என் மலர்tooltip icon

    இலங்கை

    • முதலில் ஆடிய இந்தியா 266 ரன்கள் சேர்த்தது.
    • இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அரை சதமடித்தனர்.

    பல்லேகலே:

    ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய இஷான் கிஷன், ஹர்திக் பான்டியா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இஷான் கிஷன் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 82 ரன்னும், ஹர்திக் பான்டியா 87 ரன்னும் குவித்து அசத்தினர்.

    பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 267 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி என்ற நிலையில் மழை குறுக்கிட்டது. தொடர் மழையால் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    • ஆசிய கோப்பை 2023 தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கியது.
    • ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே ஒரு வெற்றியை பெற்று விட்டது.

    ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆசிய கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ள. இன்றைய போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி என்பதால், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் இடைய இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.

    ஆசிய கோப்பை 2023 தொடர் துவங்கும் முன்பு தான் பாகிஸ்தான் அணி, சர்வதேச ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறது. ஐ.சி.சி. ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    • இலங்கை அதிபர் ரனில் விக்ரம சிங்கேவை சந்தித்து பேச உள்ளார்.
    • அரசியல் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    கொழும்பு:

    இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் இரண்டு நாட்கள் பயணமாக இலங்கைக்கு செல்கிறார். அவர் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    அப்போது இலங்கை அதிபர் ரனில் விக்ரம சிங்கேவை சந்தித்து பேச உள்ளார். அதேபோல் அரசியல் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    இதுகுறித்து இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, இலங்கை ஆயுதப்படைகளுக்கு திறனை வளர்ப்பதில் உதவ இந்தியா உறுதி பூண்டுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு கடனாக சுமார் ரூ.1240 கோடியை இலங்கைக்கு இந்தியா வழங்கியது. இதில் இதுவரை ரூ.826 கோடி கடன் பயன் படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள இருதரப்பு ராணுவ உறவுகளையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துபதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாத தொடக்கத்தில் சீனா போர்க்கப்பலான 'ஹையாங்-24' கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அந்த கப்பல், இலங்கைக்கு வந்து சென்ற சில நாட்களில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்கின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது தொடர்பாக இலங்கையுடன் ராஜ்நாத்சிங் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சீனா, தனது ஆய்வு கப்பலான ஷியான்-6 யை அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் இலங்கை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அனுமதி கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 300 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் கடைசி ஓவரில் 302 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது.

    அம்பாந்தோட்டை:

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தான் 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 151 ரன்கள் குவித்தார். இப்ராகிம் சட்ரன் 80 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 227 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 91 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பாபர் அசாம் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷதாப் கான் 35 பந்தில் 48 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

    இறுதியில், பாகிஸ்தான் 49.5 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷதாப் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    • ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையே முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.
    • டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 201 ரன்கள் எடுத்துள்ளது.

    அம்பந்தோட்டை :

    ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடர் இரண்டு அணிகளுக்கும் பொதுவான ஆடுகளமாக இலங்கையில் வைத்து நடைபெறுகிறது.

    இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடர் நேற்று தொடங்கி, 26-ம் தேதி முடிவடைகிறது.

    இந்நிலையில், நேற்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படிமுதலில் ஆடிய பாகிஸ்தான் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இமாம் ஹல் ஹக் 61 ரன்கள் எடுத்தார். ஷதாப் கான் 39 ரன்னும் எடுத்தார்.

    இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்கம் முதல் பாகிஸ்தான் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இதனால் விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தன.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 59 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 5 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார். இதன்மூலம் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • தற்போது நிலவும் வறட்சியால் பயிர் செய்வதற்கு நீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    • விவசாயிகளுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வன்முறையை தூண்ட சில குழுக்கள் திட்டமிட்டனர்

    கொழும்பு:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர்.

    பின்னர் அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே, பொருளா தார மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து மெல்ல மீண்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இலங்கையின் அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசும்போது, "கடந்த ஆண்டு மே மாதம் 9-ந் தேதி நடந்தது போன்ற பொது அமைதியின்மையை உருவாக்க சில குழுக்கள் முயற்சித்ததாக உளவுத்துறை அறிக்கைகள் அளித்துள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறும்போது, "தற்போது நிலவும் வறட்சியால் பயிர் செய்வதற்கு நீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் பிரச்சி னைகளை ஏற்படுத்தினர்.

