என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக கடந்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி பாராளுமன்றம் கூடியது.
    • டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக அறிவிக்கப்படும் எனவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவினார். ஆனால் அவர் தோல்வியை ஏற்காமல் தேர்தலில் முறைகேடு நடந்தாக குற்றம்சாட்டி வந்தார்.

    இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக கடந்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்கு புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பலியாகினர்.

    இந்த கலவரம் குறித்து அமெரிக்க பாராளுமன்ற குழு 1½ ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகிறது. இதில் கலவரத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் டிரம்பின் தொடர்பு குறித்தும் பாராளுமன்ற குழு விசாரித்து வந்தது.

    இந்த நிலையில் பாராளுமன்ற குழு தனது விசாரணையை நிறைவு செய்துவிட்டதாகவும், கலவரம் தொடர்பாக டிரம்ப் மீது கிளர்ச்சியை தூண்டுதல் உள்பட 3 கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதித்துறைக்கு பரிந்துரைக்க குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மேலும் இந்த குழு அடுத்த வாரம் தனது முழு விசாரணை அறிக்கையை வெளியிடும் எனவும், அப்போது டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக அறிவிக்கப்படும் எனவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    • அமெரிக்க நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களின் டுவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியது.
    • இது மிகுந்த மன உளைச்சலை அளிக்கிறது என்றார் ஐ.நாவின் தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர்.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் பலரின் டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முடக்கியது. டுவிட்டரின் புதிய தனியுரிமைக் கொள்கைகளின் ஒரு பகுதியாக, மற்றவர்களின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் இந்த கணக்குகள் முடக்கப்பட்டதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    அதேசமயம், எலான் மஸ்க்கின் ஒவ்வொரு அசைவுகளையும் ரகசியமாக கண்காணித்து அவர் குறித்து செய்திகளை வெளியிட்டு வந்ததற்காக பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், பத்திரிகையாளர்களின் கணக்குகளை முடக்கியதன் மூலம் ஊடக சுதந்திரத்தைப் பறிப்பதாக கூறி டுவிட்டர் நிறுவனத்துக்கு ஐ.நா. மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஐ.நா.வின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் மெலிசா பிளவ்மிங் கூறுகையில், டுவிட்டரில் பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டது மிகுந்த மன உளைச்சலை அளிக்கிறது. ஊடக சுதந்திரம் என்பது பொம்மை அல்ல. சுதந்திரமான பத்திரிகை ஜனநாயக சமூகங்களின் அடித்தளம் ஆகும். மேலும் அது தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய கருவியாகும் என தெரிவித்தார்.

    ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணையர் வேரா ஜூரோவா, டுவிட்டர் நிறுவனம் ஊடக சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை மதிக்க வேண்டும். எலான் மஸ்க் அதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். டுவிட்டர் நிறுவனம் தொடர்ந்து எல்லை மீறினால் ஐரோப்பாவின் புதிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் கீழ் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்தார்.

    • நிலநடுக்கம் மிட்லாண்டிலிருந்து வட மேற்கே 22 கிலோ மீட்டர் தொலைவிலும் 8 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது.
    • நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    டெக்சாஸ்:

    அமெரிக்காவின் மேற்கு டெக்சாலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எண்ணெய் உற்பத்தி செய்யும் பகுதியில் ரிக்டர் அளவில் 5.4 புள்ளிகளாக நிலநடுக்கம் உண்டானது.

    இந்த நிலநடுக்கம் மிட்லாண்டிலிருந்து வட மேற்கே 22 கிலோ மீட்டர் தொலைவிலும் 8 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    மேலும் இந்த நிலநடுக்கம் வடக்கு டெக்சாசில் லுபாக் வரையும், மிட்லாண்டிற்கு தென்மேற்கே 20 மைல் தொலைவில் உள்ள ஒடெசா வரையும் உணரப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்கா மனித உரிமைகளை காப்பாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது.
    • இந்தியாவில் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்.

