என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் அணிகள் உள்ளூர் பயிற்சியாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்கள் சிறப்பாக செயல்பட நேரம் கொடுக்க வேண்டும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் உள்ளூர் பயிற்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘நாம் ஏராளமான சிறந்த பயிற்சியாளர்களை கொண்டுள்ளோம் என்று நம்புகிறேன். அவர்கள் திறமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. கிரிக்கெட் துறையில், பயிற்சியாளர் துறையிலும் ஏராளமான திறமைகள் உள்ளன.

    நாம் அவர்கள் வளர்வதற்கான நம்பிக்கை கொடுப்பது அவசியம். அப்படி செய்தால் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். ஐபிஎல் தொடரில் ஏராளமானவர்களுக்கு துணைப் பயிற்சியாளர்கள் வாய்ப்பு கிடைக்காதது எனக்கு ஏமாற்றம் அளித்தது.

    ஐபிஎல் தொடரில் நிறைய இந்திய வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு உள்ளூர் சூழ்நிலைப் பற்றி அதிகமாக தெரிந்திருக்கும். பயிற்சியாளர்களும் அதேபோல்தான் தெரிந்து வைத்திருப்பார்கள். இந்திய பயிற்சியாளர்கள் மூலம் அணிகள் அதிக பயனை அடைந்திருப்பார்கள். இதனால் பயிற்சியாளர்கள் வளர வாய்ப்பு கொடுக்க வேண்டும்’’ என்றார்.
    எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான இரண்டு தருணங்களை மறக்கவே முடியாது என்று எம்எஸ் டோனி நினைவு கூர்ந்துள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. இந்தியாவுக்கு மூன்று ஐசிசி டிராபியை வாங்கிக் கொடுத்தவர். இவரது தலைமையில் இந்திய அணி, 2007-ல் டி20 உலகக்கோப்பை, 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது.

    எம்எஸ் டோனிக்கு இந்திய அணியில் ஏராளமான சிறந்த சம்பவங்கள் நடந்திருக்கும். ஆனால் இந்த இரண்டு விஷயங்கள்தான் மிகமிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எம்எஸ் டோனி கூறுகையில் ‘‘நான் இங்கு இரண்டு முக்கியமான விஷயங்களை சொல்லியாக வேண்டும். தென்ஆப்பிரிக்காவில் 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வென்று இந்தியா திரும்பியபோது, மும்பையில் உள்ள மரைன் டிரைவில் நாங்கள் திறந்த வெளி பேருந்தில் உலா வந்தோம். அப்போது அந்த பகுதியே ஸ்தம்பித்தது. காரில் இருந்து பொதுமக்கள் காரை விட்டு வெளியில் இறங்கி நின்றனர்.

    ஒவ்வொரு பொதுமக்களின் முகத்திலும் சிரிப்பை பார்த்த நான், அதை மிகவும் சிறந்த தருணமாக உணர்ந்தேன். ஏனென்றால், கூட்டத்தில் இருந்த ஏராளமான பொதுமக்கள் அவர்களுடைய விமான பயணத்தை தவற விட்டிருக்கலாம், முக்கியமான வேலைகள் கூட தடைபட்டிருக்கலாம். நாங்கள் பெற்ற வரவேற்பு மரைன் டிரைவின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை  குறையாமல் அப்படியே குறையாமல் இருந்து.

    வெற்றிக்கான ரன்னை அடித்த சந்தோசத்தில் எம்எஸ் டோனி

    2-வது நிகழ்வு 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியின்போது நடந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 15-20 ரன்கள் தேவையிருக்கும்போது, அனைத்து ரசிகர்களுமம் வந்தே மாதரம் என கோசம் எழுப்பினர்.

    இந்த இரண்டு தருணங்கள் மீண்டும் பிரதிபலிப்பது மிகவும் கடினம். இரண்டு எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான தருணங்கள்’’ என்றார்.
    லக்னோவில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் திணறி வருகிறது.
    ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கார்ன்வெல் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 187 ரன்னில் சுருண்டது. கார்ன்வெல் 25.3 ஓவர்களில் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் சேர்த்திருந்தது. கேம்ப்பெல் 30 ரன்னுடனும், ப்ரூக்ஸ் 19 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. கேம்ப்பெல் - ப்ரூக்ஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேம்ப்பெல் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனால் ப்ரூக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 214 பந்தில் 111 ரன்கள் சேர்த்தார்.

