என் மலர்tooltip icon

    பிரான்ஸ்

    • பிபாவின் சிறந்த வீரர் விருதை மெஸ்சி வென்றார்.
    • பிபாவின் சிறந்த வீராங்கனை விருதை புடெல்லாஸ் வென்றார்.

    பாரிஸ்:

    சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, கடந்த ஆண்டுக்கான பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்சி, கைலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா அறிவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், பிபா சிறந்த கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2022-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது அர்ஜென்டினாவின் மெஸ்சிக்கும், சிறந்த வீராங்கனை விருது ஸ்பெயினின் அலெக்சியா புடெல்லாசுக்கும் வழங்கப்பட்டது.

    கத்தாரில் கடந்த ஆண்டு நடந்த 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது.

    அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி 7 கோல்களுடன், ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி ஓர் ஆண்டை கடந்து விட்டது.
    • பல நாடுகளில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    பாரீஸ்:

    நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி ஓர் ஆண்டை கடந்து விட்டது. ஆனால் போர் முடிவின்றி நீண்டு வருகிறது.

    இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் மற்றும் பிற உதவிகளையும் வாரி வழங்கி வருகின்றன. போர் முடிவில்லாமல் தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம் என சர்வதேச அளவில் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    உக்ரைன்-ரஷியா போர் ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில் பல நாடுகளில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி மக்கள் போராட தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், பிரான்சில் தலைநகர் பாரீஸ் உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராடினா். குறிப்பாக பாரீசில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமைதி பேரணி நடத்தினர்.

    அவர்கள் பிரான்ஸ் மற்றும் உக்ரைன் தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியும், 'போர் வேண்டாம், அமைதி வேண்டும்', 'மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்த வேண்டாம்' 'நேட்டோவை விட்டு வெளியேறு' போன்ற வாசகங்கள் அடங்கி பதாகைகளை சுமந்தபடியும் பேரணியாகச் சென்றனர்.

    • போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், பயங்கரவாதம் உள்ளிட்ட கடுமையான குற்றங்களை தடுக்க உதவுகிறது.
    • நைஜீரியாவையும் தென் ஆப்பிரிக்காவையும் தீவிர கண்காணிப்புக்கு உட்பட்ட நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.

    பாரிஸ்:

    சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதைத் தடுப்பதற்கு, நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்.ஏ.டி.எப்.) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், பல்வேறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைமையகம் பாரிஸ் நகரத்தில் செயல்படுகிறது. சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் கண்டறியப்பட்டால் அந்த நாடுகளை கருப்பு பட்டியலில் இந்த அமைப்பு வைத்து கண்காணிக்கும். இந்த பட்டியலில் இடம் பெறும் நாடுகள் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவிகள் பெறுவதற்கும் மற்றும் பன்னாட்டு வணிகம் மேற்கொள்வதற்கும் தடைகள் விதிக்கப்படும்.

    இந்நிலையில், ரஷியாவின் உறுப்பினர் தகுதியை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக நிதி நடவடிக்கை பணிக்குழு இன்று தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நிதி நடவடிக்கை பணிக்குழுவானது, 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் அதிகார வரம்புகளுக்கு தரநிலைகளை ஏற்படுத்துகிறது. அத்துடன், போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட கடுமையான குற்றங்களை தடுக்க அதிகாரிகளுக்கு உதவுகிறது.

    பாதுகாப்பு மற்றும் உலகளாவிய நிதி அமைப்பின் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழுவின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக ரஷியாவின் நடவடிக்கைகள் இருப்பதாகவும், அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிதி நடவடிக்கை பணிக்குழுவின் தரநிலைகளை செயல்படுத்துவதில் ரஷியா இன்னும் பொறுப்புடன் இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    பாரிசில் நடந்த 5 நாள் கூட்டத்தைத் தொடர்ந்து, நைஜீரியாவையும் தென் ஆப்பிரிக்காவையும் தீவிர கண்காணிப்புக்கு உட்பட்ட நாடுகளின் பட்டியலில் நிதி நடவடிக்கை பணிக்குழு சேர்த்துள்ளது. மேலும் கம்போடியா மற்றும் மொராக்கோவை அந்த வகையிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

    • பள்ளியில் மாணவன் ஒருவன் 52 வயது நிரம்பிய ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்.
    • ஆசிரியை கொல்லப்பட்டதற்கு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டின், செயின்ட் ஜீன் டி லஸ் நகரில் உள்ள பள்ளியில் மாணவன் ஒருவன் 52 வயது நிரம்பிய ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்.

