என் மலர்
அமெரிக்கா
- டயர் நிக்கோலஸ் என்பவர் காரை விதியை மீறி ஓட்டியதாக போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
- வீட்டுக்குத்தான் செல்கிறேன் என்று கூறி நிக்கோலசை கைது செய்வதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
அமெரிக்காவின் மெம்பிஸ் பகுதியில் கருப்பின வாலிபர் டயர் நிக்கோலஸ் (வயது29) என்பவர் காரை விதியை மீறி ஓட்டியதாக போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அப்போது நிக்கோலசை 5 போலீஸ்காரர்கள் சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த நிக்கோலஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து, அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். கருப்பின வாலிபரை போலீசார் தாக்கி கொன்ற சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாலிபரை தாக்கிய 5 போலீசாரும் நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்தநிலையில் நிக்கோலசை போலீசார் பிடித்து சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அவரை தாக்கும் 5 போலீசாரும் கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள்.
காரில் செல்லும் நிக்கோலசை போலீசார் தடுத்து நிறுத்துகிறார்கள். அவரை கைது செய்ய முயற்சிக்கும் போது தான் தவறு செய்யவில்லை. வீட்டுக்குத்தான் செல்கிறேன் என்று கூறி நிக்கோலசை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இதனால் அவரை போலீசார் பலமாக தாக்குகிறார்கள். அவரது முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடிக்கிறார்கள். பின்னர் நிக்கோல்சை முகத்தில் சரமாரியாக தாக்குகிறார்கள். கைகள் பின்புறம் விலங்கிட்ட நிலையில் மயங்கியபடி கீழே விழுந்து கிடக்கும் நிக்கோலஸ் ஒரு கட்டத்தில் அழுதபடி அம்மா அம்மா என்று கதறுகிறார். அதன் பிறகு அவரை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து செல்கிறார்கள்.
கடந்த 2020-ம் ஆண்டு கருப்பின வாலிபர் ஜார்ஜ் பிளாய்ட்டை போலீசார் தாக்கி கொன்றதால் பெரும் போராட்டங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரிகேடியர் ஜெனரல் என்பது அமெரிக்க விமானப்படையின் ஒரு நட்சத்திர ஜெனரல் அதிகாரி பதவி ஆகும்.
- இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட்சபை ஒப்புதல் வழங்க வேண்டும்.
வாஷிங்டன் :
அமெரிக்க விமானப்படையின் பிரிகேடியர் ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீரர் ராஜா சாரியை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார். பிரிகேடியர் ஜெனரல் என்பது அமெரிக்க விமானப்படையின் ஒரு நட்சத்திர ஜெனரல் அதிகாரி பதவி ஆகும். இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட்சபை ஒப்புதல் வழங்க வேண்டும்.
45 வயதான ராஜா சாரி தற்போது அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசாவின் 'க்ரூ-3' விண்வெளி திட்டத்தின் தலைவராக உள்ளார். 'க்ரூ-3' என்பது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டமாகும்.
அமெரிக்க விமானப்படையில் கர்னலாக இருந்த ராஜா சாரி, 461-வது விமானப்படை குழுவின் கட்டளை அதிகாரியாகயும், அமெரிக்காவின் முக்கிய போர் விமானங்களில் ஒன்றான எப் 35-ன் ஒருங்கிணைந்த பரிசோதனைப் பிரிவின் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
ராஜா சாரி நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவுக்குப் பயணிக்கும் விண்வெளி வீரர்களில் ஒருவராக தேர்வாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- 2020-ம் ஆண்டு இதய நோய்க்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 28 ஆயிரத்து 741 ஆக உயர்ந்தது.
- கொரோனா காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரிய வந்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில், கொரோனா தாக்கிய முதலாவது ஆண்டில் இதய நோயால் பலியானோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. கொரோனாவுக்கு முன்பு 2019-ம் ஆண்டில், இதய நோய்க்கு 8 லட்சத்து 74 ஆயிரத்து 613 பேர் இறந்தனர்.
2020-ம் ஆண்டு, இதய நோய்க்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 28 ஆயிரத்து 741 ஆக உயர்ந்தது. இது, 6.2 சதவீதம் அதிகம்.