    விவசாய அமைச்சர் வீட்டை சுற்றி வளைக்க முயற்சிகள் செய்யப்பட்டன. வறட்சியால் ஏற்படும் தண்ணீர் நெருக்கடியை பயன்படுத்தி வன்முறையை தூண்டும் நடவடிக்கைகளில் சிலர் இருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விவசாயிகளுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வன்முறையை தூண்ட சில குழுக்கள் திட்டமிட்டனர்" என்றனர்.

    • சீனா தயாரித்த பிடி-6 ரக விமானம் விபத்துக்குள்ளானது.
    • இரண்டு விமானிகளின் உடல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து கிழக்கே 165 மைல் தொலைவில் உள்ள கிழக்கு நகரமான திருகோணமலையில் உள்ள சீனக்குடா தளத்தில், விமானப்படை அகாடமியில் இருந்து நேற்று காலை வழக்கமான பயிற்சிக்கு விமானம் புறப்பட்டது.

    சீனா தயாரித்த பிடி-6 ரக விமானம் காலை 11 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இதில், பயணித்த இரண்டு பயிற்சி விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானிகளின் உடல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் விவரிக்கவில்லை. என்றாலும், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்.

    • மார்ச், 2022-ல் இரு நாடுகளுக்கிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது
    • மென்பொருள் சம்பந்தமான ஆலோசனையையும் வழங்கி இந்திய அரசு மேற்பார்வை செய்யும்

    இலங்கை மக்களுக்கு அத்தியாவசியமான உதவிகள் தடையின்றி கிடைக்கவும், அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கவும், இந்தியாவின் உதவியை இலங்கை கோரியிருந்தது. இதற்கு இந்தியா சம்மதித்தது.

    இதன்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மார்ச், 2022-ல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்படி நாடு முழுவதும் சேவைகளை டிஜிட்டல் மயமாக்க தேவைப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவியை இந்தியா வழங்கும். மேலும் இதற்காக தேவைப்படும் மென்பொருள் ஆலோசனையையும் வழங்கி இந்திய அரசு மேற்பார்வை செய்யும்.

    இத்திட்டத்தின்படி, சர்வதேச சிவில் விமானத்துறை அமைப்பின் தரநிலைகளின்படி அடையாள அட்டைகளை வழங்குவதற்காக ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பில் இலங்கை குடிமக்களின் முகம், கருவிழி மற்றும் கைரேகை தரவுகள் உள்ளிட்ட சுயசரிதை மற்றும் பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்படும்.

    இதன்மூலம், அரசாங்கத்தின் வறுமை குறைப்பு திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் இதர சேவைகளை வங்கிகள் மூலம், குடிமக்களுக்கு பயனுள்ள முறையிலும் திறமையாகவும் கொண்டு செல்ல முடியும்.

    இதன்படி, இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாள திட்டத்திற்கு (Sri Lanka Unique Digital Identity Project) நிதியாக இந்தியா ரூ.450 மில்லியனை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

    "இலங்கையின் நலனில் இந்திய அரசாங்கத்தின் ஆர்வத்தை குறிக்கும் வகையில், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ரூ.450 மில்லியனை எங்கள் தொழில்நுட்ப அமைச்சர் கனக ஹெராத்திடம் வழங்கினார். இத்திட்டத்திற்காக தேவைப்படும் மொத்த நிதியில் இது 15 சதவீதமாகும்" என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேயின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இலங்கைக்கான முக்கிய திட்டமான இதன் செயலாக்கத்திற்காக, ஜனாதிபதி செயலகத்தில் பல அதிகாரிகள் பங்கேற்ற சந்திப்பு நடைபெற்றது.

    இதில் அதிபரின் தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆலோசகருமான சாகல ரத்நாயக, தொழில்நுட்ப அமைச்சர் கனக ஹெராத், இந்திய தூதரக கமிஷனர் கோபால் பாக்லே, மற்றும் இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திற்கான முதல் செயலாளர் எல்டோஸ் மேத்யூ உட்பட இதர முக்கிய பிரமுகர்கள் இது தொடர்பான விவாதங்களில் ஈடுபட்டனர்.

