search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப்ரூக்ஸ்
    X
    ப்ரூக்ஸ்

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட்: தோல்வி முகத்தில் ஆப்கானிஸ்தான்

    லக்னோவில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் திணறி வருகிறது.
    ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கார்ன்வெல் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 187 ரன்னில் சுருண்டது. கார்ன்வெல் 25.3 ஓவர்களில் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் சேர்த்திருந்தது. கேம்ப்பெல் 30 ரன்னுடனும், ப்ரூக்ஸ் 19 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. கேம்ப்பெல் - ப்ரூக்ஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேம்ப்பெல் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனால் ப்ரூக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 214 பந்தில் 111 ரன்கள் சேர்த்தார்.

    டவ்ரிச் 42 ரன்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 277 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அமிர் ஹம்சா 5 விக்கெட்டும், ரஷித் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர், 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர் ஜாவித் அஹ்மதி 62 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களே எடுத்துள்ளது.

    தற்போது வரை கைவசம் மூன்று விக்கெட்டுக்கள் உள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் 19 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    Next Story
    ×