என் மலர்
விளையாட்டு
- தரவரிசையில் இந்தியா 102-வது இடத்திலும், கத்தார் 61-வது இடத்திலும் உள்ளன.
- கத்தார் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை எளிதில் வீழ்த்தியது.
புவனேஸ்வர்:
2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் 48 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் 3 நாடுகள் தவிர மற்ற 45 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். தகுதி சுற்று போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகின்றன. ஆசிய மண்டல தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் 36 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் மோதுகின்றன. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 3-வது சுற்றுக்கு முன்னேறும்.
'ஏ' பிரிவில் இந்தியாவுடன் கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. தனது முதல் லீக்கில் குவைத்தை தோற்கடித்த இந்தியா நேற்று கத்தார் அணியை புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் சந்தித்தது.
தரவரிசையில் இந்தியா 102-வது இடத்திலும், கத்தார் 61-வது இடத்திலும் உள்ளன.
இதில் தொடக்கம் முதலே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஆசிய சாம்பியனான கத்தார் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை எளிதில் வீழ்த்தியது. கத்தார் அணியினர் மேலும் சில வாய்ப்புகளை நழுவ விட்டனர். இல்லாவிட்டால் கோல் எண்ணிக்கை இதை விட உயர்ந்து இருக்கும். கத்தார் தரப்பில் முஸ்தபா தாரேக் மாஷல் (4-வது நிமிடம்), அல்மியோஸ் அலி (47-வது நிடம்), யூசுப் அதுரிசக் (86-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். இந்திய அணி அடுத்து ஆப்கானிஸ்தானுடன் மார்ச் 21-ந்தேதி மோதுகிறது.
- ரசிகர்கள் அடிதடியில் ஈடுபட்டதால் சக வீரர்களுடன் வெளியேறினார் மெஸ்சி.
- மோதல் முடிவுக்கு வந்ததையடுத்து அரைமணி நேரம் கழித்து போட்டி தொடங்கியது.
உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றுகள் தற்போது நடைபெற்று வருகிறது. தென்அமெரிக்கா நாடுகளுக்கான தகுதிச் சுற்று ஒன்றில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு அர்ஜென்டினா- பிரேசில் அணிகள் மோதின.
இந்த போட்டி பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா மைதானத்தில் நடைபெற்றது. தென்அமெரிக்காவின் தலைசிறந்த இரண்டு அணிகள் மோதியதால் பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவை சேர்ந்த ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்து இருந்தனர்.
போட்டி தொடங்குவதற்கு முன் தேசியகீதம் இசைக்கப்பட்டது. அப்போது திடீரென கேலரில் இருநாட்டு ரசிகர்களும் மோதிக் கொண்டனர். அப்போது மோதலை முடிவுக்கு கொண்டு வர போலீசார், அர்ஜென்டினா ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மெஸ்சி, தனது சக வீரர்களுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
நடுவரிடம் நாங்கள் விளையாட தயாராக இல்லை. வெளியேறுகிறோம் எனக் கூறி சென்றுவிட்டார். பின்னர், மோதல் முடிவுக்கு வந்தது. இதனால், சுமார் அரைமணி நேரம் போட்டி நடைபெறவில்லை. பின்னர் மெஸ்சி விளையாட சம்மதம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அரைமணி நேரம் தாமதமாக போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் அர்ஜென்டினா 1-0 என வெற்றி பெற்றது. அர்ஜென்டினாவின் நிக்கோலஸ் ஒடாமெண்டி 63-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இதற்கு முன் கோபா அமெரிக்க இறுதிப் போட்டியில் பிரேசிலை 1-0 என அர்ஜென்டினா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Horrible scenes in the stands prior to Brazil vs Argentina. pic.twitter.com/ZluK2yQI4b
— Alexi Lalas (@AlexiLalas) November 22, 2023
- உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
- உலகக் கோப்பை தொடர் முழுவதையும் 1.25 மில்லியன் ரசிகர்கள் நேரில் கண்டுகளித்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
கடந்த அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி 7 வார காலமாக நடந்த இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த 19ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் , இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதையும் 1.25 மில்லியன் ரசிகர்கள் நேரில் கண்டுகளித்துள்ளனர் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
45 நாட்கள் நடந்த இந்த தொடரை கிட்டத்தட்ட 12,50,307 ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து நேரில் கண்டுகளித்துள்ளனர். இது உலக சாதனையாக மாறியுள்ளது.
