என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • நாராயண முத்தனா, கோகுல் சேத்தி குடும்பங்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டுகிறார்கள்
    • இதுவரை 5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.4.14 கோடி) திரண்டிருக்கிறதாம்.

    டாலர் தேசமான அமெரிக்கா, பனிப்புயலாலும், பனிப்பொழிவாலும் பனிப்பிரதேசமாக மாறி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களும், கனடா மக்களும் இந்த பனிப்புயலால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், அங்கே அரிசோனா மாகாணத்தில் வசித்து வந்த இந்திய தம்பதியர், நாராயண முத்தனா (வயது 49), ஹரிதாவுக்கு, 12 மற்றும் 7 வயதில் உள்ள தங்கள் இரு செல்ல மகள்களோடு இன்பச்சுற்றுலா செல்ல ஆசை வந்தது. அதற்கு காரணம் இருந்தது. ஹரிதாவின் பிறந்த நாளை இப்படி வெளியே போய் கொண்டாட வேண்டும் என்று.

    6 பெரியவர்கள், 5 குழந்தைகளைக் கொண்ட 3 குடும்பங்கள் தங்கள் பகுதியில் இருந்து பனிவெளிகளை பார்த்து ரசித்து அனுபவிக்க, கடந்த 26-ந் தேதி காரில் புறப்பட்டார்கள்.

    அங்கே கோகோனினோ கவுண்டிக்கு சென்றார்கள். உறைந்து போன உட்ஸ் கேன்யன் ஏரிக்குச் செல்லவும் ஆசைப்பட்டார்கள். போனார்கள்.

    உறைந்து போன ஏரியைப் பார்த்ததும், நாராயண முத்தனா, ஹரிதா, அவர்களது நண்பர் கோகுல் சேத்தி (47) ஆகியோருக்கு, அதில் நடக்கவும், அதைப் படம்பிடிக்கவும் ஆசை வந்தது.

    அந்த ஆசையையும் நிறைவேற்றிக்கொண்டார்கள். பாவம், அவர்களுக்குத் தெரியாது, இந்த மகிழ்ச்சி நிலைத்திருக்கப்போவதில்லை, அடுத்த சில நிமிடங்களில் அது துயரமாக உருவெடுக்கப்போகிறது என்பது அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்க ஒரு நியாயம் இல்லை.

    உறைந்து போன ஏரியில் படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, அவர்களை அறியாமல் உயிரை உறைய வைக்கும் மைனஸ் 30 டிகிரி வெப்ப நிலை கொண்ட தண்ணீரில் தவறி விழுந்தார்கள்.

    உடனே மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டார்கள். ஹரிதாதான் முதலில் மீட்கப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்திருந்தார். மறுநாளில்தான் அவரது கணவர் நாராயண முத்தனாவும், கோகுல் சேத்தியும் உயிரற்ற உடல்களாக மீட்கப்பட்டனர்.

    இந்த துயரம், இரு குடும்பங்களையும் மீளாத சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவை கண்ணீரும், கம்பலையுமாய் தத்தளிக்கின்றன.

    ஒரே நாளில் நாராயண முத்தனா, ஹரிதா தம்பதியரின் செல்ல மகள்கள், தங்கள் அன்புப்பெற்றோரை இழந்து அனாதையாகி நிர்க்கதியாய் நிற்கிறார்கள்.

    அந்த நாட்டின் சட்டப்படி தற்போது அவர்கள் இருவரும் அரிசோனா மாகாண குழந்தைகள் பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    அந்தக் குழந்தைகளை அவர்களது பக்கத்து வீட்டுக்காரரான கிஷோர் பிட்டாலா தனது பாதுகாப்பில் பெற்று, இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார் என்கிற தகவலை அரிசோனா தெலுங்கு சங்கத்தின் தலைவர் வெங்கட் கொம்மினேனி தெரிவித்துள்ளார்.

