என் மலர்tooltip icon

    உலகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இங்கிலாந்தை சேர்ந்த பிரபலம் ஆண் நண்பர் பெயரை நெற்றியில் பச்சை குத்தியுள்ளார்.
    • இது பொய் என சமூக வலைத்தளங்களில் கருத்து பரிமாற்றம்.

    ஒரு ஆண் தனது தோழி (காதலி) மீது வைத்திருக்கும் அன்பையும், ஒரு பெண் ஆண் நண்பர் (காதலன்) மீது வைத்துள்ள அன்பையும் பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தி வருவதுண்டு. சிலர் மக்கள் கூடியிருக்கும் பொது நிகழ்ச்சி நடைபெறும் இடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த இடம், சிலர் விமான பயணத்தின்போது கூட அன்பை வெளிப்படுத்துவார்கள். தற்போதைய நவீன காலத்தில் செல்போன் மெசேஜ் உள்ளிட்டவைகள் மூலமும் கவரும் வகையில் அன்பை வெளிப்படுத்துவார்கள். உடலில் பல இடங்களிலும் பச்சைக்குத்துவதும் உண்டு.

    ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது ஆண் நண்பர் (காதலன்) பெயரை நெற்றியில் பச்சைக்குத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அந்த பிரபலம் அனா ஸ்டான்ஸ்கோவ்ஸ்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக நேர்மறை விமர்சனங்களும், எதிர்மறை விமர்சனங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. ஒருவர் இது போலியானது எனத் தெரிவித்துள்ளார்.

    ஆனால், அனா ஸ்டான்ஸ்கோவ்ஸ்கி வீடியோவிற்கு கீழ் "எனது முகத்தில் ஆண் நண்பரின் பெயரை பெற்றுள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

    "இது அந்த பெண் பின்தொடர்பவர்களை அதிகரிக்கச் செய்யவும், டாட்டூ கலைஞர் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளவும் செய்யும் முயற்சி" எனத் தெரிவித்துள்ளார்.

    மற்றொருவர் "டாட்டூ மெஷினில் ஊசி இல்லை எனவும், இது பிராங்க் வீடியோ. ரத்தம் வரவில்லை. அந்த இடம் சிகப்பாக மாறவில்லை" எனத் தெரிவித்துளள்ளார்.

    இன்னொருவர் "அதை யாரும் உங்களிடம் சொல்லவில்லையா? உங்கள் காதலரின் பெயரை உங்கள் உடலில் வைத்தால். நீங்கள் பிரிந்து விடுவீர்கள், அது உண்மை" என பதிவிட்டுள்ளார்.

    • இஸ்ரேல்-ஹமாஸ் போர் துவங்கி ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது
    • உயிரிழந்தோர் எண்ணிக்கையை இஸ்ரேல் மறுத்துள்ளது

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் திடீரென நுழைந்த பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், சுமார் 1400 அப்பாவி இஸ்ரேலியர்களை கொன்று, பல பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தி, பச்சிளம் குழந்தைகளையும் மிருகத்தனமாக கொன்று, 242 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர்.

    உலகையே அதிர்ச்சியடைய வைத்த இந்த தாக்குதலில் கடும் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதியெடுத்தது. தொடர்ந்து, அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன காசா முனை பகுதி மீது வான்வழி மற்றும் தரைவழி தொடர் தாக்குதல்களை தொடங்கியது. ஹமாஸ் அமைப்பினர் ஒளிந்திருக்கும் பகுதிகளில் எல்லாம் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது.

    இன்றுடன் போர் துவங்கி ஒரு மாதமாகி விட்டது.

    நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் தாக்குதலில் 4 ஆயிரம் குழந்தைகள் உட்பட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்து விட்டதாக பாலஸ்தீன சுகாதார துறை அறிவித்தது.

    ஆனால், இந்த எண்ணிக்கையை மறுத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு.

    போருக்கு பின்னர் காசாவின் நிலை குறித்து அவர் கூறியதாவது:

    எந்த உயிரிழப்பும் துரதிர்ஷ்டவசமானதுதான். பாலஸ்தீனம் கூறும் எண்ணிக்கையில் 10 ஆயிரம் பேரில் பலர் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள். மேலும் காசா பொதுமக்களை மனித கவசங்களாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் அதிகமாகிறது.

    ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் தொடரும். போர் நிறைவடைந்ததும் காசா முனை பகுதியின் பாதுகாப்பு பொறுப்பை முழுமையாக இஸ்ரேல் எடுத்து கொள்ளும். எத்தனை நாள் வரை எனும் கால அளவை தற்போது கூற முடியாது. இந்த பொறுப்பை நாங்கள் தவிர்த்தால் மீண்டும் ஹமாஸ் பயங்கரவாதம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தலைதூக்கி விடும். அதை விட மாட்டோம்.

    தற்போது போர் நடைபெற்று வரும் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன பொதுமக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும், பணய கைதிகள் மற்றும் வெளிநாட்டினர் வெளியேறவும் போருக்கு இடையில், ஒரு மணி நேர அல்லது அரை மணி நேர சிறு சிறு இடைநிறுத்தங்களை கொடுக்கலாம். அது கூட சூழ்நிலையை நாங்கள் முற்றிலும் ஆய்வு செய்த பிறகுதான் வழங்கப்படும்.

    ஆனால், போர் நிறுத்தம் அல்லது தற்காலிக இடைநிறுத்தம் போன்ற பேச்சுக்களுக்கே இடமில்லை.

    இவ்வாறு நேதன்யாகு கூறினார்.

    • யூதர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன
    • அமெரிக்காவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் 400 சதவீதம் கூடியுள்ளது

    கடந்த அக்டோபர் 7 முதல் பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கிடையே போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளன.

    இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உட்பட மேற்கத்திய நாடுகளில் ஹமாஸ் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் வன்முறை சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர்.

    அக்டோபர் 25 அன்று நியூயார்க் நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த யூத மாணவர்களை பாலஸ்தீன ஆதரவு கும்பல், யூதர்களுக்கு எதிராக கோஷமிட்டு கொண்டே அச்சுறுத்தி தாக்க வந்ததால், அங்குள்ள நூல்நிலையத்திற்கு உள்ளே அந்த மாணவர்கள் நுழைந்து கதவை உட்புறமாக பூட்டி கொண்டு தங்கும் நிலை ஏற்பட்டது.

    அக்டோபர் 30 அன்று, ரஷியாவில் உள்ள டஜெஸ்டான் விமான நிலையத்திற்குள் திடீரென புகுந்த ஹமாஸ் ஆதரவு கும்பல் ஒன்று, இஸ்ரேலில் இருந்து வந்திறங்கிய ஒரு விமானத்தில் யூதர்கள் எவரேனும் உள்ளனரா என அனைத்து பயணிகளின் பாஸ்போர்ட்களை வைத்து தேடிய சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்ற ஒரு ஹமாஸ் ஆதரவு பேரணியில் கலந்து கொண்ட பாலஸ்தீன ஆதரவாளர்களில் ஒருவர், அப்பகுதியை சேர்ந்த 69 வயதான யூதர் ஒருவரை மெகாபோனால் (megaphone) தலையில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அந்த யூதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது போன்ற அச்சுறுத்தல்களும், வன்முறை சம்பவங்களும் புகழ் பெற்ற கொலம்பியா மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களிலும் நடைபெற்றதால் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் யூதர்கள் தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி வருவதாக கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    அக்டோபர் 7-லிருந்து அமெரிக்காவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல் நிகழ்ச்சிகள் முன்பை விட 400 சதவீதம் அதிகரித்துள்ளது.

    பிரான்ஸ் நாட்டில் யூதர்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் 1040-ஐ கடந்து விட்டன.

    இங்கிலாந்தில் 324 சதவீதம் தாக்குதல் நிகழ்ச்சிகள் முன்பை விட அதிகரித்துள்ளன. அந்நாட்டின் தலைநகர் லண்டனில் யூத பள்ளிகளும், யூத மத வழிபாட்டு தலங்களும் தற்காலிகமாக மூடப்படும் நிலையே ஏற்பட்டது.

    ஜெர்மனியில் யூத பிரார்த்தனை கூடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

    ஸ்பெயின் நாட்டில் யூத மத வழிபாட்டு தலங்களின் சுவர்களில் யூதர்களுக்கு எதிரான வாசகங்களும், படங்களும் தீற்றப்பட்டன.

    உலகம் முழுவதும் உள்ள யூதர்கள் இது போன்ற சம்பவங்களால் அச்சத்தில் வாழ்கிறார்கள். "நாங்கள் இனி எங்கு செல்வது? யாரிடம் போய் சொல்வது?" என தங்கள் கவலையை தெரிவிக்கின்றனர்.

