என் மலர்
விளையாட்டு
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 17-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. தொடக்கத்தில் தாக்குதல் பாணியை கையாண்ட ஈஸ்ட் பெங்கால் அணிக்கு சில ‘பிரிகிக்’ வாய்ப்பு கிடைத்தன. ஆனால் அதனை அந்த அணியினரால் கவுகாத்தி வீரர்களின் தடுப்பு அரணை தாண்டி கோலாக்க முடியவில்லை. 33-வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் வீரர் சுர்சந்திரா சிங் பந்தை தடுக்க முயற்சித்த போது அது காலில் பட்டு எதிர்பாராதவிதமாக சுய கோலாக மாறியது. இதன் பின்னர் கடைசி நிமிடத்தில் கவுகாத்தி அணியின் மாற்று ஆட்டக்காரர் ரோச்ஹர்செலா கோல் போட்டார். முடிவில் கவுகாத்தி அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. ஈஸ்ட் பெங்கால் அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். அந்த அணி இதுவரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்டங்களில் மும்பை சிட்டி எப்.சி.-ஒடிசா எப்.சி. (மாலை 5 மணி), எப்.சி.கோவா-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
இந்திய பேட்மிண்டன் வீரர்களான காஷ்யப், எச்.எஸ்.பிரனாய், குருசாய் தத், பிரணாவ் ஜெர்ரி சோப்ரா ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களை கொரோனா பரிசோதனைக்குட்படுத்திக் கொண்டனர். இதில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.
முன்னாள் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான காஷ்யப், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் கணவர் ஆவார். சாய்னாவுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். காஷ்யப் உள்ளிட்டோர் சமீபத்தில் ஒரு திருமண விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
தென்ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் கேப்டவுனில் நடக்க இருந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க வீரர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் இந்த ஆட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து எஞ்சிய தென்ஆப்பிரிக்க வீரர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது. இதையடுத்து இந்த தொடர் நடப்பது உறுதியாகியிருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பார்ல் நகரில் இன்று (இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி) நடக்கிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். அடிக்கடி காயத்தில் சிக்கி அவதிப்பட்ட அவர் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு நியூசிலாந்து அணியில் இடம் பெறவில்லை. அந்த அணிக்காக 13 டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 31 இருபது ஓவர் போட்டியில் விளையாடி மொத்தம் 2 சதம், 10 அரைசதம் உள்பட 2,277 ரன்களும், 90 விக்கெட்டும் எடுத்துள்ளார்.
அமெரிக்காவில் 2022-ம் ஆண்டில் தொடங்க இருக்கும் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் அவர் அதற்காக அமெரிக்கா சென்று குடியேற முடிவு செய்துள்ளார். இது குறித்து 29 வயதான கோரி ஆண்டர்சன் கூறுகையில், ‘நியூசிலாந்து அணிக்காக ஆடியதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். வருங்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எனக்கு நானே பல கேள்விகளை கேட்டுத் தான் இந்த முடிவுக்கு வந்தேன். எனது வருங்கால மனைவி மேரி மார்க்கரெட் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். எனக்காக அவர் நியூசிலாந்து வந்து புதிய கலாசாரத்தில் வாழ்ந்து நிறைய தியாகம் செய்துள்ளார். எனவே வாய்ப்பு கிடைக்கும் போது, அமெரிக்காவில் வாழ்வது தான் நல்லது என்று நாங்கள் நினைக்கிறோம். எனது கிரிக்கெட்டுக்காக மட்டுமின்றி எங்கள் இருவருடைய பொதுவான வாழ்க்கைக்கும் இதுவே சிறந்த முடிவாகும்’ என்றார்.
கோரி ஆண்டர்சன் 2014-ம் ஆண்டு வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 36 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். அவரது அதிவேக சத சாதனையை தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் மறுஆண்டே (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 31 பந்தில் சதம்) முறியடித்தது நினைவு கூரத்தக்கது.
சிட்னி:
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் 66 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 51 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. கான்பெராவில் நடந்த 3-வது போட்டியில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் கான்பெராவில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி சிட்னியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஒருநாள் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்க 20 ஓவர் தொடரை வெல்வது அவசியமாகும்.
இந்திய அணி கடைசியாக ஆடிய 10 இருபது ஓவர் போட்டிளில் 9-ல் வெற்றி பெற்றது. ஒரே ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
காயம் அடைந்த ஆல் ரவுண்டர் ஜடேஜா எஞ்சிய 2 ஆட்டத்திலும் ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் 20 ஓவர் அணிக்கு தேர்வாகியுள்ளார்.
ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பே. நேற்றைய போட்டியில் அவரது அதிரடியான ஆட்டம் வெற்றிக்கு காரணமாக இருந்தது. நாளைய போட்டிக்கான அணியில் மாற்றங்கள் செய்யப்படும். மனிஷ் பாண்டே, முகமது சமி ஆகியோர் கழற்றி விடப்படலாம். ஸ்ரேயாஸ் அய்யர், யசுவேந்திர சாகல், பும்ரா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்ட சாகல் நேற்று 3 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவர் நாளை இடம்பெறுவது உறுதி.
ஆஸ்திரேலிய அணி நேற்றைய போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.
ஏனென்றால் தோற்றால் தொடரை இழந்துவிடும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள். சிட்னி மைதானம் அந்த அணிக்கு சாதகமானது.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு தொடங்குகிறது. சோனி டெலிவிஷன் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஹேமில்டன்:
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன் குவித்து டிக்லெர் செய்தது. கேப்டன் வில்லியம்சன் இரட்டை சதம் (251 ரன்) அடித்து முத்திரை பதித்தார். தொடக்க வீரர் லாதம் 86 ரன் எடுத்தார்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன் எடுத்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து ஆடியது.
நியூசிலாந்து அணியின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. வெஸ்ட் இண்டீஸ் 60 வது ஓவர்களில் 138 ரன்னில் சுருண்டது. இதனால் அந்த அணி பாலோஆன் ஆனது.
நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 35 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஜேமிசன், வாக்னர் தலா 2 விக்கெட்டும், போல்டு ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பாலோஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் 381 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது.
2-வது இன்னிங்சிலும் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. 89 ரன் எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் 6-விக்கெட்டுகளை இழந்தது. பிளாக்வுட் ஒருவர் மட்டுமே தாக்குபிடித்து ஆடினார்.
இதனால் நியூசிலாந்து இந்த டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி செல்கிறது.
இந்த டெஸ்டில் வெற்றி பெறுவதன் மூலம் அந்த அணி 2 டெஸ்ட் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெறுகிறது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11-ந் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.






