என் மலர்
விளையாட்டு
- சென்னை லயன்ஸ் பெற்ற முதல் வெற்றியாகும்.
- டெல்லி அணி 2-வது தோல்வியை தழுவியது.
8 அணிகள் பங்கேற்கும் 5-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் சரத்கமல் தலைமையிலான சென்னை லயன்ஸ் 8-7 என்ற கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தியது. சென்னை லயன்ஸ் பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 4-11 என்ற கணக்கில் பெங்களூருவிடம் தோற்று இருந்தது. சென்னை லய்ன்ஸ் 3-வது போட்டியில் மும்பையுடன் வருகிற 30 -ந்தேதி மோதுகிறது.
டெல்லி அணி 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி ஏற்கனவே மும்பையிடம் தோற்று இருந்தது. மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் 9-6 என்ற கணக்கில் மும்பையை வீழ்த்தியது. ஜெய்ப்பூர் முதல் வெற்றியை பெற்றது. மும்பைக்கு முதல் தோல்வி ஏற்பட்டது.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ஸ்மாஷர்ஸ்-புனேரி பல்தான் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றன. இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. புனே அணி தொடக்க ஆட்டத்தில் 10-5 என்ற கணக்கில் அகமதாபாத்தையும், பெங்களூரு அணி முதல் போட்டியில் 11-4 என்ற கணக்கில் சென்னை லயன்சையும் வென்று இருந்தது.
- இந்தியா இந்த முறை 12 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.
- 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 54 வீரர்கள் சென்று 19 பதக்கங்களை இந்தியா வென்றது.
பாரீஸ்:
பாரீஸ் பரா ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ளன. ஆகஸ்ட் 28 முதல் பிரான்ஸ் தலைநகரில் பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த முறை இந்தியா தரப்பில் 84 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு சாதனை என்றே சொல்லலாம். 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 54 வீரர்கள் சென்று 19 பதக்கங்களை இந்தியா வென்றது.
இந்தியா இந்த முறை 12 விளையாட்டுகளில் பங்கேற்கிறது. குறிப்பாக தடகளத்தில் மட்டும் இந்தியாவின் 38 போட்டியாளர்கள் இருப்பார்கள். வில்வித்தை, பேட்மிண்டன், சைக்கிள் ஓட்டுதல், ஜூடோ, பாரா கயாக்கிங், பவர்லிஃப்டிங், ரோயிங், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டெக்வாண்டோ போன்ற விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் களமிறங்குகின்றனர்.
கடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற சுமித் அந்தில், மாரியப்பன் தங்கவேலு, சுஹான் எல்.ஒய், கிருஷ்ணா நாகர், அவனி லேகாரா, மணீஷ் நர்வால், பவீனா படேல், நிஷாத் குமார் உள்ளிட்டோர் இந்த முறையும் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் மீண்டும் பதக்கம் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இளம் பாரா வில்வித்தை வீரரான சீதல் தேவி, இரண்டு கைகளும் இல்லாத போதிலும் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் இந்தியாவின் மிகப்பெரிய பதக்க நம்பிக்கையாக கருதப்படுகிறார்.
பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியா மொத்தம் 9 தங்கம், 12 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த முறை குறைந்தது 25 பதக்கங்களை வென்று அரை சதத்தை எட்டும் ஆர்வத்தில் உள்ளது.
முதல் முறையாக இந்தியா பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 12 விளையாட்டுகளில் தனது வீரர்களை களமிறக்குகிறது. 38 பேர் தடகளத்தில் பல்வேறு பிரிவுகளில் களமிறங்குவார்கள்.
3 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 19 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த முறை குறைந்தது 25 பதக்கங்கள் வெல்லும் இலக்குடன் இந்திய அணி பாரிஸ் வந்துள்ளது.
பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கர்நாடகாவிலிருந்து 3 பேர் பங்கேற்க உள்ளனர். பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ரக்ஷிதா ராஜு, துப்பாக்கி சுடுதலில் ஸ்ரீஹர்ஷா மற்றும் பவர்லிஃப்டிங்கில் சகீனா கதுன் ஆகியோர் களமிறங்குவார்கள். கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட, தற்போது உத்தரபிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் பேட்மிண்டன் நட்சத்திரம் சுஹாஸ் யாதவ்வும் போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.
