என் மலர்
அமெரிக்கா
- பூமிக்கு அருகே விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான விண்கற்களும், சிறு கோள்களும் உள்ளன.
- பூமியை சிறுகோள்கள் தாக்கும் அபாயத்தை முறியடிக்கும் வகையில் நாசா புதிய திட்டத்தை உருவாக்கியது.
வாஷிங்டன்:
பூமிக்கு அருகே விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான விண்கற்களும், சிறு கோள்களும் உள்ளன. இந்த கோள்களும், விண்கற்களும் பூமியின் சுற்று வட்ட பாதைக்குள் நுழையும் அபாயம் உள்ளதா என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
சிறு கோள்களின் சுற்றுப் பாதையானது பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து 3 கோடி மைல்களுக்குள் வர சாத்திய கூறுகள் உள்ளது. அவற்றை பூமிக்கு அருகே கொண்டு வரமுடியும்.
பூமியை சிறுகோள்கள் தாக்கும் அபாயத்தை முறியடிக்கும் வகையில் நாசா புதிய திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்திற்கு டார்ட் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இரட்டை சிறுகோள் திசை திருப்பல் சோதனை என்பதாகும். சூரியனை சுற்றி வரும் சிறிய கோள்கள் பூமியை தாக்குவதில் இருந்து தடுக்க இது ஒரு முன்னோடி திட்டமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் இந்த திட்டம் மூலம் பூமியை நோக்கி வரும் டிமார்போஸ் என்னும் சிறியகோள் மீது விண்கலனை மோதவிடுவதற்கான சோதனை முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். டிமார் போஸ் விண்கலம் 525 அடி சுற்றளவு கொண்டது. வினாடிக்கு 6.6 கிலோமீட்டர் வேகத்தில் சிறுகோளை சுற்றி வருகிறது.
இந்த சோதனை திட்டம் இன்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.44மணிக்கு சிறுகோள் மீது வினாடிக்கு 22,500 கிலோமீட்டர் வேகத்தில் சென்று நாசா விண்கலம் மோதியது.
இந்த மோதலின் போது சிறுகோள் அதன் சுற்றுப் பாதையில் இருந்து திசை திரும்பியது. வெற்றிகரமாக நிகழ்த்தபட்ட இந்த சோதனையால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். உலக அளவில் முதல் முறைாக இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த அரிய நிகழ்வை செயற்கைகோளில் உள்ள கேமிரா மூலம் நாசா நேரடியாக ஒளிபரப்பியது.
- தற்போதைய உலகுக்கு இந்தியா மிகவும் முக்கியமானது ஆகும்.
- இந்தியா எப்போதும் பல வளரும் நாடுகளுக்காக பேசுகிறது.
நியூயார்க் :
ஐ.நா. பொதுச்சபை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க்கில் நேற்று முன்தினம் அவர் ஐ.நா. ெபாதுச்சபையில் உரையாற்றினார்.
அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் வெளியுறவு மந்திரிகளையும் அவர் சந்தித்து பேசினார். மேலும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசையும் அவர் சந்தித்தார்.
இத்துடன் தனது அமெரிக்க பயணத்தின் முதல் பகுதியை நிறைவு செய்து 2-வது பகுதி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேற்று வாஷிங்டன் பயணமானார்.
முன்னதாக இந்திய பத்திரிகையாளர்களை நியூயார்க்கில் சந்தித்து பேசினார். அப்போது தனது முதல் பாதி அமெரிக்க பயணத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
உலகின் தற்போதைய நிலையை இந்த ஐ.நா. பொதுச்சபை பிரதிபலிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் தற்போதைய உலகுக்கு இந்தியா மிகவும் முக்கியமானது ஆகும். நாம் ஒரு பாலம், ஒரு குரல், ஒரு பார்வை, ஒரு ஊடகமாக இருக்கிறோம்.
உலக அளவில் தெற்கின் குரலாக இந்தியா பரவலாகக் கருதப்படுகிறது. இந்தியா எப்போதும் பல வளரும் நாடுகளுக்காக பேசுகிறது. சர்வதேச மன்றங்களில் அவர்களின் பிரச்சினைகளை அழுத்தமான முன்னிலைப்படுத்துகிறது.
உலகப் பொருளாதாரத்தில் உணவு மற்றும் எரிபொருளின் விலை, உரங்கள் பற்றிய கவலை, கடன் நிலைமை ஆகியவை தற்போது மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இது பல நாடுகளுக்கு ஆழ்ந்த கவலைகளை கொடுத்துள்ளது.
இந்த பிரச்சினைகள் செவிசாய்க்கப்படாமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த உணர்வுகளை பேசுவது, இதற்காக குரல் கொடுப்பது, இந்தியாதான்.
கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த ஐ.நா. பருவநிலைமாற்ற மாநாடு மற்றும் சமீபத்திய பிராந்திய சந்திப்புகளில் பிரதமர் மோடியின் பங்கு குறித்து பலரும் என்னிடம் பேசினர். இது நிலப்பரப்பு மற்றும் தலைமைத்துவம் ஆகிய இரண்டும் சார்ந்தது ஆகும்.
இது இந்தியாவின் முக்கியத்துவத்தை உருவாக்கியுள்ளது. அந்தவகையில் இந்த உலகில் இந்தியா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதற்கு பிரதமரின் தலைமைத்துவம், அவரது பிம்பம், உலக அரங்கில் அவர் என்ன செய்துள்ளார் என்பதும் தான் காரணம்.
இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மற்றும் பிரேசிலுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதற்கு ரஷியா ஆதரவு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. பொதுச்சபையில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவ் பேசும்போது கூறுகையில், 'இந்தியாவும், பிரேசிலும் முக்கிய சர்வதேச செயல்பாட்டாளர்களாகவும், கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெறுவதற்கு தகுதியான உறுப்பினர்களாகவும் இருப்பதை கவனிக்கிறோம்' என்று தெரிவித்தார்.
பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போதும் இந்த கருத்தை அவர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது.
- ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்டுபிடிப்புகளை இந்தியா ஆதரித்து வருகிறது.
பிட்ஸ்பர்க்:
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற உலக தூய்மை எரிசக்தி நடவடிக்கை அமைப்பு கருத்தரங்கில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
போக்குவரத்தில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் நிலையான உயிரி எரிபொருள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பயோடெக்னாலஜி துறை மூலம் இந்தியா, மேம்பட்ட உயிரி எரிபொருள்கள் மற்றும் கழிவுகளிலிருந்து ஆற்றல் தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்டுபிடிப்புகளை ஆதரித்து வருகிறது.
நவீன உயிரித் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி மேம்பட்ட நிலையான உயிரி எரிபொருளில் பணிபுரியும் ஒரு இடைநிலைக் குழுவைக் கொண்ட 5 உயிரி ஆற்றல் மையங்களை இந்தியா நிறுவியுள்ளது. காலநிலை மாற்றத்தின் உலகளாவிய சவாலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது.
2030 ஆம் ஆண்டில் உமிழ்வு தீவிரத்தை 35% குறைக்கும் இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத் திட்டத்தை இந்தியாவும் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அமைதியான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
- தெற்காசியாவில் அமைதிக்கான உறுதிப்பாட்டில் நாங்கள் நிலையாக இருக்கிறோம்.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. இரு நாடுகளிலும் ஆயுதங்கள் இருந்தாலும், போர் ஒரு விருப்பமல்ல. அமைதியான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
1947 முதல் மூன்று போர்களை சந்தித்துள்ளோம். இதன் விளைவாக, இரு தரப்பிலும் துன்பம், வறுமை மற்றும் வேலையின்மை மட்டுமே அதிகரித்துள்ளது. தெற்காசியாவில் அமைதிக்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் நிலையாக இருக்கிறோம் என்று உலக மன்றத்திற்கு நான் உறுதியளிக்கிறேன்.