கடந்த 2015ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பை தொடரை 1.016 மில்லியன் ரசிகர்கள் நேரில் பார்த்ததே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆண்கள் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓவர்களுக்கு இடையில் ஸ்டாப் கடிகாரங்கள் பயன்படுத்தப்படும்.
- புதிய விதிமுறைப்படி முந்தைய ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக வேண்டும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி, ஆண்கள் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓவர்களுக்கு இடையில் ஸ்டாப் கடிகாரங்கள் பயன்படுத்தப்படும். ஸ்டாப் கடிகாரங்களின் அறிமுகம் தற்போது சோதனை அடிப்படையில் டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை ஓவர்களுக்கு இடையில் எடுக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தும்.
புதிய விதிமுறைப்படி முந்தைய ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக வேண்டும். அப்படி தயாராகத பட்சத்தில், ஒரு இன்னிங்சில் இதேபோல் மூன்றாவது முறை நிகழும்போது 5 ரன்கள் பந்து வீச்சு அணிக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய விதியை ஐசிசி அறிவித்துள்ளது.
- இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார்.
- அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது.
கொழும்பு:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் புதிய இடைக்கால குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. கிரிக்கெட் அமைப்பு அரசாங்கத்தின் தலையீடு இன்றி தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது.
இதனால் அடுத்தாண்டு இலங்கையில் நடைபெற இருந்த ஆடவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது. அந்த வாய்ப்பு தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் உள்ள அணிகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஏ பிரிவில் இந்தியா, வங்காளதேசம், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. பி பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து. சி பிரிவில் ஆஸ்திரேலியா இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா. டி பிரிவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளது.
- ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
- ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அந்த ஆண்டே இந்திய டி20-க்கு அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இடம் பிடித்தவர்களில் வெங்கடேஷ் ஐயரும் ஒருவர் ஆவார். இவர் ஐபிஎல் மூலம் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். இவர் ஐபிஎல் தொடரில் 36 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 7 அரை சதங்களுடன் 956 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2021-ம் ஆண்டு அறிமுக தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அந்த ஆண்டே இந்திய டி20-க்கு அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 9 போட்டிகளில் விளையாடிய இவர் 75 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதன் பிறகு 2022-ம் ஆண்டு ஒருநாள் இந்திய அணியில் இடம் பிடித்த இவர் 2 ஒருநாள் போட்டியில் 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தொடர்ந்து சரியாக விளையாட காரணத்தால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் 28 வயதான வெங்கடேஷ் திருமண பந்தத்தில் இணையவுள்ளார். இவருக்கும் ஸ்ருதி ரங்கநாதனுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வெங்கடேஷ் ஐயர், என் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் என்று குறிப்பிட்டுள்ளார்.
- இந்திய வீரர்களின் ஓய்வு அறைக்கு சென்று பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
- வெற்றி பெற தொடர் முழுவதும் கடுமையாக உழைத்ததாக பாராட்டினார்.
புதுடெல்லி:
கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பை கிடைத்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் 2011-ம் ஆண்டில் 2-வது தடவையாக உலக கோப்பையை பெற்றோம். அதன்பின் எந்த ஐசிசி கோப்பையும் இந்தியா வென்றதில்லை.
