search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைனுக்கு அதிநவீன பீரங்கிகளை அனுப்ப அமெரிக்கா முடிவு
    X

    அமெரிக்கா அனுப்ப உள்ள அதிநவீன ‘எம்-1 ஆப்ராம்ஸ்’ பீரங்கி

    உக்ரைனுக்கு அதிநவீன பீரங்கிகளை அனுப்ப அமெரிக்கா முடிவு

    • உக்ரைன் ரஷியா போர் 11 மாதங்களைக் கடந்து விட்டது.
    • ஜெர்மனி, அமெரிக்காவின் முடிவுகளை ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார்.

    வாஷிங்டன் :

    கிரீமியாவைத் தொடர்ந்து உக்ரைனின் கிழக்கு பகுதியையும் ஆக்கிரமிக்க ரஷியா திட்டமிட்டபோது, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு தேட உக்ரைன் முடிவு எடுத்தது. ஆனால் இதில் கொந்தளித்துப்போன ரஷியா, உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது.

    உலகமே எதிர்பார்க்காத நிலையில், இந்தப் போர் 11 மாதங்களைக் கடந்து விட்டது. இன்னும் நீளுகிறது. வல்லரசு நாடான ரஷியாவை போரில் சமாளிக்க உக்ரைனுக்கு அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பக்க பலமாக இருக்கின்றன. இதனால் எதிர்பார்த்தபடி உக்ரைனை ரஷியாவால் வாரிச்சுருட்டிக்கொள்ள முடியாமல் போனது.

    தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவியை வழங்க வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தி வந்தது.

    இந்த நிலையில் உக்ரைனுக்கு அதிநவீனமான 'லெப்பேர்டு-2' ரக பீரங்கிகள் 14-ஐ அனுப்பி வைக்க முடிவு எடுத்துள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் நேற்று முன்தினம் அறிவித்தார்.

    இதுகுறித்து அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர் பேசும்போது, "உக்ரைனுக்கு லெப்பேர்டு-2 ரக பீரங்கிகள் 14-ஐ அனுப்பி வைக்க முடிவு செய்திருப்பது சரியான கொள்கை ஆகும். நாங்கள் மிகவும் பயனுள்ள ஆயுத அமைப்புகளை கையாள்கிறோம். எப்போதும் நெருக்கமான ஒத்துழைப்புடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்" என தெரிவித்தார்.

    உக்ரைனுக்கு லெப்பேர்டு-2 ரக பீரங்கிகள் 14-ஐ அனுப்பும் முடிவை ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் வெளியிட்டதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அப்போது அவர், உக்ரைனுக்கு அதிநவீன 'எம்-1 ஆப்ராம்ஸ்' ரக பீரங்கிகள் 31-ஐ அனுப்பும் முடிவை வெளியிட்டார்.

    வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் ஆகியோரை உடன் வைத்துக்கொண்டு இந்த முடிவை ஜோ பைடன் அறிவித்தபோது, "உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் அதிகரிப்பதை ரஷியா மீதான தாக்குதலாக பார்க்கக்கூடாது. இது உக்ரைன் மண்ணைப் பாதுகாக்க அந்த நாட்டுக்கு உதவுவதுதான். இது ரஷியாவுக்கு அச்சுறுத்தல் ஆகாது. ரஷியாவுக்கு எந்தவிதமான தாக்குதல் அச்சுறுத்தலும் இல்லை" என்று கூறினார்.

    ஜெர்மனியும், அமெரிக்காவும் உக்ரைனுக்கு அதிநவீன பீரங்கிகளை அனுப்பும் நிலையில், பிற மேற்கத்திய நாடுகளும் அந்த நாட்டுக்கு உதவிக்கரம் நீட்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ஜெர்மனி மற்றும் அமெரிக்காவின் முடிவுகளை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார்.

    இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், "இது வெற்றியின் பாதைக்கு மிக முக்கியமான படியாக அமைகிறது. இன்று சுதந்திர உலகம், ஒரு பொதுவான குறிக்கோளுக்காக உக்ரைனின் விடுதலைக்காக முன் எப்போதும் இல்லாத வகையில் ஒன்றுபட்டுள்ளன" என குறிப்பிட்டார்.

    ரஷியா எதிர்ப்பு

    ஆனால் ஜெர்மனி மற்றும் அமெரிக்காவின் முடிவை ரஷியா எதிர்த்துள்ளது.

    இதுபற்றி அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் அனட்டாலி ஆன்டனோவ் கருத்து கூறுகையில், "ஆப்ராம்ஸ் பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பி வைக்கும் அமெரிக்காவின் முடிவு, ரஷிய கூட்டமைப்புக்கு எதிரான மற்றொரு அப்பட்டமான ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக இருக்கும்" என தெரிவித்தார்.

    ஜெர்மனிக்கான ரஷிய தூதர் செர்ஜி நெச்சேவ் கருத்து தெரிவிக்கையில், "மிகவும் ஆபத்தான இந்த முடிவு, மோதலை ஒரு புதிய நிலை மோதலுக்கு கொண்டு செல்கிறது" என குறிப்பிட்டார்.

    Next Story
    ×