அதற்கு முன்பு, 2003-ம் ஆண்டுதான் அதிகம் பேர் இதய நோயால் உயிரிழந்து இருந்தனர். 9 லட்சத்து 10 ஆயிரம் பேர் இறந்தனர். 2020-ம் ஆண்டு இறந்தவர்கள் எண்ணிக்கை, அதை தாண்டிவிட்டது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்தவர்கள், கொரோனா காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரிய வந்துள்ளது.
- அல்-சுடானி சோமாலியாவில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க படையினருக்கு தகவல் கிடைத்தது.
- பயங்கரவாதிகள் மீது அமெரிக்க வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
வாஷிங்டன்
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் பிலால் அல்-சூடானி. இவர் ஆப்பிரிக்காவில் ஐ.எஸ். அமைப்பின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்.
மேலும் ஆப்கானிஸ்தான் உள்பட பல நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவியும் அளித்து வந்தார்.
இதையடுத்து அல்-சுடானியை கண்டுபிடிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். அல்-சுடானியை தேடும் பணி தொடங்கியது.
இந்த நிலையில் அல்-சுடானி சோமாலியாவில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க படையினருக்கு தகவல் கிடைத்தது. ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த வடக்கு சோமாலியாவின் மலைப் பகுதியில் நுழைந்தனர்.
அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்க வீரர்கள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினார்கள். இந்த துப்பாக்கி சண்டையில் சுடானி உள்பட 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க வீரர்கள் தரப்பில் உயிரிழப்புகள் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் அதிகாரி ஒருவர் கூறும்போது, 10 ஆண்டுகளுக்கு முன்பு அல்-சூடானி ஐ.எஸ். அமைப்பில் சேருவதற்கு முன்பு சோமாலியாவில் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி அளித்துள்ளார். இது அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கிய இலக்காக ஆனது.
சுடானி பதுங்கி இருந்த இடத்தின் மாதிரியை வடிவமைத்து அமெரிக்க வீரர்களுக்கு பல மாதங்கள் பயிற்சி வழங்கப்பட்டது. இதன் காரணமாக வீரர்கள் துல்லியமாக தாக்குதல் நடத்தி சுடானியை சுட்டுக் கொன்றனர். இதில் அமெரிக்க வீரர் ஒருவருக்கு மட்டும் சிறிய காயம் ஏற்பட்டது என்றார்.
- உக்ரைன் ரஷியா போர் 11 மாதங்களைக் கடந்து விட்டது.
- ஜெர்மனி, அமெரிக்காவின் முடிவுகளை ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார்.
வாஷிங்டன் :
கிரீமியாவைத் தொடர்ந்து உக்ரைனின் கிழக்கு பகுதியையும் ஆக்கிரமிக்க ரஷியா திட்டமிட்டபோது, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு தேட உக்ரைன் முடிவு எடுத்தது. ஆனால் இதில் கொந்தளித்துப்போன ரஷியா, உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது.
உலகமே எதிர்பார்க்காத நிலையில், இந்தப் போர் 11 மாதங்களைக் கடந்து விட்டது. இன்னும் நீளுகிறது. வல்லரசு நாடான ரஷியாவை போரில் சமாளிக்க உக்ரைனுக்கு அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பக்க பலமாக இருக்கின்றன. இதனால் எதிர்பார்த்தபடி உக்ரைனை ரஷியாவால் வாரிச்சுருட்டிக்கொள்ள முடியாமல் போனது.
தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவியை வழங்க வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு அதிநவீனமான 'லெப்பேர்டு-2' ரக பீரங்கிகள் 14-ஐ அனுப்பி வைக்க முடிவு எடுத்துள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதுகுறித்து அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர் பேசும்போது, "உக்ரைனுக்கு லெப்பேர்டு-2 ரக பீரங்கிகள் 14-ஐ அனுப்பி வைக்க முடிவு செய்திருப்பது சரியான கொள்கை ஆகும். நாங்கள் மிகவும் பயனுள்ள ஆயுத அமைப்புகளை கையாள்கிறோம். எப்போதும் நெருக்கமான ஒத்துழைப்புடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்" என தெரிவித்தார்.
