என் மலர்
அமெரிக்கா
- எலான் மஸ்க்கை முந்தி பிரான்ஸ் தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை பிடித்தார்.
- போர்ப்ஸ் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் ரூ.15.29 லட்சம் கோடி சொத்துடன் முதலிடத்தில் உள்ளார்.
வாஷிங்டன்:
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தை எலான் மஸ்க் இழந்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான அவர் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3½ லட்சம் கோடிக்கு விலைக்கு வாங்கினார்.
இதையடுத்து அவர் டெஸ்லா நிறுவனத்தின் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றார். இதற்கிடையே டுவிட்டர் நிறுவனத்தில் ரூ.3½லட்சம் கோடி முதலீடு செய்ததாலும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததாலும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்தது.
இதையடுத்து எலான் மஸ்க்கை முந்தி பிரான்ஸ் தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை பிடித்தார். போர்ப்ஸ் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் ரூ.15.29 லட்சம் கோடி சொத்துடன் முதலிடத்தில் உள்ளார்.
எலான் மஸ்க் ரூ.15.28 லட்சம் கோடியுடன் 2-வது இடத்துக்கு இறங்கினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் உலகின் நம்பர் ஒன் இடத்தை எலான் மஸ்க் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது எலான் மஸ்க்குக்கும் பெர்னார்ட் அர்னால்ட்டுக்கும் இடையேயான சொத்து மதிப்பு வித்தியாசத்தில் மிக குறைந்த அளவிலேயே உள்ளது.
இதனால் எலான் மஸ்க்கின் நிறுவனங்களின் பங்கு சற்று உயர்ந்தாலும் அவர் மீண்டும் முதலிடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
டெஸ்லாவின் பங்குதாரர்கள் கூறும் போது, 'டுவிட்டரில் எலான் மஸ்க் அதிக கவனம் செலுத்தியதே டெஸ்லாவின் பங்கு குறைய காரணமாக இருந்தது' என்றார்.
டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். சுமார் 4 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட 6 இந்தியர்கள் இடம் பிடித்தனர்.
- சக்திவாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நியூயார்க்:
அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 100 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் இடம்பெறுவது மிகப்பெரும் கவுரவமாக பார்க்கப்படுகிறது. செல்வம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு ஆகிய 4 துறைகளில் இருந்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை இந்த ஆண்டுக்கான சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
போர்ப்ஸ் பத்திரிகையின் இந்த பெருமை மிகுந்த பட்டியலில் முக்கியமாக 39 தலைமை செயல் அதிகாரிகள், 10 நாடுகளின் தலைவர்கள், 11 கோடீசுவரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இதில் உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உக்ரைன் போர் மற்றும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவரது செல்வாக்கு மிகுந்த தலைமையை அடிப்படையாக கொண்டு பட்டியலில் முதலிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்தப் பட்டியலில் ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லக்ராட் 2-ம் இடத்தையும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்து 6 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 36-வது இடம் பிடித்துள்ளார். கடந்த 3 ஆண்டாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்து வரும் அவர், 4-வது முறையாக இந்த ஆண்டும் தனது இடத்தை உறுதி செய்திருக்கிறார்.
எச்.சி.எல். டெக் தலைவர் ரோஷிணி நாடார் மல்கோத்ரா 53-வது இடமும், செபி தலைவர் மாதபி புரி பக் 54-வது இடமும், இந்திய ஸ்டீல் ஆணைய தலைவர் சோமா மண்டல் 67-வது இடமும் பிடித்துள்ளனர்.
- துருக்கியில் உள்ள சவுதி அரேபியா துணைத் தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை செய்யப்பட்டார்.
- அவரை கொலை செய்ய உத்தரவிட்டதாக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது வழக்கு தொடரப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி சவுதி அரேபிய அரச குடும்பத்தின் தீவிர விமர்சகராக இருந்தார். கடந்த 2017-ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். துருக்கி பெண்ணான ஹதீஜா ஜென்கிஸை காதலித்தார். அவரை திருமணம் செய்ய முடிவு செய்த அவர், முதல் திருமணத்தின் மணமுறிவு ஆவணங்களைப் பெற 2018-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்குச் சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை.
இதையடுத்து, துருக்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தூதரகத்துக்கு உள்ளே பதிவான ரகசிய உரையாடல்களை வைத்து கசோகி மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. துருக்கியில் உள்ள சவுதி அரேபியா துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோகியை கொலை செய்ய உத்தரவிட்டதாக, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டது.