இந்த நிலையில் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி 19-ந்தேதி நடைபெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக ஐ.சி.சி. உலக கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை வென்று அசத்தியது. இந்த தோல்வியை சகிக்க முடியாமல் இந்திய வீரர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில் இந்திய வீரர்களின் ஓய்வு அறைக்கு சென்று பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். வெற்றி பெற தொடர் முழுவதும் கடுமையாக உழைத்ததாக பாராட்டினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#WATCH | Prime Minister Narendra Modi met Team India in their dressing room after the ICC World Cup Finals at Narendra Modi Stadium in Ahmedabad, Gujarat on 19th November.
— ANI (@ANI) November 21, 2023
The PM spoke to the players and encouraged them for their performance throughout the tournament.
(Video:… pic.twitter.com/ZqYIakoIIj
- இந்தியாவுக்கு மட்டுமல்ல என் கணவரின் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும்.
- இதைசொல்ல வேண்டிய அவசியம் எழுந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை.
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 6-வது முறையாக உலகக் கோப்பை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை மேக்ஸ்வெல் மனைவி வினி ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு இந்திய ரசிகர்கள் அருவருக்கத்தக்க மெசெஜ்களை அனுப்புவதாக வினி ராமன் குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்தியாவுக்கு மட்டுமல்ல என் கணவரின் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும். இதைசொல்ல வேண்டிய அவசியம் எழுந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை.
இந்தியராக நீங்கள் பிறந்து வளர்ந்த நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் அதே நேரத்தில், உங்கள் குழந்தைக்கு தந்தையாக இருக்கும் உங்கள் கணவர் விளையாடும் அணியையும் ஆதரிக்க வேண்டியது முக்கியம். இந்த மாதிரி பேசுவதை விட்டு, உங்களது கோபத்தை உலகில் நிகழும் முக்கியமான பிரச்சினை மீது திருப்புங்கள்.
என்று வினி ராமன் கூறினார்.
மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.
- இதற்கான அணியில் சாஹல் இடம் பிடிக்கவில்லை.
ஆசிய கோப்பைக்கான தொடரிலும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தொடரிலும் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கிடைக்கவில்லை. அப்போது யுஸ்வேந்திர சாஹல் சூரியன் மீண்டும் பிரகாசமாக உதிக்கும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது அந்த பதிவு வைரலானது.
இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான அணியிலும் சாஹல் இடம் பிடிக்கவில்லை.
இந்த சூழலில் அவர் எக்ஸ் தளத்தில் சிரித்தபடி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியில் இடம் பிடித்தவர்கள் விவரம்:-
1. சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), 2. ருதுராஜ் கெய்க்வாட் (துணைக் கேப்டன்), 3. இஷான் கிஷன், 4. ஜெய்ஸ்வால், 5. திலக் வர்மா, 6. ரிங்கு சிங், 7. ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), 8. வாஷிங்டன் சுந்தர், 9. அக்சார் பட்டேல், 10. ஷிவம் டுபே, 11. ரவி பிஷ்னோய், 12. அர்ஷ்தீப்சிங், 13. பிரசித் கிருஷ்ணா, 14. அவேஷ் கான், 15. முகேஷ் குமார்.
- 2 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அரியானா கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
- தமிழ்நாடு (பி பிரிவு) கர்நாடகா (சி பிரிவு) ஆகிய அணிகள் ஏற்கனவே கால் இறுதிக்கு தகுதி பெற்றன.
சென்னை:
தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 13-வது தேசிய சீனியர் ஹாக்கிப் போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 28 அணிகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.
போட்டியின் 5-வது நாளான இன்று காலை நடந்த 'ஏ' பிரிவு ஆட்டத்தில் அரியானா-சத்தீஸ்கர் அணிகள் மோதின. இதில் அரியானா 13-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
அரியானா அணியில் சஞ்சய் 4 கோல்களையும், கோபினூர் பிரீத்சிங் 3 கோல்களையும், தீபக், ரஜத் தலா 2 கோல்களையும் அபிஷேக், முகுல் சர்மா தலா ஒரு கோலும் அடித்தனர். சத்தீஸ்கர் அணிக்காக கார்த்தி யாதவ் கோல் அடித்தார்.