    கொலை செய்த மாணவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் கூறிய பதில் போலீசாரை திகைக்க வைத்தது.

    எனக்கு பேய் பிடித்திருக்கிறது, ஆசிரியையை அந்த பேய் தான் கொலை செய்ய சொன்னது என்றான். இந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆசிரியை கொல்லப்பட்டதற்கு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. ஆசிரியை மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    • சீன வெளியுறவு மந்திரி வாங் யீ ஐரோப்பியப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • அவர் முதல் கட்டமாகப் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றடைந்தார்.

    முனீச்:

    சீனாவின் வெளியுறவு துறை மந்திரி வாங் யீ ஐரோப்பியப் பயணத்தின் முதல் கட்டமாகப் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றார். அங்கு அவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மேக்ரனைச் சந்திக்கவுள்ளார். இந்தாண்டின் பிற்பாதியில் இடம்பெறவுள்ள மேக்ரனின் சீனப் பயணம் குறித்து விவாதிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சீனாவின் மூத்த வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் பொறுப்பை ஏற்றபிறகு வாங் யீ மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

    எட்டு நாள்கள் நீடிக்கும் அண்மைப் பயணத்தின்போது அவர், இத்தாலி, ஹங்கேரி, ரஷியா ஆகியவற்றுக்கும் செல்கிறார்.

    ரஷியாவுடனான நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது சீனா. ஐரோப்பாவிலும் பெய்ஜிங்கின் நற்பெயரை வலுப்படுத்துவது அவரது பயணத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில்,முனீச் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் கலந்து கொண்டார். அப்போது அவர் சீன வெளியுறவு மந்திரியை சந்தித்துப் பேசினார்.

    உளவு பலூன் பறந்த விவகாரம் நிலுவையில் உள்ள நிலையில் இரு மந்திரிகளும் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பிரான்ஸ் அதிபர் மேக்ரானும், பிரதமர் மோடியும் நேற்று காணொலி காட்சி மூலம் சந்தித்துப் பேசினர்
    • உக்ரைன் பிரச்சினைக்கு மோடி தலைமையிலான இந்தியாவால் தீர்வு காணமுடியும் என்றார் பிரான்ஸ் அதிபர்.

    பாரிஸ்:

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று காணொலி காட்சி மூலம் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பில் ஏர் இந்தியாவுக்கு 250 விமானங்கள் வாங்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:

    உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில் எழுந்துள்ள கடினமான சூழலில் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் வெற்றி பெற நாங்கள் உழைத்து வருகிறோம்.

    உங்கள் (பிரதமர் மோடி) தலைமையின் கீழ் இந்தியா, முழு உலகையும் அணிதிரட்டக்கூடிய ஒன்றாக இருக்க முடியும். அத்துடன் நமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய பிரச்சினையை (உக்ரைன் விவகாரம்) தீர்க்க நமக்கு உதவ முடியும்.

    ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்கும் ஏர் இந்தியாவின் ஒப்பந்தமானது, இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஆழமான உறவு மற்றும் நட்பில் விளைந்த மைல்கல் சாதனைகளில் ஒன்றாகும். ஏர்பஸ் மற்றும் சப்ரான் உள்பட அதன் பங்காளிகள் அனைத்தும், இந்தியாவுடன் ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை உருவாக்க முழு அர்ப்பணிப்புடன் இருப்பதையும், விண்வெளி முதல் சைபர் வரை, பாதுகாப்பு முதல் கலாசாரம் வரை, ஆரோக்கியம் முதல் ஆற்றல் மாற்றம் வரை பல துறைகளில் இந்தியாவுடன் நாங்கள் சாதித்துள்ளோம் என்பதையும் இந்த சாதனை காட்டுகிறது.

    இந்தியாவிற்கு அதிநவீன மற்றும் மிகவும் திறமையான தொழில்நுட்பங்களை வழங்குவதற்கும், இந்தியாவில் தயாரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் பிரான்சிடம் ஆழமான உறுதிப்பாடு உள்ளது. பிரெஞ்சு தொழிற்துறைக்கு புத்துயிர் அளிப்பதில் எங்கள் அரசு முழு ஆற்றலையும் செலுத்தியுள்ளது. அத்துடன் அணுசக்தி, மைக்ரோசிப்ஸ், சைபர் மற்றும் பயோடெக் ஆகிய துறைகளில் ஒரு புதிய லட்சியத்தை உருவாக்கி வருகிறது என தெரிவித்தார்.

    • வீட்டில் தீப்பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • தீ விபத்தில் தாயுடன் 7 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள சார்லி-சுர்-மார்னே நகரில் 2 மாடிகளை கொண்ட வீட்டில் ஒரு தம்பதி தங்களது குழந்தைகளுடன் வசித்து வந்தனர். அந்த தம்பதிக்கு 5 மகள்களும், 2 மகன்களும் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை அந்த தம்பதியும், குழந்தைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண் இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதிலும் பரவியது.

    வீட்டில் தீப்பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் டஜன் கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    அவர்கள் பலமணி நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 7 குழந்தைகளும், அவர்களின் தாயும் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகளின் தந்தை மட்டும் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.

    தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தெரியாத நிலையில், இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீ விபத்தில் தாயுடன் 7 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த ஆண்டு நடக்கிறது.
    • இதற்காக பிரான்ஸ் அரசு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.

    பாரீஸ்:

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த ஆண்டு (2024) ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடக்கிறது. பிரான்சில் 100 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் விளையாட்டு நடக்க இருப்பதால் அந்நாட்டு அரசு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.

    இதற்கிடையே, பாரீஸ் ஒலிம்பிக்கில் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மற்றும் அதற்கு ஆதரவாக உள்ள பெலாரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளை பங்கேற்க வைக்கும் திட்டத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கையில் எடுத்துள்ளது.

    ரஷிய, பெலாரஸ் வீரர்கள் ஒலிம்பிக்கில் பொதுவான கொடியின் கீழ் பங்கேற்பார்கள். பாஸ்போர்ட் அடிப்படையில் எந்த நாட்டு வீரருக்கும் தடை விதிக்க முடியாது என கடந்த வாரம் ஐ.ஓ.சி. அறிவித்தது. இது நிகழ்ந்தால் பாரீஸ் ஒலிம்பிக்கை புறக்கணிப்போம் என உக்ரைன் எச்சரித்தது. ரஷியாவை ஒலிம்பிக்கில் அனுமதிப்பதற்கு மேலும் பல நாடுகள் எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளன.

    இந்நிலையில், போலந்து, லிதுவேனியா, லாத்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷியா, பெலாரஸ் நாட்டு வீரர்களை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கும்போது மற்ற நாட்டு வீரர்கள் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். இரு நாட்டு வீரர்களையும் களத்தில் நேருக்கு நேர் சந்திக்க நேரிடும். அத்துடன் உக்ரைன் மீதான போரை திசைதிருப்பும் விதமாக இந்த விளையாட்டு பயன்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளன.

    இதுதொடர்பாக போலந்து விளையாட்டுத்துறை மந்திரி கமில் போட்னிக்சுக் கூறுகையில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்பட 40 நாடுகள் ஒன்றிணைந்து புறக்கணிக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து புறக்கணிக்கும்போது பாரீஸ் ஒலிம்பிக்கின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என தெரிவித்துள்ளார்.

    • கடந்த ஆண்டு 119 வயதான ஜப்பானின் கேன் டனாசா இறந்தார்.
    • சகோதரி ஆண்ட்ரே என்று அழைக்கப்பட்ட லூசில் ராண்டன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

    உலகின் வயதான நபரான பிரான்சை சேர்ந்த கன்னியாஸ்திரியான லூசில் ராண்டன் தனது 118 வயதில் மரணம் அடைந்தார்.