    • மசாகோ வகாமியா 43 வருடங்கள் வங்கி துறையில் பணியாற்றி உள்ளார்.
    • மசாகோ வகாமியா தனது 60-வது வயதில் தான் கம்ப்யூட்டர் பயிற்சி பெற தொடங்கி உள்ளார்.

    புதிதாக கற்றுக்கொள்ளவும், சாதனை படைக்கவும் வயது தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் ஜப்பானை சேர்ந்த 87 வயது பெண் ஒருவர். மசாகோ வகாமியா என்ற அந்த பெண் முதியவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வீடியோ கேம் மற்றும் புதிய செல்போன் செயலிகளை அறிமுகப்படுத்தி உள்ளார்.

    இதுபற்றிய தகவல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. ஹினாடன் என்ற பெயரில் மசாகோ வகாமியா உருவாக்கி உள்ள புதிய செயலி முதியோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக பொம்மை விளையாட்டாகும்.

    மசாகோ வகாமியா 43 வருடங்கள் வங்கி துறையில் பணியாற்றி உள்ளார். அவர் தனது 60-வது வயதில் தான் கம்ப்யூட்டர் பயிற்சி பெற தொடங்கி உள்ளார். அவரை பற்றிய பதிவு இணையத்தில் வைரலாகி 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.

    • பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று
    • இதுநாள் வரை நோய்க்கான சிகிச்சைமுறையில் இது பயன்படுத்தப்பட்டு வந்தது

    உலகெங்கும் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று கேன்சர் (cancer) எனப்படும் புற்று நோய்.

    ஆண்களையும் பெண்களையும் தாக்க கூடிய புற்றுநோயை, வரும் முன் தடுக்கும் மருத்துவ முறைகள் குறித்து முன்னணி உலக நாடுகள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று.

    இங்கிலாந்தில், வருடாவருடம் சராசரியாக 47,000 பெண்கள் மார்பக புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். சுமார் 3 லட்சம் பெண்களுக்கு இந்நோய் வருவதற்கான மிதமான மற்றும் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், பல வருடங்களாக பெண்களின் மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த அனஸ்ட்ரசோல் (anastrozole) எனும் மருந்தை தற்போது நோய் தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்த இங்கிலாந்தின் மருந்து மற்றும் உடலாரோக்கிய பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (Medicines And Healthcare Products Regulatory Agency) உரிமம் வழங்கியுள்ளது.

    புற்று நோய் சிகிச்சை மருத்துவர்களும், பெண்களும் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். அனஸ்ட்ரசோல், காப்புரிமை தேவை இல்லாத மருந்து என்பதால் குறைவான விலையில் இதனை இனி பல மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்க இயலும். அனஸ்ட்ரசோல் மார்பக புற்றுநோய் வருவதை தடுப்பதில் அதிக திறன் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    விலை குறைவாக உள்ளதால் இதுவரை லட்சக்கணக்கில் ஏற்பட்டிருந்த நோய்சிகிச்சைக்கான செலவினங்களை இது குறைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தினமும் 1 மில்லிகிராம் (1 mg) அனஸ்ட்ரசோல் மாத்திரையை 5 வருடங்கள் எடுத்து கொண்ட பெண்களில் 50 சதவீதம் பேருக்கு நோய் தாக்குதல் ஏற்படவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    "அனஸ்ட்ரசோல் மருந்திற்கு நோய் தடுப்பு சிகிச்சைக்கான அனுமதி வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய்க்கு இதுநாள் வரை இது சிறப்பாக சிகிச்சை மருந்தாக இருந்து வந்தது. இனிமேல் பெண்களுக்கு இந்த நோய் வருவதை தடுக்கவும் இதனை பயன்படுத்த முடியும்" என இது குறித்து இங்கிலாந்தின் சுகாதார அமைச்சர் வில் குவின்ஸ் தெரிவித்தார்.

    • 10 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழப்பு ஏற்பட்டதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது
    • போரை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என இஸ்ரேல் அறிவித்தது

    பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக அறிவித்துள்ள இஸ்ரேல், கடந்த அக்டோபர் 7 முதல் அவர்கள் மறைந்திருக்கும் காசா பகுதியில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் 32-வது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

    இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கும் இடையேயான இந்த போரில் பாலஸ்தீன காசா பகுதியில் இருக்கும் அப்பாவி பாலஸ்தீனியர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன தரப்பு அறிவித்துள்ளது.

    உலக நாடுகள் விடுத்த போர் நிறுத்த கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்து விட்டது.

