என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
    • ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் காலிறுதியில் வெற்றி பெற்றார்.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையரில் நடந்த காலிறுதி சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரின் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-7 (8-10) எனஇழந்த ஸ்வரேவ் அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் ரஷியாவின் கரன் கச்சனாவ், அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்சல்சனை 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • போட்டி 4ஆவது நாள் முடிந்திருந்தால், சுப்மன் கில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டிருப்பார்.
    • மைக் ஆதர்டன் சுப்மன் கில்லுக்கான அனைத்து கேள்விகளையும் தயார் செய்து வைத்திருந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று 35 ரன்கள் தேவை என்ற நிலையில், இங்கிலாந்து கையில் 4 விக்கெட்டுகள் இருந்தன.

    முகமது சிராஜ் அபாரமாக பந்து வீச இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரை 2-2 என சமன் செய்தது.

    இந்த தொடரில் இங்கிலாந்து பயிற்சியாளர் இந்திய வீரரில் ஒருவரை தொடர் நாயகனாக தேர்வு செய்ய வேண்டும். அதன்படி மெக்கல்லம் 754 ரன்கள் குவித்த இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்லை தேர்வு செய்தார்.

    இந்த நிலையில் மெக்கல்லம் சுப்மன் கில்லிற்குப் பதிலாக முகமது சிராஜை தொடர் நாயகனாக தேர்வு செய்ய விரும்பினார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    "போட்டி 4ஆவது நாள் முடிந்திருந்தால், சுப்மன் கில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டிருப்பார். வர்ணனையாளரான மைக் ஆதர்டன் பரிசளிப்பு விழாவை தொகுத்து வழங்க இருந்தார். ஆகவே, அவர் அனைத்து கேள்விகளை தயார் செய்து வைத்திருந்தார். எல்லாமே கில்லுக்காக தயாராக இருந்தது.

    ஆனால் கடைசி நாளில் முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசினார். அரைமணி நேரத்திற்குள் மெக்கல்லம் தொடர் நாயகன் விருது முடிவை மாற்றி முகமது சிராஜிக்கு மாற்ற விரும்பினார். போட்டிக்குப் பிறகு கூட ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசும்போது, முகமது சிராஜ் குறித்து பேசினார். சிராஜ் பந்து வீச்சு பார்த்து எப்படி மகிழ்ந்தார், அவரை பற்றிய அனைத்து அருமையான விசயங்கள் குறித்து பேசினார்" என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    • இந்த தொடரில் சிராஜ் மொத்தம் 23 விக்கெட் வீழ்த்தினார்.
    • இலங்கையை சேர்ந்த முரளீதரன் தலா 6 முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.

    ஓவல்:

    இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    ஓவல் டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு முகமது சிராஜ் முக்கிய பங்கு வகித்தார். அவர் 5 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார். இந்த டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்கு கிடைத்தது.

    இந்த தொடரில் சிராஜ் மொத்தம் 23 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் பும்ராவின் சாதனையை சமன் செய்தார். பும்ரா 2021-22 இங்கிலாந்தில் தொடரில் 23 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக இருவரும் இருக்கிறார்கள்.

    இங்கிலாந்தில் அதிக முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்த முதல் ஆசிய பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை சிராஜ் படைத்தார். அவர் 7-வது முறையாக 4 விக்கெட்டுக்கு மேல் (11 போட்டி) எடுத்துள்ளார்.

    இலங்கையை சேர்ந்த முரளீதரன் (6 டெஸ்ட்), பாகிஸ்தானின் வாக்கர் யூனுஸ் (10 போட்டி) ஆகியோர் தலா 6 முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்து இருந்தனர். இவர்களை சிராஜ் முந்தினார். மற்ற இந்திய வீரர்களில் பும்ரா 5 தடவையும், இஷாந்த் சர்மா 4 முறையும் 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர்.

    சிராஜ் 3-வது முறையாக ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். 2023 ஆண்டு வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான போர்ட் ஆப் ஸ்பெயின் டெஸ்டிலும், 2024-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டிலும் ஆட்ட நாயகன் விருது அவருக்கு கிடைத்தது.

    • சுப்மன்கில் அணியில் மிகவும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராவார்.
    • 2-வது டெஸ்டில் கில் குவித்த 269 ரன் மிகவும் சிறப்பானது.

