என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே அணி வருகிற 20-ந்தேதி பாகிஸ்தான் சென்றடைகிறது.
    ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அக்டோபர் 30-ந்தேதி ராவல் பிண்டியில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்காக 20 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணி 20-ந்தேதி பாகிஸ்தான் சென்றடைகிறது.

    21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தனிமைப்படுத்திக் கொள்கிறது. அதன்பின் 28 மற்றும் 29-ந்தேதிகளில் பயிற்சி மேற்கொள்கிறது.

    ஒருநாள் தொடர் அக்டோபர் 30-ந்தேதி, நவம்பர் 1-ந்தேதி மற்றும் 3-ந்தேதிகளில் நடக்கிறது. டி20 தொடர் நவம்பர் 7-ந்தேதி, 8-ந்தேதி மற்றும் 10-ந்தேதி நடக்கிறது.

    டி20 கிரிக்கெட் போட்டிகள் நவம்பர் 7-ந்தேதி, 8-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் நடக்கிறது. தொடர் முடிந்ததும் 12-ந்தேதி ஜிம்பாப்வே புறப்படுகிறது.
    முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரியான் பராக் - டெவாட்டியா அதிரடியால் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
    ஐபிஎல் தொடரின் 26-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது, அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணி மணிஷ் பாண்டே (54), டேவிட் வார்னர் (48) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் அடித்தது.

    பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான பென் ஸ்டோக்ஸ் (5), ஜோஸ் பட்லர் (16), ஸ்டீவ் ஸ்மித் (5) அடுத்தடுத்து ஆட்டமிழக்க 26 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது.

    அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 26 ரன்களும், ராபின் உத்தப்பா 18 ரன்களும் அடித்தனர். சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்கும்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி 8 ஓவரில் 81 ரன்கள் தேவை என்ற நிலையில் ரியான் பராக் உடன் டெவாட்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 15-வது ஓவர் வரை நிதானமாக விளையாடியது. இதனால் 105 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி 30 பந்தில் 54 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் அடித்தது ராஜஸ்தான். இதனால் கடைசி 3 ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது.

    18-வது ஓவரை ரஷத் கான் வீசினார். இந்த ஓவரில் டெவாட்டியா 3 பவுண்டரிகள் விளாசினார். இதனால் கடைசி 2 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது.

    19-வது ஓவரை நடராஜன் வீசினார். இந்த ஓவரில் டெவாட்டியா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாச ராஜஸ்தான் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

    முதல் நான்கு பந்துகளில் 6 ரன்கள் அடித்த ராஜஸ்தான், 5-வது பந்தில் சிக்ஸ் அடித்து ஒரு பந்து மீதமுள்ள நிலையில் அபார வெற்றி பெற்றது. ரியான் பராக் - ராகுல் டெவாட்டியா ஜோடி 85  ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தனர். பராக் 26 பந்தில் 42 ரன்களும், டெவாட்டியா 28 பந்தில் 45 ரன்களும் அடித்தனர்.

    4 போட்டிகளில் தொடர்ந்து தோல்விக்கு இந்த வெற்றி மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
    அபு தாபியில் நடைபெற இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    மும்பை அணியில் மாற்றம் செய்யப்படாத நிலையில், டெல்லியில் ரகானே, அலேக்ஸ் கேரி சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி:

    1. குயின்டான் டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. குருணால் பாண்ட்யா, 8. ஜேம்ஸ் பேட்டின்சன், 9. ராகுல் சாஹர், 10, டிரென்ட் போல்ட், 11. பும்ரா.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி:

    1. பிரித்வி ஷா, 2. தவான், 3. ரகானே, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. அலேக்ஸ் கேரி, 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. அக்சார் பட்டேல், 8. ஹர்ஷல் பட்டேல், 9. அஸ்வின், 10. ரபடா, 11. அன்ரிச் நோர்ட்ஜ்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் 7 போட்டிகளில் பவர் பிளேயில 6 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி கடைசி இடத்தை பிடித்துள்ளது.
    ஐபில் கிரிக்கெட்டில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் ஐதராபாத் அணி பவர் பிளேயில் அதிக விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளது.