    இவர் 1904-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந்தேதி தெற்கு பிரான்சில் உள்ள அலெஸ் நகரில் பிறந்தார். லூசில் ராண்டன் மரணம் தொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் டேவிட் டவெல்லா கூறும்போது, டூலோனில் உள்ள முதியோர் இல்லத்தில் லூசில் ராண்டன் தங்கி இருந்தார். அவரது உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது.

    இது பெரும் சோகம். ஆனால் தன் அன்பு தம்பியுடன் சேர வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்தது என்றார்.

    கடந்த ஆண்டு 119 வயதான ஜப்பானின் கேன் டனாசா இறந்தார். அதன்பின் உலகின் வயதான நபராக லூசில் ராண்டன் இருந்தார். இவர் தனது 19 வயதில் கத்தோலிக்க மதத்திற்கு மாறினார். பின்னர் 8 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாஸ்திரி ஆனார்.

    சகோதரி ஆண்ட்ரே என்று அழைக்கப்பட்ட லூசில் ராண்டன் ஆசிரியராகவும் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரின் பெரும் பகுதியில் குழந்தைகளை கவனித்து கொண்டார். போர் முடிந்த பிறகு ஒரு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய அவர் 28 ஆண்டுகள் அனாதைகள் மற்றும் முதியவர்களுக்கு ஆதரவாக இருந்தார்.

    கடந்த 2020ம் ஆண்டு லூசில் ராண்டன், வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, "நான் எப்படி இவ்வளவு காலம் வாழ்ந்தேன் என்று தெரியவில்லை. ரகசியம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. அந்த கேள்விக்கு கடவுளால் மட்டுமே பதில் அளிக்க முடியும்" என்று கூறியிருந்தார்.

    • பாரீசின் கரே டூ நார்ட் ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடந்தது.
    • அதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசின் கரே டூ நார்ட் ரெயில் நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 6:40 மணிக்கு மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தினார்.

    லண்டன் மற்றும் வடக்கு ஐரோப்பாவை இணைப்பதில் இந்த ரெயில் நிலையத்திற்கு முக்கிய பங்கு உண்டு. அதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

    கத்திக்குத்து சம்பவம் காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், தாக்குதல் நடத்திய நபர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, அவரைக் கைது செய்தனர்.

    தாக்குதல் நடத்திய அந்த நபரும் படுகாயம் அடைந்ததாக பிரான்ஸ் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

    • சீன பயணிகளுக்கு பிரான்ஸ் விமான நிலையங்களில் பிசிஆர் சோதனை நடத்தப்படுவதாக தகவல்.
    • சீன பயணிகள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என ஸ்பெயின் அரசு அறிவிப்பு

    உருமாறிய புதிய வகை கொரோனாவான பி.எப்.-7 சீனாவில் மிக வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இதையடுத்து இந்தியா, இத்தாலி, தென்கொரியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீன பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை நடத்த உத்தரவிட்டுள்ளன. சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு பிரெஞ்சு மக்களை பிரான்ஸ் அரசு வலியுறுத்தி உள்ளது. சீனாவிலிருந்து பிரான்ஸ் செல்லும் விமானங்களில் பயணிப்போர் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் மாறுபாடுகளை அடையாளம் காண சீன பயணிகளுக்கு விமான நிலையங்களில் பிசிஆர் சோதனை நடத்தப்படுவதாக பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


    முன்னதாக, ஸ்பெயின் அரசும் சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களை கட்டாயமாக்கி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு சுகாதார அமைச்சர் கரோலினா டேரியாஸ், சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து ஐரோப்பிய நாடுகளிலும் இதேபோன்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க ஸ்பெயின் அழுத்தம் கொடுக்கும் என்றார்.

    • துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகத்தின்பேரில் 69 வயது நிரம்பிய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • இனவெறி காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

    பாரிஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் குர்திஷ் கலாச்சார மையத்தை குறிவைத்து இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகத்தின்பேரில் 69 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே குற்ற வழக்கில் சிக்கி உள்ளார். கூடாரங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்களைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். எனவே இனவெறி காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

    ×