search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியான் பராக் - டெவாட்டியா ஜோடி
    X
    ரியான் பராக் - டெவாட்டியா ஜோடி

    ரியான் பராக் - டெவாட்டியா அதிரடியால் ஒரு பந்து மீதமுள்ள நிலையில் ராஜஸ்தான் வெற்றி

    முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரியான் பராக் - டெவாட்டியா அதிரடியால் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
    ஐபிஎல் தொடரின் 26-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது, அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணி மணிஷ் பாண்டே (54), டேவிட் வார்னர் (48) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் அடித்தது.

    பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான பென் ஸ்டோக்ஸ் (5), ஜோஸ் பட்லர் (16), ஸ்டீவ் ஸ்மித் (5) அடுத்தடுத்து ஆட்டமிழக்க 26 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது.

    அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 26 ரன்களும், ராபின் உத்தப்பா 18 ரன்களும் அடித்தனர். சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்கும்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி 8 ஓவரில் 81 ரன்கள் தேவை என்ற நிலையில் ரியான் பராக் உடன் டெவாட்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 15-வது ஓவர் வரை நிதானமாக விளையாடியது. இதனால் 105 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி 30 பந்தில் 54 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் அடித்தது ராஜஸ்தான். இதனால் கடைசி 3 ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது.

    18-வது ஓவரை ரஷத் கான் வீசினார். இந்த ஓவரில் டெவாட்டியா 3 பவுண்டரிகள் விளாசினார். இதனால் கடைசி 2 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது.

    19-வது ஓவரை நடராஜன் வீசினார். இந்த ஓவரில் டெவாட்டியா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாச ராஜஸ்தான் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

    முதல் நான்கு பந்துகளில் 6 ரன்கள் அடித்த ராஜஸ்தான், 5-வது பந்தில் சிக்ஸ் அடித்து ஒரு பந்து மீதமுள்ள நிலையில் அபார வெற்றி பெற்றது. ரியான் பராக் - ராகுல் டெவாட்டியா ஜோடி 85  ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தனர். பராக் 26 பந்தில் 42 ரன்களும், டெவாட்டியா 28 பந்தில் 45 ரன்களும் அடித்தனர்.

    4 போட்டிகளில் தொடர்ந்து தோல்விக்கு இந்த வெற்றி மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
    Next Story
    ×