search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nepal earthquake"

    • அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் தலைநகர் காத்மாண்டுக்கு அழைத்து வரப்படுவர் என்று மூத்த அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
    • நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய விமானப் படையின் ராணுவ விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

    காத்மாண்டு:

    நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் கடந்த 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இதில் ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. இதுவரை 157 பேர் உயிரிழந்து உள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இரு மாவட்டங்களிலும் பெரும்பாலான வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளன.

    நிலநடுக்கம் நேரிட்ட பகுதிகளில் இதுவரை 159 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. இதனால் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் வீடு, உடைமைகளை இழந்து திறந்த வெளியில் பரிதவிக்கின்றனர். நேபாளத்தில் குளிர்காலம் தொடங்கியுள்ளது. கடும் குளிரை பொருட்படுத்தாமல் கடந்த சனிக்கிழமை ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்ட மக்கள் திறந்தவெளியில் தூங்கினர்.

    வீடுகளை இழந்த மக்களுக்காக நேபாள அரசு சார்பில் ஆங்காங்கே தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் இவை போதுமானதாக இல்லை. இதுதொடர்பாக ஜாஜர்கோட் மாவட்டம் பெரி பகுதியைச் சேர்ந்த ஊர்மிளா ராவத் கூறும் போது, "நிலநடுக்கத்தால் எங்களது குடும்பத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். வீடு, உடைமைகளை முழுமையாக இழந்து விட்டேன். இப்போது ஆதரவின்றி தெருவில் நிற்கிறேன். தூங்குவதற்குகூட இடமில்லை" என்றார்.

    நேபாள பிரதமர் பிரசண்டா தலைமையில் நேற்று அமைச்சரவையின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. கட்டிட இடிபாடுகளில் இருந்து கடைசி நபர் மீட்கப்படும் வரை மீட்புப் பணி தொடரும் என்று பிரதமர் பிரசண்டா உறுதிபடத் தெரிவித்தார்.

    நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் படுகாயம் அடைந்த அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படும். அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் தலைநகர் காத்மாண்டுக்கு அழைத்து வரப்படுவர் என்று மூத்த அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    காத்மாண்டுவில் இருந்து ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்டங்களுக்கு இலவச பஸ் சேவைகள் இயக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு இலவசமாக தொலைத்தொடர்பு சேவையும் வழங்கப்படுகிறது. நேபாள துணைப் பிரதமர் நாராயண் நேற்று நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தார்பாலின், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை அவர் வழங்கினார்.

    நேபாள தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரேகா சர்மா, காத்மண்டுவில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உணவு தானியங்கள், மருந்து பொருட்கள், நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிவாரண உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. நட்பு நாடுகள் உட்பட சர்வதேச நாடுகளின் நிவாரண உதவிகளை ஏற்றுக்கொள்ள நேபாள அரசு முடிவு செய்துள்ளது'' என்றார்.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய விமானப் படையின் ராணுவ விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை பிரதமரின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கையின் கீழ் முதல் நபராக இந்தியா அனுப்பி யது' எனக் குறிப்பிட்டாா்.

    நிவாரணப் பொருட்களை நேபாள அதிகாரிகளிடம் நேபாளத்துக்கான இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா வழங்கினாா்.

    • நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன.
    • நேபாள நாட்டு அதிகாரிகளுடன் இந்திய நாட்டு அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

    புதுடெல்லி:

    நேபாளம் நாட்டில் வடமேற்கு பகுதியில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் உள்ள லமிதண்டா என்ற பகுதியை மையமாகக் கொண்டு நேற்று இரவு 11.40 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது

    அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.4 அலகுகளாக பதிவாகி இருந்தது.

    லமிதண்டா நகரின் மையப் பகுதியில் பூமிக்கு கீழ் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் புள்ளி இருந்தது. நிலநடுக்கம் பூமி மேல் பகுதியில் உருவாகி இருந்ததால் அந்த நகரமே குலுங்கியது. இதனால் கட்டிடங்கள் அங்குமிங்குமாக ஆடி நொறுங்கின.

    இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டு வீடுகள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்தபடி எழுந்து வெளியே ஓடினார்கள். அந்த நிலநடுக்கம் நேபாளத்தின் வடமேற்கு பகுதியை முழுமையாக குலுக்கியது.

    நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தன. லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் வீடு இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். நள்ளிரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்ததால் எங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிவதில் நேபாள அரசு திணறியது.

    நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. கட்டிட இடிபாடுகளை அகற்றி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 132 பேர் பலியாகி விட்டனர்.

    200-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஜாஜர்கோட் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தின் அருகில் உள்ள ரூகும் மாவட்டத்திலும் அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

    நிலநடுக்கத்தின் தாக்கம் நேபாள நாட்டின் தலைநகர் காட்மாண்டிலும் உணரப்பட்டது. அங்குள்ள மக்களும் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களுக்கு வந்தனர். இன்று காலை வரை அவர்கள் வீடுகளுக்குள் செல்லாமல் விடிய விடிய தெருவிலேயே நின்றது பரிதாபமாக இருந்தது.

    இன்று (சனிக்கிழமை) காலை நேபாள பிரதமர் புஷ்பகமல் பிரசண்டா பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்றார். அவருடன் மருத்துவ குழுவும் சென்று உள்ளது. மீட்பு பணிகளில் நேபாள நாட்டு ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

    நேபாள நாட்டு அதிகாரிகளுடன் இந்திய நாட்டு அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசினார்கள். எந்த உதவியும் செய்ய தயார் என்று தெரிவித்தனர். பிரதமர் மோடியும் நேபாள நாட்டு பிரதமருடன் பேசினார்.

    நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் ஏராளமான ஊர்களில் கட்டிடங்கள் இடிந்துள்ளன. இன்னமும் அங்கு மீட்பு பணிகள் தொடங்கவில்லை. அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றிய பிறகு தான் உயிரிழப்பு தெரியவரும்.

    நிறைய கட்டிடங்கள் இடிந்து இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. நேபாளத்தின் வடமேற்கு பகுதிகளில் பெரும்பாலான சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் மீட்பு பணிகளில் கடும் இடையூறு ஏற்பட்டு உள்ளது.

    நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு அடுத்தடுத்து 4 தடவை நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் நேபாள மக்கள் பீதியில் உள்ளனர்.

    நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் உணரப்பட்டது. இந்த 4 மாநிலங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் டெல்லி, பாட்னா, வாரணாசி உள்பட பல நகரங்களில் மக்கள் நேற்றிரவு அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

    விடிய விடிய அவர்கள் தெருக்களில் தங்கியிருந்தனர். வடமாநில மக்கள் பெரும்பாலான அளவில் பீதியுடன் தவிப்புக்குள்ளானார்கள். இன்று காலைதான் வட மாநிலங்களில் இயல்பு நிலை திரும்பியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேபாள நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
    • நிலநடுக்கத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு 6.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், நேபாள நிலநடுக்கத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், நேபாள மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது. அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. எங்களுடைய எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    ×