என் மலர்tooltip icon

    சீனா

    • விண்ணில் சீறிபாய்ந்து சென்ற லாங் மார்ச்-11 கேரியர் ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது.

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-11 கேரியர் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

    விண்வெளி தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ள செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன. லாங் மார்ச்-11 ராக்கெட் 20.8 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும், 58 மெட்ரிக் டன் எடையும் கொண்டது.

    இது குறைந்த புவி சுற்றுப்பாதை அல்லது சூரிய-ஒத்திசைவு சுற்றுப் பாதைக்கு செயற்கைக் கோள்களை கொண்டு செல்லும் திறன் கொண்டது.

    விண்ணில் சீறிபாய்ந்து சென்ற லாங் மார்ச்-11 கேரியர் ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ராக்கெட் திசை மாறி விண்ணில் இருந்து பூமியை நோக்கி வந்தது. ராக்கெட்டின் பூஸ்டர்கள், அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது. இதனால் அங்கு தீ பிழம்பு ஏற்பட்டது. இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • விவோ மீது 62 ஆயிரம் கோடி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு பதிவாகி உள்ளது
    • தூதரக வழி உதவிகள் கிடைக்க நாங்கள் துணை நிற்போம் என சீனா தெரிவித்தது

    இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்கள் நிதி முறைகேட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகாரில் அவற்றை சில ஆண்டுகளாக இந்தியா கண்காணித்து வருகிறது.

    இந்தியாவில் மொபைல் போன் விற்பனையில் முன்னணியில் உள்ள பிராண்டுகளில் ஒன்று, விவோ (Vivo). இந்நிறுவனம், சீனாவை மையமாக கொண்டு இயங்குகிறது.

    நேற்று முன் தினம், விவோ இந்தியாவின் அதிகாரிகளில் சீனாவை சேர்ந்த தற்காலிக தலைமை செயல் அதிகாரி ஹாங் சுகுவான் (Hong Xuquan), தலைமை நிதி அதிகாரி ஹரிந்தர் தஹியா மற்றும் ஆலோசகர் ஹேமந்த் முஞ்சால் ஆகிய மூவரை பண மோசடி தடுப்பு சட்டத்தில் (PMLA) அமலாக்க துறை கைது செய்தது.

    வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் இந்தியாவிலிருந்து ரூ. 62,476 கோடி சட்டவிரோதமாக சீனாவிற்கு விவோ பரிமாற்றம் செய்ததாக கூறப்படும் இவ்வழக்கில் முன்னரே 4 பேர் கைது செய்யப்பட்டது குறிப்படத்தக்கது. இந்திய பொருளாதார இறையாண்மையை குலைக்கும் வகையில் சட்டவிரோதமாக லாபம் ஈட்டியதாக இவர்கள் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் தனது நாட்டு நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு இந்தியாவில் தூதரக வழி பாதுகாப்பை வழங்க போவதாக சீனா தெரிவித்துள்ளது.

    மேலும், இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் (Mao Ning), "நாங்கள் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம். சீன நிறுவனங்களின் சட்டபூர்வமான உரிமைகளையும் நலனையும் உறுதிப்படுத்த சீனா ஆதரவளிக்கும். ஆனால், ஒருதலை பட்சமாக சீன நிறுவனங்களின் மீது மட்டும் நடவடிக்கைகள் எடுக்கும் போக்கை இந்தியா கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என தெரிவித்தார்.

    • 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்தன.
    • 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

    வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 111 பேர் உயிரிழந்துள்ளனர். ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 6.2 ஆக பதிவாகியுள்ளது. கான்சு மாகாணத்தில் 100 பேர் உயிரிழந்ததாகவும், கிங்காய் மாகாணத்தில் 11 பேரும் உயிரிழந்ததாக சீனாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கான்சு மாகாணத்தில் 96 பேரும், கிங்காய் மாகாணத்தில் 124 பேரும் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதமடைந்தன.

