என் மலர்
அமெரிக்கா
- பலூனின் சிதறிய பாகங்கள் கண்டுபிடிக்கபட்டது.
- கிடைத்த சிதறல்களை ஆய்வு செய்ததில் அது உளவு பலூன் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்கா வான் பகுதியில் கடந்த வாரம் புதன்கிழமை வெள்ளை நிறத்திலான மர்ம பலூன் பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் இதை சீனா மறுத்தது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவின் பேரில் மர்ம பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அமெரிக்கா போர் விமானத்தில் இருந்து ஏவுகணை மூலம் அந்த பலூன் சுடப்பட்டது. இதில் அந்த பலூன் அட்லாண்டிக் கடலில் விழுந்தது. இதையடுத்து கடலோர காவல் படையினர் அதனை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பலூனின் சிதறிய பாகங்கள் கண்டுபிடிக்கபட்டது. எஞ்சிய பாகங்களை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை கிடைத்த சிதறல்களை ஆய்வு செய்ததில் அது உளவு பலூன் தான் என்றும் அந்த பலூனை சீனா அனுப்பியது சர்வதேச சட்டப்படி குற்றமாகும் என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.
இந்தநிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் வான் வெளி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டதால் சீனாவின் உளவு பலூன் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் தெரிவித்து உள்ளார்.
முந்தைய டிரம்ப் நிர்வாகத்தின்போது இது போன்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
- பலத்த காயம் அடைந்த இந்திய மாணவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
- அகில் சாய் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.
வாஷிங்டன்:
தெலுங்கானா மாநிலம் மதிரா நகரத்தை சேர்ந்தவர் அகில் சாய் (வயது25).
இவர் அமெரிக்கா மண்டோக மெரியில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ உயர் படிப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வைத்து இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து அகில் சாய் தலையில் குண்டு பாய்ந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
இது பற்றி அறிந்ததும் தெலுங்கானாவில் வசித்து வரும் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மகன் உடலை சொந்த ஊர் கொண்டு வர மத்திய அரசும், தெலுங்கானா அரசும் முன் வரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அகில் சாய் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.
- போயிங் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கை இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்தில் எதிரொலிக்கும்.
- மொத்த ஆட்குறைப்பில் 3-ல் ஒரு பங்கு டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்தில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டன்:
கொரோனா வைரஸ் தொற்று பரவல் மற்றும் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உலக பொருளாதாரம் மந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது.
இதன் விளைவாக பெரும் நிதியிழப்பை சந்தித்து வரும் உலகின் முன்னணி நிறுவனங்கள் செலவினங்களை குறைக்கும் விதமாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக கூகுள், பேஸ்புக், டுவிட்டர், மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் கொத்து, கொத்ததாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்' நிறுவனமும் ஆட்குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விமானங்கள் மட்டும் இன்றி ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் ஏவுகணைகளை தயாரித்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்து வரும் போயிங் நிறுவனம், சமீப ஆண்டுகளாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
குறிப்பாக போயிங் நிறுவனத்தின் தயாரிப்பான 'போயிங் 737 மேக்ஸ்' ரக விமானங்கள் இரண்டு, 5 மாத இடைவெளியில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதும், இந்த விபத்துகளுக்கு விமானத்தின் வடிவமைப்பே காரணம் என்பது விசாரணையில் தெரியவந்ததும் போயிங் நிறுவனத்துக்கு பேரடியாக அமைந்தது.
இந்த நிலையில் போயிங் நிறுவனத்தில் நிதி மற்றும் மனித வளங்கள் பிரிவில் பணியாற்றும் 2 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் வளங்களை தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு குவிக்கும் வகையில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போயிங் நிறுவனத்தின் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்திலும் எதிரொலிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, மொத்த ஆட்குறைப்பில் 3-ல் ஒரு பங்கு டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்தில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்த கூடுதல் விவரங்கள் வழங்கப்பட்டவில்லை.
இதனிடையே அலுவலக பணியில் ஆட்குறைப்பு செய்யும் அதேவேளையில் பொறியியல் மற்றும் உற்பத்தி பிரிவில் பணியாளர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் போயிங் நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் உற்பத்தி பிரிவில் 15 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்தியதாகவும், இந்த ஆண்டு மேலும் 10 ஆயிரம் பேர் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் போயிங் நிறுவனம் தெரிவித்தது.
