என் மலர்
அமெரிக்கா
- அமெரிக்க ஓபனில் இதுவரை 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார்
- இதுபோன்று மோசமான தோல்வியை எதிர்கொண்டது கிடையாது
அமெரிக்கா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ், இத்தொடருக்கான தரவரிசை பெறாத பெல்ஜியத்தை சேர்ந்த கிரீட் மின்னென்-ஐ எதிர் கொண்டார்.
இதில் 43 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 1-6, 1-6 எனத் தோல்வியடைந்தார். 2000 மற்றும் 2001-ல் அமெரிக்கா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற வீனஸ் வில்லியம்ஸ், 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார். அதில் இதுதான் மிகவும் மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது.
வீனஸ் வில்லியம்ஸ் ஆட்டத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். ரசிகர்களின் ஆதரவு குறித்து வீனஸ் வில்லியம்ஸ் கூறுகையில் ''ரசிகர்களின் ஆதரவை பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. எப்போதும் ரசிகர்கள் எனக்காக இங்கே வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். முன்னெப்போதையும் விட இன்னும் அந்த ஆதரவைக் கொண்டிருப்பது அருமையானது'' என்றார்.
- நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.
- 84ம் நிலை வீரரான அலெக்சாண்டர் முல்லெரை (பிரான்ஸ்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், முதல் நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-0,6-2, 6-3 என்ற நேர்செட்டில் 84ம் நிலை வீரரான அலெக்சாண்டர் முல்லெரை (பிரான்ஸ்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த வெற்றியின் மூலம் 36 வயதான ஜோகோவிச், கார்லஸ் அல்காரஸ்சை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி உலக ஒற்றையர் தரவரிசையில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.
இந்த போட்டி தொடரில் ஜோகோவிச் அடுத்த சுற்றில் தோற்றாலும் கூட முதல் இடத்திற்கு பிரச்சினை இல்லை.
- உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் ராணுவ விமானங்கள், ஏவுகனைகள் வழங்கி உதவி வருகிறது.
- உக்ரைனின் படைகள் களத்தில் எதிர்த்தாக்குதலில் ஈடுபட கணிசமான ஆதாயங்களைப் பெற போராடி வருகின்றன.
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1 ½ ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைன் நகரங்களை ரஷியா ஏவுகணைகளால் தாக்கி அழித்து வருகிறது. உலக நாடுகள் உதவியுடன் உக்ரைனும் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் ராணுவ விமானங்கள், ஏவுகனைகள் வழங்கி உதவி வருகிறது. அமெரிக்கா ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனிற்கு பல பில்லியன் டாலர்களை இராணுவ உதவியாக வழங்க உறுதியளித்துள்ளது.
இந்த நிலையில், சுரங்கங்கள் மற்றும் தடைகளை அகற்றுவதற்கான உபகரணங்களை உள்ளடக்கிய புதிய 250 மில்லியன் டாலர் இராணுவ உதவிப் பொதியை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்ரைனின் படைகள் களத்தில் எதிர்த்தாக்குதலில் ஈடுபட கணிசமான ஆதாயங்களைப் பெற போராடி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்கா உதவி வருகிறது. வான் பாதுகாப்பு ஏவுகணைகள், பீரங்கி குண்டுகள், கவச எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான சிறிய ஆயுத வெடிமருந்துகளும் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த உதவியானது, "போர்க்களத்தில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொள்ளவும், அதன் மக்களைப் பாதுகாக்கவும் உக்ரைன் உதவும்" என்று பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டிரான்க்யூ, அடங்காத மாடுகளையும், குதிரைகளையும் அடக்கும் ஒரு தூக்க மருந்து
- சட்டவிரோதமாக மிகவும் பரவலாக கருப்பு சந்தையில் விற்கப்படுகிறது
உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவில் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். அந்நாட்டில் இது ஒரு மிகப்பெரும் சமூக பிரச்சனையாக மாறி வருவதாக உளவியல் வல்லுனர்களும், காவல்துறையினரும், போதைப்பொருள் தடுப்பு துறையினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
அங்கு சமீப காலங்களில் அளவுக்கு மீறி போதை பொருள் எடுத்து கொள்வதால் ஏற்படும் விளைவுகள் அதிகரித்து இருக்கிறது. இதனை எவ்வாறு கையாள்வது என அங்குள்ள மருத்துவர்கள் திகைத்து வருகின்றனர்.