    இந்த நிலநடுக்கம் கான்சு மாகாணத்தின் ஜிஷிஷான் கவுன்ட்டியில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் கிங்காய் மாகாணத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. இதனால் கிங்காய் மாகாணமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • 500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
    • விபத்தில் உயிரிழப்புகள் இல்லை என்றாலும் ரெயிலில் பயணித்தவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

    சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் சுரங்கப்பாதையில் நின்று கொண்டிருந்த மெட்ரோ ரெயில் மீது மற்றொரு ரெயில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில் 102 பயணிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும், 500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 

    ரெயில் விபத்து தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், தண்டவாளத்தில் பனி படர்ந்திருந்ததால் ரெயில் பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போது, அதே வழியில் வந்த மற்றொரு ரெயில், பிரேக் பிடித்தும் நிற்காமல் சறுக்கிக் கொண்டே சென்று, நின்று கொண்டிருந்த ரெயில் மீது மோதியது தெரியவந்துள்ளது.

    இந்த விபத்தில் உயிரிழப்புகள் இல்லை என்றாலும் ரெயிலில் பயணித்தவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

    • வலது கண்ணில் இருந்து 40க்கும் மேற்பட்ட புழுக்களையும் இடது கண்ணில் இருந்து 10க்கும் மேற்பட்ட புழுக்கள் அகற்றம்.
    • ஈ கடித்தால் பரவும் ஃபிலாரியோடியா வகையைச் சேர்ந்த வட்டப்புழுக்கள்.

    சீனாவில் மிரர் என்ற பெண்ணின் கண்களில் இருந்து சுமார் 60 உயிருள்ள புழுக்களை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால், இது வினோதமான அறுவை சிகிச்சை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கண்களில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டுள்ளது. பிறகு, கூச்ச உணர்வைப் போக்க அவர் கண்களைத் தேய்த்தபோது கண்ணில் இருந்து ஒரு ஒட்டுண்ணிப் புழு வெளியே வந்து விழுந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சிடையந்த அந்த பெண் பயந்துபோய் உடனடியாக சீனாவின் குன்மிங்கில் உள்ள மருத்துவமனையை அணுகியுள்ளார்.

    ஆனால், அந்த பெண்ணை சோதனை செய்த மருத்துவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. பெண்ணின் கண்களை சோதனை செய்தபோது, இரு கண்களிலும் கருவிழியில் உயிருள்ள புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், அவரது வலது கண்ணில் இருந்து 40க்கும் மேற்பட்ட புழுக்களையும் இடது கண்ணில் இருந்து 10க்கும் மேற்பட்ட புழுக்களையும் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர். மொத்தத்தில், மருத்துவர்கள் அந்த பெண்ணின் கண்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகளை அகற்றியதாக பெண் மிரர் தெரிவித்துள்ளார்.

    பொதுவாக ஈ கடித்தால் பரவும் ஃபிலாரியோடியா வகையைச் சேர்ந்த வட்டப்புழுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

    இருப்பினும், நாய்கள் மற்றும் பூனைகளிடமிருந்து புழுக்களை தொற்றியிருக்க வாய்ப்புள்ளதாக அந்த பெண் கருதுகிறார். அவற்றின் உடலில் தொற்று லார்வாக்கள் இருக்க வாய்ப்புள்ளது. விலங்குகளைத் தொடுவதும், கண்களைத் தேய்ப்பதும் தொற்றுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று மிரர் கூறினார்.

    எஞ்சியிருக்கும் லார்வாக்களின் சாத்தியக்கூறுகளை கண்காணிக்க அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்தும்படி மருத்துவர்கள் அந்தப் பெண்ணை வலியுறுத்தியுள்ளனர்.

    • இலங்கை உள்பட சில நாடுகள் விசா இல்லாமல் சுற்றுலா பயணிகள் வரலாம் என அறிவித்துள்ளது.
    • 5 ஐரோப்பிய நாடுகள், மலேசியாவைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் நுழைய சீனா அனுமதி அளித்தது.