    லண்டன்:

    சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

    விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் ஓய்வுக்கு பிறகு இளம் வீரர்களை கொண்ட அணி இங்கிலாந்தில் சாதித்து காட்டியது. தொடரை இழக்காமல் சமன் செய்தது பாராட்டுதலுக்குரியதாகும்.

    சுப்மன்கில் கேப்டனாக பொறுப்பேற்று முதல் தொடரிலேயே சாதித்து காட்டினார். மேலும் பேட்டிங்கிலும் அவர் அபாரமாக செயல்பட்டார். 5 டெஸ்டில் 754 ரன்கள் (10 இன்னிங்ஸ்) குவித்தார். சராசரி 75.40 ஆகும். இதில் 4 சதம் அடங்கும். அதிகபட்சமாக 269 ரன் குவித்துள்ளார்.

    இந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கும் சுப்மன் கில்லை கேப்டனாக்கலாம் என்று முன்னாள் கேப்ட னும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் யோசனை தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக கூறியதாவது:-

    ஒரு நாள் போட்டிக்கும் கேப்டனாக சுப்மன்கில்லை தேர்வு செய்ய தேர்வுக்குழு பரிசீலனை செய்யலாம். ரோகித் சர்மா, விராட் கோலி ஒரு நாள் போட்டியில் விளையாட தயாராக உள்ளனர். அவர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த விஷயங்கள் தேர்வுக் குழுவை பொறுத்தது.

    ஆஸ்திரேலியா அல்லது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வுக்குழு விரும்பினால் சுப்மன்கில்லை கேப்டனாக தேர்வு செய்யலாம். இதுவே சரியான நேரமாகும்.

    சுப்மன்கில் அணியில் மிகவும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராவார். 2-வது டெஸ்டில் அவர் குவித்த 269 ரன் மிகவும் சிறப்பானது. ஒவ்வொரு ரன்னும் முக்கியமானது என்பதை அவர் அந்த டெஸ்டில் உறுதிப்படுத்த விரும்பினார்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • ஓவல் டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு முகமது சிராஜ் முக்கிய பங்கு வகித்தார்.
    • கடைசி டெஸ்டில் சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

    ஓவல்:

    இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது டெஸ்டில் 22 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது டெஸ்ட் டிரா ஆனது.

    ஓவல் டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு முகமது சிராஜ் முக்கிய பங்கு வகித்தார். அவர் 5 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார். இந்த டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்கு கிடைத்தது.

    சிராஜ் கூறும்போது, "தான் வீசிய ஒவ்வொரு பந்தும் நாட்டுக்கானது. எனக்கானது அல்ல" என்று குறிப்பிட்டார்.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சிராஜை தெலங்கானா காவல்துறை பாராட்டி போஸ்டர் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • டெஸ்ட் கிரிக்கெட் முழுமையாக மெய்சிலிர்க்க வைக்கிறது.
    • டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பானது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

    மும்பை:

    லண்டன் ஓவல் மைதானத்தில் பரபரப்பான 5-வது டெஸ்ட்டில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிகிறது.

    கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட் முழுமையாக மெய்சிலிர்க்க வைக்கிறது. தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்து உள்ளது. இந்திய அணியின் செயல்பாடுகளுக்கு 10-க்கு10 மதிப்பெண் கொடுப்பேன். இந்திய அணியின் சூப்பர்மேன்கள் கலக்கி விட்டனர். என்ன ஒரு அற்புதமான வெற்றி.

    கங்குலி:-

    இந்திய அணி மிகவும் அற்புதமாக செயல்பட்டு டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது. டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பானது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

    சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கும், பயிற்சியாளர்கள் குழுவுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் எந்த பகுதியில் விளையாடினாலும் சிராஜ் இந்திய அணியை அவ்வளவு எளிதாக தோற்கவிடமாட்டார். ஓவல் டெஸ்டை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டனர்.

    வீராட் கோலி:-

    இந்திய அணியின் சிறந்த வெற்றி. சிராஜ், பிரசித் கிருஷ்ணாவின் மன உறுதியும், தொடர் முயற்சியும் இந்த அற்புதமான வெற்றியை நமக்கு கொடுத்துள்ளது. அணிக்காக எல்லாவற்றையும் அர்ப்பணிக்கும் சிராஜுக்கு சிறப்பு பாராட்டு. அவரை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அனில் கும்ப்ளே:-

    இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. என்ன ஒரு அருமையான டெஸ்ட் தொடர். அற்புதமாக ஆடிய 2 அணி வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள். முகமது சிராஜ் , பிரசித் கிருஷ்ணா அபாரமாக செயல்பட்டனர் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்.