இந்நிலையில், "ஜோம்பி டிரக்" என பெயரிடப்பட்ட புதுவகை போதை பொருளை அதிகளவு எடுத்து கொண்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகிறது. "டிரான்க்யூ" என அமெரிக்காவில் அழைக்கப்படும் இந்த போதை மருந்து, அடங்காத மாடுகளையும், குதிரைகளையும் அடக்க உபயோகப்படுத்தப்படும் ஒரு தூக்க மருந்தாக, மிருகங்கள் இடையே பயன்படுத்தபட்டு வந்தது.
தற்போது அமெரிக்கா முழுவதும் அது சட்டவிரோதமாகவும், பரவலாக கருப்பு சந்தையில் விற்கப்பட்டு வருகிறது. போதை பொருள் விற்பனை செய்பவர்கள் ஃபெண்டனில் அல்லது ஹெராயின் போன்ற பிற போதை மருந்துகளுடன் இதனை கலந்து விற்பனை செய்கின்றனர்.
இதனால் ஏற்படும் போதை அதிகமாக உள்ளதால், போதை பொருள் பழக்கம் உள்ளவர்களிடையே இதற்கு அதிகம் வரவேற்பு இருக்கிறது.
"கொகைன் மற்றும் ஹெராயின் போன்ற போதை மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டவர்களை காப்பதற்காக கொடுக்கப்படும் மருந்துகள், அவர்கள் உடலில் எதிர்பார்த்தது போல் வேலை செய்யும். ஆனால் இந்த புதுவகை போதை பொருளான டிரான்க்யூ அளவுக்கு அதிகமானால் அதை எடுத்து கொள்பவர்களின் உயிரை காப்பது கடினமாக உள்ளது. அவசர சிகிச்சை பிரிவிற்கு வருபவர்களுக்கு பெரும்பாலும் இதய துடிப்பு குறைவதும், ரத்த அழுத்தம் வீழ்வதும் தடுக்க முடியாததாகி விடுகிறது," என போதை பழக்க நோயாளிகளை காக்கும் துறையில் நிபுணரான மருத்துவர் பவோலோ கொப்போலா கூறுகிறார்.
அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் தரவுகளின் படி போதை மருந்துகளை அளவுக்கு மீறி உட்கொள்வதால் நிகழும் மரணங்கள் அமெரிக்காவில் 5 நிமிடத்திற்கு 1 எனும் அதிர்ச்சியூட்டும் விகிதத்தில் நிகழ்கிறது.
- ஒருவருக்கொருவர் பிறரின் வலைதளத்தை கிண்டல் செய்து வாக்குவாதம் செய்து வந்தனர்
- சார்ல்ஸ் ஷூமர் வாஷிங்டனில் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்குகின்றன.
அமெரிக்காவில் இருந்து இயங்கும் பயனர்களின் உரையாடல்களுக்கான சமூக வலைதளம் டுவிட்டர். இதனை உலகின் நம்பர் 1 கோடீசுவரரும், அமெரிக்கருமான எலான் மஸ்க், கடந்த 2022ல் விலைக்கு வாங்கினார். வாங்கியதும் அதன் பெயரை எக்ஸ் என மாற்றி, லாபத்தைப் பெருக்கும் நோக்கில் அதிரடியாக பல முடிவுகளை எடுத்து வந்தார்.
எக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக திரெட்ஸ் எனும் சமூக வலைதளத்தை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், பேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவனரும், அமெரிக்காவை சேர்ந்தவருமான மார்க் ஜூகர்பர்க், கடந்த ஜூலை மாதம் தொடங்கினார்.
இருவரும் மற்றவரின் சமூக வலைதளங்களின் தரம் குறித்து விமர்சனம் செய்து ஒருவருக்கொருவர் சமூக வலைதளங்களிலேயே வாக்குவாதம் செய்து வந்தனர்.
இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாட் ஜிபிடி (ChatGPT) எனும் மென்பொருள் செயலியை ஓப்பன்ஏஐ எனும் நிறுவனம் உருவாக்கி கடந்த நவம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. மிகவும் வெற்றியை அடைந்துள்ள இந்த செயலி, செயற்கை நுண்ணறிவை குறித்த ஒரு விவாதத்தையும் தூண்டியுள்ளது.
