என் மலர்
உலகம்
- அதிவேகமாக வந்த கார் உணவு அருந்தி கொண்டிருந்தவர்கள் மீது மோதல்.
- 68 வயதான டிரைவர் மதுபோதையில் காரை ஓட்டவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது டேல்ஸ்ஃபோர்டு. நகரப் பகுதியில் இருந்து வெகுதூரத்தில் உள்ள இந்த கிராமப் பகுதியான டேல்ஸ்ஃபோர்டில் பிரபல ஹோட்டல் ஒன்று உள்ளது.
இந்த ஹோட்டலில் சலையோரமாக திறந்த வெளியில் அமர்ந்து உணவருந்தும் இடம் உள்ளது. நேற்று மாலை இந்தப் பகுதியில ஏராளமானோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது திடீரென வேகமாக வந்த பி.எம்.டபிள்யூ சொகுசு கார், இந்த பகுதிக்குள் புகுந்தது. இதில் ஒரு பையன், இரண்டு ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த ஏழு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒரு இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். அப்போது, காரை ஓட்டிவந்தது 68 வயது நபர் எனத் தெரியவந்துள்ளது. அவர் மது அருந்தி கார் ஓட்டவில்லை என போலீசார் தெரிவித்தனர். போதைப்பொருள் எடுத்துக் கொண்டாரா என்பதை தெரிந்துகொள்ள அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளதாகன போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரை வேகமாக ஓட்டி வந்ததுதான் விபத்து காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- போர் நிறுத்தத்தை பல உலக நாடுகள் கோரி வருகின்றன
- உலகம் அக்டோபர் 7 தாக்குதலை மறக்க விட மாட்டோம் என்றார் ஹகரி
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா முனை பகுதி மீது கடந்த அக்டோபர் 7 முதல் நடத்தி வரும் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சுமார் 9770 பேருக்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார துறை அமைச்சர் தெரிவித்தார்.
பல உலக நாடுகளின் தலைவர்கள் போர் நிறுத்த கோரிக்கையை விடுத்திருந்தனர். ஆனால், இதனை இஸ்ரேல் புறக்கணித்து விட்டது.
"போர் நிறுத்தமா? அந்த வார்த்தையையே அகராதியிலிருந்து எடுத்து விடுங்கள். அக்டோபர் 7 அன்று பணயக்கைதிகளாக பிடித்து சென்றவர்களை ஹமாஸ் விடுவிக்காத வரை போர் நிறுத்தம் எனும் பேச்சிற்கே இடமில்லை. நாங்கள் வெற்றி பெறும் வரை போரை தொடர்ந்து நடத்தியாக வேண்டும்; வேறு வழியில்லை" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உறுதிபட தெரிவித்திருந்தார்.
இப்பின்னணியில் இஸ்ரேலிய ராணுவ படைகளின் (IDF) செய்தித்தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகரி, தற்போதைய நிலவரம் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
முக்கியமான இடங்களில் தாக்குதல்களை தொடர்கிறோம். நாங்கள் காசா முனை பகுதியை முற்றிலுமாக சுற்றி வளைத்து விட்டோம். அதனை இரண்டாக பிரித்து விட்டோம். இப்போது காசா, வடக்கு காசா மற்றும் தெற்கு காசா என இரண்டாகி விட்டது. வட காசா மீது எந்நேரமும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளோம். கடற்கரையையொட்டி உள்ள பகுதிகளை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டோம். பயங்கரவாத அமைப்பினருக்கு சொந்தமான பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்கள், மேலே உள்ள தளங்கள், தளவாடங்கள் ஆகியவை மீதான தாக்குதல் தொடர்கிறது. அக்டோபர் 7 அன்று எங்களுக்கு நடந்ததை உலகம் மறக்க விட மாட்டோம்.
இவ்வாறு ஹகரி தெரிவித்தார்.
- அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் தலைநகர் காத்மாண்டுக்கு அழைத்து வரப்படுவர் என்று மூத்த அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
- நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய விமானப் படையின் ராணுவ விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
காத்மாண்டு:
நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் கடந்த 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. இதுவரை 157 பேர் உயிரிழந்து உள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இரு மாவட்டங்களிலும் பெரும்பாலான வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளன.
நிலநடுக்கம் நேரிட்ட பகுதிகளில் இதுவரை 159 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. இதனால் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் வீடு, உடைமைகளை இழந்து திறந்த வெளியில் பரிதவிக்கின்றனர். நேபாளத்தில் குளிர்காலம் தொடங்கியுள்ளது. கடும் குளிரை பொருட்படுத்தாமல் கடந்த சனிக்கிழமை ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்ட மக்கள் திறந்தவெளியில் தூங்கினர்.
வீடுகளை இழந்த மக்களுக்காக நேபாள அரசு சார்பில் ஆங்காங்கே தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் இவை போதுமானதாக இல்லை. இதுதொடர்பாக ஜாஜர்கோட் மாவட்டம் பெரி பகுதியைச் சேர்ந்த ஊர்மிளா ராவத் கூறும் போது, "நிலநடுக்கத்தால் எங்களது குடும்பத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். வீடு, உடைமைகளை முழுமையாக இழந்து விட்டேன். இப்போது ஆதரவின்றி தெருவில் நிற்கிறேன். தூங்குவதற்குகூட இடமில்லை" என்றார்.
நேபாள பிரதமர் பிரசண்டா தலைமையில் நேற்று அமைச்சரவையின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. கட்டிட இடிபாடுகளில் இருந்து கடைசி நபர் மீட்கப்படும் வரை மீட்புப் பணி தொடரும் என்று பிரதமர் பிரசண்டா உறுதிபடத் தெரிவித்தார்.
நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் படுகாயம் அடைந்த அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படும். அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் தலைநகர் காத்மாண்டுக்கு அழைத்து வரப்படுவர் என்று மூத்த அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
காத்மாண்டுவில் இருந்து ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்டங்களுக்கு இலவச பஸ் சேவைகள் இயக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு இலவசமாக தொலைத்தொடர்பு சேவையும் வழங்கப்படுகிறது. நேபாள துணைப் பிரதமர் நாராயண் நேற்று நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தார்பாலின், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை அவர் வழங்கினார்.
நேபாள தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரேகா சர்மா, காத்மண்டுவில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உணவு தானியங்கள், மருந்து பொருட்கள், நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிவாரண உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. நட்பு நாடுகள் உட்பட சர்வதேச நாடுகளின் நிவாரண உதவிகளை ஏற்றுக்கொள்ள நேபாள அரசு முடிவு செய்துள்ளது'' என்றார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய விமானப் படையின் ராணுவ விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை பிரதமரின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கையின் கீழ் முதல் நபராக இந்தியா அனுப்பி யது' எனக் குறிப்பிட்டாா்.
நிவாரணப் பொருட்களை நேபாள அதிகாரிகளிடம் நேபாளத்துக்கான இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா வழங்கினாா்.
- கோல்ட் எஃப்எம் எனும் வானொலியில் ஜுவன் பணியாற்றி வந்தார்
- பலவந்தமாக உள்ளே நுழைந்தவர்களில் ஒருவன் ஜுவனை சுட்டான்
பிலிப்பைன்ஸ் நாட்டின் பத்திரிக்கையாளராகவும், வானொலி ஒலிபரப்பாளராகவும் இருந்தவர் 57 வயதான ஜுவன் ஜுமலோன். டிஜேவாக (DJ) ஜுவன், "டிஜே ஜானி வாக்கர்" எனும் புனைப்பெயரில் புகழ் பெற்றிருந்தார்.