    புஜாரா:-

    வரலாற்று வெற்றி. இந்திய அணியின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. சுவாரசியமாக சென்ற இந்த தொடரில் சிறப்பான முடிவு கிடைத்து உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டைப்போன்று சிறந்தது வேறு ஒன்றுமில்லை.

    ஹர்பஜன் சிங்:-

    முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்துவீசினார்கள். இந்திய அணிக்கு என்ன ஒரு சிறப்பான வெற்றி. அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

    ரகானே:-

    டெஸ்ட் கிரிக்கெட் இதைவிட சிறப்பானதாக இருக்க முடியாது. மிகவும் பரபரப்பான போட்டி. அழுத்தமான சூழலில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்.

    • காலிறுதி ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனையை ரைபகினா வீழ்த்தினார்.
    • அரையிறுதியில் விக்டோரியா எம்போகோ - ரைபகினா மோத உள்ளனர்.

    டொராண்டோ:

    கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ரைபகினா (கஜகஸ்தான்) - மார்டா கோஸ்ட்யுக் (உக்ரைன்) மோதினர்.

    இதில் முதல் செட்டை ரைபகினா எளிதில் கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற 2-வது செட்டில் கோஸ்ட்யுக் காயமடைந்தார். இதனால் அவரால் மேற்கொண்டு விளையாட முடியவில்லை.

    போட்டியை மேற்கொண்டு தொடர முடியாத சூழலில் ரைபகினா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் விக்டோரியா எம்போகோ (கனடா)- ஜெசிகா பௌசாஸ் மனிரோ (ஸ்பானிஷ்) ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் விக்டோரியா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதாக வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    அரையிறுதியில் விக்டோரியா எம்போகோ - ரைபகினா மோத உள்ளனர். 

    • இந்திய ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
    • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் பெர்த்தில் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.

    புதுடெல்லி:

    12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஹாக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் பெர்த்தில் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. ஆஸ்திரேலிய தொடருக்கான 24 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக நீடிக்கிறார்.

    இந்திய அணி வருமாறு:-

    கோல்கீப்பர்கள்: கிருஷ்ணன் பதாக், சுரஜ் கார்கெர், பின்களம்: சுமித், ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), சஞ்சய், அமித் ரோஹிதாஸ், நீலம் சஞ்சீப் செஸ், ஜூக்ராஜ் சிங், பூவன்னா, நடுகளம்: ராஜிந்தர் சிங், ராஜ்குமார் பால், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், ரபிசந்திர சிங் மொய்ராங்தெம், விஷ்ணுகாந்த் சிங், முன்களம்: மன்தீப் சிங், ஷிலானந்த் லக்ரா, அபிஷேக், சுக்ஜீத் சிங், தில்பிரீத் சிங், ஆதித்யா லாலேஜ், செல்வம் கார்த்தி (தமிழ்நாடு).

    பெங்களூரு சாய் மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணி, வருகிற 8-ந் தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கிறது.

    • இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

    கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 28 புள்ளிகளுடன் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியது.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மெதுவாக பந்துவீசியதற்காக இங்கிலாந்து அணிக்கு 2 புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதனால் 26 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 4வது இடத்தில உள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 36 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த வெற்றியின் மூலம் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது.

    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'ஆண்டர்சன் - டெண்டுல்கர்' டிராபிக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முடிவடைந்த முதல் 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் இருந்தது.

    இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

    இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

    இந்நிலையில் இந்தியா அணி தொடரை சமன் செய்தது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில் நாம் சிலவற்றை வெல்வோம், சிலவற்றை இழப்போம்.... ஆனால் நாம் ஒருபோதும் சரணடைய மாட்டோம்! சபாஷ் பாய்ஸ் என பதிவிட்டுள்ளார்.

    • 4-வது நாளில் ஏன் அரை மணி நேரத்திற்கு முன்பே போட்டியை முடித்தார்கள்.
    • நடுவர்கள் இரண்டு அணியிடமும் இது குறித்து கேட்டிருக்க வேண்டும்.

    லண்டன்:

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

    கடைசி நாளன இன்று இந்தியாவின் வெற்றிக்கு 4 விக்கெடுகள் தேவையாக இருந்தது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபாரமாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றியைத் தேடி தந்தனர்.

    சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.