- எந்த பதக்கத்தையும் விட மேலான இந்த கவுரவத்துக்கு நான் எப்போதும் கடமைப்பட்டு இருப்பேன்.
- கடந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய போராட்டத்தில் வினேஷ் போகத் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர்:
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இறுதிப் போட்டி வரை சென்று இருந்தும் அவரால் பதக்கத்தை பெற முடியாமல் போனது மிகப்பெரிய ஏமாற்றம்.
இந்த நிலையில் அரியானாவில் உள்ள கிராம பஞ்சாயத்து அமைப்புகள் சார்பில் வினேஷ் போகத்துக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடந்தது. அப்போது அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
பாரீஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போன போது நான் மிகவும் துரதிருஷ்ட வசமானவள் என்று நினைத்தேன். ஆனால் இந்தியாவுக்கு திரும்பிய எனக்கு அளித்த மிகப்பெரிய அன்பையும், ஆதரவையும் அனுபவித்த பிறகு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று உணர்கிறேன்.
எந்த பதக்கத்தையும் விட மேலான இந்த கவுரவத்துக்கு நான் எப்போதும் கடமைப்பட்டு இருப்பேன்.
எனது போராட்டம் முடியவில்லை. இப்போது தான் தொடங்கியுள்ளது. எங்கள் மகள்களின் (மல்யுத்த வீராங்கனைகள்) கவுர வித்திற்கான போராட்டம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. எங்கள் உள்ளிருப்பு போராட்டத்தின் போதே நாங்கள் அதை கூறினோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய மல்யுத்த சம்மேள முன்னாள் தலைவரும், பா.ஜனதாவை சேர்ந்தவருமான பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீரர்கள் பாலியல் புகார் கூறி இருந்தார்கள். அவருக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய போராட்டத்தில் வினேஷ் போகத் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி பெற்றது.
- இதனால் பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
வங்கதேச அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றத்திற்குப் பிறகு வெளியான ஒரு வீடியோ, அந்த அணியின் ஒற்றுமை எப்படிப்பட்டது என்பதைக் காட்டுவதாக உள்ளது.
அந்த வீடியோவில், கேப்டன் ஷான் மசூத், வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடியின் தோளில் கை வைத்து பேசுகிறார். அப்போது ஷாகின், கேப்டனின் கையை தோளில் இருந்து தட்டிவிடுகிறார். இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒற்றுமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து சிலர் கேப்டனை அனைவர் முன்னிலையிலும் இவ்வாறு அவமதிப்பது அணிக்கு நல்லதல்ல. கிரிக்கெட் போன்ற விளையாட்டில் இதுபோன்ற செயல்களால் வெற்றிபெற முடியாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தானிடம் தொடர்ந்து 13 முறை தோல்வியை சந்தித்த வங்கதேசம் அணி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 13 தோல்விகள் என்ற தொடர் தோல்வி முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வெற்றி பெற்ற பிறகு மேடையில் தென் கோரிய வீரர்களுடன் சிரித்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டனர்
- வீரர்களுக்கு வெளிநாட்டு கலாச்சார பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கருத்தியல் ரீதியான மனோதத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது
2024 பாரீஸ் ஒலிம்பிக்சில் பதக்கம் வென்ற வட கோரிய வீரர்கள் தென்கொரிய வீரர்களுடன் சேர்ந்து சிரித்தபடி செல்ஃபி எடுத்ததால் சிக்கலில் மாட்டியுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வடகொரிய வீரர்கள் ரி ஜோங் சிக், கிம் கும் யோங் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
வெற்றி பெற்ற பிறகு மேடையில் தென் கோரிய வீரர்களுடன் சிரித்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டனர். போட்டிக்கு முன்பே மற்ற நாட்டு வீரர்களுடன், குறிப்பாக தென் கொரிய வீரர்களுடன் உறவு கொண்டாடக் கூடாது என வட கொரிய வீரர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வட கொரியா திரும்பியுள்ள அனைத்து வீரர்களுக்கும் வெளிநாட்டு கலாச்சார பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கருத்தியல் ரீதியான மனோதத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாட்டை மீறி எதிரி நாடான தென் கொரியா வீரர்களுடன் சிரித்ததற்காக டேபிள் டென்னிஸ் வீரர்கள் ரி ஜோங் சிக், கிம் கும் யோங் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- 15 வயது உட்பட்டோருக்கான பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தன்வி பாத்ரி - ஹூடென் மோதினர்.