    நலிந்திருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க இந்திய அரசாங்கம் தருகின்ற உறுதியான ஆதரவிற்காக இலங்கை அதிபர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

    • கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணவீக்கம் 5.8 சதவீதமாக இருந்தது.
    • இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பண வீக்கம் ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

    அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் மக்கள் அவதியடைந்தனர். இதனால் மக்களின் போராட்டங்களால் ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டனர்.

    அதன்பின் அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்கியது.

    பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பண வீக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணவீக்கம் 5.8 சதவீதமாக இருந்தது. அதன்பின் கடந்த ஆண்டு செப்டம்பரில் 69.8 சதவீதமாக உயர்ந்தது.

    பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பண வீக்கம் குறைய தொடங்கியது.

    இந்நிலையில் இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பண வீக்கம் ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது.

    கடந்த ஜூன் மாதம் 12 சதவீதமாக இருந்த பண வீக்கம், ஜூலை மாதம் 6.3 சதவீதமாக குறைந்துள்ளது.

    இது இலங்கை அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவர அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கி கூறும்போது, பண வீக்கம் மேலும் மிதமானதாகவும், நடுத்தர காலத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை சுற்றி ஸ்திரமாகவும் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கை, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • இலங்கை அணி முதல் இன்னிங்சில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இரண்டாவது இன்னிங்சில் 188 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட்டானது.

    கொழும்பு:

    இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. தனஞ்செய டி சில்வா ஓரளவு தாக்குப் பிடித்து 57 ரன்கள் எடுத்தார்.

    அதன்பின், பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 132 ஒவரில் 5 விக்கெட்டுக்கு 563 ரன்கள் குவித்தது. அப்துல்லா ஷ்பீக் 201 ரன்னும், ஆகா சல்மான் 132 ரன்னும், முகமது ரிஸ்வான் 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இலங்கை சார்பில் அசிதா பெர்ணாண்டோ 3 விக்கெட்டும், ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 576 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

    410 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை பாலோ ஆன் பெற்றது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சிலும் இலங்கை அணி திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூல ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 2-0 என கைப்பற்றியது.

    பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 7 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகனாக அப்துல்லா ஷபீக்கும், தொடர் நாயகனாக ஆகா சல்மானும் தேர்வாகினர்.

    • 3-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 563 ரன்கள் குவித்துள்ளது.
    • தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் இரட்டை சதமடித்து அசத்தினார்.

    கொழும்பு:

    இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. தனஞ்செய டி சில்வா ஓரளவு தாக்குப் பிடித்து 57 ரன்கள் எடுத்தார்.

    அதன்பின், பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது நாள் முடிவில் 38.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் அப்துல்லா ஷபீக் 87 ரன்னும், பாபர் அசாம் 28 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கேப்டன் பாபர் அசாம் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சவுத் ஷகில் அரை சதமடித்து 57 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய அப்துல்லா ஷபீக் இரட்டை சதமடித்து 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 132 ஒவரில் 5 விக்கெட்டுக்கு 563 ரன்கள் குவித்தது. ஆகா சல்மான் 132 ரன்னும், முகமது ரிஸ்வான் 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இலங்கை சார்பில் அசிதா பெர்ணாண்டோ 3 விக்கெட்டும், ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    • ரணில் விக்ரமசிங்கே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
    • தேசிய நல்லிணக்கத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    கொழும்பு:

    இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த சட்ட திருத்தம் முழுமையாக அமல்படுத்தப் படவில்லை.

    இதற்கிடையே கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம், இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை இலங்கை முழுமையாக அமல்படுத்தவும், மாகாணங்களுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    இதற்கிடையே இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இதில் தேசிய நல்லிணக்கத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில் எதிர்க்கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தை ஜே.வி.பி. உள்ளிட்ட சிங்கள கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் கட்சிகள், தமிழ் கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

    இலங்கை பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கூறும்போது கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் குறித்து எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனால் மக்களின் நலனுக்காக கூட்டத்தில் கலந்து கொள்வோம்.

    இது ஒரு உண்மையான முயற்சியாக இல்லாமல் அரசியல் வித்தை என்று நிரூபிக்கப்பட்டால் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்யும் உரிமை எங்களுக்கு உள்ளது என்றார்.

    முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் பல எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

    ×