என் மலர்
அமெரிக்கா
- இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் நிலவு ஆராய்ச்சியில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.
- ஹகுடோ-ஆர் லேண்டர் நிலவை சென்றடைவதற்கு 5 மாதங்கள் ஆகும்.
வாஷிங்டன் :
நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல்கள் உள்ளனவா என்பதை கண்டறியும் ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக லேண்டர், ரோவர் போன்ற ஆய்வு கலங்களை உலக நாடுகள் நிலவுக்கு அனுப்பி வருகின்றன.
எனினும் ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவை ஆய்வு செய்யும் பணிகளில் பல சாதனைகளை படைத்து முன்னணியில் உள்ளன.
அதே சமயம் இந்தியா, ஜப்பான் போன்ற பல நாடுகளும் நிலவு ஆராய்ச்சியில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஐ-ஸ்பேஸ் நிலவை ஆய்வு செய்வதற்காக ஹகுடோ-ஆர் என்ற லேண்டரை உருவாக்கியது.
இந்த லேண்டரை அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்ப ஐ-ஸ்பேஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது.
அதன்படி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்தில் இருந்து நேற்று காலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் ஜப்பானின் ஹகுடோ-ஆர் லேண்டருடன் நிலவுக்கு புறப்பட்டது. இதன் மூலம் நிலவுக்கு லேண்டரை அனுப்பிய உலகின் முதல் தனியார் நிறுவனம் என்கிற பெயரை ஐ-ஸ்பேஸ் நிறுவனம் பெறுகிறது.
பால்கன்-9 ராக்கெட்டில் ஜப்பானின் ஹகுடோ-ஆர் லேண்டருடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் 'ரஷீத்' என்கிற ரோவரும், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் 'பிளாஷ் லைட்' செயற்கைக்கோளும், ஜப்பானின் மற்றொரு தனியார் விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சிறிய ரோபோவும் நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதில் ஜப்பானின் ஹகுடோ-ஆர் லேண்டர் நிலவை சென்றடைவதற்கு 5 மாதங்கள் ஆகும் என்றும், அது நிலவின் வடகிழக்கு பகுதியில், 87 கி.மீ. குறுக்கே 2 கி.மீ. ஆழத்திற்கு மேல் உள்ள அட்லஸ் பள்ளத்தை இலக்காக கொண்டு நகரும் எனவும் ஐ-ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- 'புளூ டிக்' வசதியை பெற மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டுமென அறிவித்தார்.
- டுவிட்டரில் ஏராளமான போலி கணக்குகள் உருவாகின.
சான்பிரான்சிஸ்கோ :
டுவிட்டரில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்கு அதிகாரபூர்வமானது என்பதை உறுதிபடுத்த, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற குறியீடு (புளூ டிக்) குறிக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், குறிப்பிட்ட பயனாளர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டுவிட்டரை தன்வசப்படுத்திய எலான் மஸ்க், டுவிட்டரில் 'புளூ டிக்' வசதியை பெற மாதந்தோறும் 8 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.659) கட்டணம் செலுத்த வேண்டுமென அறிவித்தார். இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் எலான் மஸ்க் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.
இதற்கிடையில் 'புளூ டிக்' வசதியை பெறுவதற்கு எலான் மஸ்க் கட்டணத்தை அறிவித்ததும் டுவிட்டரில் ஏராளமான போலி கணக்குகள் உருவாகின. இதன் காரணமாக டுவிட்டரில் 'புளூ டிக்' வசதி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் டுவிட்டரில் மீண்டும் 'புளூ டிக்' வசதி கிடைக்கும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக வணிக கணக்குகளுக்கான சரிபார்ப்பு தொடங்கும் எனவும், அதன் பின்னர் அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களின் கணக்குகள் சரிபார்ப்பு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ‘சர்வதேச மக்களின் தேர்வு’ அழகி பட்டம் வென்றார்.
- பன்முகத் திறமை கொண்டவர் இவர்.
மியாமி
கோவையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி, இரு பெண் குழந்தைகளின் தாய்.
இவர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்றார். அதில் 'சர்வதேச மக்களின் தேர்வு' அழகி பட்டம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம், அடுத்த முறை நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பிளாரன்ஸ் ஹெலன் நளினிக்கு கிடைத்துள்ளது.
