என் மலர்tooltip icon

    கால்பந்து

    • போக்பாவின் இடைநீக்கம் அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
    • சீரி ஏ லீக்கின் முக்கிய அணிகளில் ஒன்றான ஜுவென்டஸுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று யுவென்டஸ் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் சீரி ஏ தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில், பால் போக்பா உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது கண்டறியப்பட்டது.

    அந்தப் போட்டியில் அவர் விளையாடவே இல்லை. மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்பட்டு இருந்தார். அப்படி இருந்தும் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் சிக்கினார். இதனால் கால்பந்தில் பங்கேற்பதில் இருந்து அவருக்கு நான்கு ஆண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த மாதம் தனது 31-வது பிறந்தநாளைக் கொண்டாடும் போக்பா, ஆடுகளத்தில் மீண்டும் விளையாட முடியாமல், கிட்டத்தட்ட 35 வயது வரை ஓரங்கட்டப்படும் ஒரு நிலையை எதிர்கொள்கிறார். போக்பாவின் இடைநீக்கம் அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், சீரி ஏ லீக்கின் முக்கிய அணிகளில் ஒன்றான ஜுவென்டஸுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

    இவர் 2018-ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்ற வீரர் ஆவார்.

    • எர்லிங் ஹாலண்ட் குறித்த வீடியோ ஒன்றை மான்செஸ்டர் சிட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
    • அதில் நடிகர் ரஜினிகாந்தின் 'சூப்பர் ஸ்டார்' டைட்டில் கார்டை வைத்து, தனது அணியின் நட்சத்திர வீரரான ஹாலண்டுக்கு வீடியோ தயார் செய்துள்ளது.

    இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து கிளப் மான்செஸ்டர் சிட்டி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எர்லிங் ஹாலண்ட் குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தது. அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்தது.

    அதில் நடிகர் ரஜினிகாந்தின் 'சூப்பர் ஸ்டார்' டைட்டில் கார்டை வைத்து, தனது அணியின் நட்சத்திர வீரரான ஹாலண்டுக்கு வீடியோ தயார் செய்துள்ளது. ஹாலண்ட் விளையாடி போட்டியின் ஹைலைட்ஸ் வீடியோவை எடிட் செய்து ஜெயிலர் படத்தின், 'Hukum' பாடலை வைத்து ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டிருந்தது. இது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த ரீல் மான்செஸ்டர் சிட்டியின் பரம எதிரியான மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களை ஈர்த்தது. மேலும் உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள சர்வதேச வீரருக்கு ரஜினிகாந்த் படத்தில் இடம் பெற்ற பாடல் பயன்படுத்தப் பட்டிருப்பது அவரது ரசிகர்களையும் கால்பந்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

    • இந்தோனேசியாவில் கால்பந்து விளையாட்டின்போது வீரரை மின்னல் தாக்குவது என்பது முதன்முறையல்ல.
    • கடந்த 2023-ம் ஆண்டு 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கோப்பைக்காக கிழக்கு ஜாவாவில் நடந்த போட்டியின்போது, இளம் வீரர் ஒருவரை மின்னல் தாக்கியது.

    மேற்கு ஜாவா:

    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் பாந்துங் பகுதியில் சிலிவாங்கி ஸ்டேடியத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி ஒன்று நடந்தது.

    அப்போது, விளையாட்டின் நடுவே சுபாங் நகரை சேர்ந்த செப்டேன் ரஹார்ஜா (வயது 35) என்ற வீரர் மீது மின்னல் ஒன்று கடுமையாக தாக்கியது. எனினும், அப்போது அவர் மூச்சு விட்டபடியே காணப்பட்டார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார்.

    இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்துள்ளது. அதில், செப்டேனை சரியாக மின்னல் தாக்கும் காட்சிகளும், உடனே அவர் விளையாட்டு களத்தில் சுருண்டு விழும் காட்சிகளும் உள்ளன.

    அந்த மின்னல் ஸ்டேடியத்திற்கு 300 மீட்டர் உயரத்தில் இருந்தே தாக்கியுள்ளது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் பகுப்பாய்வு தெரிவித்து உள்ளது.