    ஐபிஎல் தொடரின் 26-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது.

    ஐதராபாத் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. பவர் பிளேயில் 36 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை சாய்த்தது.

    இன்றைய வீழ்த்திய 3 விக்கெட்டுடன் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் பவர் பிளேயில் மட்டும் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐதராபாத் முதல் இடத்தில் உள்ளது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் 11 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் 10 விக்கெட்டுகளுடன 3-வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட்டுகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட்டுக்களுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான வெற்றி, எங்களுடைய முற்றிலும் சிறந்த பெர்ஃபார்மன்ஸ் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக நேற்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி 90 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    போட்டிக்குப்பின் விராட் கோலி கூறுகையில் ‘‘கண்டிசனை புரிந்து கொண்டு விளையாட்டிற்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதற்கு மாறாக எல்லா பந்துகளையும் ரசிகர்கள் கேலரிக்கு அனுப்ப முயற்சி செய்ய முடியாது. அதிகமான போட்டிகளில் குறிப்பாக டி20-யில் விளையாடி உள்ளதால், டெத் ஓவரின்போது செட் ஆகி விட்டால், அதை சாதகமாக்கி கொள்ள முடியும் என்பதை கற்றுள்ளேன்.

    சென்னைக்கு எதிராக எங்களுடைய மிகவும் சிறந்த பெர்ஃபார்மன்சில் ஒன்று. முதல் பாதி நேரத்தில் சற்று சிக்கலான நிலையை அடைந்தோம். அதிலிருந்து முன்னோக்கி நகர்ந்தோம். 2-வது டைம்அவுட் நேரத்தின்போது 140 முதல் 150 சிறந்த ஸ்கோராக இருக்கும் எனப் பேசிக்கொண்டோம்’’ என்றார்.
    மணிஷ் பாண்டே அரைசதமும், வார்னர் 48 ரன்கள் அடித்த போதிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 159 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஐதராபாத்.
    ஐபிஎல் தொடரின் 26-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பேர்ஸ்டோவ், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக கம் இறங்கினர். அதிரடி வீரர்களான இருவரும் தொடக்கத்தில் இருந்தே ரன்கள் அடிக்க திணறினர்.

    பேர்ஸ்டோவ் 16 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வார்னர் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. 14.4 ஓவரில் 96 ரன்கள் எடுத்திருந்த போது வார்னர் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 38 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை அடித்தார்.

    மணிஷ் பாண்டே 44 பந்தில் 54 ரன்கள் சேர்த்து வெளியேறினார். கேன் வில்லியம்சன் - பிரியம் கார்க் ஜோடி 2.2 ஓவரில் 36 ரன்கள் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் அடித்துள்ளது.

    கேன் வில்லியம்சன் 12 பந்தில் 22 ரன்களும், பிரியம் கார்க் 8 பந்தில் 15 ரன்களும் சேர்த்தனர்.
    சிக்கர் அடிக்க சாதகமான ஆடுகளத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.
    ஆர்சிபி அணி இந்த முறை எப்படியாவது ஐபிஎல் கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற தீர்மானத்தில் உள்ளது. பஞ்சாப், டெல்லி அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது.

    தேவ்தத் படிக்கல் அந்த அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்து வருகிறார். ஆறு போட்டிகளில் மூன்று அரைசதம் அடித்துள்ளார்.. விராட் கோலி முதல் மூன்று போட்டிகளில் சரியாக விளையாடவில்லை.

    அதன்பின் நடைபெற்ற மூன்று ஆட்டங்களிலும் 40 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தியுள்ளார். ஏபி டி வில்லியர்சும் சிறப்பாக விளையாடி வருகிறார். தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் மட்டும் இன்னும் ஃபார்முக்கு வரவில்லை. அவரும் பார்முக்கு வந்து இந்த நான்கு பேரில் இரண்டு பேர் சிறப்பாக விளையாடினால் ஆர்.சி.பி.க்கு பேட்டிங்கில் பிரச்சனை இருக்காது.