    இதற்கிடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தொலைபேசியில் பேசினார்.

    இரு நாட்டு தலைவர்களும் இந்தியா-ஈரான் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்தும் உரையாடியுள்ளனர்.

    இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு ரீதியான இந்த உரையாடலில் இப்ராஹிம் தெரிவித்திருப்பதாவது:

    மேற்கத்திய நாடுகளின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியா நடத்திய போராட்டங்களும், அணி சேரா நாடுகளை ஒருங்கிணைப்பதில் எடுத்த முயற்சிகளையும் ஈரான் இத்தருணத்தில் நினைவு கூர்கிறது. தன்னிடம் உள்ள அனைத்து திறனையும் முழுவதுமாக உபயோகித்து பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் போரை இந்தியா முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இது நடக்கும் என நாங்கள் நம்புகிறோம். காசாவில் நடப்பது அங்குள்ள மக்களுக்கு எதிரான குற்றம். போர் நீண்டு கொண்டே சென்றால் பிற நாடுகளுக்கும் பரவலாம் எனும் அச்சம் மேற்கு ஆசிய நாடுகளிடையே அதிகரித்து வருகிறது. அது நிலைமையை இன்னும் சிக்கலாக்கும். பாலஸ்தீன மக்களின் துன்பங்களை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்படும் எந்த உலகளாவிய நடவடிக்கைக்கும் ஈரான் ஆதரவளிக்கும். பாலஸ்தீன சுதந்திரத்திற்காக பாடுபடும் அமைப்புகளுக்கு தங்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராட முழு உரிமை உண்டு.

    இவ்வாறு ஈரான் அதிபர் கூறியுள்ளார்.

    முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "பாலஸ்தீன பிரச்சனையை தீர்ப்பதற்கும், மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து அங்கு கிடைப்பதை உறுதி செய்யவும், விரைவில் அமைதி திரும்பவதையும் இந்தியா விரும்புகிறது" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் தெரிவித்திருந்தார்.

    • புகைப்படங்கள் வைரலான நிலையில் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • வெப்பமயமாக்கல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

    நியூயார்க் நகர தெருக்களில் பச்சை நிறத்தில் ஓடிய தண்ணீர் குறித்த புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதில், பச்சை நிறத்தில் திரவம் போன்று தண்ணீர் ஓடுகிறது.

    சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக இதுபோன்று பச்சை நிறத்தில் திரவம் தெருவில் ஓடி இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சிகளை பார்த்த இணைய பயனர்கள் பலரும், இது வெப்பமயமாக்கல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

    மேலும் சில பயனர்கள், இவ்வாறு திரவம் தெருக்களில் ஓடுவது நிலத்தடி நீர் பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்பது போன்று பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்தார்.
    • போரை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் தொடங்கி 32 நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது வான், கடல் மற்றும் தரை வழியாக மும்முனை தாக்குதலை இஸ்ரேல் படை தீவிரப்படுத்தி உள்ளது.

    காசாவில் உள்ள மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள், தேவாலயங்கள், பொதுமக்கள் வாழ்விடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இஸ்ரேல் சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது. இந்த அதிரடி தாக்குதலில் கட்டிடங்கள் இடிந்து விழுவதோடு மட்டுமல்லாது அப்பாவி பொது மக்களும் உயிர் இழந்து வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதலால் காசா நகரமே உருக்குலைந்துவிட்டது.

    இந்த சண்டையில் காசாவில் 4,104 குழந்தைகள் உள்பட 10 ஆயிரத்து 22 பேர் இறந்து விட்டதாக ஹமாஸ் சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த போரில் அப்பாவி குழந்தைகள், பொதுமக்கள் பலியாகி வருவதால் போரை உடனே நிறுத்த வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. போரை நிறுத் தக்கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்காவும் போரை உடனே நிறுத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் நிரந்தர போர் நிறுத்தத்துக்கு பிடி கொடுக்காமல் இஸ்ரேல் பேசி வருகிறது.

    அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஆண்டனி பிளிங்கனும் 2 முறை இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசினார். ஆனாலும் இஸ்ரேல் போரை வைவிட மறுப்பு தெரிவித்து தொடர்ந்து முப்படைகளின் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் தினமும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என ஜோபைடன் இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

    மேலும் இரு தலைவர்களும் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை பாதுகாப்பாக மீட்பது குறித்தும் விவாதித்தனர். பிணைக்கைதிகளாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறும், காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்தார்.