- இந்த ஆட்டம் 34 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.
செங்டு:
ஜூனியர் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள செங்டு நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த 15 வயது உட்பட்டோருக்கான பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை தன்வி பாத்ரி 22-20, 21-11 என்ற நேர் செட்டில் வியட்நாமின் ஹூடென் நுயெனை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த ஆட்டம் 34 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஒடிசாவை சேர்ந்த 13 வயதான தன்வி பெங்களூருவில் உள்ள பிரகாஷ் படுகோனே பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்றவர் ஆவார்.
முந்தைய நாளில் நடந்த 17 வயது உட்பட்டோருக்கான ஆண்கள் ஒற்றையரில் இந்திய வீரர் ஞான டத்து வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.
- அமெரிக்க ஓபனில் மீண்டும் மகுடம் சூடினால், ஜோகோவிச் புதிய வரலாறு படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக தரவரிசையில் 75-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் களம் இறங்குகிறார்.
நியூயார்க்:
ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 144-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 2 வாரம் நடக்கிறது. கடின தரையில் நடைபெறும் இந்த போட்டிக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு முன்னணி வீரர், வீராங்கனைகள் நியூயார்க்கில் முகாமிட்டு தீவிர பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' வீரரும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான ஜானிக் சினெர் (இத்தாலி) நடப்பு சாம்பியனும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவரும், பிரெஞ்சு, விம்பிள்டன் சாம்பியன் பட்டங்களை அடுத்தடுத்து ருசித்தவருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) ஆகிய மூவர் இடையே தான் பட்டத்தை கைப்பற்றுவதில் நேரடி போட்டி நிலவுகிறது.
இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பெரிய அளவில் சோபிக்காத ஜோகோவிச் சமீபத்தில் நடந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அல்காரசை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றி தனது நீண்ட நாள் ஏக்கத்தை தணித்தார். அதன் பிறகு ஜோகோவிச் கலந்து கொள்ளும் முதல் போட்டி இதுவாகும். அனுபவசாலியான அவர் அதிக பட்டங்கள் வென்று குவித்து இருந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற தாகம் தனக்கு இன்னும் குன்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'தற்போது நீங்கள் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் உள்பட எல்லாவற்றையும் வென்றுள்ளீர்கள். வெற்றி பெற வேறு என்ன இருக்கிறது என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். என்னிடம் இன்னும் போட்டி உத்வேகம் உள்ளது. மேலும் பல சாதனைகள் படைத்து போட்டி தொடரை அனுபவிக்க விரும்புகிறேன். 2008-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஓபன் ஒற்றையரில் வீரர்கள் யாரும் பட்டத்தை தக்கவைக்கவில்லை என்ற நிலைமை இந்த ஆண்டு மாறும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு போட்டி தொடரிலும் இறுதி சுற்றுக்கு முன்னேறுவதுடன் கோப்பைக்காக போராட வேண்டும் என்பது தான் எனது இலக்காகும். அந்த மாதிரியான மனநிலையும், அணுகுமுறையும் இந்த ஆண்டும் தொடரும்' என்றார்.
4 முறை சாம்பியனான ஜோகோவிச் அமெரிக்க ஓபனில் மீண்டும் மகுடம் சூடினால், ஒட்டுமொத்தத்தில் அதிக கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்றவர்களில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்க்கரேட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
37 வயதான ஜோகோவிச் தனது முதல் சுற்று ஆட்டத்தில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய 152-ம் நிலை வீரரான மால்டோவாவின் ராடு அல்போட்டை எதிர்கொள்கிறார். இதேபோல் 'நம்பர் ஒன்' வீரர் இத்தாலியின் ஜானிக் சினெர், 93-ம் நிலை வீரரான அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டுடன் மோது கிறார். ஸ்பெயினின் இளம் புயல் கார்லஸ் அல்காரஸ் தனது முதல் மோதலில் தகுதி சுற்று மூலம் ஏற்றம் பெற்ற 188-ம் நிலை வீரரான லீ தூவை (ஆஸ்திரேலியா) சந்திக்கிறார்.
இதற்கிடையே, பயிற்சியின் போது 21 வயது அல்காரஸ் வலது கணுக்காலில் காயம் அடைந்துள்ளார். இதனால் அவரால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. 'முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பயிற்சியை நிறுத்தினேன். பயிற்சியை தொடர்ந்து போட்டிக்கு சிறப்பாக தயாராக விரும்புகிறேன். ஒரிரு நாளில் முழு உடல் தகுதியை எட்டிவிடுவேன்' என்று அல்காரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேபோல் ஊக்க மருந்து சர்ச்சையில் இருந்து விடுபட்டு இந்த போட்டியில் ஆடும் ஜானிக் சினெர் எப்படி செயல்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது.
கணிப்பு படி எல்லாம் சரியாக நகர்ந்தால் அல்காரஸ் அரைஇறுதியில் ஜானிக் சினெருடன் பலப்பரீட்சை நடத்த வேண்டியது வரலாம். முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டேனில் மெட்விடேவ் (ரஷியா), ஆந்த்ரே ருப்லெவ் (ரஷியா), ஹூபெர்ட் ஹர்காஸ் (போலந்து) உள்ளிட்ட வீரர்களும் கோப்பைக்காக வரிந்து கட்டுவார்கள் என்பதால் களத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
உலக தரவரிசையில் 75-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் களம் இறங்குகிறார். அவர் தனது முதல் ஆட்டத்தில் 28-ம் நிலை வீரரான நெதர்லாந்தின் தல்லோன்கிரிக்ஸ்பூருடன் மோதுகிறார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, ஸ்ரீராம் பாலாஜி, சுமித் நாகல், ரோகன் போபண்ணா ஆகியோர் தங்கள் இணையுடன் களம் காணுகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் (போலந்து), முன்னாள் 'நம்பர் ஒன்' வீராங்கனையும், அண்மையில் நடந்த சின்சினாட்டி போட்டியில் பட்டம் வென்றவருமான அரினா சபலென்கா (பெலாரஸ்), நடப்பு சாம்பியனும், உள்ளூர் வீராங்கனையுமான கோகோ காப் ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இதேபோல் முன்னாள் சாம்பியன்களான எம்மா ரடுகானு (இங்கிலாந்து), நவோமி ஒசாகா (ஜப்பான்), அஸரென்கா (பெலாரஸ்), ஒலிம்பிக் சாம்பியன் கிங்வென் செங் (சீனா), எலினா ரைபகினா (கஜகஸ்தான்) உள்ளிட்டோரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சரியமில்லை.
நடப்பு சாம்பியன் அமெரிக்காவின் கோகோ காப் தனது முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்சின் வர்வரா கிராசிவாவுடன் மோதுகிறார். 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி சுற்று மூலம் முன்னேறிய ரஷியாவின் கமிலா ராஹிமோவாவை சந்திக்கிறார். பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா தகுதி சுற்று மூலம் நுழைந்த 203-ம் நிலை வீராங்கனை பிரிசில்லா கானை (ஆஸ்திரேலியா) எதிர்கொள்கிறார். நவோமி ஒசாகா, எம்மா ரடுகானு ஆகியோருக்கு முதல் சுற்று கடினமாக அமைந்துள்ளது. ஒசாகா 10-ம் நிலை வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோவுடனும் (லாத்வியா), எம்மா ரடுகானு, 26-ம் நிலை வீராங்கனை சோபியா கெனினுடனும் (அமெரிக்கா) மல்லுக்கட்டுகின்றனர்.
இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.629 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 15 சதவீதம் அதிகமாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவருக்கு ரூ.30 கோடி பரிசாக கிடைக்கும். அத்துடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளியும் பெறுவார்கள். 2-வது இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைக்கு ரூ.15 கோடி பரிசாக வழங்கப்படும். ஒற்றையர் முதல் சுற்றில் கால் பதித்தாலே ரூ.83 லட்சம் தொகையுடன் தான் வெளியேறுவார்கள். இரட்டையர் பிரிவில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.6¼ கோடி பரிசாக கிடைக்கும்.
இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 2, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. முதல் நாளில் ஜோகோவிச், கோகோ காப், கேஸ்பர் ரூட், ஆந்த்ரே ருப்லெவ், கிரெஜ்சிகோவா உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் ஆடுகிறார்கள்.
- ஒரு கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 13.5 ஓவரில் 129 ரன்கள் எடுத்திருந்தது.
- கடைசி 20 ரன்களுக்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்தது.
வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்த முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் 2-வது போட்டி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 179 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர் அதானஸ் 21 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார். ஷாய் ஹோப் 22 பந்தில் 41 ரன்கள் விளாசினார். கேப்டன் ரோவ்மேன் பொவேல் 22 பந்தில் 35 ரன்களும், ரூதர்போர்டு 18 பந்தில் 29 ரன்களும் சேர்த்தனர். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. அந்த அணி 19.4 ஓவரில் 149 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
தொடக்க வீரர் ரிக்கெல்டன் 13 பந்தில் 20 ரன்களும், ஹென்ரிக்ஸ் 18 பந்தில் 44 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

அடுத்து வந்த கேப்டன் மார்கிராம் 9 பந்தில் 19 ரன்களும், ஸ்டப்ஸ் 24 பந்தில் 28 ரன்களும் அடித்தனர். ஒரு கட்டத்தில் அதாவது ஸ்டப்ஸ் ஆட்டமிழக்கும்போது தென்ஆப்பிரிக்கா 13.5 ஓவரில் 129 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 149 ரன்களில் சுருண்டது. கடைசி 20 ரன்களுக்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தோல்வியை சந்தித்ததுடன் தொடரையும் இழந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷெப்பர்டு 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். மற்றொரு பந்து வீச்சாளர்கள் ஷமர் ஜோசப் 4 ஓவரில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
- மான்டெர்ரி ஓபன் டென்னிஸ் தொடர் மெக்சிகோவில் நடைபெற்றது.
- இதில் செக் வீராங்கனை நோஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
மெக்சிகோ:
மான்டெர்ரி ஓபன் டென்னிஸ் தொடர் மெக்சிகோவில் நடைபெற்றது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, நியூசிலாந்தின் லுலு சன் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிண்டா நோஸ்கோவா 7-6 (8-6), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.
- பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் இரு வெண்கலம் கைப்பற்றினார்.
- இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் நியமனம் செய்யப்பட்டார்.
புதுடெல்லி:
சமீபத்தில் நடந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் வீராங்கனை இரு வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில், துப்பாக்கி சுடும் வீராங்கனையான மனு பாக்கர் கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவை சமீபத்தில் சந்தித்தார்.
இதுதொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மனுபாக்கர், இந்தியாவின் மிஸ்டர் 360 உடன் ஒரு புதிய விளையாட்டின் நுட்பங்களைக் கற்றுக்கொள்வது என தலைப்பிட்டுள்ளார்.
மனு பாக்கர் பேட்டராகவும், சூர்யகுமார் யாதவ் துப்பாக்கி சுடும் வீரராகவும் போஸ் கொடுத்தனர். இரு வீரர்களுக்கு இடையிலான உரையாடல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
டி20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச், இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியதுடன், கோப்பையை கைப்பற்றவும் உதவியது. இதனால் இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டார்.
- பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.
- ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு அளிக்கப்பட்டது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் கூறியதாவது:
ராவல்பிண்டி பிட்ச் நாங்கள் எதிர்பார்த்ததை போல் அமையவில்லை. இந்த பிட்ச் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது தவறாகிவிட்டது.
முதல் இன்னிங்சை 6 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய முடிவுஎடுக்கப்பட்டது. டிக்ளேர் செய்ததற்கான காரணம் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தான்.
ஆனால் வங்கதேச வீரர்கள் முதல் இன்னிங்சில் மிகவும் ஒழுக்கத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்தினர். முஷ்பிகுர் மற்றும் மிராஸ் நன்றாக பேட்டிங் செய்தனர்.
பந்துவீச்சிலும் வங்கதேச அணியை கட்டுப்படுத்த தவறிவிட்டோம். சில தவறான கணிப்புகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இந்த டெஸ்ட் போட்டியில் செய்த தவறுகளை சரிசெய்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடரை சமன் செய்ய முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார்.
- முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
- அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
லண்டன்:
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளரான மார்க் வுட் தசைப்பிடிப்பு காரணமாக விலகி உள்ளார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அவருக்கு பதிலாக ஜோஷ் ஹல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.