    இந்தோனேசியாவில் கால்பந்து விளையாட்டின்போது வீரரை மின்னல் தாக்குவது என்பது முதன்முறையல்ல. கடந்த 2023-ம் ஆண்டு 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கோப்பைக்காக கிழக்கு ஜாவாவில் நடந்த போட்டியின்போது, இளம் வீரர் ஒருவரை மின்னல் தாக்கியது.

    இதனால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை நடந்த 20 நிமிடங்களுக்கு பின்னர் சுயநினைவுக்கு திரும்பினார்.

    • அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகியவை உலகக் கோப்பை போட்டிகளை நடத்துகின்றன.
    • மெக்சிகோவில் ஜூன் 11-ந்தேதி முதல் போட்டி நடைபெறும் என பிபா அறிவித்துள்ளது.

    நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிபா நடத்தும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும். அதன்படி 2026-ம் ஆண்டு அடுத்த உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பையை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் நடத்துகின்றன.

    இந்த நிலையில் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நியூஜெர்சியில் இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இறுதிப் போட்டியை நடத்த நியூயார்க், டெக்சாஸ் மாநிலம் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் நியூயார்க் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் 48 அணிகள் பங்கேற்கின்றன.

    மெக்சிகோவில் ஜூன் 11-ந்தேதி உலகக் கோப்பை தொடர் தொடங்கி, ஜூலை 19-ந்தேதி நியூயார்க்கில் முடிவடைகிறது. மொத்தம் 16 நகரங்களில் போட்டி நடத்தப்படுகிறது.

    • முதலில் அந்த பெண்ணை யாரென்று தெரியாது என கூறிய டேனி, பின்னர் இளம்பெண்ணின் சம்மதத்துடனேயே பாலியல் உறவு நடந்தது என கூறினார்.
    • பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டேனி இழப்பீடாக ரூ.1.34 கோடி வழங்க வேண்டும் என்றும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோர்ட்டில், அரசு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.

    பார்சிலோனா:

    பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்து வீரர் டேனி ஆல்விஸ் (வயது 40). பார்சிலோனா அணியில் விளையாடி 3 சாம்பியன்ஸ் லீக் மற்றும் பிரேசில் அணியில் விளையாடி 2 கோபா அமெரிக்கா கோப்பைகள் உள்பட 42 கோப்பைகளை அவர் வென்றிருக்கிறார். 2022-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியின்போது, பிரேசிலுக்காக விளையாடிய வயது முதிர்ந்த வீரராக அறியப்பட்டவர்.

    இவருக்கு எதிராக இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் ஒன்றை அளித்திருக்கிறார். கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி பார்சிலோனாவில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இருந்தபோது, கழிவறையில் வைத்து கட்டாயப்படுத்தி இளம்பெண்ணை அவர் பலாத்காரம் செய்துள்ளார்.

    கத்தாரில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் பிரேசிலுக்காக விளையாடிய பின்னர் விடுமுறையை கழிக்க அவர் பார்சிலோனாவுக்கு சென்றிருக்கிறார்.

    அப்போது, இளம்பெண் மற்றும் அவருடைய நண்பருக்கு மதுபானம் வழங்கிய டேனி, பின்னர் வேறொரு இடத்திற்கு இளம்பெண்ணை அழைத்து சென்றிருக்கிறார்.

    இதுபற்றிய தொலைக்காட்சி பேட்டி ஒன்றின்போது, முதலில் அந்த பெண்ணை யாரென்று தெரியாது என கூறிய டேனி, பின்னர் இளம்பெண்ணின் சம்மதத்துடனேயே பாலியல் உறவு நடந்தது என கூறினார்.

    இந்த வழக்கின்போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டேனி இழப்பீடாக ரூ.1.34 கோடி வழங்க வேண்டும் என்றும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோர்ட்டில், அரசு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.

    ஸ்பெயினில் குற்ற செயலை ஒப்பு கொண்டால் குறைந்த அளவிலான தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனினும், அதுபோன்ற ஒப்பந்தத்திற்கு அந்த இளம்பெண் முன்வரவில்லை என்று அவருடைய வழக்கறிஞர் கடந்த நவம்பரில் கூறினார். ஆனால், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்றும் அந்த இளம்பெண் கூறியிருக்கிறார்.