- பழமையான மற்றும் மதிப்புமிக்க ‘தி ஹார்வர்டு லா ரிவ்யூ’ பத்திரிகையின் தலைவராக முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- அப்சரா ஐயர், சர்வதேச மனித உரிமைகள் மையம் மற்றும் தெற்காசிய சட்ட மாணவர்கள் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் ஹார்வர்டு சட்டப்பள்ளியில் பயிலும் மாணவர்களால் நடத்தப்படும் பத்திரிகை 'தி ஹார்வர்டு லா ரிவ்யூ'.
1887-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இதழ் தற்போது 137-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்த நிலையில் பழமையான மற்றும் மதிப்புமிக்க 'தி ஹார்வர்டு லா ரிவ்யூ' பத்திரிகையின் தலைவராக முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹார்வர்டு சட்டப்பள்ளியின் 2-ம் ஆண்டு மாணவியான அப்சரா ஐயர், 'தி ஹார்வர்டு லா ரிவ்யூ' பத்திரிகையின் 137-வது தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
2016-ம் ஆண்டு பொருளாதாரம், கணிதம் மற்றும் ஸ்பானிஷ் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்ற அப்சரா ஐயர், 2018-ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட்டின் கிளாரெண்டன் ஆராய்ச்சியளராக இணைந்து, பழங்குடியின மற்றும் தொல்லியல் ரீதியான சட்ட மீறல்கள் குறித்த ஆராய்ச்சியில், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றார்.
2020-ம் ஆண்டு ஹார்வர்டு சட்டப்பள்ளியில் சேர்ந்த அப்சரா ஐயர், சர்வதேச மனித உரிமைகள் மையம் மற்றும் தெற்காசிய சட்ட மாணவர்கள் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
- தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று ஜூம் நிறுவனம்.
- சுமார் 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
வாஷிங்டன்:
கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது. இதைத்தொடர்ந்து புகழ்பெற்ற அமேசான் நிறுவனமும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது.
இதற்கிடையே, இந்தாண்டு தொடக்கம் முதல் அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ந்து நீக்கி வருகின்றன.
இந்நிலையில், தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ஜூம் நிறுவனம் சுமார் 1,300 ஊழியர்களை அல்லது 15 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் என்று தலைமை நிர்வாகி எரிக் யுவான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.
நீங்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட பணியாளராக இருந்தால் அடுத்த 30 நிமிடங்களில் ஜூம் நிறுவனத்தால் தனிப்பட்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள் என்றும், இந்த பணி நீக்கம் குறித்து அமெரிக்கா அல்லாத ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் யுவான் தெரிவித்தார்.
- மொடானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்தது.
- பலூன் பாகங்கள் மீட்கப்பட்ட பிறகு மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மொடானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்தது. அது சீனாவின் உளவு பலூன் என்று அமெரிக்கா தெரிவித்தது.
இதை சீனா மறுத்தது. அது உளவு பலூன் அல்ல என்றும் வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய கப்பல், திசை மாறி அமெரிக்க வான் பரப்புக்குள் சென்று விட்டதாக சீனா விளக்கம் அளித்தது.
ஆனால் சீனாவின் விளக்கத்தை அமெரிக்கா ஏற்கவில்லை. இதற்கிடையே அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிக்கு மேலே ராட்சத பலூன் பறந்த போது, அதனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. விமானத்தில் இருந்து ஏவுகணையை செலுத்தி பலூனை சுட்டனர்.
இதற்கு சீனா கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே கடலில் விழுந்த ராட்சத பலூனின் சிதைவுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக இரண்டு போர் கப்பல்கள் அனுப்பப்பட்டன.
இந்த நிலையில் பலூன் பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று அமெரிக்கா திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி கூறியதாவது:-
கடல் மேற்பரப்பில் விழுந்த ராட்சத பலூனின் பாகங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. கடலுக்கு அடியில் சென்ற பலூன் சிதைவுகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. வானிலை நிலவரம் காரணமாக அப்பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.