ஜுவன், மிசாமிஸ் ஆக்ஸிடென்டல் (Misamis Occidental) பகுதியில் உள்ள கோல்ட் எஃப் எம் 94.7 (Gold FM 94.7) எனும் வானொலி நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இன்று காலை சுமார் 05:30 மணியளவில் வானொலி நிலையத்தில் உள்ள ஸ்டூடியோவில் நிகழ்ச்சியை ஒலிபரப்பி, டிஜேவாக நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த நிலையத்திற்கு இருவர் அவரை தேடி வந்தனர். இரும்பு கதவுகளை தள்ளி விட்டு கொண்டு உள்ளே நுழைந்த அவர்கள் ஜுவன் இருந்த ஒலிபரப்பு அறைக்குள் பலவந்தமாக நுழைந்தனர்.
அவர்களில் ஒருவன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஜுவனை ஒரு முறை சுட்டான்; மற்றொருவன் வேறு யாரும் வருகின்றனரா என பார்த்து கொண்டிருந்தான். அங்கிருந்து புறப்படும் போது அவன், ஜுவன் அணிந்திருந்த நெக்லெஸையும் கழட்டி கொண்டு சென்றான்.
அங்கிருந்து உடனடியாக ஜுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த கேமிராவில் பதிவான காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
அந்நாட்டு பத்திரிக்கையாளர்கள் சங்கம் இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினண்டு மார்கோஸ் ஜூனியர், தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
1986லிருந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்கும் 199-ஆவது பத்திரிக்கையாளர் கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
- இருவரில் ஒருவர் மார்பில் குண்டு பாய்ந்து இறந்தார்.
- தெற்கே 22 வயதான பாலஸ்தீனியர் ஒருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் வன்முறை வெடித்ததால், மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகளால் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்குக் கரையைச் சுற்றியுள்ள இஸ்ரேலிய சுவரால் பிரிக்கப்பட்ட இணைக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் புறநகர்ப் பகுதியான அபு டிஸ் மீது "இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் நடத்திய தாக்குதலில்" 22 மற்றும் 20 வயதுடைய இருவர் கொல்லப்பட்டதாக ரமல்லாவை தளமாகக் கொண்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருவரில் ஒருவர் மார்பில் குண்டு பாய்ந்து இறந்தார். மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர்".
மேலும், தெற்கே 22 வயதான பாலஸ்தீனியர் ஒருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
- அகதிகள் முகாம் மீதான தாக்குதலுக்கு ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
- காசாவில் உள்ள அல்-மகாசி அகதிகள் முகாம் மீது நேற்று இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
காசா:
பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதி மீது இஸ்ரே லின் போர் தாக்குதல் இன்று 30-வது நாளாக நீடித்து வருகிறது.
காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல் காசா மீது வான், கடல், தரை என மும்முனை தாக்குதல் நடத்துகிறது. இதில் ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. குழந்தைகள், பெண்கள் உள்பட 9,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்தில் காசாவில் உள்ள மிகப்பெரிய ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 195 பேர் பலியானார்கள். ஹமாஸ் அமைப்பு முக்கிய தளபதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இந்த தாக்குதலுக்கு ஐ.நா. மற்றும் எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், காசாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது. மத்திய காசாவில் உள்ள அல்-மகாசி அகதிகள் முகாம் மீது நேற்று இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. முகாம் மீது குண்டுகள் வீசப்பட்டதில் அங்கிருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த தாக்குதலில் அகதிகள் முகாமில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே அல்-மகாசி அகதிகள் மீதான இஸ்ரேல் தாக்குதலில் 51 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்றும், பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் உயிரிழந்தனர் என்றும் பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் 2 குடியிருப்புகள் இடிந்து விழுந்ததாகவும் தெரிவித்தது.
இதுதொடர்பாக ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பாலஸ்தீனிய மக்கள் வீடுகள் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள் என்று தெரிவித்துள்ளது.
காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. வடக்கு காசாவுக்குள் புகுந்துள்ள இஸ்ரேல் தரைப்படை, காசா சிட்டியை சுற்றிவளைத்து முன்னேறி வருகிறது. அவர்களுடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டு வருகிறார்கள்.
இருதரப்பினர் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. வடக்கு காசாவில் தொடர்ந்து குண்டு வீசப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பலர் அங்கிருந்து தப்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இஸ்ரேல் போர் விதியை மீறி பொதுமக்கள் வசிக்கும் பகுதி, பள்ளி, மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்று பாலஸ்தீனம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அங்கு ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பலியானவர்கள் உடல்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் அதிகரித்து வருவதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காசாவில் உள்ள பொதுமக்கள் வெளியேற 4 மணி நேரம் அவகாசம் வழங்கப்படுகிறது என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சலா அல்-தீன் தெருவை காசாவில் உள்ள மக்கள் வெளியேற்றுவதற்கான பாதையாக பயன்படுத்தலாம். அங்கு 4 மணி நேரம் தாக்குதல் நடத்தப்படாது பொதுமக்கள் தெற்கு நோக்கிச் செல்லுங்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
- அனைவரையும் நிற்க வைத்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது
- அன்னாலினா மென்மையாக ராட்மேனின் அத்துமீறலை தவிர்த்தார்
ஜெர்மனியின் தலைநகரமான பெர்லின் நகரில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அமைச்சர்களுக்கான சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில் பல ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
65 வயதான குரோஷியா நாட்டை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர் கோர்டன் க்ரிலிக்-ராட்மேன் (Gordan Grlic-Radman) இச்சந்திப்பில் பங்கு பெற்றார். அப்போது அனைத்து அமைச்சர்களும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்து கொள்ளும் சம்பிரதாய நிகழ்வு நடைபெற்றது. ஜெர்மனியின் வெளியுறவு துறை அமைச்சர் அன்னாலினா பேர்பாக் (Annalena Baerbock) அந்த நிகழ்வில் கலந்து கொண்டு அனைவருடன் குழுவில் நின்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக அன்னாலினா அருகில் நின்று கொண்டிருந்த ராட்மேன், அன்னாலினாவை கன்னத்தில் முத்தமிட முற்பட்டார். அன்னாலினா மென்மையாக ராட்மேனின் இந்த செய்கையை தவிர்த்தார்.
பலரையும் இந்த செயல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பாக பேசப்பட்டது.
குரோஷியா நாட்டின் பெண்கள் உரிமை ஆர்வலர் ராடா போரிக், "நெருக்கங்களை அனுமதிக்கும் உறவுகளுக்கு இடையேதான் இது போன்ற செய்கைகளை வெளிப்படுத்த வேண்டும். இந்த இருவருக்கும் இது போன்ற உறவு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய அநாகரீகமான செயல்" என விமர்சித்துள்ளார்.
முன்னாள் குரோஷியா நாட்டு பிரதமர் ஜட்ரன்கா கோஸோர் (Jadranka Kosor), "வலுக்கட்டாயமாக பெண்களை முத்தமிடுவதும் வன்முறைதானே?" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ராட்மேனை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், இது குறித்து ராட்மேன் கருத்து தெரிவிக்கும் போது,"இதில் என்ன பிரச்சனை என எனக்கு தெரியவில்லை. ஒரு சக பணியாளரை சந்தித்த மகிழ்ச்சியை மனிதாபமான அணுகுமுறையில் வெளிப்படுத்தினேன். இந்த சந்திப்பின் போது இவ்வாறு நடந்து கொண்டது பொருத்தமற்ற தருணமாக சிலருக்கு தோன்றலாம். அவ்வாறு நினைப்பவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்" என தெரிவித்தார்.
தற்போது வரை இது குறித்து அன்னாலினா எந்த கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- அன்றைய தினம் அனைத்து ஊழியர்களும் தங்களது வாகனங்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.
- துபாயின் ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவை பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் உள்ளது.
துபாய்:
துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொது போக்குவரத்து தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 14-வது ஆண்டாக கடந்த 1-ந்தேதி 'உங்கள் வழியில் விளையாட்டுக்கள்' என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட்டது.
இதே நாளில் சாலை மற்றும் போக்குவரத்து தொடங்கிய 18-வது ஆண்டு விழா கொண்டாட்டமும் நடந்தது. துபாயில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் பஸ், மெட்ரோ ரெயில், டிராம், படகு, டாக்சி உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்ல முடிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொது போக்குவரத்து தினத்துக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. அன்றைய தினம் அனைத்து ஊழியர்களும் தங்களது வாகனங்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக கார்பன் உமிழ்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் தொடர்பான பாதிப்புகள் குறைய உதவியாக இருக்கிறது. மேலும் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் பொது போக்குவரத்து சேவையை அதிக முறை பயன்படுத்திய தலா 3 பேர் பரிசுகள் வழங்கி கவுரவிக்க தேர்வு செய்யப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 8 ஆயிரம் முறை பயணம் செய்த டெர்ரன் பாடியா முதல் பரிசையும், 7 ஆயிரம் முறை பயணம் செய்த சலேம் அல் சமகி 2-ம் இடத்தையும், 6 ஆயிரத்து 750 முறை பயணம் செய்த முகம்மது அப்தெல் காதர் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
பொது பிரிவில் 15 ஆயிரத்து 900 முறை பயணம் செய்த முகம்மது அபுபக்கர் முதல் பரிசையும், 14 ஆயிரத்து 422 முறை பயணம் செய்த முகம்மது அகமது ஜதா 2-ம் பரிசையும், 13 ஆயிரத்து 900 முறை பயணம் செய்த சிராஜ் அல் தின் அப்தெல் காதர் 3-வது பரிசையும் பெற்றனர். முதல் பரிசு பெற்றவர்களுக்கு 10 லட்சம் நோல் பாய்ண்டுகளும், 2-வது பரிசு பெற்றவர்களுக்கு 7 லட்சம் நோல் பாய்ண்டுகளும், 3-வது பரிசு பெற்றவர்களுக்கு 5 லட்சம் நோல் பாய்ண்டுகளும் வழங்கப்பட்டது.
அவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் வகையில் நோல் பாய்ண்டுகள் வழங்கப்பட்டது. அவர்கள் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் ஹீரோக்கள் என அழைக்கப்பட்டனர்.
பரிசுகளை துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் பொது இயக்குனர் மத்தார் அல் தயார் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
துபாயில் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பொது போக்குவரத்து சேவையை எளிதில் பயன்படுத்தும் வகையில் சிறப்பான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
துபாயின் ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவை பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் கார்பன் உமிழ்தலை தடுக்கவும் உறுதுணையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஹாம்பர்க் விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் வானை நோக்கி 2 முறை சுட்டார்.
- பயணிகள் அவர்களின் உறவினர்கள் என அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
பெர்லின்:
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென காரில் வந்துள்ளார். கையில் துப்பாக்கியுடன் காணப்பட்ட அவர், வானை நோக்கி 2 முறை சுட்டார். பயணிகள் அவர்களின் உறவினர்கள் என அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
தகவலறிந்ததும் போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாகச் சென்றனர்.
விசாரணையில், பாதுகாப்பு பகுதியை உடைத்து கொண்டு அந்த வாகனம் சென்றதும், காரில் 2 குழந்தைகள் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, விமான சேவை நிறுத்தப்பட்டதுடன், அனைத்து முனையங்களிலும் உள்ள நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும் காயம் அடையவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தும்முன் அவருடைய மனைவி போலீசை தொடர்பு கொண்டு, அந்த நபர் 2 குழந்தைகளையும் கடத்திக்கொண்டு செல்கிறார் என தெரிவித்துள்ளார் . தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- இஸ்ரேல் படைகள் காசாவில் ஹமாஸ் அமைப்பினருடன் சண்டையிட்டு வருகின்றன.
- ஹமாஸ் காசா தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது.
டெல் அவிவ்:
இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட், கடந்த இரு நாட்களில் வடக்கு எல்லை மற்றும் தெற்கில் சுற்றுப்பயணம் செய்தார்.
அதன்பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
எவ்வளவு காலம் எடுத்தாலும் வெற்றி பெறும் வரை போராட படைகள் தயாராக உள்ளோம் என ரிசர்வ் படை வீரர்கள் என்னிடம் கூறினர்.
ஒரு வருடம் எடுத்துக் கொண்டாலும், இஸ்ரேல் தன் பணியை கண்டிப்பாக முடித்துவிடும்.
எல்லாவற்றையும் செய்யத் தயாராக இருக்கும் போராளிகள் இங்கு உள்ளனர். இந்த உறுதியானது இஸ்ரேலின் முழு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது.
தெற்கு மற்றும் வடக்கில் இருந்து காசா நகரைத் தாக்கி நகர்ப்புறங்களுக்குள் நுழைந்துள்ளனர்.
இஸ்ரேலியப் படைகள் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன. ஹமாஸ் காசா தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம்.
இஸ்ரேல் ராணுவம் சுரங்கப் பாதைகளில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வருகிறது. மேலும் பதுங்கு குழிகள், சுரங்கங்கள் மற்றும் பலவற்றை அழித்து வருகிறது என்று தெரிவித்தார்.
- பல இடங்களில நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட இடத்தை நெருங்க முடியவில்லை என்று அதிகாரிகள் தகவல்.
- மின்சாரம் இல்லாததால் மீட்புப்பணியில தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 69 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க புவியியல் மையம், நிலடுக்கம் முதற்கட்ட அளவில் 5.6 ரிக்டர் பதிவானதாகவும், 11 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அதன்பின் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் நிலநடுக்கம் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி தேசிய மையம், நேபாளம் தலைநகர் காத்மாண்டில் இருந்து 250 மைல் தூரத்தில் உள்ள ஜாஜர்கோட், நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது.
ருகும் மாவட்டத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. காயம் அடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜாகர்கோட் மாவட்டத்தில் 34 பேர் உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்னர்.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் மீட்புப்பணியில தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பல இடங்களில நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட இடத்தை நெருங்க முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேபாளத்தில் 89 பெண்கள் உள்பட 157 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 190 பேர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- எர்டோகன் தலைமையில் துருக்கி, ஹமாஸ் ஆதரவு நிலையை எடுத்துள்ளது
- 1967ல் வகுக்கப்பட்ட எல்லைகளே அங்கு இருக்க வேண்டும் என்றார் எர்டோகன்
தென்கிழக்கு ஐரோப்பாவிற்கும் மேற்கு ஆசியாவிற்கும் இடையே அமைந்துள்ள அரபு நாடு துருக்கி (Turkey). இதன் தலைநகரம் அங்காரா.
துருக்கியின் அதிபராக ரிசெப் டாய்யிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) 2014லிருந்து பதவியில் உள்ளார். தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் அமைப்பினரை ஆதரிப்பவர் எர்டோகன்.
நேற்று இந்த போர் குறித்து அவர் தெரிவித்ததாவது:
காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறோம். இந்த போர் முடிந்ததும் காசாவில் அமைதியையும், அது ஒரு சுதந்திர பாலஸ்தீனதின் ஒரு பகுதியாகவும் இருப்பதை பார்க்க விரும்புகிறோம். கிழக்கு ஜெருசலேம் நகரை தலைநகராக கொண்டு 1967ல் வகுக்கப்பட்ட எல்லைகளே அங்கு இருக்க வேண்டும். பாலஸ்தீனர்களின் வாழ்வை இருள செய்யும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இது குறித்த பேச்சு வார்த்தைகளில் துருக்கி ஈடுபட்டாலும், நேதன்யாகுவை ஆதரிக்க போவதில்லை. இஸ்ரேல் நடத்திய போர் குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் இஸ்ரேலை பொறுப்பாக்குவோம். இஸ்ரேலை ஆதரித்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் எங்கள் நம்பிக்கையை இழந்து விட்டது.
இவ்வாறு எர்டோகன் கூறினார்.
அக்டோபர் 7-ஆம் தேதியிலிருந்து காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 3,826 குழந்தைகள் உட்பட 9,277 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார துறை அறிவித்துள்ளது.






