என் மலர்
அமெரிக்கா
- அமெரிக்க ரேடார்களின் பார்வையில் மொன்டானா ஏவுதளத்தின் மேல் பகுதியில் ஒரு மர்ம பலூன் பறப்பதை கண்டுபிடித்தனர்.
- அமெரிக்க அணு ஆயுத ஏவுதளம் மீது பறந்த சீன உளவு பலூன், 3 பேருந்துகளின் அளவுக்கு பெரிதாக இருந்தது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மொன்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் உள்ளது.
இந்த பகுதி முழுவதும் ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்த நிலையில் அமெரிக்க ரேடார்களின் பார்வையில் மொன்டானா ஏவுதளத்தின் மேல் பகுதியில் ஒரு மர்ம பலூன் பறப்பதை கண்டுபிடித்தனர்.
உடனடியாக இந்த தகவல் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்த பலூன் எங்கிருந்து வந்தது? எந்த நாட்டை சேர்ந்தது என்பது பற்றி ஆய்வு செய்தனர். இதில் அந்த பலூன் சீன நாட்டின் தயாரிப்பு என கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த முயற்சியை அமெரிக்க ராணுவம் கைவிட்டது.
இது தொடர்பாக பென்டகன் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பாட் ரைடர் கூறியதாவது:-
அமெரிக்க அணு ஆயுத ஏவுதளம் மீது பறந்த சீன உளவு பலூன், 3 பேருந்துகளின் அளவுக்கு பெரிதாக இருந்தது. அதனுள் என்னென்ன இருந்தது என்பதை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
இந்த பலூன் வணிக ரீதியான பலூன் போல தெரியவில்லை. அதற்கான பாதையிலும் அந்த பலூன் பறக்க வில்லை. அதனை சுட்டு வீழ்த்தினால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அதனை செய்ய நாங்கள் முன்வரவில்லை. என்றாலும் அணு ஆயுத ஏவு தளத்தில் இருந்து எந்த தகவலையும் அறிந்த கொள்ள முடியாத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, என்றார்.
- அமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 4 பேருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
- இவர்கள் 4 பேரும் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள்.
வாஷிங்டன்:
அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் முக்கிய குழுக்களில் இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 4 பேர் நியமிக்கப்பட்டுனர்.
அந்த எம்.பி.க்கள், ராஜா கிருஷ்ணமூர்த்தி (49), அமி பெரா (57) , பிரமிளா ஜெயபால் (57 ), ரோகன்னா (46) ஆவார்கள். இவர்கள் 4 பேரும் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள்.
ராஜா கிருஷ்ணமூர்த்தி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் சபையின் சீனாவுக்கான 'ரேங்கிங்' உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவின் நடத்தையின் பல்வேறு அம்சங்கள், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்த விவகாரங்களை இந்தக் குழு கவனிக்கும்.
அமி பெரா, முக்கியத்துவம் வாய்ந்த பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுதான் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.ஐ.ஏ), தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவலகம் (டி.என்.ஐ), தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ) மற்றும் ராணுவ உளவுத்துறை உள்ளிட்ட நாட்டின் உளவுத்துறை அமைப்பின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும்.
பிரமிளா ஜெயபால், பிரதிநிதிகள் சபையின் நீதித்துறை குழுவின் 'ரேங்கிங்' உறுப்பினராக (குடியேற்றம்) நியமிக்கப்பட்டுள்ளார். குடியேற்ற துணைக்குழுவுக்கு இவர் தலைமை தாங்குவார்.
ரோகன்னா, சீன கம்யூனிஸ்டு கட்சியுடனான அமெரிக்காவின் பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு போட்டி தொடர்பான புதிய குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- டேலாவேரில் உள்ள ஜோ பைடனின் கடற்கரை இல்லத்தில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- சோதனையில் கடற்கரை இல்லத்தில் ரகசிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடுகள் மற்றும் தனிப்பட்ட அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் ஜோ பைடன் துணை அதிபராக இருந்த கால கட்டத்தை சேர்ந்தவை ஆகும்.
இதுதொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் டேலாவேரில் உள்ள ஜோ பைடனின் கடற்கரை இல்லத்தில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு ரகசிய ஆவணங்கள் இருக்கிறதா என்று தேடினர்.
இந்த சோதனையில் கடற்கரை இல்லத்தில் ரகசிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயக காட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.
- டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு எதிராக களம் இறங்க மாட்டேன் எனவும் நிக்கி ஹாலே கூறிவந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் இப்போதில் இருந்தே அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயக காட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
அவர் தேர்தலில் போட்டியிடுவதை முறைப்படி அறிவித்து, தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.
இந்த நிலையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த பெண் அரசியல்வாதியும், இந்திய வம்சாவளியுமான நிக்கி ஹாலே போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகிற 15-ந் தேதி அவர் தனது முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. நிக்கி ஹாலே ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது உறுதியானால் குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் டிரம்புக்கு எதிரான முதல் போட்டியாளராக அவர் இருப்பார்.
தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னராக 2 முறை பதவி வகித்தவரும், ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதருமான 51 வயதான நிக்கி ஹாலே, கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். அதோடு டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு எதிராக களம் இறங்க மாட்டேன் எனவும் நிக்கி ஹாலே கூறிவந்தார். ஆனால் சமீப காலமாக அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தனது சமீபத்திய பேட்டிகளில், "இது ஒரு புதிய தலைமுறைக்கான நேரம். நாட்டை ஒரு புதிய தலைவர் ஆள வேண்டும்" என பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
- செவ்வாய் கிரகத்தில் உள்ள குழிகளின் புகைப்படம் இதுவாகும்.
- செவ்வாய் கிரகத்தை எடுத்த புகைப்படங்களில் பல ஆச்சரிய விஷயங்கள் இருந்தன.
வாஷிங்டன்:
செவ்வாய் கிரகத்தை அமெரிக்க விண்வெளி கழகமான நாசா பல்வேறு செயற்கை கோள்களை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா? என்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் பாறையில் கரடி முகம் அமைப்பு இருப்பது போன்ற படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நாசா அனுப்பிய ஆர்பிட்டர் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள குழிகளின் புகைப்படம் இதுவாகும்.
இதில் மேலே இரண்டு சிறிய குழிகள் காணப்படுகின்றன. அவை ஒரே நேர்கோட்டில் சரியாக உள்ளன. அவைகள் கண்கள் போல் உள்ளது.
அதன் கீழ் பகுதியில் பெரிய குழி உள்ளது. இது அழகாகவும், நீளமாகவும் உள்ளது. அது வாய் மற்றும் மூக்கு பகுதி போல் உள்ளது. இந்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இது இயற்கையாக ஏற்பட்ட குழி ஆகும். அது கரடியின் முகத்தை போல் தோன்றுகிறது. மொத்தம் 2 ஆயிரம் மீட்டர் அகலத்திற்கு இந்த உருவம் உள்ளது.
இது அதிநவீன கேமரா மூலம் படம் எடுக்கப்பட்டது. மூக்கு பகுதியை போன்று இருப்பது ஒரு எரிமலையாக இருக்கலம் அல்லது மண் துவாரமாக இருக்கலாம் என்றும் சுற்றி தெரியும் வட்ட வடிவமானது எரிமலை குழம்பு அல்லது மண் சரிவாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே செவ்வாய் கிரகத்தை எடுத்த புகைப்படங்களில் பல ஆச்சரிய விஷயங்கள் இருந்தன. பெண் ஒருவர் பாறை மீது அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
- எங்களுக்கு புதிய ஆயுதங்கள் தேவைப்படுகின்றன என உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்தார்.
- உக்ரைனுக்கு எப்-16 போர் விமானம் அனுப்பப்படாது என அதிபர் ஜோ பைடன் கூறினார்.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 11 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆயுத, நிதி உதவிகள் சார்ந்த ஆதரவு கிடைத்து வருகிறது. மறுபுறம் ரஷியாவை பலவீனமடைய செய்யும் பொருளாதார தடைகள் உள்ளிட்டவையும் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் போரால் வளர்ந்து வரும் நாடுகளின் மக்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். எரிபொருள் விலை உயர்வு, உணவு பொருட்கள் பற்றாக்குறை போன்ற தாக்கங்கள் நீடித்து வருகின்றன. எனினும், இரு நாடுகளும் சண்டையை கைவிடாமல் உள்ளன.
இதற்கிடையே, கிழக்கு டோனெட்ஸ்க் பகுதியில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. டோனெட்ஸ்க் பகுதியில் பாக்முத், வூலெடார் மற்றும் பிற பிரிவுகளிலும் நிலைமை மோசமடைந்துள்ளது.
போரை நீட்டித்துச் சென்று எங்களை தோற்கடிக்க ரஷியா விரும்புகிறது. கடும் சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் எங்களுக்கு புதிய ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை கொண்டு விரைவாக ரஷிய படைகளின் தாக்குதலை முறியடிக்க முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், உக்ரைனுக்கு எப்-16 பைட்டர் போர் விமானத்தை அமெரிக்கா அனுப்பாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
ரஷியாவை எதிர்க்க போர் விமானங்கள் தேவை என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கேட்ட நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் முக்கிய நட்பு நாடான போலந்திற்குச் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் செல்லும் தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் ஏ.பி.எப். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- 2021-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோபைடன் பதவியேற்றதில் இருந்து அவசர நிலைகள் மீண்டும் மீண்டும் நீடிக்கப்பட்டன.
- கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு கட்டங்களாக மக்களுக்கு செலுத்தப்பட்டன. தற்போது அங்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
வாஷிங்டன்:
உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரசால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அங்கு இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர்.
அந்நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் தொற்று நோய் பரவத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மார்ச் 13-ந் தேதி அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க தேசிய அவசர நிலையை முதன் முதலில் அறிவித்தார்.
அதன்பிறகு 2021-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோபைடன் பதவியேற்றதில் இருந்து அவசர நிலைகள் மீண்டும் மீண்டும் நீடிக்கப்பட்டன.
இதற்கிடையே கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு கட்டங்களாக மக்களுக்கு செலுத்தப்பட்டன. தற்போது அங்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி உள்ளது. எனவே விரைவில் கொரோனா அவசர நிலைகளை முடிவுக்கு கொண்டு வர ஜனாதிபதி ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜோ பைடன் கூறுகையில், சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மே 11-ந்தேதியுடன் கொரோனா அவசர நிலைகளை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றார்.
இதுகுறித்து மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், நாடு பெரும்பாலும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. தினமும் மக்கள் தங்கள் செயல்பாடுகளுக்கு எந்த தடையும் இல்லாமல் வேலைக்கும் மற்றும் பள்ளிகளுக்கும் திரும்பி உள்ளனர். இந்த உண்மையை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. தொற்று நோய் முடிந்துவிட்டது என்றார்.
- அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து அடுத்த ஆண்டு அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.
- குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் கொலம்பியாவில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.
கொலம்பியா:
அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து அடுத்த ஆண்டு அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதையடுத்து அமெரிக்க எதிர்கட்சியான குடியரசு கட்சி இப்போதே பிரசாரத்தை தொடங்கி விட்டது. கடந்த முறை குடியரசு கட்சி சார்பில் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், இந்த முறையும் அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அவரது பிரசாரம் சூடுபிடிக்கவில்லை என்றும், மிக மெதுவாகவே அவரது பிரசாரம் நடப்பதாகவும் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் கொலம்பியாவில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, தான் மிகவும் கோபமாக இருப்பதாக கூறினார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை மீட்டெடுக்கும் முயற்சியில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். அதற்கான பிரசாரத்தில் இறங்கி விட்டேன் எனவும் தெரிவித்தார். அவரது பேச்சு மூலம் வருகிற தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவது உறுதி என அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
- ஜெயில் அறையில் அதிகாரியின் காலியான சாப்பாட்டு பாத்திரமும், அதனை சாப்பிட்டதாக கூறப்பட்ட நாயின் புகைப்படமும் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது.