    பீஜிங்:

    சீனாவில் இருந்து 2019-ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் அடுத்த சில ஆண்டுகள் உலக நாடுகளையும் அவற்றின் பொருளாதாரத்தையும் ஆட்டம் காண வைத்தது. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிவை சந்தித்தது.

    இதற்கிடையே சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளைக் கவரவும் சீனா பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

    இந்நிலையில் வரும் டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே இலங்கை உள்பட சில நாடுகள் விசா இல்லாமல் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரலாம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷின்சென் நகரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஷின்சென்:

    சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷின்சென் நகரில் நடந்து வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஜோடி இந்தோனேசிய ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-15, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    அரையிறுதியில் இந்திய ஜோடி சீன ஜோடியை எதிர்கொள்கிறது.

    • கோவிட்-19 பெருந்தொற்றால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்
    • உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் விளக்கம் கேட்டது

    கடந்த 2019 டிசம்பர் மாதம், சீனாவின் வூஹான் (Wuhan) மாகாணத்தில் தோன்றியதாக சொல்லப்படும் கொரோனா (Corona) எனும் வைரஸ் வகை நுண்கிருமியால், நுரையீரல் தொற்று நோய் ஏற்பட்டு, மக்கள் உயிரிழந்தனர். 2020 மார்ச் மாதம் இந்த பெருந்தொற்று இந்தியாவிற்கும் பரவியது.

    கோவிட்-19 பெருந்தொற்றை தடுக்கும் விதமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், பல மாதங்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டிருந்தன. இந்த பெருந்தொற்றால் இந்தியா உட்பட பல உலக நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நோய் பரவலை தடுக்க, உயிரிழந்தவர்களின் உடலை கூட சுகாதார துறையினர், உறவினர்களிடம் காட்ட மறுத்த சோகம் நிலவியது.

    மேலும், ஊரடங்கால் அலுவலகங்களும், தொழிற்சாலைகளும் பல மாதங்கள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

    இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து, சீனாவின் வடக்கு பகுதியில் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நுரையீரல் நோய்க்கான அறிகுறிகள் தோன்றி, பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தன. இச்செய்தி உலக நாடுகளை கவலை கொள்ள செய்தது.

    உலக சுகாதார அமைப்பு (World Health Organization), இது குறித்து சீனாவிடம் விளக்கம் கேட்டிருந்தது.

    சீனாவின் பதில் குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் அந்த அமைப்பு தெரிவித்திருப்பதாவது:

    புதிய நோய் தொற்று கிருமி எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் புதிய நோய்க்கான அறிகுறிகள் இதுவரை நோயாளிகளிடம் காணப்படவில்லை என்றும் தற்போது அதிகரித்துள்ள சுவாச கோளாறுகளுக்கு காரணம், மருத்துவ துறையினர் முன்னரே அறிந்துள்ள நோய் கிருமிகளால் ஏற்படும் வழக்கமான நிமோனியா தாக்குதல்தான் என சீனா பதிலளித்துள்ளது. மேலும், மருத்துவமனைகளின் கொள்ளளவிற்கு உட்பட்ட அளவில்தான் நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளதாகவும், நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏதும் அபாயகரமான அதிகரிப்பு இல்லை என்றும் சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.

    இவ்வாறு உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

    இதையடுத்து, கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தின் கட்டுப்பாடுகளை மீண்டும் சீன மக்கள் கடைபிடிக்க அந்நாட்டை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    கொரோனா வைரஸ் தாக்குதல் நடந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த வைரஸ் தோன்றிய காரணங்கள் குறித்து கண்டறிய சீனா சரிவர ஒத்துழைக்கவில்லை என பல நாடுகள் குற்றஞ்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாழும் சூழலை மேம்படுத்த ப்யூகே உள்ளாட்சி பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது
    • இரண்டாம் முறையும் சுகாதாரக்கேடு நிலவினால் அபராதம் இரட்டிப்பாக்கப்படும்

    சீனாவின் தென்மேற்கில் உள்ளது சிசுவான் பிராந்தியம் (Sichuan Province). ஆசிய கண்டத்தின் நீளமான நதியான யாங் சே (Yangtze), சிச்சுவான் பிராந்தியம் வழியாக பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சிச்சுவான் பிராந்தியத்தின் தெற்கில் உள்ளது ப்யூகே (Puge) உள்ளாட்சி பகுதி. இப்பகுதியின் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளனர்.