    அந்தக் குழந்தைகளின் தாத்தா, பாட்டி அதாவது நாராயண முத்தனாவின் பெற்றோர் வெங்கட சுப்பாராவும், வெங்கட ரத்னமும்தான் இனி அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும். இவர்கள், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், பாலப்பற்று கிராமத்தில் வாழ்கிறார்கள். இத்தனை நாட்களாய் அமெரிக்காவில் வசித்து வந்த மகனது குடும்பத்துக்காக காத்திருந்தவர்கள், இந்த முறை பேரக்குழந்தைகளுக்காக மட்டுமே கலங்கிய கண்களோடு காத்திருக்கிறார்கள்.

    "அங்கே பனிப்புயல் வீசிக்கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றனவே, எப்படி இருக்கிறாய் என்று கடந்த வாரம்தான் எனது மகன் நாராயண முத்தனாவை செல்போனில் அழைத்துப்பேசினேன், அதற்குள் இப்படி ஒரு முடிவா?" என சொல்லிச்சொல்லி மாய்ந்து போகிறார், வெங்கட சுப்பாராவ்.

    நாராயணா முத்தனா, ஹரிதா தம்பதியரோடு பலியான கோகுல் சேத்திக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாராயண முத்தனா, கோகுல் சேத்தி குடும்பங்களுக்கு உதவுவதற்காக 'கோபண்ட்மீ' என்ற பெயரில் நிதி திரட்டுகிறார்கள். நேற்று வரை 5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.4.14 கோடி) திரண்டிருக்கிறதாம்.

    • டுவிட்டரில் தங்கள் தகவல்கள் பரிமாறப்படவில்லை என்றும், டுவிட்டர் தளம் இயங்கவில்லை எனவும் பயனாளர்கள் புகார் அளித்தனர்.
    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் கணக்குகள் இயங்கவில்லை.

    வாஷிங்டன்:

    உலகின் முன்னணி தகவல் தொடர்பு வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கையகப்படுத்தினார்.

    எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின்பு நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். முதல் கட்டமாக ஊழியர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அடுத்து டுவிட்டர் அலுவலகத்தில் இருக்கைகள் மற்றும் ஓய்வு அறைகள் மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் டுவிட்டர் செயல்பாடு திடீரென முடங்கியது. இதற்கு எலான் மஸ்க் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

    அதன்பின்பு இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாது என எலான் மஸ்க் கூறியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை டுவிட்டரின் தகவல் பரிமாற்றம் தடைபட்டது. இப்போது 3-வது முறையாக நேற்று மீண்டும் டுவிட்டர் செயல்பாடு முடங்கியது.

    அமெரிக்காவில் நேற்று இரவு முதல் இந்த நிலை ஏற்பட்டது. பல பயன்பாட்டாளர்களின் கணக்குகள் செயல்படவில்லை.

    இது தொடர்பாக டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் புகார் அளித்தனர். அதில் தங்கள் தகவல்கள் பரிமாறப்படவில்லை என்றும், டுவிட்டர் தளம் இயங்கவில்லை எனவும் கூறினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் டுவிட்டர் மீண்டும் இயங்க தொடங்கியது. இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்தனர். அதே நேரம் சிலர் டுவிட்டரின் செயல்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டனர்.

    • சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
    • உலக நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    நியூயார்க்:

    சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து உலக நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக அமெரிக்கா, சீனாவில் இருந்து வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. குறிப்பாக சீனாவில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகள் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

    • குளிர், மின்தடை, போக்குவரத்து பிரச்சினை போன்றவற்றை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.
    • அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நியூயார்க்கில் மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

    அமெரிக்காவை பனிப்புயல் கடுமையாக தாக்கியது. அந்நாடு முழுவதும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வெடிகுண்டு சூறாவளி என்று அழைக்கப்படும் அந்த பனிப்புயலால் பல மாகாணங்களில் மக்கள் முடங்கி போய் கிடக்கிறார்கள்.

