என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இளையோர் உலக கோப்பை காலிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பாகிஸ்தான், அரையிறுதியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
    தென்ஆப்பிரிக்காவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 4-வது காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான பர்ஹான் ஜாகில் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் 49.1 ஓவரில் 189 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் மொகமது ஹரைரா ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் 41.1 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    பாகிஸ்தானோடு இந்தியா, நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான், நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான முதல் அரையிறுதி ஆட்டம் வருகிற 4-ந்தேதி நடக்கிறது. 6-ந்தேதி நடக்கம் 2-வது அரையிறுதியில் வங்காளதேசம் - நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.
    கடைசி வரை ‘த்ரில்’லாக சென்ற இரண்டு போட்டிகளுக்குப் பிறகு, அற்புதமான ஆட்டத்தை நம்மால் கேட்க இயலாது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று வெலிங்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 165 ரன்கள் சேர்த்தது. பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியாலும் 165 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது.

    போட்டி சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 13 ரன்கள் அடித்தது. பின்னர் 14 ரன்கள் அடித்து இந்தியா வெற்றி பெற்றது.

    அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டிக்குப்பின் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘கடந்த இரண்டு போட்டிகளில் இருந்து நான் சில புதிய விஷயங்கள் கற்றுள்ளேன். அது எதிரணி சிறப்பாக விளையாடும்போது, இறுதி கட்டம் வரை பொறுமையாக இருந்து, போட்டியை தங்கள் பக்கம் திரும்ப முயற்சி செய்ய வேண்டும் என்பதுதான்.

    இதைவிட அற்புதமான போட்டிகளை நம்மால் கேட்க முடியாது. இதற்கு முன் நாங்கள் சூப்பர் ஓவரில் விளையாடியது கிடையாது. தற்போது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். இது அணியின் தன்மையை காட்டுகிறது.

    தொடக்கத்தில் கேஎல் ராகுல் உடன் சஞ்சு சாம்சனை சூப்பர் ஓவரில் களம் இறக்க நினைத்தோம். ஆனால் கேஎல் ராகுல் என்னிடம், நீங்கள்தான் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும். உங்களுக்கு அனுபவம் அதிகம் என்றார். அதனால்தான் நான் தொடக்க வீரராக களம் இறங்கினேன்.

    கேஎல் ராகுலின் முதல் இரண்டு ஷாட்டுகளும் முக்கியமானதாக அமைந்தது. அதன்பின் நீங்கள் இடைவெளி பார்த்து பந்தை தட்டிவிட்டால் அணியை வெற்றி பெற வைத்து விடலாம். டாப் ஆர்டர் வரிசையில் சஞ்சு சாம்சன் பயமில்லாமல் விளையாடக் கூடியவர். நாங்கள் ஆடுகளத்தை சரியாக கணிக்கவில்லை. அவர் ஆட்டத்தின் வேகத்தை அப்படியே எடுத்துச் செல்ல முயன்றார். அவரது திறமை மீது அவர் உறுதியாக இருக்க வேண்டும். சைனி மீண்டும் வேகமாக பந்து மூலம் ஈர்க்கப்பட்டுள்ளார்’’ என்றார்.
    மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் டொமினிக் தீம் ஸ்வேரேவ்-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-வது அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் ஐந்தாம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் - 7-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    இருவரும் முன்னணி வீரர்கள் என்பதால் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பரபரப்பாக சென்றது. முதல் செட்டை ஸ்வேரேவ் 6-3 எனக் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-வது செட்டை டொமினிக் தீம் 6-4 எனக் கைப்பற்றினார்.

    3-வது செட்டில் இருவரும் கடுமையாக போராடினர். ஆட்டம் சமநிலை பெற்றதால் டை-பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 7-3 என டொமினிக் தீம் கைப்பற்றினார். 4-வது செட்டும் டை-பிரேக்கர் வரை சென்றது. இதையும் 7-4 எனக் கைப்பற்றி டொமினிக் தீம் 3-6, 6-4, 7(7)-6(3), 7(7)-6(4) என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் டொமினிக் தீம் - ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    பிக் பாஷ் குவாலிபையரில் மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் அணியை 99 ரன்னில் சுருட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சிட்னி சிக்சர்ஸ்.
    பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பிளே-ஆப்ஸ் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று குவாலிபையர் ஆட்டம் நடைபெற்றது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த சிட்னி சிக்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இரண்டு அணிகளும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கின.