அரியானா அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத்தை 22-1 என்ற கோல் கணக்கில் வீழத்தி இருந்தது. 2 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அரியானா கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
தமிழ்நாடு (பி பிரிவு) கர்நாடகா (சி பிரிவு) ஆகிய அணிகள் ஏற்கனவே கால் இறுதிக்கு தகுதி பெற்றன. தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் 15-1 என்ற கணக்கில் அசாமையும், 2-வது போட்டியில் 13-1 என்ற கணக்கில் இமாச்சல பிரதேசத்தையும் தோற்கடித்து இருந்தன. கர்நாடக அணி தத்ரா நகர் கவேலி (5-0), பீகார் (12-1) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது.
இன்று காலை நடந்த 2-வது போட்டி டி பிரிவில் உள்ள பஞ்சாய்-மராட்டியம் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
- டென்னிஸ் வரலாற்றில் இதற்கு முன்பு யாரும் செய்திராத ஒன்று.
- நீண்ட காலம் இச்சாதனை நிலைத்து நிற்கும் என்று நம்புகிறேன்.
துரின்:
தரவரிசையில் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்ற ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3. 6-3 என்ற நேர் செட் கணக்கில் 4-ம் நிலை வீரர் யானிக் சின்னெரை (இத்தாலி) வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். லீக்கில் அவரிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டார்.
இந்த பட்டத்தை ஜோகோவிச் ருசிப்பது இது 7-வது முறையாகும். இதற்கு முன்பு 2008, 2012, 2013, 2014, 2015, 2022 ஆகிய ஆண்டுகளிலும் வாகை சூடியுள்ளார். இதன் மூலம் இந்த பட்டத்தை இதற்கு முன்பு அதிக முறை வென்றிருந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் (6 தடவை) சாதனையை முறியடித்தார்.
போட்டி கட்டணம் உள்பட மொத்தம் ரூ.36¾ கோடியை ஜோகோவிச் பரிசுத்தொகையாக அள்ளினார். 2-வது இடத்தை பிடித்த சின்னெருக்கு ரூ.21½ கோடி கிடைத்தது.
இதன் பின்னர் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. முதலிடத்தை ஜோகோவிச் ஏற்கனவே தக்க வைத்துக் கொண்டார். 2012-ம் ஆண்டில் முதல்முறையாக 'நம்பர் ஒன்' அரிணையில் ஏறிய ஜோகோவிச், அதன் பிறகு ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறார். தற்போது செப்டம்பர் 11-ந்தேதியில் இருந்து முதலிடத்தில் தொடருகிறார்.
இது அவர் 'நம்பர் ஒன்' இடத்தை அலங்கரிக்கும் 400-வது வாரமாகும். இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் இவர் தான். இந்த சாதனை பட்டியலில் ஜெர்மனி முன்னாள் வீராங்கனை ஸ்டெபி கிராப் 377 வாரங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்.
36 வயதான ஜோகோவிச் கூறுகையில், '400 வாரங்கள் முதலிடம் என்பது மிகப்பெரிய சாதனை. டென்னிஸ் வரலாற்றில் இதற்கு முன்பு யாரும் செய்திராத ஒன்று. என்றாலும் அடுத்து வேறு எந்த வீரராவது இந்த சாதனையை முறியடிப்பார்கள். ஆனால் நீண்ட காலம் இச்சாதனை நிலைத்து நிற்கும் என்று நம்புகிறேன்' என்றார்.
- ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக மேத்யூ வேட் செயல்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
- உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் 7 பேர் டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை:
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி வரும் 23-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார். உலகக்கோப்பை வெற்றிக்கு பின் அவர் தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளதால் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஆரோன் ஹார்டி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக மேத்யூ வேட் செயல்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் 7 பேர் டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா அணி விவரம் பின்வருமாறு;-
மேத்யூ வேட் (கேப்டன்), ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரன்டோர்ப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா






