என் மலர்
விளையாட்டு

ஹாமில்டன்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 2 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஹாமில்டனில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
நியூசிலாந்து தொடக்க வீரர் யங் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் டாம் லாதம் - கேப்டன் வில்லியம்சன் ஜோடி சிறப்பாக விளையாடியது. டாம் லாதம் 86 ரன்னில் ஆட்டம் இழந்தார். வில்லியம்சன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 78 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன் எடுத்திருந்தது. வில்லியம்சன் ஆட்டம் இழக்காமல் 97 ரன்னுடனும், டெய்லர் 31 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. வில்லியம்சன் தனது 22-வது சதத்தை பூர்த்தி செய்தார். டெய்லர் 38 ரன்னிலும், அடுத்து வந்த நிக்கோலஸ் 7 ரன்னிலும், பிளன்டெல் 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
ஆனாலும் வில்லியம்சன் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஜேமிசன் உறுதுணையாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் இரட்டை சதம் அடித்தார். இது அவரது 3-வது இரட்டை சதம் ஆகும். அவர் 251 ரன்னில் ஆட்டம் இழந்தார். இது இன்னிங்சில் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
நியூசிலாந்து அணி 145 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஜேமிசன் 51 ரன்களுடனும், டிம்சவுத்தி 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச், கேப்ரியல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை விளையாடியது. ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் இழப்பின்றி 49 ரன் எடுத்து இருந்தது. கேம்பல் 22 ரன்னுடனும், பிராத்வெயிட் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
கோவா:
7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. இன்று இரவு நடக்கும் 16-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன.
சென்னை அணி இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு டிரா பெற்றுள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் சென்னையின் எப்.சி. அணி உள்ளது. சென்னை அணியில் தாபா, கோன் கால்வஸ் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.
பெங்களூரு அணி தான் விளையாடிய 2 ஆட்டத்திலும் டிராவே செய்துள்ளது. அந்த அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் இதுவரை 7 முறை சந்தித்துள்ளன. இதில் 2 அணிகளும் தலா 3 வெற்றிகளை பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் டிராவானது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை தோற்கடித்தது. ஏ.டி.கே.மோகன் பகான் அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. அந்த அணி 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
புதுடெல்லி:
தமிழகத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அதில் அவர் 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் யார்க்கர் பந்துவீச்சில் அசத்தியதால் அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
2017-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டி.நடராஜனை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது. அப்போது பஞ்சாப் அணிக்கு ஆலோசகராக வீரேந்திர ஷேவாக் இருந்தார்.
டி.நடராஜனை ஏலம் எடுத்தது குறித்து ஷேவாக் தனது நினைவலைகளை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டியில் நடராஜனை பஞ்சாப் அணிக்காக தேர்வு செய்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். உள்ளூர் போட்டிகளில் விளையாடாத ஒரு வீரரை தேர்வு செய்தது குறித்து ஒவ்வொருவரும் கேள்வி கேட்டனர்.
இவ்வளவு பெரிய தொகைக்கு நடராஜனை ஏன் ஏலம் எடுத்தீர்கள் என்று கேட்டனர். நான் பணத்தை பற்றி கவலைப்படவில்லை. அவரிடம் திறமை இருக்கிறது. எங்கள் அணியில் சில தமிழக வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னிடம் நடராஜன் நல்ல பந்து வீச்சாளர், சரியான யார்க்கர்களை வீசுவார் என்று தெரிவித்தனர். நான் அவரது பந்துவீச்சு வீடியோக்களை பார்த்தேன். பின்னர் ஏலத்தின் போது அவரை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
ஏனென்றால் அப்போது எங்களிடம் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசும் வீரர் இல்லை. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த ஆண்டு நடராஜன் காயம் அடைந்ததால் பல போட்டிகளில் விளையாட முடியவில்லை.
ஆனால் விளையாடிய ஆட்டத்தில் வெற்றி பெற்றோம். மற்ற ஆட்டங்களில் தோல்வி அடைந்தோம். அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நடராஜனுக்கு 20 ஓவர் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவருக்கு ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
என்ன நடந்தாலும் நல்லது. நடராஜனுக்கு எனது வாழ்த்துக்கள். அவர் இங்கிருந்து தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், பிரான்சின் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கிளப்புக்காக விளையாடி வருகிறார். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் நேற்று முன்தினம் இரவு இங்கிலாந்தில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்த ஆட்டத்தில் பி.எஸ்.ஜி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் உள்ளூர் அணியான மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் 2 கோல் அடித்த நெய்மாரிடம், அர்ஜென்டினா முன்னணி வீரர் லயோனல் மெஸ்சி பி.எஸ்.ஜி. கிளப்பில் இணையலாம் என்ற தகவல் தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த 28 வயதான நெய்மார், ‘மெஸ்சியுடன் இணைந்து நான் மிகவும் உற்சாகமாக விளையாடி இருக்கிறேன். அது போன்று மீண்டும் அவருடன் இணைந்து ஆட ஆசைப்படுகிறேன். அவர் இங்கு (பி.எஸ்.ஜி. அணி) வந்து எனது இடத்தில் விளையாட முடியும். அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவருடன் கைகோர்த்து அடுத்த ஆண்டு விளையாட விரும்புகிறேன். நாங்கள் இதை செய்தாக வேண்டும்’ என்றார்.
33 வயதான மெஸ்சி, ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கிளப்புக்காக நீண்ட காலமாக விளையாடி வருகிறார். நெய்மாரும் பார்சிலோனாவுக்காக 4 ஆண்டுகள் விளையாடி விட்டு பிறகு பி.எஸ்.ஜி. கிளப்புக்கு தாவிவிட்டார். அதே சமயம் பார்சிலோனா அணிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகளையும், விமர்சனங்களையும் சந்தித்த மெஸ்சி, சில மாதங்களுக்கு முன்பு அந்த அணியை விட்டு உடனடியாக விலக விரும்பினார். ஆனால் இந்த சீசனில் அவரது ஒப்பந்தம் இருப்பதால் பெரிய தொகை கொடுத்து தான் வெளியேற வேண்டிய சூழல் நிலவியது. இதையடுத்து வேறுவழியின்றி இந்த சீசனில் பார்சிலோனா கிளப்பில் நீடிக்கும் மெஸ்சி, அடுத்த ஆண்டு நெய்மார் ஆடும் பி.எஸ்.ஜி. கிளப்புக்கு மாறிவிடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.