    மெல்போர்ன் ஸ்டார்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் சீரான பந்து வீச்சால் சிட்னி சிக்சர்ஸ் வீரர்கள் ரன்கள் எடுக்க திணறினர். பிலிப் 28 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார். ஸ்டீவ் ஸ்மித் 18 பந்தில் 24 ரன்களும், சில்க் ஆட்டமிழக்காமல் 21 பந்தில் 25 ரன்களும் அடிக்க சிட்னி சிக்சர்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் மேடின்சன் 15 ரன்னில் ஆட்டமிழந்தா்ர. அதன்பின் வந்த ஸ்டாய்னிஸ் (5), லர்கின் (4), ஹேண்ட்ஸ்காம்ப் (4), கோட்ச் (4), கவுல்டர்-நைல் (7) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் மேக்ஸ்வெல் 16 ரன்கள் சேர்த்தார். ஹின்சிஃப் ஆட்டமிழக்காமல் 25 ரன்கள் எடுத்தாலும், மெல்போர்ன் ஸ்டார்ஸ் 99 ரன்னில் சுருண்டது. இதனால் சிட்னி சிக்சர்ஸ் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    வெலிங்டனில் நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் இந்தியா 14 ரன்னை சேஸிங் செய்து வெற்றி பெற்றது.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா மணிஷ் பாண்டேயின் (50 அவுட் இல்லை) அரைசதத்தால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் மந்தமாக உயர்ந்தது. 5-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் மார்ட்டின் கப்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து 22 ரன்கள் எடுத்திருந்தது.

    2-வது விக்கெட்டுக்கு கொலின் முன்றோ உடன் விக்கெட் கீப்பர் சைபெர்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. கொலின் முன்றோ 38 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி விளையாடிய விதத்தை பார்க்கும்போது நியூசிலாந்து எளிதில் வெற்றிபெறும் என்ற நிலையில் இருந்தது.

    இந்நிலையில்தான் 12-வது ஒவரின் 4-வது பந்தை பவுண்டரி லைன் அருகே அடித்துவிட்டு  இரண்டாவது ரன்னுக்கு மெதுவாக ஓடினார் கொலின் முன்றோ. ஷர்துல் தாகூர் பவுண்டரி லைனில் இருந்து விக்கெட் கீப்பருக்கு துல்லியமாக வீசமாட்டார் என்ற நினைப்பில் அப்படி ஓடினார். அப்போது விராட் கோலி பந்தை இடையிலேயே பிடித்து, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஸ்டம்பை தகர்த்தார். இதனால் முன்றோ 47 பந்தில் 64 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் மூலம் வெளியேறினார். அப்போது நியூசிலாந்து 96 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து வந்த ப்ரூஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபக்கம் சைபெர்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் நியூசிலாந்து வெற்றியை நோக்கிச் சென்றது.

    நியூசிலாந்து அணிக்கு கடைசி 18 பந்தில் 18 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி சைபெர்ட் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் பும்ரா 7 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி இரண்டு ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது.

    19-வது ஓவரை நவ்தீப் சைனி வீசினார். மிகவும் சிறப்பாக வீசிய சைனி நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது.

    கடைசி ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். முதல் பந்தை ராஸ் டெய்லர் தூக்கி அடிக்க ஷ்ரேயாஸ் அய்யர் மிகவும் சிறப்பான வகையில் கேட்ச் பிடித்தார். அடுத்து மிட்செல் களம் இறங்கினார். இவர் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் கடைசி நான்கு பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது.

    3-வது பந்தை பவுன்சராக வீசினார். இந்த பந்தை மிட்செல் அடிக்க தவறினார். ஆனால் ‘பை’ மூலம் ஒரு ரன் எடுக்க ஓடினர். அப்போது விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் சைபெர்ட்டை ரன்அவுட் ஆக்கினார். இதனால் கடைசி மூன்று பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்த தாகூர், ஐந்தாவது பந்தில் மிட்செல்-ஐ அவுட்டாக்கினார். இதனால் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க நியூசிலாந்து அணி 165 ரன்களே எடுத்தது.

    இரு அணிகளின் ஸ்கோரும் சமன் ஆனதால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 13 ரன்கள் அடித்தது. பின்னர் 14 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். டிம் சவுத்தி பந்து வீசினார்.

    கேஎல் ராகுல் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 3-வது பந்தில் ஆட்டமிழந்தார். 3 பந்தில் நான்கு ரன் தேவை என்ற நிலையில் விராட் கோலியுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். 4-வது பந்தில் இரண்டு ரன்கள் அடித்த விராட் கோலி ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

    ஏற்கனவே ஹாமில்டனில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியிலும் இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றிருந்தது. தற்போது 2-வது முறையாக சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 4-0 என வெற்றி பெற்றுள்ளது.
    ஐபிஎல் அறிமுகம் சீசனில் கோப்பையை கைப்பற்றிய ராஜஸ்தான் அணியில் இடம் பிடித்திருந்த சோஹைல் தன்விர், ஐபிஎல்தான் உலகின் சிறந்த டி20 லீக் என்று தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால்  (பிசிசிஐ) 2008-ம் ஆண்டு இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் தொடர் தற்போது உலகளில் நம்பர் ஒன் டி20 லீக்காக திகழ்கிறது.

    2008-ம் ஆண்டு நடைபெற்ற அறிமுக தொடரில் பாகிஸ்தான் வீரர்களும் கலந்து கொண்டனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் தன்விர் இடம் பிடித்திருந்தார்.

    அவர் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுதான் ஒரு பந்து வீச்சாளரின் சிறந்த பந்து வீச்சாக இருந்து வருகிறது. அறிமுக தொடரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கைப்பற்ற இவரின் துடிப்பான பந்து வீச்சும் முக்கிய காரணமாக இருந்தது.

    வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுக்கும் ஐபிஎல் தொடரில் 2009-ல் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது வரை தடை நீடித்து வரும் நிலையில், உலகின் நம்பர் ஒன் லீக் ஐபிஎல்தான். அதில் விளையாட முடியாதது வருத்தம் அளிக்கிறது என்று சோஹைல் தன்விர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சோஹைல் தன்விர் கூறுகையில் ‘‘தொழில்முறை கிரிக்கெட்டர்களான நான் மற்றும் வேறு சில பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாதது குறித்து வருத்தம் அடைந்திருப்பார்கள். உலகின் நம்பர் ஒன் லீக் ஐபிஎல்தான். எந்தவொரு வீரரும் விளையாட விருப்பம் இல்லை என்று சொல்லமாட்டார்கள்.

    நான் மைதானத்தில் மட்டும் அதிக அளவில் கற்றுக் கொள்ளவில்லை. வீரர்கள் அறையில் சில சீனியர் வீரர்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. வார்னர் உத்வேகம் அளிப்பதில் மிகச் சிறந்தவர். ஐபிஎல் போட்டியில் என்னை சிறப்பாக பயன்படுத்தினார்’’ என்றார்.
    உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
    உலக விளையாட்டு அமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

    ஆன்-லைன் மூலம் நடந்த வாக்கெடுப்பில் அவருக்கு ரசிகர்கள் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 477 வாக்குகள் அளித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

    ஹாக்கி விளையாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த கவுரவம் கிடைப்பது இதுவே முதல் முறையாகும். ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணியை தகுதி பெற வைத்ததில் முக்கிய பங்காற்றிய ராணி ராம்பால், இந்த விருதை ஹாக்கி சமூகத்துக்கும், இந்திய அணிக்கும் அர்ப்பணிப்பதாக அறிவித்துள்ளார்.
    விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் ஏமாற்ற மணிஷ் பாண்டே பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடிக்க நியூசிலாந்துக்கு 166 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் ரோகித் சர்மா, ஜடேஜா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. சைனி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக கேன் வில்லியம்சன் களம் இறங்கவில்லை. டிம் சவுத்தி கேப்டனாக செயல்படுகிறார். டிம் சவுத்தி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் அதிரடி காட்ட சஞ்சு சாம்சன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 11 ரன்னில் ஆட்டமிழந்தார். என்றாலும் இந்தியா 4.3 ஓவரில் 48 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 1 ரன்னிலும் வெளியேறினார். இதனால் இந்தியாவின் ஸ்கோரில் மந்தம் ஏற்பட்டது.  கேஎல் ராகுல் போட்டியை கடைசி வரை கொண்டு செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் 26 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 8.4 ஓவரில் 75 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் வந்த டுபே 12 ரன்னிலும்,  வாஷிங்டன் சுந்தர் டக்அவுட்டிலும் வெளியேற, போட்டியை கடைசி வரை கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் மணிஷ் பாண்டே.

    அவர் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.  ஷர்துல் தாகூர் 15 பந்தில் 20 ரன்கள் சேர்த்து அவருக்கு உதவினார். இதனால்  இந்தியா 150 ரன்னை நோக்கி சென்றது. 19-வது ஓவரில் நவ்தீப் சைனி 10 ரன்கள் அடிக்க இந்தியா 154 ரன்னைத் தொட்டது.

    கடைசி ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினால் மணிஷ் பாண்டே. ஐந்தாவது பந்தில் ஒரு ரன் அடித்து 36 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்தது.

    மணிஷ் பாண்டே 50 ரன்னுடனும், சைனி 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் இஷ் சோதி 3 விக்கெட்டும், பென்னட் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    டெஸ்ட் போட்டியில் மட்டுமே இடம் பிடித்து விளையாடி வரும் நிலையில், ஒருநாள் போட்டிக்கு திரும்புவதில் கவனம் செலுத்தி வருகிறேன் என உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் உமேஷ் யாதவ். 32 வயதாகும் இவர் இந்திய அணிக்காக 45 டெஸ்ட், 75 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மட்டுமே தொடர்ந்து இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

    கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிதான் அவருடைய கடைசி போட்டியாகும்.

    இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு திரும்புவதில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உமேஷ் யாதவ் கூறுகையில் ‘‘நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பை எனக்கு அளித்த தேர்வுக் குழுவினருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். அவர்கள் சிறந்த நீதியாளர்கள். மீண்டும் ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பும் வகையில் எனது திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்து கொண்டு வருகிறேன். இதற்காக நான் என்ன செய்ய வேண்டுமென்றாலும் செய்வேன்’’ என்றார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரரான கிறிஸ் கெய்ல் நேபாளத்தில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக்கில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல். 40 வயதாகும் இவர் ஏறக்குறைய உலகளவில் நடைபெறும் பெரும்பாலான டி20 லீக்கில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் நேபாளத்தில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான எவரெஸ்ட் பிரிமீயர் லீக்கில் விளையாட இருக்கிறார். இந்த லீக்கில் விளையாடும் போகாரா ரினோஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
    ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் போட்டியை நடத்தும் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது வங்காளதேசம்.
    13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்த 3-வது கால்இறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் தென்ஆப்பிரிக்கா, வங்காளதேச அணியுடன் மோதியது. ‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பிரைஸ் பார்சன்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

    இதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. தன்ஸித் ஹசன் (80 ரன், 12 பவுண்டரி), டவ்ஹித் ஹிரிடோய் (51 ரன்), ஷஹதத் ஹூசைன் (74 ரன், 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அரைசதம் விளாசினர்.

    அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணி வங்காளதேச சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. லுக் பியூபோர்ட் (60 ரன்), ஜோனதன் பேர்டு (35 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

    முடிவில் தென்ஆப்பிரிக்கா 42.3 ஓவர்களில் 157 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் வங்காளதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரகிபுல் ஹசன் 9.3 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். ஏற்கனவே நடப்பு சாம்பியன் இந்தியாவும், நியூசிலாந்தும் அரைஇறுதிக்கு முன்னேறி விட்டன.

    இன்று நடக்கும் 4-வது கால்இறுதியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன. மொத்தம் 3 ஆசிய அணிகள் அரைஇறுதியை எட்டுவது உறுதியாகியுள்ளது.
    பெங்களூருவில் நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஐதராபாத் அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு அணி.
    பெங்களூரு:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    பெங்களூருவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி மற்றும் ஐதராபாத் எப்சி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பம் முதலே பெங்களூரு அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். அந்த அணியின் நிஷு குமார் ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார். அதன்பின்னர், ஆட்டம் முடியும் வரை இரு அணி வீரர்களும் கோல் எதுவும் கிடைக்கவில்லை.

    இறுதியில், பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
    ×