெட்டிய ஆமணக்கு செடியை நட்டு வைப்பார்கள். இருப்பினும் இந்தச் செடி, 8 நாட்களுக்குள் மீண்டும் தழைத்து விடுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் காமரசவல்லி ஊர் உள்ளது.
    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில். இந்த ஆலய அம்மனை வழிபட்டால், நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில். தஞ்சைப் பகுதியை ஆண்ட சோழ மன்னர்கள், தஞ்சையைச் சுற்றிலும் எட்டு திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்து வழிபட்டு வந்ததாகவும், அதன்படி கீழ்திசையில் அமைந்த காவல்தெய்வமே புன்னைநல்லூர் மாரியம்மன் என்றும் கூறப்படுகிறது.

    இந்த அம்மன் வெப்பு நோயை விரட்டும் தேவியாக, புற்றுருவாய் புன்னை வனத்தில் எழுந்தருளியிருக்கிறாள். இந்த ஆலயத்தில் உள்ள கருவறையில் வீற்றிருக்கும் அன்னையின் உருவம் புற்று மண்ணால் ஆனது. எனவே இங்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் தைலக்காப்பு செய்யப்படுகிறது. அந்த ஒரு மண்டலமும் அன்னையின் உக்கிரம் அதிகமாகும் என்பதால், இளநீர் மற்றும் தயிர் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

    கோடை காலத்தில் அம்மனின் சிரசிலும், முகத்திலும் முத்து முத்தாக வியர்த்து இருப்பதை இன்றும் காண முடியும். எனவே இந்த ஆலய அம்மனை ‘முத்துமாரியம்மன்’ என்றும் அழைப்பார்கள். உடலில் தோன்றும் பரு, கட்டி, அம்மை நோய் போன்றவற்றுக்கு இங்கு வந்து வழிபட்டால், நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயம் தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
    திருவாரூர் மாவட்டம் திருமாகாளம் என்ற ஊரில் உள்ள மகாகாளநாதர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பத்திரகாளி அம்மன் சகல தோ‌ஷங்களையும் போக்கும் தலமாக திகழ்கிறது.
    திருவாரூர் மாவட்டம் திருமாகாளம் என்ற ஊரில் உள்ளது மகாகாளநாதர் கோவில். இந்த ஆலயம் நாகதோ‌ஷம், ராகு தோ‌ஷம், பிரம்மஹத்தி தோ‌ஷம் உள்ளிட்ட சகல தோ‌ஷங்களையும் போக்கும் தலமாக திகழ்கிறது. அஷ்ட நாகங்களில் ஒன்றான வாசுகி என்ற நாகத்தின் பிரம்மஹத்தி தோ‌ஷம் நீங்கிய தலம் இதுவாகும்.

    இந்த ஆலயத்தில் பத்திரகாளி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். இவர் தொழில் அபிவிருத்தி, திருமண வரம், கல்விச் செல்வம் உள்ளிட்ட பல்வேறு வரங்களை வாரி வழங்குபவள். இந்த அன்னையை செவ்வாய்க்கிழமை, பவுர்ணமி, அமாவாசை, தேய்பிறை அஷ்டமி போன்ற நாட்களில் எலுமிச்சைப் பழ மாலை மற்றும் சிவப்பு அரளிப்பூ மாலை சூட்டி வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் நினைத்த காரியம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    திருவாரூரில் இருந்து 22 கிலோமீட்டரில் உள்ளது பூந்தோட்டம் என்ற ஊர். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருமாகாளம் திருத்தலத்தை அடையலாம்.
    ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில், பைரவருக்கு விபூதி அபிஷேகத்துடன், வடைமாலை அணிவித்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதால், திருமணத் தடை அகலும் என்பார்கள்.
    ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில், பைரவருக்கு விபூதி அபிஷேகத்துடன், வடைமாலை அணிவித்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதால், திருமணத் தடை அகலும் என்பார்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகாலத்தில் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். வளர்பிறை அஷ்டமி திருநாட்களில் அல்லது வெள்ளிக்கிழமை மாலை வேளையில், வில்வம் மற்றும் வாசனை மலர்களை சமர்ப்பித்து பைரவருக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வறுமைகள் நீங்கும்.

    செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமைகளில் பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், சனி கிரகத்தால் ஏற்படும் சகலவிதமான தோஷங்களும் விலகும். மகாபைரவரை திரிபுர பைரவராகவும் வழிபடும் வழக்கம் உண்டு. கரைசேர முடியாத பெருந்துன்பங்களையும் நீக்கி அருள்புரிவாராம் திரிபுர பைரவர்.

    கோயில்களில் நடைபெறும் பிரமோற்ஸவத்துக்கு முன்பாகவும், விழா முடிந்த பின்னரும் பைரவரை வழிபட வேண்டும் என்கின்றன ஆகம நூல்கள். முன்பெல்லாம், சிவாலயங்களில் இரவில் பைரவரை பூஜித்து வழிபட்டு, ஆலயக் கதவுகளை மூடி சாவியை அவரது சன்னதியில் சமர்ப்பிப்பது வழக்கம். இப்போது, கைமணியையும் கலசத்தையும் அவர்முன் வைத்துச் செல்கின்றனர்.
    திருவிசநல்லூரில் சிதம்பரேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் பிரத்யங்கிராதேவிக்கு அமாவாசை நாளில் நடைபெறும் நிகும்பலா மகா யாகத்தில் கலந்து கொண்டால் பில்லி, சூனியம் அகலும்.
    கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இத்தல இறைவன் சிதம்பரேஸ்வரர், இறைவி சிவகாமசுந்தரி அம்பாள். பல்வேறு சிறப்புகள் உள்ள இந்த ஆலயத்தில் பஞ்சமுக மகாமங்கள பிரத்யங்கிராதேவி வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக கருதப்படும் இந்த தேவி, 9 அடி உயரத்தில் 5 முகங்கள் 10 கரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    இங்கு மாதந்தோறும் அமாவாசை தினத்தில் காலை 10.30 மணி முதல் பகல் 2 மணி வரை ‘நிகும்பலா மகா யாகம் என்னும் ‘மிளகாய் ஹோமம்’ நடைபெற்று வருகிறது. அப்போதுமூட்டை, மூட்டையாக மிளகாய் வற்றல் யாக குண்டத்தில் கொட்டப்படுகிறது. எவ்வளவு மிளகாய் கொட்டினாலும் நெடி வராது என்பது இந்த யாகத்தின் சிறப்பாக உள்ளது. அமாவாசை நாளில் நடைபெறும் இந்த நிகும்பலா மகா யாகத்தில் கலந்து கொண்டால் பில்லி, சூனியம் அகலும். செல்வாக்கு, புகழ் உயரும்.



    இதே போல் பவுர்ணமி தினத்தில் நடைபெறும் யாகத்தில் கலந்து கொண்டால் 16 வகையான பேறுகளையும் பெறலாம் என்கிறார்கள். பவுர்ணமி அன்று காலை 11.30 மணி முதல் பகல் 2 மணி வரை யாகம் நடைபெறும்.

    மேலும் இந்த ஆலயத்தில் உள்ள நவக்கிரகங்களை வழிபட்டால், வெளிநாடு செல்லும் யோகம் வந்து சேரும். ஏதாவது ஒரு வேண்டு தலுடன் யாகத்தில் கலந்து கொண்டால் 9 வாரங்களுக்குள் பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேறும். இந்த ஆலயம் கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
    செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். இதற்கான சிறந்த பரிகாரத்தை பார்க்கலாம்.
    செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குலதெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம்.

    எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.

    ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய் - 9, நாட்டு வாழைப்பழகம் - 18, கொட்டைப்பாக்கு - 18, வெற்றிலை - 18, கதம்பப்பூ - ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும்.