    நாளைய போட்டி ஷார்ஜாவில் நடக்கிறது. ஷார்ஜா மைதானம் சிறியது என்பதால் நாளை வாணவேடிக்கைகளை பார்க்கலாம். 

    பந்து வீச்சில் கிறிஸ் மோரிஸ் அணிக்கு திரும்பியிருப்பது அநத அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. வேகப்பந்து வீச்சில் சைனி, இசுரு உடானா ஆகியோர் உள்ளனர். வாஷிங்டன் சுந்தர் பவர் பிளேயில் சிறப்பாக பந்து வீசுகிறார். சாஹர் கடந்த இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை.

    கொல்கத்தா அணி கடந்த இரண்டு போட்டிகளில் அதன் யுக்தியை மாற்றியுள்ளது. மேலும், இரண்டு போட்டிகளில் 170 ரன்களுக்குள் அடித்து சிஎஸ்கே, பங்சாப் அணியை வீழ்த்தியுள்ளது. இந்த நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

    சுனில் நரைனை தொடக்க வீரரில் இருந்து தூக்கி திரிபாதியை களம் இறக்கியுள்ளது. மோர்கனை முன்வரிசையில் களம் இறக்குகிறது. ஷுப்பமான் கில் அந்த அணியின் நங்கூரம். அதிகமான பவர் ஹிட்டரை வைத்துள்ளதால் ஷார்ஜாவில் நாளை அதிகமான சிக்சர்களை பார்க்கலாம்.

    பந்து வீச்சை பொறுத்த வகையில் சுனில் நரைன் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். கடந்து இரண்டு போடடிகளிலும் அவது பந்தை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர்.

    பேட் கம்மினஸ், நாகர்கோட்டி, ஷிவம் மவி, அந்த்ரே ரஸல் போன்ற வேகப்பந்து உள்ளனர்.

    இரண்டு அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்றுள்ளது. ஐந்தாந்து வெற்றிக்காக கடுமையாக போராடும்.
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 போட்டியில் 6-ல் தோல்வியடைந்து ஏறக்குறைய தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கியது. நேற்று வரை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 7 போட்களிலும் விளையாடியுள்ளன.

    இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மிகவும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கியது. முதல் போட்டியில் டெல்லிக்கு எதிராக சூப்பர் ஓவரை சென்று தோல்வியடைந்தது. அதன்பின் ஆர்சிபி அணிக்கெதிராக கேஎல் ராகுல் சதம் அடிக்க பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

    அதற்குப்பின் நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் வரிசையாக தோல்வியை சந்தித்துள்ளது. நேற்று கொல்கத்தா அணிக்கெதிராக ஜெயிக்க வேண்டிய போட்டியை 2 ரன்னில் கோட்டை விட்டத. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    ஒவ்வொரு அணிகளும் 14 லீக் ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்ய முடியும். தற்போது முதல் ஏழு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடைசி ஏழு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    இதனால் அந்த அணிக்கு ஒவ்வொரு போட்டியும் வாழ்வா? சாவா? போன்றது.

    தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் (387), மயங்க் அகர்வால் (337) அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

    பந்து வீச்சில் முகமது ஷமி 10 விக்கெட்டுகளுடன் 4-வது இடத்தில் உள்ளார. பிஷ்னோய் 8 விக்கெட் வீழ்த்தி 10-வது இடத்தில் உள்ளார். அப்படி இருந்தும் பஞ்சாப் அணியால் வெற்றி பெற முடியாதது ஏமாற்றமே.
    டெத் ஓவர்களில் அதிகமான ரன்கள் விட்டுக் கொடுத்ததும், தொடக்க ஜோடி சறுக்கியதாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
    ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது. துபாய் ஆடுகளம் கொஞ்சம் ட்ரிக் ஆனது என்பதால் கவனமாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு அணிகளும் களமிறங்கின.

    முதலில் பந்து வீசினால் 60 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நோக்கத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீசியது.

    முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். தனது அபார இன்ஸ்விங் பந்தால் ஆரோன் பிஞ்ச்-ஐ திணறடித்தார். அவருக்கு சப்போர்ட்டா சாம் கர்ரன் அற்புதமாக பந்து வீசினார். இதனால் ஆர்சிபி தொடக்க ஜோடி ரன் அடிக்க முடியாமல் திணறினர்.

    3 ஒவரை சாஹர் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் 2 ரன் எடுத்த நிலையில் ஸ்டம்பை பறிகொடுத்தார் ஆரோன் பிஞ்ச். இரண்டு பேரும் சூப்பராக பந்து வீச ஆர்சிபி பவர் பிளேயில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பின்னர் ஷர்துல் தாகூர் இவர்களுடன் இணைந்து சிறப்பாக பந்துவீச ஆர்சிபி 08 ஓவரில் 50 ரன்களே அடித்தது. 11-வது ஓவரை தாகூர் வீசினார். இந்த ஓவர் சென்னைக்கு சூப்பர் திருப்புமுனையாக அமைந்தது. படிக்கல் 33 ரன்கள் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த டி வில்லியர்ஸ் இரண்டு பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமலும் ஒரே ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

    அப்போது 11 ஓவர் முடிவில் ஆர்சிபி 3 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்களே எடுத்திருந்தது. ஒரு பக்கம் இழந்தாலும் மறுபக்கம் ஆர்.சி.பி. கேப்டன் நிலைத்து நின்று விளையாடினாலும், அவரால் விரைவாக ரன்கள் அடிக்க இயவில்லை.

    30 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். சென்னையின் அபார பந்து வீச்சு காரணமாக ஆர்சிபி 16 ஓவரில் 103 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பின் விராட் கோலி தனது சுயரூபத்தை வெளிக்காட்டினார். சர்துல் தாகூர் வீசிய 17-வது ஓவரில் 16 ரன்கள் அடித்தது ஆர்சிபி. அடுத்த ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவர்தான் சென்னை அணியிடம் இருந்து ஆர்சிபி அணியிடம் போட்டி கை மாறியது. அந்த ஓவர் 24 ரன்கள் அடித்த ஆர்சிபி, 19 ஓவரில் 14 ரன்களும், 20-வது ஓவரில் 16 ரன்கள் ஆர்சிபி விளாசியது.

    இதனால் 169 ரன்கள் குவித்து விட்டது. டெத் ஓவரான கடைசி 4 ஓவரில் மட்டும் ஆர்சிபி 66 ரன்கள் திரட்டி விட்டது. இதுவே சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. முதல் 30 பந்தில் 34 ரன்கள் அடித்த விராட் கோலி அதன்பின் 22 பந்தில் 56 ரன் என 90 ரன்கள் விளாசி சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் நம்பிக்கையை சிதறடித்து விட்டார்.

    பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டு பீஸ், வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடினால் மட்டுமே சென்னைக்கு வெற்றி என்ற நிலை உருவாகி இருந்தால் நம்பிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் வாஷிங்டன் சுந்தர் வீசிய 4-வது ஓவரில் டு பிளிசிஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 8 ரன்களில் ஏமாற்றம் அடைந்தார். அதுமட்டுமல்ல ஆறாவது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீச அந்த ஓவரில் 16 ரன்கள் எடுத்த நிலையில் வாட்சன் க்ளீன் போல்டாகி விக்கெட்டை பறிகொடுத்தார். பவர் பிளே சுழற்பந்து வீச்சு ஸ்பெஷலிஸ்டான வாஷிங்டன் சுந்தர் சென்னை அணியின் தோல்வியை அப்போதே உறுதி செய்து விட்டார். 

    பவர் பிளேயில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்களே அடிக்க முடிந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் அறிமுக வீரர் ஜெகதீசன் களமிறங்கினார் இவர்களால் 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுக்க முடிந்ததே தவிர அணியை வெற்றி நோக்கி அழைத்துச் செல்ல முடியவில்லை.