வரும் நாட்களில் கடலுக் கடியில் சென்று தேடுதல் பணி தொடங்கப்படும். கடலில் இருந்து மீட்கப்படும் பலூனின் பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டமோ அல்லது எண்ணமோ எதுவும் இல்லை பலூனை சுட்டு வீழ்த்துதற்கு முன்பு பலூனை பற்றிய போதுமான முக்கிய தகவல்களை சேகரித்தோம். அந்த தகவலை பகுப்பாய்வு செய்து வருகிறோம். பலூன் பாகங்கள் மீட்கப்பட்ட பிறகு மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம்.
இந்த பலூன் தன்னைத் தானே சூழ்ச்சி செய்யும் திறன் கொண்டது. வேகத்தை கூட்டவும், குறைக்கவும் திரும்பவும் முடியும் என்றார். அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும்போது, அமெரிக்காவில் உளவு பார்க்கும் முயற்சியாகவே சீன பலூன் அனுப்பப்பட்டுள்ளது. பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தால் அமெரிக்கா-சீனா இடையே உறவு பாதிக்காது என்றார்.
- அமெரிக்க அணு ஆயுத ஏவுதளம் மீது பறந்த சீன உளவு பலூன் பெரிதாக இருந்தது.
- அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மொன்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் உள்ளது. இந்தப் பகுதி முழுவதும் ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும்.
இதற்கிடையே, அமெரிக்க ரேடார்களின் பார்வையில் மொன்டானா ஏவுதளத்தின் மேல் பகுதியில் ஒரு மர்ம பலூன் பறப்பதை கண்டுபிடித்தனர்.
தகவலறிந்த ராணுவ அதிகாரிகள் அந்த பலூன் எங்கிருந்து வந்தது? எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது பற்றி ஆய்வு செய்தனர். இதில் அந்த பலூன் சீன நாட்டின் தயாரிப்பு என கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பென்டகன் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பாட் ரைடர் கூறுகையில், அமெரிக்க அணு ஆயுத ஏவுதளம் மீது பறந்த சீன உளவு பலூன் 3 பேருந்துகளின் அளவுக்கு பெரிதாக இருந்தது. அதனுள் என்னென்ன இருந்தது என்பதை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றார்.
மேலும், லத்தீன் அமெரிக்கா பகுதியிலும் ஒரு சீன உளவு பலூன் பறந்து வருவதாக அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், மொன்டானாவில் இருந்து தென் கரோலினா வரை வானத்தில் வட்டமிட்ட உளவு பலூன் அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்தபோது அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
இதுகுறித்து பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறுகையில், அதிபர் ஜோ பைடனின் வழிகாட்டுதலின் பேரில் அமெரிக்க போர் விமானம் தென் கரோலினா கடற்கரையில் உள்ள நீர் மீது சீன மக்கள் குடியரசால் ஏவப்பட்ட உயரமான கண்காணிப்பு பலூனை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது என தெரிவித்தார்.
- கூகுள் தேடலில் கடந்த 20 ஆண்டுகளாக ஜெனீபர் லோபஸ் படம் தொடர்ந்து அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.
- கிராமி விருதுகள் விரைவில் மீண்டும் நடைபெற உள்ள நிலையில் தற்போது ஜெனீபர் லோபஸ்சின் படங்கள் மீண்டும் உலா வர தொடங்கி உள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை ஜெனீபர் லோபஸ். இவர் இசை பதிவு தயாரிப்பாளர், நடன கலைஞர், பின்னணி பாடகி என்று பன்முக தன்மை கொண்டவர்.
இவர் கடந்த 2000-ம் ஆண்டின் போது கிராமி இசை விருது நிகழ்ச்சியில் விருது பெற பங்கேற்றார். அப்போது அவர் பச்சை நிறத்தில் கவர்ச்சியான ஆடை ஒன்றை அணிந்து வந்திருந்தார். அந்த ஆடை உலகம் முழுக்க மிகுந்த வரவேற்பை பெற்றது.
கூகுள் தேடலில் கடந்த 20 ஆண்டுகளாக அந்த படம் தொடர்ந்து அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. இணைய தள உலகில் அவரது படம் புதிய புரட்சியை ஏற்படுத்தி இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.
கிராமி விருதுகள் விரைவில் மீண்டும் நடைபெற உள்ள நிலையில் தற்போது ஜெனீபர் லோபஸ்சின் படங்கள் மீண்டும் உலா வர தொடங்கி உள்ளன.