    ஆனால் போர் நிறுத்தத்தை ஏற்க இஸ்ரேல் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இது உள்ளூர் போர் அல்ல, உலக அளவிலான போர் என்றும் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார். இதனால் போர் தொடரும் சூழ்நிலை நிலவி வருகிறது.

    போர் காரணமாக படுகாயம் அடைந்தவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் போரை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    காசாவில் உச்சக்கட்ட போர் நடந்து வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக காசா எல்லைப்பகுதிகளில் உடமைகளுடன் திரண்ட வண்ணம் உள்ளனர்.

    போரில் உயிர் இழந்தவர்களுக்காக ஜெருசேலத்தில் இஸ்ரேலியர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

    • ஞாயிற்றுக்கிழமை தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் காசாவை இரண்டாக பிரித்தது இஸ்ரேல்.
    • தரைவழி தாக்குதலை முழுமையாக செயல்படுத்த தயாராகி வருகிறது இஸ்ரேல்.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.நா. பொதுச்சபையில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர் இடைநிறுத்தம் தேவை என அழைப்பு விடுத்திருந்தார்.

    ஆனால், இரண்டையும் ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. போரை நிறுத்தினால் ஹமாஸ் அமைப்பிடம் தாங்கள் தோற்றதாகிவிடும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்திருந்தார்.

    இஸ்ரேல் தொடர் தாக்குதலுக்கு இடையே நேற்று முன்தினம் காசாவில் தகவல் தொடர்பை துண்டித்தது இஸ்ரேல். அதனைத் தொடர்ந்து காசாவை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்துள்ளது. இத்தகவலை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அத்துடன் இஸ்ரேல் தரைப்படைகள் எப்போது வேண்டுமானாலும் முழுமையாக தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறது.

    இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் 4,100-க்கும் மேற்பட்ட குழந்தைகள், 2,640 பெண்கள் அடங்குவர். இந்த தகவலை காசாவில் அதிகாரம் நடத்தி வரும் ஹமாஸின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஆக்கிரமிப்பு செய்துள்ள மேற்கு கரையில் 140-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் வன்முறை மற்றும் சோதனையின்போது கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலில் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். 242 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

    ராஃபா எல்லை வழியாக சுமார் 1,100 பேர் காசா முனையில் இருந்து வெளியேறியுள்ளனர்

    தற்போது காசாவில் மீண்டும் தகவல் தொடர்பு கிடைக்கப் பெற்றுள்ளது. பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பவர்களை உலக நாடுகள் மறந்து விடுவோ என அவர்களது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 வல்லரசு நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள்
    • சுழற்சி முறையில் சீனாவிற்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

    உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது, ஐ.நா. சபையின் 6 அங்கங்களில் ஒன்றான யு.என்.எஸ்.சி. (UNSC) எனப்படும் பாதுகாப்பு கவுன்சில்.

    1945 அக்டோபரில் உருவாக்கப்பட்ட இந்த கவுன்சிலின் மொத்த உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை, 15. இதில் சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள்.

    பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பதவி, அதன் உறுப்பு நாடுகளால் சுழற்சி முறையில் மாதம் ஒரு நாட்டிற்கு வழங்கப்படும்.

    இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் போர் புரிந்து வரும் இஸ்ரேல், உலக நாடுகளின் போர் நிறுத்த கோரிக்கையை புறக்கணித்து, தாக்குதலை மேலும் கடுமையாக்கியுள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பதவியை சீனா ஏற்று கொண்டது.

    தற்போது தீவிரமடைந்துள்ள இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் உலகளாவிய அமைதிக்கு சீனாவின் தலைமை பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    "தனது கடமையை பாதுகாப்பு கவுன்சில் செய்ய சீனா ஊக்குவிக்கும். ஒருமித்த கருத்தை உலக நாடுகளிடையே உருவாக்கவும், பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தில்லாத நிலையை கொண்டு வரவும் சீனா அனைத்து வகையிலும் முன் நிற்கும்" என இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் தலைமை பதவி குறித்து சீனாவின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் வேங் வென்பின் (Wang Wenbin) தெரிவித்தார்.