    இந்த வழக்கு வருகிற திங்கட் கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்ட டேனி, அதுமுதல் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

    • சிறந்த கோல் கீப்பர் விருதை மான்செஸ்டர் சிட்டியின் எடர்சன் வென்றார்.
    • சிறந்த வீராங்கனை விருதை ஸ்பானிஷின் அயிட்டனா பொன்மதி வென்றார்.

    லண்டனில் 2023-ம் ஆண்டுக்கான பிபா-வின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சிறந்த வீரர் விருதை பெறுபவர் யார் என்பதில் மெஸ்ஸிக்கும், எர்லிங் ஹாலண்ட்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    இருவருமே 48 புள்ளிகள் பெற்றிருந்தனர். ஆனால், அதிக தேசிய அணியின் கேப்டன்கள் மெஸ்ஸிக்கு வாக்களித்ததால் அவர் விருத்தினைத் தட்டிச் சென்றார்.

    கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் மூன்றாவது முறையாக இந்த விருதை பெற்றுள்ளார். சிறந்த அணியின் மேலாளர் விருதை மான்செஸ்டர் சிட்டியின் பெப் கார்டியோலா வென்றார்.

    சிறந்த கோல் கீப்பர் விருதை மான்செஸ்டர் சிட்டியின் எடர்சன் வென்றார். சிறந்த வீராங்கனை விருதை ஸ்பானிஷின் அயிட்டனா பொன்மதி வென்றார்.    

    • இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
    • முக்கிய நடுகள வீரர்களான ஜிக்சன் சிங், கிளான் மார்டின்ஸ் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.

    புதுடெல்லி:

    ஆசியான் கோப்பை கால்பந்து போட்டி ஜனவரி 12-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை கத்தாரில் நடக்கிறது.

    இதில் 24 நாடுகள் பங்கேற்கிறார்கள். அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன.

    'ஏ' பிரிவில் போட்டியை நடத்தும் கத்தார், சீனா, தஜிகிஸ்தான், லெபனான் அணிகளும், 'சி' பிரிவில் ஈரான், ஐக்கிய அரபு எமி ரேட்ஸ், ஆங்காங், பாலஸ் தீன், 'டி' பிரிவில் ஜப்பான், இந்தோனேசியா, ஈராக், வியட்னாம், 'இ' பிரிவில் தென்கொரியா, மலேசியா, ஜோர்டான், பக்ரைன், 'எப்' பிரிவில் சவுதி அரேபியா, தாய்லாந்து, கிர்கிஸ்தான், ஓமன் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளும் 3-வது இடத்தை பிடிக்கும் 4 சிறந்த அணிகளும் 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறும். கத்தாரில் உள்ள 5 நகரங்களில் 9 மைதானங்களில் இந்த போட்டி நடை பெறுகிறது.

    ஆசியான் கோப்பை கால் பந்து போட்டிகான 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நடுகள வீரர்களான ஜிக்சன் சிங், கிளான் மார்டின்ஸ் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.

    அதேநேரத்தில் காயத்தில் இருந்து மீண்டுள்ள சஹல் அப்துல் சமத் அணியோடு இணைந்து உள்ளார்.

    இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    அமரிந்தர் சிங், குர்பிரீத் சிங் சாந்து, விஷால் சைத் (கோல் கீப்பர்கள்), ஆகாஸ் மிஸ்ரா, லால் சுங்னுங்கா, மெஹதாப் சிங், நிதில் புஜாரி, பிரித்தம் கோட்டல், ராகுல் பெகே, சந்தேஷ்ஜிங் கன், சுபாஷிஸ் போஸ் (பின்களம்), அணிருத் தாபா, பிராண் டன் பெர்னாண்டஸ், தீபக் தாங்ரி, லாலெங் மாவியா ரால்டே, லிஸ்டன் கொலாகோ, நாவ்ரெம் மகேஷ் சிங், சஹல் அப்துல் சமத், சுரேஷ் சிங், உதாந்த் சிங் (நடுகளம்), இஷான் பண்டிதா சாங்கே, மன்வீர் சிங், ராகுல் கனோலி பிரவீன், சுனில் சேத்ரி, விக்ரம் பிரதாப்சிங் (முன் களம்).