    டவ்ரிச் 42 ரன்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 277 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அமிர் ஹம்சா 5 விக்கெட்டும், ரஷித் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர், 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர் ஜாவித் அஹ்மதி 62 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களே எடுத்துள்ளது.

    தற்போது வரை கைவசம் மூன்று விக்கெட்டுக்கள் உள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் 19 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    இந்திய அணி உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நியாயப்படுத்துங்கள். இல்லையெனில் சஞ்சு சாம்சனிடம் இடத்தை பறிக்கொடுக்க நேரிடும் என லக்‌ஷ்மண் வலியுறுத்தியுள்ளார்.
    இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பணியில் ஜாம்பவானாக விளங்கிய எம்எஸ் டோனிக்குப் பதிலாக ரிஷப் பந்த்-ஐ இந்திய அணி நிர்வாகம் தயார் படுத்தி வருகிறது. ஆனால், சமீப காலமாக அவரது பேட்டிங் ஃபார்ம் மோசமாக உள்ளது.

    இதனால் ரிஷப் பந்துக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. இதனால் தேர்வுக்குழுவினர் மீது கடும் விமர்சனம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில்தான் தவான் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக்குழு வைத்துள்ள நம்பிக்கையை ரிஷப் பந்த் நியாயப்படுத்த வேண்டும். இல்லை எனில் இடத்தை சஞ்சு சாம்சன் பறிகொடுக்க நேரிடும் என விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து  லக்‌ஷ்மண் கூறுகையில் ‘‘நாங்கள் சஞ்சு சாம்சனை மாற்று வீரராக வைத்துள்ளோம் என்று இந்திய அணி தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகம் அழுத்தமான செய்தியை பதிவு செய்துள்ளது.

    ரிஷப் பந்துக்கு ஏராளமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்வுக்குழுவினர் அவரை சந்தித்து அணியின் சூழ்நிலையை தெரிவிப்பார்கள்.

    என்றாலும், இறுதியாக ரிஷப் பந்த் அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக்குழுவினர் வைத்துள்ள நம்பிக்கையை நியாயப்படுத்த வேண்டும். துரதிருஷ்டவசமாக ரிஷப் பந்தால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால், அணியின் முக்கிய வீரர். ரிஷப் பந்த்த களம் இறங்கி சிறந்த பந்தை சிக்சருக்கு தூக்கி அணியின் முடிவை அதிரடியாக மாற்றக்கூடியவர்.’’ என்றார்.
    வங்காளதேச கிரிக்கெட் வீரரான சாயிப் ஹசன் விசா முடிந்து இந்தியாவில் தங்கியிருந்த குற்றத்திற்காக கொல்கத்தா விமான நிலையத்தில் அபராதம் செலுத்திய பின் தாயகம் திரும்பினார்.
    கொல்கத்தா:

    வங்காளதேசம் கிரிக்கெட் அணி இம்மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்திய அணிக்கு எதிராக 3 டி20 போட்டித்தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இரண்டு தொடரையும் வங்காளதேச அணி இழந்தது. 

    இரு அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, பகலிரவு ஆட்டமாக கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியின் மூன்றாம் நாளே இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அன்றிரவே வங்காளதேச அணி வீரர்கள் சிலர் தாயகம் திரும்பினர்.

    டெஸ்ட் போட்டிகளில் மாற்று வீரராக பங்கேற்க வந்த சாயிப் ஹசன் கைவிரல்களிடையே ஏற்பட்ட காரணமாக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால் மற்ற வீரர்களுடன் தங்கியிருந்த ஹசனுக்கு தனது விசா முடிவடையும் காலம் தெரியவில்லை.

    இதையடுத்து நேற்று மாலை தாயகம் செல்ல கொல்கத்தா விமான நிலையத்திற்கு சென்றபோது, அவரது விசா காலாவதியாகி இரண்டு நாட்கள் ஆகியுள்ளதை குடியுரிமை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனால் டிக்கெட் பதிவு செய்திருந்த விமானத்தில் செல்ல அவர் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பிட்ட காலத்தை விட அதிகமாக தங்கியிருந்ததால் அபராதமாக ரூ.21 ஆயிரத்து 600 பணம் செலுத்திய பின் மற்றொரு விமானத்தில் ஏறி வங்காளதேசம் சென்றடைந்தார்.
    பல்வேறு புகார்களை கூறிய அம்பதிராயுடு மீது நடவடிக்கை எடுக்க ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
    ஐதராபாத்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஐதராபாத்தை சேர்ந்த அம்பதிராயுடு அறிவித்தார். பின்னர் அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

    சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே மற்றும் முஸ்தாக் அலி கோப்பைக்கான போட்டியில் ஐதராபாத் அணியின் கேப்டனாக அம்பதிராயுடு இருந்தார்.

    இதற்கிடையே அவர் ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது பல்வேறு புகார்களை தெரிவித்து இருந்தார். ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நடந்துள்ளது. பணம் மற்றும் ஊழல்வாதிகளால் ஐதராபாத் கிரிக்கெட் எப்படி முன்னேறும் என்று கூறி இருந்தார்.

    இதுதொடர்பாக தெலுங்கானா மந்திரிக்கும் தனது புகாரை அவர் அனுப்பி இருந்தார்.

    அம்பதிராயுடுவின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான அசாருதீன் கூறும்போது, “அவர் விரக்தி அடைந்த கிரிக்கெட் வீரர்” என்றார்.

    அசாருதீனின் கருத்துக்கு பதிலளித்த அம்பதிராயுடு, “இதை தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்க வேண்டாம். இந்த பிரச்சினை நம்மை விட பெரியது. தனிப்பட்ட மோதலை விட்டுவிட்டு வருங்கால கிரிக்கெட் வீரரை காப்பாற்றுங்கள்” என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் ஊழல் புகார் கூறிய அம்பதிராயுடு மீது நடவடிக்கை எடுக்க ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்திருந்தது.

    இது தொடர்பாக ஐதராபாத் கிரிக்கெட் சங்க செயலாளர் விஜய் ஆனந்த் கூறியதாவது:-

    அம்பதிராயுடு ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு இழிவு ஏற்படுத்தும் விதமாக பேசி இருக்கிறார்.அவர் விதிமுறைகளை மீறி உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

    தலைமைசெயல் அதிகாரி அவரிடம் விசாரணை நடத்த இருக்கிறார். அவரது அறிக்கையின் அடிப்படையில் அம்பதிராயுடுவின் மீது நடவடிக்கை இருக்கும்.
    கங்குலி தலைமையில்தான் வெளிநாடுகளில் அதிக வெற்றி பெற்றதாக விராட் கோலி கூறியதற்கு ஆதரவு தெரிவித்தும், கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்தும் காம்பீர் கருத்து தெரிவித்து உள்ளார்.
    புதுடெல்லி:

    கொல்கத்தாவில் நடந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறும்போது, “மன உறுதியை சோதிக்கும் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட கற்றுக்கொண்டோம். கங்குலி கேப்டனாக இருந்த போதுதான் இது தொடங்கியது. நாம் அதை முன்னெடுத்து செல்கிறோம்” என்றார்.

    விராட்கோலியின் இந்த கருத்துக்கு முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் பதிலடி கொடுத்து இருந்தார் அவர் கூறி இருந்ததாவது:-

    கங்குலி கேப்டனாக இருந்த 2000 ஆண்டுகளில் தான் இந்தியா வெற்றி பெற தொடங்கியதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    ஆனால் இந்திய அணி 1970 மற்றும் 1980களில் பல போட்டிகளில் வெற்றி பெற்றுஉள்ளது. அப்போது விராட் கோலி பிறந்திருக்க மாட்டார். கடந்த 2000 ஆண்டுக்கு பிறகுதான் கிரிக்கெட் தொடங்கியதாக பலர் இன்னும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    ஆனால் இந்திய அணி 1970களில் வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற தொடங்கியது. 1986-ல் இங்கிலாந்து தொடரை வென்றது. இதுதவிர பல தொடரையும் டிரா செய்து இருக்கிறது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறி இருந்தார்.

    இந்தநிலையில் விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்தும், கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்தும் முன்னாள் வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான காம்பீர் கருத்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விராட் கோலி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. அதே நேரத்தில் கங்குலி தலைமையில்தான் இந்திய அணி வெளிநாடுகளில் அதிகமான வெற்றிகளை பெற தொடங்கியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    சேவாக், ராகுல் டிராவிட், கங்குலி

    கவாஸ்கர் அல்லது கபில்தேவ் அல்லது மற்ற கேப்டன்கள் காலத்தில் இந்திய அணி எப்போதுமே சொந்த மண்ணில்தான் ஆதிக்கம் செலுத்தியது.

    ஆனால் கங்குலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகுதான் வெளிநாடுகளில் வெற்றி பெற தொடங்கினோம். அதிகமான வெற்றிகளை பெற்றோம். கங்குலி கேப்டனாக இருந்தபோது தொடங்கியதை நாம் முன்னெடுத்து செல்கிறோம் என்று விராட் கோலி கூறியிருப்பது வெளிநாடுகளில் பெற்ற வெற்றியைதான். இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நாளை தொடங்குகிறது.
    அடிலெய்டு:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2 டெஸ்ட் தொடரில் பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நாளை (29-ந்தேதி) தொடங்குகிறது.

    இந்த டெஸ்டில் பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடரை வெல்ல வாய்ப்பு உள்ளது.

    பிரிஸ்பேன் டெஸ்டில் மார்கஸ், வார்னர் சதம் அடித்து முத்திரை பதித்தனர். பந்து வீச்சில் ஸ்டார்க், (7 விக்கெட்), ஹாசல்வுட் (6 விக்கெட்) கும்மின்ஸ் (5 விக்கெட்) ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர்.

    பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் உள்ளது. ஆனால் அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலவீனமாகவே இருக்கிறது, பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் ஆகியோர் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

    இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா ஐ.சி.சி. உலக சாம்பியன்ஷிப் பட்டியலில் 176 புள்ளிகளை எட்டும். பாகிஸ்தான் அணி இதுவரை புள்ளிகள் எதுவும் பெறவில்லை. அந்த அணி வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ மட்டுமே புள்ளிகளை பெறும். வெற்றி பெற்றால் 60 புள்ளியும் டிரா செய்தால் 20 புள்ளியும் கிடைக்கும்.
    இங்கிலாந்து - நியூசிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நாளை தொடங்குகிறது. முந்தைய தோல்விக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
    ஹாமில்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மவுன்ட் மாங்கானுவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    முதலாவது டெஸ்டில் விக்கெட் கீப்பர் வாட்லிங்கின் இரட்டை சதமும், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெரின் அபார பந்து வீச்சும் (மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார்) நியூசிலாந்துக்கு இமாலய வெற்றியை தேடித்தந்தன. இந்த டெஸ்டுக்கான நியூசிலாந்து அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட், ஆல்-ரவுண்டர் கிரான்ட்ஹோம் நேற்று விலகினர். இதையடுத்து ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல், லோக்கி பெர்குசன், டாட் ஆஸ்டில் ஆகியோர் அந்த அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

    தொடரை கைப்பற்றும் உத்வேகத்தில் உள்ள நியூசிலாந்து அணி ஹாமில்டன் மைதானத்தில் கடைசியாக விளையாடிய 6 டெஸ்டுகளில் (5-ல் வெற்றி, ஒன்றில் டிரா) தோல்வி கண்டதில்லை. அந்த வீறுநடையை தொடரும் முனைப்புடன் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து படையினர் ஆயத்தமாக உள்ளனர்.

    தோல்வி எதிரொலியாக இங்கிலாந்து கேப்டன் 28 வயதான ஜோ ரூட் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறார். சமீப காலமாக அவரது பேட்டிங் மெச்சும்படி இல்லை. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 2, 11 ரன் மட்டுமே எடுத்தார். ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3 முறை டக்-அவுட் ஆனார். இந்த ஆண்டில் அவரது ரன்சராசரி 30-க்கும் குறைவாக (27.40) உள்ளது. கேப்டன் பதவியால் அவரது ஆட்டத்தின் திறன் பாதிப்புக்குள்ளாகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    பழைய நிலைக்கு திரும்புவதுடன், நியூசிலாந்துக்கும் பதிலடி கொடுத்தால் தான் அவர் சிக்கலில் இருந்து விடுபட முடியும்.

    இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நேற்று கூறும் போது, ‘இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருப்பது மிகப்பெரிய நெருக்கடியாகும். சக வீரர்கள், அணியின் உதவியாளர்கள், அணி நிர்வாகம் என்று அனைவரும் கேப்டன் ஜோ ரூட்டுக்கு ஆதரவாக இருக்கிறோம்.’ என்றார்.

    முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை ரசிகர் ஒருவர் இனவெறியுடன் திட்டியது சர்ச்சையை கிளப்பியது. இதற்காக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மீண்டும் இது போன்ற சம்பவம் நிகழாத வண்ணம் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ரசிகர்கள் மீதான கண்காணிப்பை தீவிரமாக்க முடிவு செய்துள்ளது.

    இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை-ஒடிசா அணிகள் மோதுகின்றன.
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் 26-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன.

    2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி தனது முதல் 4 ஆட்டங்களில் ஒரு டிரா, 3 தோல்வியை சந்தித்தது. சென்னை அணி இனிமேல் அவ்வளவு தான் என்று எல்லோரும் நினைத்த நிலையில் சொந்த மண்ணில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் (இஞ்சுரி டைமில்) 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

    ஒடிசா அணி 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வி கண்டுள்ளது. அந்த அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக (கேரளா, கொல்கத்தா அணிக்கு எதிராக) டிரா கண்டது. 2-வது வெற்றியை ருசிக்க இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இந்த போட்டி குறித்து சென்னையின் எப்.சி. அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி நேற்று கருத்து தெரிவிக்கையில், ‘எனது முன்கள வீரர்களின் திறமை குறித்து நான் ஒருபோதும் சந்தேகம் கொண்டதில்லை. பயிற்சியில் அவர்கள் ஒவ்வொரு நாளும் கோல் அடிக்கிறார்கள். ஆந்த்ரே ஸ்கெம்பிரி, நெர்ஜூஸ் வல்ஸ்கிஸ் ஆகியோர் எங்கள் அணிக்கு வருவதற்கு முன்பே அவர்களின் திறமை குறித்து எனக்கு நன்கு தெரியும். பயிற்சி ஆட்டத்தில் நன்றாக விளையாடிய அவர்கள் ஐ.எஸ்.எல். போட்டியில் திறமையை நிரூபிக்கவில்லை. இது கவலை அளிப்பதாக இருந்தது. இருவரும் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் தங்கள் தரத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் மீதான நம்பிக்கையை நான் ஒருபோதும் இழக்கவில்லை. அவர்களது திறமை இன்னும் நிறைய வெளியாகும் என்று நம்புகிறேன்’ என்றார்.

    இதற்கிடையே, கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட்- மும்பை சிட்டி அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. 4 கோல்களும் முதல் பாதியிலேயே அடிக்கப்பட்டது. பிற்பாதியில் யாரும் கோல் போடவில்லை.
    அசாமில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. மற்றும் மும்பை சிட்டி எப்.சி. அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது.
    கவுகாத்தி:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. மற்றும் மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 9 மற்றும் 42-வது நிமிடங்களில் நார்த்ஈஸ்ட் அணியினர் தலா ஒரு கோல் அடித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மும்பை அணியின் செர்மிடி 22, 32 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 2-2 என சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், இரு அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என சமனில் முடிந்தது.
    இலங்கையின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளீதரன் வடக்கு மாகாணம் கவர்னராக நியமனம் செய்யப்பட இருக்கிறார்.
    இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதும் அவரது அண்ணன் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார்.

    இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே முரளீதரனை வடக்கு மாகாணம் கவர்னராக பொறுப்பேற்கும்படி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் அவர் கவர்னர் பதவியை ஏற்கலாம் எனத்தெரிகிறது.

    47 வயதாகும் முத்தையா முரளீதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுக்கள் கைப்பற்றி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
    ×