search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சர்ஜிக்கல் தாக்குதலுக்கு பிறகு அணு ஆயுத தாக்குதலுக்கு ஆயத்தமான பாகிஸ்தான்... இந்தியா சொன்னதாக பாம்பியோ தகவல்
    X

    மைக் பாம்பியோ

    சர்ஜிக்கல் தாக்குதலுக்கு பிறகு அணு ஆயுத தாக்குதலுக்கு ஆயத்தமான பாகிஸ்தான்... இந்தியா சொன்னதாக பாம்பியோ தகவல்

    • இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லைப் பிராந்தியம் தொடர்பாக ஒருவரையொருவர் அச்சுறுத்தத் தொடங்கினர்.
    • அணு ஆயுதப் போருக்குத் தயாராகவில்லை என்பதை இரு தரப்பையும் நம்பவைக்க சில மணிநேரம் தேவைப்பட்டது.

    வாஷிங்டன்:

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு சிஆர்பிஎப் வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாமை தாக்கி அழித்தது.

    இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட அசாதார சூழலில் பாகிஸ்தான் அணுஆயுத தாக்குதலை நடத்துவதற்கு தயாரான தகவல் வெளியாகியிருக்கிறது.

    'ஒரு அங்குலம்கூட கொடுக்காதே: நான் விரும்பும் அமெரிக்காவுக்காக போராடுகிறேன்' என்ற தலைப்பில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகம் இன்று வெளியிடப்பட்டது. அதில், பாம்பியோ கூறியிருப்பதாவது:-

    2019 பிப்ரவரி மாதம் பாலகோட் சர்ஜிக்கல் தாக்குதலை அடுத்து அணுகுண்டு தாக்குதலுக்கு பாகிஸ்தான் தயாராகி வருவதாகவும், இந்தியா தனது சொந்த முயற்சியில் தீவிர பதிலடி கொடுக்க தயாராகி வருவதாகவும், அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் என்னிடம் கூறினார்.

    பிப்ரவரி 27-28 தேதிகளில் அமெரிக்க-வட கொரியா உச்சிமாநாட்டிற்காக நான் ஹனோயில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இந்த சிக்கலான தருணத்தை தவிர்க்க இந்தியா- பாகிஸ்தான் இடையே இரவோடு இரவாக எங்கள் குழுவினர் பேசினர்.

    வியட்நாமின் ஹனோய் நகரில் நான் இருந்த இரவை என்னால் மறக்கவே முடியாது. வட கொரியர்களுடன் அணு ஆயுதங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது போதாது என்று, இந்தியாவும் பாகிஸ்தானும் பல தசாப்தங்களாக வடக்கு எல்லைப் பிராந்தியம் தொடர்பாக ஒருவரையொருவர் அச்சுறுத்தத் தொடங்கினர்.

    ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலில் 40 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர். இந்தியா பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதிகளுக்கு எதிராக விமானத் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. தொடர்ந்து நடந்த சண்டையில் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தானியர்கள், இந்திய விமானியை சிறைபிடித்தனர்.

    ஹனோயில் இருந்தபோது இந்திய வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேசினேன். அப்போது, அவர் பாகிஸ்தானியர்கள் தங்கள் அணு ஆயுதங்களை தாக்குதலுக்கு தயார் செய்ய ஆரம்பித்து விட்டதாக நம்பினார். இந்தியா, அதன் சொந்த முயற்சியில் தாக்குதலை விரிவுபடுத்துவது பற்றி சிந்தித்து வருவதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார். நான் அவரிடம் 'ஒன்றும் செய்ய வேண்டாம், பிரச்சனையை சரிசெய்ய எங்களுக்கு ஒரு நிமிடம் கொடுங்கள்' என்று கேட்டேன்.

    நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் உள்ள சிறிய பாதுகாப்பான தகவல் தொடர்பு வசதியில் என்னுடன் இருந்த தூதுவர் (அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்) போல்டனுடன் இணைந்து உடனடியாக பணியாற்றத் தொடங்கினேன். பாகிஸ்தான் ராணுவ தலைவரான ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவை தொடர்புகொண்டு, இந்தியா தரப்பில் என்னிடம் சொன்னதை சொன்னேன். ஆனால், அது உண்மையல்ல என்றார் அவர்.

    மேலும், இந்தியர்கள் தங்கள் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு தயாராகி வருவதாக அவர் நம்பினார். அப்போது இரு நாடுகளுக்கு மத்தியில் எங்கள் குழுக்கள் சிறப்பாக பணியாற்றினர். அணு ஆயுதப் போருக்குத் தயாராகவில்லை என்பதை இரு தரப்பையும் நம்பவைக்க எங்களுக்குச் சில மணிநேரம் தேவைப்பட்டது.

    ஒரு பயங்கரமான விளைவைத் தவிர்ப்பதற்காக, அந்த இரவில் நாங்கள் செய்ததை வேறு எந்த நாடும் செய்திருக்க முடியாது. எல்லா ராஜதந்திரத்தையும் போலவே, சிக்கலைத் தீர்க்கும் நபர்களும் மிக முக்கியமானவர்கள். இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகள் சிறப்பாக பணி செய்தனர். குறிப்பாக கென் ஜஸ்டர் திறமையான தூதராக இருந்தார். அவர் இந்தியாவையும் இந்திய மக்களையும் நேசித்தார்.

    இவ்வாறு பாம்பியோ தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

    Next Story
    ×