ஹதீஜா ஜென்கிஸ் மற்றும் கசோகியால் நிறுவப்பட்ட உரிமைக் குழு இந்த வழக்கைத் தொடர்ந்தது. இந்த வழக்கில் இளவரசரின் இரண்டு உதவியாளர்களும் குற்றம்சாட்டப்பட்டனர்.
இதற்கிடையே, சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், தனது மகன் இளவரசர் முகமதுவை பிரதமராக நியமித்தார். இதையடுத்து அமெரிக்க அரசு, பிற நாடுகளின் நீதிமன்றங்களில் இருந்து அரசாங்கத் தலைவர்களுக்கு விலக்கு பெறுவதற்கான நீண்டகால சட்ட முன்மாதிரியை குறிப்பிட்டு முகமது பின் சல்மான் சமீபத்தில் பிரதமராக பதவியேற்றிருந்தாலும் அவருக்கு இறையாண்மை விலக்கு அளிக்கவேண்டும் என கோரியது.
இது முகமது பின் சல்மானை பாதுகாக்கும் சூழ்ச்சி என்று கஷோகியின் வருங்கால மனைவி மற்றும் அவரது உரிமைகள் குழு வாதிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமெரிக்க அரசு அவருக்கு விலக்கு அளிக்க தகுதி இருப்பதாக கண்டறிந்ததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்தார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட அவரது உதவியாளர்கள் மீது அமெரிக்க கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.
- வழக்கு தொடர்பாக போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தனர்.
- சிறுமிகள் இறைவனுக்காக தங்கள் நல்லொழுக்கத்தை தியாகம் செய்தார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த மத போதகர் சாமுவேல் ராப்பிலி பேட்மேன் (46). ஒரு குழுவின் போதகராக சாமுவேல் இருந்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் இந்த குழுவின் தலைமையை ஏற்றுக்கொண்ட பிறகு, சாமுவேல் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று பிரகடனம் செய்யத் தொடங்கினார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மிகவும் ஒரு மோசமான வாகனத்தில் அடைத்து வாகனத்திற்குள் இளம் வயது பெண்களை ஏற்றிச் செல்லும்போது பேட்மேன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதன் பிறகு தொடர்ந்து பேட்மேனை போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வந்தனர். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தனர்.
அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், பேட்மேனுக்கு அவரது சொந்த மகள் உள்பட மொத்தம் 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சாமுவேல் கொள்கைகளை சுமார் 50 பேர் பின்பற்றிவந்தனர். 20க்கும் மேற்பட்ட மனைவிகளில் 9க்கும் மேற்பட்டவர்கள் சிறுமிகள் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்டவர்கள். அதுமட்டுமின்றி, அந்த குழுவின் உறுப்பினர்களையும் தங்களின் சிறு வயது மகள்களுடன் உடலுறவில் ஈடுபட அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சாமுவேல் இதுகுறித்து உரையாற்றும் போது, "சிறுமிகள் 'இறைவனுக்காக தங்கள் நல்லொழுக்கத்தை தியாகம் செய்தார்கள் என கூறி உள்ளார்.
கொலராடோ நகரில் உள்ள அவரது இரண்டு வீடுகளில், எப்.பி.ஐ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைக்கு பின், அவரை கைது செய்து அரிசோனா சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நியூராலிங்க் நிறுவனம், மனித மூளைக்குள் ‘சிப்’ பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து பரிசோதனை செய்ய திட்டம்
- பரிசோதனையில் சுமார் 1500 விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
வாஷிங்டன்:
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், டுவிட்டர், நியூராலிங்க் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளராக உள்ளார்.
இதில் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளைக்குள் 'சிப்' பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை தொடங்க இருப்பதாக தெரிவித்து இதற்காக 2018-ம் ஆண்டு முதல் நடத்தும் பரிசோதனையில் விலங்குகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
இதுவரை பரிசோதனையில் செம்மறி ஆடுகள், பன்றிகள், குரங்குகள் உள்பட சுமார் 1500 விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நியூராலிங்க் நிறுவனத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள், விலங்குகள் கொல்லப்பட்டதை உறுதிபடுத்தினர். விலங்குகளிடம் நடந்த பரிசோதனைகள் அவசர அவசரமாக செய்யப்பட்டதால் விலங்குகள் கடுமையாக துன்புறுத்தப்பட்டு உயிரிழப்புகளை சந்தித்தன என்று தெரிவித்தனர்.
பரிசோதனையில் விலங்குகள் கொல்லப்பட்டு இருப்பது விலங்குகள் நலன் மீறல் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆராய்ச்சியை விரைவுபடுத்துவதற்கான எலான் மஸ்க்கின் அறிவுறுத்தலால் விலங்குகளின் இறப்பு எண்ணிக்கை தேவையை விட அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விலங்கு நல சட்டத்தின் கீழ் நியூராலிங்க் நிறுவனம் மீது அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எலான் மஸ்க் மற்றும் நியூராலிங்க் நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை.
- சோதனை முயற்சியாக ராக்கெட் மூலம் ஒரியன் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
- ஓரியன் விண்கலத்தை சான்டியாகோவில் பசிபிக் பெருங்கடலில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப அமெரிக்க விண்வெளி கழகமான நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை வடிவமைத்துள்ளது. இதில் சோதனை முயற்சியாக ராக்கெட் மூலம் ஒரியன் விண்கலம் கடந்த மாதம் 16-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஓரியன் விண்கலம் நிலவின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு சுற்றியது.
இந்த நிலையில் நிலவின் மேலே ஆய்வை முடித்துக் கொண்டு ஓரியன் விண்கலம் பூமிக்கு புறப்பட்டுள்ளது. வருகிற 11-ந்தேதி உள்ளூர் நேரப்படி காலை 9.40 மணிக்கு ஓரியன் விண்கலத்தை சான்டியாகோவில் பசிபிக் பெருங்கடலில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கிருந்து விண்கலம், அமெரிக்க கடற்படை கப்பலில் ஏற்றப்படும். ஓரியன் விண்கலம் பூமிக்கு திரும்பிய பிறகு அதன் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு ஆர்டெமிஸ்-2 திட்டம் தொடங்கப்படும்.
- மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் முதன்மை இடங்களை வகிக்கின்றன.
- வசிப்பதற்கு செலவு குறைந்த நகரங்களில் டமாஸ்கஸ், திரிபோலி ஆகியவை முதன்மை இடங்களை வகிக்கின்றன.
நியூயார்க்:
எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பின்படி உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முதன்மை இடங்களை வகிக்கின்றன.
வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட விஷயங்களுக்கு ஆகும் செலவுகள், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அன்றாட வாழ்க்கைச் செலவு அடிப்படையில், ஆடம்பர நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கு 172 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
உலக அளவில் வசிப்பதற்கு செலவு குறைந்த நகரங்களில் சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ் மற்றும் லிபியா நாட்டின் திரிபோலி ஆகியவை முதன்மை இடங்களை வகிக்கின்றன.
- கற்றல் மற்றும் அறிவைப் போற்றும் குடும்பத்தில் வளரும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.
- என்னை வடிவமைத்த நாட்டினால் இந்த வகையில் கௌரவிக்கப்படுவது நம்பமுடியாத அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
இந்தியா என்னில் ஒரு பகுதி, நான் எங்கு சென்றாலும் அதை என்னுடன் எடுத்துச் செல்வேன் என்று கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இந்திய-அமெரிக்கரான சுந்தர் பிச்சைக்கு வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் 2022ம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. மதுரையில் பிறந்த இவருக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் விருது பெற்ற 17 பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், சுந்தர் பிச்சைக்கு நேற்று சான் பிரான்சிஸ்கோவில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற சுந்தர் பிச்சை பின்னர் பேசியதாவது:-
இந்த மகத்தான கவுரவத்திற்காக இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வடிவமைத்த நாட்டினால் இந்த வகையில் கௌரவிக்கப்படுவது நம்பமுடியாத அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
இந்தியா என்னில் ஒரு பகுதி. நான் எங்கு சென்றாலும் அதை என்னுடன் எடுத்துச் செல்கிறேன். இந்த அழகான விருதைப் போல், நான் எங்காவது பாதுகாப்பாக வைத்திருப்பேன்.
கற்றல் மற்றும் அறிவைப் போற்றும் குடும்பத்தில் வளரும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. என் பெற்றோர் எனது ஆர்வங்களை ஆராய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக நிறைய தியாகம் செய்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த ஆண்டில் மட்டும் வடகொரியா 60-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்துள்ளது.
- வடகொரியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
வாஷிங்டன் :
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து அடாவடி போக்கை கையாண்டு வருகிறது. அந்த வகையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் மட்டும் வடகொரியா 60-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்துள்ளது. இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் சில ஏவுகணைகளும் அடங்கும்.