உக்ரைனுக்கு லெப்பேர்டு-2 ரக பீரங்கிகள் 14-ஐ அனுப்பும் முடிவை ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் வெளியிட்டதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர், உக்ரைனுக்கு அதிநவீன 'எம்-1 ஆப்ராம்ஸ்' ரக பீரங்கிகள் 31-ஐ அனுப்பும் முடிவை வெளியிட்டார்.
வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் ஆகியோரை உடன் வைத்துக்கொண்டு இந்த முடிவை ஜோ பைடன் அறிவித்தபோது, "உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் அதிகரிப்பதை ரஷியா மீதான தாக்குதலாக பார்க்கக்கூடாது. இது உக்ரைன் மண்ணைப் பாதுகாக்க அந்த நாட்டுக்கு உதவுவதுதான். இது ரஷியாவுக்கு அச்சுறுத்தல் ஆகாது. ரஷியாவுக்கு எந்தவிதமான தாக்குதல் அச்சுறுத்தலும் இல்லை" என்று கூறினார்.
ஜெர்மனியும், அமெரிக்காவும் உக்ரைனுக்கு அதிநவீன பீரங்கிகளை அனுப்பும் நிலையில், பிற மேற்கத்திய நாடுகளும் அந்த நாட்டுக்கு உதவிக்கரம் நீட்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜெர்மனி மற்றும் அமெரிக்காவின் முடிவுகளை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார்.
இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், "இது வெற்றியின் பாதைக்கு மிக முக்கியமான படியாக அமைகிறது. இன்று சுதந்திர உலகம், ஒரு பொதுவான குறிக்கோளுக்காக உக்ரைனின் விடுதலைக்காக முன் எப்போதும் இல்லாத வகையில் ஒன்றுபட்டுள்ளன" என குறிப்பிட்டார்.
ரஷியா எதிர்ப்பு
ஆனால் ஜெர்மனி மற்றும் அமெரிக்காவின் முடிவை ரஷியா எதிர்த்துள்ளது.
இதுபற்றி அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் அனட்டாலி ஆன்டனோவ் கருத்து கூறுகையில், "ஆப்ராம்ஸ் பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பி வைக்கும் அமெரிக்காவின் முடிவு, ரஷிய கூட்டமைப்புக்கு எதிரான மற்றொரு அப்பட்டமான ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக இருக்கும்" என தெரிவித்தார்.
ஜெர்மனிக்கான ரஷிய தூதர் செர்ஜி நெச்சேவ் கருத்து தெரிவிக்கையில், "மிகவும் ஆபத்தான இந்த முடிவு, மோதலை ஒரு புதிய நிலை மோதலுக்கு கொண்டு செல்கிறது" என குறிப்பிட்டார்.
- ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கான தடையை தலிபான் விதித்துள்ளது.
- இந்தத் தடையை தலிபான்கள் நீக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.
நியூயார்க்:
ஆப்கானிஸ்தானில் சுமார் 80 சதவீத சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் ஆட்சியாளர்களான தலிபான்களை ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பேசுகையில், கல்வி பயில கொடுமைப்படுத்தும் அனைத்து பாரபட்சமான சட்டங்களையும், நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் இது.
குறிப்பாக, ஆப்கனிஸ்தானில் இடைநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி நாளின் கருப்பொருள், கல்விக்கு முன்னுரிமை கொடுங்கள் என்பதே ஆகும் என தெரிவித்தார்.
- சர்க்கிங்கே மார்க்கெட்டில் துப்பாக்கியுடன் நுழைந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.
- வாலிபரை பிடிக்க முயன்றபோது அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியா மாகாணம் உள்ளிட்ட இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் வாஷிங்டன் மாகாணம் யாக்கிமா நகரில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. அங்கு சர்க்கிங்கே மார்க்கெட்டில் துப்பாக்கியுடன் நுழைந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இதில் கடையில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். பின்னர் கடையில் இருந்து வெளியே வந்த வாலிபர் சுட்டதில் மேலும் ஒருவர் பலியானார். அதன்பின் துப்பாக்கி சூடு நடத்தியவர் அங்கிருந்து தப்பி சென்றார்.
அவரை போலீசார் தேடி வந்த நிலையில் அந்த வாலிபர் ஒரு கிடங்குக்கு பின்னால் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு போலீசார் சென்று வாலிபரை பிடிக்க முயன்றபோது அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, "துப்பாக்கி சூடு நடத்திய நபர் 21 வயதான ஜரிட் ஹாடாக் என்பது தெரியவந்தது. அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதற்கு முன்பு தனது தாயிடம் போனில் பேசி உள்ளார். அவருக்கும் சுட்டுகொல்லப்பட்டவர்களுக்கும் எந்த மோதலும் இல்லை'" என்றார்.
- தேவ்சிஷ், அவரது நண்பர் இருவரும் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
- துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் இந்தியாவை சேர்ந்த தேவ்சிஷ் நந்தேழு (வயது23) வசித்து வந்தார். இவர் தனது நண்பர் ஒருவருடன் பிரின்ஸ்டன் பார்க் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை நோக்கி கார் ஒன்று வந்தது. காரில் இருந்து இறங்கிய இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி தேவ் சிஷ்யையும், அவரது நண்பரையும் மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பொருட்கள் கேட்டனர்.
அதற்கு தேவ்சிஷ் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் தேவ்சிஷ், அவரது நண்பர் இருவரும் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தேவ்சிஷ் மார்பு அருகே குண்டு பாய்ந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தேவ்சிஷ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பருக்கு மார்பில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகாகோ பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கொள்ளை முயற்சியில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேவ்சிஷ், இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், அமெரிக்காவில் என்ன செய்துகொண்டு இருந்தார் போன்ற தகவல் வெளியாகவில்லை.
இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
- அமெரிக்காவில் கடந்தாண்டு மட்டும் மொத்தம் 647 துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- 2022-ல் அமெரிக்காவில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரருகே மாண்ட்ரே பார்க் நகரம் அமைந்துள்ளது. இதில், கார்வே அவென்யூ பகுதியில் செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபரின் ஓட்டல் ஒன்று உள்ளது. தெற்கு கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் 2 நாட்கள் சீனாவின் சந்திர புதுவருட திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் லட்சக்கணக்கானோர் திரளாக கலந்து கொள்வது வழக்கம்.
இதேபோன்று நடந்த முதல் நாள் திருவிழாவின்போது, அந்த ஓட்டலில் சமீபத்தில் சீன புதுவருட தினம் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வந்தது. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். பலர் மேடையில் உற்சாக நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் அதிரடியாக பல ரவுண்டுகள் சுட்டு விட்டு தப்பியோடி விட்டார். இதில் 10 பேர் பலியானார்கள்.
தகவலறிந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஹூ கேன் திரான் (72), என்ற முதியவர் என தெரிய வந்தது. வேன் ஒன்றில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்ததும் திரான் துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், அமெரிக்காவில் கடந்தாண்டு மட்டும் மொத்தம் 647 துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். இது அங்குள்ள தற்கொலை எண்ணிக்கையில் இரு மடங்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லைப் பிராந்தியம் தொடர்பாக ஒருவரையொருவர் அச்சுறுத்தத் தொடங்கினர்.
- அணு ஆயுதப் போருக்குத் தயாராகவில்லை என்பதை இரு தரப்பையும் நம்பவைக்க சில மணிநேரம் தேவைப்பட்டது.
வாஷிங்டன்:
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு சிஆர்பிஎப் வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாமை தாக்கி அழித்தது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட அசாதார சூழலில் பாகிஸ்தான் அணுஆயுத தாக்குதலை நடத்துவதற்கு தயாரான தகவல் வெளியாகியிருக்கிறது.
'ஒரு அங்குலம்கூட கொடுக்காதே: நான் விரும்பும் அமெரிக்காவுக்காக போராடுகிறேன்' என்ற தலைப்பில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகம் இன்று வெளியிடப்பட்டது. அதில், பாம்பியோ கூறியிருப்பதாவது:-
2019 பிப்ரவரி மாதம் பாலகோட் சர்ஜிக்கல் தாக்குதலை அடுத்து அணுகுண்டு தாக்குதலுக்கு பாகிஸ்தான் தயாராகி வருவதாகவும், இந்தியா தனது சொந்த முயற்சியில் தீவிர பதிலடி கொடுக்க தயாராகி வருவதாகவும், அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் என்னிடம் கூறினார்.
பிப்ரவரி 27-28 தேதிகளில் அமெரிக்க-வட கொரியா உச்சிமாநாட்டிற்காக நான் ஹனோயில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இந்த சிக்கலான தருணத்தை தவிர்க்க இந்தியா- பாகிஸ்தான் இடையே இரவோடு இரவாக எங்கள் குழுவினர் பேசினர்.
வியட்நாமின் ஹனோய் நகரில் நான் இருந்த இரவை என்னால் மறக்கவே முடியாது. வட கொரியர்களுடன் அணு ஆயுதங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது போதாது என்று, இந்தியாவும் பாகிஸ்தானும் பல தசாப்தங்களாக வடக்கு எல்லைப் பிராந்தியம் தொடர்பாக ஒருவரையொருவர் அச்சுறுத்தத் தொடங்கினர்.
ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலில் 40 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர். இந்தியா பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதிகளுக்கு எதிராக விமானத் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. தொடர்ந்து நடந்த சண்டையில் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தானியர்கள், இந்திய விமானியை சிறைபிடித்தனர்.
ஹனோயில் இருந்தபோது இந்திய வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேசினேன். அப்போது, அவர் பாகிஸ்தானியர்கள் தங்கள் அணு ஆயுதங்களை தாக்குதலுக்கு தயார் செய்ய ஆரம்பித்து விட்டதாக நம்பினார். இந்தியா, அதன் சொந்த முயற்சியில் தாக்குதலை விரிவுபடுத்துவது பற்றி சிந்தித்து வருவதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார். நான் அவரிடம் 'ஒன்றும் செய்ய வேண்டாம், பிரச்சனையை சரிசெய்ய எங்களுக்கு ஒரு நிமிடம் கொடுங்கள்' என்று கேட்டேன்.
நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் உள்ள சிறிய பாதுகாப்பான தகவல் தொடர்பு வசதியில் என்னுடன் இருந்த தூதுவர் (அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்) போல்டனுடன் இணைந்து உடனடியாக பணியாற்றத் தொடங்கினேன். பாகிஸ்தான் ராணுவ தலைவரான ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவை தொடர்புகொண்டு, இந்தியா தரப்பில் என்னிடம் சொன்னதை சொன்னேன். ஆனால், அது உண்மையல்ல என்றார் அவர்.
மேலும், இந்தியர்கள் தங்கள் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு தயாராகி வருவதாக அவர் நம்பினார். அப்போது இரு நாடுகளுக்கு மத்தியில் எங்கள் குழுக்கள் சிறப்பாக பணியாற்றினர். அணு ஆயுதப் போருக்குத் தயாராகவில்லை என்பதை இரு தரப்பையும் நம்பவைக்க எங்களுக்குச் சில மணிநேரம் தேவைப்பட்டது.
ஒரு பயங்கரமான விளைவைத் தவிர்ப்பதற்காக, அந்த இரவில் நாங்கள் செய்ததை வேறு எந்த நாடும் செய்திருக்க முடியாது. எல்லா ராஜதந்திரத்தையும் போலவே, சிக்கலைத் தீர்க்கும் நபர்களும் மிக முக்கியமானவர்கள். இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகள் சிறப்பாக பணி செய்தனர். குறிப்பாக கென் ஜஸ்டர் திறமையான தூதராக இருந்தார். அவர் இந்தியாவையும் இந்திய மக்களையும் நேசித்தார்.
இவ்வாறு பாம்பியோ தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
- அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
- இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸ் பட்டயப் பள்ளியில் நேற்று பிற்பகலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தகவலறிந்த போலீசார் உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஸ்டார்ட்ஸ் ரைட் ஹியர் பள்ளிக்கு விரைந்தனர். அங்கு துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் 2 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றொருவர் அந்த பள்ளியில் வேலை செய்யும் ஊழியராவார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 3 சந்தேகத்துக்குரிய நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
வாஷிங்டன்:
சீன நாட்காட்டியின்படி நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடினர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாண்டெரி பார்க் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது, புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஹூ கேன் திரான் (72) என்ற முதியவர் என தெரிய வந்தது. வேன் ஒன்றில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்ததும் திரான் துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 4 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.