செயற்கை நுண்ணறிவை மிகவும் அவசியமான மற்றும் ஆரோக்கியமான கண்டுபிடிப்பாக ஒரு சாரார் ஆதரித்து வர, மற்றொரு தரப்பினரோ செயற்கை நுண்ணறிவு ஆபத்தானது என்றும் அதன் பயன்பாட்டிற்கான எல்லைகளை அரசாங்கங்கள் வகுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
எலான் மஸ்க், ஏஐ பயன்பாடு ஒரு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என வாதிட்டு வருகிறார். ஆனால், ஜூகர்பர்க் இது குறித்து நடுநிலையான கருத்துக்களையே தெரிவித்து வருகிறார்.
"கட்டுப்பாடில்லாத தொழில்நுட்ப வளர்ச்சி ஆபத்தானது. அது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த மாதம் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் ஷூமர், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான கொள்கைகளை வகுத்தல் குறித்து கருத்து பரிமாற்றத்திற்கான ஒரு சந்திப்பை வாஷிங்டனில் ஏற்பாடு செய்துள்ளார். செப்டம்பர் 13ல் நடக்கவிருக்கும் இந்த சந்திப்பில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் நிறுவனர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
இதில், எலான் மஸ்கும், மார்க் ஜூகர்பர்கும் பங்கேற்க உள்ளனர்.
செயற்கை தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பலர் வேலை இழக்கும் அபாயம் தோன்றும் என அச்சம் நிலவுவதாலும், சமூக வலைதளங்களில் எதிரிகளைப் போல் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளும் மஸ்கும் ஜூகர்பர்கும் ஒருவரையொருவர் நேரில் சந்திக்கப் போவதாலும், இந்தச் சந்திப்பு மென்பொருள் தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமல்லாமல், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
- சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றிய முதல் அமெரிக்க மாநிலம்
- கவர்னர் ஒப்புதல் அளித்ததும் சட்டமாக செயல்படும்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டமன்றத்தில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்து.
சாதி பாகுபாட்டை எதிர்த்து மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சமூகங்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த இந்த சட்ட மசோதா உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா அம்மாநில கவர்னர் கவின் நியூசோமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும், சட்டமாக்கப்படும்.
மசோதா நிறைவேற்றியதன் மூலம், சாதி பாகுபாடு எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றிய முதல் அமெரிக்க மாநிலம் என்ற பெருமையை கலிபோர்னியா பெற்றுள்ளது.
உறுப்பினர் ஆயிஷா வஹாப் அறிமுகப்படுத்திய இந்த மசோதாவிற்கு ஏராளமான சாதி சமத்துவ மக்கள் உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன.
எஸ்.பி.403 சட்ட மசோதாவிற்கு ஆதரவு அளித்த அனைத்து உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்த வஹாப், நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பாகுபாட்டில் இருந்து மக்களை பாதுகாக்கிறோம் என்றார்.
அதேவேளையில் வட அமெரிக்கா இந்துகள் கூட்டணி (CoHNA) கலிபோர்னியா வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள் எனக் குறிப்பிட்டுள்ளது.
- பேராசிரியர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
- கொலை நடந்த 3 மணி நேரத்தில் மர்ம நபரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பதால் அப்பாவி மாணவர்கள், பொதுமக்கள் உயிரிழக்கும் பரிதாப நிலை ஏற்படுகிறது.
இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் குறைந்த பாடில்லை.
இந்த நிலையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் கட்டிடத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தான். அவன் அங்கிருந்த பேராசிரியரை துப்பாக்கியால் சுட்டான்.
இதில் பேராசிரியர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பின்னர் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
இதையடுத்து துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த பேராசிரியரின் உடலை கைப்பற்றி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மர்ம நபர் குறித்து விசாரணை நடத்திய போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அவனை தீவிரமாக தேடினர். கொலை நடந்த 3 மணி நேரத்தில் மர்ம நபரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். அவன் மீது வழக்குப்பதிவு செய்து துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- மரியா சக்காரி 4-6, 4-6 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 71வது இடம் வகிக்கும் ரெபேகா மசரோவாவிடம் வெளியேறினார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியன் டொமினிக் திம் 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.
ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.
கடின தரையில் நடக்கும் இந்த போட்டியையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் நியூயார்க்கில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலாந்து) 6-0, 6-1 என்ற நேர் செட்டில் ரெபக்கோ பீட்டர்சனை (சுவீடன்) 58 நிமிடங்களில் வீழ்த்தினார்.