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 13-ந்தேதி எதிர் கொள்கிறது. உஸ்பெகிஸ்தானுடன் 18-ந்தேதியும், சிரியாவுடன் 23-ந்தேதியும் மோதுகிறது.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது.
    • மார்ச் மாதம் நடைபெற வேண்டிய போட்டி தற்போது நடந்துள்ளது.

    கார்டிப்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி வர ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக விளையாடுகிறது. மற்ற நாடுகள் தகுதி சுற்று மூலமே முன்னேறி இருந்தன. உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு 3 நாடுகள் தகுதி பெற வேண்டி இருந்தது.

    இந்த நிலையில் ஐரோப்பா கண்டத்தில் இருந்து வேல்ஸ் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கார்டிப் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் வேல்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் அந்த அணி உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியது.

    மார்ச் மாதம் நடைபெற வேண்டிய போட்டி தற்போது நடந்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது. ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் வேல்ஸ் கேப்டன் காரெத் பாலே இந்த கோலை அடித்தார். 64 ஆண்டுகளுக்கு பிறகு வேல்ஸ் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    இதற்கு 1958-ம் ஆண்டு முதல் முறையாக முன்னேறி இருந்தது. வேல்ஸ் அணி 'பி' பிரிவில் இருக்கிறது. இங்கி லாந்து, அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இன்னும் 2 நாடுகள் தகுதி பெற வேண்டி உள்ளது.

    • 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா உலகக்கோப்பையை வென்றது.
    • உலகக்கோப்பை தொடரில் நான்கு ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

    நியூயார்க்:

    கத்தாரில் நடைபெற்ற 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் 35 ஆண்டுகளுக்கு பிறகு லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 3-வது உலகக்கோப்பையை வென்றது. இந்த உலகக்கோப்பை தொடரில் நான்கு ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

    இந்த உலகக்கோப்பை தொடரின்போது மெஸ்ஸி அணிந்திருந்த அர்ஜென்டினா அணியின் 6 ஜெர்சிகள் நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அந்த 6 ஜெர்சிகளும் 7.8 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.65 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. ஒரு வீரருக்கு சொந்தமான ஒரு பொருள் அதிக விலைக்கு விற்பனையானது இதுவே முதல் முறை என ஏலத்தை நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அந்த 6 ஜெர்சிகளில் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மெஸ்ஸி அணிந்திருந்த ஜெர்சியும் இடம்பெற்று இருந்ததால் இவ்வளவு பெரிய தொகைக்கு அவை விற்பனையாகி உள்ளதாக ஏலத்தை நடத்திய நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 8-0 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்தது.
    • இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று (சனிக்கிழமை) பெல்ஜியத்தை சந்திக்கிறது.

    சான்டியாகோ:

    10-வது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சிலி தலைநகர் சான்டியாகோவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் நெதர்லாந்து, முன்னாள் சாம்பியன்கள் தென்கொரியா, ஜெர்மனி மற்றும் இந்தியா உள்பட 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

    இதில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் கடந்த முறை 2-வது இடம் பிடித்த ஜெர்மனியுடன் மோதியது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீராங்கனைகள் அன்னு 11-வது நிமிடத்திலும், ரோப்னி குமாரி 14-வது நிமிடத்திலும் அடித்த கோலால் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. ஆனால் இந்த நிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஜெர்மனி வீராங்கனைகள் சோபியா 17-வது நிமிடத்திலும், லாரா புத் 21-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பி சமநிலையை உருவாக்கினர். 24-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை மும்தாஜ் கான் அடித்த கோலால் மீண்டும் இந்தியா முன்னிலையை தனதாக்கியது. அதன் பிறகு ஆக்ரோஷமாக ஆடிய ஜெர்மனி அணி அடுத்தடுத்து 2 கோல் அடித்தது. அந்த அணியின் லாரா புத் (36-வது நிமிடம்), கரோலின் (38-வது நிமிடம்) ஆகியோர் இந்த கோலை அடித்தனர்.

    அதன் பின்னர் இரு அணிகளும் மேலும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி ஜெர்மனியிடம் வீழ்ந்தது. 2-வது ஆட்டத்தில் ஆடிய ஜெர்மனி அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அந்த அணி தனது தொடக்க ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் (0-6) தோற்று இருந்தது. முதலாவது ஆட்டத்தில் கனடாவை எளிதில் (12-0) தோற்கடித்து இருந்த இந்திய அணிக்கு இது முதல் தோல்வியாகும்.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 8-0 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்தது. மற்ற ஆட்டங்களில் நெதர்லாந்து 6-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவையும், ஆஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில் சிலியையும், இங்கிலாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தையும், அமெரிக்க அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் தோற்கடித்தன.

    இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று (சனிக்கிழமை) பெல்ஜியத்தை சந்திக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • தரவரிசையில் இந்தியா 102-வது இடத்திலும், கத்தார் 61-வது இடத்திலும் உள்ளன.
    • கத்தார் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை எளிதில் வீழ்த்தியது.

    புவனேஸ்வர்:

    2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் 48 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் 3 நாடுகள் தவிர மற்ற 45 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். தகுதி சுற்று போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகின்றன. ஆசிய மண்டல தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் 36 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் மோதுகின்றன. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 3-வது சுற்றுக்கு முன்னேறும்.

    'ஏ' பிரிவில் இந்தியாவுடன் கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. தனது முதல் லீக்கில் குவைத்தை தோற்கடித்த இந்தியா நேற்று கத்தார் அணியை புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் சந்தித்தது.

    தரவரிசையில் இந்தியா 102-வது இடத்திலும், கத்தார் 61-வது இடத்திலும் உள்ளன.

    இதில் தொடக்கம் முதலே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஆசிய சாம்பியனான கத்தார் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை எளிதில் வீழ்த்தியது. கத்தார் அணியினர் மேலும் சில வாய்ப்புகளை நழுவ விட்டனர். இல்லாவிட்டால் கோல் எண்ணிக்கை இதை விட உயர்ந்து இருக்கும். கத்தார் தரப்பில் முஸ்தபா தாரேக் மாஷல் (4-வது நிமிடம்), அல்மியோஸ் அலி (47-வது நிடம்), யூசுப் அதுரிசக் (86-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். இந்திய அணி அடுத்து ஆப்கானிஸ்தானுடன் மார்ச் 21-ந்தேதி மோதுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரசிகர்கள் அடிதடியில் ஈடுபட்டதால் சக வீரர்களுடன் வெளியேறினார் மெஸ்சி.
    • மோதல் முடிவுக்கு வந்ததையடுத்து அரைமணி நேரம் கழித்து போட்டி தொடங்கியது.

    உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றுகள் தற்போது நடைபெற்று வருகிறது. தென்அமெரிக்கா நாடுகளுக்கான தகுதிச் சுற்று ஒன்றில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு அர்ஜென்டினா- பிரேசில் அணிகள் மோதின.

    இந்த போட்டி பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா மைதானத்தில் நடைபெற்றது. தென்அமெரிக்காவின் தலைசிறந்த இரண்டு அணிகள் மோதியதால் பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவை சேர்ந்த ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்து இருந்தனர்.

    போட்டி தொடங்குவதற்கு முன் தேசியகீதம் இசைக்கப்பட்டது. அப்போது திடீரென கேலரில் இருநாட்டு ரசிகர்களும் மோதிக் கொண்டனர். அப்போது மோதலை முடிவுக்கு கொண்டு வர போலீசார், அர்ஜென்டினா ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மெஸ்சி, தனது சக வீரர்களுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

    நடுவரிடம் நாங்கள் விளையாட தயாராக இல்லை. வெளியேறுகிறோம் எனக் கூறி சென்றுவிட்டார். பின்னர், மோதல் முடிவுக்கு வந்தது. இதனால், சுமார் அரைமணி நேரம் போட்டி நடைபெறவில்லை. பின்னர் மெஸ்சி விளையாட சம்மதம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அரைமணி நேரம் தாமதமாக போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் அர்ஜென்டினா 1-0 என வெற்றி பெற்றது. அர்ஜென்டினாவின் நிக்கோலஸ் ஒடாமெண்டி 63-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    இதற்கு முன் கோபா அமெரிக்க இறுதிப் போட்டியில் பிரேசிலை 1-0 என அர்ஜென்டினா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×