    வாஷிங்டன்:

    இந்தியா ஒரு இந்து நாடாக மாறும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளதாக அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி. ஆண்டி லெவின் தெரிவித்துள்ளார். மிச்சிகன் மாகாணம் சார்பில் கடந்த 2019 முதல் ஜனநாயக கட்சியின் எம்.பி.யாக இருந்த லெவின், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னர் பிரதிநிதிகள் சபையில் அவர் ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது:

    அமெரிக்கா மனித உரிமைகளை காப்பாற்றுவதில் அதிக வெற்றியைப் பெற்றுள்ளது, இருப்பினும் நிலைமை பல பகுதிகளில் மோசமாக இருந்தது. மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியா, தற்போது ஒரு இந்து நாடாக மாறும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளது. நான் இந்து மதத்தை நேசிப்பவன், இந்தியாவில் பிறந்த சமணம், பவுத்தம் மற்றும் பிற மதங்களை நேசிப்பவன், ஆனால் அங்குள்ள அனைத்து மக்களின் உரிமைகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். அவர்கள் முஸ்லீம்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள் என யாராக இருந்தாலும் சரி.

    இன்றைய நரேந்திர மோடியின் இந்தியா நான் காதலித்த இந்தியா கிடையாது. நான் நேசிக்கும் ஒரு நாட்டை நான் ஏன் இவ்வளவு பகிரங்கமாக விமர்சிக்க வேண்டும்? ஏனென்றால் நான் இந்தியாவை நேசிப்பதால்தான், அதன் மக்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஒரு இளைஞனாக நான் அறிந்த துடிப்பான இந்திய ஜனநாயகத்திற்கான எனது ஆதரவில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். தலைமுறை தலைமுறையாக அந்த ஜனநாயகம் செழிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நடவடிக்கையை பாகிஸ்தான் கைவிட வேண்டும்.
    • நல்ல அண்டை நாடாக இருக்க பாகிஸ்தான் முயற்சி செய்ய வேண்டும்.

    நியூயார்க்:

    உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு அணுகு முறை மற்றும் சவால்கள் நோக்கி செல்லும் வழி என்ற தலைப்பில் அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், இந்தியாவை விட எந்த நாடும் பயங்கரவாதத்தை சிறப்பாக பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஹினா ரப்பானி  அண்மையில் தெரிவித்திருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

    அவர்கள் (பாகிஸ்தான்) சொல்கிறார்கள், உண்மை என்னவென்றால், இன்று உலகம் பயங்கரவாதத்தின் மையமாக அவர்களைப் பார்க்கிறது. இந்த பிராந்தியத்தில் மற்றும் பிராந்தியத்திற்கு அப்பால், பயங்கரவாதம் எங்கிருந்து வருகிறது என்பதை உலகம் இன்னும் மறந்து விடவில்லை. எனவே, அவர்கள் கற்பனையில் ஈடுபடுவதற்கு முன்பு தங்களை பற்றி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் தனது நடவடிக்கையை சரி செய்து, நல்ல அண்டை நாடாக இருக்க பாகிஸ்தான் முயற்சிக்க வேண்டும். இன்னும் எவ்வளவு காலம் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கடைப் பிடிக்க விரும்புகிறது என்பதை அந்நாட்டு அமைச்சர்கள்தான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். உலகின் மற்ற நாடுகள் இன்று பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்ற பாதையை நோக்கி செல்கின்றன. பாகிஸ்தானும் வளர்ச்சிக்கு முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 16 வயதான அமெரிக்காவை சேர்ந்த இந்திய சிறுவன் நேற்று தொங்கு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • சிறுவன் ஏன் இந்த முடிவை தேடி கொண்டார் என தெரியவில்லை. அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சான் பிரான்சிஸ்கோ:

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் கோல்டன் கேட் என்ற பிரசித்தி பெற்ற தொங்கு பாலம் உள்ளது. அந்த நகரத்தின் அடையாள சின்னமாக திகழும் இந்த தொங்குபாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாலம் திறக்கப்பட்ட 1937ம் ஆண்டில் இருந்து இதுவரை 2 ஆயிரம் பேர் வரை தங்கள் உயிரை மாய்த்து உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 25 பேர் வரை உயிர் இழந்து உள்ளனர்.

    இந்த நிலையில் 16 வயதான அமெரிக்காவை சேர்ந்த இந்திய சிறுவன் நேற்று இந்த தொங்கு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சைக்கிள் மற்றும் செல்போன், கைப்பை ஆகியவை பாலத்தில் அனாதையாக கிடந்தது. இதையடுத்து கடலோர படையினர் அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இது பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மகன் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    சிறுவன் ஏன் இந்த முடிவை தேடி கொண்டார் என தெரியவில்லை. அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை திறப்பு.
    • காந்தி சிலையை ஐ.நா.சபைக்கு இந்தியா பரிசாக அளித்திருந்தது.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை திறந்து வைக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரசும் கூட்டாக சிலையை திறந்து வைத்தனர்.

    இந்த சிலையை ஐ.நா.சபைக்கு இந்தியா பரிசாக அளித்திருந்தது. ஐ.நா. தலைமையகத்தில் காந்தி சிலை நிறுவப்படுவது இதுவே முதல்முறை. நடப்பு மாதத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இந்த நேரத்தில் காந்தி சிலை திறக்கப்பட்டுள்ளது. 


    நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், உலகம் முழுவதும் வன்முறை, மோதல் மற்றும் மனிதாபிமானமற்ற நிலை காணப்படுவதாக கூறினார். உலகம் முழுவதும் அமைதியை உறுதி செய்ய மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் லட்சியங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    காந்தி அகிம்சை, உண்மை மற்றும் அமைதியின் சின்னம் என்றும், இது (மகாத்மா சிலை) எதிர்கால சந்ததியினருக்கு உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கான நமது கடமையை நமக்கு நினைவூட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    பின்னர் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரஸ், பன்முகத்தன்மை இந்தியாவின் மிகப்பெரிய சொத்துகளில் ஒன்று என்பதை உணர்ந்த காந்தி, மதங்கள், கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே இணக்கமான உறவுகளுக்காக பாடுபட்டார் என்றார்.

    மகாத்மா காந்தி ஒரு வரலாற்று நாயகர் மட்டுமல்ல, நவீன யுகத்தின் ரட்சகர்களில் ஒருவர், அவரது தொலைநோக்கு சிந்தனைகள் மற்றும் சமூக மாற்றத்திற்கான அக்கறை இன்றும் எதிரொலிக்கிறது என்றும் குட்டரஸ் குறிப்பிட்டார்.

    • அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களை கடுமையான பனிப்புயல் தாக்கியது.
    • குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக நியூயார்க் உள்ளிட்ட பல மாகாணங்களில் வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களை கடுமையான பனிப்புயல் தாக்கியது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் பனி கொட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த பனிப்புயலால் நியூயார்க், பென்சில்வேனியா, ஒரேகான், நெவாடா, இடாஹோ, வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, வயோமிங், கொலராடோ மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பனிப்புயல் காரணமாக சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனித்துகள் குவிந்துள்ளன. குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.

    இதனிடையே பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று முன்தினம் 137 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும், இன்னும் சில விமானங்கள் மோசமான வானிலை காரணமாக வேறு இடங்களுக்கு மாற்றிவிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • மினி வெட்டிக்கல் விபத்தில் சிக்கிய விபரம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
    • மினி வெட்டிக்கல் இறந்துவிட்ட தகவல் அறிந்ததும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும் சோகத்தில் மூழ்கினர்.

    ஹூஸ்டன்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த ராமமங்கலத்தை சேர்ந்தவர் மினி வெட்டிக்கல் (வயது 52).

    மினி வெட்டிக்கல் அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். மேலும் சமூக வலைதளங்களிலும் ஆர்வமாக இருந்தார்.

    சம்பவத்தன்று இவர் ஆஸ்பத்திரியில் பணி முடிந்து வீட்டுக்கு காரில் வந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், மினி வெட்டிக்கல் வந்த கார் மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் காரில் இருந்த டாக்டர் மினி வெட்டிக்கல் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மினி வெட்டிக்கல் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே மினி வெட்டிக்கல் விபத்தில் சிக்கிய விபரம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

    மேலும் அவர் இறந்துவிட்ட தகவல் அறிந்ததும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும் சோகத்தில் மூழ்கினர். பலியான மினி வெட்டிக்கல்லுக்கு திருமணமாகி கணவரும் குழந்தைகளும் உள்ளனர்.

    மினி வெட்டிக்கல் இறந்தது பற்றி அவரது நண்பர்கள் கூறும்போது, மினி வெட்டிக்கல் சிறந்த நடன கலைஞர் என்றும், சமூக பணிகளில் அதிக ஆர்வம் கொண்டவர் எனவும் தெரிவித்தனர்.

    • மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்ல ‘ஓரியன்’ என்கிற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது.
    • சுமார் 26 நாட்கள் நிலவின் சுற்றுவப்பட்டப்பாதையில் சுற்றி வந்தது.

    வாஷிங்டன்

    அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதரை அனுப்ப 'ஆர்டெமிஸ்' என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்ல 'ஓரியன்' என்கிற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது.

    சோதனை முயற்சியாக ஆளில்லா ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்ட நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் அந்த முயற்சி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

    அதைதொடர்ந்து, கடந்த மாதம் 16-ந் தேதி 'ஆர்டெமிஸ்-1' ராக்கெட் மூலம் 'ஓரியன்' விண்கலம் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது.

    பின்னர் ராக்கெட்டில் இருந்து பிரிந்த 'ஓரியன்' விண்கலம் நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது. 6 நாட்கள் பயணத்துக்கு பின் 'ஓரியன்' விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.

    சுமார் 26 நாட்கள் நிலவின் சுற்றுவப்பட்டப்பாதையில் சுற்றி வந்த 'ஓரியன்' விண்கலம் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் பூமிக்கு புறப்பட்டது. பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த விண்கலம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

    • இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் நிலவு ஆராய்ச்சியில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.
    • ஹகுடோ-ஆர் லேண்டர் நிலவை சென்றடைவதற்கு 5 மாதங்கள் ஆகும்.

    வாஷிங்டன் :

    நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல்கள் உள்ளனவா என்பதை கண்டறியும் ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

    அதன்படி நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக லேண்டர், ரோவர் போன்ற ஆய்வு கலங்களை உலக நாடுகள் நிலவுக்கு அனுப்பி வருகின்றன.

    எனினும் ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவை ஆய்வு செய்யும் பணிகளில் பல சாதனைகளை படைத்து முன்னணியில் உள்ளன.

    அதே சமயம் இந்தியா, ஜப்பான் போன்ற பல நாடுகளும் நிலவு ஆராய்ச்சியில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஐ-ஸ்பேஸ் நிலவை ஆய்வு செய்வதற்காக ஹகுடோ-ஆர் என்ற லேண்டரை உருவாக்கியது.

    இந்த லேண்டரை அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்ப ஐ-ஸ்பேஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது.

    அதன்படி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்தில் இருந்து நேற்று காலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் ஜப்பானின் ஹகுடோ-ஆர் லேண்டருடன் நிலவுக்கு புறப்பட்டது. இதன் மூலம் நிலவுக்கு லேண்டரை அனுப்பிய உலகின் முதல் தனியார் நிறுவனம் என்கிற பெயரை ஐ-ஸ்பேஸ் நிறுவனம் பெறுகிறது.

    பால்கன்-9 ராக்கெட்டில் ஜப்பானின் ஹகுடோ-ஆர் லேண்டருடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் 'ரஷீத்' என்கிற ரோவரும், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் 'பிளாஷ் லைட்' செயற்கைக்கோளும், ஜப்பானின் மற்றொரு தனியார் விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சிறிய ரோபோவும் நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    இதில் ஜப்பானின் ஹகுடோ-ஆர் லேண்டர் நிலவை சென்றடைவதற்கு 5 மாதங்கள் ஆகும் என்றும், அது நிலவின் வடகிழக்கு பகுதியில், 87 கி.மீ. குறுக்கே 2 கி.மீ. ஆழத்திற்கு மேல் உள்ள அட்லஸ் பள்ளத்தை இலக்காக கொண்டு நகரும் எனவும் ஐ-ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • 'புளூ டிக்' வசதியை பெற மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டுமென அறிவித்தார்.
    • டுவிட்டரில் ஏராளமான போலி கணக்குகள் உருவாகின.

    சான்பிரான்சிஸ்கோ :

    டுவிட்டரில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்கு அதிகாரபூர்வமானது என்பதை உறுதிபடுத்த, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற குறியீடு (புளூ டிக்) குறிக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், குறிப்பிட்ட பயனாளர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டுவிட்டரை தன்வசப்படுத்திய எலான் மஸ்க், டுவிட்டரில் 'புளூ டிக்' வசதியை பெற மாதந்தோறும் 8 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.659) கட்டணம் செலுத்த வேண்டுமென அறிவித்தார். இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் எலான் மஸ்க் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

    இதற்கிடையில் 'புளூ டிக்' வசதியை பெறுவதற்கு எலான் மஸ்க் கட்டணத்தை அறிவித்ததும் டுவிட்டரில் ஏராளமான போலி கணக்குகள் உருவாகின. இதன் காரணமாக டுவிட்டரில் 'புளூ டிக்' வசதி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

    இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் டுவிட்டரில் மீண்டும் 'புளூ டிக்' வசதி கிடைக்கும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக வணிக கணக்குகளுக்கான சரிபார்ப்பு தொடங்கும் எனவும், அதன் பின்னர் அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களின் கணக்குகள் சரிபார்ப்பு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×