தொடர்ந்து, ஒலிம்பிக் சாம்பியன் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து), விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), கரோலினா முச்சோவா (செக்குடியரசு) ஆகியோரும் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.
அதே சமயம் 8-ம் நிலை வீராங்கனை மரியா சக்காரி 4-6, 4-6 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 71வது இடம் வகிக்கும் ரெபேகா மசரோவாவிடம் வெளியேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியன் டொமினிக் திம் (ஆஸ்திரியா), 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்ளிக்கை (கஜகஸ்தான்) வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.
- தேர்தல் பிரசாரத்தில் சரிகா பன்சால் மீது இனவெறி வெறுப்பு பிரசாரம் பரப்பப்பட்டுள்ளது.
- சரிகா பன்சாலின் பிரசார அடையாளங்கள் சிதைக்கப்பட்டன.
நியூயார்க்:
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கேரி டவுன் கவுன்சிலுக்கு (நகரசபை) தேர்தல் வருகிற அக்டோபர் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான சரிகா பன்சால் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் சரிகா பன்சால் மீது இனவெறி வெறுப்பு பிரசாரம் பரப்பப்பட்டுள்ளது. சரிகா பன்சாலின் பிரசார பதாகையில் அவரது முகத்தில் ஒரு கறுப்பின நபரின் முகத்தின் புகைப்படத்தை வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் அவர் போட்டியிடும் வெஸ்ட் கேரி தொகுதியில் உள்ள ஹைகி ராப்ட் கிராமத்தில் நடந்துள்ளது. அங்கு சரிகா பன்சாலின் பிரசார அடையாளங்கள் சிதைக்கப்பட்டன. இந்த இனவெறி பிரசாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக சரிகா பன்சால் கூறும்போது, இனவெறி பிரசார சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. எனது பிரசாரத்துக்கு எதிராக இனவெறிச் செயலால் உண்மையிலேயே வருத்தம் அடைந்தேன். நமது நகரத்தில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான வழிமுறையாக நாம் பன்முகத்தன்மையை ஏற்று கொள்ள வேண்டும்.
கேரி நகரில் பழுப்பு அல்லது கறுப்பு நிற மக்களுக்கு எதிரான மத வெறி அல்லது இன வெறிக்கு இடமில்லை என்றார்.
மேயர் ஹரோல்ட் கூறும் போது, இந்த இனவெறி வெறுக்கத்தக்க செயல். கேரி நகரில் நாம் விரும்பும் மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானது. இது எங்கள் சமூகத்தை நெருக்கமாக கொண்டுவர மட்டுமே உத வும் என்றார்.
- எலான் மஸ்க், விவேக் ராமசாமியை நம்பிக்கைக்குரிய வேட்பாளர் என தெரிவித்திருந்தார்
- எங்கள் இருவருக்கும் பொதுவான சிந்தனை இருக்கிறது என்றார் விவேக்
அமெரிக்காவில் 2024-ல் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அக்கட்சி வேட்பாளராக முன்னணியில் உள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னணியில் இருந்தாலும், அவர் பல கிரிமினல் வழக்குகளில் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், அவர் அதிபர் போட்டியில் தொடர முடியுமா? என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.
இதனால் குடியரசு கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய பெற்றொர்களுக்கு பிறந்தவர் விவேக் ராமசாமி (37). அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தை சேர்ந்தவரான இவர், போட்டியிடும் வேட்பாளர்களிலேயே வயதில் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா எதிர்நோக்கும் சவால்களுக்கு விடை காணும் வகையில் பல இடங்களில் விவேக் கூறும் கருத்துக்களுக்கு பொது மக்கள் மட்டுமின்றி, பல தொழிலதிபர்களும் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.
உலகின் நம்பர் 1 கோடீசுவரரும், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா, மற்றும் சமூக வலைதளமான எக்ஸ் (முன்னாள் டுவிட்டர்) ஆகியவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க், களத்தில் உள்ள வேட்பாளர்களிலேயே நம்பிக்கைக்குரிய வேட்பாளர் என கூறி விவேக் ராமசாமியை குறித்து பாராட்டும் விதமாக சமீபத்தில் தனது எக்ஸ் வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனக்கு ஆதரவு கோரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விவேக் ராமசாமி, அமெரிக்காவின் மத்திய மேற்கில் உள்ள ஐயோவா மாநிலத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
நான் வெறும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. ஒரு புதிய கலாச்சார அடையாளத்துடன் புதிய அமெரிக்க கனவினை உருவாக்க பாடுபடுகிறேன். அமெரிக்காவை முன்னணி நாடாக்க வேண்டுமானால் நாம் முதலில் அமெரிக்காவை மீண்டும் கண்டெடுக்க முயற்சிக்க வேண்டும். நான் வெற்றி பெற்று அதிபரானால், புதியதாகவும், புதுமையாகவும் சிந்திப்பவர்களை என் அரசாங்கத்தில் நிர்வாக ஆலோசனைகளுக்காக நியமித்து கொள்வேன்.
இதில் எலான் மஸ்க்கையும் சேர்த்து கொள்ள விரும்புகிறேன். அவர் தனது எக்ஸ் நிறுவனத்தை எவ்வாறு நடத்துகிறாரோ அதே போல், நான் அமெரிக்க நிர்வாகத்தை மறுசீரமைத்து அமெரிக்காவை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறேன். எங்கள் இருவரின் சிந்தனையும் பல விஷயங்களில் ஒத்து போகிறது.
இவ்வாறு விவேக் ராமசாமி தெரிவித்தார்.
கடந்த வருடம் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை 75 சதவீதம் அதிரடியாக குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டிராகன் விண்கலம் சுற்றுப்பாதையில் நுழைந்தது.
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள்.
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து உள்ளன.
பூமியில் இருந்து 410 கிலோ மீட்டர் உயரத்தில் இயங்கி வரும் இந்த விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, ரஷியா மற்றும் பிற உறுப்பு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் அங்கு தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உடன் இணைந்து, விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வருகிறது.
கடைசியாக கடந்த மார்ச் மாதம் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் 6 மாத பணிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.
இதையடுத்து அவர்களுக்கு மாற்றாக புதிய விண்வெளி வீரர்கள் குழுவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து நாசா மேற்கொண்டது.
அதன்படி, நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 4 விண்வெளி வீரர்களுடன் பால்கன்-9 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
அதனை தொடர்ந்து, டிராகன் விண்கலம் சுற்றுப்பாதையில் நுழைந்தது.
இந்நிலையில், பூமியில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் 4 வீரர்களுடன் அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்ததாக நாசா தெரிவித்துள்ளது.
இந்த 4 விண்வெளி வீரர்களும் 6 மாத காலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு பெண் உள்பட 3 கறுப்பினத்தவர்கள் பலியானார்கள்.
- தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
புளோரிடா:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன் வெலி பகுதியில் கறுப்பினத்தவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் வெள்ளை இனத்தவர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் கறுப்பினத்தவர்களை குறி வைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதனால் கடைக்குள் இருந்தவர்கள் அலறியடித்த படி ஒடினார்கள்.
இந்த தாக்குதலில் ஒரு பெண் உள்பட 3 கறுப்பினத்தவர்கள் பலியானார்கள். இவர்கள் ஆப்பிரிக்க-அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர்.
தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது துப்பாக்கி சூடு நடத்தியவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இனவெறி காரணமாக அவர் இந்த தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் இனவெறி வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஜாக்சன் வில்லே போலீஸ் அதிகாரி வாட்டர்ஸ் கூறியதாவது:-
இந்த தாக்குதல் இன வெறி காரணமாக நடந்துள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபர், கறுப்பின மக்களை வெறுத்து வந்துள்ளார். அவர் 20 வயதான வாலிபர் ஆவார்.
அவர் தாக்குதலுக்கு கைத்துப்பாக்கி மற்றும் ஏ.ஆர்-15 வகை தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தினார். அவர் வெறுப்பு சித்தாந்தத்தை கொண்டிருந்தார். அந்த வாலிபர் ஒரு பெரிய குழுவை சேர்ந்தவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் முற்றிலும் தனியாக செயல்பட்டுள்ளார் என்றார்.
ஆனால் தாக்குதல் நடத்தியவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதேபோல் ஓக்லஹோ மாவில் உள்ள உயர் நிலைப்பபள்ளியில் நடந்த கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் ஒரு வாலிபர் உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர்.
மேலும் பாஸ்டன் நகரில் கரீபியன் திருவிழாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயம் அடைந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்தபடியே உள்ளது.