அணுஆயுத விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியில் வடகொரியா இத்தகைய ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வடகொரியாவின் தொடர் அடாவடி போக்குக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை வித்துள்ளது.
அதே போல் தென்கொரியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன. வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுடன் தொடர்புடைய 3 மூத்த ராணுவ அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் பல தனிநபர்கள் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வடகொரியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
- ஜி20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு இந்தியா வசம் இருக்கும்.
- ஜி20 அமைப்பிற்கு தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்தார்.
வாஷிங்டன்:
இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும்.
இந்நிலையில், ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் கூறுகையில், இந்தியா, அமெரிக்காவின் வலுவான நட்புறவு நாடு. பருவநிலை மாற்றம், எரிசக்தி, உணவு நெருக்கடி ஆகிய சவால்களை எதிர்கொள்ளும் இவ்வேளையில் ஜி20 அமைப்பிற்கு தலைமை பொறுப்பேற்க உள்ள இந்தியாவிற்கும், எனது நண்பர் பிரதமர் மோடிக்கும் எனது ஆதரவை அளிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
- இன்னும் 6 மாதங்களில் மனிதர்களிடம் நியூராலிங்க் சோதனை தொடங்கும் என எலான் மஸ்க் நம்பிக்கை
- மூளையில் செயலிழந்த நியூரானை இந்த சிப் மூலம் தூண்டிவிட்டு வேலை செய்ய வைக்கமுடியும் எனக் கூறுகின்றனர்.
சான் பிரான்சிஸ்கோ:
மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி மனிதர்கள் மத்தியில் சோதனை செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மூளைக்குள் சிப்பை பொருத்தி, அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் வகையில் இந்த பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார். அந்த சிப்களில் ஒன்றை தானே செலுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.
இந்த சோதனை தற்போது குரங்குகளிடம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மனிதர்கள் மத்தியில் சோதனை செய்யப்பட உள்ளது. அதன்மூலம், மனதில் நினைப்பதை கணினி மூலம் செயல்படுத்த முடியும். இந்த பரிசோதனை முயற்சிக்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, தங்களை அனுமதிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக மஸ்க் கூறினார்.
எலான் மஸ்கின் ஸ்டார்ட் அப் நிறுவனமான நியூராலிங்க் இதனை மேற்கொள்கிறது. இன்னும் 6 மாதங்களில் மனிதர்களிடம் நியூராலிங்க் சோதனை தொடங்கும். மனிதர்கள் மத்தியில் இந்த சோதனையை மேற்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம் என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.
இந்த சிப் ஒரு சிறிய நாணயத்தின் அளவில் இருக்கிறது. நியூராலிங்க் 2021ஆம் ஆண்டில் ஒரு வீடியோவை வெளியிட்டது, அதில் ஒரு குரங்கு தனது மூளையில் பொருத்திய சிப்பை பயன்படுத்தி வீடியோ கேம் விளையாடுவதைக் காண முடிந்தது.
இந்த சிப் மூலம் மனிதர்கள் இழந்த பார்வையை பெற முடியும். முதுகுத் தண்டு எலும்பு முறிவு அல்லது பக்கவாதத்தால் முற்றிலுமாக ஊனமுற்றவர்களை மறுவாழ்வு செய்வதிலும் நியூராலிங்கின் தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும். மூளையில் எந்த நியூரான் செயலிழந்ததோ அதனை இந்த சிப் மூலம் தூண்டிவிட்டு வேலை செய்ய வைக்கமுடியும் எனக் கூறுகின்றனர்.
நியூராலிங்க் நிறுவனத்தின் இந்த சோதனை வெற்றியடைந்தால், சிப் உதவியுடன் கணினியைக் கட்டுப்படுத்த முடியும். சிப் பொருத்தப்பட்டவரின் மனதில் நினைக்கும் வேலையை கணினி செய்யும்.
- பில் கிளிண்டனுக்கு (வயது 76) கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- எனக்கு லேசான அறிகுறிகள் உள்ளன.
வாஷிங்டன் :
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கு (வயது 76) கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவர் நேற்று முன்தினம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "எனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. எனக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. மொத்தத்தில் நான் நன்றாக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கிளிண்டன், சிறுநீர்ப்பாதை தொற்றால் பாதிக்கப்பட்டு, அது ரத்தத்தில் கலந்து விட்டதால் அவதிப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குப்பின்னர் குணம் அடைந்தது நினைவுகூரத்தக்கது.