    ஈச்சங்கரணை மகாபைரவர் ருத்ர ஆலயத்தை ஆண்டுக்கு ஒரு தடவை வந்து வழிபட்டாலே ஒருவரது ஆத்மா சுத்தமாகி அவருக்கு கிடைக்க வேண்டிய எல்லா பலன்களும் கிடைத்து விடும்.
    நாகர்கோவிலில் பிறந்த ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் பைரவமாக இருந்து மக்களுக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறார். பைரவத்தின் அருளை தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பெற்று பயன் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் சென்னை அருகே மகேந்திரா சிட்டி பகுதியில் இருந்து உள் செல்லும் திருவடி சூலம் சாலையில் உள்ள ஈச்சங்கரணையில் மகாபைரவர் ருத்ர ஆலயத்தை அமைத்துள்ளார்.

    சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலயம் பஞ்ச பூதங்களும் ஆட்சி செய்யும் அருமையான தலமாக உள்ளது. சிவ ஆகம விதிகளின்படி இங்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி, பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை நாட்களில் இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    அரண்மனை கட்டிடக் கலையில் கோவில் அமைப்பு, ஆடும் கும்ப கலசம், பைரவரின் கூம்பு வடிவ கருவறை என்று இந்த ஆலயம் முழுக்க, முழுக்க மற்ற ஆலயங்களில் இருந்து வித்தியாசப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மகா பைரவ ருத்ர ஆலயத்தின் பிரதான சிறப்பு என்ன தெரியுமா? இந்த கிழமைதான் பைரவரை கும்பிட வேண்டும்.இப்படித் தான் வணங்க வேண்டும் என்று எந்த ஒரு கட்டுப்பாடோ, வரைமுறையோ இங்கு கிடையவே கிடையாது.



    உங்களுக்கு எப்போது வசதிப்படுகிறதோ, அப்போது வந்து வழிபடுங்கள் என்கிறார் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள். சிலர் பைரவருக்குஅது படைக்க வேண்டுமே.. இது செய்ய வேண்டுமே என்று நினைப்பதுண்டு. அதற்கும் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் விளக்கம் அளித்துள்ளார்.

    பைரவருக்கு ஒரு முழம் பூ வாங்கிப் போட்டாலே போதும். அவர் அருள் கிடைத்து விடும் என்கிறார். ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் இதுபற்றி கூறுகையில், “பைரவரை இயல்பான நிலையில் வணங்குங்கள். ஆனால் அவரை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டியவை எல்லாம் இடையூறு இல்லாமல் கிடைக்கும்‘’ என்கிறார்.

    சில ஆலயங்களில் இத்தனை வாரம் வர வேண்டும். இன்னென்ன செய்ய வேண்டும் என்பார்கள். ஆனால் மகாருத்ர பைரவ ஆலயத்தில் அப்படியெல்லாம் சொல்வதில்லை. அதற்கு மாறாக ஆண்டுக்கு ஒரு தடவை இத்தலத்தில் காலடி எடுத்து வைத்து விட்டுச் சென்றாலே போதும் என்கிறார்கள்.

    ஆண்டுக்கு ஒரு தடவை வந்து வழிபட்டாலே ஒருவரது ஆத்மா சுத்தமாகி அவருக்கு கிடைக்க வேண்டிய எல்லா பலன்களும் கிடைத்து விடும் என்று ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் அருளியுள்ளார். எனவே இது இந்த தலத்துக்கு உரிய தனித்துவமாக உள்ளது. அதன்படி பார்த்தால் மகா ருத்ர ஆலய பைரவரை நெருங்க, நெருங்க உங்கள் கர்ம வினைகள் காணாமல் போய் விடும்.
    நவக்கிரக தோஷங்களை நீக்கும் தலமாக விளங்குகிறது திருமங்கலக்குடி. இந்த ஆலயத்திற்கு வந்து இதில் சொல்லியபடி வழிபாடு செய்தால் தோஷத்திலிருந்து விடுதலை பெறலாம்.
    நவக்கிரக தோஷங்களை நீக்கும் தலமாக விளங்குகிறது திருமங்கலக்குடி. நவக்கிரக நாயகர்கள் இத்தலத்து இறைவன் - இறைவியை வணங்கி தங்களது சாபம் நீங்கி அருள் பெற்றனர். அந்தக் கதை என்ன?

    முன்னொரு காலத்தில் விந்திய மலைச்சாரலில் காலவ முனிவர் என்ற முனிவர் இருந்தார். அவர் முக்காலத்தையும் கணிக்கும் வல்லமை கொண்டவர். ஒருநாள் அவர் தன் ஜாதகத்தை கணிக்கும் போது, முன் ஜென்மத்தில் நண்டுகளின் காலை முறித்து தின்ற பாவத்தால், கூடிய விரைவில் தனக்கு தொழுநோய் வர இருப்பதை உணர்ந்தார். மேலும் தனக்கு கிரகதோஷம் இருப்பதால், கிரகங்களை வழிபட்டால் அந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்றும் அறிந்து கொண்டார்.

    உடனடியாக நவக்கிரகங்களை நோக்கி கடும் தவம் இருக்கத் தொடங்கினார். நவக்கிரகங்கள், காலவ முனிவரின் தவத்திற்கு இணங்கி அனைவரும் அவர் முன் காட்சி தந்து, ‘என்ன வரம் வேண்டும்?’ எனக்கேட்டனர். முனிவர் நவக்கிரக நாயகர்களை வணங்கி, தன்னை தொழுநோய் தாக்காத வரம் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு நவக்கிரகங்களும் அப்படியே வரம் தந்தனர்.

    ஆனால் காலவ முனிவருக்கு, நவக்கிரகங்கள் வரம் அளித்ததை அறிந்த பிரம்மா சினம் கொண்டார். ‘உங்களுக்கு வரம் கொடுக்கும் உரிமை கிடையாது. முற்பிறவியில் அனைத்து உயிர்களும் செய்த பாவ புண்ணியத்தின் பலனை மட்டுமே, நீங்கள் தர வேண்டுமெனப் பணித்திருந்தேன். நீங்களோ காலவ முனிவருக்கு தொழுநோய் தாக்காத வரம் தந்தீர்கள். எனவே, நீங்கள் பூலோகத்தில் பிறந்து தொழுநோயால் பீடிக்கப்படுவீர்கள்’ எனச் சாபமிட்டார்.


    பிராணநாதேஸ்வரர், மங்கள நாயகி.

    அதிர்ச்சியடைந்த நவக்கிரகங்கள் அனைவரும், தங்களது சாபத்தை நீக்கும்படி பிரம்மாவை வேண்டினர். மனம் இளகிய பிரம்மா, அவர்கள் சாப விமோசனம் பெற வழி அருளினார்.

    ‘நீங்கள் யாவரும் சோழநாட்டில் திருமங்கலக்குடிக்கு அருகே உள்ள வெள்ளெருக்குக் காட்டை அடையுங்கள். கார்த்திகை மாதத்தில் முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு ஞாயிறுகள் அங்குள்ள ஒன்பது தீர்த்தங்களில் நீராடுங்கள். பின், திங்களன்று காவிரியில் நீராடி, திருமங்கலக்குடி ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் பிராண நாதேஸ்வரரையும், மங்கள நாயகியையும் வழிபடுங்கள். வழிபட்ட பின் வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் சாப்பிடுங்கள். இப்படிச் செய்தால் சாபம் நீங்கி விமோசனம் பெறுவீர்கள்’ என பிரம்மா சொல்ல, நவக்கிரக நாயகர்களும் அப்படியே செய்து சாபவிமோசனம் பெற்றனர்.

    விமோசனம் அளித்த பிராணநாதேஸ்வரர், நவக்கிரகங்களிடம் ‘இந்த அரக்க வனத்தின் வடகிழக்கில் நீங்கள் தங்கி தவம் செய்த இடத்தில் உங்களுக்கென தனி ஆலயம் உண்டாகும். அது உங்களுக்குரிய தலமாக விளங்கட்டும். அங்கே வந்து உங்களை வழிபடுவோருக்கு, நீங்கள் சுதந்திரமாக அனுக்கிரகம் செய்யலாம்’ எனக்கூறி மறைந்தார்.

