என் மலர்
இலங்கை
- தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 3,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டன.
- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு சென்றார்.
ராணுவத்தின் வசம் உள்ள வடக்குப் பகுதி தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக உறுதியளித்துள்ளார்.
1980 களில் இருந்து ஆயுதப் போராட்டத்தின் போது, ராணுவத் தேவைகளுக்காக அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களின் நிலங்களை அபகரித்தது.
குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் நகரில் பலாலி இராணுவத் தளத்தைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயத்தை உருவாக்குவதற்காக தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 3,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டன.
2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் 2015 முதல் அவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலங்கள் சிலவற்றை அரசு உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைத்தது. இருப்பினும் தமிழ் மக்களுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னும் அரசு வசமே உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிபராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக வடக்கு பகுதியின் முக்கிய நகரமான யாழ்ப்பாணத்திற்கு திசநாயக நேற்று [வெள்ளிக்கிழமை] வருகை தந்தார். அங்கு யாழ்ப்பாண மாவட்ட பிரதிநிதிகளுடன் அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆலோசித்தார்.
அப்போது, வடக்குப் பகுதி தமிழர்களிடம் இருந்து ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் விரைவில் திரும்ப ஒப்படைக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதற்கான செயல்முறை விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு சென்று அங்கு நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அதிபர் அனுர குமார திசநாயக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
- உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 475 ரன்கள் எடுத்துள்ளது.
- கவாஜா 204 ரன்னும், ஜோஷ் லிங்கிஸ் 44 ரன்னும் எடுத்துள்ளனர்.
காலே:
இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களான கவாஜா, டிராவிஸ் ஹெட் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி அரைசதமடித்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசேன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.
3வது விக்கெட்டுக்கு ஸ்டீவன் ஸ்மித் கவாஜாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் நிலைத்து நின்று ஆடி சதமடித்து அசத்தினர்.
முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கு 330 ரன்கள் எடுத்தது. கவாஜா 147 ரன்னும், ஸ்மித் 104 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், 2வது நாள் இன்று நடந்து வருகிறது. சிறப்பாக ஆடிய ஸ்மித் 141 ரன்னில் அவுட்டானார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 266 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய கவாஜா இரட்டை சதமடித்து அசத்தினார். உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்கு 475 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. கவாஜா 204 ரன்னும், ஜோஷ் லிங்கிஸ் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- மீனவர்களை கைது செய்ததோடு, விசைப்படகையும் சிறைபிடித்தது.
- துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்ததோடு, விசைப்படகையும் சிறைபிடித்தது.
மேலும், கைது செய்யப்படுவதில் இருந்து தப்பி செல்ல முயன்ற இரண்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூட்டில் காயமுற்ற தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் தான் தமிழகத்தை சேர்ந்த 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர். மீனவர்கள் கைது சம்பவத்தை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இறுதிக்கட்ட போரின் போது பிரபாகரன் தப்பி சென்று விட்டதாக மற்றொரு தகவல் வெளியானது.
- உடலை சிங்கள ராணுவம் கைப்பற்றி தகனம் செய்து விட்டது.
கொழும்பு:
இலங்கையில் வடகிழக்கு பகுதியில் தமிழர் அதிகம் வசிக்கும் இடங்களை ஒருங்கிணைத்து தனி தமிழ் ஈழம் நாட்டை உருவாக்க பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராடி வந்தார்கள்.
இலங்கையில் உள்ள சிங்கள அரசால் தமிழ் விடுதலைப்புலிகளை அடக்க இயலவில்லை. இந்த நிலையில் கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா உள்பட பல வெளிநாடுகளில் ஆயுத உதவியை பெற்ற இலங்கை அரசு தீவிர போரை மேற்கொண்டது.
2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள படைகளுக்கும் இடையே மிக கடுமையான போர் நடந்தது. அந்த போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மே மாதம் 17-ந்தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலை சிங்கள ராணுவம் கைப்பற்றி தகனம் செய்து விட்டது.
பிரபாகரன் உடன் அவரது மூத்த மகன் சார்லஸ், மகள் துவாரகா ஆகியோரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இறுதிக்கட்ட போரின் போது பிரபாகரன் தப்பி சென்று விட்டதாக மற்றொரு தகவல் வெளியானது.
இதனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பதில் தொடர்ந்து மாறுபட்ட தகவல்கள் அடிக்கடி வெளியாகியபடி உள்ளது. பிரபாகரன் நிச்சயமாக மீண்டும் வருவார் என்று பழ.நெடுமாறன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுதிப்பட தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்த மற்றவர்களும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சில மூத்த தலைவர்களும் பிரபாகரன் 2009-ல் கொல்லப்பட்டு விட்டதை உறுதி செய்கிறார்கள். இதன் காரணமாக பிரபாகரன் விஷயத்தில் மர்மம் நீடிப்பதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெளிநாடு ஒன்றில் ரகசிய இடத்தில் இருப்பதாகவும் வருகிற மே மாதம் அவர் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றுவார் என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பிரபாகரனுடன் பொட்டு அம்மனும் வர வாய்ப்பு இருப்பதாக இந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவு பிரிவு தலைவரான பொட்டு அம்மனும் போரில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் பிரபாகரனை யார் கண்ணிலும் படாமல் வெளிநாட்டுக்கு அழைத்து சென்றது பொட்டு அம்மன்தான் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஒருசாரார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களால் உலகம் முழுக்க வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் புதிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
பிரபாகரனுடன் நெருக்கமாக பழகியவர்களில் ஒருவரான கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் இது தொடர்பாக கேட்டபோது, "எனக்கும் அப்படி ஒரு தகவல் வந்து இருக்கிறது" என்றார். இதனால் பிரபாகரன் மீண்டும் உயிரோடு வருவாரா? என்ற எதிர்ப்பார்ப்பு ஈழ தமிழ் மக்களிடம் உருவாகி இருக்கிறது.
- இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீன்வர்களை கைது செய்தது.
- மீனவர்களின் விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டன.
தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை செய்தது.
மேலும், மீனவர்களின் மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
- யோஷித ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போது அந்நாட்டின் கடற்படை அதிகாரியாக பணியாற்றினார்.
- குற்றப்புலனாய்வு அலுவலகத்தில் குற்றச்சாட்டு தொடர்பாக யோஷித ராஜபக்சே விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே. பிரதமராகவும் இருந்துள்ளார். இவருக்கு நமல், ரோஹிதா, யோஷிதா ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் யோஷித ராஜபக்சேவை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரை சட்டவிரோத சொத்து குவிப்பு புகார் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். பெலியத்த என்ற பகுதியில் வைத்து யோஷிதாவை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் புத்திக மனதுங்க கூறும்போது, "சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் யோஷித ராஜபக்சே, குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றார். ஏற்கனவே சொத்து குவிப்பு புகார் தொடர்பாக யோஷித ராஜபக்சேவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது சொத்து விவரங்கள் பற்றி கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் அதிபராக கோத்தபய ராஜபக்சே, பிரதமராக மகிந்த ராஜபக்சே இருந்தபோது பொருளாதார நெருக்கடி காரணமாக மிகப்பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் அவர்கள் பதவியில் இருந்து விலகினார்கள். அதன்பின் இடைக்கால அரசு அமைந்தது.
பின்னர் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மீண்டது. சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் திசாநாயகே அபார வெற்றி பெற்று பதவியேற்றார்.
தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். ராஜபக்சே குடும்பத்தினர் மீதான செல்வாக்கு மோசமாக சரிந்துள்ளது. இந்த நிலையில் யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.
- கைது செய்யப்பட்ட மீனவர்களை, இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
- மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொழும்பு:
நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது. அவர்களிடமிருந்து ஒரு விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை, இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னர், அவர்கள் இலங்கையின் ஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அங்கு, தமிழக மீனவர்களை வருகிற 23-ந்தேதி வரை நீதிமன்றக்காவல் விதித்து ஊர்க்காவல் படை நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- இலங்கை அதிபர் அனுர திசநாயக 3 நாள் பயணமாக சீனா செல்கிறார்.
- வரும் 14ம் தேதி தனது பயணத்தை தொடங்குகிறார் என தெரிவித்தார்.
கொழும்பு:
இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுர குமார திசநாயக அந்நாட்டு புதிய அதிபராக பதவியேற்றார்.
இலங்கை அதிபராக பதவியேற்ற அனுர குமார திசநாயகவுக்கு இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
இதற்கிடையே, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக கடந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதிபர் பதவியேற்றதும் அனுர திசநாயக பயணித்த முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
இந்நிலையில், இலங்கை அதிபர் அனுர திசநாயக அடுத்த வாரம் சீனா செல்ல உள்ளார் என அந்நாட்டு அமைச்சர் நலிந்த ஜெயதிசா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இலங்கை அதிபர் அனுர திசநாயக 3 நாள் பயணமாக வரும் 14ம் தேதி சீனா செல்ல உள்ளார் என தெரிவித்தார்.
- ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
- தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதுமாக உள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், கடற்கொள்ளையர்கள் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகவே உள்ளது.
தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறது.
இருப்பினும், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதுமாக உள்ளது.
இந்த விவகாரத்தில், மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், "மீனவர் விவகாரத்தில் இலங்கை இந்திய மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தை இல்லை; பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டது என இலங்கை அமைச்சர் சந்திரசேகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
இனி பேச்சு இல்லை. மீனவர் விவகாரத்தில் இலங்கை இந்திய மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தை இல்லை. பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டது.
இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார்கள். தொழில்நுட்ப ரீதியான பிரச்சினை உள்ளிட்டவையே அந்த பேச்சில் இடம் பெறும். மனிதாபிமான அடிப்படையில் இந்த விவாரத்தில் இனி பேச்சுவார்த்தை நடைப்பெறாது.
இவவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.
- கைதான மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள்.
இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் இலங்கை அதிபர் இந்தியா வந்து சென்ற நிலையில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கைதாகி இருக்கும் மீனவர்கள் தமிழகத்தின் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
- சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
- சமீப காலங்களில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.
சீன பெண் ஒருவர் ரெயிலில் ரீல்ஸ் வீடியோ எடுக்கும்போது கீழே விழுந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலானது.
சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது ரெயிலில் பயணிக்கும்போது அப்பெண் ரெயிலுக்கு வெளியே தலையை நீட்டி ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்துள்ளார். அந்த சமயத்தில் ஒரு மரத்தில் மோதி அப்பெண் கீழே விழுந்துள்ளார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்பெண் ஒரு புதருக்குள் விழுந்ததால் காயமின்றி உயிர் தப்பினார்.
சமீப காலங்களில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
- இலங்கை தேர்தலில் அபார வெற்றி பெற்ற அனுர குமார திசநாயக அதிபராக பதவியேற்றார்.
- இலங்கை அதிபர் டிசம்பர் 15ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு பயணம் மேற்கிறார்.
கொழும்பு:
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயக அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக் டிசம்பர் 15ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார் என அந்நாட்டு அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வரும் அதிபர் திசநாயக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது இருநாடுகள் இடையே நிலவும் மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
திசநாயகே இலங்கை அதிபராக பதவி ஏற்ற சில நாட்களில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், இலங்கை அதிபரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட திசநாயகே இப்போது இந்திய பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