    இடைவிடாது பனிப்பொழிவு உள்ளதால் சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனி குவிந்து இருக்கிறது. அதனை அகற்ற நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து பனி கொட்டுவதால் மீட்பு பனிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மார்பளவுக்கு பனி கிடக்கிறது.

    இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள். குளிர், மின்தடை, போக்குவரத்து பிரச்சினை போன்றவற்றை மக்கள் சந்தித்து வருகிறார்கள். இந்த பனிப்புயலால் பலியானவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது.

    சிலர் காருக்குள்ளேயே உறைந்து உயிரிழந்துள்ளனர். அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நியூயார்க்கில் மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் கடுமையான பனிபுயல் வீசியது.
    • ஆம்புலன்சு வாகனங்கள் கூட சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    நியூயார்க்:

    அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் குளர்காலத்தில் பனிபுயல் வீசுவது வழக்கம்.

    பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகர சாலைகள் அனைத்தும் பனி மூடிக்கிடக்கிறது. குறைந்தபட்சம் சுமார் 25 சென்டி மீட்டர் உயரத்திற்கு சாலைகளை பனி மூடிக்கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களும் பனியால் மூடப்பட்டு நகரமே வெண்பனி மூட்டமாக காணப்பட்டது. வெப்ப நிலை பூஜியத்திற்கும் கீழ் சென்றதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடி மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் கடுமையான பனிபுயல் வீசியது. இதன் காரணமாக ஆம்புலன்சு வாகனங்கள் கூட சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பனிபுயலில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கவும் அரசு ஏற்பாடு செய்தது.

    மேலும் பனிபுயல் கடுமையாக தாக்கிய பகுதிகளுக்கு மீட்பு படையினர் சென்று அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகிறார்கள்.

    மேலும் பனி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் பிணங்களையும் மீட்டு வருகிறார்கள். நியூயார்க்கின் பப்பேலா பகுதியில் பனி கட்டிகளுக்கு அடியில் ஏராளமான பிணங்கள் புதைந்து கிடந்தன. அவற்றை மீட்பு குழுவினர் மீட்டனர். பனிபுயலில் சிக்கி இதுவரை பொதுமக்கள், பெண்கள் உள்பட 60 பேர் பலியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற பனிபுயல் வீசியதில்லை என்று கூறப்படுகிறது. பனிபுயல் காரணமாக அமெரிக்காவில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    விமான நிலையங்களின் ஓடுபாதையில் சுமார் ஒரு மீட்டர் அளவுக்கு பனி படிந்து இருப்பதால் விமானங்கள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக பல தனியார் விமான நிறுவனங்கள் தங்கள் சேவையை ரத்து செய்தது. சவுத்வெஸ்டு நிறுவனம் மட்டும் சுமார் 2497 விமான சேவைகளை ரத்து செய்ததாக கூறியுள்ளது.

    நேற்று மட்டும் 3410 உள்நாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவித்தன.

    அமெரிக்கா முழுவதும் மொத்தம் 15 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் விமான பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

    அமெரிக்காவில் பனிபுயலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்தார்.

    கிறிஸ்துமஸ் விடுமுறை நாளில் நடந்த இந்த சோகச்சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. பனிபுயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

    • பனிப்புயலில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
    • ஒக்ல ஹோமா, கென்டக்கி, மிசோரி, நியூயார்க், கொலரோடா உள்ளிட்ட மாகாணங்களில்தான் உயிர் இழப்புகள் அதிகமாக உள்ளது.

    அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் நிலவிவரும் பனிப்புயல் அந்நாட்டு மக்களை நிலை குலைய செய்துள்ளது.