- தற்போது வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள ஜெயில் அதிகாரி மதிய நேரம் தனது அறையில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது அறைக்கு வெளியே போலீஸ் மோப்ப நாய் நின்று கொண்டிருந்தது. அதிகாரி சாப்பிட்டு கொண்டிருந்த போது ஜெயிலில் இருந்த ஒருவர் உதவி கேட்டு வந்தார்.
அவருக்கு உதவுவதற்காக அதிகாரி, சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு வெளியே சென்றார்.
அதிகாரி திரும்பி வந்து பார்த்த போது அறையில் இருந்த சாப்பாட்டு பாத்திரம் காலியாக இருந்தது. அதில் இருந்த சாப்பாடு முழுமையாக காலி செய்யப்பட்டு இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரி, அறைக்கு வெளியே நின்ற போலீஸ் நாயை பார்த்தார். அதன்மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் அவர், தனது மதிய உணவை போலீஸ் நாய் தின்று விட்டதாக புகார் கூறினார். மேலும் இதுபற்றி விசாரிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஜெயில் அறையில் அதிகாரியின் காலியான சாப்பாட்டு பாத்திரமும், அதனை சாப்பிட்டதாக கூறப்பட்ட நாயின் புகைப்படமும் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. தற்போது இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பெவர்லி சிரெட்ஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது.
- துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என்ன காரணம் போன்ற தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பெவர்லி சிரெட்ஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்குள்ள ஒரு பங்களாவில் நடந்த விருந்து நிகழ்ச்சியின்போது இந்த துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படுகிறது.
துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். 4 பேர் காயம் அடைந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துப்பாக்கி சூட்டை நடத்தியது யார்? என்ன காரணம் போன்ற தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.
கலிபோர்னியாவில் இந்த மாதத்தில் நடந்த 4-வது துப்பாக்கி சூடு சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- போல்டர் நகரில் 46,000 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது.
- விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக 9 ‘மோஷன் டிடெக்டிங்’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாஷிங்டன் :
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள போல்டர் நகரில் 46,000 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக 9 'மோஷன் டிடெக்டிங்' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் விலங்குகள் கடந்து செல்லும் போது புகைப்படங்கள் மற்றும் சிறிய வீடியோக்களை பதிவு செய்யும். பொதுவாக விலங்குகள் உணவு மற்றும் ஓய்வெடுக்கும் இடங்களைத் தேடி செல்லும்போது கேமராக்களில் பதிவாகும்.
ஆனால் அங்குள்ள கரடி ஒன்று ஒவ்வொரு முறையும் வேண்டுமென்றே கேமராவுக்கு அருகில் வந்து நின்று, மனிதர்கள் செல்போனில் 'செல்பி' புகைப்படம் எடுப்பதுபோல விதவிதமான போஸ் கொடுத்து வருகிறது. ஒரு கேமராவில் பதிவான 580 படங்களில் கிட்டத்தட்ட 400 படங்கள் அந்த கரடியின் படங்கள் என பூங்கா ஊழியர்கள் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். மேலும் கரடியின் 'செல்பி' படங்கள் சிலவற்றையும் டுவிட்டரில் அவர்கள் பகிர்ந்துள்ளனர். அவை தற்போது வைரலாக பரவி வருகின்றன.
- இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது.
- இது நடைபெற்ற ஏலங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஆடை என்ற பெருமையை பெற்றது.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற கலைப்பொருட்கள் சேகரிப்பு மற்றும் ஏல நிறுவனமான சாத்பைஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் வேல்ஸ் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்) விற்பனை ஆகியுள்ளது.
இது நடைபெற்ற ஏலங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஆடை என்ற பெருமையை டயானாவின் ஆடை பெற்றுள்ளது.
இந்த ஆடை 80 ஆயிரத்தில் இருந்து 1.2 லட்சம் டாலர் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை விட 5 மடங்கு அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது என சாத்பைஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த உடையை இளவரசி டயானா கடந்த 1991-ம் ஆண்டு அரச குடும்ப வரைபடத்திற்காக அணிந்தார். அதன்பிறகு 1997-ம் ஆண்டு நடந்த போட்டோஷீட்டில் இந்த உடையை இளவரசி டயானா அணிந்திருந்தார் என கூறப்படுகிறது.