    இச்சட்டத்தின்படி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாத்திரங்களை துலக்காமல் வைத்திருந்தாலோ, படுக்கையை அலங்கோலமாக வைத்திருந்தாலோ, உணவு பண்டங்களை பயன்படுத்தும் போது சூழ்நிலை சுகாதாரமற்று இருந்தாலோ, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு இனிமேல் அபராதம் விதிக்கப்படும்.

    பொது மற்றும் வசிப்பிட சுகாதாரத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, "வாழும் சூழலை மேம்படுத்தும் தரமான வழிமுறைகள்" என ஒரு கொள்கையை ப்யூகே உள்ளாட்சி வகுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    மேலும், இதன் ஒரு தொடர்ச்சியாக மக்களின் நடத்தையில் 14 வித அம்சங்களுக்கு கட்டுப்பாடுகளையும் இந்த அமைப்பு விதித்துள்ளது.

    இனிமேல், உள்ளாட்சி அதிகாரிகள் பொதுமக்களின் வீடுகளுக்கு திடீரென சோதனையிட வருவார்கள். அவ்வாறு வரும் போது வீடுகளில் ஒட்டடை, குப்பைகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் உள்ளிட்ட அசுத்தமான விஷயங்கள் ஏதேனும் கண்ணில் பட்டால் அந்த வீட்டினருக்கு அபராதம் விதிக்கப்படும்.

    ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்ட ஒரு வீட்டில் மறுமுறையும் இதே சூழ்நிலை நிலவினால் அபராத தொகை இரட்டிப்பாக்கப்படும்.

    "ஒரு விவசாயியின் வீட்டிற்கு வந்தால் அங்கு நிலவும் சுகாதார சூழ்நிலை பார்க்க சகிக்கும்படியாக இல்லை. கொசுக்கள், நாய்கள் சூழ்ந்திருக்க ஒரு அசுத்தமான சூழலே நிலவுகிறது. அபராதத்தால் மட்டுமே இதை தடுக்க முடியாது என நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஆனால், அபராதம் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்" என இந்த அறிவிப்பு குறித்து உள்ளாட்சி அமைப்பின் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

    உலகெங்கிலும் பலர், இந்த உத்தரவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • திருடனின் குறட்டை சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர்களில் ஒருவரான டாங் என்ற பெண் கண் விழித்துள்ளார்.
    • திருடன் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டு ஒரு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    தென்மேற்கு சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தை சேர்ந்தவர் டாங். சம்பவத்தன்று இவரது வீட்டுக்குள் ஒரு திருடன் கொள்ளையடிப்பதற்காக நுழைந்துள்ளான். அப்போது வீட்டில் இருப்பவர்கள் பேசி கொண்டிருக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் தூங்கும் வரை காத்திருக்கலாம் என திட்டம் தீட்டிய கொள்ளையன் அங்குள்ள ஒரு அறையில் காத்திருந்தார். அப்போது சுருட்டு பற்ற வைத்து புகைத்த திருடன் சிறிது நேரத்தில் கண் அயர்ந்து தூங்கி உள்ளார்.