    வளி மண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் பல்வேறு மாகாணங்களில் வெடிகுண்டு சூறாவளி எனப்படும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் அங்கு வீசி வரும் பனிப்புயல் அமெரிக்காவை புரட்டி போட்டு உள்ளது. மைனஸ் 48 டிகிரி செல்சியசில் குளிர் வாட்டி வருவதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    பப்பலோ உள்ளிட்ட நகரங்களில் வீடுகளை பனி சூழ்ந்து உள்ளது. ரோடுகளில் பல அடி உயரத்துக்கு பனி மூடிக்கிடக்கிறது. இதனால் நெடுஞ்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. பனி காரணமாக வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கள் ஏற்படுவதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    கடுமையான குளிர் வாட்டி வதைப்பதாலும் பனி புயல் வீசி வருவதாலும் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் இருளில் மூழ்கி கிடக்கிறது. பொதுமக்கள் தாங்க முடியாத துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.

    அவசர உதவிக்கு கூட ஆம்புலன்சுகள் செல்ல முடியாத நிலை உள்ளது. பனிப்புயலில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    பனியால் உறைந்து கிடக்கும் கார்கள் மற்றும் ரோடுகளில் பலர் உயிர் இழந்து பிணமாக கிடக்கின்றனர். பனிபுயலுக்கு இறந்தவர் எண்ணிக்கை 34ஆக உயர்ந்து உள்ளது. ஒக்ல ஹோமா, கென்டக்கி, மிசோரி, நியூயார்க், கொலரோடா உள்ளிட்ட மாகாணங்களில்தான் உயிர் இழப்புகள் அதிகமாக உள்ளது.

    அமெரிக்காவை உலுக்கி வரும் பனிப்புயலால் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் களை இழந்தது. வாகன போக்குவரத்து மற்றும் விமான போக்கு வரத்து எதுவும் இல்லாததால் பொதுமக்களால் எங்குமே செல்ல முடியவில்லை.

    • பனிப்புயல் அமெரிக்க மாகாணங்களை புரட்டி எடுத்து வருகிறது.
    • பனிப்புயல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முடக்கியது.

    வாஷிங்டன் :

    அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் மோசமான பனிப்புயலை எதிர்கொண்டு வருகிறது. வெடிகுண்டு சூறாவளி என்று அழைக்கப்படும் பயங்கர பனிப்புயல் கடந்த இரு தினங்களாக அமெரிக்க மாகாணங்களை புரட்டி எடுத்து வருகிறது.

    இந்த புயல் தற்போது கனடாவின் கிழக்கு பகுதியிலும் மையம் கொண்டிருந்தாலும் கூட, கடுமையான காற்று, கடுமையான பனியுடன் அமெரிக்க மாகாணங்களை தொடர்ந்து தாக்கி வருவதாக அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    இந்த பனிப்புயல் அங்கு ஆண்டின் மிக முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முடக்கியது. கடும் குளிரால் மக்கள் வீடுகளுக்குளேயே முடங்கியுள்ளனர். அதோடு, பனிப்புயல் காரணமாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பல லட்சம் மக்கள் கிறிஸ்துமஸ் இரவில் மின்சாரம் இன்றி பரிதவிப்புக்கு ஆளாகினர். மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட வேறு ஊர்களுக்கு சாலை மற்றும் வான் வழியாக பயணிக்கும் கோடிக் கணக்கானவர்களின் பயணம் தடைபட்டது.

    இதனிடையே சாலை விபத்துகள் உள்பட பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் பல உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. அந்த வகையில் ஓஹியோ மாகாணத்தில் நிகழ்ந்த சங்கிலி தொடர் விபத்தில் உயிரிழந்தவர்கள் உள்பட 12 பேர் பனிப்புயலால் பலியனாதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன.

    இந்த நிலையில் பனிப்புயலால் அமெரிக்கா முழுவதும் மேலும் பலர் உயிரிழந்ததாகவும், இதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஓக்லஹோமா, கென்டக்கி, மிசோரி, டென்னசி, விஸ்கான்சின், கன்சாஸ், நெப்ராஸ்கா, ஓஹியோ, நியூயார்க், கொலராடோ மற்றும் மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • சமீபத்தில் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    சமீபத்தில் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மாணவ, மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.

    இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து வெளிநாட்டு, உள்நாட்டு அரசுசாரா நிறுவனங்களும் (என்ஜிஓ) பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தவேண்டும் என தலிபான் அரசாங்கம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. எந்த ஒரு என்.ஜி.ஓ. நிறுவனமாக இருந்தாலும் இந்த உத்தரவை பின்பற்றவில்லை என்றால் ஆப்கானிஸ்தானில் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என பொருளாதாரத்துறை மந்திரி காரி தின் முகமது ஹனீப் கூறியிருக்கிறார்.

    இந்நிலையில், என்.ஜி.ஓ. நிறுவனங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தடை விதித்த தலிபான் உத்தரவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கையில், உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான நடவடிக்கைகளில் பெண்கள் மையமாக உள்ளனர். இந்த முடிவு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும்.

    மேலும் இந்த தடையானது மில்லியன் கணக்கான மக்களின் உயிர்காக்கும் உதவியை சீர்குலைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

    • கடும் பனிப்பொழிவால் வெளியில் செல்ல முடியாத சூழலில் வீட்டுக்குள் மின்சாரம் இல்லாமல் குளிரில் உறைந்து போய் கிடக்கிறார்கள்.
    • அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களையிழந்தது.

    அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வெடிகுண்டு சூறாவளி என்று அழைக்கப்படும் இந்த பனிப்புயல் பல மாகாணங்களை தாக்கி வருகிறது. இதனால் தொடர்ந்து பனி கொட்டியபடியே இருக்கிறது.

    பனிப்புயலால் அமெரிக்காவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மலைபோல் பனி குவிந்து கிடக்கிறது. ரெயில் பாதைகள், விமான ஓடுபாதைகளில் பனி கொட்டிக்கிடக்கிறது.

    இதனால் விமானங்கள், ரெயில்கள் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. பல இடங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கள் ஏற்பட்டன. இதில் உயிரிழப்புகளும் உண்டாகி இருக்கிறது.

    அமெரிக்காவில் சூறாவளி பனிப்புயலுக்கு 18 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரை தாங்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். தங்கள் வீடுகளில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தாலும் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி வரை சென்றுள்ளதால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    மேலும் பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 17 லட்சம் பேர் மின்சாரமின்றி இருளில் தவிக்கிறார்கள். கடும் பனிப்பொழிவால் வெளியில் செல்ல முடியாத சூழலில் வீட்டுக்குள் மின்சாரம் இல்லாமல் குளிரில் உறைந்து போய் கிடக்கிறார்கள்.

    சாலைகள், மற்ற இடங்களில் கிடக்கும் பனிகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆனாலும் இடைவிடாத பனிப்பொழிவு இருப்பதால் தொடர்ந்து பனி குவிந்துகொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களையிழந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6000 கோடி) தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டது.
    • அபராத தொகையை செலுத்தி இருந்தாலும் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை.

    சான்பிரான்சிஸ்கோ:

    உலகம் முழுவதும் பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அமெரிக்க பேஸ்புக் பயனர்களின் தகவல்களை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்த அனுமதித்ததாக பேஸ்புக் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6000 கோடி) தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    அபராத தொகையை செலுத்தி இருந்தாலும் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பயனர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நலன் கருதியே இந்த அபராத தொகையை அளிக்க சம்மதித்து உள்ளோம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • உக்ரைனியர்களாகிய நாங்கள் சுதந்திர போரை கடந்து செல்வோம்.
    • எங்கள் போர், சுதந்திரத்துக்கானது, உக்ரைன் மக்களின் பாதுகாப்புக்கானது.

    வாஷிங்டன் :

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 300 நாட்களைக்கடந்து சென்று கொண்டிருப்பதால் அது உலகளவில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த போருக்கு மத்தியில் உக்ரைன் நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றது, உலகளவில் பேசுபொருளாகி இருக்கிறது.