    ஜெகதீசன் 33 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். அம்பத்தி ராயுடு 42 ரன்னில் வெளியேறினார். டோனி இன்னைக்கு அடிப்பார் என்று பார்த்தால் அவரும் 10 ரன்னில் வெளியேற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 132 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது தோல்வியை ஒத்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

    டெத் ஓவரில் 66 ரன்கள், ஓபனிங் சொதப்பல், மிடில் ஆர்டர் சொதப்பல் என ஒட்டுமொத்தமாக சொதப்ப சென்னை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
    துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    ஐபிஎல் தொடரின் 26-வது லீக் ஆட்டம் துபாயில் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:-

    1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. மணிஷ் பாண்டே, 4. கேன் வில்லியம்சன், 5. விஜய் சங்கர், 6. பிரியம் கார்க், 7. அபிஷேக் சர்மா, 8. ரஷித் கான், 9. சந்தீப் சர்மா, 11. கலீல் அகமது, 12. டி. நடராஜன்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:

    1. ஜோஸ் பட்லர், 2. ராபின் உத்தப்பா, 3. சஞ்சு சாம்சன், 4. ஸ்டீவ் ஸ்மித், 5. பென் ஸ்டோக்ஸ், 6. ரியான் பராக், 7. ராகுல் டெவாட்டியா, 8. ஆர்சர், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. கார்த்திக் தியாகி, 11. வருண் ஆரோன்.
    அபுதாபியில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

    அபுதாபி:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியில் விளையாடும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 14 ஆட்டம் இருக்கும்.

    லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். 23-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 ஆட்டங்கள் நடக்கிறது.

    துபாயில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4-வது வெற்றியை பெற்று முன்னேற்றம் அடையும் ஆர்வத்தில் உள்ளது.

    ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் அணி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்ற அந்த அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்றது. தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து 3-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் - ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், மும்பை அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும் உள்ளன.

    இரு அணிகளுமே கடைசியாக விளையாடிய 3 ஆட்டத்திலும் வென்று ஹாட்ரிக் சாதனை புரிந்தன. இதனால் தொடர்ச்சியாக 4-வது வெற்றியை நீட்டிப்பது டெல்லியா? மும்பையா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி அணி 6-வது வெற்றியை பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. மும்பை அணி 5-வது வெற்றியை அபாரமாக பெற்று முதல் இடத்திற்கு முன்னேறும் வேட்கையில் இருக்கிறது.

    இரு அணியிலும் அதிரடியான வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது.

    டெல்லி அணியில் கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர், பிரித்விஷா, தவான், ரி‌ஷப்பண்ட், ஸ்டோனிஸ், ரபடா, அஸ்வின் போன்ற சிறந்த வீரர்களும், மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இசான் கி‌ஷன், ஹர்த்திக் பாண்ட்யா, போல்லார்ட், குயின்டன் டிகாக், பும்ரா, போல்ட், பேட்டின்சன் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    சமூக வலைதளங்களில் எம்எஸ் டோனி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து அவரது வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ராஞ்சி:

    ஐ.பி.எல். போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை. அந்த அணி இதுவரை 7 ஆட்டத்தில் விளையாடி 5-ல் தோற்றது. 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    கொல்கத்தா அணிக்கு எதிராக கடந்த 7-ந் தேதி நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ரன்னில் தோற்றது. இந்த தோல்வியால் சி.எஸ்.கே ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து இருந்தனர்.

    இதற்கிடையே இந்த தோல்வி காரணமாக சமூக வலைதளங்களான டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் சிலர் டோனியின் குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்திருந்தனர். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த மிரட்டல் காரணமாக டோனியின் வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள அவரது வீடு மட்டும் பண்ணை வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

    வீடுகளுக்கு முன்பு தடுப்பு கட்டைகளை வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 2 வீடுகளிலும் தலா 10-க்கு மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அந்த பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் திரியும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ×