search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமங்கலக்குடி"

    • தீர்க்கசுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை.
    • ஞாயிறு முழுதும் அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம்.

    அம்பிகை மங்களாம்பிகை தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருளுகிறாள். இவளே இங்கு வரப்பிரசாதியாவாள். இவளது பெயரிலேயே கோவிலும் அழைக்கப்படுகிறது. அம்பிகையின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு அணிவிக்கப்பட்டிருக்கிறது. அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு, இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும், திருமணமான பெண்கள் நீண்டகாலம் தீர்க்கசுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை.

    இந்த அம்பிகை தன்னை வேண்டுபவர்களுக்கு தாலி தரும் தாயாக இருந்து அருளுகிறாள். சுமங்கலிப்பெண்கள், அம்பிகையிடம் இருந்து தாலியை வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு, ஏற்கனவே அணிந்திருக்கும் தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜை செய்கின்றனர். இதனால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    நவராத்திரியின்போது கோவில்களில் அம்பாள் உற்சவர் சிலைக்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்வர். ஆனால், இங்கு மூலஸ்தானத்தில் இருக்கும் அம்பிகைக்கே அலங்காரம் செய்யப்படுகிறது.

    அப்போது இவளது சிலைக்கு வஸ்திரம், ஆபரணங்கள் என எதுவும் சாத்தப்படாமல் சந்தனக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது. அந்த சந்தனத்திலேயே பட்டுத் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் வண்ண சாயங்களை சேர்த்து வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் அணிந்ததைப்போல அலங்கரிக்கின்றனர்.

    சந்தனத்திலேயே, இவ்வாறு அம்பிகை சர்வ அலங்காரத்துடன் காட்சி தருவதை காண கண் கோடி வேண்டும். ஒவ்வொரு வருடமும் தை மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று முழுதும் அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம். விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் இந்த அலங்காரம் செய்யலாம்.

    கோவில் அமைப்பு

    கிழக்கு திசை நோக்கியுள்ள ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடனும், இரண்டு பிரகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்தின் தல விருட்சம் வடமொழியில் கோங்கிலவம் எனப்படும் வெள்ளெருக்கு மரம். முன்மண்டபத்தில் அம்பாள் மங்களநாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    கருவறையில் கோவில் கொண்டிருக்கும் சிவபெருமான் நீண்டுயர்ந்த பாண வடிவில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சந்திரசேகரர், மயில் வாகனர், நால்வர், பிரதோஷ நாயகர் உற்சவ மூர்த்திகள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, ரிஷபாரூடர், பிரம்மா, துர்க்கைக்கு சந்நிதிகள் உள்ளன. உள் சுற்றில் விநாயகர், ஆறுமுகர், கஜலட்சுமி, பைரவர் சந்நிதிகளும், நடராஜ சபையும் உள்ளன.

    சிவன் சன்னதிக்குச் செல்லும்போது முன் மண்டபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி இருவரும் துவாரபாலகிகள் போல இருபுறமும் காட்சி தருகின்றனர். இவ்விருவரும் இரு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது விசேஷமான தரிசனம். இதில் சரஸ்வதி வீணையில்லாமல் காட்சி தருகிறார்.

    பிரகாரத்திலுள்ள நடராஜர் சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். இதில் பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே, பூதகணம் ஒன்று சுவாமியின் நடனத் திற்கேற்ப இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது.

    பிராணநாதர் கோவில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்களும் அருகருகில் இருக்கிறது. சிவனது இரண்டு கண்களாக இருக்கும் சூரிய, சந்திரர்களே இங்கு சிவனை குளிர் விப்பதற்காக தீர்த்தமாக இருப்பதாக சொல்வதுண்டு. சுவாமிக்கு இந்த இரு தீர்த்தத்தையும் சேர்த்தே அபிஷேகம் செய்கின்றனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை இருக்கிறாள்.

    இதுதவிர, சிவதுர்க்கை சோமாஸ்கந்தர் சன்னதியின் பின்புறத்தில் காட்சி தருகிறாள். இவ்விருவரின் பாதங்களுக்கு கீழேயும் மகிஷாசுரன் கிடையாது. காவேரி, சிவன் கோஷ்டத்தில் துர்க்கைக்கு அடுத்து சிலை வடிவில் இருக்கிறாள். ஆடி பதினெட்டாம் பெருக்கின்போது இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

    காளி, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர். சூரியன், அம்பாள் ஆகாசவாணி , பூமாதேவி ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம். இங்கு முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

    சிறப்புக்கள்

    அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். நவகிரக தோஷம், பெண்கள் திருமண பாக்கியம்,குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், சத்ருபயம்(எதிரிகள் பயம்) நீக்கம்பெறல், திருட்டுபயம் விடுபடுதல் ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்.

    • பிராணநாதேஸ்வரரை அப்பர், சம்பந்தர் போற்றி பாடியுள்ளார்கள்.
    • சித்திரை வருடப்பிறப்பன்று பஞ்சாங்கம் வாசித்தால் நடைபெறும்.

    1. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது திருமங்கலக்குடி மங்களாம்பிகை உடனான பிராணநாதேஸ்வரர் கோவில்.

    2. பிராணநாதேஸ்வரரை அப்பர், சம்பந்தர் போற்றி பாடியுள்ளார்கள்.

    3. பிராணநாதேஸ்வரரை காளி, சூரியன், பூமாதேவி, ஆகாசவாணி, விஷ்ணு, பிரம்மா, அகஸ்தியர், மங்களாம்பிகை முதலானோர் பூஜை செய்து இருக்கிறார்கள்.

     4. ராமலிங்க அடிகளார் கருமங்கள் ஓடிபோய் காண்மங்கலக்குடி என்று பாடியுள்ளார்.

    5. இவ்வாலயத்தில் சித்திரை வருடப்பிறப்பன்று பஞ்சாங்கம் வாசித்தால் நடைபெறும்.

    6. ஆனி மாதம் ஸ்ரீநடராஜர் அபிஷேகமும் ஆடி மாதம் 18-ம் பெருக்கன்று காவிரியில் தீர்த்தம் கொடுத்தலும் நடைபெறும்.

    7. புரட்டாசியில் ஸ்ரீமங்களாம்பிகைக்கு 10 நாட்கள் நவராத்திரி விழாவும், நிறை பணியும் கொண்டாடப்படுகிறது.

    8.ஐப்பசியில் பவுர்ணமி அன்று அன்னாபிஷேகமும் சஷ்டி அன்று சூர சம்ஹாரமும் கார்த்திகையில் நான்கு சோம வாரமும், திருகார்த்திகை அன்று சொக்கபனையும் கொளுத்தப்படும்.

    9. மார்கழி திருவாதிரையில் ஸ்ரீநடராஜர் அபிஷேகமும் செய்வது வழக்கம்.

    10. தை முதல் தேதி மகர சங்கராந்தி அன்று காவிரியில் தீர்த்தம் கொடுத்தலும், மாசி சிவராத்திரியில் நான்கு காலம் சிறப்பு அபிஷேகமும் மேற்கொள்வார்கள்.

    11. பங்குனியில் இக்கோவிலின் வருடாந்திர பங்குனி உத்திர உற்சவம் 10 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

    12. பங்குனியில் தீர்த்த வாரி 10 நாள் உற்சவத்தில் 7-ம் நாள் அன்று பிராணநாதேஸ்வரருக்கும், மங்களாம்பிகைக்கும் திருக்கல்யாணம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாமும் மங்களாம்பிகையின் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்திட நம்மால் முடிந்த காணிக்கையை அலுவலகத்தில் செலுத்தி மங்களாம்பிகையின் திருமணம் கண்டு மாங்கல்ய தோஷங்கள் நீங்கி திருமணம் ஆகாதவர்கள் திருமணம் கைகூடி நல்வாழ்வு வாழ்வோமாக.

    13. மதியம் 50 அடியார்களுக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் 100 அடியார்களுக்கும் 'உண்டி நாலு விதத்தில் ஆறு சுவை திறத்தில்' என்றபடி வடை, பாயாசத்துடன் அன்னம் படைப்பு நடைபெறுகிறது. பக்தர்கள் தங்களால் முடிந்த அளவில் அன்னதானத்திற்கு நிதியளிக்கலாம்.

    14. கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவிலுக்குச் செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து, சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள திருமங்கலக்குடியை அடையலாம்.

    15. இவ்வூரில் இருந்து சூரியனார் கோவில் ½ கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் வழிபட்ட பின்னரே சூரியனார் கோவிலில் வழிபடச் செல்ல வேண்டும் என்பது மரபு.

    16. திருமங்கலக்குடிக்கு மிக அருகில் இருக்கும் ரெயில் நிலையம் ஆடுதுறை.

    17. இந்த தலத்தின் வழிபாட்டு நேரம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை.

    18. இந்த தலத்தில் நாள்தோறும் 4 கால பூஜை நடைபெறுகிறது.

    19. திருமங்கலக்குடி ஆலயத்தை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்.0435-2470480

    20. இந்த தலத்துக்கு அருகில் சூரியனார் கோவில் திருவெள்ளியங்குடி, திருப்பனந்தாள், சஞ்சனூர், ஆலயங்கள் உள்ளன.

     21. தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 52 கி.மீ தொலைவில் திருமங்கலக்குடி உள்ளது. திருமங்கலக்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து இக்கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது.

    22. இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். வழக்கமாக சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையார் (பீடம்) உயரத்தை விட சிறியதாக இருக்கும். ஆனால் இக்கோவிலில் சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையாரை விட உயரமாக அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் மரகத லிங்கம் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.

    23. பிரகாரத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள் சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர்.

    24. காளி, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர், சூரியன், அம்பாள் ஆகாசவாணி, பூமாதேவி ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம் இதுவாகும்.

    25. இத்தலத்தில் அம்மன் மங்களாம்பிகை என்கிற மங்களநாயகி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி வலது கையில் தாலிக்கொடியுடன் காட்சி தருகிறார்.

    26. மாங்கல்ய தோஷமும், ராகு, கேது, சனி முதலிய கிரக தோஷங்களும் விலக தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகள் மங்களாம்பிகையை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    27. வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின் போதும் இக்கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது.

    28. சத்ருபயம் நீங்க, நவகிரக தோஷம், பெண்கள் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம் ஆகியவற்றுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.

    29. அம்மனுக்கு திருமாங்கல்யமும், புடவையும் சாற்றுகின்றனர். சுவாமிக்கு வஸ்திரம் சாற்றியும், அபிஷேகம் செய்தும், 5 சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் துணி, மஞ்சள், குங்குமம், பூ, வெற்றிலை, பாக்கு, சீப்பு, கண்ணாடி வளையல், மாங்கல்ய கயிறு, தட்சிணை வைத்து கொடுத்து ஆசி வாங்குவதை நேர்த்திக்கடனாக செய்கிறார்கள்.

    30. சுவாமிக்கு நல்லெண்ணெய், மா பொடி, திரவிய பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பழவகைகள், இளநீர், சந்தனம், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் செய்தும் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.

     31. ஸ்ரீபிராணநாத சுவாமிக்கு 11 ஞாயிற்றுக்கிழமை அர்ச்சனை செய்வதாலும் 11 ஞாயிற்றுக்கிழமை தயிர் சாதம் அன்னதானம் செய்வதாலும் அஷ்டமசனி, ஏழரை ஆண்டு சனி தோஷம் நவக்கிரக தோஷம், பூர்வ ஜென்ம தோஷம், பித்ருக்கள் தோஷம், திசாபுத்தி, புத்திர தோஷம் நிவர்த்தியாகும்.

    32. அமாவாசையில் அகஸ்தியருக்கு அபிேஷகம் செய்வதால் பித்துருக்கள் தோஷம் நிவர்த்தி ஆகும்.

    33. ஜென்ம நட்சத்திரப்படி ஸ்ரீ மரகதலிங்கம் அபிஷேகம் செய்வதால் புத்திர தோஷம், பூர்வ ஜென்ம தோஷம் நிவர்த்தி ஆகும்.

    34. மங்களாம்பிகை அம்மன் சந்நிதியில் திருமணம் செய்து கொள்வதால் மாங்கல்ய தோஷம் நிவர்த்தி பெறுவதோடு தீர்க்க சுமங்கலி பிராப்தமும் கிைடக்க பெறுகிறார்கள்.

    35. ஸ்ரீ பிராணநாத சுவாமிக்கும் ஸ்ரீ மங்களாம்பிகை அம்மனுக்கும் அபிஷேகம் செய்வதால் ஆயுள் ஆரோக்கியம் கிடைக்க பெறுகிறார்கள்.

    36. திருமணம் ஆன மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் ஸ்ரீமங்களாம்பிைக அம்மன் சந்நிதியில் மறு மாங்கல்யம் பரிகாரம் செய்து கொள்வது சிறப்பு.

    37. பத்மாசனத்தில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி தேவியையும், ஸ்ரீ சரஸ்வதி தேவியையும் வழிபடுவதால் லட்சுமி கடாட்சமும் கல்வி மேன்மையும் கிடைக்கும்.

    38. நவக்கிரகங்கள் தங்களின் சாபம் நீங்க, வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் படைத்து இறைவனை வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. எனவே இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கி ழமைகளிலும் உச்சிகால பூஜையின் போது, உப்பில்லாத தயிர் சாதம் சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

    39. உடலில் சரும வியாதியுள்ளவர்கள் இங்கு வந்து கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11 ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் சுவாமிக்கு நிவேதனம் செய்து சாப்பிட்டு வந்தால் வியாதியில் இருந்து நீங்கப்பெருவர் என்பது வரலாறு.

    40. மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், தீபாவளி, மகர சங்கராந்தி, தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்கள் சிறப்பு அபிஷேக, பூஜைகளுடன் அனுசரிக்கப்படுகிறது. அமாவாசை பதினைந்து நாட்களில் அஷ்டமி நாட்களில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் அர்ப்பணிக்கப்படுகின்றன.

    41. இறைவனுக்கு மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் சொந்த வடிவங்களைக் குறிக்கும் மூன்று முகங்கள் உள்ளன, இது மற்ற கோயில்களில் காணப்படவில்லை. இங்கு படைப்பாளர் பிரம்மா, பாது காவலர் விஷ்ணு உள்ளனர்.

    • தயிர் சாதம் பிரசாதமாக வெள்ளெருக்கு இலையில் தரப்படுகிறது.
    • மாங்கல்ய சரடு பெண்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

    * திருமங்கலக்குடி தலத்தின் இறைவியை வழிபட, திருமணத் தடை நீங்குகிறது.

    * மாங்கல்ய பலம் நீடிக்கிறது. ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்டுகிறது என்பது பக்தர்களின் அனுபவ உண்மை.

    * கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, தொடர்ந்து பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் தயிர் சாதத்தை

    வெள்ளெருக்கு இலையில் வைத்து சுவாமிக்கு நிவேதனம் செய்து அதை உண்ண, நோய் குணமடை வதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு செய்து பிணிகள் விலகியோர் நிறைய உண்டாம். இத்தலத்தில் ஞாயிறு மதியம் உச்சிகால பூஜையில் தயிர் சாதம் பிரசாதமாக வெள்ளெருக்கு இலையில் தரப்படுகிறது.

    * ஞாயிற்றுக்கிழமைகளில் தயிர்சாதம் அன்னதானம் செய்வதால் அஷ்டமச்சனி, ஏழரை ஆண்டுச்சனி, தசாபுத்தி தோஷம் ஆகியவை நிவர்த்தியாகும்.

    * மங்களநாயகியின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடு பெண்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. மங்காளம்பிகைக்கு ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் ஆகியவை நீங்கப்பெற்று தீர்க்க சுமங்கலி பிராப்தமும். விரைவில் விவாக பிராப்தமும் கிடைக்க அம்பாள் அருள் புரிகிறாள் என்று அவ்வூரிலுள்ளோர் கூறக்கேட்டோம்.

    * மேலும் இத்திருக் கோவிலுள்ள அகத்தீஸ்வரர் லிங்கத்திற்கு அமாவாசை தினத்தில் அபிஷேகம் செய்வதால் பூர்வ ஜென்ம தோஷம் பித்ருக்கள் சாபம் இருந்தால் நிவர்த்தியாகிறதாம்.

    * சூரியன், திருமால், காளி, பிரம்மன், அகத்தியர் முதலானோர் இத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டுப்பேறு பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.

    * திருநாவுக்கரசர் தான் பாடிய இத்தலத்திற்கான பதிகத்தில் மூன்றாவது பாடலில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். மங்கலக்குடி ஈசனை மாகாளி வெங்கதிர்ச் செல்வன் விண்ணொடு மண்ணும் நேர் சங்குசக்கரதாரி சதுர்முகன் அங்கு அகத்தியனும் அர்ச்சித்தார் அன்றே.

    * ஆமங்கலக்குடி இறைவனை மாகாளியும், சூரியனும், விண்ணும் மண்ணும் நிகராய சங்கு சக்கரதாரியாகிய திருமாலும் பிரமனும், அகத்தியனும் அர்ச்சித்தார்கள்.

    தல அருமை

    பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், அலைவாணர் என்பவர் அமைச்சராக இருந்தார். அவர் அரசனின் அனுமதி பெறாமல் வரிப் பணத்தை தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பச் செலவிட்டார்.

    இதையறிந்த மன்னன் அவரை அழைக்க, அமைச்சரோ மன்னனைக் காண அஞ்சி உயிர் நீத்தார். இறக்கும்போது அவர் தனது மனைவியிடம் "நான் இறந்தவுடன் என் உடலை திருமங்கலக்குடிக்கு எடுத்துச் சென்று அங்கேயே அடக்கமும் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறு அவரது இறந்த உடலை எடுத்துச் செல்லும்போது, அமைச்சரின் மனைவி இறைவி மங்களாம்பிகையிடம் மாங்கல்ய பாக்கியம் அருளப் பிரார்த்தனை செய்தாள்.

    ஊர் எல்லையருகே வந்ததும் உயிரற்ற மந்திரியின் உடல் மீண்டும் உயிர் பெற்று எழுந்தது. அனைவரும் திகைத்துப் போய் நிற்க, அமைச்சர் தான் எழுப்பிய சிவபெருமான் ஆலயத்திற்குச் சென்று, "பிராணனைக் கொடுத்த பிராண நாதா என்று போற்றி வழி பட்டார்.

    அன்று முதல் பிராணனைக் கொடுத்ததால் இறைவன் பிராணநாதேஸ்வரர் என்றும், மந்திரியின் மனைவி மாங்கல்யம் பெற்றதால் இத்தல அம்பிகை மாங்கல்யம் கொடுத்த மங்களாம்பிகை யென்றும் போற்றப்படுகின்றனர்.

    அப்போது அமைச்சரின் மனைவி தங்களுக்குக் காட்சி தந்த பிராணநாதர் மற்றும் மங்களாம்பிகையிடம், "எங்களுக்கு வரம் அளித்தபடி, இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடும் என் போன்ற மற்ற பெண்களுக்கும் மாங்கல்ய பாக்கியம் அருள வேண்டும்" என்று வேண்ட அவ்வாறே அருளினர். அதன்படி மாங்கல்ய தோஷத்தையும் நீக்கி சுமங்கலி பிராப்தம் தந்தருளும் திருத்தலமாக திருமங்கலக்குடி இன்றும் விளங்குகிறது.

    ×