    சிறிது நேரத்தில் அவர் குறட்டையும் விட்டுள்ளார். இதற்கிடையே வீட்டில் உள்ளவர்களும் கண் அயர்ந்து உறங்கிய நிலையில், திருடனின் குறட்டை சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர்களில் ஒருவரான டாங் என்ற பெண் கண் விழித்துள்ளார். முதலில் பக்கத்து வீட்டில் இருந்து தான் குறட்டை சத்தம் வருகிறதோ என கருதிய அவர் சத்தம் பக்கத்து அறையில் இருந்து வருவதை உணர்ந்து அங்கு சென்ற போது திருடன் பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக வீட்டில் உள்ளவர்களை எழுப்பியதோடு, போலீசாருக்கும் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று திருடனை கைது செய்தனர். திருடன் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டு ஒரு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    • ஐந்து மாடி கட்டடத்தின், 2-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
    • தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சீனாவின் லியுலியாங் நகரில் உள்ள மாவட்டம் லிஷி. இந்த மாவட்டத்தில் ஐந்து மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடம் சீனாவின் பிரபலமான யோங்ஜு நிலக்கரி சுரங்கம் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த கட்டடத்தின் 2-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • ஒரே கட்சி ஆட்சி முறை காரணமாக எதிர்ப்புகளின்றி திட்டங்கள் நிறைவேறி வந்தன
    • செப்டம்பர மாதம் வரை சுமார் $12 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

    சீனா, 1998 வரை கம்யூனிஸ சித்தாந்தத்தை கடைபிடித்து வந்ததால், உள்நாட்டு வர்த்தகத்திலேயே கவனம் செலுத்தி, உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு வைத்து கொள்ளாமல் இருந்தது.

    அதற்கு பிறகு மெல்ல மாற தொடங்கிய சீனாவின் பொருளாதார சித்தாந்தங்களின் காரணமாக, அந்நாடு தாராளமயமாக்கல் கொள்கைகளை கடைபிடிக்க துவங்கியது. ஒரே கட்சி ஆட்சி முறை உள்ள நாடு என்பதால், சீனா, தன் நாட்டை முன்னேற்றும் திட்டங்களை உடனுக்குடன் எந்த எதிர்ப்பும் இன்றி செயல்படுத்தி, அதி வேகமாக தனது உற்பத்தி திறனை பெருக்கி கொண்டது.

    இதன் காரணமாக சீன பொருட்களே உலக சந்தைகள் முழுவதும் குவிய தொடங்கின. இதனால், சீனாவில் பல உலக நாடுகள் முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டி வந்தன.

    சமீப சில மாதங்களாக சீன பொருளாதாரம் இறங்குமுகமாக உள்ளது. சீனாவின் உள்நாட்டு வர்த்தகம் முன்பு இருந்ததை விட பல மடங்கு சரிவடைந்துள்ளது.

    அங்கு தொடர்ந்து குறைந்து வரும் வட்டி விகிதத்தாலும், அமெரிக்காவுடன் (முன்னாள் அதிபர் டிரம்ப் பதவியிலிருந்த காலத்தில் இருந்தே) தொடங்கிய புவிசார் அரசியல் சர்ச்சைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளின் காரணமாகவும், வரும் காலங்களில் மேலும் பொருளாதாரம் மந்தமாக கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோருக்கு இடையே முக்கியமான சந்திப்பு நடைபெறவுள்ளது. அதில் இரு நாட்டு நல்லுறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, சமீப காலங்களாக சீனாவில் முதலீடு செய்து வந்த அயல்நாட்டு முதலீட்டாளர்கள் வேகமாக அங்கிருந்து தங்கள் முதலீடுகளை திரும்ப எடுத்து செல்கின்றனர். பொருளாதார ஸ்திரத்தன்மை குறைவதால், சீனாவிற்கு மாற்றாக பிற நாடுகளில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.

    கடந்த செப்டம்பர் வரையிலான 3 மாதங்களுக்கு அயல்நாட்டு முதலீடுகளில், சுமார் $12 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    சீன பொருளாதாரம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல உலக நாடுகளுடன் இணைந்திருப்பதால், அதன் சரிவு உலகளாவிய அளவில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    ×