    பின்னர், நவக்கிரகங்களின் வேண்டுதல் படி, கால முனிவர் சிவபெருமான் குறிப்பிட்ட இடத்தில் நவக்கிரக நாயகர்களுக்கு கோவில் அமைத்து, நவக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிராணநாதேசுவரர் ஆலயம் உள்ள இடம் திருமங்கலக்குடி எனவும், நவக்கிரக நாயகர்கள் கோவில் கொண்டுள்ள இடம் ‘சூரியனார் கோவில்’ எனவும் இரண்டு தலங்களாகப் பிரிந்தன.

    எனினும் சூரியனார் கோவில் செல்பவர்கள், முதலில் திருமங்கலக்குடி பிராணநாதேசுவரரை வணங்கிய பின்னரே சூரியனார் கோவில் செல்ல வேண்டுமென்பது புராணத்தில் சொல்லப்பட்டுள்ள செய்தி.
    நித்திய கல்யாணப் பெருமாள் ஆலயத்திற்கு திருமண வரம் வேண்டி வரும் பக்தர்கள், வெகுவிரையில் மணமுடித்து வந்து மீண்டும் இறைவனை வழிபடுவதை இன்றும் கண்கூடாகக் காணலாம்.
    எந்தை என்றால் எம் தந்தை என்று பொருள். எம் தந்தையாக பெருமாள் திரு என்கிற லட்சுமி தாயாரை இடப் பாகத்தில் கொண்டுள்ளதால் திருவிடவெந்தை எனப் பெயர் பெற்றது. அதுவே திருவிடந்தை என்று மறுவியது. பெரியதுமல்லாது சிறியதுமல்லாது நடுவாந்திரமான கோயில். ஆனால், தொன்மை கீர்த்தியில் ஈடு இணையற்ற தலம்.

    உற்சவர்களான பெருமாள், தாயார் இருவருக்கும் கன்னத்தில் இயற்கையிலேயே திருஷ்டி பொட்டு அமைந்திருக்கிறது. எப்போதும் கல்யாண வீட்டின் குதூகலம் நிரம்பியிருக்கிறது. தனிக்கோயில் கொண்டுள்ள தாயாரின் திருப்பெயர் கோமளவல்லித் தாயார் என்பதாகும். அருளும், அழகும் ஒருசேர வீற்றிருந்து செல்வ வளத்தை பெருக்குவதில் இவளுக்கு நிகர் எவருமில்லை.

    பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் இத்தலத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார். திருமணத்திற்கான பரிகாரம் இத்தலத்தில் எப்படி நிகழ்த்தப்படுகிறது என்று பார்ப்போம்.



    திருமணமாகாத ஆணோ, பெண்ணோ அருகிலுள்ள கல்யாண தீர்த்தத்தில் குளித்து தேங்காய், பழம், வெற்றிலை, மாலைகளோடு லட்சுமி வராகரை சேவித்து, அர்ச்சனை செய்து கொண்டு அர்ச்சகர் கொடுக்கும் ஒரு மாலையை கழுத்தில் அணிந்து ஒன்பது முறை கோவிலை வலம் வரவேண்டும்.

    திருமணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக பழைய மாலையோடு வந்து அர்ச்சனை செய்து வராகரை சேவித்து செல்வது இத்தலத்தின் வழக்கம். பெரும்பாலான பக்தர்களுக்கு அந்த மாலை காயும் முன்பே திருமணம் நிச்சயமாகிவிடுவது சகஜமானது. இந்த ஆலயத்திற்கு திருமண வரம் வேண்டி வரும் பக்தர்கள், வெகுவிரையில் மணமுடித்து வந்து மீண்டும் இறைவனை வழிபடுவதை இன்றும் கண்கூடாகக் காணலாம்.

    சென்னை- மாமல்லபுரம் பாதையில் 42 கி.மீ. தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது திருவிடந்தை.
    ×