ஆக்கப்பூர்வமான சூழலை உருவாக்க இந்தியா நியாயமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரில் தனது ராணுவ நிலைகளை இந்தியா அதிகரித்துள்ளது. இதனால் அது உலகிலேயே மிகவும் ராணுவ மயமாக்கப்பட்ட மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா பலமுறை கூறியுள்ளது. பயங்கரவாதம், மற்றும் வன்முறை இல்லாத சூழலில் பாகிஸ்தானுடன் இயல்பான உறவை விரும்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- டிரம்ப், சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.
- 2011-21 காலகட்டத்தில் டிரம்ப் அமைப்பு ஏராளமான மோசடிகளை செய்துள்ளது.
நியூயார்க் :
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். 2024-ம் ஆண்டு அங்கு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட களம் அமைத்து வருகிறார்.
இந்த நிலையில் டிரம்பும், அவரது பிள்ளைகளும் வங்கிக்கடன்கள் வாங்குவதற்கும், குறைவான வரி கட்டுவதற்கும் ஏற்ற வகையில் டிரம்ப் அமைப்பின் சொத்து மதிப்பில் கோடிக்கணக்கில் பொய் சொல்லி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நியூயார்க் மாகாணத்தில் அவர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
இதுபற்றி அரசு வக்கீல்கள் கூறும்போது, "2011-21 காலகட்டத்தில் டிரம்ப் அமைப்பு ஏராளமான மோசடிகளை செய்துள்ளது" என தெரிவித்தனர்.
இது தொடர்பாக நியூயார்க் அட்டார்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் தொடுத்துள்ள வழக்கில் குற்றவாளிகளாக டிரம்புடன் அவரது பிள்ளைகள் டொனால்டு ஜூனியர் இவாங்கா, எரிக் டிரம்ப் மற்றும் டிரம்ப் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான ஆலன் வெய்சல்பெர்க் மற்றும் ஜெப்ரி மெக்கனி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நியூயார்க் அட்டார்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் கூறுகையில், "தனது பிள்ளைகள் மற்றும் டிரம்ப் அமைப்பின் மூத்த நிர்வாகிகள் உதவியுடன் டொனால்டு டிரம்ப் அநியாயமாக தன்னை வளப்படுத்திக்கொள்ளவும், அரசு அமைப்புகளை ஏமாற்றவும், தனது சொத்தின் நிகர மதிப்பை பில்லியன் கணக்கான டாலர்களை பொய்யாக உயர்த்தி கூறி உள்ளார். டிரம்பின் சொந்தக் குடியிருப்பான டிரம்ப் டவர் மதிப்பு 327 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,616 கோடி)என கூறி உள்ளனர். ஆனால் இந்த தொகைக்கு நெருக்கமாக நியூயார்க்கில் எந்த அடுக்கு மாடி குடியிருப்பும் விற்கப்படவில்லை" என தெரிவித்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை "இது மற்றுமொரு சூனிய வேட்டை" என்று கூறி டிரம்ப் நிராகரித்துள்ளார்.
- சூரிய குடும்பத்தின் 8-வது கிரகம், நெப்டியூன்.
- சூரியனில் இருந்து 30 மடங்கு தொலைவில் அமைந்துள்ளது, நெப்டியூன்.
வாஷிங்டன் :
சூரிய குடும்பத்தின் 8-வது கிரகம், நெப்டியூன். பூமியைக் காட்டிலும் சூரியனில் இருந்து 30 மடங்கு தொலைவில் அமைந்துள்ளது, நெப்டியூன்.
இந்த நெப்டியூனையும், அதன் மெல்லிய வளையங்களின் விரிவான படத்தையும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி முதல் முறையாக படம் பிடித்துள்ளது.
இந்தப் படத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலை நோக்கி, ஒளிர்கிற நெப்டியூன் மற்றும் அதன் நுட்பமான, தூசுகள் நிறைந்த வளையங்களை படம் பிடித்துள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
இதுபற்றி நெப்டியூன் சிஸ்டம் நிபுணரும், வெப் இடைநிலை விஞ்ஞானியுமான ஹெய்டி ஹேமல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், "இந்த மங்கலான தூசுகள் நிறைந்த வளையங்களை நாங்கள் கடைசியாகப் பார்த்து 30 ஆண்டுகள் ஆகி விட்டன. அகச்சிவப்பு நிறத்தில் அவற்றைப் பார்ப்பது இதுவே முதல் முறை ஆகும்" என தெரிவித்துள்ளார்.
1989-ம் ஆண்டு 'வாயேஜர்- 2' விண்கலம் நெப்டியூன் கிரகத்தை கடந்து சென்றதில் இருந்து, விரிவாகக் காணப்படாத அம்சங்களை இந்த தொலைநோக்கியின் அகச்சிவப்பு கருவிகள் விரிவாக எடுத்துக்காட்டி இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நெப்டியூனின் 14 நிலவுகளில் 7 நிலவுகளையும், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி படம் பிடித்துள்ளது.
- பொறுப்பற்ற அச்சுறுத்தல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- ரஷியா மேலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
வாஷிங்டன்:
அண்மையில் ரஷிய தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், மேற்கத்திய நாடுகள் அணு ஆயுதத்தை வைத்து ரஷியாவை மிரட்டுகின்றன. அவ்வாறு மிரட்டல் விடும் நாடுகளுக்கு நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். பதிலடி கொடுக்க எங்களிடமும் நிறைய ஆயுதங்கள் (அணு ஆயுதங்கள்) உள்ளன.
அவை நேட்டோ அமைப்பின் ஆயுதங்களை விட அதிக ஆற்றல் மிக்கவை. எங்கள் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்,வாஷிங்டனில் நடைபெற்ற ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பேசியதாவது:
ஒவ்வொரு கவுன்சில் உறுப்பினரும் (ரஷியாவின்) இந்த பொறுப்பற்ற அணு ஆயுத அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும். அதிபர் புதின் தொடங்கிய போரை நிறுத்தச் சொல்லுங்கள். உக்ரைன் மீதான படையெடுப்பிற்காக, ரஷியா மேலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அமெரிக்காவின் வலிமையான கண்டனங்களுடன் பிற நாடுகளும் சேர்ந்து ரஷியாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ரஷியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதால் உக்ரைன் மீது போர் தொடுத்ததாக புதின் கூறுகிறார்.
- ரஷியா, போர் குற்றததில் ஈடுபட்டு வருகிறது.
ஐ.நா. சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசும்போது, உலகம், ஒரு மனிதரால் (ரஷிய அதிபர் புதின்) தொடங்கப்பட்ட தேவையற்ற போரை சந்தித்தது.
ரஷியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதால் உக்ரைன் மீது போர் தொடுத்ததாக புதின் கூறுகிறார். ஆனால் யாரும் ரஷியாவை அச்சுறுத்தவில்லை. ஐரோப்பாவுக்கு எதிராக அனு ஆயுத அச்சுறுத்தல்களை புதின் விடுக்கிறார்.
ரஷியா, போர் குற்றததில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு உக்ரைனில் பலர் கொன்று புதைக்கப்பட்டு இருப்பதே சாட்சியம்.
அணு ஆயுத போரில் யாரும் வெற்றி பெற்று விட முடியாது. அதில் ஒருபோதும் ஈடுபட வேண்டாம் என்றார்.
- பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரலாற்று ரீதியாக தொடர்ந்து பின்னால் நிற்கிறோம்.
- இந்தியா நிரந்தர உறுப்பினராக அமரவில்லை என்றால் எங்களுக்கு மட்டும் அல்ல, சர்வதேச அமைப்புகளுக்கும் அது நல்லதல்ல.
உலக தலைவர்கள் பங்கேற்ற ஐ.நா.சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசினார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. நாங்கள் நீண்ட காலமாக ஆதரித்து வரும் நாடுகளுக்காக நிரந்தர இடங்களும் இதில் அடங்கும் என்றார்.
இந்தநிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, சீர்திருத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை கொண்டு வர அதிபர் ஜோபைடன் ஆதரிக்கிறார்.
இந்த 3 நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரலாற்று ரீதியாக தொடர்ந்து பின்னால் நிற்கிறோம் என்றார்.
அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, இந்தியா இன்னும் சில ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும்.
எனவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமரவில்லை என்றால் எங்களுக்கு மட்டும் அல்ல, சர்வதேச அமைப்புகளுக்கும் அது நல்லதல்ல என்றார்.
- மருந்தில் கோழி இறைச்சியை சமைத்து சாப்பிடும் சவால் டிக்- டாக் வீடியோவில் செய்யப்பட்டு வருகிறது.
- மருந்தை கொதிக்க வைப்பதால் அதன் பண்புகள் வேறு வழிகளில் மாறும்.
அமெரிக்காவில் இருமல் மருந்தில் கோழி இறைச்சியை சமைத்து சாப்பிடும் சவால் டிக்- டாக் வீடியோவில் செய்யப்பட்டு வருகிறது. இப்படி சமைத்து அதனை டிக்- டாக்கில் பலர் வெளியிட்டுள்ளனர்.
இருமல் மருந்தில் கோழி இறைச்சியை சமைப்பது மிகவும் பாதுகாப்பற்றது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மருந்தை கொதிக்க வைப்பதால் அதன் பண்புகள் வேறு வழிகளில் மாறும். இருமல் மருந்தில் சமைக்கப்பட்ட கோழி இறைச்சியை சாப்பிடாவிட்டாலும் கூட மருந்தை கொதிக்க வைக்கும் போது அதனை சுவாதித்தால் உடலுக்குள் அதிகளவு மருந்து உள்ளே செல்லும். இது உங்களது நுரையீரலை பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
- உக்ரைன் போர் குறித்து ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.
- ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
வாஷிங்டன்:
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, மாநாட்டுக்கு இடையே உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
அந்த வகையில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த பிறகு புதினும் மோடியும் நேருக்கு நேர் முதல் முறையாக சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது, இது போருக்கான காலம் அல்ல என உக்ரைன் போர் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.
ஐ.நா. பொதுச்சபையின் 77-வது கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் பேசுகையில், ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை வரவேற்றார்.
இந்நிலையில், ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை அமெரிக்கா வரவேற்றுள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன், நீண்ட காலமாக ரஷியாவுடன் உறவு பாராட்டி வரும் இந்தியாவின் பிரதமர், போரை முடிவுக்கு கொண்டு வருமாறு புதினிடம் வலியுறுத்தியது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.
- கரோல் தனது புத்தகத்தை விற்பதற்காக கற்பழிப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- டிரம்ப் மீது மாடல் அழகி ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார் தெரிவித்துள்ளார். பெண் எழுத்தாளரான ஜூன் கரோல் கூறும்போது, ''1995-ம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1996-ம் ஆண்டின் முற்பகுதியில் மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு கடையின் உடைமாற்றும் அறையில் தன்னை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்தார்" என்று கூறி உள்ளார்.
இதுதொடர்பாக கரோலின் வக்கீல் ராபர்ட்டா கப்லன் கூறும்போது, "டிரம்ப் மீது வருகிற நவம்பர் 24-ந்தேதி வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாகவும், இவ்வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிக்கப்படலாம்" என்றும் தெரிவித்தார். பெண் எழுத்தாளரின் குற்றச்சாட்டை டொனால்டு டிரம்ப் மறுத்துள்ளார்.
அவர் கூறும்போது, "கரோல் தனது புத்தகத்தை விற்பதற்காக கற்பழிப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்" என்றார். ஏற்கனவே டிரம்ப் மீது மாடல் அழகி ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