- லத்தீன் அமெரிக்கா பகுதியில் மேலும் ஒரு சீன உளவு பலூன் பறந்து வருவதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
- லத்தீன் அமெரிக்காவில் பலூன் ஒன்று பறந்து வருகிறது.
லத்தீன் அமெரிக்கா பகுதியில் மேலும் ஒரு சீன உளவு பலூன் பறந்து வருவதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பென்டகன் கூறும்போது, லத்தீன் அமெரிக்காவில் பலூன் ஒன்று பறந்து வருகிறது. இது மற்றொரு சீன உளவு பலூனா என ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் பறக்கும் பலூன் மத்திய அமெரிக்காவில் கிழக்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அது சில நாட்களில் அமெரிக்க வான்பரப்பில் இருக்கும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
- சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கோள் உள்ளது.
- சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகள் கொண்ட கிரகமாக வியாழன் வந்துள்ளது.
வாஷிங்டன்:
சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கோள் உள்ளது. மேலும் 5 குறுங்கோள்களும் உள்ளன.
ஒவ்வொரு கோள்களுக்கும் நிலவுகள் உள்ளது. பூமிக்கு ஒரு நிலவு மட்டுமே உள்ளது. சனி கிரகத்துக்கு 83 நிலவுகள் இருக்கிறது. அதேபோல் வியாழனுக்கு 80 நிலவும், யுரேனுக்கு 27, நெப்டியூனுக்கு 14, செவ்வாய் கிரகத்துக்கு இரண்டு நிலவுகள் உள்ளன. வெள்ளி மற்றும் புதன் ஆகிய கிரகங்களுக்கு நிலவு கிடையாது.
இந்த நிலையில் வியாழன் கிரகத்தை சுற்றி 12 புதிய நிலவுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் வியாழன் கிரகத்தின் நிலவுகள் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்தது. இதன் மூலம் சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகள் கொண்ட கிரகமாக வியாழன் வந்துள்ளது. சனி கிரகம் உறுதிப்படுத்தப்பட்ட 83 நிலவுகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
இது தொடர்பாக விஞ்ஞானி ஸ்காட் ஷெப்பர்ட் கூறும்போது, 2021 மற்றும் 2022-ம் ஆண்டில் ஹவாய் மற்றும் சிலியில் தொலைநோக்கிகளை பயன்படுத்தி இந்த புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புதிய நிலவுகள் 0.6 மைல் முதல் 2 மைல் அளவில் இருக்கும்.
எதிர்காலத்தில் இந்த வெளிப்புற நிலவுகளில் ஒன்றை நெருக்கமாக படம் பிடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். வியாழன் மற்றும் சனி ஆகியவை சிறிய நிலவுகளால் நிரம்பி உள்ளன என்றார்.
- உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறியுள்ளார்.
- கவுதம் அதானி 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
நியூயார்க்:
அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு புகாரை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக குறைந்து வந்த காரணத்தால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறியுள்ளார்.
கவுதம் அதானி 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 2-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம் முதலிடத்திலும், எலான் மஸ்க் இரண்டாவது இடத்திலும், முகேஷ் அம்பானி 12-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 பேரில் ஒருவராக இருந்த அதானியை இந்தியாவின் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளி ஆசியாவின் பணக்கார இந்தியர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
- சீன பயணத்தின்போது இந்த பலூன் விவகாரம் ஆதிக்கம் செலுத்துவதை பிளிங்கன் விரும்பவில்லை என தகவல்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ள மொன்டானா பகுதியில், சீனாவைச் சேர்ந்த உளவு பலூன் பறப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த முயற்சியை அமெரிக்க ராணுவம் கைவிட்டது. அதன் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன், தனது சீன பயணத்தை ஒத்திவைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீன அதிகாரிகளுடனான தனது சந்திப்புகளின்போது, இந்த பலூன் விவகாரம் ஆதிக்கம் செலுத்துவதை பிளிங்கன் விரும்பவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக ஏபிசி செய்தி வெளியிட்டிருக்கிறது. அவரது சீனப் பயணம் ஒத்திவைக்கப்படும் என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது.