    இந்நிலையில் போட்டி நான்காவது நாள் முடிந்து இருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கும் எனவும் நடுவர்கள் தவறு செய்து விட்டதாகவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் உசைன் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    திங்கட்கிழமை வேலை ரசிகர்கள் இந்த போட்டியை பார்க்க பெருமளவு பணத்தை செலவழித்து இருக்கிறார்கள். அவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் கூடியிருந்தது. அவர்களுக்கு ஆட்டத்தின் கிளைமாக்ஸ் 4-வது நாளிலே அரங்கேற அனுமதித்து இருக்க வேண்டும்.

    நான்காவது நாளில் இந்த போட்டி நடந்திருந்தால் ஒருவேளை இங்கிலாந்து அணி வெற்றிக்கு தேவையான 35 ரன்கள் அடித்திருக்கலாம். ஆட்டம் மேலும் 42 முதல் 43 நிமிடம் வரை நடத்தலாம் என்ற விதி இருந்த போதும். ஏன் அரை மணி நேரத்திற்கு முன்பே போட்டியை முடித்தார்கள் என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.

    நடுவர்கள் இரண்டு அணியிடமும் இது குறித்து கேட்டிருக்க வேண்டும். இரண்டு அணிகளில் யாராவது ஒருவர் கூட நாங்கள் நாளை விளையாடுகிறோம் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. நடுவர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு என்பதே கிடையாது. நேற்று ஆட்டம் நடைபெறாமல் இருந்தது நிச்சயம் அவமானம் தான்.

    என்று நாசர் உசேன் கூறியிருந்தார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விராட் கோலியை சில நேரம் மிஸ் செய்கிறேன்.
    • ஆனால் ஒவல் டெஸ்டில் எப்போதும் மிஸ் செய்கிறேன் எனக் கூறியிருந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணிக்கு இந்தியா 574 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. நேற்றைய 4ஆவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென் டக்கட் (54), ஜோ ரூட் (106), ஹாரி ப்ரூக் (11) ஆகியோரின் ஆட்டத்தால் இங்கிலாந்து இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    நேற்றைய ஆட்ட நேரம் முடியும் நேரத்தில் ஜோ ரூட், ப்ரூக் ஆட்டமிழந்தனர். அத்துடன் வெளிச்சம் இல்லாததால் போட்டி முன்னதாகவே முடிவடைந்தது. அப்போது இங்கிலாந்து வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது.

    இந்தியா 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதால் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முக்கியமான தருணத்தில் வெற்றி பெற முடியவில்லை. முன்னாள் வீரர்களான ரோகித் அல்லது விராட் கோலி இருந்திருந்தால் இந்த போட்டியின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என விமர்சனம் செய்தனர். அதில் சச தரூரும் தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் ரசிகர் ஆவார்.

    ஆனால் இன்று காலை 5ஆவது நாள் ஆட்டம் தொடங்கியதும் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசி 367 ரன்னில் இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன்செய்தது.

    இந்த நிலையில் நமது ஹீரோக்களுக்கு சபாஷ் என சச தரூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் "வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை... என்ன ஒரு வெற்றி (WHAT A WIN!) இங்கிலாந்துக்கு எதிரான தொடரை சமன் செய்ததில் இந்திய அணிக்கு மிகவும் உற்சாகமும் மகிழ்ச்சியும்! அணியில் காணப்பட்ட மன உறுதி, மன உறுதி மற்றும் ஆர்வம் நம்பமுடியாதவை. இந்த அணி சிறப்பு வாய்ந்தது.

    நேற்று முடிவு குறித்து நான் ஒரு சந்தேகத்தை வெளிப்படுத்தியதற்கு வருந்துகிறேன். ஆனால் முகமது சிராஜ் ஒருபோதும் நம்பிக்கையை நிறுத்தவில்லை! நம் ஹீரோக்களுக்கு வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    நேற்றைய போட்டிக்குப்பின் "இந்தத் தொடரில் விராட் கோலியை நான் சில முறை தவற விடுகிறேன். ஆனால், இந்த போட்டியில் எப்போதும் மிஸ் செய்கிறேன். அவருடைய பேட்டிங்கை தவிர்த்து கிரிட், தீவிரம், ஆடுகளத்தில் இருக்கும் உத்வேகம் உள்ளிட்டவை போட்டியின் முடிவை மாற்றியிருக்கலாம்" எனத் தெரிவித்திருந்தார்.

    ×