    அவர் போலந்து நாட்டின் ரெஸ்சோவ் நகரில் இருந்து அமெரிக்காவின் போர் விமானத்தில்தான் அங்கு சென்றார். அங்கு அவருக்கு ஒரு மாபெரும் ஹீரோவுக்குரிய வரவேற்பு அளிக்கப்பட்டது

    வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் உக்ரைனிய ராணுவ பதக்கத்தை ஜோ பைடனிடம் வழங்கினார். ஜெலன்ஸ்கிக்கு ஜோ பைடன் 2 கட்டளை நாணயங்களை வழங்கினார்.

    இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜெலன்ஸ்கியிடம் ஜோ பைடன், "இந்த பயங்கரமான நெருக்கடியில் உங்கள் தலைமை, நீங்கள் செய்திருக்கும் செயல்கள் உக்ரைன் மக்களையும், அமெரிக்க ஜனாதிபதியையும், அமெரிக்க மக்களையும், ஒட்டுமொத்த உலகையும் ஈர்த்துள்ளது" என புகழாரம் சூட்டினார். உக்ரைனுக்கு அமெரிக்கா செய்த பெரும் உதவிகளுக்கு தான் நன்றி கூறத்தான் அமெரிக்கா வந்துள்ளதாக ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    ஜெலன்ஸ்கியின் வாஷிங்டன் பயணத்தையொட்டி, உக்ரைனுக்கு 1.85 பில்லியன் டாலர் (சுமார் ரூ.15 ஆயிரத்து 306 கோடி) பாதுகாப்பு உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

    அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசுவதற்காக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அவருக்கு அமெரிக்க தேசியக்கொடியை வழங்கினார்.

    இந்த கூட்டுக்கூட்டத்தில் ஜெலன்ஸ்கி பேசும்போது கூறியதாவது:-

    எங்களுக்கு அமைதி வேண்டும். இதற்கான 10 அம்ச திட்டத்தை வழங்கி உள்ளேன். அதுபற்றி ஜனாதிபதி ஜோ பைடனிடம் விவாதித்தேன். இது இன்னும் பல பத்தாண்டுகளுக்கு கூட்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை தரும் என நம்புகிறேன்.

    உக்ரைனியர்களாகிய நாங்கள் சுதந்திர போரை கடந்து செல்வோம். நாங்கள் கண்ணியத்துடன், வெற்றிகரமாக சுதந்திரத்தை அடைவோம். நாங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம். எங்கள் நாட்டில் மின்சாரம் இல்லை என்றாலும், எங்களில் நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை தீபத்தை அணைத்து விட முடியாது.

    ரஷியா எங்கள் மீது ஏவுகணைகளால் தாக்கினால், நாங்கள் எங்களைக் காக்க எங்களால் முடிந்ததைச் செய்வோம். அவர்கள் எங்களை ஈரான் டிரோன்களால் தாக்கினால், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது எங்கள் மக்கள் வெடிகுண்டு தவிர்ப்பு புகலிடத்துக்கு செல்வார்கள்.

    எங்கள் போர், உயிருக்கானது மட்டுமல்ல. எங்கள் போர், சுதந்திரத்துக்கானது, உக்ரைன் மக்களின் பாதுகாப்புக்கானது.

    இந்த போர், என்னவிதமான உலகத்தில் எங்கள் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் வசிக்கப்போகின்றன என்பதை வரையறை செய்யும்.

    உக்ரைன் உயிருடன்தான் இருக்கிறது. நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம். நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம். உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ராணுவ உதவி, தொண்டு அல்ல. இது எதிர்கால பாதுகாப்புக்கான முதலீடு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை நிலவுகிறது.
    • பனிப்பொழிவால் அமெரிக்கா முழுவதும் நேற்று 2,270 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை நிலவுகிறது.

    கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுது.

    சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனித்துகள் குவிந்துள்ளன. குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று 2,270 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை செல்லும் 1000 விமானங்கள் ரத்தாகியுள்ளன. மேலும் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தடைகின்றன.

    பனிப்பொழிவால் விமான சேவை தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பயணிகள் பாதிப்புக்கு இலக்காகினர்.

    ×