    கடைசியாக 2022 ஆகஸ்ட் மாதம் சீனா இந்த தலைமை பொறுப்பை வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • குழந்தைகளை கவர, டைனோஸர் வடிவத்தில் இவை தயாரிக்கப்படும்
    • ஒருவருக்கு மட்டும் வாயில் காயம் ஏற்பட்டதாக புகார் வந்துள்ளது

    அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் (Arkansas) மாநிலத்தை மையமாக கொண்டு இயங்குவது, குழந்தைகளுக்கான உணவு தயாரிப்பு நிறுவனமான டைஸன் ஃபுட்ஸ் (Tyson Foods). இது அசைவ உணவு தயாரிப்பில் உலகளவில் பிரபலமான பன்னாட்டு நிறுவனம்.

    இவர்களின் தயாரிப்புகளில் "ஃபன் நக்கெட்ஸ்" (Fun Nuggets) எனப்படும் சிறுவர்-சிறுமியர்களுக்கான நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளை குழந்தைகள் விரும்பி வாங்குவதுண்டு. குழந்தைகளுக்கு பிடித்தமான 'டைனோஸர்' வடிவத்தில் சிக்கன் மற்றும் பிரெட் தூள்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த தின்பண்டங்கள் அதன் தனிப்பட்ட சுவைக்காக பிரபலமானது.

    இந்நிறுவனம் சில நாட்களுக்கு முன் "2024 செப்டம்பர் 4" எனும் தேதியை காலாவதியாகும் தேதியாக குறிப்பிட்டு சுமார் 1 கிலோகிராம் (29 அவுன்ஸ்) எடையுள்ள பல்லாயிரம் பாக்கெட்டுகளை அந்நாட்டின் சுமார் 9 மாநிலங்கள் முழுவதும் கடைகளில் விற்பனைக்கு அனுப்பியிருந்தது.

    நாடு முழுவதும் இவற்றை விலைக்கு வாங்கிய பலர் அந்த பாக்கெட்டுகளில் சிறு உலோக துண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இச்செய்தி இணையத்திலும் பரவியது.

    இதையடுத்து இந்நிறுவனம் தானாகவே முன் வந்து அனைத்து கடைகளிலும் உள்ள "ஃபன் நக்கெட்ஸ்" பாக்கெட்டுகளை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்துள்ளது.

    "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களின் உடலாரோக்கியம் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம். முன்னரே இவற்றை வாங்கி வீட்டில் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அவற்றை பயன்படுத்தாமல் போட்டு விடவும். இல்லையென்றால் கடைகளில் கொடுத்து மாற்றி கொள்ளவும். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்" என அந்நிறுவனம் இது குறித்த தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்த செய்தியை அமெரிக்காவின் உணவு பாதுகாப்பு மற்றும் ஆய்வு துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த உலோக துண்டுகளால் ஒரே ஒரு வாடிக்கையாளர் மட்டுமே தனது வாயில் காயம் ஏற்பட்டதாக புகார் அளித்துள்ளதாக இந்த துறை அறிவித்திருக்கிறது.

    இந்தியாவிலும் குழந்தைகளுக்கு பாக்கெட்டில் விற்கும் தின்பண்டங்களை அதிகளவில் பெற்றோர் வாங்கி தருகின்றனர். அதனால் பெற்றோர் அவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • அதிவேகமாக வந்த கார் உணவு அருந்தி கொண்டிருந்தவர்கள் மீது மோதல்.
    • 68 வயதான டிரைவர் மதுபோதையில் காரை ஓட்டவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது டேல்ஸ்ஃபோர்டு. நகரப் பகுதியில் இருந்து வெகுதூரத்தில் உள்ள இந்த கிராமப் பகுதியான டேல்ஸ்ஃபோர்டில் பிரபல ஹோட்டல் ஒன்று உள்ளது.

    இந்த ஹோட்டலில் சலையோரமாக திறந்த வெளியில் அமர்ந்து உணவருந்தும் இடம் உள்ளது. நேற்று மாலை இந்தப் பகுதியில ஏராளமானோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.

    அப்போது திடீரென வேகமாக வந்த பி.எம்.டபிள்யூ சொகுசு கார், இந்த பகுதிக்குள் புகுந்தது. இதில் ஒரு பையன், இரண்டு ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த ஏழு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒரு இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். அப்போது, காரை ஓட்டிவந்தது 68 வயது நபர் எனத் தெரியவந்துள்ளது. அவர் மது அருந்தி கார் ஓட்டவில்லை என போலீசார் தெரிவித்தனர். போதைப்பொருள் எடுத்துக் கொண்டாரா என்பதை தெரிந்துகொள்ள அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளதாகன போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காரை வேகமாக ஓட்டி வந்ததுதான் விபத்து காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ×