என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பெங்களூருவில் நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஐதராபாத் அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு அணி.
    பெங்களூரு:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    பெங்களூருவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி மற்றும் ஐதராபாத் எப்சி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பம் முதலே பெங்களூரு அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். அந்த அணியின் நிஷு குமார் ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார். அதன்பின்னர், ஆட்டம் முடியும் வரை இரு அணி வீரர்களும் கோல் எதுவும் கிடைக்கவில்லை.

    இறுதியில், பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
    இன்ஸ்டாகிராமில் 20 கோடி பின்தொடர்பவர்களை கொண்டு கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனைப் படைத்துள்ளார்.
    போர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்காணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் வெளியிடும் படங்கள் மற்றும் செய்திகளை படிக்க சமூக வலைத்தளங்களில் அவர் பின்தொடர்கிறார்கள்.

    அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 20 கோடியை தாண்டியுள்ளது. இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் 20 கோடியை தாண்டிய முதல் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    மெஸ்சியை 14.1 கோடி பேரும், நெய்மரை 13.2 கோடி பேரும் பின்தொடர்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் விளம்பரம் தொடர்பான ஒரு போஸ்டை பதிவு செய்வதன் மூலம் சுமார் 7.30 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ஆஸ்திரேலிய ஓபனில் தோல்வியடைந்த நிலையிலும், இன்னும் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல முடியும் என்று 38 வயதாகும் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா ஓபன் அரையிறுதியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் செர்பியாவின் ஜோகோவிச்சிடம் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 38 வயதாகும் ரோஜர் பெடரருக்கு இந்த தோல்வி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

    ஏற்கனவே போட்டிகளை குறைத்துக் கொண்டு குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார். இதனால் ஓய்வு பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால், போட்டிக்கு பின் பேட்டியளித்த அவர், ஓய்வு எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘என்னால் தொடர்ந்து விளையாடி கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல முடியும் என்று நம்புகிறேன். தற்போது ஓய்வு குறித்து எந்த திட்டமும் இல்லை’’ என்றார்.

    ரோஜர் பெடரர் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ரஞ்சி டிராபி கிரிக்கெட்டின் 6-வது சுற்றில் கர்நாடகா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், சவுராஷ்டிரா, குஜராத் அணிகள் வெற்றி பெற்றன.
    ரஞ்சி டிராபி கிரிக்கெட்டின் 6-வது சுற்று ஆட்டங்கள் கடந்த 27-ந்தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்றன. இதில் பெரும்பாலான ஆட்டங்கள் நேற்றைய 3-வது நாளிலேயே முடிவடைந்தன. இன்றைய கடைசி நாளில் சில போட்டிகளில் முடிவுகள் கிடைத்தன. சில ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

    அசாம் அணிக்கெதிராக ஒடிசா இன்னிங்ஸ் மற்றும் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திரிபுராவுக்கு எதிராக மகாராஷ்டிரா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மேகாலயா - பீகார், பெங்கால் - டெல்லி, நாகலாந்து - மிசோரம், மும்பை - இமாச்சல பிரதேசம், சத்தீஷ்கர் - ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் - ஹரியானா,  சண்டிகர் - புதுச்சேரி இடையிலான ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

    மணிப்பூரை 232 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிக்கிம். கேரளாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆந்திரா. விதர்பாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத். ஐதராபாத் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான். பரோடாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சவுராஷ்டிரா.

    மத்திய பிரதேசம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய உத்தர பிரதேசம். ரெயில்வேஸ் அணியை கர்நாடகாவும், ஜார்க்கண்ட்-ஐ சர்வீசஸ் அணியும், அருணாச்சல பிரதேசம் அணியை கோவாவும் வீழ்த்தின.
    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக்கின் எலிமினேட்டர் சுற்றில் ஹொபார்ட் ஹரிகேன்ஸ் அணியை 57 ரன்னில் வீழ்த்தியது சிட்னி தண்டர்.
    பிக் பாஷ் டி20 லீக்கில் எலிமினேட்டர் போட்டி இன்று ஹோபார்ட் நகரில் நடைபெற்றது. ஹோபார்ட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிட்னி தண்டர் - ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும்  தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    கவாஜா 34 பந்தில் 54 ரளுகளும், ஹேல்ஸ் 37 பந்தில் 60 ரன்களும விளாசினர். கேப்டன் பெர்குசன் 22 பந்தில் 23 ரன்களும், ஆல்-ரோஸ் 21 ரன்களும் அடிக்க சிட்னி தண்டர்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது

    பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹோபார்ட் அணியின் மேத்யூ வடே, டி'அர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிட்னி தண்டரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. இதனால் சிட்னி தண்டர் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    நியூசிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியின் சூப்பர் ஓவரில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் அடித்ததன் மூலம் உலக சாதனைப் படைத்துள்ளது.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 179 ரன்கள் அடித்தது. பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த நியூசிலாந்து கேன் வில்லியம்சனின் (95) சிறப்பான ஆட்டத்தால் வெற்றியை நோக்கி சென்றது.

    ஆனால் கடைசி ஓவரை முகமது ஷமி சிறப்பாக வீச நியூசிலாந்து அணியும் 179 ரன்களே அடித்தது. போட்டி சமனில் முடிவடைந்ததால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

    சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் அடித்தது. பின்னர் 18 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. முதல் நான்கு பந்தில் 8 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ரோகித் சர்மா கடைசி இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு விரட்டினார். இதனால் இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

    இந்தியா விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட் சூப்பர் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் அடித்த முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. இதற்து முன் 2012-ல் வெஸ்ட் இண்டீஸ் 19 ரன்கள் எடுத்திருந்தது.
    மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபனில் ரோஜர் பெடரரை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்.
    ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் - 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    காலிறுதியில் ஐந்து செட் வரை சென்று கடும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்ற ரோஜர் பெடரரால் ஜோகோவிச் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டில் மட்டும் நெருக்கடி கொடுத்தார். என்றாலும் டை-பிரேக்கரில் 7-1 என ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    ஆனால் 2-வது செட் மற்றும் 3-வது செட்டில் பெடரரால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 2-வது செட்டை 6-4 எனவும், 3-வது செட்டை 6-3 எனவும் ஜோகோவிச் கைப்பற்றி நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் - டொமினிக் தீம் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி, 4-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
    ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. மெல்போர்ன் நகர் ரோட் லேவர் அரங்கத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி - 14-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் சோபியா கெனின் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி சொந்த மண்ணில் விளையாடியதால் அவருக்கு கூடுதல் பலமாக கருதப்பட்டது. ஆனால் சோபியா கெனின் அவரை திணறடித்தார். இதனால் முதல் செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சோபியா கெனின் 7(8) - 6(6) என முதல் செட்டை கைப்பற்றினார்.

    சோபியா கெனின்

    2-வது செட்டிலும் கெனின் கையே ஓங்கியது. இதனால் 2-வது செட்டை 7-5 எனக் கைப்பற்றி நேர்செட்டில் ஆஷ்லேவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப் - ஸ்பெயினைச் சேர்ந்த முகுருசா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தின.

    முகுருசா

    முதல் செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் தரநிலை பெறாத முகுருசா 7(10) - 6(8) என முதல் செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டை 7-5 எனக் கைப்பற்றி நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் முகுருசா.

    நளைமறுநாள் (பிப்ரவரி 1-ந்தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் சோபியா கெனின் - முகுருசா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
    சங்ககரா தலைவராக இருக்கும் மெரில்போன் கிரிக்கெட் கிளப் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
    இங்கிலாந்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் கிளப் மெரில்போன் கிரிக்கெட் கிளப். இந்த கிளப் பாகிஸ்தான் சென்று மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    பாகிஸ்தானில் நடத்தப்பட்டு வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும் லாகூர் குவாலண்டர்ஸ், முல்தான் சுல்தான்ஸ் அணிகளுக்கு எதிராக தலா ஒரு போட்டிகளில் விளையாடுகிறது. மேலும், பாகிஸ்தான் உள்ளூர் டி20 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற நார்தர்ன் அணிக்கு எதிராக ஒரு போட்டியிலும் விளையாடுகிறது.

    இதற்கான எம்சிசி அணிக்கு குமார் சங்ககரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எம்சிசி-யின் தலைவராக உள்ளார்.
    கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ 216 ரன்னில் சுருண்டது.
    இந்தியா ‘ஏ’ - நியூசிலாந்து ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து ‘ஏ’ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி திணறியது. குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஈஸ்வரன் (8), மயங்க் அகர்வால் (00, பன்சால் (18) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதனால் இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 4-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

    இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 153 ரன்னாக இருக்கும்போது ஹனுமா விஹாரி 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷுப்மான் கில் 83 பந்தில் 83 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அப்போது இந்தியா ‘ஏ’ ஐந்து விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் 33 ரன்னுக்குள் மீதமுள்ள ஐந்து விக்கெட்டுக்களையும் இழந்த இந்தியா ‘ஏ’ முதல் இன்னிங்சில் 216 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து ‘ஏ’ முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்துள்ளது.
    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜாப்ரா ஆர்சர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்த 3-1 எனக் கைப்பற்றியது.

    அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 4-ந்தேதி தொடங்குகிறது. அதன்பின் 12-ந்தேதி மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

    டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் டெஸ்ட் போட்டிக்குப்பின் ஜாப்ரா ஆர்சருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. வலி அதிகமாக இருந்ததால் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை.

    இந்நிலையில் டி20 தொடரிலும் இருந்து விலகியுள்ளார். இதனால் அவர் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். அவருக்குப் பதிலாக சகிப் மெஹ்மூத் சேர்க்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், பெர்குசன், ஹென்றி ஆகியோர் சேர்க்கப்படவில்லை.
    நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் முடிந்த உடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

    இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட், பெர்குசன், ஹென்றி ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை.

    இந்தியா ‘ஏ’ அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய கைல் ஜேமிசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹமிஷ் பென்னெட், ஸ்காட் குகெலின் ஆகியோர் 2017-க்குப் பிறகு அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன டாம் லாதமும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கேன் வில்லியம்சன், 2. ஹமிஷ் பென்னெட், 3. டாம் பிளன்டெல், 4. கொலின் டி கிராண்ட்ஹோம், 5. மார்ட்டின் கப்தில், 6. கைல் ஜேமிசன், 7. ஸ்காட் குகலின், 8. டாம் லாதம், 9. ஜிம்மி நீசம், 10. ஹென்றி நிக்கோல்ஸ், 11. மிட்செல் சான்ட்னெர், 12. இஷ் சோதி, 13. டிம் சவுத்தி, 14. ராஸ் டெய்லர்.
    ×