மனநல சிகிச்சை நிபுணர், பெண் தொழில்முனைவாளர், எழுத்தாளர், யோகா பயிற்சியாளர் என்று பன்முகத் திறமை கொண்டவர் இவர்.
கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற 'மிசஸ் இன்டர்நேஷனல் வேர்ல்டு கிளாசிக்' அழகி போட்டியில் பட்டம் வென்றவர் ஹெலன்.
இவர் பல்வேறு சமூக சேவைப் பணிகளிலும் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.
- விண்கலம் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பும் ஏற்பாடுகளை நாசா செய்து வருகிறது.
- சேவைத் தொகுதியில் இருந்து பிரிந்த பிறகு ஓரியன் குழு தொகுதி விண்கலம் தரை இறங்க ‘ஸ்கிப் என்ட்ரி’ நுட்பத்தை பயன்படுத்தும்.
நிலவை ஆய்வு செய்வதற்காக நாசாவின் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
இந்த விண்கலம் நவம்பர் 25ம் தேதி முதல் சந்திரனை சுற்றி ஆய்வு செய்தது. மிக அருகில் நிலவின் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியது.
இந்த நிலையில் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் நிலவில் தனது பணிகளை முடித்துக் கொண்டு அதன் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறி கடந்த வாரம் பூமிக்கு திரும்ப தொடங்கியது.
இன்று இரவு 11.10 மணிக்கு இந்த விண்கலம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள குவாடாலூப் தீவு அருகே தரை இறங்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது. விண்கலம் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பும் ஏற்பாடுகளை நாசா செய்து வருகிறது.
ஓரியன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு அதன் சேவை தொகுதியில் இருந்து குழு தொகுதி பிரிக்கப்படும். சேவை தொகுதி பூமியின் வளிமண்டலத்தில் எரிந்துவிடும். விண்கலத்தின் மீதமுள்ள பாகங்கள் நிலம், மக்கள் மற்றும் கப்பல் வழித்தடங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத வகையில் அது பூமிக்கு திரும்ப நாசா திட்டமிட்டுள்ளது.
சேவைத் தொகுதியில் இருந்து பிரிந்த பிறகு ஓரியன் குழு தொகுதி விண்கலம் தரை இறங்க 'ஸ்கிப் என்ட்ரி' நுட்பத்தை பயன்படுத்தும். இது வருங்கால ஆர்டெமிஸ் திட்டத்துக்கு உதவியாக இருக்கும் என்று நாசா கூறுகிறது. விண்கலம் பாராசூட் உதவியுடன் தரை இறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தலைமை செயல்பாட்டு அதிகாரி பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- 54 வயதான சுஷ்மிதா காப்பீட்டு துறையில் அனுபவம் மிக்கவர் ஆவார்.
நியூயார்க் :
அமெரிக்காவில் உள்ள 12 மத்திய ரிசர்வ் வங்கிகளில் முக்கியமானதாக கருதப்படும் நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் துணை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுஷ்மிதா சுக்லா என்கிற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை செயல்பாட்டு அதிகாரி பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 54 வயதான சுஷ்மிதா காப்பீட்டு துறையில் அனுபவம் மிக்கவர் ஆவார்.
சுஷ்மிதா நியமனத்தை நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கள் குழு அங்கீகரித்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதம் அவர் பதவியேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுஷ்மிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கி போன்ற பணி சார்ந்த அமைப்பில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன். எனது அனுபவங்கள் மற்றும் பாடங்களைக் கொண்டு வங்கியின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும், நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் தேவையான தலைமைப் பண்புடன் செயல்படுவேன்" என குறிப்பிட்டுள்ளார்.
- உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பிற்கு, ஈரான் உதவி வருகிறது.
- ஈரானுக்கு ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஆதரவை ரஷியா அளிக்கிறது.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவிற்கு நூற்றுக்கணக்கான தாக்குதல் ட்ரோன்களை, ஈரான் வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஆழமான பாதுகாப்பு கூட்டணி, உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பிற்கு ஈரான் உதவுவதை வெளிக்காட்டுவதாக பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை விற்பனை செய்ய ஈரான் பரிசீலித்து வருவதாகவும் அமெரிக்க கூறியுள்ளது. இதைடுத்து ஈரானிய நிறுவனங்கள் மற்றும் அதன் அமைப்புகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை வெள்ளை மாளிகை அண்மையில் வெளியிட்டது.
இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஷியா, ஈரானுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில், ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார். வான் பாதுகாப்பு அமைப்புகள், ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் உட்பட ஈரானுக்கு மேம்பட்ட ராணுவ உதவியை வழங்க ரஷ்யா முடிவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க உளவுத்துறை தகவல்களின்படி ஈரானிய விமானிகளுக்கு சுகோய்-35 ரக போர் விமான பயிற்சியை ரஷியா அளித்து வருவதாகவும், அடுத்த வருடத்திற்குள் போர் விமானங்களை ரஷியாவிடம் இருந்து ஈரான் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த போர் விமானங்கள் அந்த பிராந்திய அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது ஈரானின் விமானப்படையை கணிசமாக பலப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பல கட்ட விவாதங்களுக்கு பிறகு கோரிக்கையை ஏற்றுக்கொள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புக்கொண்டுள்ளது.
- அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படும் போது அது உலக அளவிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர்களை அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இது போல ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்தையும் அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இதற்கு ஒருசாரார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இது தொடர்பான சட்டம் கொண்டு வர அமெரிக்காவில் விவாதங்கள் நடந்து வந்தது.
பல கட்ட விவாதங்களுக்கு பிறகு இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இதில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிப்பது மற்றும் இத்திருமணங்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்குவதை பிரதிநிதிகள் சபை ஏற்றுக்கொண்டது.
பிரதிநிதிகள் சபை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இந்த மசோதா அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்துக்கு அனுப்பப்படும்.
இந்த மசோதாவில் ஜனாதிபதி ஜோ பைடன் விரைவில் கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படும் போது அது உலக அளவிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
- அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் சுற்றுலா செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.
- ராக்கெட் பயணத்தில் பங்கேற்க உள்ளோரின் விபரங்களை ஜப்பான் கோடீஸ்வரர் யுசாகு மசோவா அறிவித்தார்.
பூமியில் இருந்து ராக்கெட்டில் சென்று நிலவை சுற்றிவர விரும்புவோர் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் சுற்றுலா செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.
கடந்த 2018-ம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து பலரும் நிலவை சுற்றி பார்க்க விருப்பம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு நிலவை சுற்றி பார்க்க செல்லும் ராக்கெட் பயணத்தில் பங்கேற்க உள்ளோரின் விபரங்களை ஜப்பான் கோடீஸ்வரர் யுசாகு மசோவா அறிவித்தார்.
இந்த சுற்றுலாவில் அமெரிக்க சினிமா தயாரிப்பாளர் பிரென்டன் ஹால், செக் கலைஞர் யெமி ஏடி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதனை ஜப்பானை சேர்ந்த கோடீஸ்வரர் யுசாகு மசோவா அறிவித்து உள்ளார்.
- எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமை அலுவலகத்தில் தற்போது பல புதிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
- நிறுவனத்தில் இருந்த சோபாக்கள், நவீன இருக்கைகள் போன்றவற்றை எலான் மஸ்க் படுக்கைகளாக மாற்றி உள்ளார்.
நியூயார்க்:
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய தொழில் அதிபர் எலான் மஸ்க், அதில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக நிறுவன ஊழியர்கள் பலரும் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதை தொடர்ந்து டுவிட்டரில் புளு டிக்கிற்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
நிறுவனத்தில் அடுத்தடுத்து நடந்த மாற்றங்கள் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமை அலுவலகத்தில் தற்போது பல புதிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். இதில் நிறுவனத்தில் இருந்த சோபாக்கள், நவீன இருக்கைகள் போன்றவற்றை அவர் படுக்கைகளாக மாற்றி உள்ளார்.
இரட்டை சோபாக்கள் ஒற்றை படுக்கையாக மாறி உள்ளது. அவையும் நவீன வடிவமைப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த மாற்றங்கள் மற்றும் இருக்கைகள் படுக்கையான படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடும் பணி செய்யும் ஊழியர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்க இந்த வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த படங்கள் வைரலானதை தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோ நகர அதிகாரிகள் வணிக ரீதியாக பதிவு செய்யப்பட்ட கட்டிடத்தில் ஓய்வறைகள் கட்டியது ஏன்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உக்ரைனுக்கு கூடுதலாக 275 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
- இதுவரை 19 பில்லியனுக்கும் அதிகமான நிதி உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 10 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அனுப்பியுள்ளது. ராக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் ராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது.
ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக இதுவரை 19.3 பில்லியன் டாலர் மதிப்பிலான அதிகமான ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- எலான் மஸ்க்கை முந்தி பிரான்ஸ் தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை பிடித்தார்.
- போர்ப்ஸ் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் ரூ.15.29 லட்சம் கோடி சொத்துடன் முதலிடத்தில் உள்ளார்.
வாஷிங்டன்:
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தை எலான் மஸ்க் இழந்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான அவர் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3½ லட்சம் கோடிக்கு விலைக்கு வாங்கினார்.
இதையடுத்து அவர் டெஸ்லா நிறுவனத்தின் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றார். இதற்கிடையே டுவிட்டர் நிறுவனத்தில் ரூ.3½லட்சம் கோடி முதலீடு செய்ததாலும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததாலும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்தது.
இதையடுத்து எலான் மஸ்க்கை முந்தி பிரான்ஸ் தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை பிடித்தார். போர்ப்ஸ் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் ரூ.15.29 லட்சம் கோடி சொத்துடன் முதலிடத்தில் உள்ளார்.
எலான் மஸ்க் ரூ.15.28 லட்சம் கோடியுடன் 2-வது இடத்துக்கு இறங்கினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் உலகின் நம்பர் ஒன் இடத்தை எலான் மஸ்க் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது எலான் மஸ்க்குக்கும் பெர்னார்ட் அர்னால்ட்டுக்கும் இடையேயான சொத்து மதிப்பு வித்தியாசத்தில் மிக குறைந்த அளவிலேயே உள்ளது.
இதனால் எலான் மஸ்க்கின் நிறுவனங்களின் பங்கு சற்று உயர்ந்தாலும் அவர் மீண்டும் முதலிடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
டெஸ்லாவின் பங்குதாரர்கள் கூறும் போது, 'டுவிட்டரில் எலான் மஸ்க் அதிக கவனம் செலுத்தியதே டெஸ்லாவின் பங்கு குறைய காரணமாக இருந்தது' என்றார்.
டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். சுமார் 4 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட 6 இந்தியர்கள் இடம் பிடித்தனர்.
- சக்திவாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நியூயார்க்:
அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 100 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் இடம்பெறுவது மிகப்பெரும் கவுரவமாக பார்க்கப்படுகிறது. செல்வம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு ஆகிய 4 துறைகளில் இருந்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை இந்த ஆண்டுக்கான சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
போர்ப்ஸ் பத்திரிகையின் இந்த பெருமை மிகுந்த பட்டியலில் முக்கியமாக 39 தலைமை செயல் அதிகாரிகள், 10 நாடுகளின் தலைவர்கள், 11 கோடீசுவரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இதில் உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உக்ரைன் போர் மற்றும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவரது செல்வாக்கு மிகுந்த தலைமையை அடிப்படையாக கொண்டு பட்டியலில் முதலிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்தப் பட்டியலில் ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லக்ராட் 2-ம் இடத்தையும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்து 6 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 36-வது இடம் பிடித்துள்ளார். கடந்த 3 ஆண்டாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்து வரும் அவர், 4-வது முறையாக இந்த ஆண்டும் தனது இடத்தை உறுதி செய்திருக்கிறார்.
எச்.சி.எல். டெக் தலைவர் ரோஷிணி நாடார் மல்கோத்ரா 53-வது இடமும், செபி தலைவர் மாதபி புரி பக் 54-வது இடமும், இந்திய ஸ்டீல் ஆணைய தலைவர் சோமா மண்டல் 67-வது இடமும் பிடித்துள்ளனர்.






